Showing posts with label பத்தி. Show all posts
Showing posts with label பத்தி. Show all posts

சிறுமி கொண்டு வந்த மலர் அல்ல, இது மாமல்லன் கொண்டு வரும் பொறுக்கி மொழி

சிலருக்குப் புரியாது என்பதால் என்ன நடந்தது என்பதற்கான ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்.

லும்பன் மொழியையும் விளிம்பு நிலை மக்களின் மொழியையும் மாமல்லன் குழப்பிக் கொண்டார்.  அதை டுவிட்டரில் இப்படி எழுதியிருந்தேன் :

விளிம்பு நிலை மக்களின் மொழியையும் லும்பன்களின் மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார் மாமல்லன். நல்ல புரிதல் :-)

அதற்கு அவரது வழக்கம் போல இப்படி எழுதியி்ருந்தார் :

/எவனுடையதையாவது பிடித்துத் தொங்காவிட்டால் வாழ்வில் பிடிமானம் இல்லாமல் பதற்றத்தில் ஜ்யோவ்ராம் சுந்தருக்குத் தள்ளாட்டமே வந்துவிடும்போல் இருக்கிறது.

அரசியல் கருத்துக்கு வளர்மதி
இலக்கிய வழிபாட்டுக்கு சாரு (சாட்டு சாகசத்திற்கு முன்னால்)
வெற்றுப் பிரதிபலிப்பிலேயே உருவாக்கொண்ட பிம்பம் எத்துனை நாள் ஜொலிக்கும்?

விளிம்பு நிலைக்கு ஆங்கிலம் என்ன ?
லும்பனுக்குத் தமிழ் என்ன?

கை இரண்டு என்பதால் இரு சாமானங்களை ஒரே நேரத்தில் பிடித்துத் தொங்கினால் இதுதான் கெதி.

http://www.thefreedictionary.com/lumpen
http://dictionary.reference.com/browse/lumpen
/

மேல உள்ளதை அறிவார்த்தமான கட்டுரை என்று வேறு ஒருவர் சொல்கிறார் (கெரகம்!).

சிலர் ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரில் வந்து இவரிடம் லும்பனுக்கும் விளிம்பு மக்களின் மொழிக்கும் பொறுமையாக விளக்கம் கொடுத்தும் ஏற்றுக் கொள்ள மறுத்து, வழக்கம் போல் மூர்க்கத்துடன் பதில் எழுதிக் கொண்டிருந்தார்.

இவரிடம் விளக்கம் சொல்லிப் புரியவைப்பது ஆகாத விஷயம் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் நான் அதைச் செய்யவில்லை :-)  ஆனால் நான் அரசியல் கருத்துக்கு வளர்மதியையும், இலக்கிய வழிபாட்டிற்கு சாருவையும் (அதுவும் சாட் சாகசத்துக்கு முன்னால்தானாம்!) பிடித்துத் தொங்குவதாகச் சொல்வது மிகத் தவறான திரித்தல் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை.

அடுத்து இப்போது ஒரு சாமான்யர்களின் சாமானும், அறிவுஜீவிகளின் சாமானும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அதன் சுட்டி :http://www.maamallan.com/2011/12/blog-post_21.html

அதில் நான் என்னவோ இலக்கியத் திருட்டு செய்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.  அதாவது, நான் 6 - 7 படிக்கையில் கேட்ட பாட்டு என்று சொல்லிவிட்டு பிறகு அதை என் பதிவில் என்னுடையது என்று எழுதிவிட்டேனாம். இதையெல்லாம் கஷ்டப்பட்டு சான்றுகள் கொடுத்து நிரூபிக்க முயற்சிக்கிறார்.  இதுவும் மாம்லல்னின் வழக்கம்தான். அவரது கருத்தோடு ஒப்புக் கொள்ளாதவர்களை அடுத்தவர்களிடமிருந்து காப்பி அடிப்பவர்கள் என்று சொல்வது.

ஆனால், அந்தப் பதிவின் முதல் பின்னூட்டத்திலேயே (http://jyovramsundar.blogspot.com/2009/07/blog-post.html) இவை நான் எழுதியதல்ல என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.  யாருடைய சாமானத்தையோ வாயில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் மாமல்லன், அதனால்தான் இதைக் கவனிக்கவில்லை என்று சொல்லலாமா?

இவருடைய கவிதை பற்றி ஒரு முறை சொன்னபோது இதே மாதிரி என்னுடைய பழைய கவிதை ஏன் சரியில்லை என்று விரிவாக எழுதினார் (http://www.maamallan.com/2011/08/tue-sep-7-2010-at-909-pm.html) .  உண்மையில் அந்த விமர்சனத்தை எனக்கு அவர் ஏற்கனவே வேறொரு நண்பர் மூலமாக அனுப்பியிருந்தார். தனிப்பட்ட கடிதம்தானே என்று நானும் விளக்கம் சொல்லியிருந்தேன்.  அதைச் சமயம் பார்த்து, நான் அவரது கவிதைகளைப் பற்றிப் பேசும்போது பதிவில் ஏற்றினார்.  என்னமோ செய்து தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.  ஆனால் தொடர்ந்து இப்படி சாமானம் அது இதென்று எழுதுவதால் இந்தப் பதிவு.

ஐயா, எனக்கு எந்தப் பதட்டமும் இல்லை.  மலை மலையாக எழுதிக் குவித்து புத்தகமாகப் போட வேண்டுமென்றோ அல்லது, இறந்த பின்னும் புகழப் பட வேண்டுமென்றோ எவ்வித பிரயத்தனங்களையும் நான் செய்வதில்லை.  அதனால் என்னுடைய வலைப்பதிவின் பக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டி என்னைத் தோலுரித்து காலி செய்துவிடலாம் என நினைக்காதீர்கள்.  அது வியர்த்தம்.

மாமல்லன் வெகுஜனக் கதைகள் / சினிமாக்கள் x கலைப் படைப்புகள் என்று வித்தியாசப்படுத்திச் சொல்பவர்.  தான் எழுதுவது கலை என்று இறுமாப்புடன் சொல்பவர்.  ஆனால் அவரது சோ கால்ட் விமர்சனக் கட்டுரைகளிலும் அதே நக்கீரன் / தராசு பாணிதான் பின்பற்றப் படுகிறது என்பதை எம்டிஎம் சொல்லிவிட்டார்.  அதனால்தான் இவ்வளவு பதட்டம் இவருக்கு!  கூடவே அவர் கவிதை என்ற பெயரில் எழுதியவதற்றை நான் கிண்டலடித்ததால் என்னையும் பிடித்துக் கொண்டார் :-)

எம்டிஎம்மின் விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரையை சுட்டி கொடுத்ததற்காகப் பாய்வது என்றால், அவர் என்மீது மட்டுமல்ல, இன்னும் நான்கைந்து பேர்மீது பாய வேண்டும்.  பலருக்கு அந்தக் கட்டுரை பிடித்திருந்தது. 

அப்புறம் இவருக்கு இன்னொரு பழக்கம் உண்டு.  தன்னுடைய விமர்சனத்தில் ஒரே வரியைத்தான் நான் மறுத்திருக்கிறேன் - மற்றவற்றிற்கு எங்கே பதில் எங்கே பதில் என்று கூவுவார் (கூகிள் பஸ் / பதிவுகளில்).  நானும் பாயிண்ட் பாயிண்டாகப் பதில் சொல்லிச் சோர்ந்து போவேன்.  அதே மாதிரி இப்போதும் நான் எதற்காவது பதில் சொல்லாமல் விட்டிருந்தால், அவர் சுட்டிக் காட்டினால் பதில் சொல்கிறேன்.  ஆனால் பொறுக்கி மொழியில் எழுதினால், நானும் அதைவிடக் கேவலமான மொழியில் பதில் சொல்வேன் அல்லது பதிலே சொல்லாமல் விட்டுவிடுவேன்.

சாரு நிவேதிதாவின் தேகம் நாவல்

முதல் முறை படித்தபோது இந்த நாவல் சில குறைகளுடன் என்னைக் கவரவே செய்தது.  ஆனால் யோசித்துப் பார்க்கும்போது நிறைய குறைகளே தெரிகின்றன. இது ஏதோ நாவல் வெளியிட வேண்டுமே என்று அவசரத்தனமாக எழுதப்பட்ட ஒரு நாவல் என்று தோன்றுகிறது.

 தேகம் நாவலில் எனக்குத் தெரியும் சில குறைகள் :

கத்துக்குட்டித்தனமான முயற்சிகள். தர்மா, நீதி என்று குறியீட்டுப் பெயர்கள் வைத்திருப்பது (remember, அன்னைவயல், தாய்வாசல்!).

ஒழுங்காக எடிட்டிங் கூடச் செய்யாதது.  கந்தவேல் என்ற பெயர் அடுத்த
பக்கத்தில் கந்தசாமியாக மாறுவது.

ஒரே விதமான வரிகள் திரும்பத் திரும்ப வருவது. உதா : உன்னை நினைத்தால் எனக்குக் ஈரமாயிடுது, நீ பார்த்தாலே எனக்கு நிதம்பத்தில் நீர் சுரக்குது, நீ என்னைப் பார்த்தாலே ஆர்கசம் வந்துடுது... (இந்த இடத்தில் அம்பை சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது : சினிமால தொட்டாலே ஆர்கசம் வந்தா மாதிரி உணர்ச்சி காட்டறாங்களே, அப்ப முத்தம் கொடுத்தா காக்கா வலிப்பு வந்துடுமா?)

ஏன் முத்தம் கொடுக்க மாட்டேன் என்கிறாய் என்ற கேள்விக்கு செலின் பதில் சொல்லியிருப்பாள். ஆனால் இரண்டு அத்தியாயங்கள் கழித்து நான் அப்ப சொல்லலை, இப்ப சொல்றேன் என்றுவிட்டு அதே காரணத்தை மறுபடியும் சொல்வாள்.  நூலாக்கும் போது இதையெல்லாம் கூடவா கவனிக்காமல் விடுவார்கள்?

ஏற்கனவே எழுதி உயிர்மையில் / சாரு ஆன்லைன் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் பக்க நிரப்பிகளாக மறுபடியும் இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.  தனிப்பட்ட அளவில் சில கவிதைகள் நன்றாயிருந்தாலும், நாவலுடன் முழுத் தொடர்பும் கொண்டவை எனச் சொல்ல முடியவில்லை.

வேதங்கள் / சங்க இலக்கியத்திலிருந்து எதையாவது தொடர்பே இல்லாததை (அல்லது தொடர்பு இருப்பது போன்ற தோற்றம் தருவதை) எடுத்து
அங்கங்கே பொன் தூவலாகத் தூவுவது ஒரு ஃபேஷனாகிவிட்டது போல. அது இந்த நாவலிலும் அப்படியே இருக்கிறது.  என்ன எழவோ இந்த மாதிரி மோஸ்தர்களைக் கண்டாலே எரிச்சலாகிவிடுகிறது.

கதையின் நாயகனால் உடல்-ரீதியாக வதை செய்யப்படுபவர்கள் ரொம்பக் கெட்டவர்கள் என்பது வெகு கவனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதேச்சைத்தன்மையாகவோ அல்லது காரண காரியமற்ற ’வெறும்’ வதையாகவோ இவை மாறாததால், சாதாரண கிராஃபிக்கல் டீடெய்ல்ஸுற்கு மேல் மதிப்பளிக்க முடியவில்லை.  (இதை காம்யூவின் அந்நியன் நாவலில் வெயில் நேரத்தில் ஒருவனைச் சுட்டுக் கொல்லும் சம்பவத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்).

சாருவைப் பற்றிய முக்கிய குற்றச் சாட்டு அவர் கிசுகிசு பாணியில் தன்னுடன் பழகியவர்களைப் பற்றி எழுதுகிறார் என்பது. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் அதைக்கூட ஏற்கனவே எழுதியதை மறுபடி எழுதினால் என்ன செய்ய?  ஏற்கனவே சிறுகதைகளில், பத்திகளில், ராசலீலாவில் வந்த அதே நிகழ்வுகள் வேறு பெயர்களுடன் இந்த நாவலிலும் வருகின்றன (நீலாவதி என்ற பெண் பெயரில் வரும் பகுதிகளைப் படித்துப் பாருங்கள்).

இது மட்டுமில்லை.  ஏற்கனவே இவர் கதைகளில் வந்த அதே பாத்திரங்கள் அதே குணங்களுடன் இங்கேயும் உண்டு. ஆனால் வேறு பெயர்கள்.  ஆழ்வார், கிருஷ்ணா என்று. அடப் போங்கப்பா, போரடிக்குது.

அப்படியானால், நாவலில் நல்ல விஷயங்களே இல்லையா எனக் கேட்கிறீர்களா.. சில கவித்துவமான வர்ணனைகள், பித்த நிலையில் வரும் நேஹாவின் வரிகள்...

இது வதையைப் பற்றிய நாவல் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை.  பாலியல் சித்தரிப்புகளில் வதையெல்லாம் தெரியவில்லை (சாமான் எழும்பாததை எல்லாம் வதை லிஸ்டில் சேர்க்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்).  எனக்குத் தெரிந்து இது, வதை + சாருவின் வழக்கமான பாலியல் சித்தரிப்புகள் + வழக்கமான சாரு சமாச்சாரங்கள் உள்ள நாவல்.

நந்தலாலாவும் கிகுஜிரோவும்

சினிமா பற்றி எதுவுமே எழுதியதில்லை இதுவரை.  சினிமாக்களை எப்போதாவது பார்ப்பதுடன் சரி. உலக சினிமாக்களில் அதிகப் பரிச்சயம் இல்லாதவன். சினிமா என்ற கலையின்மேல் பெரிய ஈடுபாடோ ஆர்வமோ இல்லாதவன்.

நந்தலாலாவை போன ஞாயிறன்று மாலைக் காட்சியில் பார்த்ததும், ஆடிப் போனேன்.  ஆடிப் போனேனுக்கு மேல் ஏதும் சொல்லத் தோன்றாததால் இப்படி எழுதுகிறேன்.  இந்தப் படத்தைப் பற்றிச் சில வரிகளை டுவிட்டரிலும் பஸ்ஸிலும் பகிர்ந்து கொண்டேன்.

கிகுஜிரோவின் கதையை ஒட்டி எடுக்கப் பட்ட படம் நந்தலாலா என முதலிலேயே கேள்விப்பட்டிருந்தேன்.  இவ்வளவு தூரம் நம்மைக் கவர்ந்த படம் ஒரு தழுவலாக இருந்துவிடக் கூடாதே என்று மனம் ஆசைப்பட்டது.  கிகுஜிரோவின் குறுந்தகடை நண்பரிடமிருந்து பெற்று, இந்த வாரத்தில் இரண்டு முறை பார்த்தேன்.  மறுபடியும் நந்தலாலாவை நேற்று மதியம் திரையரங்கில் பார்த்தேன்.

கிகுஜிரோவின் தழுவல் இல்லை நந்தலாலா என்று தெளிவாக உணர்கிறேன்.  ஆனால், கிகுஜிரோவின் பாதிப்பில் உருவான படமே நந்தலாலா என்பதும் தெரிகிறது.

கிகுஜிரோவில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிச் செல்கிறான்.  உதவிக்கு வருபவன் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்பவன்.  சிறுவனின் தாய், வேறொருவருடன் செட்டிலாகிவிட்டது தெரிகிறது. பையனைச் சமாதானப்படுத்த,  அவனது அம்மா வேறு இடத்திற்கு மாறிச் சென்றிருக்கலாம் என்கிறான் உடன் வந்தவன்.  சிறுவனைக் குஷிப்படுத்த சில விளையாட்டுகள் காட்டுகிறார்கள். விளையாடுகிறார்கள். பயணிக்கிறார்கள்.  ஊருக்குத் திரும்ப வந்ததும், மறுபடி இன்னொருமுறை இதே போன்று செய்யலாமென உடன் வந்தவன் சொல்ல, சிறுவன் மகிழ்ச்சியாகச் செல்வதுடன் படம் முடிகிறது.

நந்தலாலாவின் அடிப்படைக் கதையே வேறு மாதிரியானது.  இங்கே சிறுவன் மட்டும் தாயைத் தேடிச் செல்வதில்லை.  மனநலம் குன்றிய பாஸ்கர் மணியும் அதையேதான் செய்கிறான். சிறுவன், தாயின் மேல் கொண்ட பாசத்தால். பாஸ்கர் மணி, கோபத்தால். சிறுவனின் தாயார், வேறு ஒருவருடன் இருப்பது தெரிந்ததும், இவனைக் கூட்டிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கு வருகிறான். தன்னுடைய தாயின் பைத்திய நிலையைப் பார்த்ததும், இவனது பைத்தியம் சொஸ்தமாகிறது.  சிறுவனுக்கு வேறொரு தாய் கிடைத்து, பாஸ்கர் மணிக்கு பைத்தியம் குணமாவதுடன் படம் முடிகிறது.

சில காட்சிகள் கிகுஜிரோவில் இருப்பதைப் போலவே வந்தாலும் வேறு மாதிரியான அழுத்தங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜப்பான் படத்தில் லாரிக்காரன் அடிப்பது எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. தமிழில் அருகாமைக் காட்சியில் அடி விழுந்து பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. ஒருவிதத்தில் நந்தலாலா கொஞ்சம் மெலோடிராமாவும்கூடத்தான்.

பயணம் என்றால், கார், பஸ், வேன் என்றுதான் இருக்க முடியும். அதனால் அதையெல்லாம் காப்பி என்றால் என்ன சொல்ல முடியும்? ஒருவர், அந்தப் படத்திலும் இயக்குனரே நடித்திருக்கிறார். அதையுமா மிஷ்கினும் காப்பியடிக்க வேண்டுமென்றிருந்தார்! (இணையத்தில்தான் படித்தேன், யார் சொல்லியிருந்தது என்று நினைவில்லை).  விட்டால் அதையும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள், இதிலும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வார்கள் போலும்.

படத்தின் சிறப்புகளைப் பற்றிப் பலர் விரிவாக எழுதிவிட்டார்கள்.  நானும் திரும்பவும் அதையே சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அதற்குள் போக விருப்பமில்லை.

என்னளவில் இதுவரை இப்படியான ஒரு படத்தை நான் பார்த்ததேயில்லை. இரண்டாவது முறை பார்த்தபோதும் அதே மனநிறைவைத் தந்தது நந்தலாலா.  நண்பர்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்க நிச்சயம் சிபாரிசு செய்வேன்; செய்கிறேன்.

என்ன கொடுமை இது?

இன்று எங்கள் வீட்டிற்கு வந்த தமிழ் தினசரியொன்றின் உள்ளே சொருகப்பட்டிருந்த கலர் பிட் நோட்டிசில் இருக்கும் வாசகங்களைக் கீழே தந்திருக்கிறேன் :

வணக்கம்,

நான் விஜய் டீவி உங்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் (குட்டி) ஸ்ரீகாந்த். என்னுடைய சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றி உங்களுடைய vote-ல் தான் இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச்வங்களையும் உங்க நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, அக்கா, மாமா, மாமி, எல்லோரிடமும் சொல்லி என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து ஜூனியர்2 டைட்டிலை win பண்ணி கொடுங்க. Please.

குறிப்பு : ஒருவர் எத்தனை வாக்கு வேண்டுமானாலும் போடலாம்

வாக்கு போட : ஜுன் 7ம் தேதி இரவு 10.30 மணி முதல்
நாளும் நேரமும் : ஜூன் 17ம் தேதி இரவு 9.30 மணி வரை
SMS எண் : SSJ 20
அனுப்பும் எண் : 57827
Email : www.vijay.indya.com

அன்புள்ள உங்கள்
செல்ல ஸ்ரீகாந்த்

நோட்டிசின் இன்னொரு பக்கத்தில் இதனுடைய ஆங்கில வடிவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கூடவே கூழைக் கும்பிடு + நெஞ்சின் குறுக்காக இரண்டு கைகளையும் வைத்து வாக்குகளுக்காக இறைஞ்சும் சிறுவனின் புகைப்படம். இம்மாதிரி அந்தந்த ஊர்களில் தனிசரிகளில் வைத்து இம்மாதிரியான நோட்டிஸ்களை வினியோகிப்பதாக அறிகிறேன்.

நான் தொலைக்காட்சி பார்ப்பது எப்போதாவதுதான். இந்த நிகழ்ச்சியைப் பார்த்தது இல்லை. இது பற்றி அதிஷா எழுதிய ஒரு கதையை வாசித்தபின் விசாரித்தபோது இன்னும் கேவலமான விஷயங்கள் நடப்பதாகச் சொன்னார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே? வணிக முதலாளிகளின் பண வெறிக்கு இன்னும் என்னென்ன கூத்துகளையெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.

சில விளக்கங்கள்

இப்போது இணையத்தில் தொடர்ந்து இயங்க முடியாது ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். இது நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும். அதனாலேயே ஒன்றும் எழுதத் தோன்றவில்லை.

வினவு பதிவைப் படித்தேன். பின்னர் அதை பைத்தியக்காரன்தான் எழுதியது எனத் தெரிந்ததும் மனம் நொந்து போனேன். ஒரு நாள் முழுவதும் யோசித்துவிட்டு நேற்று காலை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவருடைய சமீபத்திய வழக்கப்படி அந்தத் தனிப்பட்ட கடிதத்தை / அல்லது அதன் contentஐயும் வினவுக்கு அனுப்பியிருக்கிறார். இவ்வளவு நாள் பழகிய நண்பன் தனிப்பட்ட முறையில் ஒன்றை எழுதினால் அதை எப்படி அடுத்தவர்களுக்குக் கொடுக்க முடிகிறது எனத் தெரியவில்லை. இப்போது அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள். அது ஒன்றும் மிகப் பெரிய ரகசிய ஆவணமல்ல என்பதால், நானே அதைக் கீழே கொடுத்துவிடுகிறேன் :

அன்புள்ள பைத்தியக்காரன்,

நீங்கள் நர்சிம்மிற்குச் செய்திருப்பது பச்சை துரோகம். சமீபத்தில் கிடைத்த பெண் நட்புக்காக இரு வருடங்களாகப் பழகிய ஆண் நட்பைக் கொல்கிறீர்கள். அரசியல் ரீதியாகவும், தகவல் ரீதியாகவும், இரட்டை வேடம் குறித்தும் கேள்வி கேட்க நிறைய இருக்கிறது உங்களுடைய அந்த வினவு பதிவிலும் உங்கள் தளத்தில் வெளியான பதிவிலும்.

என்னுடைய தற்போதைய சூழ்நிலை காரணமாக என்னால் விரிவாக எழுத இயலவில்லை. நீங்கள் இப்போது என்னைப் பற்றி எழுதவில்லை என்றாலும், நாளை உங்களுடைய வேறு ஏதாவது பெண் நண்பர்களுடன் எனக்குப் பிணக்கு வந்தால் நீங்கள் அதை எனக்கும் செய்யலாம் என்று பயமாயிருக்கிறது.

நம்முடைய நட்பை முறித்துக் கொள்வதுதான் எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. இதுவரை என்னுடன் நட்புடன் பழகியதற்கு நன்றி.

--
அன்புடன்,

ஜ்யோவ்ராம் சுந்தர்

அவர் தன்னுடைய இரட்டை வேடம் குறித்து எதுவும் பதில் சொல்லவில்லை. அதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கும் மனநிலையில் நானில்லை. என்னுடைய தளத்தில் வெளியான சுகுணா பதிவைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வினவில் எழுதக்கூடாது என்பதில்லை, ஆனால் பைத்தியக்காரன் பதிவில் ஒருவிதமாகவும் மற்ற பெயரில் வேறு விதமாகவும் எழுதுவதைத்தான் இரட்டை வேடம் என நினைக்கிறேன். ஆனால் இது பற்றிக்கூட இப்போது விவாதிக்கும் நிலையில் நானில்லை.

இவரே பண விஷயம் குறித்து எழுதிவிட்டதால் அது பற்றி மட்டும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. திங்கட் கிழமை வினவு பதிவு வெளியான அன்று இரவு இவர் தன்னுடைய தளத்தில் நர்சிம் பண விவகாரம் குறித்து எழுதுகிறார். அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது (ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை). வினவு பதிவில், பணத்தைத் தின்று, பணத்தை மலங்கழித்து, பணத்தில் குளிக்கும் நர்சிம் என்ற வரிகளைப் படிக்கையில் துணுக்குற்றேன். இவருடைய பணத்தேவையின் போது நர்சிம் எப்படிக் கஷ்டப்பட்டு பணத்தைப் புரட்டிக் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும். அப்படிப் பெற்ற உதவியைக்கூட இப்படியெல்லாம் வன்மம் தெறிக்க எப்படி எழுத முடியும்?

அவரது பதிவில் உள்ள வேறு சில விஷயங்களும்கூட என்னை அதிர்ச்சி அடைய வைத்தன (அதில் ஒன்று நான் சாதி காரணமாகத்தான் நர்சிம்முடன் பழகினேன் என்பது மாதிரி ஒரு வரி - நர்சிம் முதலில் என்னுடன் பழக ஆரம்பித்தபோது அவர் என்ன சாதி என்றே எனக்குத் தெரியாது - அவர் ஒரு முறை மெயில் அனுப்பும்போது அதில் உள்ள நரசிம்மன் என்ற பெயரை வைத்து ஒரு மாதிரி யூகித்தேன், அவ்வளவுதான்). அந்த ஒரு வருட வரலாறுகூடப் பக்கச் சார்பானதுதான். ஆனால் சம்பந்தப்பட்ட யாராவது விரும்பினால் பதில் எழுதிக் கொள்ளட்டும். போன வருட தீபா விஷயத்தைப் பற்றியும் எழுதியிருப்பதுதான் வேடிக்கை. ஏனெனில், பைத்தியக்காரனும் தீபாவைக் கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தார் அப்போது. சரி, இதையும் இரட்டை வேடம் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

நானும் நர்சிம்மும் நெருங்கிய நண்பர்களில்லை. யாராவது குடி வாங்கிக் கொடுத்தார் என்று எழுதிவிடுவார்களோ என பயமாயிருக்கிறது. ஒரே ஒரு முறை - அதுவும் போன வருடம் ஜனவரி மாதத்தில் - அவருடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் மது அருந்தியிருக்கிறேன். அப்போது பைத்தியக்காரனும் உடனிருந்தார். நர்சிம்மைப் பதிவர் சந்திப்புகளில் மட்டுமே சந்தித்திருக்கிறேன். ஒரே ஒரு முறை நான் மருத்துவமனையில் இருந்தபோது பைத்தியக்காரனுடன் தன்னுடைய புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். வேறு தனிச்சந்திப்புகள் இருந்ததில்லை.

பைத்தியக்காரனின் நேற்றைய பதிவில் என்னைப் பற்றிப் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்ததைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னுடைய கடிதத்தை அல்லது அதனுடைய கண்டெண்ட்களை வினவுக்கு கொடுப்பது என்ன மாதிரியான காரியம் என்று தெரியவில்லை.

அவருடைய கடவுச்சொல் என்னிடம் கொடுத்திருப்பதாக ஏற்கனவே எழுதியிருக்கிறார். நான் தான் அதை சுகுணாவுக்குக் கொடுத்தேன் என்று சூசகமாகச் சொல்கிறார். வினவிலும் அதே மாதிரி எழுதியிருக்கிறார்கள். மற்றவர்களும் அதை நம்பலாம். அதற்காக இந்த விளக்கம் : அவருடைய கடவுச் சொல்லை எனக்கு மட்டும் தெரிந்தே பைத்தியக்காரன் நான்கைந்து வலைப்பதிவர்களிடம் கொடுத்திருக்கிறார். என் நெஞ்சில் கைவைத்துச் சொல்ல முடியும் அதை நான் செய்யவில்லை என்று.

எனக்கு நர்சிம்மைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ஒன்றுமில்லை. அவரது அந்தப் பதிவைப் படித்த உடனே பைத்தியக்காரனிடம் தொலைபேசியில் நர்சிம்மின் நுண்ணுர்வற்ற தன்மையையும் ஆண் திமிரைப் பற்றியும் 5 நிமிடம் பேசிவிட்டே, பிறகு, ’நேற்றே சொன்னேனே ஏதாவது பிரச்சனை வரும்னு, பாத்தீங்களா, ஏன் அந்தம்மா இப்படிச் செஞ்சாங்க’ என்றும் கேட்டேன். அது என்னுடைய உடனடி எதிர்வினை. ஆனால் யோசித்த பிறகு என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே செய்தேன். மதியம் சந்தித்தபோதும் நர்சிம்மை விமர்சித்தே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சந்தன முல்லை பற்றிப் பேச நேர்ந்த எப்போதும் அவரை அவள் இவள் என்று குறிப்பிட்டதில்லை. ஏன், எந்தப் பெண் பதிவரையும் தனிப்பட்ட பேச்சுகளின்போதுகூட ஒருமையில் யாரைப் பற்றியும் பேசியதில்லை. அதனால் அவரது பதிவில் உள்ள /நர்சிம்முக்கும் எனக்கும் நெருக்கமான நண்பரிடம், நர்சிம்மின் இந்த செய்கையை கண்டித்தபோது, 'அவளுக்கு இது வேணும்...' என்றார்./ என்ற வரி என்னைக் குறித்ததாக இருக்காது என நம்புகிறேன். இது குறித்து சிலர் என்னிடம் தொலைபேசியில் விசாரித்ததால் இந்த விளக்கம். சந்தேகமே இல்லாமல் நர்சிம் செய்தது ஆண் திமிரிலும் பார்ப்பனத் திமிரிலும்தான் என்பதுதான் என்னுடைய தற்போதைய நிலைப்பாடு. ஆனால் அதற்காக அவரைக் கழுவிலேற்ற வேண்டும் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்னிடம் இல்லை.

நானும் பைத்தியக்காரனும் நெருங்கிப் பழகியவர்கள். மற்ற எல்லா வலைப்பதிவர்களையும்விட அவரைத்தான் அதிகமாக நேசித்தேன். ஒருவேளை அதனாலேயேகூட என்னுடைய அதிர்ச்சி அதிகமாயிருந்திருக்கலாம் என்றும் புரிகிறது. யாருடனும் சண்டை போட்டுப் பிரிவது எனக்கு உடன்பாடில்லை. ஆனால் எனக்குப் பயமாயிருந்ததால் நட்பை முறித்துக் கொண்டேன். அவ்வளவுதான். விளக்கம் சொல்லத் தோன்றியதால் இந்தப் பதிவு. பின்னூட்டங்கள் பைத்தியக்காரனுக்கு என்மீதும் வன்மத்தைத் தூண்டுவதாக அமையலாம். அதனால் அம்மாதிரியான பின்னூட்டங்கள் வேண்டாமே. நேரம் கிடைத்தால் மட்டுமே பதில் எழுத முடியும் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.

புத்தகக் கண்காட்சி

ஜனவரி 1ம் தேதி புத்தகச் சந்தைக்குப் போகலாம் என்று முடிவு செய்தது அன்று காலைதான். முதல் நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஒன்றும் பெரிதாக இல்லையென்றாலும் மதியம்கூட ஏனோ தலையை வலித்தது. கடையில் அனாசின் வாங்கிக் கொண்டு பார்த்தால் தண்ணீர் இல்லை. ஒரு பாக்கெட் தண்ணீர் 3 ரூபாய் (டாஸ்மாக்கில்) ஆனால் வெளியில் 1 ரூபாய்தான். மாத்திரையைப் போட்டுக் கொண்டு ரயில் பிடித்து சேத்துப்பட்டில் இறங்கினேன். என்னுடன் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர். அங்கிருந்து அப்படியே நடந்து வந்து பஸ் பிடித்து பச்சையப்பா கல்லூரியில் இறங்கிக் கொண்டோம்.

கண்காட்சிக்கு எதிராகப் பழைய புத்தகக் கடை ஒன்றிரண்டு இருந்தது. நிறைய புத்தகங்களை விரித்திருந்தார்கள். சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை 10 ரூபாய்க்குக் கிடைத்தது. வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே ஒரு பிரதி வீட்டிலிருந்தாலும் யாருக்காவது கொடுக்கப் பயன்படுமே என்று நினைத்துத்தான் வாங்கினேன். போலவே என்னுடைய நண்பன் ஒருவனுக்குப் பரிசளித்து விட்டேன்.

கண்காட்சியில் வாசலில் கார்கள் வருவதற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். டூ வீலரில் வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் - உடனே செல்ல முடிந்தது. ஆனால் பார்க்கிங் சீட்டு ரொம்பச் சின்னதாக இருந்தது என்று உள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள். வெளியே ஃபிளெக்ஸ் பேனர்களில் நிறைய விளம்பரங்களைப் பார்க்க முடிந்தது. ஆனந்த விகடன் நிறைய விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

நுழைவுக் கட்டணம் 5 ரூபாய். நல்ல வேளையாகக் க்யூ இல்லை. மூன்று பேருக்குமாய்ச் சேர்ந்து 15 ரூபாய் சில்லரையாகக் கொடுத்தேன். உள்ளே நுழையும் முன் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என்று பார்த்தேன்.

பதிவர்கள் பைத்தியக்காரன், லக்கி லுக், சங்கர் மற்றும் சிலரைச் சந்தித்தேன். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். தனி இடுகையாகப் புகைப்படங்களை வெளியிடுகிறேன்.

நிறைய ஸ்டால்கள் இருந்தன. ஸ்டால்களின் நடுவில் நிறைய இடைவெளி விட்டிருந்தார்கள். கிழக்கு பதிப்பக ஸ்டால் அருகில் பா ராகவனும், பத்ரியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்தேன்.

புதிய தலைமுறை (?) பெரிய பையைக் கொடுத்தார்கள். புத்தகங்களை வைத்துக் கொள்ள வசதியாயிருந்திருக்கும். விகடன் அரங்கிலும், இன்னும் சில அரங்களில் மட்டும் கூட்டம் அம்மியது.

சாரு நிவேதிதா.உயிர்மை அரங்கில் இருந்தார். அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். எஸ் ரா இல்லை. இருந்திருந்தால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.

கார்பெட் நன்றாக இருந்தது. சென்ற வருடங்களைப் போல முனை மழுங்கியில்லை. மழுங்கியிருந்த இடங்களிலும் உடனுக்குடன் ஆணியடித்துச் சரி செய்து கொண்டிருந்தார்கள்.

வீட்டுக் கடன் வழங்கும் HDFC ஸ்டாலில் நின்று விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். குறைவான வட்டியில் கடன் கிடைத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே. அப்போது வெளியில் இருந்த புடவைக்கடை விளம்பரங்களைக் குறித்து யாரோ பேசியபடி சென்றார்கள்.

அழகான பெண்கள் தனியாக வந்திருந்தார்கள். அவர்களை ஸைட் அடித்தபடி நடந்து செல்வது ஆனந்தமானது. காலையில் கிளம்பும் முன் இங்கே செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் இன்னும் நல்ல உடையில் வந்திருக்கலாம். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.

முக்கியமான விஷயம் : புத்தகச் சந்தை கேண்டீனில் லிச்சி ஜூஸும், தக்காளி சூப்பும் நன்றாக இருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம். லிச்சி ஜுஸ் 10 ரூபாய். வாங்கிக் குடித்தோம்.

புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்த போது சரியான கால்கடுப்பு. மதியம் ஏற்பட்ட தலைவலி ஏனோ ஞாபகம் வந்து, தலையும் வலிப்பது போல் தோன்றியது.

விவேக் ஷன்பேக்

சிறுகதைகளை இணையத்தில் படிப்பதில் எனக்கொரு சிக்கல் இருக்கிறது. அலுவலக நேரத்தில் மற்ற வேலைகளுக்கிடையில் கதைகளைக் கவனமாகப் படிக்க முடியாது. ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வரும் தொலைபேசி அழைப்போ உடனடியாகப் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சலோ எரிச்சல் படுத்தும். அது அந்தக் கதையைத் மீண்டும் படிக்கும்போதும் தொடரும். அல்லது மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதை மட்டுமே செய்ய வேண்டும் - அதுவும் பல சமயங்களில் முடியாது. அதனால் பெரும்பாலும் சிறுகதை நாவல்களைப் புத்தகங்களாகத்தான் படிப்பது. நாளொன்றிற்கு ஒரு கதைவீதம் இணையத்தில் வாசித்தாலே அதிகம். மற்ற கதைகள் ஞாயிற்றுக் கிழமைக்கானவை என்று தள்ளி வைத்துவிட்டு, பிறகு படிக்காமலேயே போய்விடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது :(

அப்படித்தான் ரீடரில் ஜெயமோகனின் பதிவில் வந்த விவேக் ஷன்பேக் எழுதி ஜெயமோகன் மொழிபெயர்த்திருந்த கதைகளைப் படிக்கவில்லை. பிறகு படிக்கலாமென்று விட்டுவிட்டேன். இன்று காலை சுரேஷ் கண்ணனின் (http://pitchaipathiram.blogspot.com/2009/12/191209.html) பதிவில் அதைச் சிலாகித்து எழுதியிருந்ததும் மூன்று கதைகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.

சமீபத்தில் வாசித்த மிக வித்தியாசமான கதைகள் என்று நிச்சயம் சொல்வேன். நேரம் கிடைக்கும்போது உங்களையும் வாசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1. http://www.jeyamohan.in/?p=5611 வேங்கைச் சவாரி

2. http://www.jeyamohan.in/?p=5659 அடுத்தவர் குடும்பம் (இந்தக் கதையின் இடையில் வரும் ’ஒரு வார்த்தைகூடப் பேசாமல் செயல்மூலம் பேச்சின் வலிமையைக் காட்டுவது’ என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு முழுக் கதையை எழுதியிருக்கும் சாமர்த்தியம் + ஒரு கதையை ஆரம்பித்துவிட்டு சாவகாசமாக இன்னொரு கதையைச் சொல்லி முடிப்பது இரண்டும் என்னைக் கவர்ந்தது )

3. http://www.jeyamohan.in/?p=5752 கோழியைக் கேட்டா மசாலா அரைப்பது (சாதத் ஹாசன் மாண்டோவின் கதையொன்றின் முடிவை ஞாபகப் படுத்தினாலும், இந்தக் கதையும் பிடித்திருந்தது.)

நிச்சயம் விவேஷ் ஷன்பேக்கின் கதைகள் வித்தியாசமானவை. இதற்கு முன் இவரை வாசித்ததில்லை - இனி முயற்சி செய்து வாசிக்க வேண்டும். வேறு ஒரு பதிவு தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தியிருந்த எரிச்சலில் ஜெயமோகனின் நூல் வெளியீட்டிற்குச் செல்லாதது தவறு என்று இப்போது வருத்தப்படுகிறேன் - குறைந்த பட்சம் இவர் பேச்சைக் கேட்பதற்காவது சென்றிருக்கலாம்.

மாற்றுப் பார்வைகளும் ஆபாசமும்

வார்த்தைகளில் கண்ணியம் வேண்டுமாம் - யார் சொல்கிறார்கள்? - பத்தாம் நம்பர் செருப்பால் அடிப்பேன் என்பவர்களும், மன நோயாளிகள் எனத் தலைப்பு வைப்பவர்களும், சூப்பர்டா அய்யரே என்பவர்களும், போலி செக்யூலரிஸ்டுகள் என நக்கலடிப்பவர்களும்தான் - வேறு யார் சொல்வார்கள் - எல்லாம் இவர்கள்தான் - எழுத்திலே கூடாதாம், ஆபாசமாம்!

அடப் போங்கய்யா! அரசியல் படத்தைப் பற்றிய மாற்றுக் கருத்துகளை முன்வைத்தால், எனக்கு இடைவேளையில் கிடைக்கும் சமோசா மற்றும் படம் முடிந்ததும் எனது வண்டி கீறல் இல்லாமல் இருக்குமா என்பதுதான் முக்கியம்; ஏனெனில் நான் ஒரு அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட காமன் மேன் என்கிறார் பரிசல். அது சரி, எல்லா காமன் மேன்களும் அரசியல் பார்வையுடைய கமல் மாதிரி போலீஸ் கமிஷனர் கண்ணில் விரல் விட்டு ஆட்ட முடியுமா என்ன? அப்படி கமல் முன் வைக்கும் அரசியல்தான் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது எனச் சொன்னால் தவறா?

திரும்பத் திரும்ப வெண்பூ (மற்றும் சிலர்) படத்தை ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏன் அப்படி? படத்தில் ஒளிந்திருக்கும் மௌனங்களைப் பேசச் செய்வதே விமர்சனமாயிருக்க முடியும். நீங்கள் சொல்வது மாதிரி, ஆஹா, ஓஹோ, வாராது போல் வந்த மாமணி இந்தப் படம் எனச் சொல்லத்தான் நிறைய பேர் இருக்கிறார்களே... எல்லாரும் அதே திருப்பணியைத்தான் செய்ய வேண்டுமா என்ன? இதில் சென்னையில் நடக்கும் கதையை ஏன் ஹைதையில் படம் பிடித்திருக்கிறார்கள் என்ற வெளங்கா வெட்டி கேள்வி வேறு! நல்லா பண்றாங்கய்யா விமர்சனம். இப்படி ஆபத்தில்லாமல் தயிர் வடை ஆராய்ச்சியை யார் செய்தாலும் பரவாயில்லை, இவர்களும் கலந்து கொண்டு கோஷ்டி கானம் பாடுவார்களாம். ஆனால், படத்தில் இருக்கும் ஹிந்துத்வா அரசியலைப் பற்றி மட்டும் பேசக் கூடாது! அப்போது படத்தை ரசிக்கத்தான் வேண்டும் என்று நீட்டி முழக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள்.

சரி, வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும் என்ற நர்சிம், கார்க்கி மற்றும் பலர் மாற்றுக் கருத்துடையவர்களை மன நோயாளிகள் என்று சொன்ன ஆசிஃப் மீரானுக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா எனத் தேடித் தேடிப் பார்த்தேன்.. ம்ஹூம், ஒரு .... இல்லை. (பாருங்க மக்கா, புள்ளி புள்ளியா வச்சு கண்ணியத்தைக் காப்பாத்திட்டேன்!). ஆசிஃப் மீரானின் அந்தக் கட்டுரை நகைச்சுவையாம் - மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை - எனக்கு சிரிப்பு வரவில்லை, எரிச்சல்தான் வந்தது.

எனக்கு எப்போதுமே செல்வேந்திரன் எழுத்துகளில் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், குறைந்த பட்சம் ஒரு forward thinking person என நினைத்திருந்தேன் அவரை. ஆனால் அவர் கோட்பாடு என்ற பெயரில் முன்வைக்கும் விஷயம் மிக மிக ஆபத்தானது. இந்த எழவிற்கு ஆங்கிலப் பெயர்களெல்லாம் எதற்கு? வாந்தியெடுப்பதும் வன்மம் காட்டுவதும் தமிழுக்கு மட்டுமே சொந்தமான விஷயங்களா என்ன?

/ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார்.
/

இப்படிக்கூட அப்பட்டமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்க முடியுமா என ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கிறது.

இப்படி, உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பல பூனைக்குட்டிகள் வெளியே வந்ததுதான் ஒரே நல்ல விஷயமென நினைக்கிறேன்!

கடைசியாக - ஆசிஃப் அண்ணாச்சி, இந்துத்துவ வெறியனாக இருப்பதைவிட மனநோயாளியாக இருப்பதையே நான் தெரிவு செய்கிறேன். உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள், இவன் ஒரு மன நோயாளி!

(முதல் பத்தி, சி மணியின் பச்சையம் கவிதையை ஒட்டி எழுதப் பட்டது)

என் குடிப் பிரச்சனை

குடி சிலருக்குப் பிரச்சனையாயிருக்கலாம். ஆனால் எனக்குக் குடிக்கும் இடம் பிரச்சனையாயிருக்கிறது.

யாராவது பேசினால் பதிலுக்குப் பேசுவது என்னுடைய வழக்கம். இது எல்லாருக்கும் பொதுவானதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவே சில சமயங்களில் என்னைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

சுங்க இலாகா அலுவலகம் அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு (அரசு சாராய வியாபரத்தை கையிலெடுக்குமுன் அதன் பெயர் சதீஷ் வைன்ஸ்) தினமும் செல்வது என்னுடைய வழக்கம். இது பல வருடப் பழக்கம். அங்கு கொஞ்சம் சுமாராயிருக்கும் சூழலும் என்னுடைய அலுவலகம் அருகிலிருப்பதாலும் நானே ஏற்படுத்திக் கொண்ட வழக்கம்.

ஒரு பழக்கத்தை ஆரம்பித்து விட்டால் பிறகு அதை மாற்றுவது கடினமாயிருக்கிறது. பாரிமுனையில் சதீஷ் வைன்ஸ் என்றால் அம்பத்தூரில் லக்ஷ்மி வைன்ஸ். சிகரெட், பத்திரிகைகள் வாங்குவதுகூட ஒரே கடையில்தான். செக்கு மாட்டைப் போல் தடம் தவறாமல் அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

தினமும் ஒரே இடத்தில் குடிப்பதால் சிலருடன் முகப் பழக்கம் வந்துவிடும். நட்பாகச் சிரிப்பார்கள். தீப்பெட்டி, சிகரெட் மாற்றிக் கொள்வதும் நடக்கும்.

ரம்முடன் கோலா கலந்து குடிக்கும் பழக்கமுடையவன் நான். அதாவது தண்ணீரோ அல்லது சோடாவோ சேர்க்காமல் முழுக்க முழுக்க கோலா. இல்லாவிட்டால் குடி தொண்டையில் இறங்காது, உமட்டிக் கொண்டு வரும். ஸ்மர்னாஃப் வோட்கா என்றாலும் கறுப்பு நாய் ஸ்காட்ச் விஸ்கியே ஆனாலும் செவன் அப் இல்லாமல் இறங்காது எனக்கு. அதனால், முழுக்க பெப்ஸியோ கோக்கோ விட்டுக் கொண்டு ரம்மின் வாசனை துளிக்கூடத் தெரியாதபடி குடிப்பது என்னுடைய பழக்கம். மதுவின் வாசம் எனக்குப் பிடிக்காது என்றாலும், குடித்தபின் இருக்கும் மனநிலை பிடிக்கும் என்பதால் கண்றாவி குடியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரையில்.

என்னுடைய இந்தப் பழக்கம் சிலருக்கு உறுத்தலாயிருக்கும் போல. அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒருவர் என்னைத் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தார். குடி கூடப் பரவாயில்லையாம், பெப்ஸி / கோக்தான் ஆகக் கெடுதலாம்.

‘பழக்கமாகிடுச்சுங்க, மாத்த முடியல’
‘சரி, மாத்திக்கப் பாக்கறேங்க’
‘இல்லாட்டி குடிக்க முடியாது’
‘ரம்மை விடவா கோலா கெடுதல்’

என்று பலவாறு பதில் சொல்லிப் பார்த்தும் மனிதர் விடுவதாயில்லை.

நல்ல வேளையாக அவர் என்னைத் தினமும் பார்ப்பதில்லை. இல்லாவிட்டால், கடையையே மாற்றிக் கொண்டு எப்போதோ போயிருப்பேன். அவரிடமே நீங்கள் பேசுவது பிடிக்கவில்லை என்று சொல்லலாம்தான். ஆனால் சாதாரணமாகவே நான் யார் முகத்தையும் சுருங்கச் செய்ய மாட்டேன். என்னளவில் லலிதமான பழக்கங்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய நண்பர்களானாலும் அவர்கள் செய்யும் அசூயையான காரியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் காட்ட மாட்டேன்.

அலுவலக விஷயமாக பெங்களூர் செல்லும்போது உடன் பணிபுரியும் கோபால் வருவான். குடிக்கும்போது திராட்சைப் பழங்களை மென்றுவிட்டு அங்கேயே கொட்டைகளைத் துப்புவான். பாத்ரூமின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கம்மோடில் ஒன்றுக்கிருக்கும் சத்தம் கேட்கும். பேசாமல் தலையைத் திருப்பிக் கொண்டோ அல்லது வராண்டாவிற்கோ வந்துவிடுவேன். வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டேன்.

இதுகூடப் பரவாயில்லை, அலுவலக உணவு மேஜையில் முருங்கையைப் போட்டு கடித்து மென்று (அப்போது பசு மாட்டின் அசையும் அடி வாய்தான் ஞாபகம் வரும்) தட்டிற்கு அருகிலேயே துப்புவான் உதயா. நைஸாகத் தலையைக் குனிந்து கொள்வேன்.

(இப்படி என் கதைல நான் நல்லவன் நான் நல்லவன்னு நானே சொல்லிக்கறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யுது, ஆனாலும் எல்லாரும் பண்றதுதானே இது)

பழகிய நண்பர்களிடமே இப்படித்தான் என்பதால் இவரிடம் எப்படி நேரடியாகச் சொல்ல. சில சமயம் அவர் பேசுவதைக் கேட்காதது மாதிரி தலைத் திருப்பி வெளியில் பராக்குப் பார்ப்பேன். தொடர்ந்து அறுத்தால், ம்ம் என்று தலையைக் குனிந்து கொள்வேன்.

இவரிடமிருந்து தப்பிக்க அவர் தலையைப் பார்த்தாலே தினசரியை (Economic Times) பிரித்துப் படிப்பது மாதிரி பாவ்லா செய்ய ஆரம்பித்தேன். மனிதர் விடுவாரா... சப்ளையரிடம் பேச பத்திரிகையைத் தாழ்த்தினால், அந்த இடைவெளியில் பிடித்துக் கொண்டு விடுவார்... ‘பாஸ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ் பெப்ஸி வேணாமே...’

’நீங்க குடிங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா தயவுசெஞ்சு தண்ணியோ இல்ல சோடோவோ மிக்ஸ் பண்ணிக்குங்க.. பாருங்க.. நான் அப்படித்தான் குடிக்கறேன்’

‘அடேய் நாதாறி, நான் என்ன குடிச்சா உனக்கு என்னடா...’ என்று கத்த நினைப்பேன். போலியான மரியாதை காட்டித் தொலைய வேண்டியிருக்கிறது சாராயக் கடைகளிலும். மேலும், மேல வேறு சொல்லியிருக்கிறேன் என்னுடைய நற்குணத்தை.

வெளியில் அரை லிட்டர் பெப்ஸி விலை 20 ரூபாய். கோக் விலை 22 ரூபாய். இது வெளியில்தான். டாஸ்மாக் பாரில் பெப்ஸி விலை 28 ரூபாய். ஒரு க்வார்ட்டருக்கு அரை லிட்டர் பெப்ஸி அல்லது கோக் வேண்டும் எனக்கு. நிறைய டூப்ளிகேட் வேறு பாரில் ஓடும். அந்த எரிச்சலில் நான் இருக்க, இவர் வேறு ரம்பம்!

கொஞ்சம் கொஞ்சமாக அன்பரின் தொல்லை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மண்டையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் என் நினைவெல்லாம் ஒரே பெப்ஸி மயம். ஒரு மனிதன் எதற்காகக் குடிப்பது - கனவுகளற்ற தூக்கத்திற்காககவும்தானே... ஆனால் எனக்கோ கனவில் கூட அரை லிட்டர் பெப்ஸி பாட்டில்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்குமளவிற்கு சங்கடப் பட்டேன்.

அவரைப் பார்ப்பது வாரத்திற்கு ஒரு முறைதான் என்பதாலும், அலுவலகத்தின் அருகில் வேறு எந்த நல்ல டாஸ்மாக் பார் இல்லை என்பதாலும், பெர்மிட் ரூமில் போய்க் குடித்தால் பாக்கெட் தாங்காது என்பதாலும், எழவு அதே பாருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

நேற்று மறுபடியும் அந்த ஆசாமியைச் சந்தித்தேன். மறுபடியும் அதே புராணம்... இப்போது கூடுதலாக கோக், பெப்ஸி பற்றி மின்னஞ்சலில் எப்போதோ சுற்றுக்கு வந்த விஷயங்களைச் சொல்லிப் பயமுறுத்தினார். கழிவறைகளைச் சுத்தம் செய்ய உபயோகிக்கலாமாம் கோக் மற்றும் பெப்ஸியை. அந்த அளவிற்கு அமிலமானது உங்கள் வயிற்றை என்ன செய்யும் எனக் கேள்வி எழுப்பினார். எனக்கு வயிற்றை வலிப்பது மாதிரி தோன்றியது. மறுபடி மறுபடி தண்ணீரோ அல்லது சோடாவோ கலந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

எழவு, பெயர்கூடத் தெரியாத ஒருவர் நம்மை இப்படி இம்சிப்பதா?

நிச்சயம் நான் ஒரு கொலைகாரனாகத்தான் ஆகப் போகிறேன்.

உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் - நான் சிறை செல்வதைத் தவிர்க்க என் அலுவலகத்தின் அருகில் உள்ள, அந்த ஆசாமி வராத, கொஞ்சம் உருப்படியான டாஸ்மாக் பாரை யாராவது தெரிவியுங்களேன்.

என் விநாயக முருகன் கவிதைகள்

என் விநாயக முருகன் மே மாததிலிருந்து வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரதானமாக கவிதைகள். நவீன விருட்சம், கீற்று, திண்ணை, உயிரோசை தளங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் இவரைப் படித்திருக்கலாம்.

தொடர்ந்து ஒரு தளத்திற்கு மேலேயே கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். நுட்பமான பார்வையுடன் சிறுசிறு விஷயங்களையும் கவனித்து கவிதையாக்குகிறார் விநாயக முருகன். ஹோட்டல் வாஷ் பேசினில் கைகழுவும் சம்பவத்தைக் கவிதையாக்குகிறார் (பார்க்க : http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_6734.html). இந்த இடத்தில் இது குறித்த முகுந்த் நாகராஜனின் கவிதையொன்றும் ஞாபகம் வருகிறது!. நேற்று பதிவிட்ட இவரது ஒரு மழை இரவில் நடந்தவை கவிதையும் நன்றாக இருக்கிறது. நமது வசதியை மனதில் வைத்துத்தானே நாம் மழை வேண்டுமென்றோ அல்லது வேண்டாமென்றோ சொல்கிறோம்!.

பல கவிதைகள் எளிமையான நேரடிக் கவிதைகள். மீன் தொட்டியைப் பார்க்கிறார். அதன் விவரங்களையும் சௌகர்யங்களையும் விற்பனையாளன் விவரிக்கிறான். எல்லாம் சரிதான். ஆனால் மீன்களுக்கும் அந்த மீன் தொட்டி பிடிக்குமென்பது இவரைக் குழப்புகிறது (http://nvmonline.blogspot.com/2009/06/blog-post_7426.html).

இவரது சற்று முன் வந்த மின்னஞ்சல் கவிதையைக் கீழே தருகிறேன் :
 
சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்

சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில்
சிறுமியொருத்திக்கு
இதயமாற்று அறுவை சிகிச்சை
பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன
சுவாரசியமற்று மேலே படித்தேன்.
சிறுமியின் பெயர் அகிலாவென்றும்
தந்தை பெயர் பாஸ்கரென்றும்
தொடர்ந்தது.
பால்யகால பள்ளிக்கூட நண்பன்
பாஸ்கரோவென ஒடினேன்
மருத்துவமனையில் நான் பார்த்த
புதிய நபரொருவர் தான்தான்
பாஸ்கரென்றும் மகள் கோகிலாவென்றும்
தவறாக அகிலா வ‌ந்துவிட்டதாகவும்
விளக்கினா‌‌‌ர்.
அகிலாவுக்கும் , கோகிலாவுக்கும்
இருந்த வித்தியாசத்தை
சுமந்தபடி திரும்பினேன்.

(http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_30.html)

இவருடைய பல கவிதைகள் என்னை ஈர்க்கின்றன. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கலாம்.

என் விநாயக முருகனின் வலைப்பதிவு முகவரி : www.nvmonline.blogspot.com

 
 

ஆழி சூழ் உலகு

ஆழி என்பது கடலில் அலைகள் பொங்குமிடம் என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறேன்.

நூறாண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டும் எண்ணிக்கையில் தமிழில் நாவல்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. என்ன அதிகபட்சம் ஒரு 100, 150 குறிப்பிடத்தக்க நாவல்கள் இருக்குமா?

இந்தத் தலையணை சைஸ் புத்தகங்கள் என்றால் (ஜெமோ புண்ணியத்தில்) எனக்கு அலர்ஜி. பின் தொடரும் நிழலின் குரலைப் படித்தவன் இன்னும் விஷ்ணுபுரத்தைப் படிக்கவில்லை. கொற்றவை பக்கமே போகக்கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.

கென், தமிழில் வந்த முக்கியமான நாவல்களுள் ஒன்று, படித்துப் பாருங்கள் என்று போன வருடம் சொன்னார். இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது.

எட்டு மாதங்கள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். படித்து முடிக்க கிட்டத்தட்ட 10 நாட்கள் அகிவிட்டன. காரணம் என்னுடைய சோம்பேறித்தனமும் வேலைகளும்தானே தவிர, நாவல் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவுமே சென்றது.

மீனவர்களைக் களமாகக் கொண்டது இந்நாவல். பெரிய நாவலுக்கே உரிய குணமான பலதரப்பட்ட மனிதர்கள், சிக்கல்கள், வாழ்க்கைப் பாடுகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசுகிறது. இந்த நாவலில் முக்கியமான அம்சமாகத் தெரிவது மரணம் - கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களுக்கு ஒரு மரணம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித் தனியாகவும் செத்துக் கொண்டே இருக்கின்றனர். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை முன்னிறுத்தும் நாவலோ என்றுகூடத் தோன்றுகிறது. மரணத்திலிருந்து தப்பிக்க தியாகத்தை முன்வைக்கிறார் ஆசிரியர் (’நண்பர்களுக்காக உயிர் விடுவது ஆகப் பெரிய தியாகம்’). பங்குத் தந்தை காகு சாமியாரைப் பற்றி விரிவாகவும் உருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜோ டி குரூஸ்.

ஆழியில் சிக்கி மரணத்திற்கெதிரான மூவரின் போராட்டத்துடன் நாவல் துவங்கி, அதில் ஒருவன் ஜெயிப்பதுடன் முடிகிறது. நடுவில் முன்பின்னாக காலத்தில் நகர்ந்து விரிவாகவும் ஆற அமரவும் ஆமந்துறை மீனவர்களின் கதையைச் சொல்கிறது. கூடவே நாடார்களின் கதைகளையும், பங்குத் தந்தைகளின் கதைகளையும்.

இதைத் தவிர ஜோ டி குரூஸ் வேறு ஏதாவது எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் இந்த நாவலில் அமெச்சூர்த்தனம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. நல்ல எடிட்டர் கிடைத்திருக்கலாம்! அடிபட்டிருக்கும் ஜஸ்டினை வசந்தா தைலம் தேய்த்து மயக்குவது, குளிக்கும்போது உடல் அழகைக் காட்டி சுந்தரி டீச்சர் சூசையை மயக்குவது என மலையாள பிட் பட ரேஞ்சிற்கு மேல் யோசிக்க மறுக்கிறார் ஆசிரியர்!

மீன்களைப் பற்றி, மீன் பிடிப் படகுகள் பற்றி, வலைகளைப் பற்றி, கடலைப் பற்றி, கடலில் புயலைப் பற்றி எனப் பல நுட்பமான தகவல்கள் நாவலின் கதைப் போக்கில் வருகின்றன. அவை வெற்றுத் தகவல்களாகத் துருத்திக் கொண்டிருக்காமல் கதையின் போக்கோடு இணைந்திருக்கின்றன.

1933ல் துவங்கி 1985 வரை மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை விரிவாகப் பேசியிருக்கிறது நாவல். முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் உட்புக கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால் அது ஆரம்பத்தடைதான், சில பக்கங்களிலேயே பழகிவிடும்.

ஆகச் சிறந்த நாவலென்று சொல்ல முடியாவிட்டாலும் தமிழில் வந்த முக்கியமான நாவல்தான் என்று தோன்றுகிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.

கௌதம சித்தார்த்தனின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள்

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக உன்னதம் பத்திரிகையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் கௌதம சித்தார்த்தன். சில வருடங்களுக்கு முன்பு காத்திரமான சிறுபத்திரிகையாக வெளி வந்த இதழ்தான் உன்னதம். இப்போது இடை நிலை இதழ்களின் கை ஓங்கிவிட்ட காலத்தில் சிறுபத்திரிகைகள் வருவது இன்னும் சிரமமாகிவிட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்திலும் தொடர்ந்து பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். புதுவித எழுத்து முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். சிறுகதைகள் குறித்து கறாரான பார்வைகள் உடையவர். ஆகஸ்ட் மாத உன்னதம் இதழில் அவர் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 1

... தனித்துவமான பாணியை உருவாக்கியவர்களும் அந்தச் சூழலில் இயங்கியவர்களும்தான் சிறுகதைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக மாறமுடியும். மற்றவர்கள் அந்தக் கட்டத்தில் மட்டுமே பிரகாசித்து மங்கிப் போய்விடுகிறார்கள்.

அதாவது, புதுமைப் பித்தன் காலத்தை சிறுகதைத் துறையின் பொற்காலம் என்று கொள்ளலாம். அந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காரணம், அதுவரை உரைநடையிலும், வடிவ நேர்த்தியிலும் மரபார்ந்த பாணியில் இயங்கி வந்த கதையாடலை முற்றிலும் புதிய வடிவிலான நவீனதளத்திற்குத் தள்ளினார் பித்தன். அவர் ஒரு புதிய பாணியை (trend setting) உருவாக்கியவர். அவரது சுவடொற்றி வந்த மற்ற ஆளுமைகளும் தங்களது எழுத்து வன்மைகேற்ப இயங்கினர். இதை நவீன காலகட்டை 1 என்று குறிக்கலாம்.

இதற்குப் பின்னால் வந்த பி எஸ் ராமையா இந்த இலக்கிய மனப்பான்மையை (mood) கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறார் (அவரது இலக்கிய லாபி கொஞ்ச காலம் மட்டுமே கை கொடுத்தது). அதன் பின்னால் வந்த ஒரு வரிசை (வ.ரா., சிட்டி, மீ.ப.சோமு, கி.ரா. சங்கு சுப்ரமணியன், றாலி, கரிச்சான் குஞ்சு...) கானல் நீராக மங்கிப் போய்விடுகிறது.

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 2

அடுத்து வந்த வரிசை பித்தன் காலத்து நவீனத்துவப் போக்கை அப்படியே பின்பற்றாது வாழ்வியலின் அகம் சார்ந்த தரிசனத்தோடு முற்றிலும் நவீனத்துவமாகிறது. மௌனி சார்ந்து பிரமிளிடமிருந்து கவித்துவமாகத் துவங்கும் இவ்வரிசை கசடதபற நா கிருஷ்ணமூர்த்தி, க்ரியா ராமகிருஷ்ணன், ம ராஜாராம் போன்றவர்களின் தீவிரத்தில் ஆரம்பித்து சா கந்தசாமி, ந முத்துசாமி, அம்பை.. என ஒரு புதிய பாணி உருவாகிறது. இந்த வரிசை தமிழ்ச்சூழலில் நிராகரிக்க முடியாத கதைகாரர்களாகப் பதிவாகியிருக்கிறார்கள்.

இங்கும் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பி எஸ் ராமையாக்கள் இருந்தார்கள். இதை நவீன காலகட்டம் 2 என்று குறிக்கலாம்.

சிறுகதைகளின் யதார்த்தவாதக் காலகட்டம்

... யதார்த்தவாதம் என்னும் அழகியலை தமிழின் மண்ணோடு இணைத்து அதன் செழுமை மிக்க கதையாடலை உருவாக்கத் தொடங்கியவர்களில், கி. ரா சார்ந்து பா செ., பூமணி, வண்ணநிலவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களுக்கு நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

இதற்கடுத்த வரிசை (பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி வகையறாக்கள்) இந்தப் பிரபலமான யதார்த்தப் பாணியை அப்படியே பின்பற்றி தாங்களும் நீர்த்துப் போய் சிறுகதைத் துறையையும் நீர்த்துப் போக வைத்தது...

சிறுகதைகளின் பின்நவீனத்துவ காலகட்டம்

ஆக, புதிதாக ஒரு பாணியை உருவாக்காமல் லாபியை வைத்தே குதிரை ஏறிக் கொண்டிருந்தால், காணாமல் போய்விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ, அடுத்த வந்த வரிசை (கௌதம சித்தார்த்தன், கோணங்கி, எம் டி முத்துக்குமாரசாமி, சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேம், எஸ் ராமகிருஷ்ணன்...) அப்பொழுது உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த பின்நவீனத்துவம் என்னும் பாணியை உருவாக்கியது...

... இந்தக் கட்டத்தில் உருவான பி எஸ் ராமையாக்களாக பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், கார்த்திகா ராஜ்குமார் போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களிடமிருந்து மேலெழுந்து வந்தவர்தான் ஜெயமோகன்.

ஜெயமோகனின் வருகைக்குப் பிறகு இந்தக் கதையாடலின் தீவிரம் சரிய ஆரம்பித்திருக்கிறது. புதுமைப் பித்தன் காலத்துக் கதையாடல்களின் தீவிரத்தன்மையை கல்கி மடை மாற்றி விட்டாற் போன்றதொரு சூழல் உருவானது. பத்திரிகைகளில் காலச்சுவடு கண்ணனின் பிரவேசம், சிறுபத்திரிகைகளின் தீவிரத்தன்மை மங்கி இடைநிலைப் பத்திரிகைகளின் தோற்றம், ஜெயமோகனின் கத்தடாய்கள் (ஜெயமோகனின் கதைகளைப் பற்றிய பிரமிளின் விமர்சனச் சொற்றொடர்) பற்றிப் பாராட்டும் வாசகர் கடிதங்கள்.

இந்தச் சரிவு இத்தோடு நிற்காமல், ஜெயமோகனின் கத்தடாய்களில் ராமகிருஷ்ணனும் சேர்ந்து கொள்ள, ரமேஷ் பிரேம் மெதுவாக அவர்களை நோக்கிப் பின் நகர...

எனச் செல்கிறது கட்டுரை. சிறுகதைகளின் தலித் இலக்கியக் காலகட்டம், நவீன இலக்கியக் காலகட்டம் என அலசுகிறார். இறுதில் தன்னுடைய பார்வையாக தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அரசியல் மொழியாகத்தானிருக்கும் என்கிறார்.

உன்னதம் இதழைப் படிக்க விரும்புபவர்களுக்காக :

உன்னதம் - தனி இதழ் ரூ 20, ஆண்டுச் சந்தா ரூ 200. தொடர்புக்கு :
உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638 455, ஈரோடு மாவட்டம். அலைபேசி : 99407 86278

நான் வளர்கிறேனே மம்மி!

நான் டுவிட்டரில் சேரவில்லை. வேறொன்றும் இல்லை - இந்த 150 வார்த்தைகளுக்குள் கதையெழுதுக, 200 வரிகளுக்குள் இந்திய சுந்தந்திர வரலாற்றைப் பற்றிய சிறு குறிப்பு வரைக போன்ற கட்டுப்பாடுகள் எனக்கு 9ம் வகுப்புப் பரிட்சைத் தாள்களையே நினைவுபடுத்துகின்றன. அப்போதே வகுப்புகளைக் கட் அடித்துவிட்டு அருகிலிருக்கும் சினிமா தியேட்டருக்குச் சென்றுவிடுவேன். அப்படிச் செய்யும் நான் சில சமயங்களில் அம்பத்தூரில் இருக்கும் அழகப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்களும் படித்துக் கொண்டிருப்பேன் (ஆனால் நிச்சயமாக கடினாமான கணக்குச் சூத்திரங்களை அல்ல).

உடனே.. ஆஹா, இவன் 9ம் வகுப்புதான் படித்திருக்கிறான், இவனுக்கெப்படி சிக்கலான கலை இலக்கியச் சூத்திரங்கள் புரியும் எனச் சிலர் கேட்கலாம். என்ன செய்ய, எனக்கிருப்பது குருவி மண்டைதான். நான் படித்ததே +2 வரை... அதுவும் தத்தக்கா பித்தக்கா என்றுதான் முடித்தேன்.

IIM, IITல் படித்தவர்களுக்கோ அல்லது ஜப்பானிலோ சான் ஃபிரான்ஸிஸ்கோவிலோ வாழ்ந்துகொண்டு கடினமான சூத்திர வாய்ப்பாடுகளை மனனம் செய்து திண்ணைப் பேச்சாகப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கோ சில விஷயங்கள் புரிவதில்லை. அதில் முக்கியமான ஒன்று : இலக்கியம் என்பது எளிமையானது என்பதுதான். இதற்கு பர்ரோஸிலிருந்து ஆரம்பித்து பாடம் நடத்தும் ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறென். தர்க்கங்களாலேயே தங்களது மூளையை / மனதை வடிவமைத்துக் கொண்டவர்களுக்கு இது சர்வ நிச்சயமாய்ப் புரியாது.

நண்பர் ஒருவர், இவன்சிவன், சுரேஷ் கண்ணன், ரோசா வசந்த் மற்றும் இன்னும் சிலரின் டுவிட்டரின் திண்ணை அரட்டைப் பேச்சுகளின் இணைப்பைக் கொடுத்தார். (முதலிலேயே வேறொரு அனானி நண்பர் ரோசா வசந்தின் டுவிட்டர் எழுத்தின் இணைப்பைக் கொடுத்திருந்தார்).

விஷயம் பெரிதாக எல்லாம் ஒன்றுமில்லை. நான் பதிவிட்டிருந்த மூன்றாவது வகுப்பும் ஏழாவது வகுப்பும் பதிவைப் பற்றித்தான் காரசாரமாக வெற்றிலை எச்சில் தெறிக்க ‘விவாதித்துக்' கொண்டிருந்தார்கள்.

ஐயா, மகாஜனங்களே, அது நான் எழுதியதில்லை என்று முதல் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன். குறைந்த பட்சம் நான் எழுதிய ஏதாவது ஒன்றை எடுத்து வைத்துப் பேசியிருந்தாலும் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கும் :). டுவிட்டரும் இணையத்தில்தான் இருப்பதால் அந்த 'விவாதங்களில்' பங்குபெறும் யாராவது பதிவில் இணைப்பு கொடுத்தால் எங்கள் தரப்பு விஷயங்களைச் சொல்ல ஏதுவாயிருக்கும்.

கழிவறை வாசகங்களை உயர்ந்த இலக்கியம் எனச் சொல்ல நான் ஒன்றும் மூடனில்லை. அதே சமயம், அப்படி யாரும் பாடுவதேயில்லை என்று சொல்ல முடியுமா என்ன? மூன்றாம் வகுப்பில் முதல் பாடலைப் பாடியது எவ்வளவு நிஜமோ அதே போல்தான் ஏழாம் வகுப்பில் பாடிய இரண்டாவது பாடலும். ஒரு சமூக ஆய்வாளனின் பார்வையோடுதான் அதைப் பதிவிட்டிருந்தேன். அதைப் பிறர் தங்களுக்கு விருப்பப்பட்டவாறு புரிந்துகொள்ளவோ அர்த்தப்படுத்திக்கொள்ளவோ செய்யலாம். அது பிரச்சனையில்லை.

ஒரு டுவிட்டர் (பதிவெழுதுபவர்கள் பதிவர், டூவிட்டர் எழுதுபவர்கள்? - தெரியாததால் டுவிட்டர் என்றே தொடர்கிறேன்), தன் குடும்பப் பெண்களின் பெயர்களை ஸ்ரீதேவிக்குப் பதிலாக எழுதுவார்களா என அறச் சீற்றம் கொண்டிருந்தார் (அவரது வெத்தலைக்குச் சுண்ணாம்பு கிடைக்காத கோபமோ என்னவோ). அப்படி என் குடும்பப் பெண்களின் பெயர்களை ஸ்ரீதேவிக்குப் பதிலீடாகச் செய்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை - ஆனால், பள்ளி மாணவர்கள் ஸ்ரீதேவி என்றுதானே பாடுகிறார்கள் என்று நானும் லாஜிக்கலாக மடக்கலாம்தான். ஆனால் எதற்கு வம்பு.. பிறகு டுவிட்டரை விட்டுவிட்டு துண்டுச் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு தம்வீட்டின் அகலக் கண்ணாடி முன்நின்று வெவ்வவ்வே காண்பித்தாலும் காண்பிப்பார்கள். யாராவது ஏதாவது சொல்லப் போனால், உன் வீட்டில் இருப்பது குறுகிய எளிமையான சுவர், உனக்கெல்லாம் கண்ணாடியின் அருமை தெரியாது எனலாம்!

இதில் ரோசா தான் செம காமெடி (எனச் சொல்ல ஆசைப் படுகிறேன்). அவர் சொல்லியிருந்தது எனக்குப் பின்னூட்டமாக வந்தது :

/ஜ்யோவ்ராம் சுந்தர் எனக்கு இலக்கிய சுகுணா திவாகராக தெரிகிறார்; அவருக்கு எளிய அரசியல் சூத்திரங்கள், இவருக்கு அதே போன்ற இலக்கிய சூத்திரம்./

பதிவுலகத்திலிருந்து VRS வாங்கிக் கொண்டு போய்விட்டவர் ரோசா. ஆனாலும் அவ்வப்போது பென்ஷன் வாங்கவோ அல்லது பழைய பாசத்தில் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்களைப் பார்க்கவோ பதிவுலகிற்கு வந்து செல்பவர். அவருக்கென்ன பதில் சொல்ல என்று யோசித்தேன். நண்பரோ, ‘இப்படியெல்லாம் நீங்கள் இருக்கக்கூடாது, ஏதாவது பதில் சொல்லாவிட்டால் உங்களது புகழுக்கு ஹாரம் வந்துவிடும்' என்றார். இன்னொருவர், ரோசா கையில் கத்தியுடன் யாருடைய குறியையோ அறுக்க இணையப் பக்கங்களில் அலைந்ததைச் சொல்லிக் கிலியூட்டினார். ம்ஹூம்; எனக்குப் பயமாயிருக்கிறது - நான் ஒப்புக் கொள்கிறேன் - ரோசா சொன்னதெல்லாம் 100% உண்மையானதுதான். தொடருங்கள் ரோசா உங்களது இரண்டு வரித் தீர்ப்புகளை...

(பதிவின் தலைப்பில் மம்மி என்ற வார்த்தை இருப்பதால் மம்மி ரிடர்ன்ஸ் பார்ட் III என்று யாராவது வாசித்தால் நான் பொறுப்பல்ல. உடனே 'இதுவும் உம்பர்டோ ஈகோ உபயோகித்த உத்திதான், அதான் சொல்கிறேனே ஜ்யோவ்ராம் சுந்தருக்கு எல்லாமே எளிய சூத்திரங்கள்தாம்' என்று தீர்ப்பு எழுதிவிடாதீர்கள் சாமிகளா!).

நண்பர் பா ராஜாராம்

நேற்று இரவு 12 மணி வாக்கில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது பா ராஜாராமின் கவிதையொன்று தமிழ்மணத்தில் இருந்தது. ஏற்கனவே வாசித்தது போன்ற நினைவு.

என்னுடைய 20 வயதில் குமார்ஜியின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக தெய்வாவும் பா ராஜாராமும் பழக்கமானார்கள். வாரத்திற்கு இரண்டு முறை குமார்ஜிக்கும் பா ராஜாராமுக்கும் நீளமான கடிதங்களை எழுதுவது என் வழக்கம். பெரும்பாலும் படித்த புத்தகங்கள், கவிதைகள் தொடர்பாகத்தான் இருக்கும் கடிதங்கள். என்னிலும் 6 வயது மூத்தவர்கள் மூவரும் என்றாலும், அது துளியும் தெரியாமல் நட்புடன் பழகுவார்கள்.

1994ல் நான் ஒரு மன அழுத்தத்தில் இருந்தபோது (வேறு என்ன, எல்லாம் எழவெடுத்த காதல் தோல்விதான்), கிளம்பி வாடா சிவகங்கைக்கு என்றார். சிவகங்கைக்குப் போய் ஒரு நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்.

டிவிஎஸ் 50 வைத்திருந்தார். அதில்தான் ஊர் சுற்றுவது. அப்போது அந்த ஊரில் பார் வசதி கிடையாது என்பதால் அவரும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர். ஆஹா, தனி அறையெல்லாம் எடுத்திருக்கிறார்களே, சரியான செட்தான் என்று சந்தோஷப்பட்டால்... எல்லாருமே 60 எம் எல் அல்லது 90 எம் எல் பார்ட்டிகள்! (நுரைகளற்ற 90 மில்லிக்கான காசு இருந்தது பாக்கெட்டில் என்ற ராஜாராமின் கவிதை வரி இப்போது ஞாபகம் வருகிறது).

ராஜாராமின் வீடும், பின்னாலிருந்த அவரது அறையும், தெருக்களும், ரயில்வே ஸ்டேஷனும் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அந்தக் குடி அறையின் வாசலில் இருந்த பெட்டிக் கடையில் வாங்கிய கோலி சோடாவும் கலரும்கூட. இன்னொரு முறை கோலி கலர் கலந்து ரம் குடித்தால் அந்தப் பழைய வாசனையைக்கூட கண்டுகொள்வேன் என நினைக்கிறேன்.

நிறைய கடிதங்களும் எப்போதாவது தொலைபேசி அழைப்புகளுமாக எங்கள் நட்பு இருந்தது. ராஜாராம் பழகுவதற்கு மிகப் பிரியமானவர்.

அவ்வப்போது அவரது கவிதைகள் சிறுபத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. கணையாழியில் சில கவிதைகள் வந்திருக்கின்றன. சுபமங்களாவின் கடைசி இதழில் (கோமல் இறந்த பிறகு ஒரு இதழ் வந்தது - வண்ண நிலவனை ஆசிரியராகக் கொண்டு) நடுப்பக்கத்தில் இவரது கவிதை வந்த நினைவு.

நாங்கள் எழுதும் கவிதைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம். அதிகமும் இவரது கவிதைகளைப் பாராட்டியதில்லை நான். அது சரியில்லை, இது சரியில்லை என்று நொள்ளை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்.

அவ்வளவு அன்பான மனிதருடன் 1996க்குப் பிறகு திடீரென்று தொடர்பு அறுந்து போய்விட்டது. எவ்வளவு முயன்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது.

எப்போதாவது குமார்ஜியிடமோ தெய்வாவிடமோ பேச நேர்கையில் ராஜாராம் பற்றிய பேச்சு வராமல் இருக்காது!

நடுவில்தான் நேற்று வலைப்பதிவில் அவரது கவிதையைப் படித்தது, அவர்தான் என்று பின்னூட்டத்தில் உறுதி செய்து கொண்டது, பிறகு அலைபேசியில் வெகுநேரம் பேசி, கடிதம் எழுதி என....

குமார்ஜி எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. வாசிப்பதுகூட அதிகபட்சம் ஆனந்த விகடன்தான். தெய்வா எப்போதுமே எழுதுவதில்லை - படிப்பதோடு சரி. இப்போது சவுதியில் இருக்கும் ராஜாராம் திரும்ப எழுத வந்திருக்கிறார். வலைப்பதிவில் தன்னுடைய கவிதைகளைப் பதிய ஆரம்பித்திருக்கிறார்.

மாதிரிக்கு ஒரு கவிதை :

குழந்தைகள் தூங்கியபின்பு
விளக்கணைத்துவிட்டு
பேசிக்கொண்டிருக்கிறாள்
இவள்.
திறக்கப்படாத கோயிலின்
கதவில்,
சுவற்றில்,
விட்டத்தில்,
பட்டுக்கொள்ளாமல்
அனுமதிக்கப்பட்ட
எல்கைக்குள்
பறந்துகொண்டிருக்கிறது
வவ்வால்.

அவரது வலைப்பதிவு முகவரி : www.karuvelanizhal.blogspot.com. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கலாம்.

ராஜாராம் நேற்று சொன்னது போல தேடித் தேடியும் தொலைந்த நட்பு பிறகு சடாரென்று எதேச்சையாகக் கிடைப்பது உன்னதமான கணம்தான். மிக மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

நகுலன்

எவ்வளவு முறை வாசித்தாலும் இன்னும் இன்னும் என வாசிக்கத் தூண்டும் ஒரு கவிஞர் நகுலன் (மற்றும் பிரமிள் & விக்ரமாதித்யன்). இன்னும் யோசித்துப் பார்த்தால், கொஞ்சம் தடாலடிக்காகவே பிரமிளைப் பிடித்திருக்கிறது. எழுத்து / கவிதை சார்ந்து மட்டுமே எனக்குப் பிடித்தவர்களாக நகுலனையும் விக்ரமாதித்யனையுமே சொல்ல முடியுமென்று தோன்றுகிறது.

கவிதை பற்றிப் பேச்சு வந்தால் நகுலன் வராமல் இருக்க மாட்டார். அரட்டைப் பெட்டியிலோ மின்னஞ்சலிலோ நகுலனை நான் பரிந்துரைக்காத நண்பர்கள் மிகக் குறைவு!

என்னுடைய மனம் மொழியாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காட்சியைப் பார்த்தாலும் அதுவும் எனக்கு வார்த்தைகளாகவே நினைவில் படிந்திருக்கும். பல கவிஞர்களின் எண்ணற்ற கவிதைகளைப் படித்திருந்தாலும், நகுலன் நினைவிலிருப்பதுபோல் மற்ற கவிதைகள் இல்லை. நகுலனும் என்னுள்ளே வார்த்தைகளாகவே இருக்கிறார்.

வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
நாலாபுறமும் வார்த்தைகள்
சொல்லில் சிக்காது
சொல்லாமல் தீராது

என்ற வரிகளை எழுதியது நிச்சயமாக நகுலனாகவோ அல்லது விக்ரமாதித்யனாகவோதான் இருக்க வேண்டுமல்லவா. வார்த்தைகள் எனும் அடர்ந்த காட்டில் திக்குத் தெரியாமல் சிக்கித் தவிக்கும் பாலகன் நான்.

பல விஷயங்களை நகுலனுடன் சேர்த்தே என் மனம் நினைவில் வைத்திருக்கிறது. கல்குதிரை - நகுலன் சிறப்பிதழ், விருட்சம் - திருக்குறளை அடியொற்றிய நகுலன் கவிதைகள், கணையாழி - நகுலனின் சாயைகள் மற்றும் இன்னொரு கதை (சிமி, குமி, உமிக்கரி / நஞ்சு, குஞ்சு, மத்தங்காய் / மணிக்குட்டன், குணிக்குட்டன், கொழுவாளை என்ற அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட {ஆத்மாநாம்} கவிதை கொண்ட கதை), திருவனந்தபுரம் - நகுலனின் பாழடைந்த வீடு, என் வீட்டு பூனைக்குட்டி - நகுலனின் மஞ்சள் நிறப் பூனை, என்னுடைய சில கதைகள் - இப்படியாக, இப்படியாக... இந்த வலைப்பக்கத்தில் இடப்பக்கம் இருக்கும் 'வந்த வழி சென்ற காக்ஷி' கூட நகுலனின் பாதிப்பினால் எழுதப்பட்டதுதான்.

கடந்த 20 வருடங்களாக நகுலனை வாசித்து வருகிறேன். ஆனால் சட்டென்று நகுலன் என்றவுடன் நினைவிற்கு வருவது மிஸ்டிக்தன்மை மற்றும் சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல் (இந்தச் சொற்களை மந்திரம் போல் எவ்வளவு முறை சொல்லியிருப்பேன்!).

யார் தலையையோ சீவுவது போல பென்சிலைச் சீவிக்கொண்டிருந்தான் என ஒரு வரியில் வரும். மூச்சு நின்றால் பேச்சும் அடங்கும் என்று சொல்லும் இன்னொரு வரி. தாடி ஏன் வளர்க்கிறார் என ஒருவர் விளக்கும்போது தாடி ஏன் வளர்கிறது என்பதுதான் சுவையானது எனச் சொல்லிச் செல்லும் வேறொரு வரி. கடல் இருக்கும் வரை அலைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன் எனக் கேட்கும் பிறிதொரு கவிதை. எல்லாம் நடந்து கொண்டிருக்கும் யாருமில்லா பிரதேசத்தில் நகுலன் என்ன செய்து கொண்டிருப்பார்...?

நான் நகுலனின் ஆராதகன். அதற்காக, அவர் எழுதிய மூன்று, ஐந்தென்ற பழந்தமிழ் இலக்கியத்தைச் சார்ந்த கவிதைகளெல்லாம் எனக்குப் பிடிக்குமென்று நினைத்துவிடாதீர்கள். சாதாரணமாக எனக்கு மரபுக் கவிதைகள் என்றாலே அலர்ஜி. அதுவும் நகுலன் மாதிரியானவர்கள் செய்தால் இன்னும் அலர்ஜி. விலங்குச் சங்கிலி எனத் தெரிந்தும், அதை மாட்டிக் கொண்டும் நடக்கத் தெரியும் என்பதில் என்ன மகிழ்ச்சியோ.

சாலையில் ஒரு பார வண்டி நக்ஷத்ர ஒளியில் மெல்லச் செல்லும் என்ற வரிகளைப் படிக்கையில் மனதில் விரியும் ஓவியம்... இப்படிப்பட்ட கவிதைகளுக்காக நகுலன்மேல் காதலில் கசிந்துருகி அவர் படத்திற்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். சில வரிகளைப் படிக்கையில் செல்லமாகத் திட்டியுமிருக்கிறேன்.

அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் என்னை ஈர்க்கின்றன. தட்டச்சுகூட சுகம்தரக்கூடியதுதான் என்பது நகுலனின் வரிகளைத் தட்டச்சும்போதே எனக்குத் தெரிகின்றது.

நான் ஒரு மிகப் பெரிய வாயாடி - அதுவும் நகுலனைப் பற்றிப் பேச ஆரம்பித்தால். நகுலனைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம், அல்லது அவரது சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். நான் இரண்டாவதைத் தேர்வு செய்கிறேன்

மதத்தின் குரலாக இருந்த தமிழ்க் கவிதையை மனதின் குரலாக மாற்ற வேண்டுமென்று விரும்பிய நகுலனின் சில கவிதைகள் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

(நகுலனைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவு : http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_26.html)

போட்டிகளும் வேறு விஷயங்களும்

உரையாடல் சிறுகதைப் போட்டி பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். நிறைய கதைகள் வந்திருக்கின்றன. (இதுவரை 111 கதைகள்) . மிச்சமிருக்கும் 7 நாட்களில் மற்ற வலைப்பதிவர்களையும் கதை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு வந்துள்ள எல்லாக் கதைகளையும் இந்த இணைப்பில் படிக்கலாம் :

http://tamil.blogkut.com/contest-uraiyadal.php

செந்தழல் ரவி சிரத்தை எடுத்து எல்லாக் கதைகளையும் வாசித்து தன்னுடைய இம்சை வலைப்பதிவில் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

மின்னல் பக்கம் லாவண்யாவும் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளார். அதன் விவரங்கள் உயிரோடையின் தளத்தில் இருக்கின்றன. ச முத்துவேல் எழுதிய கவிதையொன்றைப் பார்த்து கதை சொல்ல வேண்டும். கதை அளவு ஒரு பக்கத்திலிருந்து மூன்று பக்கங்கள் இருக்கலாம். மேல் விவரங்களுக்கு :

http://uyirodai.blogspot.com/2009/06/blog-post_22.html

இந்தப் போட்டியிலும், அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உயிரோடை சிறுகதைப் போட்டியில் வந்த ஒரே ஒரு கதையைத்தான் படித்திருக்கிறேன் இதுவரை. நானும், ஸ்ரீவித்யாவும், அனுவித்யாவும், வெறும் வித்யாவும்... என்ற தலைப்பில் நந்தா எழுதியதிருந்த கதை எனக்கு மிகப் பிடித்திருந்தது.

நந்தாவின் இந்தக் கதை மட்டுமல்ல, அவரது பல கவிதைகளும் என்னைக் கவர்கின்றன. ஒரு மாதிரி டிஜிட்டல் கவிஞர்! பிரம்மராஜன், எஸ் சண்முகம் போன்ற கவிஞர்களை வாசித்தவர்கள் இவரை அதிகமாக ரசிக்க முடியும். மனிதர் கவிதைகளில் கலக்குகிறார். திரட்டிகளில் இவரது கவிதைகள் வருகிறதா எனத் தெரியவில்லை. என்னுடைய பிளாக்ரோலில் இவரது முகவரி இருந்தாலும், தனியாகத் தருகிறேன் : www.nundhaa.blogspot.com

நந்தாவைத் தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நந்தா மட்டுமில்லை. யாத்ரா, பிரவின்ஸ்கா, சேரல், மண்குதிரை எனப் பலர் இப்போது தொடர்ந்து நன்றாகக் கவிதையெழுதிக் கொண்டிருக்கிறார்கள். மண்குதிரை விடுமுறையில் இருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் எழுதத் துவங்கிவிடுவார் என நம்புகிறேன்.

இங்கே வலைப்பதிவுகளில் முதலில் ஆர்வமுடன் எழுதத் துவங்குபவர்கள், பல்வேறு காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அப்படியில்லாமல், மேலே உள்ளவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமென்பது என் ஆசை.

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், அனுஜன்யா வெறும் கவிதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருந்தவர் பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள் என முன்னேறியிருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபடுகிறார். அனுஜன்யாவிற்கு ஆங்கில மொழியின் மேல் நல்ல கண்ட்ரோல் இருக்கிறது. இவர் கவிஞராகவும் இருப்பதால், கவிதைகளை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும். தமிழில் பல கவிதை மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். சிலர் அகராதியை அருகில் வைத்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பார்கள். அங்கே தமிழ் வார்த்தைகள் இருக்கும், கவிதை இருக்காது. (hit the nail on its head என்பதை நகத்தின் தலையில் அடி மாதிரியானவை மொழிபெயர்ப்பில் சேர்த்தியே இல்லை!)

மொழிபெயர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கவிதையின் உயிர். சில கவிதைகள் இறுக்கமான மொழிநடையில் இருக்கும். தமிழில் மொழிபெயர்க்கும்போது அந்த இறுக்கத்தை அப்படியே கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அதாவது, நம்முடைய கவிதை நடையை மறந்துவிட்டு, மொழிபெயர்க்கும் கவிதைக்கு நேர்மையாயிருக்க வேண்டும்.

வளர்மதி சமீபத்தில் a leaf, treeless என்பதை 'ஒரு இலை, மரமற்று' என்று மொழிபெயர்க்காமல் 'காற்றில் அலையும் இலையொன்று ' என எழுதியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது. சமீபத்தில் அய்யனார் மொழிபெயர்த்திருந்த கமலாதாசின் கவிதையும் நன்றாக வந்திருந்தது. தொடர்ந்து அய்யனாரும் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் யாருக்கு லாபம்?

நோக்கியாவின் சிறப்பு பொருளாதார மண்டலம் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பதூரில் இருக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். அதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்கீழ் சில விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அத்தகவல்களை இன்று New Indian Express வெளியிட்டுள்ளது.

நோக்கியோவின் உள்கட்டுமானத் தேவைகளுக்காக அவர்கள் சில அசையாச் சொத்துகளை வாங்க வேண்டியிருக்கிறது. அப்படி வாங்குவதற்கு ஆகும் செலவை அரசே ஒரு சலுகையின் மூலம் திருப்பித் தர உறுதியளித்திருக்கிறது. எப்படி? 2005லிருந்து மூன்று வருடங்களுக்கு நோக்கியா செலுத்தும் விற்பனை வரியை (VAT) திருப்பிக் கொடுத்துவிடுவதன் மூலம் இது சாத்தியப்பட்டிருக்கிறது. இப்படித் திருப்பிக் கொடுப்பது மட்டுமே ரூ 638 கோடிகள்! அதாவது நோக்கியாவின் உள்கட்டுமானத் தேவைகளுக்கு தமிழக அரசு பணம் கொடுக்கிறது!

பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன இந்த சிபொமவிற்கு. நிலங்களின் விலையை வழிகாட்டும் மதிப்பில் (guideline value) பாதி விலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வழிகாட்டும் மதிப்பென்பதே மிகக் குறைவானதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் 50% வசூலித்திருக்கிறது. அப்படிக் குறைந்த விலைக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் அதற்கான முத்திரைத்தாள் வரியிலிருந்தும் விலக்களித்திருக்கிறது அரசு.

நோக்கியா சிபொமவில் விற்கும் / வாங்கும் பொருட்களுக்கு எவ்விதமான மாநில / நகரசபை வரிகள் கிடையாதென்றும் ஒரு சலுகை.

தொழிலாளர் நலனுக்கு எதிரானதாகவும் நோக்கியாவிற்குச் சாதகமாகவும் பல சலுகைகளை அரசு அளித்திருக்கிறது. அதில் முக்கியமானது, அரசு இந்த சிபொமவை public utility யாக அறிவித்திருப்பதாகும். contract labourகளாகவும் மற்றும் மிகக் குறைந்த ஊதியத்தில் (ரூ 3,400 ரூபாயிலிருந்து ரூ 5,400 வரை) வேலை செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.

இப்படிப் பல சலுகைகளை வழங்குவதற்கு அரசுகள் தரும் காரணங்கள் : வேலை வாய்ப்பு அதிகரிக்கச் செய்வது, முதலீட்டை அதிகரிப்பது என்பதாகும். ஆனாலும், பாருங்கள், இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உலக அளவில் நோக்கியாவில் வேலை செய்பவர்கள் வாங்கும் சம்பளத்தில் 45ல் ஒரு பங்கைத்தான் வாங்குகிறார்கள்!!

இரண்டு நாட்களுக்கு முன் வந்த செய்தியின் படி, சென்னையில் உள்ள நோக்கியாதான் உலகத்திலேயே அதிகப்படியாக அலைபேசிகளை உற்பத்தி செய்கிறதாம். இன்னும் தங்கள் முதலீட்டையும் உற்பத்தியையும் அதிகப்படுத்தப் போகிறார்களாம்.

தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பல உரிமைகள் மறுக்கப்பட்டு வேலை செய்வதால் அவர்களுக்கு லாபம் கிடையாது. சரி, அரசிற்காவது ஏதாவது வருமானம் வருமா என்று பார்த்தால், அதுவும் கிடையாது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், சிபொமவில் இருக்கும் நிறுவனங்களுக்கு சுங்க வரி, கலால் வரி எதுவும் கிடையாது. ஏன், வருமான வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது!

இப்போது ஒரு கேள்வியை கேட்டுக் கொள்வோம். இப்படிப்பட்ட சிபொமக்களால் யாருக்கு லாபம்? விடை தெரிய மூளையைக் கசக்க வேறு வேண்டுமா என்ன? ஆனால் உப கேள்வியாக எழும் ‘பிறகு ஏன் பல சிபொமக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன' என்பதற்கு நிச்சயம் மூளையைக் கசக்கித்தானாக வேண்டும்!

சி மணிக்கு அஞ்சலி

தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர் சி மணி. இவர் நேற்று இரவு இறந்துவிட்டதாக இன்று காலை அறிந்தேன்.

சி சு செல்லப்பாவின் 'எழுத்து' காலம்தொட்டு எழுதியிருக்கிறார் (சிசுசெ தொகுத்த புதுக்குரல்கள் தொகுதியிலும் இவரது கவிதைகள் இருக்கும்). தமிழில் நவீன கவிதையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர். வரும் போகும், ஒளிச் சேர்க்கை போன்ற கவிதைப் புத்தகங்கள் க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றன. வே மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார். சந்தத்தோடு கூடிய நவீன கவிதைகளில் இவர் ஞானக்கூத்தனுக்கு முன்னோடி.

இவர் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இவரது பச்சையம் கவிதையிலிருந்து சில பகுதிகளை ஒருமுறை பதிவிட்டிருக்கிறேன் (பார்க்க : http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_09.html)

இவர் எழுதிய நரகம், பச்சையம், வரும் போகும் போன்ற நீள் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. சி மணியின் வேறு சில சிறிய கவிதைகளைக் கீழே தருகிறேன்.

தீர்வு

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்,தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.

சிக்கல்

பூஎன் றூதித் தள்ளக்
கூடி யதையும் கூந்தல் பிய்த்துக்
கொள்ளும் சிக்க லாக்கிக்
கொண்டும் விடும்புதுப் பழக்கம் நம்மைத்
தொத்திக் கொண்டுவிட் டது.தொடக்
கத்தில் பொழுது போகும் நேர்த்தி
கண்டும், மூளைக் கூர்மை
எண்ணத் திலும்பு தைந்து போனோம்.
அண்மை யில்யா வும்சாக்
கென்றும், இதுநம் மேதா விலாச
மேன்மைக் காக என்றும்
தோன்றி யது.இனி மீட்சிச் சிக்கல்

இடையீடு

1. சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை

2. எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

3. என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.

4. எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று

மினியுகம்

சனி த்துவிட்டது
மினி யுகம்; ஒழிந்தது
நனி பெரும்மனிதர் கொற்றம்.
இனி
மினி மக்கள் காலம்
மனி தனைவிட்டு
மினி தனைப்பாடு போற்று
குனி என்பேச்சைக் கேள், ஏ
னெனி லெனக்குத் தெரியும் நானொரு
மினி மேதை

எனக்குப் பிடித்த கவிஞனுக்கு அஞ்சலி.

தேர்தலும் ஈழப் பிரச்சனையும்

மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈழப்பிரச்சனையை தேர்தல் அரசியலாக்கலாமா எனச் சிலர் வினவக்கூடும். ஆனால், தேர்தல் - அரசியலில் ஈடுபடும் கட்சிகள் இதைத் தேர்தல் பிரச்சனையாக்குவதே சரியானது.

தமிழகத்தில் இப்போதிருக்கும் அரசியல் அணிகளே நீடித்தால் அது நகைப்புக்குரியதாகிவிடும். யோசித்துப் பாருங்கள்; வைகோ ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் இருந்து கொண்டு ஈழப்பிரச்சனையில் எங்கள் நிலைபாடுகளுக்கு வாக்களியுங்கள் என்றால் மக்கள் எதால் சிரிப்பார்கள்? இதேதான் வலது கம்யூனிஸ்டிற்கும். ராமதாசின் பாமக (காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும்) திமுகவுடன் இருந்தாலும் சரி, அதிமுகவிற்கு வந்தாலும் சரி, அவர்களாலும் இதைத் தேர்தல் பிரச்சனையாக்க முடியாது. திருமாவளவனுக்கும் இதே நிலைதான். விஜயகாந்தின் தேமுதிக ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளைப் பற்றி வாயே திறப்பதில்லை. சரத்குமாரின் கட்சி வாயைத் திறந்தாலும் மூடிக் கொண்டிருந்தாலும் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை!

ஆனால் குமுதம் மாதிரியான சில பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பில் ஈழம் என்பது முக்கியப் பிரச்சனையாக மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு வைகோ, ராமதாஸ், தா பாண்டியன், திருமாவளவன் ஓரணியாகத் திரண்டால் அவர்கள் ஈழப் பிரச்சனையை வாக்கு அரசியலாக முன்னெடுக்கலாம். அதற்கு தனி நபர் ஈகோ, தொகுதிப் பங்கீடு போன்ற பிரச்சனைகள் வராதிருக்க வேண்டும். இதைத் தங்கள் முன்னுள்ள ஒரு வரலாற்றுக் கடமையாக அவர்கள் பார்க்க வேண்டும்.

வெகுஜனத் தொலைக்காட்சி ஊடகங்கள் அழவைக்கும் தொடர்களிலும் ஆட்டங்களிலும் மக்களை மூழ்கடித்தாலும் பலரிடம் பேசுகையில் இலங்கையில் கொல்லப்படும் தமிழ் இனத்திற்கான அவர்களது கவலை புரிகிறது (1980களில் இருந்த மாதிரியான பெரிய எழுச்சி வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளே கனன்று கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்).

மத்தியில் காங்கிரசோ அல்லது அது ஆதரிக்கும் ஓர் அணியோ ஆட்சிக்கு வராத பட்சத்தில் இங்கிருந்து செல்லும் எம்பிக்கள், கறவை மாடுகளான அமைச்சரவைகளைக் கேட்காமல் (ஒரு மாறுதலுக்குத்தான்!) இலங்கையில் போர் நிறுத்தத்தை தங்கள் ஆதரவிற்கு முன் நிபந்தனையாக வைக்கலாம். போர் நிறுத்தம் நடைபெற்ற பிறகே தங்களின் கட்சிகள் அரசில் சேரும் என நிபந்தனை விதித்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கோ அல்லது மூன்றாவதோ அல்லது முப்பதாவது அணிக்கோ இருக்கும்.

இப்படி ஓர் அணி உருவாகாவிட்டால், திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே மக்களவைத் தேர்தலிலும் ஈழப் பிரச்சனை பேசப்படாமலேயே போகலாம். அது சோகமானது.

குறிப்பு : (http://www.kalugu.com/ தளத்திற்காக எழுதப்பட்டது. இதன் ஆங்கில வடிவத்தை இங்கே வாசிக்கலாம் : http://kalugu.com/2009/03/04/elections-and-the-sri-lanka-crisis/. மொழிபெயர்த்து வெளியிட்ட கழுகு.காமிற்கு நன்றி.

ஈழம்

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நானறிந்த வரையில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லை. அவர்களது இந்த மௌனம் என்னை பயமுறுத்துகிறது. அல்லது மிக உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் நாம் ஏன் தலையை நுழைக்க வேண்டுமென்று இருக்கிறார்களோ என்னவோ...? ஆனாலும் தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் / எழுத்தாளர்களின் இந்தக் கள்ள மௌனம் என்னைத் துணுக்குறவே செய்கிறது.

அனைத்திந்திய அளவில் தொலைக்காட்சிகள் போகும் போக்கில் அல்லது ஒளிபரப்ப வேறு விஷயங்கள் இல்லாதபோது மட்டுமே ஈழப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கின்றன. பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் இந்தப் பிரச்சனை பிரதானமாகக் கைகொள்ளப் படவில்லை.

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியலாம், அதாவது ஜெயலலிதா, சுப்ரமணிய சுவாமி, சோ, ஹிந்து ராம், மாலன் போன்ற பார்ப்பனர்களாக அவர்கள் இருப்பது. காங்கிரஸ்காரர்களை விடுங்கள்; காவேரி விஷயத்தில்கூட கர்நாடக மற்றும் தமிழக காங்கிரஸ் தனித்தனி நிலைப்பாடெடுக்கலாம். ஆனால் ஈழப்பிரச்சனையில் அதுவும் முடியாது. ஆனால் தேசத் தலைமையைவிட அதிக அளவில் குரல் கொடுக்கிறார்கள் மாநிலத் தலைவர்கள்.. Loyal than the king..?? அல்லது ராஜீவின் ஆவி இன்னமும் அவர்களைத் துரத்துகிறதா...?

ஆயுதங்களின் ஷெல்ஃப் லைஃப் முடிவதற்கு முன்னர் உபயோகித்தாக வேண்டிய கட்டாயத்தினால் சில நாடுகளின்மேல் போர்த் தொடுக்கும் அமெரிக்கா. தன்னுடைய ராணுவத் தளவாடங்களை விற்பதற்காகவே உலகின் பல இடங்களில் போர் நடந்து கொண்டேயிருக்க வேண்டுமென விரும்புமது. இப்படிப்பட்ட வல்லரசாகத்தான் இந்தியா விரும்புகிறதா எனத் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி, பிற மாநிலத்தவர்களும் யோசித்துப் பார்க்கலாம்.

இந்திய அரசை நோக்கிப் பலர் இங்கு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இந்தப் போரில் இலங்கைக்கு இந்தியா மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிக் கொண்டிருக்கிறது எனும்போது இதைவிட வேலையற்ற செயல் வேறிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் :

இலங்கையில் தம்முடைய தொழில்களை நடத்தும் மாருதிகளின், அஷோக் லேலண்டுகளின், டாடா டீக்களின், ஹீரோ ஹோண்டாக்களின், ஏர்டெல்களின் நலனை முன்வைத்தே இந்தியா செயல்படுகிறது. ஈராக்கில் மறு கட்டுமானப் பணிகளை பல அமெரிக்க நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டதைப் போல இலங்கையில் செய்ய இந்திய கம்பெனிகள் விழைகின்றன. இதையேதான் பிரணாப் முகர்ஜியும் இலங்கையின் மறு கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா உதவும் எனச் சொல்கிறார்.

இந்நிலையில் நமது போராட்ட வடிவமென்பது உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என இல்லாது இலங்கையில் வணிக நலன்கள் உள்ள இந்திய நிறுவனங்களையும் அவர்களது பொருட்களையும் மறுப்பதேயாகும். எங்கு வலிக்குமோ அங்குதான் அடிக்க வேண்டும். (we should hit them where it counts). இதை ஒரு ஆரம்ப கட்ட போராட்ட வடிவமாகச் செய்யலாம். தனிநபராக இல்லாமல், ஏதாவது ஒரு இயக்கம் முன்னெடுத்தால் நல்லது.

விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகள் என உடுக்கையடிக்க வரும் நண்பர்களுக்கு... மன்னிக்கவும், அதைப் பிறிதொரு சமயம் வைத்துக் கொள்வோம். உடனடித் தேவை போர் நிறுத்தம்... இது எவ்வளவுதான் மொண்ணையான வெற்று மனிதாபிமான அரசியல் கலப்பற்ற கோரிக்கையாக இருப்பினும்.

குறிப்பு : http://www.kalugu.com/ தளத்திற்காக எழுதப்பட்டது. இதன் ஆங்கில வடிவத்தை இங்கே படிக்கலாம் : http://kalugu.com/2009/02/21/eelam-issue/#comment-236. மொழிபெயர்த்து வெளியிட்டமைக்கு கழுகு.காமிற்கு நன்றி.