என் வண்டி

வயதான வண்டியிது
மிக மோசமான முறையில்
கழுத்தறுக்கும்
அடைய வேண்டிய இலக்கு
தொலைவில் இருக்க
இருக்கும் நேரமோ மிகச் சொற்பம்
மெதுவாகத்தான் செலுத்த இயலும்
இந்த வண்டியை
பாதியில் நின்றுவிடும்
என்னுடன் சண்டை போடும்
தூக்கியெறியும்
இது குடிக்கும் பெட்ரோலுக்கென
என் வியர்வையில் பாதியை அழுதிருக்கிறேன்
சோனியாக இருக்கும் இவ்வண்டி
துருப்பிடிக்கவும் ஆரம்பித்தாகிவிட்டது
என்றாலும்
எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி

(மாலைக்கதிர் - 26.12.1995ல் பிரசுரமானது)

சூடான இடுகைகள்

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் என்று ஒரு பத்து பதினொன்று இடுகைகளைக் காட்டுகிறார்கள். இடுகைகள் எழுதப்பட்ட நேரத்திலிருந்து 24 மணிநேரங்கள் அது காண்பிக்கப்படும் - அதாவது அது அதிகமான வாசகர்களால் தமிழ்மணத்திலிருந்து கிளிக் செய்யப்பட்டிருந்தால்.

இப்போது திடீரென்று சிலரது இடுகைகள் அவ்வாறு காண்பிக்கப்படுவதில்லை. லக்கி லுக், செந்தழல் ரவி, கோவி கண்ணன் மற்றும் டோண்டு ராகவனின் பதிவுகள். இன்னும் வேறு சிலரது பதிவுகள் இப்பட்டியலில் இருக்குமா எனத் தெரியவில்லை.

என்னுடைய காமக் கதைகளுக்கு சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரைகள், பின்னூட்டத் திரட்டல் போன்ற மேலதிகச் சேவைகள் கிடையாது என்றபோதாவது சில காரணங்கள் இருக்கலாமென்று (அது எவ்வளவுதான் சிறுபிள்ளைத்தனமாக இருந்தபோதும்!) நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் சில பதிவர்களின் ஒட்டுமொத்த இடுகைகளையும் சூடான இடுகைகளுக்கு ஏற்றுக் கொள்ள மாட்டோமென்பது எதேச்சதிகாரம் அல்லாது வேறென்ன?

திரும்பத் திரும்ப தமிழ்மண நிர்வாகிகள் வெளிப்படையாக எதுவும் அறிவிக்காமலேயே இப்படிப் பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். பைத்தியக்காரன் சொன்னதுபோன்று இது புரவலர் மனப்பான்மையையே காட்டுகிறது. இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் சக பதிவர்களால் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

பதிவுகளுக்காகத்தான் திரட்டி எனத் திடமாக நம்புகிறேன். அதனால் அவர்கள் தருவது இலவச சேவையென்றாலும் (இந்த எழவிற்கு ஏதாவது கட்டணம் வைத்துக்கூட ஒழுங்கான சேவை தரலாம்!), அடிப்படையாக சில விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது வெளிப்படைத்தன்மை.

சக பதிவுலக நண்பர் ஒருவர் சொன்னார் : தமிழ்மண நிர்வாகி ஒருவரைப் பற்றி எழுதியதால்தான் லக்கி லுக் மற்றும் டோண்டு பதிவிற்கு இந்த நிலமை என்று. அதை நியாயப்படுத்தவே செந்தழல் ரவி மற்று கோவி கண்ணன் பதிவுகளையும் சூடான இடுகைகளிலிருந்து தூக்கியிருக்கிறார்கள் (தனி மனித தாக்குதல் என்ற காரணம் சொல்லலாமே!). இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பிரச்சனை இதுவல்ல. எந்தக் காரணமும் சொல்லாமல் சிலரது பதிவுகளுக்குச் சில சேவைகளை மறுப்பதுதான் பிரச்சனை.

என்னுடைய கோரிக்கை : அவர்கள் சூடான இடுகைகளிலிருந்து சிலரை விலக்கியிருந்தால் அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையா எனப் பதிவர்கள் பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம் தகவலையாவது தெரிந்து கொள்ளலாம்.

என்னுடைய (மற்றும் சில பதிவர்களுடைய) கோரிக்கையின் நியாயத்தை புரிந்துணர்வோடு அணுகி தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் :)

பிகு :

இவ்வளவு சொன்ன பிறகு, தமிழ்மணப் பரிசுகளைப் பற்றிச் சொல்லாவிட்டால் தின்ற சோறு செரிக்காது. நிறைய நிபந்தனைகளோடு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 500 ரூபாயாம். 5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றுகிறது.

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்கள். அதற்குப் பணம் தேவைப் படுகிறது. கடனாக வாங்கினால் முழுப் பணத்திற்கும் வட்டி தரவேண்டும். அசலையும் திருப்பித் தந்து தொலைக்கவேண்டும்.

அதற்குப் பதிலாக பத்து ரூபாய் அடக்க விலையில் பங்குகளைவிட்டால், அதற்கு ப்ரீமியமாக 490 வைத்து 500 ரூபாய் ஒரு பங்கு என விற்கலாம். அதன்மூலம் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் கொண்டு தொழில் செய்யலாம். மொத்த 500 ரூபாய்க்குமென இல்லாது அடக்கவிலையான 10 ரூபாய்க்கு மட்டும் டிவிடெண்ட் கொடுத்தால் போதும்.

அப்படி மக்களிடமிருந்து வாங்கிய பணத்தை தன்னுடைய மகன்களின் நிறுவனங்களை வாங்குகிறேன் எனச் சொல்லி சுருட்டிக் கொள்ளலாம்.

அடுத்தவன் பையிலிருந்து பணத்தை எடுத்தால் அதற்குப் பெயர் திருட்டு. மாட்டினால் தர்ம அடியும் சிறை தண்டனையும் உண்டு.

அதையே பெரிய அளவில் செய்தால்...

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு முடிவெடுக்கிறது. சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேதாஸ் ப்ராபர்டீஸ் மற்றும் மேதாஸ் இன்ஃபிராவை வாங்குவாதாக. ப்ராபர்டீஸிற்கு 1.3 பில்லியன் டாலரும் இன்ஃபிராவிற்கு 0.3 பில்லியன் டாலரும் மதிப்பிடப்பட்டு அந்த விலையில் வாங்க முடிவெடுக்கிறார்கள். இதில் இன்ஃபிரா மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். ப்ராபர்டீஸ் தனியார் சொந்தம். (Satyamஐ தலைகீழாக எழுதினால் வருவதுதான் Maytas!).

மேதாஸ் ப்ராபர்டீஸும் மேதாஸ் இன்ஃபிராவும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மகன்களின் கம்பெனிகள். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ராஜூக்களின் பங்கு மதிப்பு 300 மில்லியன் டாலர்கள். 300 மில்லியன் முதலீட்டில் 1.6 பில்லியன் பணத்தை தன் மகன்களுக்குத் தர முடிவெடுக்கிறார் ராமலிங்க ராஜூ. இதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் தேவையில்லை எனவும் முடிவெடுக்கிறார்.

இம்முடிவு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை மூடும் நேரத்திற்குப் பிறகு எடுக்கப்படுகிறது. New York Exchangeல் சத்யம் பங்குகள் ரணகளப் படுகிறது. முதலீட்டாளர்கள் நெருக்குகிறார்கள். அடுத்த நாள் காலை மகன்களின் நிறுவனங்களை வாங்கும் முடிவை கைவிடுகிறார்கள். ஆனாலும் பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 30% வீழ்கின்றன.

இதில் இன்னமும் சில உள்குத்துகள் இருக்கின்றன.

மேதாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் மதிப்பு 1.3 பில்லியன் டாலராக இருக்க முடியாதென்றும் அது தன் வசமிருக்கும் விவசாய நிலங்களை வணிக நிலங்களாகக் காட்டி அதன்மூலம் தங்கள் நிறுவன மதிப்பை 90% ஊதிப் பெரிதாக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதாவது விற்பது மகனென்றால், பத்து ரூபாய்ப் பொருளை 100 ரூபாய்க்கு வாங்குவது, அதுவும் அடுத்தவர் பணத்தில்!.

வேறு சிலர் இப்படி அறிவித்ததன்மூலம் சந்தையில் சத்யம் பங்குகளின் மதிப்பு விழும், அப்போது தன்னுடைய பினாமிகளின்மூலம் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பது ராமலிங்க ராஜூவின் கணக்காக இருக்கலாம் என்கிறார்கள்.

அதாவது, யாரும் எதிர்க்கவில்லையென்றால், தன் மகன்களுக்கு 8000 கோடி ரூபாய் லாபம். எதிர்த்தால், பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கி பிறகு விற்றுக் கொள்ளை லாபம் அடையலாம்.

இதுதான் தலை விழுந்தால் நான் ஜெயித்தேன், பூ விழுந்தால் நீ தோற்றாய் என்பதோ??

பிற்சேர்க்கை : இது தொடர்ப்பான அடுத்த இடுகைகள் :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_1051.html

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_14.html

காமக் கதைகள் 45 (25)

ஒருவனுக்கு ஒருத்தி

பலரைப்போல் எனக்கும் அதீதன்மேல் பொறாமையாக இருந்தது, இவ்வளவு பெண்களைக் கவிழ்க்கிறானே என்று. உன்னுடைய வழுக்கைத் தலைதான் பிரச்சனை, வீவிங் செய்துகொள் என்றான். அதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை எனப் போலியாக பதில் சொன்னேன்.

உன் நண்பன் மனோகரைப் பார். 40 வயதில் ஒரே நேரத்தில் ஐந்து காதலிகளை வைத்திருக்கிறான் என்றான். மனோகர் கதை எங்களுக்குத் தெரியாதா என்ன.. சரியான வெண்ணை அவன். பெண்களுடன் காரில் சுற்றுவான்; அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பான்; கடற்கரையில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பான்; அதற்குமேல்... அவ்வளவுதான். லூசாடா நீ என்றுகூட நண்பர்கள் திட்டுவார்கள். ஆள் பார்ப்பதற்கு ஸ்மார்டாக இருந்தாலும் காரியத்தில்... வேஸ்ட் மனோகரன் என எங்கள் வட்டாரத்தில் அவனுக்குப் பட்டப்பெயர்கூட வைத்திருக்கிறோம்.

மனோகர் ஒரு சௌந்தர்ய உபாசகன் என்றேன். 'மசிரு' என்றவன், மனோகர் காரில் போகும்போது தன் ஆங்கிலோ இந்தியக் காதலியிடம் செய்த மேல் விளையாட்டுகளை விவரித்தான்.

என்ன எழவோ? இம்மாதிரியான கருமங்களையெல்லாம் எழுதித் தொலைய வேண்டியிருக்கிறது. ஆனால் நான் அடிப்படையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் திட நம்பிக்கையுடையவன். என் மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காதவன். அல்லது குறைந்தபட்சம் அப்படி காட்டிக்கொள்ள விரும்புபவன். சமூக ஒழுங்கிற்கு அது தேவைதானே.

ஒருவனுக்கு ஒருத்தி; ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கே ஒருத்தி; ஒரு சமயத்திலேயே ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரே சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரே சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே, ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே...

மொழியிலேயே இவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கும்போது காமத்திற்கும் காதலுக்கும் ஒற்றைத் தன்மையை எதிர்பார்க்கிறாய் என்றான்.

(அதீதனின் செக்ஸ் ஓரியண்டேஷன் ஸ்டிரெய்ட்தான். ஆனால் வேறு சில விளையாட்டுகளையும் முயற்சி செய்திருக்கிறான். ஜெல்லைக் கையில் வைத்துக் கொண்டு அவன் செய்த குதப் புணர்ச்சி முயற்சியை அடுத்த கதையில் எழுதுகிறேன் - எல்லாம் என் தலையெழுத்து!.)

அன்பாயிருங்கள்

அடுத்தவர்களைப் புரிந்து கொள்ள
கற்றுத் தரப்படுகிறோம்
அடுத்தவர் பார்வைக் கோணங்களின்
முக்கியத்துவம் பற்றி
அதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றி
அடிப்படை நாகரிகம் பற்றி
ஜனநாயகம் பற்றி
கற்றுத் தருகிறார்கள் தொடர்ந்து -
அடுத்தவன் கருத்து எவ்வளவுதான்
முட்டாள்தனாமாக
கேப்மாரித்தனமாக
கேவலமாக இருந்தபோதும்
போங்கடா வெண்ணைவெட்டிகளா

(சார்லஸ் புயுகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி எழுதியது - மொழிபெயர்ப்பல்ல).

ஒரே மருத்துவரும் அதே பழக்கமும்

அதே மருத்துவரைப்
பார்க்கும்போதெல்லாம்
ஒரே கேள்விகள்
குடிப்பதை நிறுத்திவிட்டாயா
புகைப்பதை?
அதே பேச்சுக்களுக்கு
ஒரே பதில்கள்
நடைப் பயிற்சி நல்லதாயிற்றே
அலுவலகத்திற்கு நடக்கிறேனே
கையில் அதே பிபி கட்டைச் சுற்றி
காதில் அதே ஸ்டெதெஸ்கோப் வைத்து
சோதிக்கும் அவர்
அதே எடையையும் சோதிப்பார்
ஒரே மாதிரி அவரிடம் பணம் கொடுத்து
அதே வழியில் திரும்புகையில்
அதே மதுக்கடையில்
அதே ஓல்ட் மாங்கும்
அதே கோல்ட் பிளேக் கிங்ஸும்
அதே விலையில்
அதே விக்ரமாதியனின்
ஒரே வரி நினைவுக்கு வருகிறது
வயிற்று வலி பயத்தில்கூட குடிப்பதை...?

சாரு மரை கழண்றவரா?

கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி மாமா, பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என பஞ்சதந்திரம் படத்தில் கமல்ஹாசன் நாகேஷிடம் சொல்வார். பிறகு ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து சொல்லிவிடுவார் என வைத்துக் கொள்ளுங்கள் :)

ஆனால் கேள்வி கேட்பதும் சிரமமான காரியம்தான் போலிருக்கிறது. மோகன் கந்தசாமி (http://www.mohankandasami.blogspot.com/) பதிவிட்டிருக்கிறார் பாருங்கள். நான் இயங்கும் தளம் புரிந்து அது தொடர்பான கேள்விகளைத் தயாரித்து, முதல் பாகம் கேள்விகள் அனுப்பி, அதற்குப் பதில் பெற்றவுடன், துணைக் கேள்விகள் கேட்டு... இப்படியே அடுத்த பாகத்திற்கும் செய்து, அருமையாக பதிவிட்டிருக்கிறார்.

தலைப்பில் இருப்பது அவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி :) இன்னொரு கேள்வி சரோஜாதேவி கதைகள் மாதிரி இருக்கிறதாம் நான் எழுதிய காமக் கதைகள் (கூடவே காமமே இல்லை என்ற விமர்சனம் வேறு!). இன்னும் பல சுவாரசியமான கேள்விகள். இதற்குமுன் நான் இம்மாதிரி பேட்டி கொடுத்ததில்லை. பதில் சொல்வதில் சொதப்பிவிட்டேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

இரண்டு பாகங்களாக வந்திருக்கும் பேட்டியைப் கீழே உள்ள சுட்டியில் படிக்கலாம் :

ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி, பாகம் - 1


ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி, பாகம் - 2

ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்

பிரமிள்

தனபாண்டியன் பிறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவன் அம்மா இறந்துவிட்டாள். அதை முன்னிட்டு எல்லோரும் அவனைத் தூற்றினர். அவனுக்கு ஆறு மாதம் ஆகியிருந்தபோது அவனது அப்பா அவனிடம் இரைந்தார் - "எங்கப்பா அஞ்சு வருஷம் முன்னாடி செத்ததுக்கு நீதாண்டா காரணம்." ஆறு மாதக் குழைதைக்குக் கோபம் வராதா.? ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறை விட்டான் என்று வாசித்துக் கொள்ளவும்). தன்மேல் பொறாமை கொண்ட ஊர் நாட்டாண்மைக்காரர்தான் பில்லி சூன்யம் வைத்திருப்பான் என்றான். அவரும் ஒத்துக் கொண்டார். அதிலிருந்து அவனைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டார். அவனும் பெயரைச் சுருக்கி பாண்டியன் என்று மாற்றிக் கொண்டான். பிற்காலத்தில் நிறைய ரசிகர் நற்பணி மன்றங்கள் தோன்றின.

அவனுக்குப் பத்து வயதிருக்கும்போது ஊரிலுள்ள வேசிகளிடம் போக ஆரம்பித்தான். யாராவது கேட்டால், தன் தாயாரைப் பார்க்க முடியாத ஏக்கம் நினைவிலி மனதில் இருந்து அதுவே எல்லாப் பெண்களிடமும் ஆசையைத் தூண்டுகிறது என்பான். அவனது தொல்லை பொறுக்க முடியாமல் வேசிகள் எல்லாரும் ஊரைவிட்டகன்றனர்.

அவன் செத்துப் போனான்.

எங்கும் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். சொந்தமாக வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டான். ஆனால் அம்முயற்சிகள் கைகூடாததால் இருபத்தைந்து வயதில் மளிகைக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். நல்ல சூட்டிகையான பையன் என்ற பெயரை மிக எளிதில் பெற்றான்.

இடைவெட்டாக ஆசிரியர் கருத்து : இந்தக் கதை ஏன் இப்படி இருக்கிறது என்று இதற்குள் உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். கதை நன்றாக இல்லை என்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இது என் கதை; என் இஷ்டப்படி தான் எழுதுவேன் (ஆறு வார்த்தைகள் ஆகிவிட்டதா.?). Raymond Federman 'யதார்த்தம் / கற்பனை உலகம், நனவு மனம் / நினைவிலி மனம், கடந்த காலம் / நிகழ் காலம், உண்மை / உண்மையற்றது ஆகிய வித்தியாசப் படுத்தல்களைக் கலைவது' நடக்கும் என்கிறார் (பார்க்க: மீட்சி 33; மொழிபெயர்ப்பு நாகார்ஜூனன்).

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று பாடிக் கொண்டே வந்தவனின் முகத்தில் எருமை மாடு காறி உமிழ்ந்தது. கையிலிருந்த கத்தியால் அதன் கழுத்தை வெட்டி ரத்தத்தைத் துளிக்கூடச் சிந்தாமல் குடித்தான். இனி ஊரிலுள்ள ஒரு எருமை மாட்டையும் விடக்கூடாது என்று கையில் பசூக்காவை எடுத்துக் கொண்டு எதிர்படும் மாடுகளை எல்லாம் சுட ஆரம்பித்தான். அவன் கையில் பசூக்காவை வைத்திருந்த காட்சி ராஜ ராஜ சோழனுக்குக் கிலியை ஊட்டியது. தன் நாட்டை விட்டு, ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்தான். அவனே பிற்பாடு ஹிட்லராக மாறினான். (இதைப் போன்ற சம்பவத்தை நீங்கள் கோவி மணிசேகரின் வரலாற்று நாவலில் படித்திருந்தால் நான் பொறுப்பல்ல - ஆசிரியர்).

இப்படியாக அவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான் (வாள் போன்ற மொழியை வேண்டுபவர்கள் இந்த வரியை அடித்துவிடவும்). கண்ணைப் பறிக்கும் அவனது அழகைக் கண்டு யாரும் பெண் கொடுக்க வரவில்லை. கஷ்டப்பட்டு தன்னிலும் 40 வயது மூத்த பெண்ணைத் திருமாணம் செய்து கொண்டான். அவளோ அவனை மதிக்காமல் தினமும் இம்சித்து வந்தாள். இது பொறுக்காத மனு நீதிச் சோழன் ஒரு நாள் அவள் கனவில் வந்து 'இப்படியெல்லாம் செய்தால் நரகம்தான் கிடைக்கும்; ஆணுக்கு அடங்கியிருப்பதே பெண்ணின் கடமை' என்று எடுத்துரைத்தான். அவள் கனவிலேயே 'போடா மயிரு' என்று பதில் சொன்னாள். 'நான் தமிழச்சி; என் பண்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது' என்றும் அவள் சொன்னதாகக் கேள்வி.

அவள் தொந்தரவு தாங்காமல் விவாகரத்து கேட்டான். அவள் ஒப்புக் கொள்ளாமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (நீதி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்).

அடிவாங்கியதிலிருந்து பாண்டியன் முற்றிலும் மாறிப் போனான். சாத்வீக வழியே சிறந்தது என்று சன்னியாசி ஆக முடிவு செய்தான். ஆனால் சன்னியாசம் வாங்கப் போகும் வழியில் இன்னொரு பெண்ணைக் கண்டு அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

காட்சி

ஒருவன் சிறுகதை எழுத முயல்கிறான்.

இவ்வாறு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டவளின் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டான். இம்முறை குழந்தை பிறந்ததும் அவனே இறந்து விட்டான்.

இரண்டாவது இடைவெட்டு : படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்க, பல திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே போகிறேன். கதை சுவாரஸ்யம்தான் முக்கியம் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். கதையின் போக்கிலேயே கதாநாயகன் இறந்தாலும், தனியாக ஒரு வரி 'அவன் செத்துப் போனான்' என்று கொடுத்திருக்கிறேன். வாசகி, உனக்கு போரடித்தால் எந்த இடத்திலும் அதைப் படித்துவிட்டு கதையை முடித்துக் கொள்ளலாம்.

குறிப்பு : இப்படி நடுவில் அடிக்கடி இடைவெட்டு வருவது வாசக அனுபவத்தில் குறிக்கிடுவது போலாகும் என்பவர்களே - கதை எழுதுவதே வாசக அனுபவத்தில் குறிக்கிடுவதுதானே.! (இதை யார் சொன்னார்கள் என்பது தெரியவில்லை. தெரியப்படுத்துபவர்களுக்கு சிவாஜி பட டீவிடி இலவசப் பரிசு. போட்டியில் கலந்து கொள்ள கடைசி தினம் : 24.12.2007).
அவனது சமாதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது : 'பிறந்தது கிமு 989; இறந்தது கிபி 2095. இந்த முப்பத்து மூன்று வயதில் சாதிக்க நினைத்ததையெல்லாம் சாதித்துவிட்டு உள்ளே உறங்குகின்றான் கும்பகர்ணன்'.

பாண்டியனின் மொழிப் பற்று அலாதியானது. தொலைக்காட்சியில் இந்தி நிகழ்ச்சிகள் வரும்போது அணைத்துவிடுவான். மூன்றாந்தரமான இந்தி நிகழ்ச்சிகளுக்கு மூன்றாந்தரமான தமிழ் நிகழ்ச்சிகளே பரவாயில்லை என்பது அவன் கட்சி. தர நிர்ணயம் ஒவ்வொருவர் அடிமனத்திலும் இருப்பது; அதை மாற்ற முடியாது என்று தன்னிலையைக் கரைத்தழிக்க விரும்பும் பின் அமைப்பியல்வாதிகளுக்குச் சொன்னான்.

தன்னுடைய கையைச் சுழற்றி வீசினான். அது சிறகாய் மாறி, வர்ணப் பறவையானது. திடீரென்று கழுகாய் உருமாறி அவனைத் கொத்த ஆரம்பித்தது. கழுகின் மூக்கைப் பிடித்துத் தரையில் அடித்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்குக் கையில் கட்டுடன் அலைவதைப் பார்க்க முடிந்தது. கேட்டதற்கு, முன்னோர்கள் வைத்த வினையை அவன் அறுவடை செய்ததாகவும், அதற்கு நிவாரணம் தேடிக் கொண்டதாகவும் சொன்னான். மக்கள் நம்பி, அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டனர்.

இடைவெட்டு : கடந்த இரண்டு பத்திகளும் அலுப்பு தட்டுகிறது என்று சொல்பவர்களுக்கு : இது போர்ஹே உத்தி. எந்நேரமும் வாசகனை ஏமாற்றி இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

காலைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன். எதிரே கடல். தூரத்திலிருந்து பெரிதாக வரும் அலை ஓய்ந்து திரும்பும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் திரும்பினால்.....

(தொடரும்)
(கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு பதிவிட்ட கதையின் மீள் பதிவு இது).

பயம் அல்லது அலுப்பு

ஓடிப்போய்
சில்லறைதேடி
பயணச் சீட்டெடுத்து
நடைமேடை குதித்து
மோதவந்தவனை விலக்கி
தண்டவாளம் தாண்டி
சேருமுன்

கூக்குரலிட்டபடி
தடக் லடக்கென
வெகு நீளமாய்ச்
செல்கிறது
ரயில் வண்டி

'சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்' என்ற வரியைச் சேர்த்து முடித்தால் இது சோகக் கவிதையாகிவிடக்கூடுமென்பதால் மேற்கண்ட வரிகளோடு கவிதை முற்றுப் பெறுகிறது. 'அடுத்த ரயில் பிடித்து வீட்டிற்குச் சென்றான்' என நீங்கள் படித்துமுடித்துவிட்டு உங்கள் பணிகளைத் தொடரலாம் அல்லது

கால்மணிநேரம் தாமதமாய்
அடுத்த ரயிலில்
வீடடைந்தால்
கோட்டை விட்டிருந்தேன்
சில துப்பாக்கி வெடிச் சத்தங்களை

என வாசித்தும் இன்புறலாம்.

ஒரு வருடம், அறிமுகம் & மும்பை

இன்று மதியம்தான் கவனித்தேன், நான் வலைப்பதிவு எழுதத் துவங்கி ஓராண்டு ஆகிவிட்டதை. முதலில் பதிவிட்டது 29/11/2007ல். இத்துடன் சேர்த்து 150 இடுகைகள். என்னளவில் இது பெரிய விஷயம்.

பதிவிட்டதில் மிகப் பெரும்பாலும் கவிதைகளே (அதிலும் பல கவிதைகள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவை). முதலில் அறிமுக அளவில் அ-கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு எதிர்-கவிதைகளும் பதிவிட்டிருக்கிறேன்.

இதுவரை 1,11,000ற்கும் மேற்பட்ட பக்கங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும், எனக்குத் தொடர்புச் சுட்டி கொடுத்துள்ளவர்களுக்கும் என் நன்றிகள். போலவே தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் எழுதுவதைக் கொஞ்ச காலம் நிறுத்திவைக்கலாமா எனத் தோன்றியது (இப்போதும் மனதின் ஓரத்தில் அந்த எண்ணம் இருக்கிறது). தொடர்ந்து வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருப்பதில் ஏனோ ஒருவித ஆயாச உணர்ச்சி.

கடந்த 18 வருடங்களாக என்னை மிகவும் ஈர்ப்பவை : வாசிப்பு, மது & ஸெக்ஸ். இப்போது - கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து மறுபடி - எழுதுவதும் சேர்ந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சியே. இந்த ஒரு வருட காலத்தில் சிலநாட்கள் தவிர்த்து அனேக நாட்கள் ஏதாவது கிறுக்கியே வந்திருக்கிறேன் (பதிவில் ஏற்றாவிட்டாலும்!).

எழுதும்முறையிலும் கொஞ்சம் மாற்றம். முதலில் பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் இப்போது நேரடியாக கணினியில் எழுதுகிறேன். அகால வேளைகளில் ஏதாவது எழுதத் தோன்றினால் மட்டுமே தாளில் எழுதுவது.

திரும்பிப் பார்க்கையில், செய்ய நினைத்து முடிக்காமல் விட்ட விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காமக் கதைகள் தொடரை முடிக்க வேண்டும் (மூன்று கதைகள் கையிருப்பில் எழுதி வைத்திருந்தாலும் செப்பனிட மனம் ஒட்டவில்லை). அதிகம் அறியப்படாத சிறுபத்திரிகைகள் என ஒன்றை ஆரம்பித்து, ஒரு பதிவுடனேயே நின்றுபோனதைத் தொடரவேண்டும். சோம்பேறித்தனம் ஆட்கொள்ளாமல் இருந்தால் இதையெல்லாம் செய்யவேண்டும்.

அவ்வப்போது நான் வலைப்பதிவில் வாசிக்கும் சுவாரசிய எழுத்துகளை அறிமுகம் என்ற அளவில் செய்யவேண்டும் என்பது என் ஆசை. இதற்குமுன்பு நான்கு பதிவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

சமீபமாக நான் வாசிப்பதில் கே ரவிஷங்கர் (http://www.raviaditya.blogspot.com/) என்னைக் கவர்கிறார். கவிதைகள், ஹைகூ, கதைகள் எனக் கலந்துகட்டி எழுதுகிறார். வித்தியாசமாக கவிதைகள் எழுதுகிறார். சுஜாதா தாக்கம் அதிகம் தெரிவதைக் குறைத்துக் கொண்டால் நல்லது (இது இங்கு பலரிடமும் நான் பார்ப்பதுதான்).

கடைசியாக : இணையம் என்பது கட்டற்ற வெளிதான். ஆனால் மும்பையில் நடந்த தீவிரவாதக் கொலைகளைப் பற்றி எழுதும்போதாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு எழுதினால் நலம். வெறுப்பை உமிழும் எழுத்துகளைப் பார்க்கையில் பயமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது.

பீடி / சிகரெட் பிடிப்பது தொடர்பாக சில விஷயங்கள்

சிங்மங்களூர் பீடியை
இண்டியன் ஃபில்டர் கிங்ஸென
எப்போதும் கேட்பான் பட்டக்கல்
காஜா பீடியைப் பிடிக்கவே ஆசைப்படுவான் உமாபதி
கணேஷ் பீடி பிடிப்பதற்குச் சும்மா இருக்கலாம்
செய்யது பீடி இழுக்கவே கடினமாயிருக்கும்
(அடிக்கடி அணைந்தும் தொலையும்)
வாசுவும் சீனியும் பிடிப்பது கோல்ட் பிளேக்தான்
கோல்ட் பிளேக் கிங்ஸே பலவருடங்களாக நான்பிடிப்பது
அக்கா வீட்டுக்காரர் கொடுத்துச் சென்ற ஃபாரின் சிகரெட்
அப்படியே தூங்குகிறது அலமாரியில்
கடற்கரை காற்றிலும் அனாயசமாக சிகரெட்
பற்ற வைக்கும் செந்தில்
சட்டம் போட்டதால் தயங்குகிறான்
சிகரெட்டுக்குள் கஞ்சா வைத்து இழுப்பான் சங்கர்
சுவர்க்கோழிகளும் தவளைகளும்
இரைச்சலிடுகின்றன மழைநாட்களில்

பாம்பும் தவளையும்

அலறல் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்தவன்
தேடத் துவங்கினேன்
மழைக்கால இரவில்
அறையில் படுத்திருந்தவன் பார்த்திருந்த
மொழ மொழவென
தரையில் வழுக்கிச் செல்லும் பாம்பை

அதைப் பார்க்கும் ஆவலில்
கதைவைத் திறந்தவன்
பார்வையில் படும்

ஈர மணலில்
தாவிச் செல்லும்
தவளையின் கால்பாதம்

புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்

பலநாட்கள் கழித்து சந்தித்தேன்
பழைய காதலியை
இடுப்பசைத்து நடனமாடி அவள்
சூடேற்றினாள்
கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி

குதூகலமாகவே கழிந்த இரவில்
சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க
புரண்டு படுத்து
உறங்கத் துவங்கியவள்

கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்

பழக்கம்

பேனா பிடிக்கக் கற்றுக் கொண்ட
நாள் முதலாய் வரைந்து கொண்டிருக்கிறேன்
பெட்டிகள்
மையெடுக்காமல்
கோடுகளை இணைத்து
சதுரமாய்
நீள் சதுரமாய்
செவ்வகமாயும்கூட
வண்ணம் நிரப்பியும் நிரப்பாமலும்
நிரப்பியதாய் நினைத்துக் கொண்டும்
நிரப்ப மறந்து போயும்

சில சமயம் வெறுங்கையில் காற்றில்

போதையில்
ஆங்காரத்தில்
பெட்டிகளை உடைத்துவிடுவதும்

சட்டக்கல்லூரி மாணவர் மோதலும் பொதுப்புத்தியின் தலித்விரோதப் போக்கும்

இந்தப் பதிவை அனுப்பியவர் ஒரு பத்திரிகையாளர், வலைப்பதிவுகளில் பரவலாக அறியப்பட்டவர். இப்போதுள்ள சூழலில் தன்னால் தன் வலைப்பூவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினை குறித்து எழுத இயலாது என்பதால் இதை அனுப்பியுள்ளார்.

தொலைக்காட்சியில் 'மனதைக் குலுங்க வைக்கும்' அந்தக் காட்சிகளைக் கண்டவர்களின் மனட்சாட்சிகள் இருகேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்பின.

1. என்ன இது காட்டுமிராண்டித்தனமான வன்முறை?

2. வன்முறையைக் கண்டு போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அவலமில்லையா?

1. உண்மைதான். இந்த வன்முறை கண்டிக்கத்தக்கதுதான். இது மட்டுமல்ல, எல்லாவிதமான வன்முறையும். ஆனால் இந்த வன்முறை எதிர்ப்பு மனச்சார்பு உடைய இந்திய ஆதிக்க சாதி மனங்கள், கயர்லாஞ்சி வன்முறை, தாமிரபரணிப் படுகொலை, திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் பீ திணிக்கப்பட்ட வன்முறை, குஜராத்தில் முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழித்த வன்முறை என தூலமான வன்முறை தொடங்கி கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை. அப்படியானால், வன்முறை எதிர்ப்பு என்பது பக்கச்சார்பாய் இருக்கும் போது வன்முறையும் வன்முறை ஆதரவும் பக்கச்சார்பாய் இருந்தே தீரும். தென்மாவட்டங்களில் பள்ளர்களின் எழுச்சி சாதிக்கலவரமாக முன்வைக்கப்பட்டதைப் போலவே இப்போது சட்டக்கல்லூரி மாணவர் 'வன்முறை' குறித்துக் கதையாடப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு உண்மையை மட்டும் வரலாற்றின் மிதிபட்ட பாதங்களுக்கு அடியில் நசுங்கிக்கிடக்கும் துணுக்குகளிலிருந்து கண்டுபிடிப்பது சிரமமான காரியமில்லை. தலித்துகள், முஸ்லீம்கள் 'வன்முறை' நிகழ்த்துவது, குண்டுவெடிப்பை நிகழ்த்துவது, பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்படுவது ஆகிய 'வன்முறைச் சம்பவங்கள்' மட்டுமே பொதுப்புத்தியால் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன. ஆனால் சிரிப்பதற்கும் அழுவதற்குமான முரண்நகை என்னவென்றால் இந்தியாவின் ஆகப்பெரும் ஆளும் கருத்தியல் சித்தாந்தமான பார்ப்பனீயத்தால் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட மேற்கண்ட மக்கள் குழுமங்கள் நிகழ்த்துவது வன்முறையல்ல, எதிர்வன்முறை என்கிற எதார்த்தம்தான்.

2. இரண்டாவது கேள்விக்கு வருவோம். போலீஸ் எப்போது வேடிக்கை பார்த்தது, எப்போது 'செயல்பட்டது?' என்கிற கணக்குகள் சாதியக் கறைபடிந்த வரலாற்றில் காணக்கிடைப்பவைதானே. தாமிரபரணி ஆற்றங்கரையில் தலித்துகளையும், பெண்களையும் அடித்து நொறுக்கி, 'கிருஷ்ணசாமி சிவப்பா இருக்கியான்னு பார்க்க வந்தியாடி' என்று பள்ளரினப்பெண்களைக் குண்டாந்தடியால் வன்மையாய்த் தாக்கி, விக்னேஷ் என்னும் ஒன்றரை வயதுக் குழந்தை ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டபோது போலீஸ் 'செயல்படத்தானே' செய்தது? அப்போது போலிஸ் 'செயல்பட்டதை' ஏன் ஊடகங்களும் தமிழ்கூறு நல்லுலகமும் கேள்வி எழுப்பவில்லை? போலீஸ் இந்தச் சம்பவத்தில் மட்டும்தானா வேடிக்கை பார்த்தது? தமிழகம் முழுவதும் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் எவ்வளவு? இதுவரை எவ்வளவு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவற்றில் எவ்வளவு புகார்கள் விசாரிக்கப்பட்டு ஆதிக்கசாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? போலீசு மட்டுமல்ல, நீதிமன்றம், அரசு என எல்லாமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏன் பொதுப்புத்தி கண்டிக்கவில்லை?

சரி , ஆதிக்கசாதி 'மனச்சாட்சி'களின் கேள்விகளை விடுவோம். ஊடகங்களாலும் 'பொது' மக்களாலும் கேட்கப்படாத கேள்விகளுக்கு வருவோம்.

1. அடிபட்ட மாணவர்கள் அப்பாவிகளா?

2. சம்பவ இடத்திற்கு மீடியாக்கள் எப்படி வந்தன?

3. 'பத்து பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக ஒருவனைத் தாக்கும்' அளவுக்கு அவன் செய்த குற்றமென்ன?

1. அடிபட்ட மாணவர்களில் பிரதானமானவன் பாரதி கண்ணன் என்னும் மாணவன் கல்லூரியில் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களை நிகழ்த்தியும் வன்முறைச் செயல்களைத் தூண்டியும் வந்திருக்கிறான். இவன் மீது பாரீஸ் காவல் நிலையத்தில் ஆறு எப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்பு 'சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே அரிவாளோடு திரிந்த மாணவன் கைது' என்னும் பெட்டிச்செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின. அந்த இளைஞன் பாரதிகண்ணன்தான். தேவர் ஜெயந்திக்குப் போஸ்டர் அடித்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் பாலநாதன், ஜெகதீஸ் என்னும் இரண்டு தலித் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியது, தலித் பெண்களைத் தொடர்ச்சியாகச் சீண்டுவது, தலித் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஆகிய செயல்களைத் தொடர்ச்சியாகப் பாரதிகண்ணன் கும்பல் நிகழ்த்தியுள்ளது.

2. சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை.

3. சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலில் பெரும்பாலும் சென்னையைச் சேர்ந்த, மாணவர்கள் ஈடுபடுவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமத்து மாணவர்களே மோதல்களில் ஈடுபடுகின்றனர். ஆதிக்கச்சாதி மாணவர்கள் கிராமங்களில் தங்கள் சாதிக்கு இருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சட்டக்கல்லூரியிலும் கொண்டு வர முயல்கிறார்கள். ஆனால், கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்கள் சட்டக்கல்லூரியில் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் கிடைப்பதாலும் பல்வேறு தொடர்புகளும், ஆதரவுச் சக்திகளும் சென்னையில் கிடைப்பதாலும் துணிச்சலாக எதிர்வன்முறையில் ஈடுபடுகின்றனர். சட்டக்கல்லூரியில் ஒவ்வொரு சாதியும் தனித்தனியாகக் கலைவிழாக்கள் நடத்துவதுண்டு. தேவர் சாதி மாணவர்கள் நடத்தும் கலைவிழாக்கள், முளைப்பாரி எல்லாம் எடுத்து, ஒரு தேவர் ஜெயந்தி குருபூஜை விழா போலவே இருக்கும். அப்போது சாதியுணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களும் முன்வைக்கப்படும். 'சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி என்றால், மதுரையில் முத்துராமலிங்கத்(தேவர்)தின் பெயரில் சட்டக்கல்லூரி வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும். இந்த கோரிக்கைகள் இப்போது படிப்படியாக வளர்ந்து, இந்த மோதல் சம்பவத்தைப் பயன்படுத்தி, 'கல்லூரியிலிருந்து அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும், எஸ்.சி ஹாஸ்டல்கள் மூடப்பட வேண்டும்' என்கிற வரை வளர்ந்துள்ளன..

மாணவர்கள் சாதியரீதியாகப் பிரிவதும் மோதிக்கொள்வதும் வருந்தத்தக்கதுதான், கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் ஆதிக்கச்சாதி மாணவர்கள் தங்கள் சாதிய மனோபாவத்தைக் கைவிடாமல் இதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை. இப்போதும் கூட தாக்கப்பட்ட சித்திரைச் செல்வன் என்கிற தலித் மாணவரை எந்த மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பி.ஜே.பியின் திருநாவுக்கரசரைத் தவிர வேறு எந்த பெரிய அரசியல் தலைவர்களும் சென்று நலம் விசாரிக்கவில்லை (மய்யநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் உட்பட). சித்திரைச் செல்வன் கைதுசெய்யப்பட்டதைப் போலவே பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோரும் கைது செய்யப்படவேண்டும். ஆனால் தேவர் தரப்பிலிருந்து ஒரு மாணவரும் கைது செய்யப்படவில்லை. இத்தகைய தனிமைப்படுத்தல்கள் தலித் மாணவர்கள் மத்தியில் எதிர் வன்முறை மனோபாவத்தையும் , பொதுவான மாணவர்கள் மத்தியில் சாதியக் கசப்பையும் உருவாக்கவே செய்யும்.

சட்டக் கல்லூரி பிரச்சனை - சில விஷயங்கள்

சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டி வரும் வன்முறைச் சம்பவங்களைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் (போலவே சில வலைப்பதிவர்களும்). ஒரு சாரார் நடத்திய வன்முறையைப் பதிவு செய்யாமல் - அல்லது விமர்சிக்காமல் - இன்னொரு சாராரின் எதிர்வினையை மட்டும் தொடர்ந்து காட்டி வருவதன் பின்னுள்ள அரசியல் சிலருக்காவது புரிந்திருக்கும்.

சன் தொலைக்காட்சிக்கு ஒரு அரசியல், ஜெயா தொலைக்காட்சிக்கு இன்னொரு அரசியல். அவரவர்க்கான அரசியல் அவரவர்க்கு. பிர்த்தியூ போன்றவர்களின் துணையில்லாமலேயே தொலைக்காட்சி ஊடகங்களின் வன்முறை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படிக் காட்டப்படுவதனால் தொடர்ச்சியாக என்ன நடக்குமென எதிர்ப்பார்க்கப்பட்டதோ அவை நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் நிலைமை மோசமாகலாம் என்ற என்னுடைய ஆருடம் பலிக்காமல் போக வேண்டும்.

நேற்று முன் தினம் சில சுவரொட்டிகள் அக்கல்லூரியின் சுற்றுப்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன (அடிபட்டவர்களைச் சிங்கங்கள் என்றும் அடித்தவர்களை ஜாதிவெறியர்கள் என்றும், முக்கியமாக அம்பேத்கர் பெயரை ஒதுக்கி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன). நேற்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ராஜப்பா தாக்கப்பட்டிருக்கிறார். சில மாணவர்கள் இன்னொரு பிஎஸ்பி கவுன்சிலரான ஆர்ம்ஸ்டாராங்கைக் கைது செய்யவேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாநிலமெங்கும் கல்லூரிகளிலும் சில பள்ளிகளிலும் ஆர்ப்பாட்டம் கலவரம் என நடந்து கொண்டிருக்கின்றன. உசிலம்பட்டியிலும் அதன் அருகிலுள்ள ஊர்களிலும் சில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கல்லூரியின் பெயரிலுள்ள அம்பேத்கரை நீக்கப்படவேண்டுமென வேறு சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதைவிட மோசமான கோரிக்கையாக சட்டக்கல்லூரி விடுதியே மூடப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருப்பதாக அறிகிறேன்.

ஊடகங்களுக்கென்று எந்தத் தார்மீகக் கடமையும் கிடையாது போலிருக்கிறது. The New Indian Expressல் கோகுல் வண்ணன் (இவர் எழுதியதை ஏற்கனவே என்னுடைய இரு கவனக் குவிப்புகளில் குறிப்பிட்டுள்ளேன்) என்பவர் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களின் குரலைத் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார். வேறு யாராவது எழுதியிருந்தால் பின்னூட்டம் மூலமாகத் தெரிவிக்கவும்.

நான் பார்த்தவரையில் வினவும் ஓரளவிற்கு டிபிசிடியும் இதுகுறித்து மாறுபட்ட பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். பலர் இதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவே அணுகியிருக்கிறார்கள். இன்னும் சிலர் தாக்கியவர்களை மிருகங்கள், படிக்கவே லாயக்கில்லாதவர்கள் என்றெல்லாம் தீர்ப்பெழுதியிருக்கிறார்கள். ஒரு அனானி பின்னூட்டத்தில் குருகுலக் கல்வி முறையே சிறந்தது எனப் பரிந்துரைக்கிறார்!

எனக்கு அவ்வளவாக அரசியல் தெரியாதென்றபோதும் இச்சம்பவங்களின் பின்னுள்ள அரசியல் ஓரளிவிற்குப் புரிகிறது.

இந்நிலையில், இந்தப் பிரச்சனையின் ஊற்றுக் கண்களைக் குறித்து அங்கு களப்பணி செய்துள்ள வளர்மதியை விரிவாக எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இவர் இப்போது திரட்டிகளில் இல்லாததால் பரவலான கவனிப்பு பெறாமல் போகக்கூடும். பரவாயில்லை, நானோ அல்லது லக்கி லுக் போன்ற பரந்த வாசகர்களைப் பெற்ற வேறு நண்பர்களோ மறுபதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்ந்து ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவும் தலித்களுக்கு ஆதரவாகும் குரல் கொடுக்கும் சுகுணா திவாகரும் இது குறித்து எழுதவேண்டும். நேரம் கிடைத்தால் ரோசா வசந்தும் எழுத வேண்டும் என்பது என்னுடைய அசை. சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். ஆனாலும் இவர்கள் இதைச் செய்யவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நேற்று நடந்த பதிவர் சந்திப்பில் மழை காரணமாக இப்பிரச்சனை குறித்து விரிவாக உரையாட இயலவில்லை. அச்சந்திப்பு குறித்து வந்த சில பதிவுகளைப் படித்தேன். பேசப்பட்டவற்றை முழுமையாக வேறு யாராவது பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

மாற்று ஊடகம் என அறியப்பட்ட இணையத்திலாவது குறைந்தபட்சம் மாற்றுச் சிந்தனைகள் பதிவாகட்டுமே.

வித்தியாசமான பதிவர் சந்திப்பு

சாதாரணமாக வலைப்பதிவர் சந்திப்பென்பது நண்பர்களைச் சந்தித்துப் பேசும் ஓர் இடம். புதிய பதிவர்கள், வெளிநாட்டிலிருந்து வரும் பதிவர்கள் என அறிமுகப்படலமும் அளவளாவுதலும் நடக்கும். சந்திப்பு முடிந்தபின், டீ குடிக்கச் செல்பவர்கள் டீக்கடைக்கும், மதுஅருந்த விரும்புபவர்கள் மன்ஹாட்டனோ அல்லது டாஸ்மாக்கோ செல்வதும் வழக்கம். சுபம்.

இம்முறை பாரி அரசு வருகிறார். அதன்பொருட்டு ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே பாலபாரதி, அதிஷா பதிவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று லக்கி லுக் எழுதியிருக்கும் பதிவையும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று முன் தினம் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த - தொலைக்காட்சி ஊடகங்களால் திரும்பத் திரும்பக் காட்டப்பட்ட- சம்பவங்கள் பலரை உணர்ச்சிவசப் படுத்தியிருக்கிறது. இது எதிர்பார்க்கக்கூடியதே.

இந்தப் பிரச்சனையின் உள்விபரங்கள் தெரிந்தவர்கள் நாளைய சந்திப்பிற்கு வந்து பேச இருக்கிறார்கள். ரோசா வசந்த் லக்கி லுக் பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியது மாதிரி வெற்று மனிதாபிமானக் கூச்சலாக இல்லாமல் இச்சந்திப்பு சில புரிதல்களைக் கொடுக்கலாம். குறைந்த பட்சம் மாற்றுப் பார்வைகளை முன்வைக்குமென எதிர்பார்க்கிறேன்.

அதனால், வலைப்பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் அழைக்கின்றோம்.

இடம் : சென்னைக் கடற்கரை காந்தி சிலையின் பின்புறம்.
நேரம் : மாலை 5.30 மணிமுதல்
தேதி : 15.11.2008

பிகு :

(1) வழக்கமான விஷயங்களும் இருக்கும் :)

(2) பரவலாகத் தெரியவேண்டியதன் பொருட்டு தனிப்பதிவாக நானும் இதை இடுகிறேன்.

தெளிவு

அடிக்கடிக் கோபம் வரும்போது
அறைய யார்கிடைப்பார் எனக்கு
இன்றும் அப்படித்தான்
தேடிக்கொண்டிருந்தேன் வெகுநேரமாய்
மயங்கும் மாலைவேளையில்
தொடையில் உட்கார்ந்தது ஒரு கொசு
ஓங்கி அறைந்தேன்
கொசு இறந்தது நசுங்கிப் போய்
தொடையில் இருந்தது
என் ரத்தமா கொசுவின் ரத்தமா
இன்னொரு கொசு அகப்படாமலா போய்விடும்

(கவிதா சரன் அக்டோபர் 1992ல் வெளியானது)

சாரு நிவேதிதாவும் ஆபாசமும்

ரசம் சாதமும் அதற்குத் தொட்டுக் கொள்ள வழவழா வெண்டைக்காய் பொரியலும் சாப்பிடுபவர்களுக்கு, மிளகாய்க் காரமான (அதுவும் சாராயத்திற்குக் கடித்துக் கொள்ளும் மிளகாய்) சாரு நிவேதிதாவின் எழுத்துகள் ஆபாசமாய்த் தெரிவதில் வியப்பில்லை.

55 வயதானவன் காதலிக்கலாமா, சின்னப் பெண்களைக் காதலிக்கலாமா, திருமணமானவன் பிறபெண்களைக் காதலிக்கலாமா... இதுகூடப் பரவாயில்லை, அவற்றை அப்படியே எழுதலாமா... (சிலருக்கு அப்படிச் செய்வதுகூடப் பிரச்சனையில்லை, ஆனால் எழுதக் கூடாதாம்!). I would like to eat your pussy என்ற வரி ஆபாசமானதாம். நல்லது; அவர்களது வாய் உணவருந்த மட்டுமே பயன்படுவதாயிருக்கும் :)

தன்மேல் வீசப்படும் வன்மத்தைக்கூட இலக்கியமாக்கக்கூடிய சாமர்த்தியம் வெகு சிலருக்கே உண்டு. இவருக்கு பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம், அதனால்தான் இப்படியெல்லாம் எழுதித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார் எனச் சிலர் 'அபிப்ராயப்பட்டதற்கு', சாரு ஒரு கதையில் சொன்னது : நான் ஆண்மையுள்ளவனா எனச் சோதிக்க, என் கதைகளைப் படித்தால் போதாது; அதற்கு உங்கள் மனைவிகளை ஓரு இரவு என்னுடன் அனுப்ப வேண்டும்!

கலை உன்னதம் எனச் சிலர் கும்மியடித்தபோது சாரு ஆய்வு பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : Art is Fart. (இத்துடன் ஆஸ்கார் வைல்டின் பிரசித்திபெற்ற வாசகமான Life is imitating Artஐ இணைத்துப் பார்க்கலாம்). சிலர் அமைப்பியல் என்ற பெயரில் புரியாத ஆட்டம் போடுவதாக விமர்சித்து சாரு கவிதா சரணில் எழுதிய கட்டுரை ‘பூம் பூம் ஷக்கலக்க அமைப்பியல்வாதம்'. ஷங்கன்னா என்ற புனைபெயரில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புக் கட்டுரை எழுதிய சாரு வைத்துக் கொண்ட புனைபெயர் ஃபக்கன்னா. இப்படிக் கலை, அமைப்பியல் எனச் சகலத்தையும் பகடி செய்யும் எழுத்து சாருவினுடையது.

ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை சாருவும் அவரது சில நண்பர்களும் ஒருங்கிணைத்தார்கள். அதில் ஒரு காட்சி : இரண்டு ஆண்கள் பத்தடி இடைவெளியில் ஓரினப் புணர்ச்சி செய்வதுபோல் மைமாக நடித்தார்கள். பின்னணியில் சுப்ரபாதம். அந்நாடகக் குழுவில் பலர் இருந்தபோதும் சாருவின்மீது குறிவைத்து உடல்ரீதியான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. (பின்னணியில் சுப்ரபாதம் இசைக்கப்பட்டதையே பெரிதாக அப்போது தினமலரிலிருந்து இடது சாரிப் பத்திரிகைகள் வரை எழுதியது இன்னொரு நகைச்சுவை). வேறுமாதிரியான வன்மம் சாருவின்மேல் இணையப் பக்கங்களில் விசிறியடிக்கப்படுகின்றது.

ஒன்றரையணா கருத்துகளை உதிர்ப்பவர்கள் குறைந்த பட்சம் சாரு இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்பதையாவது தெரிந்துகொண்டு கருத்துகளை உதிர்க்கலாம். ஒன்றுமே செய்யாமல் இணையத்தில் கொஞ்சம் மேய்ந்துவிட்டு கண்டபடி திட்டி / மிரட்டி எழுதுவது அயோக்கியத்தனம்!

அ.மார்க்ஸ்தான் சொன்னாரென்று நினைக்கிறேன் : இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கதை சொல்லி சாரு நிவேதிதா.

(தற்போது இடுகைகள் நீக்கப்பட்டுவிட்ட பதிவொன்றையும், ஒரு இணைய விவாதக் களத்தில் வைக்கப்பட்ட சில வாதங்களையும் படித்ததும் எழுதியது. இணையத்தில் பல இடங்களில் சாருவின் மீது துவேஷம் கக்கும் பதிவுகளைப் பார்க்கிறேன். அதற்கான சிறு எதிர்வினையே இது).

இரு கவனக் குவிப்புகள்

சர்வதேச கச்சா எண்ணை விலை குறைப்பால் ATF எனப்படும் விமான எரிபொருள் விலையைக் குறைத்திருக்கிறார்கள். நல்லது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்துநாட்களுக்கு முன் எல்லா மாநில முதலமைச்சர்களையும் விமான எரிபொருளுக்கான விற்பனைவரியைக் குறைக்கச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார் (நம் தமிழகம் உட்பட). சில மாநிலங்கள் குறைத்தும் விட்டன.

இதற்கிடையில் போன வாரம் ATFற்கு சுங்க வரியான 5% லிருந்து முழு விலக்கு அளித்துள்ளார்கள். விமான நிறுவனங்களைக் காப்பாற்றாவாம். கோயல்களின் மல்லையாக்களின் நலன்தான் அரசின் கண்களுக்குத் தெரிகிறதுபோலும்.

போனமுறை பெட்ரோல் டீசல் விலை ஏற்றியபோது இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது என்றாலும் உள்ளூரில் விலையைக் குறைக்கவில்லை என்பது ஒருபுறம். ஜெனரேட்டர்களுக்கு உபயோகிக்கப்படும் டீசல் விலை 50 ரூபாய் என்பது இன்னொரு புறம். இதெல்லாம் இருக்கட்டும்.

கச்சா எண்ணை விலை எவ்வளவு உயர்ந்தபோதும், எவ்வளவுதான் கேட்டும் சாமனியர்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசலுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு தரப்படவே இல்லை. ஆனால் விலை கணிசமாகக்குறைந்த பிறகும், விமான எரிபொருளுக்குத் தந்திருக்கிறார்கள்.

அடப் பாவிகளா!

***

உத்தபுரம் அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தலித் வாலிபர் மரணம். சில நாட்களுக்கு முன்பு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. ஊர்மக்கள் அறவழியிலேயே போராடியதாகத் தெரிவித்துள்ளார்கள்.

சுரேஷ் அப்போதுதான் வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார் - ஊரில் என்ன பிரச்சனை என்று பார்க்க. துப்பாக்கிக் குண்டு கழுத்தில் பாய்ந்திருக்கிறது.

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் கோகுல் வண்ணன் எழுதும்போது, ‘தலித்களுக்கும் மற்ற சாதியினருக்கும் பிரச்சனை வந்தால், தாக்கப்படுவது எப்போதும் தலித்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு உதாரணம்' என்கிறார்.

இரை மற்றும் சில

இரை

அசையாதிருக்கும் இரவின் வெளிச்சத்தில்
ஊர்ந்துகொண்டிருக்கிறது
ஓலைக்கூரையின் நடுவில்
இரை தேடும் பாம்பு
இப்புறம் திரும்புமா
அப்புறம் செல்லுமா
என்பதில் இருக்கிறது
வாழ்வு
பிரார்த்தனையின் இரைச்சலில்
திரும்பிய பாம்பு
விழுங்கிச் செல்லும்

பெரியவன் ஆவது

தோளில் அமர்ந்து பின் பறக்கும்
புறா இறக்கைகளின் கதகதப்பு
இருந்துகொண்டேயிருக்கிறது
இருக்கிறாற் போல் இருந்து
திடீரென்று முட்டும் கன்றுக்குட்டியின் மோதல்
இன்னமும் இதமாய் வலிக்கிறது
உணவுக்காகத் தாவிய நாய்
மார்பில் கால் வைக்க
பயந்து தடுமாறி விழுந்த
சிறு வயதுக் காயத் தழும்பு
முதுகில் இருக்கிறதா தெரியவில்லை
டி.வி. பார்க்க அமரும்போதெல்லாம்
மடியில் வந்து படுத்துக்கொள்ளும் பூனை
எங்கே போயிற்றோ
எல்லாம் காணாமல் போக
நான் பெரியவனானேன்

அம்மாவும் அப்பாவும் காணாமல் போக்கியவை

காணாமல் போக்கியவை பற்றிய
நீண்ட பட்டியலே அப்பாவிடமிருந்தது
சின்ன வயதில் அட்லஸ் சைக்கிள்
அக்காவை விட்டு வரப்போனபோது
எடுத்துச் சென்ற ஃபாரின் குடை
கோயிலில் எப்போதோ செருப்பு
வேலையிலிருந்து திரும்பும்போது
இருநூறு ரூபாய் பணம்
என ஆரம்பித்து சென்றுகொண்டேயிருந்தது
அம்மாவும் சிலவற்றைத் தொலைத்திருந்தாள்
வெளித் திண்ணையில் மறந்துவைத்த
டிரான்சிஸ்டர்
ஒரு காதுத் தோடு
மற்றும்
பதினேழு வயது மகன்

(இந்த வார ஆனந்த விகடன் இதழில் - 5.11.2008 தேதியிட்டது - வெளியானவை)

இன்று மற்றுமொரு நாளே

காலையில் எழுந்து
அவசரமாய்க் குளித்து
டிபன் காஃபி
கசப்பு நாக்கிலிருக்க
கூடவே ஒரு சிகரெட்
அலுவலகம்
with reference to your letter
தட தட தட்
மதிய உணவிற்குத் தயிர்சாதம்
தூக்கக் கலக்கத்துடன் வேலைகள்
சீக்கிரம் கிளம்பணும்
ஐயையோ லேட்டாயிருச்சே
என்ன ரஷ், என்ன ரஷ்
கைகால் கழுவி
சாப்பிட்டுப் படுத்து,
நாளையேனும்...

(கவிதா சரண் ஜூன் 1992ல் வெளியானது)

சில கேள்விகள், சில பதில்கள்

முதலில் : சினிமா பற்றிய கள ஆய்விற்காக சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இணையத்தைப் பாவிப்பவர்கள், அதிலும் தமிழில் எழுதுபவர்கள் மிகக்குறைவே - மிகச் சிறிய segment. சரியாய் வருமா என யோசித்துப் பார்க்கலாம். மற்றபடி இக்கேள்விகளை எழுப்பி விடைதேடுவது சுவாரசியமான விளையாட்டுதான்.

நான் நிறைய சினிமா பார்ப்பவன் இல்லை. தொலைக்காட்சி சினிமாக்களைக் கூட எப்போதாவதுதான் பார்ப்பேன் (25 வயதுவரை வாரம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன், பிறகு என்ன காரணத்தினாலோ குறைந்துவிட்டது). அதனாலேயே நர்சிம் கூப்பிட்டபோது வேறு ஒருவரைக் கூப்பிடச் சொல்லியிருந்தேன். குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன் என்பதால் இப்போது இப்பதிவு. கூப்பிட்ட நர்சிம் & வால்பையனுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஐந்து அல்லது ஆறு வயதிலிருந்து. அம்பத்தூரில் இருக்கும் ரங்கா டூரிங் கொட்டாயில் ஒரு எம்ஜிஆர் படம். முன்-வரிசையில் மண் தரையும் பின்னால் கையில்லா மடக்கு நாற்காலிகளும் கொண்ட கீத்துக் கொட்டாய் திரையரங்கம். ஒரே சத்தமாக இருந்த நினைவு. நடுநடுவில் விற்றுக் கொண்டிருந்த திண்பண்டங்களைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த ஞாபகம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சிவாஜி. அதற்குமுன் பாபா. சாதாரணமாக ரஜினி படங்களைத் திரையரங்கிலோ அல்லது வேறு மார்க்கத்திலோ பார்த்துவிடுவேன். இன்னும் குசேலன் பார்க்கவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சுப்ரமணியபுரம், டீவீடி, வீட்டில். குடும்பம் / காதலி / நண்பனின் துரோகம்தான் பிரதானமாய்த் தெரிந்தது. சிறுபொன்மணி அசையும் பாடல் பழைய ஞாபகங்களைக் கிளறியது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ரத்தக் கண்ணீர்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினியின் அ-அரசியல் பிரவேசம் 1995ல். லும்பன்களின் அரசியல் பற்றி ஜெயமோகன் தினமணியில் எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறது. லும்பன்கள்தான் வந்துட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றியது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எதுவும் தாக்கியதில்லை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது. நிழல் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தேன். கனவு இதழ்களில் வரும் கட்டுரைகளையும். மற்றபடி அங்கொன்றும் இங்கொன்றுமாக சாரு, யமுனா எழுதும் கட்டுரைகளே அதிகம் வாசிப்பவை.

சினிமா பற்றிய புனைவெழுத்துகளை நிறைய வாசித்திருக்கிறேன். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, அசோகமித்திரனின் நாவலொன்று, பல சிறுகதைகள்.

7. தமிழ்ச்சினிமா இசை?

தினமும் தொலைக்காட்சியில் காலையில் சிறிது நேரம் பார்த்துக் கேட்பதுதான் (காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. அப்ப படிப்பா? டாய்லட்டில் செய்தித்தாள்கள்தான்!). இளையராஜா, ஏ ஆர் ரகுமான் பாடல்கள் பிடிக்கும். 18 - 20 வயதில் சினிமா மெட்டுகளுக்குப் பாட்டெழுதிப் பார்த்திருக்கிறேன். அதற்கும் முன்னர், பள்ளிப் படிப்பின்போது சினிமா பாடல் வார்த்தைகளைப் பாலுறுப்பு வார்த்தைகள், ‘கெட்ட' வார்த்தைகள் கொண்டு பதிலீடு செய்து பாடுவது ஒரு fun.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சத்யஜித்ரேயின் சில படங்கள் தொலைக்காட்சியில் இரவுநேரத்தில் தொடர்ந்து காட்டியபோது பார்த்திருக்கிறேன். உலக சினிமா என்றால் புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜெட் லீ, குங்ஃபூ ஆஃப் செவன் ஸ்டெப்ஸ், 36th சேம்பர் ஆஃப் ஷாவலின் மாதிரியான படங்களே அதிகம் பார்த்தது. கோடார்டின் here and elsewhere அப்புறம் அகிரா குரசாவாவின் சில படங்களும் - அவரின் பல படங்களை ஒரு வார காலத்திற்கு chennai film society மூலமாக Russian Cultural Centre-ல் திரையிட்டபோது - ஆண்டு 1994).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

1995ல் ஒரு படத்திற்கு வசனம் எழுத உதவினேன்; பெரிதாக இல்லை. கொஞ்சம் தான். அதன் வசன கர்த்தா - தயாரிப்பாளர் நண்பர் என்பதால் இதைச் செய்தேன். பிடித்திருந்ததாகத்தான் நினைவு. படம் வெளியாகி தோல்வியடைந்தது. பிறகு வேறெதுவும் இல்லை. மீண்டும் செய்யும் எண்ணமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தெரியலீங்களே :)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்குப் பெரிதாக பாதிப்பிருக்காது.

சிலர் புணர்ச்சிக்கு புதிது புதிதான மன பிம்பங்கள் கிடைக்காமல் திண்டாடலாம். ஊடகங்கள் பரபரப்பிற்கு வேறு ஏதாவது தேட வேண்டியிருக்கும். சினிமாவை நம்பி இயங்குபவர்கள் திண்டாடிப்போவர். இந்தி சினிமா தமிழகத்தை ஆட்கொள்ளும் அபாயம் ஏற்படலாம்.

ஐந்து பேரைக் கூப்பிடணுமா.. சரி...

1. டிபிசிடி
2. கென்
3. டி ஜே தமிழன்
4. சுகுணா திவாகர்
5. மோகன் கந்தசாமி

பார்வைப் பிழை

தரையில் படுத்து
வெளிச்சம் தழுவிய
சுவரைப் பார்த்தேன்
கையைக் குவித்துக் கொண்டு -
அதன் ஊடே
சிறிதாய்ச் சுவர்
மட்டுமல்லாது
சின்னச் சின்ன மேடுபள்ளம்
சுவரெங்கும்
கையை எடுத்துவிட்டு
வழக்கம்போல் சொல்லிக் கொண்டேன்
பார்வைக்கு வெளியேயும்
காட்சிகள் உண்டு

(கவிதா சரண் ஜூன் 1992ல் வெளியானது)

சில பதிவுகள் சில விமர்சனங்கள்

தமிழ் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் புனைவு / பத்தி எழுத்துகளில் என்னைக் கவர்ந்த சிலரது எழுத்துகளைப் பற்றிய விமர்சனம் இது :

பரிசல்காரன் (http://www.parisalkaaran.com/)

எல்லாவற்றையும் சுவாரசிய எழுத்தாக்கும் திறமை இவருக்கிருக்கிறது. அது சினிமா பற்றியதானாலும் சரி, சிகரெட் பற்றியானாலும் சரி. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலே ஒருமாதிரி சுவாரசிய நடை வந்துவிடும் என்பது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. பலருக்கு அதுவும் வாய்க்கவில்லை எனும்போது இதன் முக்கியத்துவம் புரியும்.

தொடர்ந்த பத்தி எழுத்துகளால் புனைவு எழுத்து பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது. இதைச் சிலர் மறுத்தாலும் என்னால் பல உதாரணங்களைத் தரமுடியும். இன்னொன்று, பத்தி எழுத்துகள் எவ்வளவுதான் சுவாரசியமாக இருந்தாலும், நினைவில் நிற்பதில்லை. முதல்படியாக, பத்தி எழுத்துகளைக் கட்டுரைகளாக உயர்த்தமுடியுமா எனப் பார்க்கலாம். இதைப் பரிசலும் யோசித்துப் பார்க்கலாம்.

ஸ்ரீதர் நாராயணன் (http://www.sridharblogs.com/)

இவர் சமீபமாக எழுதத் துவங்கியிருக்கிறார். அறிவியல்-புனைகதைகளை விறுவிறுபாக எழுதுகிறார். புனைவெழுத்தில் உத்திகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அதை அனாயசமாக கையாள்கிறார். இவரது பின்னூட்டங்களில் / பத்திகளில் வெளிப்படும் pro capitalism leanings எனக்கு உவப்பில்லாதது :(

நல்ல கதைமொழி இவருக்கிருக்கிறது. இன்னும் ஆழமான விஷயங்களை எழுதினால் மகிழ்வேன். இவர் நிறைய நல்ல சினிமா பார்ப்பவர்; திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை எழுதினால் எப்படியிருக்கும் என யோசித்துப் பார்ப்பது interesting!

நர்சிம் (http://www.narsim.in/)

வெகுஜன நடையில் பழந்தமிழ்க் கவிதைகளை இவர் கொடுக்கும் விதம் அழகு. அதற்குநான் தொடர் வாசகன். எப்படியாவது அவற்றைத் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.

சரளமான நடையில் வெகுஜனக் கதைகள் எழுதுகிறார். ஆனால் முடிவுகளில் முத்தாய்ப்பு வைப்பது போல் எழுதுவது கொஞ்சம் அபசுவரமாக இருக்கிறது. கதை வடிவத்தில் இவர் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல வெகுஜனக் கதைகளை இவரால் தரஇயலும்!

அனுஜன்யா (http://www.anujanya.blogspot.com/)

சமீபத்திய வலைப்பதிவு கவிதைகளில் இவருடையது எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. விருட்சம், கீற்று, உயிரோசை என கலந்துகட்டி இவரது கவிதைகள் வருகின்றன. தர்க்க-ரீதியான சிந்தனைகள் தேவைதான்; ஆனால் அவற்றைக் கவிதை ஆக்கத்தின்போது தவிர்த்துவிடுவது நலம்.

போலவே இவர் கவிதைகளுக்குப் பின்னூட்டங்களில் விளக்கம் தருவதையும் தவிர்க்கலாம். அவை அக்கவிதைகளுக்கு ஒற்றைப் பரிமாணத்தன்மையைத் தந்துவிடுகின்றன. கோடிட்டுக் காட்டலாம், ஆனால் நோட்ஸ் வேண்டாமே... இவர் நிறைய வாசிக்கவும் செய்கிறார் எனப் புரிகிறது. மகிழ்ச்சி.

யாரையும் அளவுக்கதிமாகப் பாராட்ட வேண்டுமென்பது என் நோக்கமல்ல. என்னளவில் நம்பிக்கையளிக்கும் வலைப்பதிவு எழுத்துகளை அறிமுகம் செய்வதும், அவர்களை இன்னமும் தீவிரமாக எழுதத் தூண்டுவதுமே என் விருப்பம்.

தனிப்பட்ட அளவில், பரிசல், நர்சிம் போன்றவர்களின் எழுத்து முறைமையை நான் நிராகரிப்பவனே. ஆனால், அவர்களிடம் தென்படும் தெறிப்பும் உழைப்பும் என்னை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. அதுவே பெரிய விஷயம்தானே!

லஞ்ச் எடுத்துவரவில்லை, மதியம் உணவிற்கு பிரியாணி சாப்பிடலாமா, சாயங்காலம் டீ குடிக்கலாமா என மூன்று பதிவுகளாகப் போட்டு துன்புறுத்துகிறார்கள் சிலர். டிஜிட்டல் டைரியாம்! கட்டற்ற சுதந்திரத்தில் ஒன்றும் செய்ய இயலாது!

கென் (http://www.thiruvilaiyattam.com/)

இதில் பெருந்தலைகளைப் பற்றி எழுதவேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனாலும் கென்னைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவரைச் சாரு நிவேதிதாவின் மூன்றாவது வாரிசாக வலையுலகம் அறியும்! மிகச் சிறு வயதில் (28 வயசுதானாம்) எப்படி இவ்வளவு அற்புதமாக எழுதுகிறார் என என்னை மலைக்கச் செய்யும் எழுத்து இவருடையது. இவரைப் புனைவிலக்கியத்திற்கு இழுத்துவந்த தல பாலபாரதிக்கு நன்றி.

இவரது ராபித்தும் பள்ளிவாசல் பாங்குச் சத்தமும் மற்றும் பல புனைவுகள் என்னை மிகவும் கவர்ந்தன. தொடர்ந்து கவனித்து வாசிக்கப்பட வேண்டியவர் கென்.

காமக் கதைகள் 45 (24)

வெற்றிக்குப் பார்த்திருந்த பெண்ணுடன் அதீதனுக்கு தொடர்பிருந்தது, அந்தப் பெண் பெயர் முக்கியமில்லை, அவள் வேறொருவனைக் காதலிப்பது தெரிந்தும் வெற்றி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான், அதில் அவளுக்கு வெற்றிமேல் தீராத கோபம், அதீதன் தான் அந்தக் காதலன் என்பது வெற்றிக்குத் தெரியாது,

அலுவலகத்தில் உடன்வேலை செய்தவனுக்கு பயிற்சிக்கென மலேஷியா செல்ல வேண்டியிருந்தது. அதீதனும் ஒட்டிக் கொண்டான். அங்கு சீன மற்றும் தாய்லாந்து அழகிகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான். ஹோட்டல் 27வது மாடி நீச்சல் குளத்தைச் சுற்றி பொன்நிற மங்கைகள் தொடை தெரியும் மிடியுடன் அசைந்தசைந்து நடந்து கொண்டிருந்தனர். அதீதனுக்கு மேலே விழுந்து புரள வேண்டும் போலிருந்தது.

திருமணமானபின்னும் அதீதனால் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவருவதை நிறுத்தவில்லை, மனதும் உறுத்திக் கொண்டேயிருந்தது, வெற்றி ஊரிலில்லாத போதெல்லாம் தகவல் அனுப்புவாள், வீட்டிற்குச் சென்றதும் அவள் முத்தமிடும்போது அவனுக்கு வெற்றியின் முகம் நினைவில் ஆடியது,

மலேஷிய ஹோட்டல் ஸ்பெஷல் மசாஜில் இரண்டு வகையுண்டு:

(1) நீங்கள் குப்புற இரண்டு கால்களையும் இணைத்தபடி படுத்திருக்க மசாஜ் செய்யும் பெண் உங்கள் கழுத்திலிருந்து கால்கள் வரை பிடித்துவிடுவது. இதில் முக்கியமானது அந்தப் பெண் நிர்வாணமாயிருப்பாள் என்பதும் தன்னுடைய பின்புறத்தால் மசாஜைச் செய்வாள் என்பதும். உங்கள் பிருஷ்ட பாகத்தில் அவளுடைய பிருஷ்ட பாகம் தொட்டு, பிறகு பிரிவது தனிசுகம்! பூப்பந்து கொண்டு அழுத்தித் தடவுவது போல இருக்கும் என்பது அதீதனின் வார்த்தைகள்.

(2) உங்கள் முதுகில் தலையணையை வைத்து அதன்மேல் அவள் சாய்ந்து உங்களை இறுக்கி அணைத்து மசாஜ் செய்வது. நெட்டி முறியும் சத்தங்கள் கேட்கவே போதையாயிருக்கும். தலையணை இல்லாமல் செய்யக்கூடாதா என ஏங்கவைக்குமிது.

நண்பனை நச்சரிக்கத் துவங்கினான் ஸ்பெஷல் மசாஜிற்கு.

வெற்றியைப் பழிவாங்கவே அதீதனுடன் அவள் உறவுவைத்திருப்பதாய்ச் சமாதானம் செய்வாள், உனக்கு அதில் உடன்பாடில்லை என்றால் வேண்டாம், நான் வேணுமா வேணாமா, கையில்லா நைட்டியைப் பார்த்தபடி மென்று முழுங்குவான்,

இரண்டு மசாஜையும் செய்துகொள்ளும்போது அவனது மனம் அவளுடனான சம்போகத்திலேயே கழிந்தது. சின்னச் சின்ன அங்கங்களுடன் தாய்லாந்துக்காரி பொம்மை போல் இருந்தாள். அவளிடம் எப்படியாவது கேட்டுவிடவேண்டுமென நினைத்துக் கொண்டேயிருந்தான்.

இலவச சுகத்தை விடவும் முடியவில்லை, நண்பனுக்குத் துரோகம் செய்வதாய்த் திட்டும் மனதையும் ஒன்றும் செய்யமுடியவில்லை,

மசாஜ் முடித்துவிட்டு தயங்கியபடி தாய்லாந்துக்காரி போய்விட்டாள்.

தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்களது உறவு,

புகைத்தடைச் சட்டம் பற்றி இன்னும் சில விஷயங்கள்

போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்

மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்களைச் சிலர் எப்படியெல்லாம் அணுகுகிறார்கள் என்பது போன பதிவை எழுதியதும்தான் தெரிந்தது. உண்மையில், போலீஸ் / அரசுகளைவிட சில சக பதிவாளர்கள் வன்முறையாளர்கள் என்பது புரிகிறது - இப்படி எழுதுவதற்காகவும் கொதித்தெழுவார்கள் என்பதும்..

ஒருவர் (இவர் வக்கீல் என நம்புகிறேன்), போலிஸுக்குப் பயந்தால் வீட்டில் (அதுவும் கதவைச் சாத்திக் கொண்டு!) சிகரெட் பிடியுங்கள் என்கிறார். (பேருந்துகளில் ஏன் இடிக்கறீங்க என்றால், இடிக்கக்கூடாதுன்னா ஆட்டோல போகவேண்டியதுதானே எனச் சில இடிமன்னன்கள் சொல்வது ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது!). இன்னொருவர், உன் மகன் முகத்தில் நான் புகையை ஊதட்டுமா எனப் பின்னூட்டுகிறார். இன்னொருவர், வேண்டுமானால் உங்கள் மகன் முகத்தில் புகையை ஊதுங்கள் (என் மகன் முகத்தில் புகையை ஊதுவது என் சுதந்திரமாம்!), அவன் கஷ்டப்படட்டும்; பள்ளிகளருகில் புகைபிடித்தால் என் மகனுக்குத் தீங்கு நேரும்; அதனால் வேண்டாம் என்கிறார். வேறொருவர் அமெரிக்காவில் சுற்றுச் சூழலை மக்கள் மாசுபடுத்துவதில்லை என்கிறார். இன்னுமொருவர், தற்கொலை, கொலை, விஷம், தூக்கு என உதாரணங்கள் தருகிறார். இன்னும் சிலர் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமென்கிறார்கள்!!

கொஞ்சம் விட்டால், என்னைக் கழுவிலேற்றிவிடுவார்கள் போல!

மக்களே, நான் சொல்வதெல்லாம் இதுதான் :

புகையிலைக்கு முற்றாகத் தடையென்றால், முடிந்தால், நடத்திக் கொள்ளுங்கள். அது இந்தியா என்றில்லை, உலகில் எங்குமே நடக்க முடியதாது. ஆனால் இப்படி மதுக்கூடங்களில், பேருந்து நிலையங்களில் தடை, விமான நிலையங்களில், நட்சத்திர விடுதிகளில் அனுமதி எனக் காமெடி செய்யாதீர்கள்.

சிலர் லாஜிக்கலாக மடக்குகிறார்கள். எலிவேட்டர்கள் பேருந்து நிலையங்களில் இருக்கிறதா என்று. ஐயா, பேருந்து நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் முதலில் புகைக்க அனுமதியிருந்தது, இப்போது விமான நிலையங்களில் மட்டும் இருக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி.

யோசித்துப் பார்த்தால், எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒருவித போதை தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிலருக்குக் குடி, சிலருக்கு சிகரெட், சிலருக்குக் குடும்பம், சிலருக்குப் படிப்பு, சிலருக்கு வேலை.

புகைக்காதவர்கள், குடிக்காதவர்கள் ஏதோ ஒரு மனஇயல்பில் தங்களை மேல்ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு அறிவுரை வழங்குகிறார்கள் :( இன்னும் சிலர் அரிய கண்டுபிடுப்புகளைச் சொல்கிறார்கள் : புகைப் பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானதாம்!!

புகைபிடிப்பவர்கள் எல்லாரும் ஏதோ அடுத்தவர்கள் முகத்தில் புகையை ஊதுவதற்காகவே காத்துக் கொண்டிருப்பவர்கள் போன்ற தோற்றம் வருகிறது பின்னூட்டங்களைப் பார்த்தால். நிஜத்தில் அப்படியில்லை.. புகைப்பிடிப்பவர்கள் கொலைகாரர்கள் அல்ல.

அடிப்படையில், நாம்செய்யும் பலசெயல்கள் அடுத்தவர்களைப் பாதிப்பவையே. குறைந்தபட்ச நேர்மை / அறம் என்ற அளவிலேயே இந்தப் பிரச்சனையை அணுக முடியும் என நினைக்கிறேன்.

இன்னும் சிலர் நிஜமாகவே இச்சட்டம் புகைப்பழக்கத்தைக் குறைக்கும் என நம்புகிறார்கள். நல்லது. ஆனால் பாருங்கள், நிதர்சனம் வேறுமாதிரியாக இருக்கிறது. பான்பராக் தடைச்சட்டத்தினால் அதன் உபயோகம் குறையவில்லை. காவல்துறை ஊழியர்களிடம், கடைக்காரர்கள், அவர்களிடம் வாங்கிய பொருளுக்குக் காசுகேட்டால் மிரட்டப் படுகிறார்கள் வழக்கு வருமென்று. உடனே அவன் ஏன் தடைசெய்யப்பட்ட பொருளை விற்கிறான், அதனால்தான் இலவசமாகத் தரவேண்டி இருக்கிறது எனச் சொல்லாதீர்கள். சட்டங்களை மதித்து பேணி ஒழுகுவதையே ஆயுட்கால லட்சியமாக வைத்திருப்பதாக நம்பும் சிலர் அப்படியும் சொல்லலாம்.

எனக்கு நிச்சயமாகத் தெரியும் இச்சட்டத்தை அமுல்படுத்த முடியாதென்று. they want to leave a legacy. அவ்வளவே.. ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் மற்றும் வரப்போகும் அபாயகரமான விஷயங்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன.

சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குள்ளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.

புகைப்பிடிப்பது பற்றிய சட்டமும் எதேச்சதிகாரமும்

காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்
- தேவதச்சன்

ஆனால் இதற்கு நேர்மாறாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன இங்கு. சட்டங்களின் வாயிலாக பூதங்கள் ஏவப்படுகின்றன. பிரச்சனைகள் மறக்கடிக்கப்படுகின்றன.

முதலில், கேட்கப்படவேண்டிய கேள்வி, இப்போது இச்சட்டத்திற்குத் தேவையென்ன? ரயில்களில் & ரயில்நிலையங்களில், பேருந்துகளில், விமானங்களில் புகைபிடிக்க முதலிலிருந்தே தடை இருக்கின்றது (ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பலவிஷயங்கள் பரவலாக நடந்து கொண்டிருப்பது நாமறிந்ததே). இப்போது புதிதாக தனியார் அலுவலகங்களையும் வேறுசில இடங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் பிரதானமாக இரண்டைச் சொல்கிறார்கள் :

(1) சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது
(2) புகைபிடிப்பவர்களின் அருகிலிருப்பவர்களுக்கும் அது தீங்கிழைக்கும்

என் உடல்நலத்தைப் பற்றி என்னைவிட அரசு அதிகக் கவலைப்படவேண்டாம். நன்றாக இருப்பதோ அல்லது நாசமாகப் போவதோ நானே பார்த்துக் கொள்கிறேன். முடிந்தால் இதைவிட அதிகத் தீமையான பலவிஷயங்களை முதலில் சரிசெய்யட்டும்.

இந்த passive smoking பற்றியே எல்லாரும் பேசுகிறார்கள். என்னவோ புகைப்பிடிப்பவர்கள் எல்லாம் கொலைகாரர்களைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முனைகிறார்கள். இங்கு இதுவரை எத்தனை பேர் பேஸிவ் ஸ்மோகிங்கால் கேன்சர் வந்திருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா.? கெடுதல் இல்லாமலிருக்காது, ஆனால் அது மிகக்குறைவான விகிதமே. அதைப்போய் ஏன் ஊதிப் பெரிதாக்கவேண்டும்?

விமான நிலையங்களில் புகைபிடிக்கவென தனியறை இருக்கிறது. ஆனால் பேருந்து நிலையங்களில் இல்லை. ஐயா, வண்டிகள் எல்லாம் தாழ்தள சொகுசுப் பேருந்துகளாக வந்துகொண்டிருக்கின்றன. மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழலில், ஒருவன் பீடிகூடப் பிடிக்கக்கூடாதா?

அமெரிக்கா வாழ் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், அங்கு பேருந்து நிலையங்களில் புகைக்க அனுமதியுண்டாம். பலநாடுகளிலும் இல்லாத ஒன்றை இங்கு திணிக்க முயல்கிறார்கள்.

சரி, அப்படியே பிடித்துத்தான் ஆகக்கூடாதெனில், விமான நிலையங்கள் போல பேருந்து நிலையங்களிலும் தனிஅறை புகைக்கவெனக் கொடுத்துவிட்டு இச்சட்டதை அமுல்படுத்தலாம்.

இந்தியா ஒரு எதேச்சதிகார நாடாக மாறிக்கொண்டிருக்கிறதோ! அவர்கள் சிகரெட் பிடி என்றால் பிடிக்கவேண்டும், அபராதம் கட்டு என்றால் கட்டவேண்டும்.

ஒரு நண்பர் பேசும்போது சொன்னது : சிகரெட் / பீடி என்பது முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும். பெட்ரோல் டீசல் போன்றவற்றோடு ஒப்பிட்டால் இதில் தீமைக்குறைவாக இருக்கவே (ஒப்பீட்டளவில்) வாய்ப்புண்டு என்றார்.

இன்னொன்று, இதை வெறும் உடல்நலம் சம்பந்தப்பட்டதாக மட்டும் குறுக்கிவிடமுடியாதென்று தோன்றுகிறது.

இச்சட்டத்தின் இணை-நிகழ்வான போலீஸ் / போலீஸாக மாற விரும்புபவர்களின் அதிகாரம் / அது பிரயோகிக்கப்படப்போகும் விதம்... இவற்றை விலக்கிவிட்டு தனியாக இப்பரச்சனையைப் பற்றிப் பேசமுடியாதென்பது என் எண்ணம்.

WHO போன்ற அமைப்புகளின்மூலம் கேன்சர் பூச்சாண்டியைக் காட்டி, எய்ட்ஸ் பேயைக் காட்டி, மரண பயத்துடனேயே வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம். மரண பயத்திலிருப்பவனுக்கு அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் உணரமுடியாது. அதுவே அவர்களின் அரசியலோ?

என் பார்வையில் இது பெரும்திரளான மக்கள் கூட்டத்தைக் குற்றவாளிகள் ஆக்கும் சட்டம். குற்றம் செய்கிறோம் என்ற guilt senseலேயே அவர்களை வைத்திருக்க உதவுவது.

இம்மாதிரியான சட்டங்களின் பின்னிருக்கும் அபாயம் இதுதான். இதைப் பலர் உணர்ந்து கொள்ளாதது வருந்தத் தக்கதே.

பரவலாக அறியப்படாத சிறுபத்திரிகைகள்

வாசகர்களிடம் பரவலாகப் போய்ச்சேராத சிறுபத்திரிகைகளைப் பற்றி எழுதலாம் என்ற ஒரு எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவருகிறது.

1990லிருந்து சிறுபத்திரிகைகளை வாசித்து, சேமித்து வருகிறேன். அவற்றிலிருந்து சில சுவாரசியாமன இதழ்களைப் பற்றிய சிறு குறிப்புகள், அதில் வெளியான கவிதைகள் அல்லது சுருக்கப்பட்ட கட்டுரைக் குறிப்புகள் மாதிரியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாலாமென நினைக்கிறேன். இதற்காக மீண்டுமொருமுறை பழைய பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பும் அதுகுறித்த சிறுஅசைபோடல்களும் கூடுதலாகக் கிடைக்கிறது.

கவிதை அழகியலுக்கான சிற்றிதழ் என்ற அறிவிப்போடு ‘பிரதி' என்ற சிறுபத்திரிகை வந்துகொண்டிருந்தது. ஆசிரியர் ஆலன் திலக். தனி இதழ் விலை ரூ 3. அட்டைகள் இல்லாத 'ழ' மாதிரியான மிகச் சிறிய இதழ்!

'பிரதி' ஜனவரி 1993ல் வெளிவந்த இதழில், எஸ் சண்முகத்தின் இரண்டு கவிதைத் தொகுதிகளைப்பற்றிய நாகார்ஜூனனின் கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இந்த இதழில் வந்த தமிழவனின் கவிதையொன்றைத் தருகிறேன் :

ரொம்பப் புரிகிற ஒரு கவிதை

அவனுக்குப் பாதையில் போகவேண்டும்
இதன்பின்பு கொஞ்சம் யோசிக்கவேண்டும்
அதன்பின்பு உணவு அருந்தவேண்டும்
அவனுக்குப் பூக்களை தரிசிக்கவேண்டும்
அவனுக்குத் திரும்பி வரவேண்டும்
அதன்பின்பு குளித்து பூஜை செய்யவேண்டும்
ஒளிக்கற்றைகளை விரலில் பிடித்து விளையாடவேண்டும்
கண்ணாடியில் படிந்த தூசை போக்கவேண்டும்
பாதையில் புகைநடுவே மூக்கடைத்து நடக்கவேண்டும்
அங்கு போகிறவனை ஓரக்கண்ணால் பார்க்கவேண்டும்
தினமும் பேப்பர் படித்துவிட வேண்டும்
ஓரத்தில் ஒருநூலில் குறிப்பெடுக்க வேண்டும்
ஒருஎலி செத்துக்கிடப்பதை புகைப்படம் எடுக்கவேண்டும்
நூலகத்தில் மூலையில் தனியாய் ஒருபெண் செத்துக்கிடப்பதையும்
எதையோ நினைத்தபடி இருப்பதைப்பற்றி அவனும்
ஒருநாள் நினைக்க வேண்டும்

கவிதையைவிட அதன் தலைப்பு மிகப் பிடித்திருந்தது எனக்கு!

வளர்மதி விலகல்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்
- பிரமிள்

வளர்மதியை நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக வாசித்து வருகிறேன். கவிதாசரணில் அவரை முதலில் படிக்கத் துவங்கியவன், பிறகு பழைய நிறப்பிரிகை இதழ்களிலும் அவருடைய எழுத்துகளைத் தேடிப் படித்தேன்.

அவர் வலைப்பதிவில் எழுதுகிறார் எனத் தெரிந்ததும் மிக மகிழ்ச்சியடைந்தேன். நான் அப்போது வலைப்பதிய ஆரம்பித்திருக்கவில்லை. அறியப்பட்ட அறிவுஜீவிகளுடன் நேர்ப்பழக்கம் வைத்துக் கொள்வதில் எனக்கு மனத்தடை உண்டு. அதையும் மீறி, அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி 2007 நவம்பர் முதல்வாரத்தில் நேரில் சந்தித்தேன். நவம்பர் இறுதியில் நானும் வலைப்பதியத் துவங்கினேன்.

அப்போதிலிருந்து அவர் மீதான மதிப்பு கூடிக் கொண்டிருக்கிறதே தவிர, குறைந்ததில்லை. தமிழில் இருக்கக்கூடிய முக்கிய சிந்தனையாளர்களுள் அவர் ஒருவர் என்பது என்னுடைய திடமான தீர்மானம்!

போன வருட இறுதில் துவங்கிய எங்களுடைய நட்பு இன்னமும் நெருக்கமாகியிருக்கிறது. அவருடன் கழித்த நேரங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. பெரிய சிந்தனைவாதி என்பதான தோற்றம் எதுவும் தராமல் உடனிருப்பவர்களுடன் பழகுவது அவருடைய தனிப்பண்பு. தான் அடையாளம் கண்ட சில இளைஞர்களை அவர் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவ்விளைஞர்கள் இலக்கியம் மட்டுமல்லாது பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள்!!

அடிப்படையில் அவர் மிகவும் ஜாலியானவர். அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அவரது குணத்திற்குத் தீங்கு வருமோ என நினைத்து திரட்டிகளிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

அவரது தீவிர வாசகர்கள் தொடர்ந்து அவரை வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள் - புதிதாக வரும் வாசகர்களுக்கு அவரிருப்பது தெரியாமல் போய்விடக்கூடிய அபாயமிருக்கிறது. ஆனாலும், பலர் இணைப்புச் சுட்டி தந்திருக்கின்றனர். தமிழ்மானம் போன்ற வலைச்சிற்றிதழ்களும் அவருடைய எழுத்துகளைத் தாங்கி வருகின்றன. அதன்மூலம் அவரைப் புதுவாசகர்கள் படிக்கலாம்.

தமிழ்மணப் பொது வாசகர்களுக்கு அவரது விலகல் இழப்பே. இதை, அடிப்படை அறமோ நேர்மையோ அற்று திருடன் போன்ற வசைகளை வீசிச்செல்லும் சில பின்னூட்ட / தனிப்பதிவு கருத்து கந்தசாமிகள் கொண்டாடலாம்! அவர்கள் எங்கு பிரச்சனை என்றாலும் பின்னூட்டியோ அல்லது தனிப்பதிவிட்டோ ஊதிப் பெரிதாக்குபவர்கள் :( இப்போதைக்கு கட்டற்ற இணையப் பொதுவெளியில் ஒன்றும் செய்ய இயலாது :((

இனியாவது அவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் காழ்ப்பு தீர்ந்தால் நல்லது.

நல்லா இருங்க மக்கா!!!

திரட்டிகளில் இல்லாவிட்டாலும் வளர்மதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது என் அவா. அவரும் அப்படியே செய்வார் என்பது என் நம்பிக்கை!

சொரூப நிலை

மழையில் நனைந்த
தார்ச்சாலையை
சொட்டச் சொட்ட
நடக்கும் இளம்பெண்ணை
அவளின் கால்தடத்தை
கன்னத்தின் ஈரத்தைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையை
மரத்திலிருந்து சொட்டும் நீரின் சத்தத்தை
ரசிக்க எனக்கும் விருப்பம்தான்
இந்தப் பாழாய்ப்போன
மழை நிற்கட்டும்

(முதலில் செந்தூரம் ஏப்ரல் 1992ல் வெளியானது. நண்பர் நர்சிம்மின் வலைப்பூவில் அவருடைய ஐம்பதாவது இடுகையாக வெளியிடப்பட்டது).

பொலிடிக்கலி கரெக்ட்யாய் ஒரு கவிதை

தேவடியாள் என்றால்
வெகுஜனத்திற்குக் கரெக்ட்
பாலியல் தொழிலாளி என்றால்
அறிவுஜீவிகளுக்குப் பொலிட்டிகலி கரெக்ட்
யாராவது விளக்குங்கள்
எது எல்லோர்க்குமான பொலிட்டிகலி கரெக்ட்டென்று
இல்லையா குறைந்தபட்சம்
விளக்காவது பிடியுங்கள்

கஞ்சா பிடிப்பதும் காய் அடிப்பதும்
பலருக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
ஹூக்கா பிடிப்பதும் முலைதிருகுவதும்
கதை எழுதுபவர்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்

குண்டு போடுவது எதிர்வினை என்றால்
ஸ்ரீனிவாஸ்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
அறம் அழிவென்றால் எல்லாமே கரெக்ட்
கரெக்ட் இன்கரெக்ட் கரெக்ட் இன்கரெக்ட்
கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட்

பொலிடிக்கலி கரெக்ட்டாகக் கவிதைஎழுத ஆசைப்படுகிறான் அரசியல் கலப்பை (முண்டக் கலப்பை அல்ல) விரும்பாத பொலிடிக்கலி கரெக்ட் பர்ஸன்.

(நண்பர் நர்சிம்மின் வலைப்பதிவில் அவரது ஐம்பதாவது இடுகைக்காக எழுதப்பட்ட கவிதை)

காமக் கதைகள் 45 (23)

அதீதனின் காதலி ரோகிணி மாற்றலாகி பெங்களூர் சென்றுவிட்டாள்.

வாரத்தில் நான்கு நாட்கள் சந்தித்துக் கொண்டிருந்தது மாதமொருமுறையாகிவிட்டது. சந்திக்கும்போதெல்லாம் அவனையும் பெங்களூருக்கு வரச் சொல்வாள். ம்ஹூம், அது வேலைக்கு ஆகாது. ‘குளிர்ல போர்வையே வேண்டாம்டா...' எனக்கூடச் சொல்லிப் பார்த்தாள். அதீதன் மசிவதாயில்லை (தமிழ்நாட்டை விட்டுப் போகக்கூடாதென்ற கொள்கைப் பிடிப்பெல்லாம் ஒன்றுமில்லை, அவனுக்கு சைனஸ் தொல்லை, அவ்வளவுதான்!).

எஸ்டிடி கட்டணம் விஷம்போலிருந்த காலமது. வேறுவழி.. அஞ்சல்துறையே கதி!

தினமொரு கடிதமெழுதுவான் அவளுக்கு. முதலில் இலக்கியமாக ஆரம்பிக்கும் கடிதம். நடுவில் அவன் வாசித்த புத்தகங்கள், நடந்த சம்பவங்கள், அவன் நடக்கக்கூடாதா என ஏங்கிய விஷயங்கள் எனக் கலந்துகட்டி இருக்கும். ஆனால் முடிக்கும்போது விரகதாபத்தை வெளிப்படுத்துவதாகவே முடியும். இதை அவன் வேண்டுமென்று செய்யவில்லையென்றாலும் அப்படித்தான் ஆகிக்கொண்டிருந்தது.

ரோகிணி வேறு நினைப்பே இல்லையா உனக்கு எனக்கோபப்படுவாள். 'உன் லெட்டர யாராவது பார்த்துடப்போறாங்களேன்னு பயமாவே இருக்கு...' கையில் பிடித்துக்கொண்டு தூங்குவது அவளுக்கெங்கே தெரியப் போகிறது!

i would like to kiss you... especially 'there' என முடித்திருந்தான் ஒரு கடிதத்தை.

அவனிடமிருக்கும் ஒரு நல்ல குணம் அந்தக் கடிதங்களை அவள் வீட்டிற்கு அனுப்ப மாட்டான். அலுவலக முகவரிக்கே அஞ்சல் செய்வான்.

ஒருமுறை அவனுடைய கடிதமொன்றைக் காட்டினான் எனக்கு :

'மின்விசிறிச் சத்தம் தெளிவாய்க் கேட்கும் அமைதி. இருளில் இருக்கிறது இரவின் அழகு. அறைக்குள்ளோ டியூப்லைட்டின் வெள்ளை வெளிச்சம் தழுவியிருக்கிறது. தூரத்து நாய்க்குறைப்பொலிகூட சங்கீதமாய்க் கேட்கிறது இப்போது உனக்கான இக்கடிதத்தை ஆரம்பிக்கையில்...

என்ன காரணத்தினாலோ இன்று மதியத்திலிருந்து உன் நினைவுகளே என்னைச் சூழ்ந்துள்ளன.

பார்வதி உன்னை விசாரித்ததாய் எழுதச் சொன்னாள். பெரிய நித்யாவும் ரியாஸும் உன்னுடனான என் தொடர்பு பற்றி விசாரித்தார்கள். பகலுக்கும் இரவுக்குமான இடைவெளிதான் உனக்குத் தெரியுமே. நம் காதலை - உன் விருப்பப்படி - நட்பென்றே சொல்லிவருகிறேன். எனக்கு நெருக்கமான அவர்களிடமும்.

ஒவ்வொரு மிடக்காக மது அருந்தியபடி வளர்கிறது இக்கடிதம்..'

என ஆரம்பித்திருந்தவன் கடைசி பத்திகளில் அவளை எப்படியெல்லாம் சம்போகிக்க வேண்டுமென்பதை விலாவரியாக விவரித்துவிட்டு, ‘எனக்கு இப்பொழுதே உன்னைக்கூட வேண்டும் போலிருக்கிறது. ஆனால், என்ன செய்ய, என்னுடையது அவ்வளவு நீளமில்லையே... ' என முடித்திருந்தான்.

அவள் ஒற்றைவரியில் பதில் எழுதியிருந்தாள்.

'நாம் மாதமொருமுறைகூட இனி சந்திக்கத் தேவையிருக்காதென நினைக்கிறேன். நீதான் முழு சம்போகத்தையும் கடிதத்திலேயே முடித்துவிடுகிறாயே...'

பதிவரசியல்

லக்கி லுக்கிற்கு வந்த சில பின்னூட்டங்களை அவர் வெளியிடவில்லையென கொஞ்ச நாட்களாக பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கந்த அனுபவமில்லை.

நான் பதிவெழுத வருமுன்பே அவருடைய கருத்துகளை மறுத்து எழுதிய பின்னூட்டங்களை அவர் வெளியிட்டே உள்ளார்.

ஆனால் வெளியிடவில்லை எனச் சொன்னவர்களுக்கு அவரது பதில்கள் ஆணவத் தெறிப்புகளாயுள்ளது. என்னுடைய பெயரை உபயோகிப்பதால் அவர்களுக்கு போணி ஆகிறது, மப்பில் வேறு எங்காவது போட்டிருப்பார்கள் என்பதெல்லாம் ஆணவமன்றி வேறென்ன??

லக்கி லுக்கின் எழுத்துகளிள் எனக்குப் பிடித்தது அவரது அரசியல் நிலைப்பாடு.

வால்பையனின் ஞாநி பற்றிய பதிவில் சில விஷயங்கள் ஏற்புடயவையே. ஆனால் அவர் ‘நான் இந்தியன்' ‘ஜாதி வித்தியாசங்கள் இல்லை' மாதிரியான பிரகடனங்கள் எரிச்சலூட்டுகின்றன. அவர் அரசியல் - நீக்கம் செய்வதாய் நினைத்துக் கொண்டு செய்யும் சில காரியங்களும். அவ்வளவு சிம்பிள் இல்லை வால்பையன்.

இருவரும் எனது நண்பர்களே. இப்படி எழுதுவதால் கோச்சுக்காதீங்க மக்கா...!!

***

நிறைய எழுதுவதா குறைவாய் எழுதுவதா எனச் சிலருக்கு அவ்வப்போது சம்சயம் வந்துவிடுகிறது. கநாசு ஒரு நாளைக்கு 25 பக்கங்கள் எழுதுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்துடன் ஒப்பிட்டால் இங்கு பதிவில் 'நிறைய' எழுதுபவர்கள் குறைவாகவே எழுதுகிறார்கள். நிறைய எழுதவேண்டும், தேர்ந்தெடுத்து, நிறைவாய்ப் பதிவிட்டால் நலம்! சிலர் சினிமா விமர்சனங்களாகவும் மொக்கையான கருத்து உதிர்ப்புகளாகவும் எழுதித் தள்ளுகின்றனர். இன்னும் சிலர்... சொல்லவே வேண்டாம் கட் & பேஸ்ட்தான்!

***

ஆரம்பித்த சில மாதங்களிலேயே தமிழிஷ்.காம் (www.tamilish.com) நிறைய பேரால் பார்க்கப்படுகிறது. இது வழக்கமான திரட்டியல்ல. சிலர் வாக்களித்து பதிவுகளையோ அல்லது செய்திகள் / படங்களையோ பிரபலமாக்குகிறார்கள். அப்படிப் பிரபலாமக்கப்பட்டவை முதல் பக்கத்தில் சில மணிநேரங்கள் இருக்கின்றன. அலெக்ஸா ரேட்டிங்கில் இப்போது அது தமிழ்மணத்தைவிட முன்னேறியிருப்பது தமிழிஷின் சாதனையே.

***

என்னுடைய காமக் கதைகளுக்குப் பின்னூட்டங்கள் திரட்டப்படாதென தமிழ்மணம் அறிவித்திருந்தது முன்பு. ஆனால் போன கதைக்கு *** என வந்து பின்னூட்டங்கள் திரட்டப்பட்டிருந்தது. இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. *** பார்த்து ஆவல் தூண்டப்பட்டு அதிக வாசகர்கள் வந்துவிடுகிறார்கள். நம் மக்களின் செக்ஸ் வறட்சி அப்படி!

எப்படியும் பாண்டிச்சேரி பெண்கள் யாராவது தமிழ்மண நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தப் போகிறார்கள். அதற்குமுன்பு அந்தக் காரியத்தை நாமே செய்துவிடலாமே என்றுதான் இக்குறிப்பு :)

***

திமுக சார்புப் பதிவுகளே அதிகமிருந்த நிலையில் இப்போது எதிர்ப்புப் பதிவுகளும் நிறைய வருகின்றன. இது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களின் மொழி வன்மத்தைக் கக்குவதாகவே இருக்கின்றன. கயவன் கருணாநிதி போன்ற வார்த்தைகளை அனாயசமாக வீசிச் செல்கிறார்கள். வார்த்தைகளல்ல, அவற்றின் பின்னிருக்கும் வன்மமே என்னைச் சங்கடப்படுத்துகிறது.

***

R P ராஜநாயஹம் இப்போது பதிவெழுதுகிறார். இவரது எழுத்துகளை அங்குமிங்குமாக 1990களிலிருந்தே படித்துவருகிறேன். இப்போது, அவரது பெயரை நாகார்ஜூனன் பதிவொன்றின் பின்னூட்டத்தில் பார்த்து கிளிக் செய்து அவரது பக்கத்திற்குப் போனேன். பிறகு ரீடரில் வைத்துத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ராஜநாயஹம் என்றாலே சிலருக்கு மு தளையசிங்கம் / தொழுகை / ஊட்டி / ஜெமோ இந்தப் பெயர்கள் உடனடியாக நினைவிற்கு வருபவை! இவரது பதிவைப் பற்றி இதுவரை சாரு நிவேதிதா, பிரகாஷ், ஸ்ரீதர் நாராயணன் எழுதியிருக்கிறார்கள்.

இப்போது தமிழ்மணத்திலும் அவரது பதிவுகள் வருகிறது. அவருடைய sadism பதிவு தமிழ்மணத்தில் வந்ததா எனத் தெரிந்துகொள்ள ஆவல். எனக்கு அந்த இடுகை பிடித்திருந்தது. பாண்டிச்சேரியிலிருப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை!!

***

காலச்சுவடு செய்யும் அலப்பறை தாங்கமுடியவில்லை. அவர்களது பத்திரிகையை நூலகங்களில் வாங்கவில்லையென்றால் அது கருத்துரிமையின் குரலை நெறிக்கும் செயலாம். இதுபற்றி வினவு விரிவாக எழுதியிருக்கிறார் (http://vinavu.wordpress.com). படித்துப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

காமக் கதைகள் 45 (22)

அதீதனின் பழைய காதலி ஆனந்தி தற்கொலை செய்துகொண்டாள்.

முற்றும்.

பி.கு :

அதீதன் தீவிரமாய்க் காதலித்துக் கொண்டிருந்தான் ஆனந்தியை. வாரத்திற்கு மூன்று நாட்கள் சந்திப்பார்கள். கடற்கரையிலிருந்து பேருந்து பிடித்து திருவான்மையூரிலிருக்கும் அவள் அலுவலகத்திற்குச் செல்வான். இருவரும் பேசிக்கொண்டே பேருந்தில் வள்ளுவர் கோட்டம் வருவார்கள். அங்கிருந்து ஆட்டோ பிடித்து வடபழனியில் அவளை விட்டுவிட்டு தான்மட்டும் வீட்டிற்கு மறுபடியும் பேருந்து பிடித்துச் செல்வான். கடற்கரை - திருவான்மையூர் - வள்ளுவர் கோட்டம் - வடபழனி - அவன்வீடு - மொத்தம் ஐம்பது கிலோமீட்டர் இருக்கும். பேருந்துகளையே வெறுக்கும் அதீதன் அதில் 45 கிலோமீட்டர் பேருந்திலேயே பயணம் செய்வான்.

வீட்டை அடைந்ததும், கடிதமெழுத ஆரம்பித்துவிடுவான். முழுநீளத் தாளில் நான்கு பக்கங்கள், சில சமயம் ஐந்து பக்கங்கள்கூடப் போகும் கடிதம்.

அடுத்த நாள் அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்ப்பான். அடுத்த முறை அவளைப் பார்க்கும்போது அந்தக் கடிதத்தைப் பற்றி விசாரிப்பான். சில சமயம் அடுத்தநாளே பார்க்கும்படி இருந்தால் அவள் கையிலேயே அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிடுவான். அவளும் அவனுடன் பேருந்தில் வரும்போது அக்கடிதத்தைப் படித்தபடி வருவாள்...

அதீதன் வண்ணதாசன்மேல் பித்தாயிருந்த காலமது. அவரது எழுத்துகள்போலவே அவனது கடிதங்கள் இருக்கும். 'அச்சோ இவ்வளவு எழுதறீங்களே, விரல் வலிக்காதா' என அவள் கொஞ்சலாய்க் கேட்பது கவிதையாயிருக்கும்.

அந்தக் கடிதங்களில் என்ன எழுதினான், அவளுடன் என்னவெல்லாம் பேசினான் என்பது அவனுக்கு நினைவிலேயே இல்லை.

முடிந்தது.

மேலும் சில குறிப்புகள் :

(1) வந்தனாமூலம் அறிமுகமானவள் ஆனந்தி - அப்போது அவள் சந்தோஷுடன் இருந்தாள். அதீதன் ஆனந்தியைக் காதலித்தது வந்தனாவிற்குத் தெரியாது. போலவே ஆனந்திக்கும் அதீதனின் வந்தனாவுடனான பழைய உறவு பற்றித் தெரியாது.

(2) அதீதனுக்கும் ஆனந்திக்கும் உடல்-ரீதியான தொடர்பிருந்ததில்லை. அதற்கான முயற்சியில்கூட அவன் இறங்க விரும்பியதில்லை.

(3) ஆனந்தியின் மரணத்தை அவனுக்குச் சொன்னதும் வந்தனாதான். குடும்பப் பிரச்சனை காரணமாயிருந்திருக்கலாமென அபிப்ராயப்படாள். அவளிடம் ஒரு மாதம்முன்பே வேறொரு நண்பர் சொல்லியிருக்கிறார் ஆனந்தி சரியான மனநிலையில் இல்லையென. வந்தனாவும் தொலைபேசியில் பேசியிருக்கிறாள். அவள் நன்றாகத்தான் இருப்பதாகச் சொல்ல, இவளும் விட்டுவிட்டாள். 'நான் நேர்ல பாத்து பேசியிருக்கணும், தப்பு பண்ணிட்டேண்டா' என அதீதனிடம் புலம்பினாள் வந்தனா.

(4) எப்படித் தற்கொலை செய்துகொண்டாள் என்ற விவரங்கள் வந்தனா தெரிவிக்கவில்லை. அதீதனும் கேட்டுக் கொள்ளவில்லை.

(5) அவர்கள் பிரிந்ததற்குச் சாதிரீதியான காரணங்கள் இருந்தன. ஆனால் இது அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட பொலிடிக்கலி கரெக்ட் கதையென்பதால் அவ்விவரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

(6) அன்றிரவு போதையில் வெகுநேரம் அழுதுகொண்டிருந்தான் அதீதன். அவன் சொல்லியது / உளறியது :

‘தங்கமான பொண்ணுடா, புது சுடிதார் வாங்கியிருந்தா ரெண்டு கையிலும் இப்படிப் பிடிச்சுகிட்டு எப்படியிருக்குன்னு கேப்பா... அப்படியே கண்ணுல நிக்குதுடா, ராமக்ரிஷ்ணா லன்ச் ஹோம்ல பேசிகிட்டே இருப்போம்டா, மனசுல இருக்கற கஷ்டம்லாம் மறஞ்சுடும் அவளப் பாத்தாலே, கோவமா ஒரு வார்த்தைகூடப் பேசினதில்லடா, தேவதைடா.... .... '

அதற்குமேல் கோர்வையாயில்லாமலிருந்தது.

முற்றியது.

ரொம்ப அழகு

சீறிப் பாயும் மழை அழகு
கழுவி விடப்பட்ட சாலை அழகு
இருளாய் இருக்கும் வானழகு
வெளிச்சங்களைச் சிதறும்
சோடியம் விளக்குகள் அழகு
விளம்பரப் பலகைகளின்
நீல மஞ்சள் பச்சை
பிம்ப பிரதிபலிப்புகள் அழகு
எதிர்ச் சாரியில் விரையும்
ரெயின் கோட் கணவன் அழகு
இடுப்பை அணைத்து
முதுகில் முகம் சாய்த்த மனைவி அழகு
சுருண்டு அபத்தமாய் விழுந்திருக்கும்
கறுப்பு யமாஹா அழகு
ரத்தத்தை உறைய விடாமல்
அடித்துச் செல்லும் நீரழகு
கவிழ்ந்து விழுந்திருப்பவனின்
சிறு கட்டமிட்ட சிகப்புச் சட்டை அழகு
வேகத்தைக் குறைத்து ஒதுங்கி விரையும்
வாகனங்களின் டயர் ஒலி அழகு
அழகு அழகு அழகு

(நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது)

1/2 பியருக்கு வந்த மப்பு

நமஸ்காரம்!
சாலமன் கிரண்டி பார்ன் ஆன் மன்டே!
போஸ்டர் திங்கற கழுதை, அறியுமோ
இது ஜென்னும் இது ரஜினின்னும்?
எது எப்படியோ
பூனையும் பொடக்காலில சிரிக்குது.
கேரம் போர்டு விளையாடு பாப்பா
உன் வீட்டில் கேரம் போர்டு
இல்லாமல் இருக்கலாமா பாப்பா?
டப்பா டப்பா வீரப்பா எப்படா மேரேஜ்?
M.G.R. சண்டை
பானுமதி கொண்டை
கொண்டையில் என்ன பூ?
கூடையில் குஷ்பு
உனக்கென்னப்பா உங்கப்பா Father
உங்கம்மா Mother
நல்ல மாட்டுக்கு மூணு சூடு.
சாந்தாமணி சாராஜ் உன்னை
விசாரிச்சான் "காயடிக்கப்படுவான்"
சாந்தாமணி கூறிப்போயிற்று!
ஒன்னுக்கு வருது சந்தாமணி
ஊத்திகிட்டு கொஞ்சலாம்
நல்ல கதையாயிருக்கே! - இப்படி
எழுதினா நாங்கெட்ட பையனா?
நெலாவ பார்த்து நரி ஊளை உட்டா?
எல்லாம் சாந்தும்மாவுக்கு தெரியும்
அடியேன் பத்துமாத்து தங்கம்னு!
ரே கருப்பா!
சுருக்கா பீடி தீசிக்கினி ராரா ரே!

- ராஜமைந்தன் (வா மு கோமு என்ற பெயரிலும் எழுதுபவர்) எழுதி நடு கல் 13வது இதழ் 1994 ஜனவரியில் வெளியானது. எதிர் கவிதைக்கு நான் அடிக்கடி உதாரணம் காட்டுவது!

இருள் சூழ்ந்த புதர்

தலையில் பாதி வழுக்கையும்
தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த
அவன் பெயர் பார்த்திபனாம்.
அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்
எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்
பன்னிரெண்டாவது வரை
ஒன்றாகப் படித்தோமாம்
என் ஞாபக அடுக்குகளில்
மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்
பள்ளி - மதிய உணவு
ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி
பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை
இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்,
இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்
வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது
பேருந்தில் செல்லும் ராதிகாவை
சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது
பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்
மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி
அவசரமாய் ரயிலேறிப் போனான்
இரவில் மனைவியிடம் தன் பால்யகால
நண்பனைச் சந்தித்ததை
அவன் விவரித்து மகிழக்கூடும்
என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்

(நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது)

அரிசியும் மின்வெட்டும் பொதுப் புத்திப் பார்வையும்

மக்கள் நல அரசுக்கு பொதுமக்களின் சுமைகளைக் குறைக்கவேண்டிய கட்டாயமுண்டு. அந்த வகையில் தமிழக அரசு இவ்வருடம் செப்டம்பர் 15லிருந்து கிலோ அரிசி 1 ரூபாய்க்கு கொடுப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் தமிழகத்தில்தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி கொடுக்கப்படுவதாக அறிகிறேன்.

உணவிற்கு அத்தியாவசியத் தேவையான அரிசியை வசதிகுன்றியவர்களுக்கு அரசு மலிவுவிலையில் கொடுப்பதை சிலர் எதிர்க்கிறார்கள். அவர்கள் வைக்கும் காரணங்களில் சில :

வாக்குகளுக்காகச் செய்யப்படுவது. தேர்தல் - அரசியலில் இதில் ஒன்றும் பெரிய தவறில்லை. அடிப்படையில் இச்சலுகை தேவையா என்பதே முக்கியம். பிறர் வாக்குகளுக்காகக்கூட இதைச் செய்யமுடியவில்லை / மனமில்லை என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.

திசை திருப்புவதற்காக - குறிப்பாக மின்வெட்டு - செய்யப்படுவது. மின்வெட்டென்பது குறைந்தகாலமே இருக்கப்போவது. அதற்கென வருடம்முழுவதும் மலிவுவிலையில் அரிசி தருவதாகச் சொல்வது கொஞ்சம் இடிக்கிறது.

மக்களைச் சோம்பேறியாக்குவது. இது ஒரு டிஃபால்ட் விமர்சனம். எல்லாவிதமான மக்கள் நலத்திட்டங்களுக்கும் - பள்ளி மாணவர்கள் மதிய உணவிலிருந்து இலவச கால் செருப்புவரை - இதைச் சொல்லலாம்.

வேறு சிலர் மக்களால் இரண்டு ரூபாய்கூடக் கொடுத்து வாங்கமுடியாத அளவிலா இந்த அரசுகள் வைத்திருக்கின்றன என்று வக்கனையாகக் கேட்கிறார்கள். சிபொம / stp / மற்றும் பல பெரிய நிறுவனங்களுக்கு அரசுகள் சலுகைகள் தரும்போது கேள்வி எழுப்பாத மிடில் கிளாஸ் ஆசாமிகள், இப்படி வசதிகுன்றியவர்களுக்கு உதவும்போது மட்டும் நீட்டிமுழக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அவர்களுக்குப் புறநகரில் ஒரு அப்பார்ட்மெண்டும், வங்கிக் கணக்குகளில் ஏறும் பேலன்ஸுமே முக்கியமாகிப் போகிறது!

அரிசித் திருட்டு அதிகமாகும். இதற்குச் சோத்தனமாக பதில் சொன்னால், தவறாக உபயோகப்படுத்தப்படாத திட்டம் / சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன?

திருட்டைக் குறைக்கவேண்டுமெனச் சொன்னால் பரவாயில்லை. அதைக் காரணமாகச் சொல்லி, திட்டத்தை ஒழிக்க நினைப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

இப்போது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவையும் குடும்ப அட்டைகளுக்குத் தருகிறார்கள். இன்னும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் நலம்.

மின்வெட்டு

சென்னையிலும் அதன் புறநகர்களிலும் செப்டம்பர் 1 முதல் 6 வரையே மின்வெட்டு இருந்துள்ளது. முதன்முறை அறிவிக்கப்பட்டபோதும் இவ்வாறு குறைந்த நாட்களே இருந்தது. மற்ற இடங்களிலும் இன்றிலிருந்து மின்வெட்டு இருக்காதென்று தெரியவருகிறது. (இது வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும், தொழிலகங்களுக்கு அல்ல).

இதையும் கொஞ்சம் முன்கூட்டியே சரி செய்திருந்தால் கெட்ட பெயராவது வராதிருந்திருக்கும். ஏன் செய்யவில்லை என்பது ஆற்காட்டாருக்கே வெளிச்சம் :)

இப்பதில்களைப் பொதுப் புத்தி பார்வையிலேயே எழுதியிருக்கிறேன். சில சமயங்களில் அதுவும் தேவையானதுதானே :))

சி மணியின் பச்சையம் (அ) உடையாத பருப்புகள்

1

1. சொல்கிறார்கள்
எழுத்திலே கூடாதாம் ;
பாலுணர்ச்சி கூடினால்
பச்சையாம்

2. வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கியூர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையாம்

குறிப்பு :

காமக் கவிதை எழுத ஆசைப்பட்டேன். ஆனால் சி மணி, பிரமிள் எழுதாத என்ன எழவை நான் எழுதிவிட்டேன் என்ற கேள்வி வருமோ என பயம். அதனால் பேசாமல் சி மணியின் கவிதையையே பதிவிடத் துவங்கினேன்.

பருப்பு :

யார் யார் எதை எதை உடைத்துப் பருப்பைக் காட்டுகிறார்கள் எனப் பார்ப்பது என் வேலையில்லை. அதிகாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் நெம்புகோல் வேலையை என் கதைகளோ அல்லது கவிதைகளோ செய்வதில்லை.

அங்கலாய்ப்பு :

ஏன்யா எல்லாத்தையும் ஜி நாகராஜன் சொல்லிட்டான், சாரு சொல்லிட்டான், பிரமிள் சொல்லிட்டான் அப்படின்னா, நாங்க என்னதான்யா எழுதறது?? இந்த 38 வயதிற்குமேல் நான் யாரிடம் போய் எழுதக் கற்றுக் கொள்வது? முதியோர் இலக்கியக் கல்வித் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?!!

ஐயகோ, தட்டச்சும் வேலைதானா எனக்கு???

தெறிப்பு & முடிப்பு :

இப்போது மறுபடியும் சி மணியின் கவிதையிலிருந்து வேறொரு பகுதி :

3. 4. டிரைவர்கள் முன்னோடும்;
விழியோரம் பெண்ணாட
விழியோடும் பெண்ணோடு;
கரம்பூம்பூம் என்றாட்டும்.

வளைக்கரம் பிடித்து
கனல்விரம் எறுக்கி
உலறிதழ் நனைத்து
அவள்துடிப் பளப்பு.

தலைப்பு சரியவும்
முலைப்பு தெரியவும்
நாக்கிலே பாடம்
நோக்கிலே கூடல்.

பக்திக்கு முகம்காட்டி
சக்திக்கு மனம்நீட்டி
முக்திக்கு வழிகேட்டு
இச்சைக்கு வழிபாடு.

5. கவர்ச்சிக் கலப்பு
கடலில் உப்பு.

(இக்கவிதைப் பகுதிகள் சி மணியின் வரும் போகும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. வெளியீடு : க்ரியா, வருடம் 1974).

பல / துல்லியம் / தூக்கு / 2,25,650

காலதாமதம்
காரணம்
குழந்தைகள் ஆர்ப்பரிப்பு
சீறிப்பாயும் விமானங்கள்
நவீனமயமாக்கப்படாத தொடர்புத் துறை
மாண்டவர் இன்னும் வேண்டுமென
எண்ணிக்கை
எண்ணிக்கை
தொலைக்காட்சிமுன்
பட்டினியால்
புது வசதிகள்
புழுதி கிளப்பும் பீரங்கிகள்
போதவில்லை
தகவல் சேகரிக்க எண்ணிக்கை
அறிய
அணுக்கதிர் வீச்சு
3ஜி ஸ்பெக்ட்ரம்
Ka band

பாரிய வித்தியாசங்கள் (அ) திரும்பத் திரும்ப

சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டிருக்கிறான் பைத்தியக்காரன்
பேசியதையே திரும்பத் திரும்பப்
பேசிக் கொண்டிருக்கிறான் மேடையில் அரசியல்வாதி
அதே துணையைத் திரும்பத் திரும்பப்
புணர்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்
ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச்
செய்துகொண்டிருக்கிறார்கள் குமாஸ்தாக்கள்
ஒரே கவிதையைத் திரும்பத் திரும்ப
எழுதிக் கொண்டிருக்கிறான் நகுலன்
ஒரே பிராண்டைத் திரும்பத் திரும்பக்
குடித்துக் கொண்டிருக்கிறான் அதீதன்

புரோட்டா மாஸ்டரும் ஒரு கவிதையும்

பிரதியெடுப்பதில் உள்ள அவலங்கள்
வெட்டி எறியுங்கள் சில பக்கங்களை
ஆட்டோ குலுக்கலும்
நடிகைகளின் குலுக்கலும் ஒன்றா அல்லது
வேறுவேறா
அல்லது வேறுவேறான ஒன்றா
பெத்துப் போட்ட மனுசன் ஆவியாகிப்போனான்
ஏ டண்டணக்கா ஏ டணக்கு நக்கா
ரசினிகாந்து சண்டை
எது கைகொடுக்கிறது எதுகை
எது னை கொடுக்கும் மோனை
மூக்கு பல் வாய்செவியென
தத்திப் பீணிகா எக்கடனாப் போய்ச் சாவுமேரா
விடுபட்ட வரிகள் காணாமலே போனது
ஆறு ஓடிச் சேருமிடம் கடல்

சில கவிதைகள்

(1)

ஒன்றுமில்லாமல் இருக்கிறேன்
ஒன்றுமில்லாமல் இருக்கிறாய்
ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்
பகல் இரவு மாலை காலை
போகும் வரும்

(2)

எல்லாருக்கும் இருக்கும்
அதே சூழலும்
அதே மனிதர்களும்
அதே மனித உறவுகளும்
எனக்குக் கற்றுத் தருபவை
வேறாக உள்ளன
போலவே
என் எதிர்வினைகளும்

(3)

சொல்கிற அவனுக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறோமென்று
கேட்கிற எனக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறானென்று
ஆனாலும்
அவன் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான்
நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்

விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகார்) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் என்ச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : www.madrasdada.blogspot.com )

தேடுபொறிகளும் குறிச்சொற்களும்

தேடுபொறிக்குள் சிக்கிக் கிடக்கிறது
அறிவின் எல்லைகள்
சரியான குறிச்சொற்களைத்
தேடவும் வந்துவிட்டது மென்பொருள்

வேண்டியது கல்யாணமா
கட்டணக் கழிப்பறையா
அல்லது
எப்படிக் கழிக்கவேண்டுமென்பதா
தேடினாலே போதும்

வேறெதுவும் தேவையில்லை
தேடுபொறியே தெய்வம்

காமக் கதைகள் 45 (20 - 4)

இந்தக் கதையில் ஒரே கள்ள உறவாக இருக்கிறது; தொலைக்காட்சி தொடர்போல் இருக்கிறது; ஒழுங்கீனத்தின் எல்லையைத் தொடுகிறது எனப் பல விமர்சனங்கள். இதற்கு விளக்கமாக பதில் சொல்வதைவிட ஒரு பத்திரிகைச் செய்தியைத் தருகிறேன் :

20.8.2008 தேதியிட்ட குமுதம் பத்திரிகையில் வந்த செய்தியின் சாரம் :

பெரும்பாலான கொலைகளுக்குப் பின்னணி செக்ஸ் பிரச்சனைகள்தான் (இங்கே செக்ஸும் வயலன்ஸும் இணையும் புள்ளியைப் பற்றி எழுதும் ஆர்வத்தை அடக்கிக் கொள்கிறேன்).

சேலம் அருகில் நடந்தது : கவுரி என்ற ஒரு அம்மா கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். பேரன் பேத்தி எடுத்த வயதில் ஏகப்பட்ட இளவயசுப் பையன்களுடன் சகவாசம் வைத்திருந்ததால் அவரது கணவன் புஷ்பாங்கதன் குடும்ப கௌரவம் காக்க கொன்றிருக்கிறார்.

வேளச்சேரியில் நடந்தது : ‘ஒருமுறை நீங்கள் கொடுத்த முத்தத்தை என்னால் மறக்க முடியவில்லை' என பக்கத்துவீட்டு இளைஞனுக்கு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மனைவியொருத்தி கடிதம் எழுதியிருக்கிறாள். இதை அறிந்த கணவன் அவளுடன் சண்டை போட்டிருக்கிறான். அந்த இளைஞன் சமாதானப்படுத்த வந்திருக்கிறான். ஆத்திரத்தில் கணவன் அவனைக் கொன்றுவிட்டான்.

நீலகிரி மாவட்டத்தில் நடந்தது : காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவிக்கிடையில் ஆறு வருடம் கழித்து பிரச்சனை. மனைவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபனுடன் கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது. கணவன் கண்டிக்க, அவள் காதலனுடன் வாழச் சென்றுவிட்டாள். பிறகு அவனுடனும் ஒத்துவராமல் மறுபடியும் கணவனிடம் மன்னிப்பு கேட்டு வாழ வந்திருக்கிறாள். கொஞ்ச காலத்தில் மறுபடியும் தவறான சூழிநிலையில் மனைவியைப் பார்த்திருக்கிறான் கணவன். இதை ஒருநாள் கணவன் சொல்லிக்காட்ட ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் அவன் தலையில் அடித்துக் கொன்றிருக்கிறாள் மனைவி.

இதற்குத் தீர்வை தமிழ்நாடு மனநலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. ராமசுப்ரமணியத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர் கூட்டுக் குடும்பம் சிதைவைதை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லியிருக்கிறார். வயதானவர்கள் காவல் தெய்வங்கள்; அவர்கள் இல்லத்தில் இருந்தால் இதுபோன்ற தீய எண்ணங்களும் தீய செயல்களும் நடக்காது என்பது அவரது கருத்து.

ஆஹா, எப்படியெல்லாம் பிரச்சனைகளை எளிமையாக்குகிறார்கள் என வியந்தான் அதீதன்.

'தொலைக்காட்சி சீரியல் மாதிரி இருப்பதாகச் சொல்வார்கள், அதனால் எழுதவேண்டாமென்று சொன்னேன்; மீறி நீ இக்கதையை எழுதிவிட்டாய். இனி நான் உனக்குக் கதை சொல்ல மாட்டேன்' எனத் தீர்மானமாய்ச் சொன்னான் அதீதன்.

அவன் சொன்ன காரணம் பற்றிய சந்தேகங்கள் எனக்கிருக்கிறது. ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஒருவேளை அவன் மனம்மாறி மீதிக் கதைகளைச் சொன்னால், எழுதுகிறேன்.

வினை - எதிர்வினை - தொடர்வினை

கால் பிய்க்கப்பட்ட குழந்தை
அழுதுகொண்டிருக்கிறது தனியாக
கர்ப்பிணியின் வயிற்றைக் குத்தி
சிசுவின் உருவாகாத உடலைக் கிழித்தும்
தேடித் தேடிக் கொன்றும்
கொண்டாடுகிறார்
கையில் சூலமேந்தியவர்கள்

நிகழ்ந்த வரலாறின்
கரிய நிழல்
சூழ்ந்திருக்கிறது நாற்புறமும்

வெடிக்கின்றன குண்டுகள்
காய்கறிச் சந்தையிலும்
பேருந்துகளிலும்
பொது ஜனங்கள் அல்லாட

ஃப்ளூரசண்ட் திரைகளில்
வெடித்த மற்றும் வெடிக்காத
குண்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வரலாற்று நாயகர்கள்
ஏசி அறைகளில் சொகுசாக

காமக் கதைகள் 45 (20 - 3)

மாலதிக்கும் தரணிக்கும் சிறுசண்டை வந்தபோது தரணி, 'நீ உன்புருஷன விட்டு என்கூட வந்தே.. வேற ஒருத்தன் கிடைச்சா என்னவிட்டு ஓடிப்போயிட மாட்டியா என்ன' எனக் கேட்டிருக்கிறார் - அதீதனிடம் மாலதி தொலைபேசியில் சொன்னது.

மாலதிக்கு தரணியின் மூலம் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. முதல் குழந்தை நார்மல் டெலிவெரி என்றாலும் இது சிசேரியன் ஆப்ரேஷன் - இதுவும் அது.

மாலதிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற வியாதிகள் வந்துவிட்டன. காரணம் தரணிதான். மாலதிமேல் சந்தேகப்படுகிறார் தரணி - இதுவமது.

மாலதியின் சிறுவயது சினேகிதன் சீனிவாசனுடன் ஒருநாள் வீட்டில் அவள் தனியாக இருந்தபோது வெளிக்கதவைப் பூட்டிவிட்டு காவல்துறைக்கு பிராத்தல் நடப்பதாகத் தகவல் தந்துவிட்டார் தரணி - இது வேறு.

போலீஸ், நண்பர்கள் தலையீடு, தகராறு, சமரசம், பிரிவு - இதுவும் வேறு.

தரணி மும்பையில் வேலைகிடைத்து மாலதியையும் குழந்தைகளையும் பிரிந்து சென்றுவிட்டார் - அதீதனின் நண்பன் சொன்னது.

பிருந்தா அவளது இரண்டாவது கணவரின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவளது ஒரே குழந்தையுடன் - அதுவும் இது.

மாலதியைப் பற்றிய தகவல்கள் இல்லை - அதுவுமிது.

வந்தனாவுக்கு அதீதனுடனான தொடர்பு தெரிந்ததும் பிரதீப் அவளை விரட்டிவிட்டான். அவள் அதீதனையும் நிராகரித்து உடன் பணிபுரிந்த சந்தோஷுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்; நடுவில் சிலகாலம் அவள் மனது மறுபடியும் அதீதன்மேல் அலைபாய்ந்தாலும் அடக்கிக் கொண்டாள் - தனிப்பட்ட தகவலிது.

அதீதன் வீட்டிற்கு மொட்டைக் கடிதம் வந்தது, அதீதன் சந்தோஷுடன் பயந்து கொண்டே சண்டைக்குப் போனது, வந்தனா இடையில் கொஞ்ச காலம் சந்தோஷுக்குத் தெரியாமல் அவன் நண்பனான தவில் கலைஞன் பிரேமுடன் உறவு வைத்திருந்தது - இதுவமது, அதுவுமிது, வேறுவேறு.

பிரதீப் தனிமையில் வைசாக்கில் இருக்கிறான் இப்போது. அவனது பணமெல்லாம் தொலைந்து காரோட்டியாகப் பணிபுரிகிறான் - இது அதீதன் சொன்னது. கற்பனையாகச் சொல்கிறான் என நினைக்கிறேன். காரணமிருக்கிறது...

அலைபேசியில்லாத காலமது. ஒருமுறை அதீதன் தொலைபேசியில் வந்தனாவை அழைத்தபோது பிரதீப் எடுத்துவிட்டான். இது என் வீட்டு ஃபோன் கண்டவர்கள் ஃபோன் செய்யவேண்டாமென இரைந்தான். நேரில் பார்த்தால் அதீதனை உதைப்பதற்கும் தயாராய் இருப்பதாய் அறிவித்தான்.

பிரதீப் ஒரு முரடன் என்று மாலதி சொல்லியிருக்கிறாள். அவள் தங்கையை தெருவில் போகும் ஒருவன் கிண்டலடித்தபோது காரிலிருந்து இறங்கி அவன் சட்டையைப் பிடித்து அறைந்து தெருவெல்லாம் இழுத்துச் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்வரை அடித்தானாம்.

அதீதன் பதில் பேசாமல் அப்போதிருந்துவிட்டு இப்போது வாய்ப்பு கிடைத்ததும் பிரதீப்மேலான கோபத்தை இப்படிக் கதையில் புகுத்தித் தீர்த்துக் கொள்கிறானோ என்னவோ?

(இந்தக் கதையின் கடைசிப் பகுதி கட்டுரையாக வெளியாகும்)

காமக் கதைகள் 45 (20 - 2)

வந்தனா வசித்தது கோயமத்தூரில். அவள் கணவன் மேத்யூ. இரண்டு குழந்தைகள் உண்டு. சிறுவயதிலேயே காதலித்துத் திருமணம் செய்தவள். அதனால் அவளது மொத்த குடும்பமே அவளுக்கு எதிராக இருந்தது. மேத்யூவுடனான வாழ்க்கை அவளுக்குச் சலித்துவிட்டது.

அவள் வேலை செய்துவந்த ஹோட்டலில் அப்போது தரணியும் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

மேத்யூவிற்கு மேரியுடன் பழக்கமேற்பட்டது. அவளை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டான் வந்தனாவின் சம்மதத்துடன். மேரி அவர்களுடனேயே வசிக்கவும் அவள் சம்மதித்தாள்.

வீட்டைவிட்டு ஓடிப்போவதென வந்தனா முடிவு செய்யும்போது அவளுக்கு வயது 27. குழந்தைகளைப் பிரிவதில் அவளுக்கு வருத்தமிருந்தாலும், இப்போது மேரியிருப்பதால் குழந்தைகளை பார்த்துக் கொள்வாள் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

அவளை மாலதியின் வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் தரணி. மாலதியின் தூரத்து உறவுப் பெண் வந்தனா என மாலதி அவள் கணவன் பிரதீப்பிடம் அறிமுகப்படுத்தினாள். அவனும் மாலதியின் சொந்தம்தான், ஆனால் இது வேறுவழி உறவு எனச் சமாளித்தாள்.

தரணிக்கு வந்தனாவுடனிருந்த உறவைப் பற்றி அவர் மாலதியிடம் மறைத்துவிட்டார். போலவே வந்தனாவும் தங்களது உறவு தூய்மையான நட்புதான் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

- இவ்வளவு மோசமான குணங்களைக் கொண்ட தரணியை ஏன் இன்னும் அவர் இவர் என மரியாதையாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டாள் வாசகி. அவர் அதீதனின் மேலதிகாரியாகப் பணியாற்றியவர் என்றேன். ஏற்கனவே இக்கதைகள் அதிகாரப் படிநிலைகளைக் கேள்விக்குள்ளாக்கவில்லை என விமர்சனம் இருக்கையில் நீங்கள் இப்படிச் செய்யலாமா என அக்கறையுடன் விசாரித்தாள். -

பிரதீப்பிற்கும் வந்தனாவும் நெருங்குகிறார்கள் என்பது தெரிந்தும் மாலதி கண்டுகொள்ளவில்லை, மறைமுகமாக ஊக்குவிக்கவே செய்தாள். அவர்கள் உறவு வளர்ந்ததும், அதையே காரணம் சொல்லி, பிரதீப்பிடமிருந்து விலகினாள். பிரதீப்பிற்கும் வந்தனாவுடன் வாழ ஆசையிருந்ததால் இதைப் பெரிய பிரச்சனையாக்கவில்லை.

குழந்தையையும் கூட்டிக் கொண்டு தரணியுடன் வாழத் துவங்கினாள் மாலதி. தரணி வேறுவேலை கிடைத்து ஈரோட்டிற்குச் சென்றுவிட்டார் அவர்களுடன்.

அதீதனுக்கு மாலதிமூலம் வந்தனா பழக்கமானாள். இரண்டே வாரங்களில் காதலிக்கத் துவங்கினார்கள். இதற்கிடையில் வந்தனா பிரதீப்புடனும் நெருக்கமாக இருந்திருக்கிறாள், அவளால் இருவரில் ஒருவரை முடிவு செய்ய இயலவில்லை.

இக்கதையின் தொடர்ச்சி காமக் கதைகள் 45 (10) என்ற தலைப்பில் எழுதப் பட்டிருக்கிறது. மீண்டுமொருமுறை அக்கதையைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (http://jyovramsundar.blogspot.com/2008/07/45-10.html)

(இந்தக் கதை இன்னமும் முடியவில்லை... )

காமக் கதைகள் 45 (21)

எனக்குக் காலக் குழப்பம் உண்டு. அதீதன் சொல்லிய சில கதைகள் முன்பின்னாக மாறியிருக்க வாய்ப்புண்டு.

போலவே அதீதனுக்கும். அதீதன் மாலை தூங்கி எழுந்தால், காலையோ எனக் குழம்பி பல்துலக்க ஆரம்பித்துவிடுவான். அவனது இக்குணம் எனக்குத் தெரியும். அதனால் முடிந்தவரை வரிசைக்கிரமாகக் கதைகளைச் சொல்லிக்கொண்டு வருகிறேன். அதையும் மீறிச் சில கதைகள் முன்பின்னாகவோ அல்லது வேறுமாதிரியோ மாறியிருக்கச் சாத்தியமிருக்கிறது. நீங்களும் இதே வரிசையில்தான் படிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு நீங்கள் முதலில் இந்தக் கதையைக்கூடப் படிக்கத் துவங்கலாம், அல்லது 36வது கதையையும் முதலில் படிக்கலாம்.

ஏற்கனவே நடந்த மற்றும் சொல்லப்பட்ட கதைகளையே மறுபடியும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைவில் வையுங்கள் வாசகிகளே.

அதீதன் தன்னுடைய காதலி வித்யாவை அட்டகாசமாக அறிமுகப்படுத்தினான் எனக்கு. அழகாகவே இருந்தாள். அடிக்கொருதரம் அவனைக் காதலுடனும் பெருமையுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'உங்களுக்கு அதீதன எவ்வளவு நாளாத் தெரியும்?'

‘என்னடா இண்டர்வ்யூ மாதிரி கேக்கறே... நாலஞ்சு மாசமாத் தெரியும்' என்றான் அதீதன். அவனை முறைத்தேன். அதீதனைத் தனியே இழுத்துச் சென்று ‘உன் காதலியை நானென்ன அபகரித்துவிடவா போகிறேன், அவளைப் பேசவிடு' என்றேன்.

‘நீ நினைத்தாலும் உன்னால் அது முடியாது. நம்ம ஆளு வேற யாரையாவது பாத்துடுமா என்ன?' எனத் திமிர் பொங்கச் சொன்னான் அதீதன். எனக்குச் சீண்டிப் பார்க்கும் ஆசை வந்தது. ‘சரி பார்க்கலாம்' எனத் திரும்பினோம்.

அதீதனைப் பற்றிப் பல விஷயங்கள் அவளுக்குத் தெரிந்திருந்தது - முக்கியமாக அவன் பல பெண்களுடன் வைத்திருக்கும் தொடர்பு பற்றி. அதுகுறித்து அவள் கவலைப்படவில்லை. என்னுடன் எப்படிப் பழகுகிறான் என்பதுதான் எனக்கு முக்கியமென்றாள். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

கறுப்பு நாய் விஸ்கியைத் திறந்து மூவரும் அருந்தத் துவங்கினோம். மூவரும் இளக ஆரம்பித்தோம்.

மெதுவாக வித்யாவிடம் ஆரம்பித்தேன்.. அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டபிறகு, அவளுக்கு வேறு யாருடனாவது தொடர்பிருக்கிறதா எனக் கேட்டேன். அவள் ஓ இருக்கிறதே என ஒப்புக் கொண்டாள்...

அதீதன் தவிக்க ஆரம்பித்துவிட்டான். அடுத்த பெக்கை ஒரே வாயில் விழுங்கினான். அவனது மாற்றத்திற்கான காரணம் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அறையில் கூடிக்கொண்டிருந்த அழுத்தம் கொஞ்சம் பயத்தைகூடத் தந்தது.

வித்யாவும் அதீதனும் மறுபடி சந்தித்துக் கொள்ளவேயில்லை.

வழமையாக

முன் அறிவிக்கப்படாத
கணமொன்றில் நிகழ்ந்தது அது

அழகற்றது
உணர்ச்சிக் குவியல்
ஏற்கனவே சொல்லப்பட்டதன்
சரியாய்த் தெரியாத நகல்
உயிரற்றது பாசாங்கானது
தோலால் மூடப்பட்ட எழும்பாத குறி
ஆபாசச் சிரிப்பு
பொருளற்ற வார்த்தை ஜாலம்

அற்புதமானது அழகானது உண்மையானது

முன் அறிவிக்கப்படாத கணங்களில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது

காமக் கதைகள் 45 (20 - 1)

மாலதியும் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்தவர்கள்; தூரத்து உறவினர்களும்கூட. அவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் படிக்கும் பெண்குழந்தை உண்டு. இருவருக்கும் மணவாழ்க்கையில் சிறுசிறு உரசல்கள்.

மாலதியின் சிறுவயது சிநேகிதி பிருந்தா. பிருந்தாவின் கணவன் தரணி. இவர்களும் காதல் திருமணமே.

பிருந்தாவின் மூலம் தரணியின் பழக்கமேற்பட்டது மாலதிக்கு.

பிரதீப் மாலையில் நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து மது அருந்துவான். மாங்காய் அரிந்து உப்பு மிளகாய்ப் பொடி தூவிக் கொடுப்பது, முந்திரிப் பருப்பு நெய்யில் வறுத்துக் கொடுப்பது மாலதி செய்ய வேண்டும். குடித்து முடித்தபின், அவர்களுக்கு தோசை அல்லது சப்பாத்தி சுட்டுத் தர வேண்டும். இதுகுறித்து இருவருக்கும் சண்டை வெடித்தது ஒரு நாள். மாலதியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறான் பிரதீப். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தனித்தனியே வாழத்துவங்கினர்.

மாலதிக்குப் தரணியின்மேல் ஈர்ப்பேற்படத் துவங்கியது.

அதீதன் வேலைசெய்து கொண்டிருந்த நிறுவன மேலாளர்களில் ஒருவர் தரணி. அவரைப் பார்க்கவரும்போது அல்லது தொலைபேசி அழைப்பை ஃபார்வார்ட் செய்யும்போதென மாலதியின் நட்பு கிடைத்தது அதீதனுக்கு. இருவரும் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவள் தரணிமேல் இருக்கும் காதலைச் சொன்னாள் அதீதனிடம். தரணியும் மாலதியும் நெருங்கினார்கள்.

'பிரதீப் மோசமான குடிகாரன், அவன்கிட்ட நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்ல' என்றாள் அதீதனிடம் மாலதி. திருமண வாழ்க்கையில் தான் அவனிடம் அடைந்த துன்பங்களைப் பட்டியலிடுவாள். அவனுக்கென்னவோ அவள் அதிகப்படுத்திச் சொல்வதாகப்படும். பேசாமல் கேட்டுக் கொள்வான். தரணியும் பெருங்குடிகாரனென்பது மாலதிக்குத் தெரியாமலிருக்காது!

- அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த தீப்தியை தரணி கணக்கு பண்ணிக் கொண்டிருந்தார். (தீப்தி நடிகை ராதா மாதிரி தளதளன்னு இருப்பாடா என்றான் அதீதன்). நடுவில் அதீதன் புகுந்து தீப்தியிடம் சிறுசிறு குறும்புகள் செய்து கொண்டிருந்தான். யாரோ இதை தரணியிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர்.

சவேரா ஹோட்டல் குளத்தினருகில் நடந்த பார்ட்டி ஒன்றில் தரணி 'i will kill you bastard' எனக் கத்தியபடி, அதீதனை உதைக்க காலைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார். சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதீதன் பயத்தில் உறைந்து போனான் -

மாலதியின் துரோகத்தை அறிந்ததும் பிருந்தாவிற்கு ஆவேசமேற்பட்டது. தரணியைப் பிரிந்து அவள் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவன இயக்குனருடன் இரண்டாவது மனைவியாக வாழ தன் குழந்தையுடன் ஹைதராபாத் சென்றுவிட்டாள்.

அவள் செயலின் நியாயம் அதீதனுக்குப் புரிந்தேயிருந்தது.

அங்கிருந்து அதீதனுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவாள். பிருந்தாவிற்கு அதீதனும் மாலதியும் நண்பர்களெனத் தெரியாது.

‘நீ என் தம்பி மாதிரி அதீதா. என்னால தரணியக்கூட மன்னிச்சுட முடியும். ஆனா மாலதிய மன்னிக்கவே முடியாது...' சகட்டுமேனிக்கு மாலதியைத் திட்டுவாள்.

‘தீப்தி விஷயமும் எனக்குத் தெரியும் அதீதா. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப்பட்ட ஆளுகூட வாழறது. அதுதான் முடியாதுன்னு கிளம்பிட்டேன்...'

'தரணி அந்த ஓடுகாலிகூடவே குடும்பம் நடத்தட்டும். அவ அந்தாளுக்கு டாடா காட்டிட்டுப் போவா பாரு, அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும்...'

மாலதிக்கு அதீதன் பிருந்தாவுடன் தொடர்பில் இருக்கிறான் என்பது தெரியும். அவனிடம் ‘அவ என்னைப்பத்தி ஊரெல்லாம் என்ன சொல்றான்னு தெரியும். அவ கதை எனக்குத் தெரியாதா' என்பாள். அவன் மய்யமாக ம்ம் என்பான்.

அதீதன் மாலதியுடனும் பிருந்தாவுடன் பேசுவது தரணிக்குத் தெரியாது. சிலசமயம் இருவரைப் பற்றியும் அவனிடம் பேசிக் கொண்டிருப்பார். பிருந்தா வீட்டில் நடக்கும் விஷயங்களை - இரவில் நடப்பது உட்பட - மாலதியிடம் சொல்லிவிடுவாளாம். 'நீங்க என்னைக் காதலிக்கும்போது எப்படி அவளோட படுக்கலாம்னு மாலதி சண்டை போடுவா அதீதா'.

'இப்படி ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரிடம் நட்பு வைத்துக் கொள்வது ரொம்பச் சங்கடமானது... ஞாபக சக்தியைச் சோதிக்கக் கூடியது' என்றான் அதீதன் என்னிடம்.

சொல்ல விட்டுப்போனது : தரணியும் பிருந்தாவும் மலையாளிகள். பிருந்தா பேசும் தமிழ் மலையாளத்தைப் போலவே இருக்கும். நடுநடுவில் மலையாள மற்றும் ஆங்கிலக் கலப்போடு அவள் பேசும் தமிழ் அழகானது. அதீதனுக்கு அவள்மீது ஒரு இனந்தெரியாத கவர்ச்சியிருந்தது.

(இந்தக் கதை முடியவில்லை, இன்னுமிருக்கிறது....)