லக்கி லுக்கிற்கு வந்த சில பின்னூட்டங்களை அவர் வெளியிடவில்லையென கொஞ்ச நாட்களாக பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கந்த அனுபவமில்லை.
நான் பதிவெழுத வருமுன்பே அவருடைய கருத்துகளை மறுத்து எழுதிய பின்னூட்டங்களை அவர் வெளியிட்டே உள்ளார்.
ஆனால் வெளியிடவில்லை எனச் சொன்னவர்களுக்கு அவரது பதில்கள் ஆணவத் தெறிப்புகளாயுள்ளது. என்னுடைய பெயரை உபயோகிப்பதால் அவர்களுக்கு போணி ஆகிறது, மப்பில் வேறு எங்காவது போட்டிருப்பார்கள் என்பதெல்லாம் ஆணவமன்றி வேறென்ன??
லக்கி லுக்கின் எழுத்துகளிள் எனக்குப் பிடித்தது அவரது அரசியல் நிலைப்பாடு.
வால்பையனின் ஞாநி பற்றிய பதிவில் சில விஷயங்கள் ஏற்புடயவையே. ஆனால் அவர் ‘நான் இந்தியன்' ‘ஜாதி வித்தியாசங்கள் இல்லை' மாதிரியான பிரகடனங்கள் எரிச்சலூட்டுகின்றன. அவர் அரசியல் - நீக்கம் செய்வதாய் நினைத்துக் கொண்டு செய்யும் சில காரியங்களும். அவ்வளவு சிம்பிள் இல்லை வால்பையன்.
இருவரும் எனது நண்பர்களே. இப்படி எழுதுவதால் கோச்சுக்காதீங்க மக்கா...!!
***
நிறைய எழுதுவதா குறைவாய் எழுதுவதா எனச் சிலருக்கு அவ்வப்போது சம்சயம் வந்துவிடுகிறது. கநாசு ஒரு நாளைக்கு 25 பக்கங்கள் எழுதுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்துடன் ஒப்பிட்டால் இங்கு பதிவில் 'நிறைய' எழுதுபவர்கள் குறைவாகவே எழுதுகிறார்கள். நிறைய எழுதவேண்டும், தேர்ந்தெடுத்து, நிறைவாய்ப் பதிவிட்டால் நலம்! சிலர் சினிமா விமர்சனங்களாகவும் மொக்கையான கருத்து உதிர்ப்புகளாகவும் எழுதித் தள்ளுகின்றனர். இன்னும் சிலர்... சொல்லவே வேண்டாம் கட் & பேஸ்ட்தான்!
***
ஆரம்பித்த சில மாதங்களிலேயே தமிழிஷ்.காம் (www.tamilish.com) நிறைய பேரால் பார்க்கப்படுகிறது. இது வழக்கமான திரட்டியல்ல. சிலர் வாக்களித்து பதிவுகளையோ அல்லது செய்திகள் / படங்களையோ பிரபலமாக்குகிறார்கள். அப்படிப் பிரபலாமக்கப்பட்டவை முதல் பக்கத்தில் சில மணிநேரங்கள் இருக்கின்றன. அலெக்ஸா ரேட்டிங்கில் இப்போது அது தமிழ்மணத்தைவிட முன்னேறியிருப்பது தமிழிஷின் சாதனையே.
***
என்னுடைய காமக் கதைகளுக்குப் பின்னூட்டங்கள் திரட்டப்படாதென தமிழ்மணம் அறிவித்திருந்தது முன்பு. ஆனால் போன கதைக்கு *** என வந்து பின்னூட்டங்கள் திரட்டப்பட்டிருந்தது. இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. *** பார்த்து ஆவல் தூண்டப்பட்டு அதிக வாசகர்கள் வந்துவிடுகிறார்கள். நம் மக்களின் செக்ஸ் வறட்சி அப்படி!
எப்படியும் பாண்டிச்சேரி பெண்கள் யாராவது தமிழ்மண நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தப் போகிறார்கள். அதற்குமுன்பு அந்தக் காரியத்தை நாமே செய்துவிடலாமே என்றுதான் இக்குறிப்பு :)
***
திமுக சார்புப் பதிவுகளே அதிகமிருந்த நிலையில் இப்போது எதிர்ப்புப் பதிவுகளும் நிறைய வருகின்றன. இது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களின் மொழி வன்மத்தைக் கக்குவதாகவே இருக்கின்றன. கயவன் கருணாநிதி போன்ற வார்த்தைகளை அனாயசமாக வீசிச் செல்கிறார்கள். வார்த்தைகளல்ல, அவற்றின் பின்னிருக்கும் வன்மமே என்னைச் சங்கடப்படுத்துகிறது.
***
R P ராஜநாயஹம் இப்போது பதிவெழுதுகிறார். இவரது எழுத்துகளை அங்குமிங்குமாக 1990களிலிருந்தே படித்துவருகிறேன். இப்போது, அவரது பெயரை நாகார்ஜூனன் பதிவொன்றின் பின்னூட்டத்தில் பார்த்து கிளிக் செய்து அவரது பக்கத்திற்குப் போனேன். பிறகு ரீடரில் வைத்துத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ராஜநாயஹம் என்றாலே சிலருக்கு மு தளையசிங்கம் / தொழுகை / ஊட்டி / ஜெமோ இந்தப் பெயர்கள் உடனடியாக நினைவிற்கு வருபவை! இவரது பதிவைப் பற்றி இதுவரை சாரு நிவேதிதா, பிரகாஷ், ஸ்ரீதர் நாராயணன் எழுதியிருக்கிறார்கள்.
இப்போது தமிழ்மணத்திலும் அவரது பதிவுகள் வருகிறது. அவருடைய sadism பதிவு தமிழ்மணத்தில் வந்ததா எனத் தெரிந்துகொள்ள ஆவல். எனக்கு அந்த இடுகை பிடித்திருந்தது. பாண்டிச்சேரியிலிருப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை!!
***
காலச்சுவடு செய்யும் அலப்பறை தாங்கமுடியவில்லை. அவர்களது பத்திரிகையை நூலகங்களில் வாங்கவில்லையென்றால் அது கருத்துரிமையின் குரலை நெறிக்கும் செயலாம். இதுபற்றி வினவு விரிவாக எழுதியிருக்கிறார் (http://vinavu.wordpress.com). படித்துப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.