போலி = மூர்த்தி = ? = ? = ?

போலியைப் பார் என்பார்
அவனென்பார் இவனென்பார்
தெரியுது பார் ஸ்கீர்ன் ஷாட்டிலென்பார்
கெட்ட வார்த்தை உபயோகிப்பான் என்பார்
தாயையும் மகளையும் இழுப்பான் என்பார்
(சில சமயம் தந்தையையும் இழுப்பானாம்)
அவனுக்கென உள்ள சில வார்த்தைச் சேர்க்கைகளில்
எளிதில் அடையாளம் காணலா மென்பார்

அடுத்தவர் செயல்களை ஆராய
தன்னை மேல் நிலையில் நிறுத்தி
போலியின் நண்பர்களென சிலர் அடையாளம்
சுட்டப் படுவர்
எதிர்ப் பதிவு போட்டே சோர்ந்து போவார் சிலர்

பின் நவீனச் சிந்தனையாளர்களாய் அறியப்படும்
சிலர் அதிகாரக் குறுந் தரகர்களாய் ஆவது போலியில்லையா.?
எழுத்தில் பெண்ணியம் பேசும் பலர்
தம் மனைவிகளையைக் கொலை செய்கின்றார்
மெதுவாக
எழுத்தில் அறம் குறித்துப் பேசுபவர் செயல்பாடுகளில்
அறமற்ற தன்மையே துறுத்தி நிற்கிறது பெரும்பாலும்

எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம்
போலி இருக்கிறான்

குளியல் தொட்டியில் இதமான வென்னீரும்
நுரை ததும்ப சோப்புக் கட்டியும் தயாரானதால்
பாதியில் நிற்கப் போகிறது
இந்த (ப் போலிக்) கவிதை

இடைவெளி

தூக்கமா விழிப்பா எனத் தெரியாத
நிலையில் வந்து போகிறாய்
முயற்சித்தாலும் நெருங்க
முடியாத தூரத்தால் பிரிக்கப் பட்டிருக்கிறோம்
இப்போது இரவு நேரப் போதைப் புலம்பல்கள்
நண்பர்களற்ற தனிமை
மொழி புரியாக் கொடுமை
புணர யோனி கிடைக்காத சோகம்
பகல் நேர ஆதங்கங்கள்
வேலையும் பணமும்
அது சார்ந்த
உறவுகளும் உறவுப் போலிகளும்
மற்றும் கொஞ்சம் நடிப்பும்

துன்புறுத்தல்

காது பிளக்கும்
பாட்டுச் சத்தம்
கொசுக் கடியைப்
பொறுத்துக் கொண்டு
திண்ணையில் அமர்ந்தால்
நன்றாயிருக்குமெனத் தோன்ற
துன்புறுத்தலென
என்னை எச்சரிக்கும்
என்னையும்
உதறி
உட்கார
அடிபட்டுச் சாகும் கொசுக்கள்

(மவ்னம் அக்டோபர் 1993ல் வெளிவந்தது)

ஞாயிற்றுக் கிழமை

காலையில் எழுந்து தெருவிற்கு வந்தால்
வேலையினால் முகம் நசுக்கப் பட்ட மனிதர்கள்
தற்காலிக ஆசுவாசத்துடன் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்
கொஞ்சம் படிக்க முடிந்தது
மாடுகள் சுகமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன
மதிய வெயிலில்
பேப்பர் பொறுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு
விடுமுறை இல்லை போலும்
வியர்வை வழிய பார வண்டியை
இழுத்துப் போகிறார்
கறிய பெரியவர் ஒருவர்
மின் விசிறிக் காற்று உடலைத் தழுவ
என் அறை ஜன்னல் வழியாக
அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மதியத் தூக்கத்தின் பின் முழித்துப் பார்த்தால்
தொலைக்காட்சி சினிமாவை
சந்துஷ்டியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு நாள் விடுமுறை
என்பதைத் தவிர விசேஷமாய் ஒன்றுமில்லை
உலக மக்கள் அமைதியாகவே இருக்கிறார்கள்

சத்தங்கள்

என் மூச்சுச் சத்தமே
பிறர் சத்தம் போல் கேட்பதிலிருந்து
எவ்வளவு விதம் விதமான சத்தங்கள்
பக்கத்து அறை அப்பாவின்
சுகமான குறட்டை ஒலி எரிச்சலூட்டுகிறது
பஸ்களின் இரைச்சலும்
காகங்களில் கரைசலும்
கேட்கவே முடிவதில்லை
போதாக் குறைக்கு லொடக் லொடக்கென்று
சத்தமிடும் மின் விசிறி வேறு
என்ன வேலை செய்திருக்கிறாய் என
அதிகாரி இரைந்து விட்டுப் போனது
தனிக் கதை
கூர்ந்து கவனித்தால்
கிளைகள் அசையும் சத்தம் கூடக் கேட்கிறது
போனஸாகத் தெருவில் புலம்பிக் கொண்டே
போகும் குடிகாரனின் சத்தம்
சத்தங்களிலிருந்து தப்பிக்க என்ன
செய்வதென்று யோசித்தபடியே
கண்களை மூடினேன்
சத்தங்களும் அடங்கின

(மாலைக் கதிர் டிசம்பர் 1995ல் வெளியானது)

வாயூரிசம்

டிசைனர் ஆடையுடுத்தி
பெர்ஃப்யூமை அப்பிக் கொண்டு
பாட்டொன்றை முணுமுணுத்து
மாருதியில் விர்ரென்று செல்வான்
எதிர்ப்படும் கீரைக்காரியின்
விலகிய
முலையைப் பார்த்தபடி

லுங்கியை மடித்துக் கட்டி
புதிதாக வாங்கிய
(காலைக் கடிக்கும்)
செருப்பைத் திட்டியபடி
பக்கவாட்டில் நடக்கும்
வெள்ளைக்காரியின்
முலை பார்த்து
எச்சில் முழுங்குவேன்
நான்

டிலானேயின்
ஆர்ஃபிசத்தை
வியந்தபடி நிமிர்ந்தால்
உன் பார்வையில் படும்
எதிர் வீட்டு ஜன்னலின்
திரை விலகிய -
ஆடை மாற்றல்

உள்-வெளி பற்றி இரு கவிதைகள்

நீ வேறு
கதைவைத் தட்டாதே
எனக்குள் இருக்கும்
நான்
வெளியில் இருக்கும்
உலகம்
தடைப் பட்டிருக்கிறது
வாழ்க்கை
இதில் நீ வேறா.?

*

உள்ளே இருக்கும்
புறாக்கள்
பறந்து போய்விடுகின்றன
முக்கியமாக
விஜி, சுப்ரமணி
வெளியே இருந்தும்
சில புறாக்கள்
உள்ளே சென்று விடுகின்றன

(நடு கல் ஏப்ரல் 1994ல் வெளியானது)