இலக்கடைதல்

எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
விலகி வழிவிட்டால்
வேறொருவர் இடிக்கிறார்
அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
மேடு பள்ளங்களைக் கையாள்வது
சாதாரணமாகவே கடினம் -
மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்
முக்கியமென நண்பர் சொல்கிறார்
எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை

இன்றைய கவிதைக்காரன்

'முன்னேறிச் செல்ல
முழுப் பாதை தெரிய வேண்டும்'
சின்னச் சின்ன வரிகளாய்
அறிவுரைகளாய் கவிதை எழுதுவார் அவர்
வார்த்தைகளை மாற்றி மாற்றி
மாற்றி வைத்து
வித்தை புரிவார் இன்னொருவர்
ராஜ ராகங்களிலும்
சோகச் சுற்றுலாக்களிலும்
தொலைந்து விடுவார் சிலர்
ஞாபகச் செதில் மன அடுக்கு
என எழுதுவார் இவர்
கிண்டல் செய்து தடாலடி
கவிதை எழுதுவதே மற்றொருவரின் பாணி
இல்லாத பேரர்த்தத்தை
இருப்பதைப் போல் பாவனை
செய்வார் பிறிதொருவர்
ஒவ்வொன்றாய்ப் படித்து
ஒவ்வொன்றாய் எழுதி
எப்படி முன்னேற
இன்றைய கவிதைக் காரன்

குட்டிக் கவிதைகள்

மொழி புரியா நகரத்தில்
வந்த பாதை செல்லும் இடம்
எல்லாம் குழப்பம்
***

ஆண் மூலம் அரசாளுமாமே
எனக்கேன் எரிகிறது
***

தெருவோர விலைமகளிரின் பொழுது
கரைந்து கொண்டிருக்கிறது
வாகனங்களின் சப்தங்களில்

உலகமயமாக்கல் - அதியமான் - எதிர்வினை

க.ர. அதியமான் ஒரு பதிவிட்டுள்ளார். பார்க்க : http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_1502.html. முழுக்க முழுக்க மறுக்கப் பட வேண்டியது இக்கட்டுரை. எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.

/ /ல் வருவது அவர் பதிவிலிருந்து எடுத்தது. வேறு வழியில்லை. 'மேற்கோள் யுத்தம்' செய்து தான் ஆக வேண்டியுள்ளது :)

/முதல்ல உலகமயமாக்கல் என்றால் என்ன ?
பெரும்பாலானோருக்கு சரியா புரியாமலே 'எதிர்பதாக' சொல்கிறார்கள்/

சரி, விளக்குங்களேன். தெரிந்து கொண்டே ‘எதிர்க்கிறோம்'.

/இந்த தமிழ் blogs/posts , ஆர்குட்/கூகுள் என்னும் அமேரிக்க நிறுவனமும்,
இன்னும் பல இணைய மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனக்களும், தொலைதொடர்பு
நிறுவனங்களின் அபாரமான வளர்சியில் விளைவுதாம். அவைகளை இந்தியாவிற்க்குள்
அனுமதித்து உலகமயமாக்கலின் ஒரு அங்கம்.
அதை எதிர்க்கிறவர்கள், இந்த tamilblogs/posts/groups ஆணிவேரையை
எதிர்ப்க்கிறார்களா ? எப்ப‌டி ? உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இல்லாம‌ல் இந்த‌
அர‌ங்க‌மே சாத்திய‌மில்லையே ? முர‌ண் தொகை !!!/

1. தொழில் நுட்ப முன்னேற்றங்களை உலகமயமாக்கலால் தான் சாத்தியமானது எனச் சொல்ல முடியுமா.? wheel, ரேடியோ, தொலைக்காட்சி, தொலைபேசி எல்லாம் வந்தது உலகமயமாக்கலுக்கு முன்னாலா அல்லது பின்னாலா.?

2. முரண் தொகை எனச் சொல்வது முரண்நகையைத் தானென நினைக்கிறேன். ஒரு சமூகத்தில் இயங்குவதால் அதில் உள்ள பாதகமான அம்சங்களை விமர்சிப்பதில் என்ன முரண்நகை இருக்க முடியும்.? இதை இவர் செய்வதில்லையா.?

/சிறிபெரும்புதூர் தொடங்கி, ஒரகடம், மறைமலை நகர் வரை, சென்னையை சுற்றி
நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்
அதற்க்கு பல உதிர்பாகங்கள் தயாரிப்போர் நிறுவனங்கள் க‌டந்த 15
ஆண்டுகளில், உலகமயமாக்கலின் விளைவாக‌ உருவாகின. அதில் பல ஆயிரம்
பேர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு அபாரமான வரி வசூல், அன்னிய
செலாவாணி, மக்களுக்கு மலிவான தரமான பொருட்க்கள் (உ.ம் : நோக்கியா
செல்போன்கள்)..../

இதன் பாதக அம்சங்களை ஏன் பட்டியலிடாமல் வசதியாக மறந்து விட்டார்.? உதா. hire and fire policy etc. அப்புறம் இந்தத் ‘தரமான'ங்கற வார்த்தையை கேட்டாலே என்னவோ போலிருக்கிறது :)

சரிங்க, stp / ehtp நிறுவனங்களுக்கு வரி விலக்கு (வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரி - எல்லா வரிகளும்) அளிப்பது எதனால்.? ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டும் சென்னைத் துறைமுகத்தில் சகாய விலை (subsidised rates) எதனால்.?

/சரி, இவை எல்லாம் அனுமதிக்கபடாமல், 1990 வரை இருந்த மாதிரியே
தொடர்ந்திருந்தால், நம் நிலைமை இன்னும் 'நன்றாக' இருந்திருக்குமா ?
அல்லது மோசமாகியிருக்குமா ?/

சிலரின் வாங்கும் சக்தியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், பலரின் வாழ்க்கை நிலையை கணக்கில் கொண்டால், நன்றாக இருந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

/இவற்றின் சாதக/பாதகங்கள் என்ன ? உலகமயமாகலுக்கு பின் தான் தனியார்
துறைகளில் இப்ப வேலைவாய்ப்புகள் மிக மிக அதிகம் வளர்ந்துள்ளது. 1980இல்
வெளியான கமல் படம் 'வறுமையின் நிறம் சிகப்பு' பார்க்கவும், அன்றைய
சூழ்னிலை பற்றி அறிய. 1965க்கு முன் பிறந்தவர்களிடமும் விசாரிக்கவும்,
வேலை வாய்ப்புகள் பற்றி./

உலகமயமாக்கலின் 'சாதனைகள்' :

1. வினாயகர் சோடா, பொவண்டோ போன்றவை கிட்டத்தட்ட காணாமல்
போனது

2. ராமலிங்க ராஜு, அஜிம் பிரேம்ஜி போன்ற பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்கியது

3. ஏழைகளைப் பிச்சைகாரர்கள் ஆக்கியது

4. என்ன சொல்ல வருகிறார்.? விட்டால், வேலை வாய்ப்புகளே உலகமயமாக்கலுக்குப் பின் தான் வந்தது என்கிறாரா.?

பொதுவாக கேப்பிடலிசத்தினால் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டது உலகமயமாக்கல் மட்டுமே என்பதால் அதைத் தவிர்ப்போம்.

அவர் பதிவில் எழுதிவற்றை முழுவதுமாக எடுத்து எழுதியிருக்கிறேன். பிற அவர் பதில் கண்டு...

பரஸ்பரம்

தெருவில் எப்போதும்
அலைந்து கொண்டிருக்கும்
இந்தக் கறுப்பு நாயை
எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அகால வேளைகளில்
வீடு திரும்பும் போது குரைக்காது
வாலைக் குழைத்தபடி
ஓடி வந்து கால்களை நக்கும்
நான் பிஸ்கெட் போடுவேன்
பிஸ்கெட் போடாவிட்டால்
கால்களை நக்குமா
கால்களை நக்கா விட்டால்
பிஸ்கெட் போடுவேனா

காதலாகி, கசிந்துருகி

பழகிப் போன தடத்திலேயே
பறக்க விரும்புகிறது
உயிர்ப்பறவை சிறகடித்து

விரலுக்கு விரல்
வித்தியாசப் படுகிறது
வாசற் கோலம்

ஒருமையை நாடுகிறது மனம்

கடைசிக் கவிதை

மனதிற்குப் பிடித்த பாடல்
தொலைவில் ஒலிக்கிறது
வேகமாக ஓடுகிறேன்
போவதற்குள் பாடல்
முடிந்து விடும்
எனத் தெரிந்தும்

பெரிது கேள்

தண்ணீர் இழுக்கத் தேவையின்றி
குழாயில் நீர் வந்தால்
முழித்த முகம் நல்ல முகம்

ரயில் நிலையம் வந்தவுடன்
ரயில் வந்தால் நேரம் நல்ல நேரம்

டீக்கடை காபி
பாயாசமாய் இல்லாதிருந்தால்
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

ஒழுங்காய் வேலை செய்து
ஷொட்டு வாங்கினால்
நல்லது ரொம்ப நல்லது

மதிய தயிர்ச் சாதம்
புளிக்காமல் இருந்தால்
நீரூற்றிச் சாப்பிடலாம்
நிறைவாய் இருக்கும்

செலவில்லாமல் குவார்ட்டர் கிடைத்தால்
ஆத்ம சந்தோஷம்

காய்கறிகள் வாங்கிக் கொடுத்து
மனைவி திருப்தியடைந்தல்
நிம்மதி வெகு நிம்மதி

நேரத்திற்குப் படுத்து
உறங்க முடிந்தால்
சொர்க்கமோ சொர்க்கம்

காணி நிலம் வேண்டாம் பராசக்தி
பத்துக்கு எட்டு அறை போதும் -
வாடகைக்கு

நாய்களைப் பற்றி

கிறுக்குத் தனங்கள் எதுவும் செய்யாமல் நேரடிக் கதை எழுத முடிவு செய்து கொண்டு ஆரம்பிக்கிறேன். பார்ப்போம், முடிகிறதா என்று.

குடிபோதையில் இரவில் வரும்போது இந்த நாய்களின் தொல்லை தாள முடியவில்லை. குடியையும் விடமுடியாது, நாய்களையும் ஒன்றும் செய்ய இயலாது (சூர்ணம் திங்காது பூர்ணனாக ஏலாது - விக்ரமாதித்யன்).

இருபது வருடமாக ஒரே மாதிரியான ரயில் பயணம். இரவு 10.50க்கு ரயிலேறினால் கொரட்டூரில் இறங்க 11.20 ஆகிவிடும். நிலையத்தை ஒட்டி இருக்கும் மூத்திரச் சந்தைக் கடந்து, அடுத்த தெருவில் ஓடும் சாக்கடையைத் தாண்டிக் குதிப்பதற்குத் தனித் திறமை வேண்டும். இத்தனையும் போதாதென்று நாய்கள் வேறு. சொறி பிடித்த நாய்கள்.!

என்னுடைய தம்பி நாய் வளர்க்க ஆசைப் பட்டபோது அதை நிராகரித்தேன். அம்மாவிற்கு நாய் வளர்ப்பதில் உவப்பில்லை. நாய்க் குட்டிகள் வீட்டில் அசிங்கம் செய்தால் யார் சுத்தப் படுத்துவது என்பது அவர் கவலை. தம்பி அடம்பிடிக்க, அப்பாவும் என்னிடம் பேசிப் பார்த்தார். வீட்டை விட்டே ஓடி விடுவேன் எனப் பயமுறுத்தி நாய் வளர்ப்பதை நிறுத்தியிருந்தேன்.

சிறு வயதில் கையில் பன்னுடன் வரும் போது நாய் ஒன்று துரத்தி, நான் தெரு நடுவில் ஓடிய சாக்கடையில் விழுந்தது இன்னும் நினைவடுக்குகளில் இருக்கிறது. அப்போது வெளியூருக்குச் செல்ல நல்ல ஆடை வேறு உடுத்தியிருந்தேன். அப்போதிருந்தே நாய்கள் மேல் வெறுப்பு.

சரி, நாய்களைப் பற்றிக் கதை சொல்ல ஆரம்பித்து என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நகுலனின் நாய்கள் நாவலைச் சமீபத்தில் படித்து முடித்திருக்கிறான் கதிரவன். அவன் வீட்டில் வளர்பது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய். தெரு நாய்களின் தொல்லை பற்றி அவனுக்குத் தெரியாது. இது தெரியாமல் என்ன பெரிய எலக்கியம், நகுலன் லவ்டாவெல்லாம்.? உன்னைத் தெருநாய் கடித்திருக்கிறதா, அரசு 24 மணிநேர மருத்துவமனையில் தொப்புளைச் சுற்றி ஊசி போட்டிருக்கிறாயா.?

ஐயோ, ஐயோ, சரியான போர் அந்த நாவல். நீங்கள் மனம் பிறழ்ந்தவராகவோ அல்லது தனக்குள் பேசிக் கொள்பவராகவோ இருந்தால் நகுலனின் உலகில் நுழைவது எளிதாம். அடேய் என்னடா பம்மாத்து பண்றீங்க.? எந்த விதத்துல வைரமுத்து நகுலனுக்கு குறைந்து விட்டார் என கேட்க நினைத்தேன். ஆனால் தொலைக் காட்சியில் ஐபிஎல் 20/20 மேட்ச் பார்க்க அவசரமாகக் கிளம்ப வேண்டியிருந்தது.

கிரிக்கெட் என்றாலே பிடிக்காது மோகனுக்கு. மேட்டுக் குடி ஆட்டம் என்பான். காலனியாதிக்கப் பாதிப்பு என்பான். அவன் சொல்வதில் பாதி புரியாது. ஏன் இவ்வளவு சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை என்பது புரியவில்லை. தொலைக்காட்சி பார், கிரிக்கெட்டை ரசி. நடுவில் வரும் விளம்பரங்களுக்குக் கை தட்டு, சந்துஷ்டியாகக் கழியட்டும் பொழுது. சில அதி புத்திசாலிகள் சொல்லுகிறார்கள், சியர் லீடர்ஸ் கூடாதாம். அடப் பாவிகளா.! செக்ஸ் வறட்சியால் வாடும் என் போன்றவர்களுக்கு இது வரை இருந்த ஒரே விளையாட்டு மகளிர் டென்னிஸ் தான் என்ற நிலையை மாற்றி வாராது போல் வந்த மாமணியாய் வந்திருக்கிறது 20/20. அதிலும் மண்ணள்ளிப் போடப் பார்க்கிறீர்களே...!

கோபண்ணன் வீட்டில் ப்ரௌனி என்ற பெயரில் நாய் வளர்த்தார்கள். என்னைப் பார்த்தாலே ஏதோ முன் ஜன்ம விரோதியைப் பார்த்தது போல் கத்த ஆரம்பித்து விடும். கோபண்ணன் மிக அன்பானவர் - அதை நன்றாக குரைக்க விட்டு விட்டு, பிறகு, 'டோண்ட் ஷவுட்' என்பார் (நாய்களிடம் பலர் ஏன் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் என்பது புரியாத புதிர்). அது பாய்ந்து என் குரல் வளையைப் பிடித்து விடுமோ என அஞ்சிக் கொண்டே இருப்பேன். அவர் வீட்டிற்குப் போகாமல் இருக்க முடியாது - அவரிடமிருந்து தான் 100, 200 என்று அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

பணத்தை உடனே கொடுத்து அனுப்பி விட மாட்டார். பிரௌனி புகழ் பாடுவார் சிறிது நேரம். கறி சோற்றை வைத்து விட்டு, அவர் அனுமதித்த பின் தான் வாய் வைக்குமாம். அவ்வளவு கட்டுப் பாடாம்! இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரௌனியை அருகில் இழுத்துப் பாசமாகத் தடிவித் தருவார். அது என்னையே முறைத்த படி, அவருக்கு வாகாக கழுத்தை நீட்டிக் காண்பிக்கும். நானும் ஈ என்று இளித்துக் கொண்டிருப்பேன். பிரௌனி கூட ஒரு காரணமாயிருக்கலாம் நாய்கள் மேல் வெறுப்பு வருவதற்கு.

இங்கே ஒரு போட்டி வைக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் முதலில் எடுத்த சங்கல்பம் என் கைகளைக் கட்டிப் போடுகிறது.

நாய்கள் பற்றிய பல அதீதக் கதைகள் உலவுகின்றன மக்கள் மத்தியில். அவற்றில் ஒன்று பேய் நடமாட்டத்தை நாய்கள் உணரும் தன்மை பற்றியது. இதைப் பற்றி விரிவாக எழுதும் ஆசையை அடக்கிக் கொள்கிறேன்.

நாய்கள் என்று சூசகமாகக் சில கவிஞர்கள் 70களில் மாற்றி மாற்றித் திட்டிக் கொண்டதை கதிரவன் சிரித்துக் கொண்டே சொன்னான். நவீனக் கவிதைகளின் முன்னோடிகளாம்! ஆக்ரோஷமாய் நாய்கள் நான்கைந்து பாய்ந்து சண்டை போடும் காட்சி மனதில் வந்து போகும். அவர்களையும் நாய்கள் கடித்திருக்குமா எனத் தெரியவில்லை. எதற்குக் கவிதைகளில் திட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அப்போது இந்த அளவிற்கு தொலைத் தொடர்பு வசதி இல்லையாம். நல்லதாய்ப் போயிற்று.

தினசரியில் படித்த ஒரு செய்தி தூக்கி வாரிப் போட்டது. கல்பாக்கம் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு கைக்குழந்தையை நாயொன்று கடித்தே கொன்றிருக்கிறது. அப்போது வீட்டில் எல்லாரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் வேறொரு அறையில். நாயைச் சொல்வதா அல்லது தொலைக் காட்சி சீரியலைச் சொல்வதா.?

இதற்காகவே நாய் இனத்தை அழித்தொழிக்கலாம்.

யோசித்துப் பார்க்கும் போது நான் கூட ஒன்றிரண்டு நாய்களைப் பற்றி எழுதியிருப்பது நினைவிற்கு வருகிறது. அத்தனையும் எதிர் மறை எழுத்துகளே என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்தக் கதை அப்படியிருக்கக் கூடாது என்பதால் நாய்களைப் பற்றிய சில நல்ல விஷயங்களையும் கூறிவிடுகிறேன்.

வீடு

நாய்கள் விளையாடிக்
கொண்டிருந்தனவாம் இவ்வீட்டில்
மாடும் கன்றும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனவாம்
புறாக்கள் பறந்து கொண்டிருந்தனவாம்
அணில்கள் லாந்திக் கொண்டிருக்குமாம் எந்நேரமும்
உறவுகளும் நட்புகளும் பேசிச் சிரித்து
கூடி மகிழ்ந்திருந்தார்களாம் இவ்வீட்டில்
இப்போது கடன் காரர்களின் ஏசல்கள் கூட இல்லை
எல்லாரும் எல்லாமும் கைவிட
கழிகின்றன பொழுதுகள் சலனமற்று

வாழும் வழி

சிலவற்றை நம்பியே ஆக வேண்டியிருக்கிறது

கடவுளை
கடைக்காரரை
சக ஊழியர்களை
புத்தகங்களை
காதலியை
கற்றுக் கொண்ட பாடங்களை
மருத்துவரை
... ...

அல்லது நம்புவது போல நடிக்கவாவது

பூனை பறக்கும் ஓவியம்

சிறு கல்லைக் கால்களால் எத்தி எத்தி
விளையாடுகிறான் சிறுவனொருவன்

ஒன்றுமில்லாததைப் பற்றி
எவ்வளவு தான் பேசுவது.?!

அழித்தொழிப்பு வேலை நடக்கிறது
காந்தியின் ராஜ்ஜியத்தில்
செயலற்றுப் போன அரசாங்கங்கள்
நம்பிக்கை வைக்க பின்பற்ற தொழ
தலைவனில்லாது போன சோகம்

எதிர் இருக்கையில் அமர்ந்து எக்கனாமிக் டைம்ஸ்
படித்துக் கொண்டிருக்கிறார்
கனவானாய்க் காட்டிக் கொள்ளும் ஒருவர்
காலொடிந்த சிறுமி அழுக்கு ஆடையுடன்
பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாள்
பக்க விரிசல்களில் சிக்கிக் கொண்டிருந்த
விளம்பரத் துண்டுகள் கீழே சிதறுகின்றன
அக்காகிதங்களைப் படித்துப் பூப்படைகிறாள்
(வேறொரு) சிறுமி

எல்லோர்க்குமான ரயில் வந்து கொண்டேயிருக்கிறது

பட்டண வேலை

வெகு நாட்கள் கழித்து
ஊருக்கு வருவான்
பட்டண ஓட்டலில்
வேலை செய்யும் சிறுவன்
காதோரம் வளர்ந்த
முடியை ஒதுக்கி
ரஜினி ஸ்டைல் என்பான்
தங்கை விழி மலர அதிசயிப்பாள்
அக்கா மனதாரச் சிரிப்பாள்
அப்பா
பட்டணத்தில் என்னவெல்லாம்
சல்லிசாகக் கிடைக்குமென
விசாரிப்பார்
இவனுக்குப் பெருமையாயிருக்கும்
ஓட்டலில் தான் பட்ட
அவமானங்களை மறப்பான்,
தற்காலிகமாக

(மாலைக் கதிர் நவம்பர் 1995ல் வெளியானது)