காமக் கதைகள் 45 (31)

சொல்வதற்குச் சங்கடப்பட்டான் அதீதன். ‘இல்ல, இந்தக் கதையைச் சொல்லலாமான்னு தெரியல’ என்றான். ‘ஏன் யார்கிட்டயாவது உதை வாங்கின கதையா... இப்படி எல்லாம் இமேஜ் வச்சுக்காத’ என்றேன். ‘போடா முட்டாள்’ என்றுவிட்டு, நிதானித்து கதையை ஆரம்பித்தான்..

’அப்ப எனக்கு 19 வயசிருக்கும். மண்டை முழுக்க செக்ஸ்தான் இருக்கும். எப்படியாச்சும் பொம்பள உடம்ப பார்த்துட துடிக்கும். எவ்வளவோ கேவலமான காரியங்களைப் பண்ணியிருக்கேன்’

’நீ மட்டுமா, எல்லாரும்தான் பண்ணியிருப்பாங்க... தைரியமாச் சொல்லு’

’என்னோட தூரத்து சொந்தக்காரப் பொண்ணு. பேரு ஸ்ரீவாணி. என்னைவிட நாலு வயசு பெரியவ. வீட்டுக்கு வந்திருந்தவ நேரமாயிட்டதால ராத்திரி தங்கிட்டா. படுக்கறதுக்கு ஒரே ரூம்தான். நான், அம்மா, அவ மூணு பேரும் படுத்திருந்தோம். காலையில எழுந்து பார்த்தா, அம்மா சமையல் ரூம்ல இருந்தாங்க. வெளிச்சம் வராம இருக்க இந்த ரூம் கதவு சாத்தியிருந்துச்சு. ஸ்ரீவாணி தூங்கிகிட்டிருந்தா. அவளோட பாவாடை முட்டி வரைக்கும் வந்திருந்துச்சு.

அவளோட உடம்ப தொட்டுப் பாக்க என் மனசுல ஆசை. ஆனா அவ முழுச்சுகிட்டா என்ன செய்யறதுன்னும் பயம். மனசு கிடந்து தள்ளாடிச்சு. ஆனாலும் ஆசைய அடக்க முடியல.

நைஸா அவளோட பாவடைய கொஞ்சமா தூக்கி அவ தொடைய தொட்டேன்.

டக்குன்னு முழிச்சுகிட்டா ஸ்ரீவாணி. எனக்கு ஷாக் அடிச்சா மாதிரி வெலவெலத்துப் போயிட்டேன். கண் முன்னாடி உலகமே சுத்துது. எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியல... அப்படியே நின்னவன் தலைய குனிஞ்சுகிட்டு ரூம விட்டு வெளிய வந்துட்டேன்.

தெரு முனைக் கடைக்குப் போய் அடுத்தடுத்து ரெண்டு சிகரெட் வாங்கிப் பிடிச்சேன். போச்சு, வீட்ல அம்மாகிட்டயோ இல்லாட்டி அவளோட சொந்தக்காரங்ககிட்டயோ சொன்னா நான் அவ்வளவுதான், காலி. காலியாகறத விடு, எவ்வளவு பெரிய அவமானம் - மூஞ்சி மேலயே காறித் துப்புவாங்க எல்லாரும்.

டிஃபன் முடிச்சுட்டு அவ கிளம்பினா. பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு விட சைக்கிள எடுத்தேன். யார்கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்னு வாய்விட்டு கேக்கவும் கூச்சமா இருந்துச்சு. அவ பின்னாடி கேரியர்ல உக்காந்துகிட்டு, இந்த மாதிரி விஷயம் நடந்தா மாதிரியே காட்டிக்கல. வேற எதையோதான் பேசிகிட்டு வந்தா.

நாளாக நாளாக தெரிஞ்சது - அவ யார்கிட்டயும் இந்த விஷயத்தைச் சொல்லவேயில்ல. அப்ப எனக்கு எவ்வளவு ஆசுவாசமா இருந்துச்சு தெரியுமா?

இப்ப அவளுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. அதுக்கப்புறம் அவளை நிறைய தடவை சந்திச்சிருக்கேன் - ஒரு தடவைகூட ஏண்டா அப்படிப் பண்ணினேன்னு அவ கேட்டதேயில்ல.

இப்ப அவள நினைச்சா கூட ரொம்ப நெகிழ்வா இருக்குடா’

என்றபடி கதையை முடித்தான் அதீதன். யோசித்தபடி இருந்த எனக்கு ஏனோ கதை அங்கே முடிந்த மாதிரி தோன்றவில்லை. நான் ‘அவ உன்மேல பரிதாபம் பார்த்து விட்டாளோ இல்லாட்டி அவளுக்கே நீ தொட்டது பிடிச்சிருதுச்சோ’ என்றேன். திடுக் திருப்பமென்றால் கதை இங்கேயாவது முடிய வேண்டும். ஆனால், அதீதன் பிரியப்பட்டபடி அவன் சொன்ன இன்னொரு வாக்கியத்துடன் முடிகிறது.

’சே, உன் புத்தி ஏண்டா இவ்வளவு வக்கிரமாகிடுச்சு?’

மாற்றுப் பார்வைகளும் ஆபாசமும்

வார்த்தைகளில் கண்ணியம் வேண்டுமாம் - யார் சொல்கிறார்கள்? - பத்தாம் நம்பர் செருப்பால் அடிப்பேன் என்பவர்களும், மன நோயாளிகள் எனத் தலைப்பு வைப்பவர்களும், சூப்பர்டா அய்யரே என்பவர்களும், போலி செக்யூலரிஸ்டுகள் என நக்கலடிப்பவர்களும்தான் - வேறு யார் சொல்வார்கள் - எல்லாம் இவர்கள்தான் - எழுத்திலே கூடாதாம், ஆபாசமாம்!

அடப் போங்கய்யா! அரசியல் படத்தைப் பற்றிய மாற்றுக் கருத்துகளை முன்வைத்தால், எனக்கு இடைவேளையில் கிடைக்கும் சமோசா மற்றும் படம் முடிந்ததும் எனது வண்டி கீறல் இல்லாமல் இருக்குமா என்பதுதான் முக்கியம்; ஏனெனில் நான் ஒரு அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட காமன் மேன் என்கிறார் பரிசல். அது சரி, எல்லா காமன் மேன்களும் அரசியல் பார்வையுடைய கமல் மாதிரி போலீஸ் கமிஷனர் கண்ணில் விரல் விட்டு ஆட்ட முடியுமா என்ன? அப்படி கமல் முன் வைக்கும் அரசியல்தான் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது எனச் சொன்னால் தவறா?

திரும்பத் திரும்ப வெண்பூ (மற்றும் சிலர்) படத்தை ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏன் அப்படி? படத்தில் ஒளிந்திருக்கும் மௌனங்களைப் பேசச் செய்வதே விமர்சனமாயிருக்க முடியும். நீங்கள் சொல்வது மாதிரி, ஆஹா, ஓஹோ, வாராது போல் வந்த மாமணி இந்தப் படம் எனச் சொல்லத்தான் நிறைய பேர் இருக்கிறார்களே... எல்லாரும் அதே திருப்பணியைத்தான் செய்ய வேண்டுமா என்ன? இதில் சென்னையில் நடக்கும் கதையை ஏன் ஹைதையில் படம் பிடித்திருக்கிறார்கள் என்ற வெளங்கா வெட்டி கேள்வி வேறு! நல்லா பண்றாங்கய்யா விமர்சனம். இப்படி ஆபத்தில்லாமல் தயிர் வடை ஆராய்ச்சியை யார் செய்தாலும் பரவாயில்லை, இவர்களும் கலந்து கொண்டு கோஷ்டி கானம் பாடுவார்களாம். ஆனால், படத்தில் இருக்கும் ஹிந்துத்வா அரசியலைப் பற்றி மட்டும் பேசக் கூடாது! அப்போது படத்தை ரசிக்கத்தான் வேண்டும் என்று நீட்டி முழக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள்.

சரி, வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும் என்ற நர்சிம், கார்க்கி மற்றும் பலர் மாற்றுக் கருத்துடையவர்களை மன நோயாளிகள் என்று சொன்ன ஆசிஃப் மீரானுக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா எனத் தேடித் தேடிப் பார்த்தேன்.. ம்ஹூம், ஒரு .... இல்லை. (பாருங்க மக்கா, புள்ளி புள்ளியா வச்சு கண்ணியத்தைக் காப்பாத்திட்டேன்!). ஆசிஃப் மீரானின் அந்தக் கட்டுரை நகைச்சுவையாம் - மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை - எனக்கு சிரிப்பு வரவில்லை, எரிச்சல்தான் வந்தது.

எனக்கு எப்போதுமே செல்வேந்திரன் எழுத்துகளில் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், குறைந்த பட்சம் ஒரு forward thinking person என நினைத்திருந்தேன் அவரை. ஆனால் அவர் கோட்பாடு என்ற பெயரில் முன்வைக்கும் விஷயம் மிக மிக ஆபத்தானது. இந்த எழவிற்கு ஆங்கிலப் பெயர்களெல்லாம் எதற்கு? வாந்தியெடுப்பதும் வன்மம் காட்டுவதும் தமிழுக்கு மட்டுமே சொந்தமான விஷயங்களா என்ன?

/ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார்.
/

இப்படிக்கூட அப்பட்டமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்க முடியுமா என ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கிறது.

இப்படி, உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பல பூனைக்குட்டிகள் வெளியே வந்ததுதான் ஒரே நல்ல விஷயமென நினைக்கிறேன்!

கடைசியாக - ஆசிஃப் அண்ணாச்சி, இந்துத்துவ வெறியனாக இருப்பதைவிட மனநோயாளியாக இருப்பதையே நான் தெரிவு செய்கிறேன். உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள், இவன் ஒரு மன நோயாளி!

(முதல் பத்தி, சி மணியின் பச்சையம் கவிதையை ஒட்டி எழுதப் பட்டது)

ரயில்(ப்) பயணங்கள்

நீண்டு கிடக்கும் தண்டவாளங்களில்
ஓடும் விரைவு ரயில்களின்
அவசரமான தடக் லடக் ஓசை பயமுறுத்துகிறது
hornகளின் கூக்குரலில்
உடம்பு பதறியோ அல்லது கால் தள்ளியோ
ரயிலில் வி்ழுந்து விடுவேன் என அச்சத்தை
எப்போதும் தந்து கொண்டேயிருக்கின்றன அவை
இறந்தவர் பிரேதத்தை vendors பெட்டியில்
அடிக்கடி பார்த்திருக்கிறேன் நான்
பழுப்பான வெள்ளைத் துணியில்
ரத்தம் தெரிய முகம் தெரியாது மூடப்பட்டிருக்கும்
பாடைகளை ஒத்திருக்கும் பெட்டியே
ரயிலில் சிக்கி மாண்டோர் கதையைக்
கூறாமல் இருந்திருக்கலாம் ஹரி
அவன் டிக்கெட் வாங்கி வரச் செல்லும்போது
ஆவடியில் ரயில் மோதிச் செத்தாளாம் அவனது பாட்டி
உடனிருந்த அவன் தம்பியும்
வேறொரு ரயிலில்
வேறொரு சமயத்தில்
முகம் நசுங்க அடிபட்டுச் செத்தவன்தான்
எனக்கான எட்டு ஐம்பத்தைந்து ரயில் வந்து கொண்டிருக்கிறது
இரண்டாவது நடைமேடையில்
ரயிலின்றி தீராது வாழ்வு
என் சாவும்

ஒரு மனதாக

நானொரு மனநோயாளி
விழித்திருக்கும் நேரமெல்லாம்
சலித்திருப்பேன்.
கோவில் கல்வெட்டு
பள்ளி சத்துணவு
திருமண வீடு, ஐயர் குடுமி
சமையல்காரர் வியர்வை
பேருந்து, எரியாத விளக்கு
கிழிந்த கைப்பை நடத்துனர்
மரண வீடு, மருத்துவமனை
சவக்கிடங்கு
சவரக்கத்தி, நிலைத்த பார்வை
நூலகம், மௌனி, காஃப்கா
பிரமிள், பிரளயம்
மனம் நோய்
நோயாள், நோயால்
யாழி, ஆழி
மனம் நோயாய்
நான்
ஒரு மன
நோயாளி

குமார்ஜி எழுதியது

அஸ்தமன வாசலில்

எதையும் இசைக்காத போதும்
உன்னிலிருந்து பீரிடுகிறது
உன்மத்தமான இசையின்
உயிர் ஒலி.
எல்லையில்லா வெளிகளில்
எரிந்து கொண்டிருக்கிறது
வெளிப்படுத்திய விசேடங்கள்.
சிதறிக் கிடக்கும் உறுப்புகளில்
தன் கை தேடி
சீழ்பிடித்த உடலுடன்
ஒரு சமூக அவலர்.
சட்டங்களெல்லாம் அறையப்பட்டுவிட்டன
மரச்சட்டங்களில்.
நலத்திட்டங்களுக்காக
நகராத வரிசைகளில்
நாட்கணக்கில்...
ஆனாலும்
மறுவாழ்வு குறித்து
மாநாடு கூட்டினோம்
சாண்ட்லியர் வெளிச்சத்தில்
சாராயம் அருந்திக் கொண்டு.

குமார்ஜி எழுதியது

என் குடிப் பிரச்சனை

குடி சிலருக்குப் பிரச்சனையாயிருக்கலாம். ஆனால் எனக்குக் குடிக்கும் இடம் பிரச்சனையாயிருக்கிறது.

யாராவது பேசினால் பதிலுக்குப் பேசுவது என்னுடைய வழக்கம். இது எல்லாருக்கும் பொதுவானதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவே சில சமயங்களில் என்னைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

சுங்க இலாகா அலுவலகம் அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு (அரசு சாராய வியாபரத்தை கையிலெடுக்குமுன் அதன் பெயர் சதீஷ் வைன்ஸ்) தினமும் செல்வது என்னுடைய வழக்கம். இது பல வருடப் பழக்கம். அங்கு கொஞ்சம் சுமாராயிருக்கும் சூழலும் என்னுடைய அலுவலகம் அருகிலிருப்பதாலும் நானே ஏற்படுத்திக் கொண்ட வழக்கம்.

ஒரு பழக்கத்தை ஆரம்பித்து விட்டால் பிறகு அதை மாற்றுவது கடினமாயிருக்கிறது. பாரிமுனையில் சதீஷ் வைன்ஸ் என்றால் அம்பத்தூரில் லக்ஷ்மி வைன்ஸ். சிகரெட், பத்திரிகைகள் வாங்குவதுகூட ஒரே கடையில்தான். செக்கு மாட்டைப் போல் தடம் தவறாமல் அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

தினமும் ஒரே இடத்தில் குடிப்பதால் சிலருடன் முகப் பழக்கம் வந்துவிடும். நட்பாகச் சிரிப்பார்கள். தீப்பெட்டி, சிகரெட் மாற்றிக் கொள்வதும் நடக்கும்.

ரம்முடன் கோலா கலந்து குடிக்கும் பழக்கமுடையவன் நான். அதாவது தண்ணீரோ அல்லது சோடாவோ சேர்க்காமல் முழுக்க முழுக்க கோலா. இல்லாவிட்டால் குடி தொண்டையில் இறங்காது, உமட்டிக் கொண்டு வரும். ஸ்மர்னாஃப் வோட்கா என்றாலும் கறுப்பு நாய் ஸ்காட்ச் விஸ்கியே ஆனாலும் செவன் அப் இல்லாமல் இறங்காது எனக்கு. அதனால், முழுக்க பெப்ஸியோ கோக்கோ விட்டுக் கொண்டு ரம்மின் வாசனை துளிக்கூடத் தெரியாதபடி குடிப்பது என்னுடைய பழக்கம். மதுவின் வாசம் எனக்குப் பிடிக்காது என்றாலும், குடித்தபின் இருக்கும் மனநிலை பிடிக்கும் என்பதால் கண்றாவி குடியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரையில்.

என்னுடைய இந்தப் பழக்கம் சிலருக்கு உறுத்தலாயிருக்கும் போல. அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒருவர் என்னைத் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தார். குடி கூடப் பரவாயில்லையாம், பெப்ஸி / கோக்தான் ஆகக் கெடுதலாம்.

‘பழக்கமாகிடுச்சுங்க, மாத்த முடியல’
‘சரி, மாத்திக்கப் பாக்கறேங்க’
‘இல்லாட்டி குடிக்க முடியாது’
‘ரம்மை விடவா கோலா கெடுதல்’

என்று பலவாறு பதில் சொல்லிப் பார்த்தும் மனிதர் விடுவதாயில்லை.

நல்ல வேளையாக அவர் என்னைத் தினமும் பார்ப்பதில்லை. இல்லாவிட்டால், கடையையே மாற்றிக் கொண்டு எப்போதோ போயிருப்பேன். அவரிடமே நீங்கள் பேசுவது பிடிக்கவில்லை என்று சொல்லலாம்தான். ஆனால் சாதாரணமாகவே நான் யார் முகத்தையும் சுருங்கச் செய்ய மாட்டேன். என்னளவில் லலிதமான பழக்கங்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய நண்பர்களானாலும் அவர்கள் செய்யும் அசூயையான காரியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் காட்ட மாட்டேன்.

அலுவலக விஷயமாக பெங்களூர் செல்லும்போது உடன் பணிபுரியும் கோபால் வருவான். குடிக்கும்போது திராட்சைப் பழங்களை மென்றுவிட்டு அங்கேயே கொட்டைகளைத் துப்புவான். பாத்ரூமின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கம்மோடில் ஒன்றுக்கிருக்கும் சத்தம் கேட்கும். பேசாமல் தலையைத் திருப்பிக் கொண்டோ அல்லது வராண்டாவிற்கோ வந்துவிடுவேன். வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டேன்.

இதுகூடப் பரவாயில்லை, அலுவலக உணவு மேஜையில் முருங்கையைப் போட்டு கடித்து மென்று (அப்போது பசு மாட்டின் அசையும் அடி வாய்தான் ஞாபகம் வரும்) தட்டிற்கு அருகிலேயே துப்புவான் உதயா. நைஸாகத் தலையைக் குனிந்து கொள்வேன்.

(இப்படி என் கதைல நான் நல்லவன் நான் நல்லவன்னு நானே சொல்லிக்கறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யுது, ஆனாலும் எல்லாரும் பண்றதுதானே இது)

பழகிய நண்பர்களிடமே இப்படித்தான் என்பதால் இவரிடம் எப்படி நேரடியாகச் சொல்ல. சில சமயம் அவர் பேசுவதைக் கேட்காதது மாதிரி தலைத் திருப்பி வெளியில் பராக்குப் பார்ப்பேன். தொடர்ந்து அறுத்தால், ம்ம் என்று தலையைக் குனிந்து கொள்வேன்.

இவரிடமிருந்து தப்பிக்க அவர் தலையைப் பார்த்தாலே தினசரியை (Economic Times) பிரித்துப் படிப்பது மாதிரி பாவ்லா செய்ய ஆரம்பித்தேன். மனிதர் விடுவாரா... சப்ளையரிடம் பேச பத்திரிகையைத் தாழ்த்தினால், அந்த இடைவெளியில் பிடித்துக் கொண்டு விடுவார்... ‘பாஸ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ் பெப்ஸி வேணாமே...’

’நீங்க குடிங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா தயவுசெஞ்சு தண்ணியோ இல்ல சோடோவோ மிக்ஸ் பண்ணிக்குங்க.. பாருங்க.. நான் அப்படித்தான் குடிக்கறேன்’

‘அடேய் நாதாறி, நான் என்ன குடிச்சா உனக்கு என்னடா...’ என்று கத்த நினைப்பேன். போலியான மரியாதை காட்டித் தொலைய வேண்டியிருக்கிறது சாராயக் கடைகளிலும். மேலும், மேல வேறு சொல்லியிருக்கிறேன் என்னுடைய நற்குணத்தை.

வெளியில் அரை லிட்டர் பெப்ஸி விலை 20 ரூபாய். கோக் விலை 22 ரூபாய். இது வெளியில்தான். டாஸ்மாக் பாரில் பெப்ஸி விலை 28 ரூபாய். ஒரு க்வார்ட்டருக்கு அரை லிட்டர் பெப்ஸி அல்லது கோக் வேண்டும் எனக்கு. நிறைய டூப்ளிகேட் வேறு பாரில் ஓடும். அந்த எரிச்சலில் நான் இருக்க, இவர் வேறு ரம்பம்!

கொஞ்சம் கொஞ்சமாக அன்பரின் தொல்லை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மண்டையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் என் நினைவெல்லாம் ஒரே பெப்ஸி மயம். ஒரு மனிதன் எதற்காகக் குடிப்பது - கனவுகளற்ற தூக்கத்திற்காககவும்தானே... ஆனால் எனக்கோ கனவில் கூட அரை லிட்டர் பெப்ஸி பாட்டில்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்குமளவிற்கு சங்கடப் பட்டேன்.

அவரைப் பார்ப்பது வாரத்திற்கு ஒரு முறைதான் என்பதாலும், அலுவலகத்தின் அருகில் வேறு எந்த நல்ல டாஸ்மாக் பார் இல்லை என்பதாலும், பெர்மிட் ரூமில் போய்க் குடித்தால் பாக்கெட் தாங்காது என்பதாலும், எழவு அதே பாருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

நேற்று மறுபடியும் அந்த ஆசாமியைச் சந்தித்தேன். மறுபடியும் அதே புராணம்... இப்போது கூடுதலாக கோக், பெப்ஸி பற்றி மின்னஞ்சலில் எப்போதோ சுற்றுக்கு வந்த விஷயங்களைச் சொல்லிப் பயமுறுத்தினார். கழிவறைகளைச் சுத்தம் செய்ய உபயோகிக்கலாமாம் கோக் மற்றும் பெப்ஸியை. அந்த அளவிற்கு அமிலமானது உங்கள் வயிற்றை என்ன செய்யும் எனக் கேள்வி எழுப்பினார். எனக்கு வயிற்றை வலிப்பது மாதிரி தோன்றியது. மறுபடி மறுபடி தண்ணீரோ அல்லது சோடாவோ கலந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

எழவு, பெயர்கூடத் தெரியாத ஒருவர் நம்மை இப்படி இம்சிப்பதா?

நிச்சயம் நான் ஒரு கொலைகாரனாகத்தான் ஆகப் போகிறேன்.

உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் - நான் சிறை செல்வதைத் தவிர்க்க என் அலுவலகத்தின் அருகில் உள்ள, அந்த ஆசாமி வராத, கொஞ்சம் உருப்படியான டாஸ்மாக் பாரை யாராவது தெரிவியுங்களேன்.

காமக் கதைகள் 45 (30)


ஹலோ மை டியர் ராங் நம்பர்

அலைபேசி மணி அடித்தது. தெரியாத எண். தெரிந்தது தெரியாதது என்றெல்லாம் பார்ப்பதில்லை அதீதன். எடுத்தான். ‘ஹலோ'. உடனே
எதிர்புறமிருந்து : ‘ஹலோ, செல்லதுரையா...' ஆஹா, பெண்குரல்!

அதீதன் : இல்லீங்க, நான் அதீதன் பேசறேன்
பெண் : அதென்னங்க பேர், அதீதன்னு
அதீதன் : இல்லீங்க, அதுதான் என் பேரு
பெண் : அதுதாங்க, அது என்ன அதீதன்னு

இப்போது அதீதனுக்குச் சந்தேகம் வந்தது. யாராவது தெரிந்தவர்கள் விளையாடுகிறார்களோ என்று...

அதீதன் : நானே வச்சுகிட்ட பேர்தாங்க இது
பெண் : அதுதான், ஏன் வச்சுக்கிட்டீங்க?

(கீகீகீ என நடு நடுவில் அவள் சிரித்துக் கொண்டிருப்பதும் இவன் சத்தமெழுப்பாமல் இளித்துக் கொண்டிருப்பதும் கதைக்குத் தேவையில்லாததால் தவிர்க்கப்படுகிறது)

அதீதன் : அதுவாங்க.. எனக்கு எல்லாமே அதிகமா இருக்கும்ங்க
(சொல்லும்போது அவன் தன் பேண்ட் ஸிப்போடு சேர்த்து தன் குறியைத் தடவிக் கொள்கிறான்)
பெண் : எதுலங்க
அதீதன் : எல்லாத்துலயுங்க
பெண் : அத நாங்க இல்ல சொல்லணும்
அதீதன் : சொல்ல வாய் எழும்பாதுங்க உங்களுக்கு
பெண் : ஹலோ மிஸ்டர்...

லைன் துண்டிக்கப் படுகிறது. மறுபடி இவன் அழைக்கிறான் :

பெண் : சொல்லுங்க, இப்பத்தானே பேசுனோம்
அதீதன் : ஏன், வேலையா இருக்கீங்களா
பெண் : வேலையெல்லாம் ராத்திரிலதாங்க
அதீதன் : ஏன், பகல்ல செஞ்சா சரியா வராதா
(மறுபடியும் கீகீகீ, மறுபடியும் இளிப்பு இரண்டும் தவிர்க்கப்படுகிறது)

சில நாட்கள் கழித்து இவன் கூப்பிட்டான் :

அதீதன் : இப்ப என்ன டிரெஸ் போட்டிருக்க
பெண் : ஏன், கேக்கறீங்க
அதீதன் : பேசறப்ப அப்படியே நீ எப்படியிருப்பன்னு கற்பனை செஞ்சுக்கத்தான்
பெண் : ப்ளூ சுடி... நீங்க
அதீதன் : வெறும் லுங்கிதான்
பெண் : வெறும் லுங்கின்னா
அதீதன் : உலகத்துலயே ஃபிரீயான விஷயம் ஜட்டி போடாம லுங்கி போடறதுதான்
பெண் : வெறும் லுங்கியோட இருந்தா தொந்தரவா இருக்காது
அதீதன் : நேர்லதான் சொல்லணும்
(கீகீகீ, இளிப்பு தவிர்க்கப்படுகிறது)

மறுபடியும் சில நாட்கள். தினமும் அவள் பேசா அழைப்புகளாக விட, இவன் தான் கூப்பிடுவது.

அதீதன் :
பெண் :.

அடுத்து இன்னொருமுறை இவன் கூப்பிட :

பெண் :
அதீதன் :

பெண் : ஆஃபீஸ்ல வேலையில்லயாக்கும்
அதீதன் : வேலைக்காகத்தானே உன்கிட்ட பேசிகிட்டிருக்கேன்

கதை இப்படியே போய்க் கொண்டிருக்க, இதற்குமேல் விரிவாக எழுத விருப்பமில்லாததால், நடுவில் நான் நுழைய வேண்டியதாயிருக்கிறது. பொருத்தருள்க.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஆணாயிருக்கும் பட்சத்தில், கதையில் பெண் என்று வரும் இடத்தில் நீங்கள் மோகிக்கும் பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்ளவும்; அதீதன் என்ற இடத்தில் உங்கள் பெயரையும்.

பெண் மற்றும் ஆண் பேசும் இடங்களில் இரண்டை வெற்றிடமாக விட்டிருக்கிறேன்; அதை நீங்கள் நிரப்ப வேண்டாம் - அதீதன் கதையை நான் எழுதுவது போல உங்கள் கதையை வேறொரு நண்பர் எழுதுவார்.

நீங்கள் பெண்ணாயிருக்கும் பட்சத்தில் .....

இருள் சூழ்ந்த புதர்

தலையில் பாதி வழுக்கையும்
தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த
அவன் பெயர் பார்த்திபனாம்
அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்
எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்
பன்னிரெண்டாவது வரை
ஒன்றாகப் படித்தோமாம்
என் ஞாபக அடுக்குகளில்
மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்
பள்ளி - மதிய உணவு
ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி
பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை
இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்
இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்
வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது
பேருந்தில் செல்லும் ராதிகாவை
சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது
பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்
மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி
அவசரமாய் ரயிலேறிப் போனான்
இரவில் மனைவியிடம் தன் பால்யகால
நண்பனைச் சந்தித்ததை
அவன் விவரித்து மகிழக்கூடும்
என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_13.html)

என் விநாயக முருகன் கவிதைகள்

என் விநாயக முருகன் மே மாததிலிருந்து வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரதானமாக கவிதைகள். நவீன விருட்சம், கீற்று, திண்ணை, உயிரோசை தளங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் இவரைப் படித்திருக்கலாம்.

தொடர்ந்து ஒரு தளத்திற்கு மேலேயே கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். நுட்பமான பார்வையுடன் சிறுசிறு விஷயங்களையும் கவனித்து கவிதையாக்குகிறார் விநாயக முருகன். ஹோட்டல் வாஷ் பேசினில் கைகழுவும் சம்பவத்தைக் கவிதையாக்குகிறார் (பார்க்க : http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_6734.html). இந்த இடத்தில் இது குறித்த முகுந்த் நாகராஜனின் கவிதையொன்றும் ஞாபகம் வருகிறது!. நேற்று பதிவிட்ட இவரது ஒரு மழை இரவில் நடந்தவை கவிதையும் நன்றாக இருக்கிறது. நமது வசதியை மனதில் வைத்துத்தானே நாம் மழை வேண்டுமென்றோ அல்லது வேண்டாமென்றோ சொல்கிறோம்!.

பல கவிதைகள் எளிமையான நேரடிக் கவிதைகள். மீன் தொட்டியைப் பார்க்கிறார். அதன் விவரங்களையும் சௌகர்யங்களையும் விற்பனையாளன் விவரிக்கிறான். எல்லாம் சரிதான். ஆனால் மீன்களுக்கும் அந்த மீன் தொட்டி பிடிக்குமென்பது இவரைக் குழப்புகிறது (http://nvmonline.blogspot.com/2009/06/blog-post_7426.html).

இவரது சற்று முன் வந்த மின்னஞ்சல் கவிதையைக் கீழே தருகிறேன் :
 
சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்

சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில்
சிறுமியொருத்திக்கு
இதயமாற்று அறுவை சிகிச்சை
பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன
சுவாரசியமற்று மேலே படித்தேன்.
சிறுமியின் பெயர் அகிலாவென்றும்
தந்தை பெயர் பாஸ்கரென்றும்
தொடர்ந்தது.
பால்யகால பள்ளிக்கூட நண்பன்
பாஸ்கரோவென ஒடினேன்
மருத்துவமனையில் நான் பார்த்த
புதிய நபரொருவர் தான்தான்
பாஸ்கரென்றும் மகள் கோகிலாவென்றும்
தவறாக அகிலா வ‌ந்துவிட்டதாகவும்
விளக்கினா‌‌‌ர்.
அகிலாவுக்கும் , கோகிலாவுக்கும்
இருந்த வித்தியாசத்தை
சுமந்தபடி திரும்பினேன்.

(http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_30.html)

இவருடைய பல கவிதைகள் என்னை ஈர்க்கின்றன. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கலாம்.

என் விநாயக முருகனின் வலைப்பதிவு முகவரி : www.nvmonline.blogspot.com