வாடிக்கிடந்த சாமிகளுக்கு
ஆடிக்காலம் கொண்டாட்டம்
சுடலை மாடன் இசக்கி பேச்சி
பிரம்ம சக்தி முண்டன் முனியன்
உச்சி மாகாளி மாரியம்மன்
வடக்கு வாசிசெல்வி பத்ரகாளி
முத்தாரம்மன் பூதத்தான் சங்கிலி
இன்னபிற பெயரில்லாப்
பூடங்களும் பூஜைக்குத் தயாராவர்
கூரையில்லாக் கூத்தனுக்கும்
குறைவில்லாப் படையலுண்டு
கொட்டு மேளம் குறவை
நையாண்டி கணியன் வில்லுப்பாட்டு
கும்பம் குமரி குட்டைப் பாவாடை
செவியடைக்கும் டென்ஷனில்
செல்லப்ப வாத்தியார் இடுப்புக் கச்சுடன்
வாங்கிய காசுக்கு
வராத சாமிக்காக
வயிறு எக்கி வாசிப்பான்
வட்டக் கோட்டை நாதஸ்வரம்
சுடலையை கடைசிவரை
தாமிரபரணி தாண்டாமல்
பார்த்துக் கொள்வாள்
சுசீந்திரம் வில்லுக்காரி
காது பொத்திப் பாடும்
கணியான் பாட்டு காற்றில்
வார்த்தைகளற்று கரையும்
கடன்காரன் எதிர் வரா
தைரியத்தில்
மயான வேட்டைக்குச் செல்லும்
மாசானத்திற்கு
மத்திய அமைச்சரின் மிடுக்கு
அறுப்பவன் கத்தியையே
பார்த்துக் கொண்டு ஓசைக்கு
அஞ்சிக்கிடக்கும்
உருண்டு திரண்ட கிடாக்கள்
இறுதியில் கிடைக்கும் கிடாக்கறி
ஊர்ப் பெரிய கிடாக்களுக்கு மட்டும்
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு
எப்போ அடுத்த ஆடி
என்றிருப்பான்
எல்லைச் சாமி
குமார்ஜி எழுதியது