நகுலன் கவிதைகள்

http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html பதிவில் சொல்லியதைப் போல இந்த இடுகையில் சில நகுலன் கவிதைகள் :

எல்லைகள்

அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான். ஒன்றிலும்
நிச்சயமில்லாத மனிதர்கள், அல்குலின்
அசைவுகள், “சுபாவஹத்தியை”
விழையும் மனதின் பரபரப்பைத்
தூண்டிவிடும் ஸ்தாபனங்கள்
சில்லறை சில்லறையாகத் தன்
னை இழப்பதால் வந்து சேரும்
காப்புகள். காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப - சிதிலங்கள், இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் - இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்

அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

அலைகள்

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது


வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி.
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்துவிட்டார்கள். எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.


சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு


சந்தை

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”


வரையறை

தலையும் வாலும்
இல்லாத பிழைப்பு
என்று
சொல்லிச் சிரித்தார்
சச்சிதானந்தம் பிள்ளை
கேட்டு நின்றவனுக்கு
ஒன்றும் புரியவில்லை


இவைகள் (2)

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு


கனல் (2)

ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன் கண்கள்
என்
உன்மத்த வேகம்


வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு


நான் (2)

நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன

இரண்டு மூன்று வரிக் கவிதைகள் :

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?
அதுவும் உன் கைப்பாவை

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் என்ற தலைப்பில் இருக்கும் 10 கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை. இடமின்மை காரணமாக இங்கு பதியவில்லை.

கடைசியாக....

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

பூம் பூம் ஷக்கலக்க பைத்தியக்காரன்

பைத்தியக்காரன் பதிவைப் படித்ததும் சாரு ஒரு ஹிட்லரா என்ற கேள்வியெல்லாம் எனக்கு எழவில்லை. எதற்காக அந்தப் பதிவு என்றுதான் தோன்றியது.

அதற்காகச் சிலர் கேட்டது போல் முதல் பத்தியை நீக்கச் சொல்லப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் மொத்தப் பதிவுமே கிசுகிசுக்களின் அடிப்படையில் எழுதப் பட்டதுதான். யார் அலெக்ஸ், யார் விஷால் என்பதைத் தெரிந்து கொண்டதைத் தவிர அதில் பெரிதாக வேறொன்றுமில்லை.

அந்த முதல் பத்திகூட சிறுபத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுவாக இருந்ததைத்தான் பைத்தியக்காரன் எழுதியிருக்கிறார். சாருவைப் பற்றிய சமீபத்திய வலையுலக (காமரூபக் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது வந்த) கிசுகிசுக்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாரோ தெரியவில்லை.

இதற்கு மாற்றாக நானும் மானாவரியாக கிசுகிசுக்களை அடுக்கிச் செல்லலாம். ஆனால் படிப்பவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்பதோடு நானும் பைத்தியக்காரன் செய்யும் தவறையே செய்தவனாவேன். அதனால், விபரங்களின் அடிப்படையில் மட்டும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாரு படிப்பதேயில்லையாம். எப்படி ஐயா தெரியும் உங்களுக்கு? புதுமைப் பித்தன், நகுலன், ஜி நாகராஜனைக்கூட சாரு படித்தது இல்லையாம். அதற்கான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம். பக்கம் பக்கமாய்க் கிசுகிசுக்களை எழுதித் தள்ளும் உங்கள் விரல்கள் ஏன் அப்படிப்பட்ட ஆதாரங்களை மட்டும் எழுதாமல், எழுத வைத்துவிடாதீர்கள் எனக் கெஞ்ச வைக்கிறது?

அவர் புதுமைப் பித்தனின் பல கதைகளை விரிவாக விமர்சித்து - கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்கு - கட்டுரை எழுதியிருக்கிறார். உடனே இலக்கு கால இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் ஜீரோ டிகிரி இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் என ஆரம்பித்து விடாதீர்கள். இந்தப் பிரஸ்தாபக் கட்டுரை வெளியாது 2002 இறுதியில். போலவே ப சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றி மார்ச் 2003ல் எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய / லத்தீன் அமெரிக்க / அரேபிய எழுத்தாளர்களின் பெயர்களை (மட்டும்) சாரு உதிர்க்கிறாராம். மரியா வர்காஸ் யோசாவின் The Real Life of Alejandro Mayta, எல்ஃபிரெட் ஜெலனிக்கின் பியனோ டீச்சர், சார்லஸ் ப்யுகோவ்ஸ்க்கி, முகமது ஷூக்ரி பற்றியெல்லாம் விரிவாகவே சாரு எழுதியிருக்கிறார். இப்போது நான் கேட்கிறேன் - சாரு தமிழில்கூடப் படித்ததில்லை எனச் சொல்லும் நீங்கள் சாருவையே படித்ததில்லை என்று நான் சொல்ல முடியும்தானே?

அவருடைய வாசிப்பிற்கு அவரது எழுத்துகளே சாட்சி. அதை வைத்து நாம் உரையாடலாம். ஆனால் நீங்கள் அதையும் வேறு யாராவது எழுதிக் கொடுத்தது எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடக் கூடும். அதனாலேயே நான் அவரது ஆரம்ப கால எழுத்துகளை மேற்கோள் காட்டாமல் அவரது பிந்தைய - அதாவது 2002ற்குப் பிறகு எழுதிய விஷயங்களை மேலே எழுதியிருக்கிறேன். இல்லை, இவையும் வேறு யாராவது தவணை முறை நண்பர்கள் எழுதிக் கொடுப்பது என்று சொல்லிவிட்டால், தவணை முறையில் இல்லாமல் மொத்தமாகத் தீர்ந்தது விஷயம்.

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் & ஜீரோ டிகிரி பிரேம் ரமேஷ் எழுதியதாம்! ஆபிதீன், எக்ஸிஸ்டென்ஷியலிசம் நாவலில் ஒரு பத்தி தான் எழுதியதாகச் சொன்னதிலிருந்து, இதுவரை எனக்குத் தெரிந்து அந்த நாவல்களுக்கு ஆறு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது இப்போது வரைக்குமான கணக்குதான். நாளையேகூட இன்னும் சிலர் வந்து அந்நாவல்களை தாம்தான் எழுதினோம் என்று சொல்லக் கூடும். இதெல்லாம் என்னய்யா விவாதமா - இதெற்கெல்லாம் ஒருவனால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

(இடைவெட்டு : மாலதி மைத்ரி ஜீரோ டிகிரியை சாரு எழுதவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால் அந்நாவலை எடிட்டிங் செய்தது ரமேஷ்தான் என்று எழுதியிருக்கிறார். நாவலோ அல்லது கட்டுரையோ எழுதப்பட்டவுடன், அதற்கு எடிட்டிங் அவசியமாகிறது. அந்த எடிட்டிங் பணிக்குச் சிலர் உதவியிருக்கலாம். மேலை நாடுகளில் இது சர்வ சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக அந்தப் புத்தகத்தையே எழுதினது தான்தான் என்று சொன்னால் என்ன செய்ய?)

”ரோலான் பார்த் ரைட்டிங் டிகிரி ஜீரோ என்று எழுதியிருக்கிறார். அதனால் ஜீரோ டிகிரி என்று தலைப்பு வைத்தது சாருவாய் இருக்க முடியாது!” ஜீரோ டிகிரி எப்போது வந்தது? ரோலான் பார்த்தின் அந்தப் புத்தகம் வெளியானது 1953ல். தமிழிலேயே ஜீரோ டிகிரி வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பார்த், தெரிதா, ஃபூக்கோ எல்லாம் அறிமுகமாகிவிட்டார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை பைத்தியக்காரன்.

சாருவுக்கும் பின் நவீனத்திற்குமான தொடர்ப்பு எத்தகையது என்பதை பிரேம் ரமேஷை விடுங்கள், நீங்கள் எழுதுங்கள். நான் எதிர்வினையாற்றுகிறேன். சும்மா சாருவுக்கு பின் நவீனம் தெரியாது, அமைப்பியல் தெரியாது என்பதெல்லாம் ஹம்பக்.

அவருடைய கட்டுரைகளை யார் எழுதிக் கொடுத்தார்கள், யார் பிழை திருத்தினார்கள் (எழுதறவனே பிழையையும் கொஞ்சம் திருத்திக் கொடுத்துடக் கூடாதா!) என அதே கிசுகிசு பாணியில் சொல்லிச் செல்கிறீர்கள். நீங்கள் பெயர் சொல்லாமல் சொல்லும் அவர்களே இதை ஒத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

நீங்கள் பிரமிளுக்குச் சாரு எழுதிய குசு கடிதத்தையோ விமர்சன ஊழல்களில் பிரமிள் எழுதியதையோ சொல்வீர்களேயானால், பிரமிளைப் பற்றி சுந்தர ராமசாமி தொடங்கி அழகிய சிங்கர் வரை எழுதியிருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதும் யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய், எது புனைவு என்று ஒரு மயக்கம் ஏற்படலாம்! மட்டுமில்லாமல், எது உண்மை, எது பொய் என தீர்மானிக்க நாம் யார்?

சரி, சாருதான் இறந்த பிறகு பிரமிளையும் சுஜாதாவையும் பாராட்டுகிறார். ஜெயமோகன் என்ன செய்கிறார்? கமலாதாஸ் இறந்தவுடன் அவர் குரூபி, தன்னுடைய நிறைவேறாத காமத்தினால்தான் (பச்சையாகச் சொன்னால் படுக்க அலைந்தார் என எழுதியிருந்தார்!) எழுதினார் எனச் சொன்ன போது எங்கே போயிருந்தீர்கள். அப்போது உங்கள் அறச் சீற்றத்தை இப்படித்தான் காட்டினீர்களா?

விஷ்ணுபுரம்தான் முதலில் ஃபிரெஞ்சிற்குப் போக வேண்டுமாம்! உங்கள் மனச் சாய்வு தெளிவாகவே தெரிகிறது பைத்தியக்காரன். இப்போது சொல்கிறேன், பின் தொடரும் நிழலின் குரலைக்கூட ஒரு முறை கஷ்டப்பட்டு படித்து விட்டேன், ஆனால் விஷ்ணுபுரத்தை இவ்வளவு வருடங்களில் என்னால் 5 பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை! அவரது தலையணை புத்தகங்களின்மேல் ஒரு ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது.

அடுத்த கண்டுபிடிப்பு : ஜீரோ டிகிரி ஐரோப்பிய வடிவ பாணி நாவலாம், அதனால் ஃபிரென்சில் மொழிபெயர்த்தால் செல்லுபடியாகாதாம்! நாளையே நாவல் என்கிற வடிவமே மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதானே, அதனால் ஆங்கிலம், ஃபிரெஞ்சில் மொழிபெயர்க்கவே வேண்டாம் என்றுகூட நீங்கள் சொல்லக் கூடும் - அதற்குள் உங்கள் விருப்பப்படி விஷ்ணுபுரம் நாவலை ஃபிரெஞ்சில் மொழிபெயர்த்து விடட்டும்.

உங்களுக்கு ராசலீலாவில், ஜீரோ டிகிரியைப் போன்ற அடர்த்தியோ கட்டுடைப்போ தெரியவில்லை. அது உங்கள் அபிப்ராயம். ஆனால் எனக்கு ராசலீலா அவரது முந்தைய ஆக்கங்களை விட அதிகமாகப் பிடித்திருக்கிறது. இதெல்லாம் தனிப்பட்ட நபர்களின் கருத்து என்பதற்குமேல் ஒன்றுமில்லை. உடனேயே ஜீரோ டிகிரிவரை மற்றவர்கள் எழுதிக் கொடுத்தார்கள், பிறகு இந்த நிலைமை என்று சொன்னால் எப்படி?

சாரு எவ்வளவு மோசமானவர் என்பதைக் காட்ட நீங்கள் ஜீரோ டிகிரிக்குப் பிரச்சனை வந்தபோது ஜெமோதான் ஆதரித்தார் என்கிறீர்கள். இது என்னய்யா புதுக்கதை என்றால் ஜீரோ டிகிரி நாவலின் ஒரு பதிப்பில் வெளியான ஜெமோவின் 5 வரிக் கடிதமாம்! அந்தப் பதிப்பில் அவரது கடிதம் மட்டுமா வந்தது? பலர் அந்நாவலைப் பாராட்ட ஜெமோ செய்திருந்தது கோஷ்டி கானமாகத்தான் தெரிகிறது எனக்கு.

எழுத்தாளன் என்பவன் தன் புத்தகங்களை வெளியிட பல பதிப்பகங்களை அணுகுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் தன்னுடைய புத்தகங்களை வெளியிடாததால், தமிழினி வசந்தகுமாரை எங்கே குறிவைத்துத் தாக்கினார் சாரு? தமிழினியில் புத்தகங்கள் எழுதுவதால் ஜெமோ உயிர்மையை எதிர்க்கிறார் என்று எழுதினால் அது தமிழினியைத் தாக்குவதா? பண்பாட்டைப் பேசுதல் என்ற கட்டுரையில் மற்ற எல்லாப் பத்திரிகைகளையும் மட்டம் தட்டி தமிழினி, வார்த்தை போன்றவற்றை ஜெமோ தூக்கிப் பிடித்ததற்கான எதிர்வினை அது. மனதாரச் சொல்லுங்கள், உங்களுக்கு அந்தக் கட்டுரை ஏற்புடையதுதானா?

இரண்டாம் வகுப்பு டீச்சராக மாறி யாமம் வாசித்திருக்கிறீர்களா, அழகிய பெரியவன் வாசித்திருக்கிறீர்களா, அதிலிருந்து நான்கு வரிகளை மனப்பாடமாக ஒப்பியுங்கள் என்று கையில் பிரம்பெடுக்காதீர்கள். அசிங்கமாயிருக்கிறது.

மற்றபடி ஒரு புத்தகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் பெரிய தவறே இல்லை - இப்படி எவ்வளவு புத்தகங்களைப் பற்றி, எவ்வளவு சினிமாக்களைப் பற்றி வந்திருக்கிறது. என்னவோ தமிழ்கூறும் நல்லுலகமே சாரு சொல்லிவிட்டால் படிக்காமல் விட்டுவிடப் போகிறதா என்ன? அதற்கான எதிர்வினையையும் நாகார்ஜூனன் செய்துவிட்டார். எனக்கென்னவோ நீங்கள் அதற்காக உங்கள் பதிவை எழுதியது போல் தெரியவில்லை.

அமர்நாத்திற்கான பதிலில் பின் குறிப்பாக சாரு எழுதியது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் அவராவது பதில் சொல்ல வாய்ப்பிருக்கும் மனிதரைப் பற்றி எழுதுகிறார். ஆனால் ஜெமோ அந்த வாய்ப்பில்லாத இறந்து போனவர்களைப் பற்றி அவதூறு செய்கிறார். நீங்கள் ஜெமோவை விட்டுவிட்டு சாருவிற்கு மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினை செய்கிறீர்கள். உங்களின் இந்தத் தேர்வுதான் என்னை உறுத்துகிறது. இன்னொன்று, சிறுபத்திரிகைக்காரர்கள் என்றாலே சண்டை (மட்டுமே) போடுபவர்கள் என்பதாகச் சிலர் கட்டமைக்க முயல்கிறார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், எழுத்து காலம் முதற்கொண்டு, படிகள், பரிமாணம், கசடதபற, பிரக்ஞை, மீட்சி, கல்குதிரை, நிறப்பிரிகை ஈறாக தமிழில் பல விஷயங்கள் சாத்தியமானது சிறுபத்திரிகைகளால்தான் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதற்கு உங்களின் இந்தப் பதிவும் துணை போவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

நகுலன்

எவ்வளவு முறை வாசித்தாலும் இன்னும் இன்னும் என வாசிக்கத் தூண்டும் ஒரு கவிஞர் நகுலன் (மற்றும் பிரமிள் & விக்ரமாதித்யன்). இன்னும் யோசித்துப் பார்த்தால், கொஞ்சம் தடாலடிக்காகவே பிரமிளைப் பிடித்திருக்கிறது. எழுத்து / கவிதை சார்ந்து மட்டுமே எனக்குப் பிடித்தவர்களாக நகுலனையும் விக்ரமாதித்யனையுமே சொல்ல முடியுமென்று தோன்றுகிறது.

கவிதை பற்றிப் பேச்சு வந்தால் நகுலன் வராமல் இருக்க மாட்டார். அரட்டைப் பெட்டியிலோ மின்னஞ்சலிலோ நகுலனை நான் பரிந்துரைக்காத நண்பர்கள் மிகக் குறைவு!

என்னுடைய மனம் மொழியாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காட்சியைப் பார்த்தாலும் அதுவும் எனக்கு வார்த்தைகளாகவே நினைவில் படிந்திருக்கும். பல கவிஞர்களின் எண்ணற்ற கவிதைகளைப் படித்திருந்தாலும், நகுலன் நினைவிலிருப்பதுபோல் மற்ற கவிதைகள் இல்லை. நகுலனும் என்னுள்ளே வார்த்தைகளாகவே இருக்கிறார்.

வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
நாலாபுறமும் வார்த்தைகள்
சொல்லில் சிக்காது
சொல்லாமல் தீராது

என்ற வரிகளை எழுதியது நிச்சயமாக நகுலனாகவோ அல்லது விக்ரமாதித்யனாகவோதான் இருக்க வேண்டுமல்லவா. வார்த்தைகள் எனும் அடர்ந்த காட்டில் திக்குத் தெரியாமல் சிக்கித் தவிக்கும் பாலகன் நான்.

பல விஷயங்களை நகுலனுடன் சேர்த்தே என் மனம் நினைவில் வைத்திருக்கிறது. கல்குதிரை - நகுலன் சிறப்பிதழ், விருட்சம் - திருக்குறளை அடியொற்றிய நகுலன் கவிதைகள், கணையாழி - நகுலனின் சாயைகள் மற்றும் இன்னொரு கதை (சிமி, குமி, உமிக்கரி / நஞ்சு, குஞ்சு, மத்தங்காய் / மணிக்குட்டன், குணிக்குட்டன், கொழுவாளை என்ற அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட {ஆத்மாநாம்} கவிதை கொண்ட கதை), திருவனந்தபுரம் - நகுலனின் பாழடைந்த வீடு, என் வீட்டு பூனைக்குட்டி - நகுலனின் மஞ்சள் நிறப் பூனை, என்னுடைய சில கதைகள் - இப்படியாக, இப்படியாக... இந்த வலைப்பக்கத்தில் இடப்பக்கம் இருக்கும் 'வந்த வழி சென்ற காக்ஷி' கூட நகுலனின் பாதிப்பினால் எழுதப்பட்டதுதான்.

கடந்த 20 வருடங்களாக நகுலனை வாசித்து வருகிறேன். ஆனால் சட்டென்று நகுலன் என்றவுடன் நினைவிற்கு வருவது மிஸ்டிக்தன்மை மற்றும் சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல் (இந்தச் சொற்களை மந்திரம் போல் எவ்வளவு முறை சொல்லியிருப்பேன்!).

யார் தலையையோ சீவுவது போல பென்சிலைச் சீவிக்கொண்டிருந்தான் என ஒரு வரியில் வரும். மூச்சு நின்றால் பேச்சும் அடங்கும் என்று சொல்லும் இன்னொரு வரி. தாடி ஏன் வளர்க்கிறார் என ஒருவர் விளக்கும்போது தாடி ஏன் வளர்கிறது என்பதுதான் சுவையானது எனச் சொல்லிச் செல்லும் வேறொரு வரி. கடல் இருக்கும் வரை அலைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன் எனக் கேட்கும் பிறிதொரு கவிதை. எல்லாம் நடந்து கொண்டிருக்கும் யாருமில்லா பிரதேசத்தில் நகுலன் என்ன செய்து கொண்டிருப்பார்...?

நான் நகுலனின் ஆராதகன். அதற்காக, அவர் எழுதிய மூன்று, ஐந்தென்ற பழந்தமிழ் இலக்கியத்தைச் சார்ந்த கவிதைகளெல்லாம் எனக்குப் பிடிக்குமென்று நினைத்துவிடாதீர்கள். சாதாரணமாக எனக்கு மரபுக் கவிதைகள் என்றாலே அலர்ஜி. அதுவும் நகுலன் மாதிரியானவர்கள் செய்தால் இன்னும் அலர்ஜி. விலங்குச் சங்கிலி எனத் தெரிந்தும், அதை மாட்டிக் கொண்டும் நடக்கத் தெரியும் என்பதில் என்ன மகிழ்ச்சியோ.

சாலையில் ஒரு பார வண்டி நக்ஷத்ர ஒளியில் மெல்லச் செல்லும் என்ற வரிகளைப் படிக்கையில் மனதில் விரியும் ஓவியம்... இப்படிப்பட்ட கவிதைகளுக்காக நகுலன்மேல் காதலில் கசிந்துருகி அவர் படத்திற்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். சில வரிகளைப் படிக்கையில் செல்லமாகத் திட்டியுமிருக்கிறேன்.

அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் என்னை ஈர்க்கின்றன. தட்டச்சுகூட சுகம்தரக்கூடியதுதான் என்பது நகுலனின் வரிகளைத் தட்டச்சும்போதே எனக்குத் தெரிகின்றது.

நான் ஒரு மிகப் பெரிய வாயாடி - அதுவும் நகுலனைப் பற்றிப் பேச ஆரம்பித்தால். நகுலனைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம், அல்லது அவரது சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். நான் இரண்டாவதைத் தேர்வு செய்கிறேன்

மதத்தின் குரலாக இருந்த தமிழ்க் கவிதையை மனதின் குரலாக மாற்ற வேண்டுமென்று விரும்பிய நகுலனின் சில கவிதைகள் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

(நகுலனைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவு : http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_26.html)

கும்மாங் குத்துகள்

நண்பர் ஒருவர் அரட்டைப் பெட்டியில் வந்து உங்களைப் பத்தி கிசுகிசு வந்திருக்கு பார்த்தீங்களா என்றார். முதலில் பெருமையாகவே இருந்தது. அதை அடக்கிக் கொண்டு யார் எழுதியிருக்காங்கன்னு கேட்டேன். செல்வேந்திரன் என அவர் சொன்னதும் கொஞ்சம் பொசுக்கென்று போய்விட்டது. அந்தக் காமெடி பீஸா என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.

ஆனால் கிசுகிசு எழுதுவதற்குக்கூட ஒரு அடிப்படை நேர்மை வேண்டும். அதையெல்லாம் செல்வேந்திரனிடம் எதிர்பார்க்க முடியாது போல.

இதுதான் அவர் எழுதியிருந்தது :

/
நவீன இலக்கிய தாத்தா ஒருநாள் 'ஐம்பது கட்டுரைகளுக்கு மேல படிச்சிட்டேன். ஒண்ணுகூட ரசிக்கலை' எனச் சொல்ல 'ரசிக்கலன்னா ஏனய்யா ஐம்பது கட்டுரைகள். ஒன்றிரண்டோடு நிப்பாட்ட வேண்டியதுதானே என அந்த 'முந்திரிக்கொட்டை பதிவர்' சொல்ல...அதன்பிறகுதான் முத்துக்கள், குத்துக்கள் என கும்மாங்குத்து பதிவுகள் போட ஆரம்பித்தாராம் அந்த 'ஞான-ரிவர்'.

/

அந்தத் தாத்தா வேறு யாருமில்லை நான்தான்.

முதல்முறையாகச் சந்தித்தபோது நேர்ப்பேச்சில் சொன்னது அந்த 50 கட்டுரைகள் விஷயம். அந்த முந்திரிக் கொட்டை பதிவர் இப்போது பதிவில் எழுதியிருப்பது போல் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை - தலையைத் தலைய ஆட்டிக் கொண்டிருந்தார். இங்கு பதிவில் நக்கலடித்ததாய் எழுதியிருக்கிறார். அப்படி அவர் நக்கலே அடிக்காதபோது அதற்காகத் தான் நான் அந்தப் பதிவு எழுதியாதாகச் சொல்வது நேர்மையற்ற செயல்.

நான் சொல்வதில் சிலருக்கு நம்பிக்கையில்லாமலிருக்கலாம். எங்களுடைய அந்த நேர்ப்பேச்சுக்குப் பிறகு (நேர்ப்பேச்சின் போது மற்ற சில நண்பர்களும் இருந்தார்கள் என்றாலும் அவர்களை இதற்குள் இழுக்க எனக்கு விருப்பமில்லை) செல்வேந்திரனே எங்களுடைய அந்தச் சந்திப்பைப் பதிவு செய்திருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அதைப் படித்துப் பார்க்கலாம் :

/
'உங்களோட கட்டுரைகள் சுமார் நாற்பது, ஐம்பது படித்திருப்பேன். அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லை. எனக்குப் பிடிக்கவுமில்லை' என்ற முகத்திலடிக்கிற விமர்சன நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது.

/

http://selventhiran.blogspot.com/2009/04/blog-post_27.html

முதலில் இப்படி விமர்சன நேர்மை பிடித்ததாக எழுத வேண்டியது. பிறகு அவரது கருத்தை மறுத்து எழுதினேன் என்றவுடன் இவ்வாறு உள் நோக்கம் கற்பித்து எழுதுவது....

என்னுடைய அந்தப் பதிவிற்கான காரணங்களை நான் தெளிவாகவே முன்வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒருவர் அதை மறுக்கலாம். ஆனால் அதற்கு இப்படி இல்லாததை எல்லாம் இட்டுக்கட்டி உள்நோக்கம் கற்பித்து கிசுகிசுவாக்கத் தேவையில்லை.

அப்புறம், இந்தக் கும்மாங் குத்து விஷயம். என்னுடைய அந்தப் பதிவு சும்மா லேசான ஒரு தட்டுதான். அதற்கே அலறி அடித்து கிசுகிசு புண்ணாக்கில் போய் ஒளிந்து கொண்டு கம்பு சுழற்ற ஆரம்பித்துவிட்டார். இவரையெல்லாம் போயா கும்மாங் குத்து விடுவேன்! நோஞ்சான்களைப் போய் யாராவது குத்துவார்களா என்ன :)

போட்டிகளும் வேறு விஷயங்களும்

உரையாடல் சிறுகதைப் போட்டி பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். நிறைய கதைகள் வந்திருக்கின்றன. (இதுவரை 111 கதைகள்) . மிச்சமிருக்கும் 7 நாட்களில் மற்ற வலைப்பதிவர்களையும் கதை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு வந்துள்ள எல்லாக் கதைகளையும் இந்த இணைப்பில் படிக்கலாம் :

http://tamil.blogkut.com/contest-uraiyadal.php

செந்தழல் ரவி சிரத்தை எடுத்து எல்லாக் கதைகளையும் வாசித்து தன்னுடைய இம்சை வலைப்பதிவில் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

மின்னல் பக்கம் லாவண்யாவும் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளார். அதன் விவரங்கள் உயிரோடையின் தளத்தில் இருக்கின்றன. ச முத்துவேல் எழுதிய கவிதையொன்றைப் பார்த்து கதை சொல்ல வேண்டும். கதை அளவு ஒரு பக்கத்திலிருந்து மூன்று பக்கங்கள் இருக்கலாம். மேல் விவரங்களுக்கு :

http://uyirodai.blogspot.com/2009/06/blog-post_22.html

இந்தப் போட்டியிலும், அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உயிரோடை சிறுகதைப் போட்டியில் வந்த ஒரே ஒரு கதையைத்தான் படித்திருக்கிறேன் இதுவரை. நானும், ஸ்ரீவித்யாவும், அனுவித்யாவும், வெறும் வித்யாவும்... என்ற தலைப்பில் நந்தா எழுதியதிருந்த கதை எனக்கு மிகப் பிடித்திருந்தது.

நந்தாவின் இந்தக் கதை மட்டுமல்ல, அவரது பல கவிதைகளும் என்னைக் கவர்கின்றன. ஒரு மாதிரி டிஜிட்டல் கவிஞர்! பிரம்மராஜன், எஸ் சண்முகம் போன்ற கவிஞர்களை வாசித்தவர்கள் இவரை அதிகமாக ரசிக்க முடியும். மனிதர் கவிதைகளில் கலக்குகிறார். திரட்டிகளில் இவரது கவிதைகள் வருகிறதா எனத் தெரியவில்லை. என்னுடைய பிளாக்ரோலில் இவரது முகவரி இருந்தாலும், தனியாகத் தருகிறேன் : www.nundhaa.blogspot.com

நந்தாவைத் தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நந்தா மட்டுமில்லை. யாத்ரா, பிரவின்ஸ்கா, சேரல், மண்குதிரை எனப் பலர் இப்போது தொடர்ந்து நன்றாகக் கவிதையெழுதிக் கொண்டிருக்கிறார்கள். மண்குதிரை விடுமுறையில் இருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் எழுதத் துவங்கிவிடுவார் என நம்புகிறேன்.

இங்கே வலைப்பதிவுகளில் முதலில் ஆர்வமுடன் எழுதத் துவங்குபவர்கள், பல்வேறு காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அப்படியில்லாமல், மேலே உள்ளவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமென்பது என் ஆசை.

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், அனுஜன்யா வெறும் கவிதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருந்தவர் பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள் என முன்னேறியிருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபடுகிறார். அனுஜன்யாவிற்கு ஆங்கில மொழியின் மேல் நல்ல கண்ட்ரோல் இருக்கிறது. இவர் கவிஞராகவும் இருப்பதால், கவிதைகளை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும். தமிழில் பல கவிதை மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். சிலர் அகராதியை அருகில் வைத்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பார்கள். அங்கே தமிழ் வார்த்தைகள் இருக்கும், கவிதை இருக்காது. (hit the nail on its head என்பதை நகத்தின் தலையில் அடி மாதிரியானவை மொழிபெயர்ப்பில் சேர்த்தியே இல்லை!)

மொழிபெயர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கவிதையின் உயிர். சில கவிதைகள் இறுக்கமான மொழிநடையில் இருக்கும். தமிழில் மொழிபெயர்க்கும்போது அந்த இறுக்கத்தை அப்படியே கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அதாவது, நம்முடைய கவிதை நடையை மறந்துவிட்டு, மொழிபெயர்க்கும் கவிதைக்கு நேர்மையாயிருக்க வேண்டும்.

வளர்மதி சமீபத்தில் a leaf, treeless என்பதை 'ஒரு இலை, மரமற்று' என்று மொழிபெயர்க்காமல் 'காற்றில் அலையும் இலையொன்று ' என எழுதியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது. சமீபத்தில் அய்யனார் மொழிபெயர்த்திருந்த கமலாதாசின் கவிதையும் நன்றாக வந்திருந்தது. தொடர்ந்து அய்யனாரும் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் யாருக்கு லாபம்?

நோக்கியாவின் சிறப்பு பொருளாதார மண்டலம் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பதூரில் இருக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். அதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்கீழ் சில விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அத்தகவல்களை இன்று New Indian Express வெளியிட்டுள்ளது.

நோக்கியோவின் உள்கட்டுமானத் தேவைகளுக்காக அவர்கள் சில அசையாச் சொத்துகளை வாங்க வேண்டியிருக்கிறது. அப்படி வாங்குவதற்கு ஆகும் செலவை அரசே ஒரு சலுகையின் மூலம் திருப்பித் தர உறுதியளித்திருக்கிறது. எப்படி? 2005லிருந்து மூன்று வருடங்களுக்கு நோக்கியா செலுத்தும் விற்பனை வரியை (VAT) திருப்பிக் கொடுத்துவிடுவதன் மூலம் இது சாத்தியப்பட்டிருக்கிறது. இப்படித் திருப்பிக் கொடுப்பது மட்டுமே ரூ 638 கோடிகள்! அதாவது நோக்கியாவின் உள்கட்டுமானத் தேவைகளுக்கு தமிழக அரசு பணம் கொடுக்கிறது!

பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன இந்த சிபொமவிற்கு. நிலங்களின் விலையை வழிகாட்டும் மதிப்பில் (guideline value) பாதி விலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வழிகாட்டும் மதிப்பென்பதே மிகக் குறைவானதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் 50% வசூலித்திருக்கிறது. அப்படிக் குறைந்த விலைக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் அதற்கான முத்திரைத்தாள் வரியிலிருந்தும் விலக்களித்திருக்கிறது அரசு.

நோக்கியா சிபொமவில் விற்கும் / வாங்கும் பொருட்களுக்கு எவ்விதமான மாநில / நகரசபை வரிகள் கிடையாதென்றும் ஒரு சலுகை.

தொழிலாளர் நலனுக்கு எதிரானதாகவும் நோக்கியாவிற்குச் சாதகமாகவும் பல சலுகைகளை அரசு அளித்திருக்கிறது. அதில் முக்கியமானது, அரசு இந்த சிபொமவை public utility யாக அறிவித்திருப்பதாகும். contract labourகளாகவும் மற்றும் மிகக் குறைந்த ஊதியத்தில் (ரூ 3,400 ரூபாயிலிருந்து ரூ 5,400 வரை) வேலை செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.

இப்படிப் பல சலுகைகளை வழங்குவதற்கு அரசுகள் தரும் காரணங்கள் : வேலை வாய்ப்பு அதிகரிக்கச் செய்வது, முதலீட்டை அதிகரிப்பது என்பதாகும். ஆனாலும், பாருங்கள், இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உலக அளவில் நோக்கியாவில் வேலை செய்பவர்கள் வாங்கும் சம்பளத்தில் 45ல் ஒரு பங்கைத்தான் வாங்குகிறார்கள்!!

இரண்டு நாட்களுக்கு முன் வந்த செய்தியின் படி, சென்னையில் உள்ள நோக்கியாதான் உலகத்திலேயே அதிகப்படியாக அலைபேசிகளை உற்பத்தி செய்கிறதாம். இன்னும் தங்கள் முதலீட்டையும் உற்பத்தியையும் அதிகப்படுத்தப் போகிறார்களாம்.

தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பல உரிமைகள் மறுக்கப்பட்டு வேலை செய்வதால் அவர்களுக்கு லாபம் கிடையாது. சரி, அரசிற்காவது ஏதாவது வருமானம் வருமா என்று பார்த்தால், அதுவும் கிடையாது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், சிபொமவில் இருக்கும் நிறுவனங்களுக்கு சுங்க வரி, கலால் வரி எதுவும் கிடையாது. ஏன், வருமான வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது!

இப்போது ஒரு கேள்வியை கேட்டுக் கொள்வோம். இப்படிப்பட்ட சிபொமக்களால் யாருக்கு லாபம்? விடை தெரிய மூளையைக் கசக்க வேறு வேண்டுமா என்ன? ஆனால் உப கேள்வியாக எழும் ‘பிறகு ஏன் பல சிபொமக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன' என்பதற்கு நிச்சயம் மூளையைக் கசக்கித்தானாக வேண்டும்!

போதுமென்ற மனம்

சிறுதுயில்
கடும்சினம்
வரும் போகும் தினம் மனம்
மோனம் குணம்
உளி தெளி(த்து)
தணி அறை பன்னீர்
சொக்கும் சிவக்கும் மொக்கும் மலரு(க்கு)ம்
பணம் கொண்டாடும்
இனம்

கொஞ்சம் வார்த்தைகள்
கொஞ்சம் சமரசம்

சந்துஷ்டியாய் கழிகிறது

சில கேள்விகள், சில பதில்கள்

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இயற்பெயர் சுந்தர். பிரமிளின் பல பெயர்களுள் ஒரு பெயரின் ஒரு பாகமான ஜ்யோவ்ராம் என்பதையும் சேர்த்து நானே வைத்துக் கொண்டதுதான். பிடித்ததால்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன். மட்டுமல்லாது, பெயரில் என்ன இருக்கிறது, அல்லது பெயரில் என்னதான் இல்லை என யோசித்துப் பார்ப்பது நல்ல மொழி விளையாட்டாகவும் இருக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

தனிமையில் மிதமான போதையில் இருக்கும்போது வண்ணதாசனின் செடிகளுக்கு மாதிரியான கதைகளைப் படித்தால் அழுகை வரும். அப்படித்தான் கடைசியாக அழுதிருப்பேன் என நினைக்கிறேன் - நாள், தேதி நினைவிலில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கோழி கிறுக்கியதைப் போல் இருப்பதால் பிடிக்காது. நீங்கள் கேட்பது signatureஐ என்றால், ஓரளவு பரவாயில்லை.

4.பிடித்த மதிய உணவு என்ன?

உணவு விஷயங்களில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. ருசியான, உடல் நலத்திற்கு அதிகக் கேடில்லாத உணவு எதுவானாலும் எனக்குப் பிடித்தமானதுதான்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடனே என்றால் கொஞ்சம் சிரமம்தான். பழகிப் பழகித்தான் நட்பாக ஆகும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில். நீர் ஃபோர்ஸாக உடலில் வீழ்வது இதமாக இருக்கும். கடலுல் உப்புத் தண்ணீர் வேறு. அடித்துப் புரட்டிப் போடும் அலைகள் சில சமயம்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

நான் ஒரு சுயமோகி. எல்லா விஷயங்களும் எனக்குப் பிடித்தமானவைதாம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

நான் அப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்பவன் இல்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னுடைய 15 வயதுவரை உற்ற நண்பனாய் இருந்த என் அண்ணன் ராமச்சந்திரன்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

கறுப்பு நிற கால்சட்டையும் வெள்ளை அரைக்கைச் சட்டையும்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எதுவும் இல்லை.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இள மஞ்சள் நிறம் எனக்குப் பிடித்தமானது. அதனால் அந்த நிறமாகவே மாற்றிவிடுங்கள்.

14.பிடித்த மணம்?

பெட்ரோல் வாசனை, நல்ல பெர்ஃப்யூம் வாசனை, லேசாக மழை அடிக்கத் துவங்கியவுடன் கிளம்பும் மண் வாசனை, குழந்தை வாசனை... நிறைய உண்டு.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

கென் - என்னுடைய நண்பர் மற்றும் சிறந்த புனைவெழுத்தாளர்.
ஸ்ரீதர் நாராயணன் - இதுவமது.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அதிஷாவின் எழுத்துகளில் இப்போதுதான் கொஞ்சம் பண்பட்ட தன்மை வந்திருக்கிறது. இன்னும் அவர் நிறைய முயற்சி செய்ய வேண்டும் என்பது என் ஆசை.

ஆடுமாடு - இவரது வட்டார மொழிக் கதைகள்.

17. பிடித்த விளையாட்டு?

I like all ball games :) கிரிக்கெட், செஸ், கேரம்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

திரைப்படங்களைப் பார்ப்பதில்லை.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பல மாதங்களுக்கு முன் சுப்ரமணியபுரம்.

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

வண்ணதாசனின் ஓய்தலும் பெய்தலும் (இரண்டாவது முறையாக வாசிக்கிறேன்), வா மு கோமுவின் அழுவாச்சியா வருதுங் சாமி, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படமே வைத்துக் கொள்வதில்லை. அதனால் மாற்றும் பிரச்சனையே இல்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : மெலிதான ஏசி உறுமல்.
பிடிக்காதது : தரையில் மம்மட்டியால் தேய்க்கும்போது எழும் சப்தம் உடலைக் குறுகுறுக்க வைக்கும். அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றுவிடுவேன்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித்திறமை என ஒன்றும் கிடையாது - அப்படி நாம் நம்பும் திறமையும் வேறு யாருக்காவது இருக்குமென்று நினைக்கிறேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இங்கு, இணையத்தில், பலர், தெரியாத விஷயத்தைத் தெரிந்ததாக சீன் போடுவது எரிச்சலைக் கிளப்பும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வழக்கமாகிப் போன பழக்கத்திற்கு இவனொரு அடிமை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சாதாரணமாக வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்லாமல் அறைக்குள் வெறும் லுங்கி பனியனுடன் தரையில் உருண்டு கொண்டிருப்பதே என் விருப்பம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக இயங்கியபடி.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இப்படி கேப்ஸ்யூல் வடிவ கொட்டேஷன்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

(இந்தத் தொடர் விளையாட்டிற்கு என்னை அழைத்த அதிஷா மற்றும் ஆடுமாடுக்கு நன்றி)

காற்றில் படபடக்கும் பக்கங்கள்

தூமைத் துணியின் விளம்பரம் கொண்ட வாசகங்களை
முகத்தில் அப்பிக் கொள்கிறான்
ஜெய்ஹோ ஜெய்ஹோ
எனக்கூக்குரலிடுகிறார்கள்
சேரிநாய் பணக்காரர்கள்
விபத்தில் இறந்தவரின்
கழுத்துவரை மூடிய வெள்ளை உடையில்
ஆங்காங்கே ரத்தத் திட்டுகள்
சின்னச் சின்ன தேசங்களின்
வரைபடங்களாய் உறைந்திருக்கின்றன
இதுவரை தாங்கள் பார்த்திருந்த
விபத்துச் சாவுகளைக் குசுகுசுத்துக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்த பத்தியில் இருந்த வாசகங்களில்
cheer leadersன் ஜட்டி தெரியும் புகைப்படங்கள்
புணர்ச்சியின் உச்சத்திற்கு முந்திய கணமொன்றில்
i am on pills, cum for me எனக் கத்துகிறாள்
விளம்பரங்கள் & சிகரெட் புகைகளுடன்
முற்றும்