இரை மற்றும் சில

இரை

அசையாதிருக்கும் இரவின் வெளிச்சத்தில்
ஊர்ந்துகொண்டிருக்கிறது
ஓலைக்கூரையின் நடுவில்
இரை தேடும் பாம்பு
இப்புறம் திரும்புமா
அப்புறம் செல்லுமா
என்பதில் இருக்கிறது
வாழ்வு
பிரார்த்தனையின் இரைச்சலில்
திரும்பிய பாம்பு
விழுங்கிச் செல்லும்

பெரியவன் ஆவது

தோளில் அமர்ந்து பின் பறக்கும்
புறா இறக்கைகளின் கதகதப்பு
இருந்துகொண்டேயிருக்கிறது
இருக்கிறாற் போல் இருந்து
திடீரென்று முட்டும் கன்றுக்குட்டியின் மோதல்
இன்னமும் இதமாய் வலிக்கிறது
உணவுக்காகத் தாவிய நாய்
மார்பில் கால் வைக்க
பயந்து தடுமாறி விழுந்த
சிறு வயதுக் காயத் தழும்பு
முதுகில் இருக்கிறதா தெரியவில்லை
டி.வி. பார்க்க அமரும்போதெல்லாம்
மடியில் வந்து படுத்துக்கொள்ளும் பூனை
எங்கே போயிற்றோ
எல்லாம் காணாமல் போக
நான் பெரியவனானேன்

அம்மாவும் அப்பாவும் காணாமல் போக்கியவை

காணாமல் போக்கியவை பற்றிய
நீண்ட பட்டியலே அப்பாவிடமிருந்தது
சின்ன வயதில் அட்லஸ் சைக்கிள்
அக்காவை விட்டு வரப்போனபோது
எடுத்துச் சென்ற ஃபாரின் குடை
கோயிலில் எப்போதோ செருப்பு
வேலையிலிருந்து திரும்பும்போது
இருநூறு ரூபாய் பணம்
என ஆரம்பித்து சென்றுகொண்டேயிருந்தது
அம்மாவும் சிலவற்றைத் தொலைத்திருந்தாள்
வெளித் திண்ணையில் மறந்துவைத்த
டிரான்சிஸ்டர்
ஒரு காதுத் தோடு
மற்றும்
பதினேழு வயது மகன்

(இந்த வார ஆனந்த விகடன் இதழில் - 5.11.2008 தேதியிட்டது - வெளியானவை)

இன்று மற்றுமொரு நாளே

காலையில் எழுந்து
அவசரமாய்க் குளித்து
டிபன் காஃபி
கசப்பு நாக்கிலிருக்க
கூடவே ஒரு சிகரெட்
அலுவலகம்
with reference to your letter
தட தட தட்
மதிய உணவிற்குத் தயிர்சாதம்
தூக்கக் கலக்கத்துடன் வேலைகள்
சீக்கிரம் கிளம்பணும்
ஐயையோ லேட்டாயிருச்சே
என்ன ரஷ், என்ன ரஷ்
கைகால் கழுவி
சாப்பிட்டுப் படுத்து,
நாளையேனும்...

(கவிதா சரண் ஜூன் 1992ல் வெளியானது)

சில கேள்விகள், சில பதில்கள்

முதலில் : சினிமா பற்றிய கள ஆய்விற்காக சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இணையத்தைப் பாவிப்பவர்கள், அதிலும் தமிழில் எழுதுபவர்கள் மிகக்குறைவே - மிகச் சிறிய segment. சரியாய் வருமா என யோசித்துப் பார்க்கலாம். மற்றபடி இக்கேள்விகளை எழுப்பி விடைதேடுவது சுவாரசியமான விளையாட்டுதான்.

நான் நிறைய சினிமா பார்ப்பவன் இல்லை. தொலைக்காட்சி சினிமாக்களைக் கூட எப்போதாவதுதான் பார்ப்பேன் (25 வயதுவரை வாரம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன், பிறகு என்ன காரணத்தினாலோ குறைந்துவிட்டது). அதனாலேயே நர்சிம் கூப்பிட்டபோது வேறு ஒருவரைக் கூப்பிடச் சொல்லியிருந்தேன். குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன் என்பதால் இப்போது இப்பதிவு. கூப்பிட்ட நர்சிம் & வால்பையனுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஐந்து அல்லது ஆறு வயதிலிருந்து. அம்பத்தூரில் இருக்கும் ரங்கா டூரிங் கொட்டாயில் ஒரு எம்ஜிஆர் படம். முன்-வரிசையில் மண் தரையும் பின்னால் கையில்லா மடக்கு நாற்காலிகளும் கொண்ட கீத்துக் கொட்டாய் திரையரங்கம். ஒரே சத்தமாக இருந்த நினைவு. நடுநடுவில் விற்றுக் கொண்டிருந்த திண்பண்டங்களைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த ஞாபகம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சிவாஜி. அதற்குமுன் பாபா. சாதாரணமாக ரஜினி படங்களைத் திரையரங்கிலோ அல்லது வேறு மார்க்கத்திலோ பார்த்துவிடுவேன். இன்னும் குசேலன் பார்க்கவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சுப்ரமணியபுரம், டீவீடி, வீட்டில். குடும்பம் / காதலி / நண்பனின் துரோகம்தான் பிரதானமாய்த் தெரிந்தது. சிறுபொன்மணி அசையும் பாடல் பழைய ஞாபகங்களைக் கிளறியது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ரத்தக் கண்ணீர்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினியின் அ-அரசியல் பிரவேசம் 1995ல். லும்பன்களின் அரசியல் பற்றி ஜெயமோகன் தினமணியில் எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறது. லும்பன்கள்தான் வந்துட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றியது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எதுவும் தாக்கியதில்லை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது. நிழல் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தேன். கனவு இதழ்களில் வரும் கட்டுரைகளையும். மற்றபடி அங்கொன்றும் இங்கொன்றுமாக சாரு, யமுனா எழுதும் கட்டுரைகளே அதிகம் வாசிப்பவை.

சினிமா பற்றிய புனைவெழுத்துகளை நிறைய வாசித்திருக்கிறேன். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, அசோகமித்திரனின் நாவலொன்று, பல சிறுகதைகள்.

7. தமிழ்ச்சினிமா இசை?

தினமும் தொலைக்காட்சியில் காலையில் சிறிது நேரம் பார்த்துக் கேட்பதுதான் (காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. அப்ப படிப்பா? டாய்லட்டில் செய்தித்தாள்கள்தான்!). இளையராஜா, ஏ ஆர் ரகுமான் பாடல்கள் பிடிக்கும். 18 - 20 வயதில் சினிமா மெட்டுகளுக்குப் பாட்டெழுதிப் பார்த்திருக்கிறேன். அதற்கும் முன்னர், பள்ளிப் படிப்பின்போது சினிமா பாடல் வார்த்தைகளைப் பாலுறுப்பு வார்த்தைகள், ‘கெட்ட' வார்த்தைகள் கொண்டு பதிலீடு செய்து பாடுவது ஒரு fun.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சத்யஜித்ரேயின் சில படங்கள் தொலைக்காட்சியில் இரவுநேரத்தில் தொடர்ந்து காட்டியபோது பார்த்திருக்கிறேன். உலக சினிமா என்றால் புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜெட் லீ, குங்ஃபூ ஆஃப் செவன் ஸ்டெப்ஸ், 36th சேம்பர் ஆஃப் ஷாவலின் மாதிரியான படங்களே அதிகம் பார்த்தது. கோடார்டின் here and elsewhere அப்புறம் அகிரா குரசாவாவின் சில படங்களும் - அவரின் பல படங்களை ஒரு வார காலத்திற்கு chennai film society மூலமாக Russian Cultural Centre-ல் திரையிட்டபோது - ஆண்டு 1994).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

1995ல் ஒரு படத்திற்கு வசனம் எழுத உதவினேன்; பெரிதாக இல்லை. கொஞ்சம் தான். அதன் வசன கர்த்தா - தயாரிப்பாளர் நண்பர் என்பதால் இதைச் செய்தேன். பிடித்திருந்ததாகத்தான் நினைவு. படம் வெளியாகி தோல்வியடைந்தது. பிறகு வேறெதுவும் இல்லை. மீண்டும் செய்யும் எண்ணமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தெரியலீங்களே :)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்குப் பெரிதாக பாதிப்பிருக்காது.

சிலர் புணர்ச்சிக்கு புதிது புதிதான மன பிம்பங்கள் கிடைக்காமல் திண்டாடலாம். ஊடகங்கள் பரபரப்பிற்கு வேறு ஏதாவது தேட வேண்டியிருக்கும். சினிமாவை நம்பி இயங்குபவர்கள் திண்டாடிப்போவர். இந்தி சினிமா தமிழகத்தை ஆட்கொள்ளும் அபாயம் ஏற்படலாம்.

ஐந்து பேரைக் கூப்பிடணுமா.. சரி...

1. டிபிசிடி
2. கென்
3. டி ஜே தமிழன்
4. சுகுணா திவாகர்
5. மோகன் கந்தசாமி

பார்வைப் பிழை

தரையில் படுத்து
வெளிச்சம் தழுவிய
சுவரைப் பார்த்தேன்
கையைக் குவித்துக் கொண்டு -
அதன் ஊடே
சிறிதாய்ச் சுவர்
மட்டுமல்லாது
சின்னச் சின்ன மேடுபள்ளம்
சுவரெங்கும்
கையை எடுத்துவிட்டு
வழக்கம்போல் சொல்லிக் கொண்டேன்
பார்வைக்கு வெளியேயும்
காட்சிகள் உண்டு

(கவிதா சரண் ஜூன் 1992ல் வெளியானது)

சில பதிவுகள் சில விமர்சனங்கள்

தமிழ் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் புனைவு / பத்தி எழுத்துகளில் என்னைக் கவர்ந்த சிலரது எழுத்துகளைப் பற்றிய விமர்சனம் இது :

பரிசல்காரன் (http://www.parisalkaaran.com/)

எல்லாவற்றையும் சுவாரசிய எழுத்தாக்கும் திறமை இவருக்கிருக்கிறது. அது சினிமா பற்றியதானாலும் சரி, சிகரெட் பற்றியானாலும் சரி. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலே ஒருமாதிரி சுவாரசிய நடை வந்துவிடும் என்பது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. பலருக்கு அதுவும் வாய்க்கவில்லை எனும்போது இதன் முக்கியத்துவம் புரியும்.

தொடர்ந்த பத்தி எழுத்துகளால் புனைவு எழுத்து பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது. இதைச் சிலர் மறுத்தாலும் என்னால் பல உதாரணங்களைத் தரமுடியும். இன்னொன்று, பத்தி எழுத்துகள் எவ்வளவுதான் சுவாரசியமாக இருந்தாலும், நினைவில் நிற்பதில்லை. முதல்படியாக, பத்தி எழுத்துகளைக் கட்டுரைகளாக உயர்த்தமுடியுமா எனப் பார்க்கலாம். இதைப் பரிசலும் யோசித்துப் பார்க்கலாம்.

ஸ்ரீதர் நாராயணன் (http://www.sridharblogs.com/)

இவர் சமீபமாக எழுதத் துவங்கியிருக்கிறார். அறிவியல்-புனைகதைகளை விறுவிறுபாக எழுதுகிறார். புனைவெழுத்தில் உத்திகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அதை அனாயசமாக கையாள்கிறார். இவரது பின்னூட்டங்களில் / பத்திகளில் வெளிப்படும் pro capitalism leanings எனக்கு உவப்பில்லாதது :(

நல்ல கதைமொழி இவருக்கிருக்கிறது. இன்னும் ஆழமான விஷயங்களை எழுதினால் மகிழ்வேன். இவர் நிறைய நல்ல சினிமா பார்ப்பவர்; திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை எழுதினால் எப்படியிருக்கும் என யோசித்துப் பார்ப்பது interesting!

நர்சிம் (http://www.narsim.in/)

வெகுஜன நடையில் பழந்தமிழ்க் கவிதைகளை இவர் கொடுக்கும் விதம் அழகு. அதற்குநான் தொடர் வாசகன். எப்படியாவது அவற்றைத் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.

சரளமான நடையில் வெகுஜனக் கதைகள் எழுதுகிறார். ஆனால் முடிவுகளில் முத்தாய்ப்பு வைப்பது போல் எழுதுவது கொஞ்சம் அபசுவரமாக இருக்கிறது. கதை வடிவத்தில் இவர் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல வெகுஜனக் கதைகளை இவரால் தரஇயலும்!

அனுஜன்யா (http://www.anujanya.blogspot.com/)

சமீபத்திய வலைப்பதிவு கவிதைகளில் இவருடையது எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. விருட்சம், கீற்று, உயிரோசை என கலந்துகட்டி இவரது கவிதைகள் வருகின்றன. தர்க்க-ரீதியான சிந்தனைகள் தேவைதான்; ஆனால் அவற்றைக் கவிதை ஆக்கத்தின்போது தவிர்த்துவிடுவது நலம்.

போலவே இவர் கவிதைகளுக்குப் பின்னூட்டங்களில் விளக்கம் தருவதையும் தவிர்க்கலாம். அவை அக்கவிதைகளுக்கு ஒற்றைப் பரிமாணத்தன்மையைத் தந்துவிடுகின்றன. கோடிட்டுக் காட்டலாம், ஆனால் நோட்ஸ் வேண்டாமே... இவர் நிறைய வாசிக்கவும் செய்கிறார் எனப் புரிகிறது. மகிழ்ச்சி.

யாரையும் அளவுக்கதிமாகப் பாராட்ட வேண்டுமென்பது என் நோக்கமல்ல. என்னளவில் நம்பிக்கையளிக்கும் வலைப்பதிவு எழுத்துகளை அறிமுகம் செய்வதும், அவர்களை இன்னமும் தீவிரமாக எழுதத் தூண்டுவதுமே என் விருப்பம்.

தனிப்பட்ட அளவில், பரிசல், நர்சிம் போன்றவர்களின் எழுத்து முறைமையை நான் நிராகரிப்பவனே. ஆனால், அவர்களிடம் தென்படும் தெறிப்பும் உழைப்பும் என்னை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. அதுவே பெரிய விஷயம்தானே!

லஞ்ச் எடுத்துவரவில்லை, மதியம் உணவிற்கு பிரியாணி சாப்பிடலாமா, சாயங்காலம் டீ குடிக்கலாமா என மூன்று பதிவுகளாகப் போட்டு துன்புறுத்துகிறார்கள் சிலர். டிஜிட்டல் டைரியாம்! கட்டற்ற சுதந்திரத்தில் ஒன்றும் செய்ய இயலாது!

கென் (http://www.thiruvilaiyattam.com/)

இதில் பெருந்தலைகளைப் பற்றி எழுதவேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனாலும் கென்னைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவரைச் சாரு நிவேதிதாவின் மூன்றாவது வாரிசாக வலையுலகம் அறியும்! மிகச் சிறு வயதில் (28 வயசுதானாம்) எப்படி இவ்வளவு அற்புதமாக எழுதுகிறார் என என்னை மலைக்கச் செய்யும் எழுத்து இவருடையது. இவரைப் புனைவிலக்கியத்திற்கு இழுத்துவந்த தல பாலபாரதிக்கு நன்றி.

இவரது ராபித்தும் பள்ளிவாசல் பாங்குச் சத்தமும் மற்றும் பல புனைவுகள் என்னை மிகவும் கவர்ந்தன. தொடர்ந்து கவனித்து வாசிக்கப்பட வேண்டியவர் கென்.

காமக் கதைகள் 45 (24)

வெற்றிக்குப் பார்த்திருந்த பெண்ணுடன் அதீதனுக்கு தொடர்பிருந்தது, அந்தப் பெண் பெயர் முக்கியமில்லை, அவள் வேறொருவனைக் காதலிப்பது தெரிந்தும் வெற்றி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான், அதில் அவளுக்கு வெற்றிமேல் தீராத கோபம், அதீதன் தான் அந்தக் காதலன் என்பது வெற்றிக்குத் தெரியாது,

அலுவலகத்தில் உடன்வேலை செய்தவனுக்கு பயிற்சிக்கென மலேஷியா செல்ல வேண்டியிருந்தது. அதீதனும் ஒட்டிக் கொண்டான். அங்கு சீன மற்றும் தாய்லாந்து அழகிகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான். ஹோட்டல் 27வது மாடி நீச்சல் குளத்தைச் சுற்றி பொன்நிற மங்கைகள் தொடை தெரியும் மிடியுடன் அசைந்தசைந்து நடந்து கொண்டிருந்தனர். அதீதனுக்கு மேலே விழுந்து புரள வேண்டும் போலிருந்தது.

திருமணமானபின்னும் அதீதனால் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவருவதை நிறுத்தவில்லை, மனதும் உறுத்திக் கொண்டேயிருந்தது, வெற்றி ஊரிலில்லாத போதெல்லாம் தகவல் அனுப்புவாள், வீட்டிற்குச் சென்றதும் அவள் முத்தமிடும்போது அவனுக்கு வெற்றியின் முகம் நினைவில் ஆடியது,

மலேஷிய ஹோட்டல் ஸ்பெஷல் மசாஜில் இரண்டு வகையுண்டு:

(1) நீங்கள் குப்புற இரண்டு கால்களையும் இணைத்தபடி படுத்திருக்க மசாஜ் செய்யும் பெண் உங்கள் கழுத்திலிருந்து கால்கள் வரை பிடித்துவிடுவது. இதில் முக்கியமானது அந்தப் பெண் நிர்வாணமாயிருப்பாள் என்பதும் தன்னுடைய பின்புறத்தால் மசாஜைச் செய்வாள் என்பதும். உங்கள் பிருஷ்ட பாகத்தில் அவளுடைய பிருஷ்ட பாகம் தொட்டு, பிறகு பிரிவது தனிசுகம்! பூப்பந்து கொண்டு அழுத்தித் தடவுவது போல இருக்கும் என்பது அதீதனின் வார்த்தைகள்.

(2) உங்கள் முதுகில் தலையணையை வைத்து அதன்மேல் அவள் சாய்ந்து உங்களை இறுக்கி அணைத்து மசாஜ் செய்வது. நெட்டி முறியும் சத்தங்கள் கேட்கவே போதையாயிருக்கும். தலையணை இல்லாமல் செய்யக்கூடாதா என ஏங்கவைக்குமிது.

நண்பனை நச்சரிக்கத் துவங்கினான் ஸ்பெஷல் மசாஜிற்கு.

வெற்றியைப் பழிவாங்கவே அதீதனுடன் அவள் உறவுவைத்திருப்பதாய்ச் சமாதானம் செய்வாள், உனக்கு அதில் உடன்பாடில்லை என்றால் வேண்டாம், நான் வேணுமா வேணாமா, கையில்லா நைட்டியைப் பார்த்தபடி மென்று முழுங்குவான்,

இரண்டு மசாஜையும் செய்துகொள்ளும்போது அவனது மனம் அவளுடனான சம்போகத்திலேயே கழிந்தது. சின்னச் சின்ன அங்கங்களுடன் தாய்லாந்துக்காரி பொம்மை போல் இருந்தாள். அவளிடம் எப்படியாவது கேட்டுவிடவேண்டுமென நினைத்துக் கொண்டேயிருந்தான்.

இலவச சுகத்தை விடவும் முடியவில்லை, நண்பனுக்குத் துரோகம் செய்வதாய்த் திட்டும் மனதையும் ஒன்றும் செய்யமுடியவில்லை,

மசாஜ் முடித்துவிட்டு தயங்கியபடி தாய்லாந்துக்காரி போய்விட்டாள்.

தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்களது உறவு,

புகைத்தடைச் சட்டம் பற்றி இன்னும் சில விஷயங்கள்

போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்

மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்களைச் சிலர் எப்படியெல்லாம் அணுகுகிறார்கள் என்பது போன பதிவை எழுதியதும்தான் தெரிந்தது. உண்மையில், போலீஸ் / அரசுகளைவிட சில சக பதிவாளர்கள் வன்முறையாளர்கள் என்பது புரிகிறது - இப்படி எழுதுவதற்காகவும் கொதித்தெழுவார்கள் என்பதும்..

ஒருவர் (இவர் வக்கீல் என நம்புகிறேன்), போலிஸுக்குப் பயந்தால் வீட்டில் (அதுவும் கதவைச் சாத்திக் கொண்டு!) சிகரெட் பிடியுங்கள் என்கிறார். (பேருந்துகளில் ஏன் இடிக்கறீங்க என்றால், இடிக்கக்கூடாதுன்னா ஆட்டோல போகவேண்டியதுதானே எனச் சில இடிமன்னன்கள் சொல்வது ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது!). இன்னொருவர், உன் மகன் முகத்தில் நான் புகையை ஊதட்டுமா எனப் பின்னூட்டுகிறார். இன்னொருவர், வேண்டுமானால் உங்கள் மகன் முகத்தில் புகையை ஊதுங்கள் (என் மகன் முகத்தில் புகையை ஊதுவது என் சுதந்திரமாம்!), அவன் கஷ்டப்படட்டும்; பள்ளிகளருகில் புகைபிடித்தால் என் மகனுக்குத் தீங்கு நேரும்; அதனால் வேண்டாம் என்கிறார். வேறொருவர் அமெரிக்காவில் சுற்றுச் சூழலை மக்கள் மாசுபடுத்துவதில்லை என்கிறார். இன்னுமொருவர், தற்கொலை, கொலை, விஷம், தூக்கு என உதாரணங்கள் தருகிறார். இன்னும் சிலர் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமென்கிறார்கள்!!

கொஞ்சம் விட்டால், என்னைக் கழுவிலேற்றிவிடுவார்கள் போல!

மக்களே, நான் சொல்வதெல்லாம் இதுதான் :

புகையிலைக்கு முற்றாகத் தடையென்றால், முடிந்தால், நடத்திக் கொள்ளுங்கள். அது இந்தியா என்றில்லை, உலகில் எங்குமே நடக்க முடியதாது. ஆனால் இப்படி மதுக்கூடங்களில், பேருந்து நிலையங்களில் தடை, விமான நிலையங்களில், நட்சத்திர விடுதிகளில் அனுமதி எனக் காமெடி செய்யாதீர்கள்.

சிலர் லாஜிக்கலாக மடக்குகிறார்கள். எலிவேட்டர்கள் பேருந்து நிலையங்களில் இருக்கிறதா என்று. ஐயா, பேருந்து நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் முதலில் புகைக்க அனுமதியிருந்தது, இப்போது விமான நிலையங்களில் மட்டும் இருக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி.

யோசித்துப் பார்த்தால், எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒருவித போதை தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிலருக்குக் குடி, சிலருக்கு சிகரெட், சிலருக்குக் குடும்பம், சிலருக்குப் படிப்பு, சிலருக்கு வேலை.

புகைக்காதவர்கள், குடிக்காதவர்கள் ஏதோ ஒரு மனஇயல்பில் தங்களை மேல்ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு அறிவுரை வழங்குகிறார்கள் :( இன்னும் சிலர் அரிய கண்டுபிடுப்புகளைச் சொல்கிறார்கள் : புகைப் பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானதாம்!!

புகைபிடிப்பவர்கள் எல்லாரும் ஏதோ அடுத்தவர்கள் முகத்தில் புகையை ஊதுவதற்காகவே காத்துக் கொண்டிருப்பவர்கள் போன்ற தோற்றம் வருகிறது பின்னூட்டங்களைப் பார்த்தால். நிஜத்தில் அப்படியில்லை.. புகைப்பிடிப்பவர்கள் கொலைகாரர்கள் அல்ல.

அடிப்படையில், நாம்செய்யும் பலசெயல்கள் அடுத்தவர்களைப் பாதிப்பவையே. குறைந்தபட்ச நேர்மை / அறம் என்ற அளவிலேயே இந்தப் பிரச்சனையை அணுக முடியும் என நினைக்கிறேன்.

இன்னும் சிலர் நிஜமாகவே இச்சட்டம் புகைப்பழக்கத்தைக் குறைக்கும் என நம்புகிறார்கள். நல்லது. ஆனால் பாருங்கள், நிதர்சனம் வேறுமாதிரியாக இருக்கிறது. பான்பராக் தடைச்சட்டத்தினால் அதன் உபயோகம் குறையவில்லை. காவல்துறை ஊழியர்களிடம், கடைக்காரர்கள், அவர்களிடம் வாங்கிய பொருளுக்குக் காசுகேட்டால் மிரட்டப் படுகிறார்கள் வழக்கு வருமென்று. உடனே அவன் ஏன் தடைசெய்யப்பட்ட பொருளை விற்கிறான், அதனால்தான் இலவசமாகத் தரவேண்டி இருக்கிறது எனச் சொல்லாதீர்கள். சட்டங்களை மதித்து பேணி ஒழுகுவதையே ஆயுட்கால லட்சியமாக வைத்திருப்பதாக நம்பும் சிலர் அப்படியும் சொல்லலாம்.

எனக்கு நிச்சயமாகத் தெரியும் இச்சட்டத்தை அமுல்படுத்த முடியாதென்று. they want to leave a legacy. அவ்வளவே.. ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் மற்றும் வரப்போகும் அபாயகரமான விஷயங்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன.

சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குள்ளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.

புகைப்பிடிப்பது பற்றிய சட்டமும் எதேச்சதிகாரமும்

காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்
- தேவதச்சன்

ஆனால் இதற்கு நேர்மாறாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன இங்கு. சட்டங்களின் வாயிலாக பூதங்கள் ஏவப்படுகின்றன. பிரச்சனைகள் மறக்கடிக்கப்படுகின்றன.

முதலில், கேட்கப்படவேண்டிய கேள்வி, இப்போது இச்சட்டத்திற்குத் தேவையென்ன? ரயில்களில் & ரயில்நிலையங்களில், பேருந்துகளில், விமானங்களில் புகைபிடிக்க முதலிலிருந்தே தடை இருக்கின்றது (ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பலவிஷயங்கள் பரவலாக நடந்து கொண்டிருப்பது நாமறிந்ததே). இப்போது புதிதாக தனியார் அலுவலகங்களையும் வேறுசில இடங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் பிரதானமாக இரண்டைச் சொல்கிறார்கள் :

(1) சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது
(2) புகைபிடிப்பவர்களின் அருகிலிருப்பவர்களுக்கும் அது தீங்கிழைக்கும்

என் உடல்நலத்தைப் பற்றி என்னைவிட அரசு அதிகக் கவலைப்படவேண்டாம். நன்றாக இருப்பதோ அல்லது நாசமாகப் போவதோ நானே பார்த்துக் கொள்கிறேன். முடிந்தால் இதைவிட அதிகத் தீமையான பலவிஷயங்களை முதலில் சரிசெய்யட்டும்.

இந்த passive smoking பற்றியே எல்லாரும் பேசுகிறார்கள். என்னவோ புகைப்பிடிப்பவர்கள் எல்லாம் கொலைகாரர்களைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முனைகிறார்கள். இங்கு இதுவரை எத்தனை பேர் பேஸிவ் ஸ்மோகிங்கால் கேன்சர் வந்திருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா.? கெடுதல் இல்லாமலிருக்காது, ஆனால் அது மிகக்குறைவான விகிதமே. அதைப்போய் ஏன் ஊதிப் பெரிதாக்கவேண்டும்?

விமான நிலையங்களில் புகைபிடிக்கவென தனியறை இருக்கிறது. ஆனால் பேருந்து நிலையங்களில் இல்லை. ஐயா, வண்டிகள் எல்லாம் தாழ்தள சொகுசுப் பேருந்துகளாக வந்துகொண்டிருக்கின்றன. மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழலில், ஒருவன் பீடிகூடப் பிடிக்கக்கூடாதா?

அமெரிக்கா வாழ் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், அங்கு பேருந்து நிலையங்களில் புகைக்க அனுமதியுண்டாம். பலநாடுகளிலும் இல்லாத ஒன்றை இங்கு திணிக்க முயல்கிறார்கள்.

சரி, அப்படியே பிடித்துத்தான் ஆகக்கூடாதெனில், விமான நிலையங்கள் போல பேருந்து நிலையங்களிலும் தனிஅறை புகைக்கவெனக் கொடுத்துவிட்டு இச்சட்டதை அமுல்படுத்தலாம்.

இந்தியா ஒரு எதேச்சதிகார நாடாக மாறிக்கொண்டிருக்கிறதோ! அவர்கள் சிகரெட் பிடி என்றால் பிடிக்கவேண்டும், அபராதம் கட்டு என்றால் கட்டவேண்டும்.

ஒரு நண்பர் பேசும்போது சொன்னது : சிகரெட் / பீடி என்பது முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும். பெட்ரோல் டீசல் போன்றவற்றோடு ஒப்பிட்டால் இதில் தீமைக்குறைவாக இருக்கவே (ஒப்பீட்டளவில்) வாய்ப்புண்டு என்றார்.

இன்னொன்று, இதை வெறும் உடல்நலம் சம்பந்தப்பட்டதாக மட்டும் குறுக்கிவிடமுடியாதென்று தோன்றுகிறது.

இச்சட்டத்தின் இணை-நிகழ்வான போலீஸ் / போலீஸாக மாற விரும்புபவர்களின் அதிகாரம் / அது பிரயோகிக்கப்படப்போகும் விதம்... இவற்றை விலக்கிவிட்டு தனியாக இப்பரச்சனையைப் பற்றிப் பேசமுடியாதென்பது என் எண்ணம்.

WHO போன்ற அமைப்புகளின்மூலம் கேன்சர் பூச்சாண்டியைக் காட்டி, எய்ட்ஸ் பேயைக் காட்டி, மரண பயத்துடனேயே வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம். மரண பயத்திலிருப்பவனுக்கு அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் உணரமுடியாது. அதுவே அவர்களின் அரசியலோ?

என் பார்வையில் இது பெரும்திரளான மக்கள் கூட்டத்தைக் குற்றவாளிகள் ஆக்கும் சட்டம். குற்றம் செய்கிறோம் என்ற guilt senseலேயே அவர்களை வைத்திருக்க உதவுவது.

இம்மாதிரியான சட்டங்களின் பின்னிருக்கும் அபாயம் இதுதான். இதைப் பலர் உணர்ந்து கொள்ளாதது வருந்தத் தக்கதே.

பரவலாக அறியப்படாத சிறுபத்திரிகைகள்

வாசகர்களிடம் பரவலாகப் போய்ச்சேராத சிறுபத்திரிகைகளைப் பற்றி எழுதலாம் என்ற ஒரு எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவருகிறது.

1990லிருந்து சிறுபத்திரிகைகளை வாசித்து, சேமித்து வருகிறேன். அவற்றிலிருந்து சில சுவாரசியாமன இதழ்களைப் பற்றிய சிறு குறிப்புகள், அதில் வெளியான கவிதைகள் அல்லது சுருக்கப்பட்ட கட்டுரைக் குறிப்புகள் மாதிரியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாலாமென நினைக்கிறேன். இதற்காக மீண்டுமொருமுறை பழைய பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பும் அதுகுறித்த சிறுஅசைபோடல்களும் கூடுதலாகக் கிடைக்கிறது.

கவிதை அழகியலுக்கான சிற்றிதழ் என்ற அறிவிப்போடு ‘பிரதி' என்ற சிறுபத்திரிகை வந்துகொண்டிருந்தது. ஆசிரியர் ஆலன் திலக். தனி இதழ் விலை ரூ 3. அட்டைகள் இல்லாத 'ழ' மாதிரியான மிகச் சிறிய இதழ்!

'பிரதி' ஜனவரி 1993ல் வெளிவந்த இதழில், எஸ் சண்முகத்தின் இரண்டு கவிதைத் தொகுதிகளைப்பற்றிய நாகார்ஜூனனின் கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இந்த இதழில் வந்த தமிழவனின் கவிதையொன்றைத் தருகிறேன் :

ரொம்பப் புரிகிற ஒரு கவிதை

அவனுக்குப் பாதையில் போகவேண்டும்
இதன்பின்பு கொஞ்சம் யோசிக்கவேண்டும்
அதன்பின்பு உணவு அருந்தவேண்டும்
அவனுக்குப் பூக்களை தரிசிக்கவேண்டும்
அவனுக்குத் திரும்பி வரவேண்டும்
அதன்பின்பு குளித்து பூஜை செய்யவேண்டும்
ஒளிக்கற்றைகளை விரலில் பிடித்து விளையாடவேண்டும்
கண்ணாடியில் படிந்த தூசை போக்கவேண்டும்
பாதையில் புகைநடுவே மூக்கடைத்து நடக்கவேண்டும்
அங்கு போகிறவனை ஓரக்கண்ணால் பார்க்கவேண்டும்
தினமும் பேப்பர் படித்துவிட வேண்டும்
ஓரத்தில் ஒருநூலில் குறிப்பெடுக்க வேண்டும்
ஒருஎலி செத்துக்கிடப்பதை புகைப்படம் எடுக்கவேண்டும்
நூலகத்தில் மூலையில் தனியாய் ஒருபெண் செத்துக்கிடப்பதையும்
எதையோ நினைத்தபடி இருப்பதைப்பற்றி அவனும்
ஒருநாள் நினைக்க வேண்டும்

கவிதையைவிட அதன் தலைப்பு மிகப் பிடித்திருந்தது எனக்கு!

வளர்மதி விலகல்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்
- பிரமிள்

வளர்மதியை நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக வாசித்து வருகிறேன். கவிதாசரணில் அவரை முதலில் படிக்கத் துவங்கியவன், பிறகு பழைய நிறப்பிரிகை இதழ்களிலும் அவருடைய எழுத்துகளைத் தேடிப் படித்தேன்.

அவர் வலைப்பதிவில் எழுதுகிறார் எனத் தெரிந்ததும் மிக மகிழ்ச்சியடைந்தேன். நான் அப்போது வலைப்பதிய ஆரம்பித்திருக்கவில்லை. அறியப்பட்ட அறிவுஜீவிகளுடன் நேர்ப்பழக்கம் வைத்துக் கொள்வதில் எனக்கு மனத்தடை உண்டு. அதையும் மீறி, அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி 2007 நவம்பர் முதல்வாரத்தில் நேரில் சந்தித்தேன். நவம்பர் இறுதியில் நானும் வலைப்பதியத் துவங்கினேன்.

அப்போதிலிருந்து அவர் மீதான மதிப்பு கூடிக் கொண்டிருக்கிறதே தவிர, குறைந்ததில்லை. தமிழில் இருக்கக்கூடிய முக்கிய சிந்தனையாளர்களுள் அவர் ஒருவர் என்பது என்னுடைய திடமான தீர்மானம்!

போன வருட இறுதில் துவங்கிய எங்களுடைய நட்பு இன்னமும் நெருக்கமாகியிருக்கிறது. அவருடன் கழித்த நேரங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. பெரிய சிந்தனைவாதி என்பதான தோற்றம் எதுவும் தராமல் உடனிருப்பவர்களுடன் பழகுவது அவருடைய தனிப்பண்பு. தான் அடையாளம் கண்ட சில இளைஞர்களை அவர் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவ்விளைஞர்கள் இலக்கியம் மட்டுமல்லாது பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள்!!

அடிப்படையில் அவர் மிகவும் ஜாலியானவர். அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அவரது குணத்திற்குத் தீங்கு வருமோ என நினைத்து திரட்டிகளிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

அவரது தீவிர வாசகர்கள் தொடர்ந்து அவரை வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள் - புதிதாக வரும் வாசகர்களுக்கு அவரிருப்பது தெரியாமல் போய்விடக்கூடிய அபாயமிருக்கிறது. ஆனாலும், பலர் இணைப்புச் சுட்டி தந்திருக்கின்றனர். தமிழ்மானம் போன்ற வலைச்சிற்றிதழ்களும் அவருடைய எழுத்துகளைத் தாங்கி வருகின்றன. அதன்மூலம் அவரைப் புதுவாசகர்கள் படிக்கலாம்.

தமிழ்மணப் பொது வாசகர்களுக்கு அவரது விலகல் இழப்பே. இதை, அடிப்படை அறமோ நேர்மையோ அற்று திருடன் போன்ற வசைகளை வீசிச்செல்லும் சில பின்னூட்ட / தனிப்பதிவு கருத்து கந்தசாமிகள் கொண்டாடலாம்! அவர்கள் எங்கு பிரச்சனை என்றாலும் பின்னூட்டியோ அல்லது தனிப்பதிவிட்டோ ஊதிப் பெரிதாக்குபவர்கள் :( இப்போதைக்கு கட்டற்ற இணையப் பொதுவெளியில் ஒன்றும் செய்ய இயலாது :((

இனியாவது அவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் காழ்ப்பு தீர்ந்தால் நல்லது.

நல்லா இருங்க மக்கா!!!

திரட்டிகளில் இல்லாவிட்டாலும் வளர்மதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது என் அவா. அவரும் அப்படியே செய்வார் என்பது என் நம்பிக்கை!