விவேக் ஷன்பேக்

சிறுகதைகளை இணையத்தில் படிப்பதில் எனக்கொரு சிக்கல் இருக்கிறது. அலுவலக நேரத்தில் மற்ற வேலைகளுக்கிடையில் கதைகளைக் கவனமாகப் படிக்க முடியாது. ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வரும் தொலைபேசி அழைப்போ உடனடியாகப் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சலோ எரிச்சல் படுத்தும். அது அந்தக் கதையைத் மீண்டும் படிக்கும்போதும் தொடரும். அல்லது மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதை மட்டுமே செய்ய வேண்டும் - அதுவும் பல சமயங்களில் முடியாது. அதனால் பெரும்பாலும் சிறுகதை நாவல்களைப் புத்தகங்களாகத்தான் படிப்பது. நாளொன்றிற்கு ஒரு கதைவீதம் இணையத்தில் வாசித்தாலே அதிகம். மற்ற கதைகள் ஞாயிற்றுக் கிழமைக்கானவை என்று தள்ளி வைத்துவிட்டு, பிறகு படிக்காமலேயே போய்விடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது :(

அப்படித்தான் ரீடரில் ஜெயமோகனின் பதிவில் வந்த விவேக் ஷன்பேக் எழுதி ஜெயமோகன் மொழிபெயர்த்திருந்த கதைகளைப் படிக்கவில்லை. பிறகு படிக்கலாமென்று விட்டுவிட்டேன். இன்று காலை சுரேஷ் கண்ணனின் (http://pitchaipathiram.blogspot.com/2009/12/191209.html) பதிவில் அதைச் சிலாகித்து எழுதியிருந்ததும் மூன்று கதைகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.

சமீபத்தில் வாசித்த மிக வித்தியாசமான கதைகள் என்று நிச்சயம் சொல்வேன். நேரம் கிடைக்கும்போது உங்களையும் வாசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1. http://www.jeyamohan.in/?p=5611 வேங்கைச் சவாரி

2. http://www.jeyamohan.in/?p=5659 அடுத்தவர் குடும்பம் (இந்தக் கதையின் இடையில் வரும் ’ஒரு வார்த்தைகூடப் பேசாமல் செயல்மூலம் பேச்சின் வலிமையைக் காட்டுவது’ என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு முழுக் கதையை எழுதியிருக்கும் சாமர்த்தியம் + ஒரு கதையை ஆரம்பித்துவிட்டு சாவகாசமாக இன்னொரு கதையைச் சொல்லி முடிப்பது இரண்டும் என்னைக் கவர்ந்தது )

3. http://www.jeyamohan.in/?p=5752 கோழியைக் கேட்டா மசாலா அரைப்பது (சாதத் ஹாசன் மாண்டோவின் கதையொன்றின் முடிவை ஞாபகப் படுத்தினாலும், இந்தக் கதையும் பிடித்திருந்தது.)

நிச்சயம் விவேஷ் ஷன்பேக்கின் கதைகள் வித்தியாசமானவை. இதற்கு முன் இவரை வாசித்ததில்லை - இனி முயற்சி செய்து வாசிக்க வேண்டும். வேறு ஒரு பதிவு தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தியிருந்த எரிச்சலில் ஜெயமோகனின் நூல் வெளியீட்டிற்குச் செல்லாதது தவறு என்று இப்போது வருத்தப்படுகிறேன் - குறைந்த பட்சம் இவர் பேச்சைக் கேட்பதற்காவது சென்றிருக்கலாம்.

இரண்டு புத்தகங்கள்

சென்ற வாரம் அகநாழிகை புத்தக வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றிருந்தேன். நர்சிம்மின் சிறுகதைத் தொகுதி, விநாயக முருகன், லாவண்யா மற்றும் இன்னொருவரின் கவிதைத் தொகுதிகள் வெளியாயின. நர்சிம்மின் சிறுகதைத் தொகுதியையும், பா ராஜாராமின் கவிதைத் தொகுதியையும் வாசித்தேன். இனிதான் விநாயக முருகனின் தொகுதியை படிக்க வேண்டும். (லாவண்யா + இன்னொருவரின் புத்தகங்கள் வாங்கவில்லை).

நர்சிம் : பல கதைகளைத் தனித் தனியாக அவரது தளத்தில் ஏற்கனவே வாசித்ததுதான். ஆனால் சிறுகதைகளை ஒட்டு மொத்தமாக ஒரு தொகுதியாகப் படிக்கும்போது கிடைக்கும் மனப்பதிவிற்கும் தனித் தனியாக அவற்றை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தவிர, சில கதைகளைக் கொஞ்சம் மாற்றியும் உள்ளார்.

ஆற்றொழுக்கு நடையில் அனாயசமாகக் கதைகளைச் சொல்லிச் செல்கிறார். வெகுஜனக் கதைகளின் முக்கியத் தேவை சுவாரசியம். அது இவருக்கு இயல்பாக வருகிறது.

கதைகளில் வரும் எல்லா வரிகளும் அதன் மைய உணர்வுக்கு ஒட்டியே இருக்க வேண்டுமென்பது மரபான கதைகளுக்கு ஒரு விதி. அது இந்தத் தொகுதியில் பல இடங்களில் தவறியிருக்கிறது. வாசிக்க நன்றாயிருந்தாலும் தேவையற்ற வர்ண்னைகள் கதையோடு ஒட்ட விடாமல் தடுக்கின்றன.

வாசிப்பு சுவாரசியத்திற்காகவே இவரது கதைகளைப் படிக்கலாம். இன்னும் தீவிரமான கதைகளை எழுதுவார் என நம்புகிறேன்.

ராஜாராமின் தொகுதி 1995-96 வாக்கில் வர இருந்தது. எனக்குத் தெரியாத காரணங்களால் அது முடியாமல் போய் இப்போது பல வருடங்கள் கழித்து வந்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது.

கவிதையைப் பற்றித் தமிழில் ஆயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன. எது கவிதை, எது உயர்வான கவிதை, கவிதையின் வடிவம்... என்று பலவாறாகப் பலர் எழுதியிருக்கிறார்கள். தங்களுடைய முன் - தீர்மானிக்கப்பட்ட சட்டகங்களைக் கொண்டு கவிதைகளை அணுகி அந்த வரையறைகளுக்குள் கவிதை அடங்கினால் சிலாகிப்பார்கள், மீறினால் நிராகரிகரிப்பார்கள்.

கவிதையைக் கசக்கித் துவைத்துக் காயப்போடுவதுடன் எனக்கு உடன்பாடில்லை. கவிதை விமர்சனம் என்ற பெயரில் சிலர் ருப்பி ருப்பி எழுதுவதைப் பல சமயம் படிப்பதுகூட இல்லை.

இந்தத் தொகுதி சிறிய தொகுதிதான். மொத்தமுள்ள 64 பக்கங்களில் முதல் எட்டு பக்கங்கள் வேறு விஷயங்களுக்குப் போய்விட மீதமுள்ள 56 பக்கங்களில் கவிதைகள். எல்லாக் கவிதைகளுமே புத்தகமாவதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது (உதா : மஞ்சுவிரட்டு). வாடகை வீடு போன்ற கவிதைகளில் வாழ்க்கை விசாரங்களும் தத்துவங்களும் துருத்திக் கொண்டு இருக்கின்றன. இன்னும் சில கவிதைகளில் கடைசி வரித் திருப்பங்களுக்காக வலி்ந்து எழுதப் பட்டது போலிருக்கின்றன. பிரதானமான குற்றச் சாட்டாக இவர் ஒரே மாதிரிக் கவிதைகளைத் தொடர்ந்து எழுதுகிறார் எனலாம் (ஆனால் பலர் - வெற்றி பெற்ற, எனக்குப் பிடித்தமானவர்களும் சேர்த்தி - அப்படித்தான் எழுதுகிறார்கள் என்பது வேறு விஷயம்!). ஒரே விதமான மொழியில் நடையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் எழுதுபவனுக்கு போரடித்துவிடும் (வண்ணநிலவனின் கதை மொழி போல் விதம் விதமாக இருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட விருப்பம்).

எனக்குத் தெரிந்தே இவருடைய வேறு சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் சேர்க்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

எனக்கு ’என்ன சொல்லட்டும் முத்தண்ணே’, ‘சரசு அத்தை’ மாதிரியான கவிதைகள்தாம் முக்கியமாகப் படுகிறது. அதற்காகவே பா ராஜாராமின் கவிதைகளை நேசிக்கிறேன்.

வெளியீட்டு நிகழ்விற்குப் பிறகு நண்பர்கள் என்னைச் சாரு நிவேதிதாவிற்கு அறிமுகப்படுத்தினர். அவருடன் சில முறை தொலைபேசியில் பேசியிருந்தாலும், பல பொது இடங்களில் நான் பார்த்திருந்தாலும், நேரில் பேசுவது இதுதான் முதல் முறை. நிறைய பேர் இருந்ததால், மிகக் கொஞ்ச நேரமே பேச முடிந்தது. கூட்டம் என்றால் அலர்ஜி என்பதாலும் அதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் மலேரியா காய்ச்சல் சரியாகியிருந்ததாலும் சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்குச் செல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவரிடம் விரிவாகப் பேச நிறைய இருக்கிறது.

சேருமிடம்

எரிச்சலாக இருக்கிறது
ஆரத்தழுவ
யாரையாவது அடிக்க வேண்டும்
குத்திக் கிழிக்க வேண்டும்
எலி பாஷாணம், கயிறு, தூக்க மாத்திரை
எதுவும் தேவையில்லை
அன்பை வெறுப்பை எல்லாவற்றையும்
நிராகரிக்கிறேன்
எனக்கில்லை
நெடிய தீஜூவாலைகள்
உடல் திறனற்றுப் போனேன்
புதுமைப் பித்தன் குபரா பாரதி
பல உதாரணங்கள் உண்டு
அழகானவர்கள் சாதித்தவர்கள்
சிறுவயதில் இறந்திருக்கிறார்கள் -
எதையும் உருவாக்கவில்லை
அசிங்கத்தைத் தங்கள்
அசிங்கமான வாழ்க்கைக்கு விட்டுவிட்டு
வாழ்வும் தற்கொலையும் மரணமும் அற்புதமானது
கிழங்கள் பூங்காக்களில் நடை பழகிக் கொண்டிருக்கட்டும்
வாய்பிளந்து குறட்டை விட்டுத்
தூங்குபவன் தலையில் ஓங்கிப் போடு
பிறகு குளிப்பது உனக்குப் பிடித்திருக்கலாம்
காலம் என்னை முடித்துவிட்டது
கடவுளோ அல்லது வேறு யாராவதோ
தயவுசெய்து என்னை ஆசிர்வதியுங்கள்