என் மனிதிற்கு நெருக்கமான கவிஞர்களுள் ஒருவர் விக்ரமாதித்யன். இவரது முதல் தொகுதி 1982ல் அன்னம் நவ கவிதை வரிசையில் வெளியானது (ஆகாசம் நீல நிறம்). தொடர்ந்து பல தொகுப்புகள் (ஒரு முழுத் தொகுதி உட்பட) வந்து கொண்டிருக்கின்றன.
வண்ண நிலவன், வண்ணதாசன், கலாப்ரியா காலகட்டத்தைச் சேர்ந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன். 1960களின் இறுதியிலிருந்து எழுதி வருகிறார். 'சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல்' என்பது இவரது கவிதைகளுக்குச் சாலப் பொருந்தும்.
போய்ச் சேர்ந்தான் புதுமைப் பித்தன்
வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்
என எழுதும் துணிவு இவருக்குத் தான் உண்டு !
இவரது தனிச்சிறப்பு குறுங்கவிதைகள். இவரின் பிரபலாமான சில குறுங்கவிதைகள் :
அண்ணி மேல் கொண்ட ஆசை
கொழுந்தனைக் குழப்ப
அந்நிய இடமாகும் வீடு
*
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
*
சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்
*
கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்
*
எஜமானனைவிட
ஊழியனுக்கு நல்லது
எஜமான விசுவாசம்
*
அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை
*
சாக்லெட்டே சாக்லெட்டே
குழந்தைகளுக்குப் பிரியமான சாக்லெட்டே
சிகரெட்டே சிகரெட்டே
நேரம்கெட்டநேரத்தில் தீர்ந்து போகும் சிகரெட்டே
*
கண்ணாடிப் பாத்திரங்களைக்
கையாள்கிற கஷ்டம்
*
கவிதை / கவிஞர்கள் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுகிறார். அதிலிருந்து சில :
கட்டில் செய்யலாம்
கப்பல் செய்யலாம்
கணக்கு செய்யலாம்
கவிதை செய்ய முடியுமா
*
நடுவழியே நல்லது
கலைஞர்கள் துருவசஞ்சாரிகள்
*
கலைஞர்களாவதற்கு
இல்லை குமாஸ்தாக்கள்
*
விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்
*
இனி, கொஞ்சம் பெரிய கவிதைகள். நேரடித் தன்மை வாய்ந்த கவிதைகள் இவருடையவை. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் :
கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்
மிகச் சொற்ப வார்த்தைகளில் ஒரு சித்திரத்தைத் தீட்டிக் காட்டி விடக் கூடிவை இவரது கவிதைகள். வேலை தேடி மனமின்றி வெளியூர் செல்லும் ஒரு நடுத்தர வயது மனிதனின் கவிதை. :
பொருள்வயின் பிரிவு
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள
நிறைய சுய புலம்பல் கவிதைகளும் இருக்கும். உதாரணத்திற்கு :
ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ
*
சில கதைக் கவிதைகளும் உண்டு :
அத்தனைபேர் இருந்த பேருந்தில்
அது நிகழ்ந்தது
அப்பாவைவிடவும் வயது கூட
அந்தப் பெரியவருக்கு
தளர்ந்துபோன உடம்பு
குச்சிகுச்சியான கையும் காலும்
எப்படித்தால் அந்தப் பாய்க்கட்டுகளை ஒத்தையில் சுமந்து வந்து
ஓட்டுநர் பக்கமாக ஏற்றி இறக்கி வைத்தாரோ
அந்த ஊரின் கடைசி நிறுத்தத்தில்
பயணச் சீட்டு கொடுக்கும் நேரத்தில்
வெடித்துக் கிளம்பிஅது தகராறு
சுமைக்குக் கட்டணமாக முழுச்சீட்டுப் போட
முஸ்லீம் முதியவர் அரைச்சீட்டுத்தான் என மறுதலிக்க
வழமையைச் சொல்லி வாதித்த
வயசாளியின் பக்கம் பாதிக்கூட்டம்
நடத்துநரின் நியாயத்துக்கு
லாலி பாடியது மீதிக் கூட்ட்ம்
இருக்கிற காசுக்குள்
வருகிற ஊரில்
இறக்கி விட்டார் நடத்துநர்
முழுக்கட்டணம்தான் பாய்ச்சுமைக்கு என்று
முதலிலேயே சொல்லியிருந்தாராம் அவர்
பாவப்பட்ட கிழவர் சபித்தார்
நொந்துகொண்டு அழுதார்
ஆதரவாக ஏந்திவைத்துக் கொள்ளும் உயிர்கள்
அனுப்பி வைத்திருக்கும் நிச்சயமாக ஊருக்கு
என்றபோதும் அன்றையதினம்
அவருக்கு உதவாமலிருந்தது
உறுத்துகிறது இந்த நிமிஷமும்
நண்பரிடம் வாங்கிவந்த யாசகக் காசில்
பத்து ரூபாய்க்கும் மேல் பையிலிருந்தது
வேலையற்ற
வீட்டிலிருந்தது நாலுநாளில் திரும்பிவந்து அலையவேண்டிய
வெங்கொடுமை நிலைக் குழப்பத்தில் சிக்கலில்
வறண்டு போயிற்றோ என் மன ஊற்று
விளங்கவில்லை இன்னமும்
எப்படிக் காய்ந்தது என் மனஈரம்
எவ்விதம் உலர்ந்தது என் பச்சையம்
எனக்கு நானே அந்நியமானதுதான் என் சோகம்
ஆழ்ந்து யோசித்தால்
அவர் ஸ்திதியல்ல பிரச்சனை
என் ஸ்திதிதான் எனக்குப் பிரச்சனை
*
இனி, வேறு சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு :
நான் யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை
வசந்தம் தவறிய போதும்
வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கையில்
வன்கொலைச் சாவுக்கு இடமில்லை
வெயில் காயும்
மழை புரட்டிப் போடும்
அல்பப்புழுக்களும் வாழ்ந்து
கொண்டிருக்காமல் இல்லை
நீ கலகக்காரன் இல்லை?
நல்லது நண்ப
நானும் கூடத்தான்
எனது இருபதுகளில்
*
நீலகண்டம்
அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு
***
விதம் விதமாய் நவ நவமாய் எழுதியவர் விக்ரமாதித்யன். இன்னும் பல கவிதைகள் இருக்கினறன. எழுதி மாளாது.!
பனிக்காலத் தனிமை - 03
38 minutes ago
14 comments:
தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகளிலிருந்து அதிரடியாய் சில கவிதைகளைப் பதிவித்திருக்கலாமே சுந்தர்..:)
அந்த தொகுப்பு படித்து அதிர்ந்துபோன ஏனைய சாமான்யர்களுள் நானும் ஒருவன்
அடிக்கடி இது மாதிரி அறிமுகப்படுத்துங்கள்.
நன்றி, அய்யனார்.
உள்பாவாடைகளின் உலகம்
எனக்கு ரொம்பப் பிடிக்கும்
மாதிரியான கவிதைகளை அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறார் ! விக்ரமாதித்யன் சில செமி போர்னோ பத்திரிகைகளில் கவிதை எழுதியிருக்கிறார் என்பது தெரியுமா ?
தேவதைகள் பெருந்தேவி மோகினிப் பிசாசு (அட்டைப் பக்கத்தில் தலைப்பைத் தவறாக தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் என அச்சிட்டு விட்டார்கள்) உள்ள கவிதைகள் பாலியல் கவிதைகள். இந்தத் தலைப்பில் அவரது சில கவிதைகளைத் தனியாகப் பதிய விருப்பம்.
நிச்சயம், முரளி கண்ணன்.
/விக்ரமாதித்யன் சில செமி போர்னோ பத்திரிகைகளில் கவிதை எழுதியிருக்கிறார் என்பது தெரியுமா ?/
pathirikai peyar please
"கற்றுக்கொண்ட தமிழ் இவனுக்கு கவிதை எழுத மட்டுமே உதவும்" என்பது போன்ற முகத்தில் அறைந்தார் போன்ற உண்மைகள் பல சமயம் என்னை உறைய வைத்ததுண்டு. சமீபத்தில் வெளியான (ஆ.விகடன் என் நினைக்கிறேன்) கங்கைக்கரை பயணம் பற்றி ஒரு பகிர்தல் என்னுள் எப்போதும் உண்டான ஏக்கத்தை மீண்டும் உயிர்பித்தது... நன்றி மீண்டும் வாசிப்பதற்கென தேட வேண்டிய எழுத்துக்களில் சேர்த்துகொண்டாயிற்று...
அனானி, படித்து 15 வருடங்கள் இருக்கும்; பத்திரிகை பெயர்கள் ஞாபகமில்லை :)
நன்றி, கிருத்திகா.
//கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்//
இந்தக்கவிதை மிகவும் பிடித்திருந்தது :-)
உங்கள் அறிமுகக் கவிதைகள் சிறப்பானவைதான் என்றாலும் அவரது மற்றும்சில ஆழ்ந்த கவிதைகள் வழியாக அவரை மற்றொரு சிறப்பான அறிமுகம் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நான் கல்லூரி படிக்ககையில் ஓரு நண்பரின் ஆட்டோகிராப்பில் எழுதிய இந்த கவிதைக்கூட விக்ரமாதித்யன் கவிதை என்றே நினைக்கிறேன்.
“கொஞ்சம் கவிதைகள்
கொஞ்சம் முலைகள்
கொஞ்சம் கனவுகள்
இதற்கு மேல் பறக்க
யாருக்குத்தான் சிறகுகள் இருக்கு..“
” முழுதாய் வாழ்ந்து முடிக்க
முன்னூறு வார்த்தைகள் போதும்
இவனோ வார்த்தைகளின் ஊர்வலத்தில்
வழிதவறிய குழந்தை”- விக்கிரமாதித்யன்
:)
லக்கி லுக், இன்னும் இது மாதிரி நிறைய கவிதைகள் இருக்கு :)
நன்றி, ஜமாலன்.
நன்றி, லைட்பாய்.
கொஞ்சம் தள்ளிப்போனால்
-விக்கிரமாதித்யன்
சிட்டுக்குருவிகள் சேர்வதை பார்த்திருக்கலாம்
நீங்கள் அணில்கள் கூடுவதும் எப்பொழுதாவது கண்ணில் பட்டிருக்கலாம்
பூனைகள் போகிப்பது கொஞ்சம் பகிரங்கமானது
ஜீவராசிகள் புணர்வதுசாலவும் இயல்பானது
பின்னே எப்படி நவீன கவிதையில் இல்லாது போயிற்று?
கடைதிறப்பு படிக்காது கவிதை எழுதுகிறார்கள்
ஆண்டாள் பாசுரம் அறியாது பாலியல் பேசுகிறார்கள்
சங்கம் தெரியாது இலக்கியம் செய்கிறார்கள்?
என்னேடா என்னேடா இலண்டனும் பாரிஸ§ மாதமிழ்க் கலைஞன் லட்சியம்!
மானஸரோவர் இருக்கிறது தேக்கடி இருக்கிறது மைசூர்க் காடுகள் முக்கடல் சங்கமம் இன்னும் நிறையவே இவை காணாமல் என்ன எழுதுவாய்?
கண்டதும் கொஞ்சம் கேட்டதும் குறைவு கற்றதும் சிறிது கவனிப்பதும் அபூர்வம்
பின்னே எப்படி எழுத வரும்?
ஸ்தல புராணக் கதைகள் அளவுக்குக் கூடசொல்ல முடியாது
நவீனஇலக்கியத்தை சொலவடைகளின் கவித்துவத்துக்குகிட்டே வராது
இன்றைய கவிதைதென்னாட்டுப் பழங்கதைகளே
தாழ்விலை நவீன சிறுகதைகளைவிடவும் தினத்தந்தியில் காணும் தமிழ்வாழ்வு கூடசமகால எழுத்தில் இல்லாமல் போனதேன்?
கொஞ்சமாய் விளைந்துகொட்டாரம் நிறையாது
கணிசமாய் இருப்பதுதான் கருவூலம்
சித்தத்தைக் கடந்தவன்தான் சித்தன்
எழுத்தை ஆள்பவனே எழுத்தாளன்
சும்மா சும்மா பிலுக்காமல்
சிறியதாய்செய்யப் பாருங்கள் நண்பர்களே...?
நன்றி, maniz.
அம்மாவுக்கு கவிதை தெரியாது...
என்னை வெகுவாகவே பாதித்தது
Post a Comment