காமக் கதைகள் 45 (22)

அதீதனின் பழைய காதலி ஆனந்தி தற்கொலை செய்துகொண்டாள்.

முற்றும்.

பி.கு :

அதீதன் தீவிரமாய்க் காதலித்துக் கொண்டிருந்தான் ஆனந்தியை. வாரத்திற்கு மூன்று நாட்கள் சந்திப்பார்கள். கடற்கரையிலிருந்து பேருந்து பிடித்து திருவான்மையூரிலிருக்கும் அவள் அலுவலகத்திற்குச் செல்வான். இருவரும் பேசிக்கொண்டே பேருந்தில் வள்ளுவர் கோட்டம் வருவார்கள். அங்கிருந்து ஆட்டோ பிடித்து வடபழனியில் அவளை விட்டுவிட்டு தான்மட்டும் வீட்டிற்கு மறுபடியும் பேருந்து பிடித்துச் செல்வான். கடற்கரை - திருவான்மையூர் - வள்ளுவர் கோட்டம் - வடபழனி - அவன்வீடு - மொத்தம் ஐம்பது கிலோமீட்டர் இருக்கும். பேருந்துகளையே வெறுக்கும் அதீதன் அதில் 45 கிலோமீட்டர் பேருந்திலேயே பயணம் செய்வான்.

வீட்டை அடைந்ததும், கடிதமெழுத ஆரம்பித்துவிடுவான். முழுநீளத் தாளில் நான்கு பக்கங்கள், சில சமயம் ஐந்து பக்கங்கள்கூடப் போகும் கடிதம்.

அடுத்த நாள் அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்ப்பான். அடுத்த முறை அவளைப் பார்க்கும்போது அந்தக் கடிதத்தைப் பற்றி விசாரிப்பான். சில சமயம் அடுத்தநாளே பார்க்கும்படி இருந்தால் அவள் கையிலேயே அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிடுவான். அவளும் அவனுடன் பேருந்தில் வரும்போது அக்கடிதத்தைப் படித்தபடி வருவாள்...

அதீதன் வண்ணதாசன்மேல் பித்தாயிருந்த காலமது. அவரது எழுத்துகள்போலவே அவனது கடிதங்கள் இருக்கும். 'அச்சோ இவ்வளவு எழுதறீங்களே, விரல் வலிக்காதா' என அவள் கொஞ்சலாய்க் கேட்பது கவிதையாயிருக்கும்.

அந்தக் கடிதங்களில் என்ன எழுதினான், அவளுடன் என்னவெல்லாம் பேசினான் என்பது அவனுக்கு நினைவிலேயே இல்லை.

முடிந்தது.

மேலும் சில குறிப்புகள் :

(1) வந்தனாமூலம் அறிமுகமானவள் ஆனந்தி - அப்போது அவள் சந்தோஷுடன் இருந்தாள். அதீதன் ஆனந்தியைக் காதலித்தது வந்தனாவிற்குத் தெரியாது. போலவே ஆனந்திக்கும் அதீதனின் வந்தனாவுடனான பழைய உறவு பற்றித் தெரியாது.

(2) அதீதனுக்கும் ஆனந்திக்கும் உடல்-ரீதியான தொடர்பிருந்ததில்லை. அதற்கான முயற்சியில்கூட அவன் இறங்க விரும்பியதில்லை.

(3) ஆனந்தியின் மரணத்தை அவனுக்குச் சொன்னதும் வந்தனாதான். குடும்பப் பிரச்சனை காரணமாயிருந்திருக்கலாமென அபிப்ராயப்படாள். அவளிடம் ஒரு மாதம்முன்பே வேறொரு நண்பர் சொல்லியிருக்கிறார் ஆனந்தி சரியான மனநிலையில் இல்லையென. வந்தனாவும் தொலைபேசியில் பேசியிருக்கிறாள். அவள் நன்றாகத்தான் இருப்பதாகச் சொல்ல, இவளும் விட்டுவிட்டாள். 'நான் நேர்ல பாத்து பேசியிருக்கணும், தப்பு பண்ணிட்டேண்டா' என அதீதனிடம் புலம்பினாள் வந்தனா.

(4) எப்படித் தற்கொலை செய்துகொண்டாள் என்ற விவரங்கள் வந்தனா தெரிவிக்கவில்லை. அதீதனும் கேட்டுக் கொள்ளவில்லை.

(5) அவர்கள் பிரிந்ததற்குச் சாதிரீதியான காரணங்கள் இருந்தன. ஆனால் இது அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட பொலிடிக்கலி கரெக்ட் கதையென்பதால் அவ்விவரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

(6) அன்றிரவு போதையில் வெகுநேரம் அழுதுகொண்டிருந்தான் அதீதன். அவன் சொல்லியது / உளறியது :

‘தங்கமான பொண்ணுடா, புது சுடிதார் வாங்கியிருந்தா ரெண்டு கையிலும் இப்படிப் பிடிச்சுகிட்டு எப்படியிருக்குன்னு கேப்பா... அப்படியே கண்ணுல நிக்குதுடா, ராமக்ரிஷ்ணா லன்ச் ஹோம்ல பேசிகிட்டே இருப்போம்டா, மனசுல இருக்கற கஷ்டம்லாம் மறஞ்சுடும் அவளப் பாத்தாலே, கோவமா ஒரு வார்த்தைகூடப் பேசினதில்லடா, தேவதைடா.... .... '

அதற்குமேல் கோர்வையாயில்லாமலிருந்தது.

முற்றியது.

23 comments:

செந்தழல் ரவி said...

சுந்தர்...

அற்புதமாக உணர்வுகளை படம்பிடித்துள்ளது இந்த புனைவு...!!!

பைத்தியக்காரன் said...

எப்படியிருக்கிறாய் அதீதா?

ஒரு மாதத்துக்கு பின் திரும்பவும் மொழி விளையாட்டில் சந்திக்கிறோம். ஆகஸ்ட் 19ம் தேதி உன்னை கடைசியாக பார்த்த அந்த இணையநாள் நினைவிலிருக்கிறது. அந்த சந்திப்புக்கு பின் வந்த 2வது நாளே ஆனந்தியின் இறப்புத்தகவல் உன்னை வந்தடையும் என உன்னைப் போலவே நானும் எதிர்பார்க்கவில்லை.

'...இப்படியாக நடந்ததாம்' என தொலைபேசியில் அன்று மதியமே வார்த்தைகளாக நிகழ்வை விவரித்தாய்.

அந்த விவரணையின் வழியே என்னுள் உருவான பயம், இப்போது உன்னை பார்க்கும் வரையில் அகலவேயில்லை.

இத்தனை நாட்களாக எங்கிருந்தாய்? யாரிடம் கேட்பது?

எந்தக் கவலையும் இன்றி, சி. மணி, அகவிதை, கவுன்டர் கவிதை என தன் தலையை தடவியபடி இருக்கும் சுந்தர் நிச்சயம் இதற்கு பதில் சொல்ல மாட்டார். அவருக்கு நீயும் ஒன்றுதான். ஜீ. நாகராஜனும் ஒன்றுதான். சரோஜாதேவியும் ஒன்றுதான். நீயில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ‘விழியின் கதை'. அதைப் பார்க்க சென்றுவிடுவார்.

ஆனால், என்னால் சுந்தரைப் போல் இருக்கமுடியவில்லை. 9 திசைகளிலும் உன்னை தேடினேன். இப்போதுதான் கண்ணில்பட்டாய்.

மொழியின் வழியாகவே உன் காதலை ஆனந்தியிடம் சொன்னாய். அதே மொழியின் வழியாகவே அவளது தற்கொலையையும் மற்றவர்களிடம் அறிவித்திருக்கிறாய்.

நீ காதலித்ததும், அந்தக் காதல் நிறைவேறாமல் போனதற்கும், இப்போது காதலியின் மரணத்தை நீ அறிவிப்பதற்கும் பின்னால் இருப்பது வார்த்தைகளின் கூட்டம்தான். ஒருவேளை மொழியில்லாமல் ஆனந்தியை நீ நேசித்திருந்தால் அவள் உனக்கு கிடைத்திருக்கலாம். குறைந்தபட்சம் தற்கொலை செய்து கொள்ளாமலாவது அவள் இருந்திருப்பாள்.

என்றாலும் வருத்தப்பட்ட உன்னை தேற்றிய உன் மனைவியைப் பற்றி எழுத்தில் குறிப்பிடாமல் போனதற்காக நன்றி. அப்படி குறிப்பிட நினைத்திருந்தால் மொழியைத்தானே நாடியிருப்பாய்?

நல்லவேளை 2வது தற்கொலையையாவது தடுத்தாயே...

RVC said...

அதீதனின் மனநிலையை ஒருவாறு ஒப்பீடு செய்ய முடிகிறது.
முற்றும் - முடிந்தது - முற்றியது.
நல்லா இருக்கு சார் இந்த கான்செப்ட். கதைக்கு முற்றும் போட்றாதீங்க :)

Ram said...

முற்றும் - முடிந்தது - முற்றியது.

எழுதுங்க எழுதிடே இருங்கே. வாழ்த்துக்கள்.

இருபத்தி மூன்று மினிமம் கேரன்ட்டி.

ஆமாம் அதீதன் ப்பியோவில் வேலை பார்க்கும் பெண்களோடு பழகவில்லையா?

சூடான கதைகள் கிடைக்கலாம்...

எனகென்னவோ துரைபாக்கம் (ஐ.டி. ஹைவே) பக்கம் வேலை செய்த கம்பெனிகளில் அவனுக்கு நண்பிகள் இருந்ததாக கேள்வி!

narsim said...

இன்னும் உங்கள் பதிவிலிருந்து மீளவில்லை.. மீள முடியவில்லை..

கலக்கல் குருவே!..

நர்சிம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

செந்தழல் ரவி, நன்றி.

பைத்தியக்காரன், நன்றி. என்னது அதீதன் உங்ககிட்டயும் பேசறானா??

நன்றி, RVC.

நன்றி, ராம்.

நர்சிம், நன்றி.

வால்பையன் said...

//அதீதனின் பழைய காதலி ஆனந்தி தற்கொலை செய்துகொண்டாள்.

முற்றும்.//

இந்த முற்றும் ஆனந்திக்கு மட்டும் தானே!

வால்பையன் said...

//முடிந்தது.//

இந்த முடிந்தது,கடிதத்துக்கு என கொள்வோம்.

வால்பையன் said...

//முற்றியது.//

இந்த முற்றியது, போதை தலைக்கேறியது எனக் கொள்வோம்.

ஆகமொத்தம் மீண்டும் தொடரும்

Saravana Kumar MSK said...

மீத இருபத்தி மூன்று?? கோர்வையாயில்லாமலிருந்தது.

முற்றியது.???

Sridhar Narayanan said...

//வந்தனாமூலம் அறிமுகமானவள் ஆனந்தி - அப்போது அவள் சந்தோஷுடன் இருந்தாள். அதீதன் ஆனந்தியைக் காதலித்தது வந்தனாவிற்குத் தெரியாது//

அதீதனின் காதலிகள்-னு ஒரு தொடர்பு படம் போடனும் போலிருக்கே. அதீதன்கிட்ட கேட்டுப் பாருங்களேன் சரி பார்க்க உதவும்.

//9 திசைகளிலும் உன்னை தேடினேன். //

பைத்தியக்காரன் ஐயா ஒரு திசையை மட்டும் விட்டுவிட்டார். அவர் உள்ளே தேடியிருந்தால் ஒரு வேளை அதீதன் சிக்கியிருப்பான் சீக்கிரம் :-))

//என்னது அதீதன் உங்ககிட்டயும் பேசறானா??//

அப்ப இன்னொரு 45 கதைகள் வரும்னு சொல்லுங்க :-)

Joe said...

அதீதன்...
யார் அவன்?
எப்படி இத்தனை பெண்களோடு தொடர்பு வைத்து கொள்ள முடிகிறது?
பேச்சு திறமையா?
பணமா?
அழகா?
எதனால் கவர்ந்து இழுக்கிறான்? ஆண்மக்கள் எல்லாருக்கும் இருக்கும் கேள்விகள் இவை!

ஏன் இவனை போல பல காதலிகளை என்னால் காதலிக்க முடியவில்லை? இதுவும் ஒரு கேள்வி!

இந்த கதையை பற்றி ஆராய்ந்தால், ஏன் அவன் உண்மையாக காதலித்த (sorry about the cliche!) பெண் தற்கொலை செய்து கொண்டாள்?
தற்கொலையை சுந்தரும் மறற பிற எழுத்தாளர்கள் போலவே கவிதைபடுத்த முயல்கிறாரா?
இவைகளும் சில கேள்விகள்!

பைத்தியக்காரன் said...

//அப்ப இன்னொரு 45 கதைகள் வரும்னு சொல்லுங்க :-)//

வெறும் 45 கதைகளை மட்டும்தான் உங்க நண்பரால எழுத முடியும்னு நினைக்கறீங்களா ஸ்ரீதர்? :(

அதீதன் கோவிச்சுக்க போறாரு... :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால்பையன், மூன்று நன்றிகள் :)

சரவணகுமார், நன்றி.

ஸ்ரீதர் நாராயணன், நன்றி. அதீதன் கதைகளை என்னிடம் மட்டும்தான் சொல்வான் :)

லக்கிலுக் said...

பதிவும், பதிவுக்கான பைத்தியக்காரனின் பின்னூட்டமும் அசத்தல்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஜோ & லக்கி லுக்... நன்றி.

Joe said...

நன்றி இருக்கட்டும்...
என் கேள்வி(களு)க்கு என்ன பதில்?

மின்னஞ்சலில் சொல்வீரோ?

அனுஜன்யா said...

என்ன சுந்தர்,

கொஞ்சம் இடைவெளி என்று நினைத்தேன். பை.காரன் பின்னூட்டம் பார்த்தால், இது புனைவு தாண்டிய விஷயம் போல தோன்றுகிறது. எப்படி இருந்தாலும், மீள் பரிசிக்கவும். இப்போதுதான், உங்கள் கதைகளின் மேல்தளங்கள் என் போன்ற சாமான்யர்களுக்கு ஓரளவு புலப்படத் தொடங்கியது.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஜோ, உங்கள் கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை.

அனுஜன்யா, நன்றி.

முபாரக் said...

ஒவ்வொரு பதிவும் வித்தியாசம். நல்லாருக்கு

பைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் மறைந்திருக்கும் பல உண்மைகளை தனிமடலில் கேட்டுக்கொள்கிறேன் :-)

//விரம் வலிக்காதா' // விரல்தானே?

King... said...

கலக்கல் சுந்தர் அண்ணன்...

ottakuththar said...

ஆதீதனின் உணர்வலை நம்மை ஏதோ ஒரு கட்டத்தில் கடந்து சென்றதை மீட்டெடுத்தது.. ...
அருமை நண்பா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முபாரக். மாற்றி விட்டேன்.

நன்றி, கிங்.

நன்றி, ஒட்டக்கூத்தர்.