எதைப் பற்றியும்

பூனை ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடிக் கொண்டிருந்தது
படித்துவிட்டுப்
புரியவில்லையே என
யோசித்துக் கொண்டிருந்தேன்
மழை பெய்யப் போவது போல்
வந்த மேகங்களைக்
கிழித்துக் கொண்டு
சூரிய ஒளி
கல்யாண மேடையில்
தாலி கட்டிக் கொண்டிருந்தான்
முறைத்துப் பார்த்துப் போனது
நான் காடு பள்ளம்

(நடு கல் 14 - 1994 ஏப்ரலில் வெளியானது)

சூசிப் பெண்ணே ரோசாப் பூவே

நகுலன் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் - கவிஞர். அவரைப் பற்றிய பேச்சுவந்தால் நாளெல்லாம் பேசி / கேட்டுக் கொண்டிருப்பேன். அவருடைய சில கவிதைகளை என்னுடைய குறிப்புகளுடன் பதிவிடவேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம். அதற்கு முன்னோட்டமாக இது.

நகுலனின் பேட்டியொன்று 1991ல் கல்குதிரை (நகுலன் சிறப்பிதழ்?) வந்திருந்தது. அப்பேட்டியில் அவரது கவிதையொன்றின் வரிகளைக் கொடுத்து விளக்கச் சொல்லியிருப்பார்கள். அது பற்றி அப்போது நண்பர்களிடம் பேசியது நினைவிருக்கிறது.

இப்போது நகுலன் இலக்கியத்தடம் புத்தகத்தில் அதை மீண்டும் படித்தபோது அந்த ஞாபகங்கள் துளிர்விட்டன. பேட்டியின் அப்பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.

கவிதை வரிகள் :

1. காகிதம் கிறுக்கிக் கவியானேன்
2. இருந்தாலும்
3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு
4. மனம் நினைவு கூறும் அந்த முள்பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.
5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே
6. சாதாரண பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும்.
7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் ஆனந்தத்தை எய்துகிறேன்
8. நான் நானாக நாலுவிதம்
9. மனிதன் சாவிற்கு உள்ள அர்த்தத்தை கற்பிக்குமாறு போல
10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை

இனி அவரின் 'விளக்கங்கள்'. இது கவிதை மற்றும் கவிதையாக்கம் குறித்த அவரது thought processஐ புரிந்து கொள்ள உதவியாயிருக்குமென நினைக்கிறேன். :

1. காகிதம் கிறுக்கிக் கவியானேன் :

நான் முன்பு சொன்னமாதிரி முறையான படிப்பு படித்ததை படித்தபடியே சொல்வது என்பது - நமது சிந்தனை வளர்ச்சியை தடுக்கிறது. மாணவன் என்ற நிலையிலும் விரிவுரையாளன் என்ற நிலையிலும் எனக்குத் தெரிந்த வரையில் நான் அதிகமாக யாரையும் என்னைக் கவனிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. என்னமோ படிக்கிறேன் அது எங்கேயோ போகிறது. அது எப்பொழுதோ மேல் விளிம்பில் வருகிறது. அப்பொழுது எழுத்து உருவாகிறது. ஒரு வழியில் சொல்லப்போனால் நாவிலிருந்துதான் நாதம் முளைக்கிறது என்று தோன்றுகிறது. பிளேட்டோ சொன்னமாதிரி நம் மனதில் இருப்பதைத்தான் நாம் எந்தப் புஸ்தகத்திலும் பார்க்கிறோம். இங்கு சொல்லப்பட்ட வரிகளில் முதல்வரி என் நினைவு சரியென்றால் தி சோ வேணுகோபலின் கவிதை ஒன்றிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன்.

2. இருந்தாலும் :

இருந்தாலும் என் புத்தி பின்னர் எந்த ஒரு கருத்தையோ அனுபவத்தையோ சோதனை செய்யும் ஒரு திருப்பம்.

3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு :

இது வர்ஜீனியா உல்ஃப் என்ற ஆசிரியையின் ஒரு புஸ்தகத்திலிருந்து என் மனதில் புகுந்ததென்று நினைக்கிறேன். நமது பரிபாஷையில் சொல்வதென்றால் சிருஷ்டி என்பதுகூட அர்த்த நாரீஸ்வர வடிவந்தாங்கியது, அது தொழில் படுகையில்.

4. மனம் நினைவுகூறும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது :

இதுகூட மிகவும் நைந்து போன விஷயம். இதன் அடிப்படை படைப்புத் தொழிலை நாம் முன்கூட்டிக் கருதிச் செய்யமுடியாது என்பதுதான். இந்த அடிப்படை தற்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. என் வகையில் இதைச் சொல்வதென்றால் என்னை அறியாத ஒரு வேகத்திற்கு ஆட்பட்டு நான் செயல்படுகிறேன்.

5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே :

இதுவும் ஓசை இன்பத்திற்காக எழுதப்பட்டது. இதற்குப் பின்னால் சுசீலா என்று கூறப்படும் ஒரு பெண்ணின் உருவம். இதைக் கூறுகையில் இந்த சுசீலாவைப் பற்றி ஒரு நண்பர் கூறியது ஞாபகம் வருகிறது. சுசீலாவின் சிறப்பு சுசீலாவில் இல்லை என்று.

6. சாதாரணப் பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும் :

இது H G வெல்ஸ் எழுதிய நாவலில் வாசித்த வாக்கியத்தின் மனதில் பதிந்த வரி.

7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் நான் ஆனந்தத்தை எய்துகிறேன் :

இதற்குச் சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வேளை ஒரு பைத்தியநிலையாகவும் இருக்கலாம். தற்கொலை என்பதற்கு ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நான் தற்கொலை செய்ய முயற்சித்ததுண்டு. ஆனால், நான் அதில் செயல்படவில்லை. இன்றுகூட சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. இனியும் வாழ்ந்து என்ன பயன். தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று, அவர் சொன்னார் : 69 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இதை ஏன் சொல்ல வேண்டும் முன்னாடியே செய்திருக்க வேண்டும் என்றார். இதன் அடிப்படை எந்த ஒரு குறிக்கோளையும் அடைவதற்கு - அடைவதென்பதே நம்மை நாமே சித்ரவதை செய்வது போன்ற ஒரு அனுபவம். ஒரு வகையில் தோன்றுகிறது. திருப்தியான வாழ்க்கை உடையவர்கள் படைப்பிலக்கியம் படைக்க முடியாதென்று.

8. நான் நானாக நாலுவிதம் :

இதற்குக்கூட மூலம் D H லாரன்ஸ் எழுதிய ஒரு வாக்கியம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட உருவம் உண்டு, என்ற நிலையை இன்று நாம் காண்பதற்கில்லை என்று அவர் சொல்லியிருந்தார். பல உணர்ச்சிகள் பல சிந்தனைகள் தன்னோடு வாழ்வதற்கு தான் ஒரு வடிகால் என்ற அளவுக்கு மனிதத் தனித்துவம் மாறுபட்டு விட்டதென்று.

9. மனிதன் சாவதற்கு உள்ள அர்த்தத்தைக் கற்பிக்குமாறு போல :

இதற்குப்பின் பலமனிதர்கள் - வள்ளுவர் வேறொரு நிலையில் வேறொரு பொருளில் கூறிய மாதிரி, சிலரைக் காணும்போது செத்தவர்களும் உயிருடன் இருக்கிறார்களே! என்ற ஒரு வியப்புணர்ச்சி.

10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள் :

இவையெல்லாம் கேள்விமூலம் படித்த புத்தகங்கள் பிரக்ஞையில் விட்டுச் சென்ற பகுதிகள். Grdrudestin ஒரு இடத்தில் ஒரு வார்த்தையைத் திருப்பித் திருப்பி எழுதினால் அதற்கு பல்வேறு அர்த்தங்கள் வேண்டுமென்றில்லை என்று சொல்லியிருக்கிறான். அவருடைய புஸ்தகங்களை முழுவதும் புரிந்துகொண்டு படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் மொழி மூலம் படைப்புத் தொழிலை நடத்தும் எந்த எழுத்தாளனுக்கும் மொழியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எல்லைமீறிச் செல்கிறது. இந்த வாக்கியத்தின் அடித்தளம் இதுதான்.

11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை :

இதுவும் பாரதத்தில் இருந்து வந்த ஒரு தகவல்.

நகுலனின் பார்வையை ஓரளவிற்குப் புரிந்துகொள்வது அவருடைய கவிதைகளை அணுக உபயோகமாயிருக்கும். எனவே...

வட்டங்கள்

வட்டம்
எங்கும் வட்டம்
சிறிதாய் பெரிதாய்
சிரித்துக் கொண்டு
உம்மென்று
ஊரெங்கும் வட்டங்கள்
ஒரு வட்டத்துள் இருப்பவன்
இன்னொரு வட்டத்தைப் பழிக்கலாம்
கோபம் கொண்டு தன்
வட்டத்தையும் பழிக்கலாம்
பரவாயில்லை
ஆனால் ஒன்று
வட்டத்தை அழித்தால்
வருவதும் வட்டமே அன்றி
வேறில்லை

(கவிதா சரண் - ஜூன் 1992ல் வெளியானது)

எழவு கொட்டுதல்

ஈராக்கில் செய்தது போல் விமானத்தில் இருந்து குண்டு வீசும் காட்சிகளை தொலைக்காட்சியில் அழகாகக் காட்ட முடியுமா? நொறுக்குத் தீனியுடன் பொழுதுபோக்க ஏங்கித் தவிக்கிறார்கள் பிள்ளைகள்.

(வேறு)

குப்பல் குப்பலாக
நாற்காலிகளும் படுக்கைகளும் வாகனங்களும்
வடிவை இழந்துவிட்ட டயர் டியூப்களும்
இடிபாடுகளுக்கிடையில் நின்று கொண்டிருக்கின்றது தெரு
காலியான (ஜன்னலாக இருந்திருக்கக்கூடிய) ஓட்டை வழியாக
எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
பயக்கண்களுடன் சிறுமி
எண்ணிக்கையின் துல்லியம்
தகர்க்கப்பட்ட பங்கர்கள்
பக்காவாகத் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள்
உணவிற்கும் மருந்திற்கும்
அலைக்கழியும் மக்கள் கூட்டம்

(இதுவும் வேறு)

அறிக்கை
தீர்மானம்
சந்திப்பு
மேலும் அறிக்கைகள்
மேலும் தீர்மானங்கள்
மேலும் சந்திப்புகள்
ஒன்றிரண்டு கவிதைகள்

மக்கள் கலை இலக்கிய விழா

மணல்வீடு சிற்றிதழும் களரி தெருக்கூத்து பயிற்சிப் பட்டறையும் இணைந்து மக்கள் கலை இலக்கிய விழா நடத்துகிறார்கள்.

நாள் : 24.01.2009

நேரம் : மதியம் 2.30 மணி முதல் நான்கு அமர்வுகளாக

இடம் : ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் தாலுகா, சேலம் மாவட்டம் 636 453

பஸ் ரூட் : சேலம் டூ மேட்டூர்

பஸ் நிறுத்தம் : பொட்டனேரி

தொடர்புக்கு : ஹரிகிருஷ்ணன், 98946 05371

மணல்வீடு அறிவித்திருந்த நாவல், சிறுகதை மற்றும் கவிதைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. பல மூத்த மற்றும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தோல்பாவை, தெருக்கூத்து, பொம்மல்லாட்டக் கலைஞர்களுக்கு விருதும் சான்றிதழும் வழங்கப்பட இருக்கின்றன.

மாலை 7 மணி அமர்வில் வாலி மோட்சம் என்ற தோல் பொம்மலாட்டமும் இரவு 10 மணி அமர்வில் லங்காதகனம் தெரிக்கூத்தும் நடத்தப்பட இருக்கிறது. இவ்விரு அமர்வுகளுக்கு மட்டும் பார்வையாளர் நன்கொடை ரூ 50.

இயன்றவர்கள் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விழாவுக்கான நன்கொடை வழங்க விரும்புவோர் கீழ்கண்ட வங்கி எண்ணில் பணம் செலுத்தலாம் :

V SHANMUGAPRIYAN
A/c No. 611901517766
ICICI Bank, Shevapet Branch, Salem

முழு அழைப்பிதழ் வேண்டுவோர் பின்னூட்டதில் தங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தாலோ அல்லது jyovramsundar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தாலோ அனுப்பி வைக்கிறேன்.

விப்ரோ சத்யம் மற்றும் பங்குச் சந்தை

விப்ரோ

உலகவங்கி விப்ரோவை 2011 வரை தடைசெய்திருக்கிறது. முதலில் விப்ரோ conflict of interest என சால்ஜாப்பு சொன்னது. உலக வங்கி தெளிவாக தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு லஞ்சம் (இதையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருந்தார்கள்) கொடுத்ததால்தான் விப்ரோவைத் தடைசெய்ததாய் அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து விப்ரோ டெக்னாலஜிஸின் Co - Chief Executive கிரிஷ் பரஞ்சபே சொல்லியது :

"நிறுவனத்தின் 2% பங்குகளை எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் சில வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்தோம். அப்படி issue priceல் 72,000 டாலர்களுக்கு உலக வங்கியில் பணிபுரிபவர்களுக்கு தந்தோம். அந்த வங்கியிடம் எங்களுக்குப் பெரிதாக ஒன்றும் வர்த்தகமில்லை, அதிகபட்சம் மொத்தமாக 10 லட்சம் டாலர்கள்கூட இல்லை."

இதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால் வேலை செய்பவர்களுக்குச் ஊக்கத்தொகை, போனஸ் தரலாம். ஆனால், அதையே வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தால்...??

விப்ரோவே வெளிப்படையாகச் சொல்லியபடி மொத்த வியாபாரத்தில் 7.2% மதிப்பிற்கு பங்குகளைக் கொடுத்திருக்கிறார்கள் (issue priceற்கும் சந்தை விலைக்குமான வித்தியாசத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!).

விப்ரோ கொடுத்திருப்பது அப்பட்டமான லஞ்சம். இதன் மூலமே பெரிய வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படி வெட்ட வெளிச்சமாகி, விப்ரோ போன்ற நிறுவனங்களின் புனித பிம்பங்கள் கட்டவிழத் துவங்கியது ஒருவிதத்தில் நல்லதுதான்.

அரசியல்வாதிகளை sting oprationaகளிலிருந்து பலவற்றையும் செய்து தோலுரிப்பதுபோல் வணிக நிறுவனங்களைச் செய்வதில்லை ஊடகங்கள். அதற்கு விளம்பரம் மட்டுமல்ல, என்ன இருந்தாலும் அவர்கள் நம்மைபோன்ற முதலாளிகள் என்ற பாச உணர்வுதான் காரணமாயிருக்கமுடியும். தொலைக்காட்சி ஊடகங்களின் புனிதபிம்பங்கள் எப்போது உடையுமோ தெரியவில்லை.

சத்யம்

சத்யம் பிரச்சனையில் ராமலிங்க ராஜூவையும் அவரது தம்பி ராம ராஜூவையும் (காலதாமதமாகக்) கைது செய்தது செபி விசாரணையை ஒத்திப் போடத்தான் எனச் சிலர் சொல்கிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள அரசு - இயந்திரத்திற்கும் ராஜூக்களுக்குமுள்ள நெருங்கிய உறவு வெள்ளிடைமலை. உபரி தகவலாக 25 வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு பெரிய குழு ராஜூவிற்காக வாதாடப் போகிறதாம். இவ்வளவு பெரிய குழுவிற்கு எவ்வளவு செலாவுகுமோ என விசனப்பட்ட என்னிடம், யார் வீட்டுக் காசு என்கிறான் என் நண்பன்!

இப்போதாவது சில கேள்விகள் கேட்கப்பட்டேயாக வேண்டும்!

1. ஊடகங்கள் ஏன் சத்யத்தில் உழைப்பவர்களின் (யூகமாக இல்லாமல் போகப்போகும்) வேலையைப் பற்றி இவ்வளவு அதிகமாக கவலைப்படுகின்றன. டன்லப் போன்ற தனியார் நிறுவனங்களிலும், தமிழக அரசின் சாலைப் பணியாளர்களும் வேலையிழந்தபோது இந்த அக்கறை வந்ததா?

2. மக்களின் வரிப் பணத்தை எதற்காக சத்யம் போன்ற ஒரு தனிப்பட்ட (அதுவும் ஆரம்பித்தவர்கள் செய்த திருட்டு காரணத்தால் கவிழப்போகும்) நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த செலவு செய்ய வேண்டும்?

3. இப்போது ஆடிட்டர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லும் ICAI, இதே ஆடிட்டர்கள்மீது GTB Bank தொடர்பாகப் பலவருடங்கள்முன் ஆரம்பித்த விசாரணை என்ன ஆனது? இம்மாதிரியாகத் தவறு செய்த பல உள்ளூர் ஆடிட்டர்கள் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள் எனச் சொல்லித் தப்பிக்க முடியாது; கேள்வி, பன்னாட்டு முதலாளிகள் என்றால் மட்டும் ஏன் உங்கள் நடவடிக்கைகள் நொண்டியடிக்கின்றன என்பதுதான்.

4. SBI மேதாஸ் இன்ஃபிராவிற்கு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அதை வராக் கடனாக அறிவிக்க நேரலாம் என இப்போது சொல்லியிருக்கிறது. ஏன் இவ்விஷயத்தில் இத்தனை நாட்கள் மௌனம்?

5. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலங்களை 4 மடங்குகள் குறைந்த விலையில் மேதாஸ் இன்ஃபிராவிற்குக் கொடுத்திருக்கும் ஆந்திர அரசு மேலும் முன் பணமாக 600 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஒரு scam waiting to happen என dmrc ஸ்ரீதரன் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் (ஸ்ரீதரனுக்குப் பரிவட்டம் கட்டுவது என் நோக்கமல்ல). ஆனாலும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது ஏன்?

பங்குச் சந்தை

சுழியம் போன்ற நண்பர்கள் பங்குச் சந்தையில் நிறுவனங்களின் நிலைபார்த்து முதலீடு செய்ய வேண்டுமென்றும், எவ்வளவுக்கெவ்வளவு அபாயம் கூடுதலோ அவ்வளவுக்கவ்வளவு லாபமும் கூடுதல் போன்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது? அவர்கள் கொடுக்கும் நிதிநிலை அறிக்கையே பொய்யானது எனும்போது எதன் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யமுடியும்? போக, அவர்கள் தொழில் செய்ய நீங்கள் எதற்காகப் பணம் தர வேண்டும்? அவர்களுக்கு வேண்டுமானால் கடன் பத்திரங்களை வெளியிட்டு பணம் திரட்டிக் கொள்ளட்டுமே. உதாரணத்திற்கு இப்போது சத்யம் பங்குகளையே எடுத்துக் கொள்வோம்... எவ்வளவு பேர் அதை 550 ரூபாய்க்கு ஒரு பங்கு என்ற வீதத்தில் வாங்கியிருப்பார்கள். ஆனால் சத்யம் 20% டிவிடெண்ட் என்றாலும் அதன் அடக்க விலையான 2 ரூபாய்க்குத்தானே தருகிறார்கள் (அதாவது ஒரு பங்கிற்கு நீங்கள் 550 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் அம்முதலீட்டிற்கு வருடத்திற்கு 80 பைசா டிவிடெண்டாகப் பெறுகிறீர்கள்!).

அபாயம் கூடுதலாக இருந்தால் லாபம் கூடுதலாக இருக்கும் என்பது அவர்கள் கிளப்பிவிட்ட மாயை!

சென்செக்ஸிலிள்ள 30 கம்பெனிகளின் (மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின்) மொத்த சந்தை மதிப்பீடென்ன, இந்தியாவின் gdp என்ன போன்ற சிக்கலான விஷயங்களுக்குப் போகாமலேயே பங்குச் சந்தை என்பது ஒரு ஏமாற்றுவேலை என்பது புரியும்.

யோசித்துப் பாருங்கள். கடந்த இருபது வருடங்களில் நடந்த மிகப் பெரிய பொருளாதார ஊழல்கள் பங்குச் சந்தையோடு நேரடித் தொடர்புடையவை (ஹர்ஷத் மேத்தா & பாரேக்). இப்போது சத்யம். நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், இது பங்குச் சந்தை மதிப்பிடலை (stock market valuation) அதிகப்படுத்த தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் பிரச்சனையாகச் சொல்லலாம். இதில் உள்ள பண சுருட்டல்கள் தனிக் கதை!.

இது தொடர்பாக முன்னர் எழுதிய இடுகைகளின் சுட்டிகள் :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_1051.html

http://jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_19.html

தடுக்கப் பட்ட நுழைவாயில் மரணம்

ராமிற்கு இனிப்புகள் என்றால் உயிர்.

கொடைக்கானலுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்ததில் இரண்டை எடுத்துக் கொண்டு படுக்கையறையினுள் நுழைந்தேன். மங்கிய விளக்கொளியில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் சென்ற என்னை இழுத்து அணைத்து மார்புகளைத் தடவினார். காதில் கிசுகிசுத்தார். உஷ்ணம் தகித்தது மூச்சில்.

தொலைக்காட்சியில் பிம்பங்கள் மாறிக் கொண்டேயிருந்தன.

படுத்த வாக்கிலேயே நைட்டியின் ஜிப்புகளை ஏற்றி விட்டுக் கொண்டேன். அவர்மேல் ஒரு கையைப் போட்டபடி, "முரளியும் கூட வந்தால் நல்லாயிருக்கும்ல," என்றேன்.

என் முகத்தை உற்றுப் பார்த்தார். ஏதாவது மாறுதல் தெரிகிறதா என ஆராய்கிறாரா என்ன.?

"யாரை ஏமாத்தப் பாக்கற நீ?" என்றார். அவர் குரலுக்கு என்ன ஆயிற்று? மிக்ஸியில் தேங்காய் அரைபடும் சத்தத்தை ஒத்திருந்தது அது.

அவரை ஆதுரத்துடன் பற்றிய என் கைகளை தூரப் போட்டார்.

"மறுபடியும் நடிக்க ஆரம்பிகாதே" என்றவர், 'தா தை தக்க தை' என்று அபிநயித்தார். வியப்பு மேலிட அவரைப் பார்த்தவாறிருந்தேன்.

தடக்கென்று எழுந்து படுக்கையின் மேல் நின்றார். கால்களின் மேல் ஏதோ ஊர்வது போல உதறினார். கீழே இறங்கி நின்று கொண்டார்.

பக்கவாட்டில் முகம் திருப்பி, "நீ பெற்ற பிள்ளையாய் இருந்தால் இப்படிச் செய்வாயா...?" என்றார்.

என்னவாயிற்று.? மதுவின் வாடைகூட வரவில்லையே...

"என்ன உளர்றீங்க? முரளியை நான் பெக்காம நீங்களா பெத்தீங்க...?"

"ஆமாம், நீதான் பெத்தே..." என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர் உரத்து "எல்லாம் தெரிந்துவிட்டது எனக்கு" என்றார்.

எழுந்து போய் அறையலாம் போலிருந்தது. என்னது எல்லாம் தெரிந்துவிட்டதாம்? படுக்கையிலிருந்து எழுந்தேன். விளக்கைப் போட்டேன். பிரகாசமானது அறை. நிசப்தத்தைக் கிழித்தபடி மின்விசிறியின் ஓசை இரைச்சலாய்க் கேட்டது.

"விளக்கைப் போடாதே..." அவரது அலறலில் என் முதுகுத் தடம் சிலிர்த்தது. "வெளிச்சத்தில் என்னை மூழ்கடித்துவிடலாம் என நினைக்காதே..." என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி "நல்ல இதயம் இருப்பவர்களை யாராலும் மூழ்கடிக்க இயலாது" என்றார். இதைச் சொல்லும்போது அழுதுவிடுவார் போலிருந்தது.

அழட்டும்; நன்றாக அழட்டும். இதைக் கட்டிக் கொண்டு படும் சிரமங்கள் கொஞ்சமா என்ன.

"ஆமாம், யாராலும் மூழ்கடிக்கத்தான் முடியாது."

"ஹா ஹா... இப்படியேதான் இருக்கப் போகிறாய் நீ. மாற்றமேயில்லை. ஹரியைச் சிறிது சிறிதாகக் கொன்றது போல், என்னையும் சாகடிக்கத்தான் பார்க்கிறாய் நீ..."

"துரோகத்தைச் செய்தது நீங்கள்..." என்றவள் ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டேன். அறையிலிருக்கும் காற்று எனக்குப் போதாது போலிருந்தது. இன்னும் கொஞ்சம் காற்று கிடைத்தால் இவரை ஊதியே தள்ளிவிடலாம். "என்னை அவனிடமிருந்து விலக்கியது நீங்கள்தானே. உங்கள் நண்பனையே ஏமாற்றிய நீங்கள் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது." எவ்வளவு காட்டமாக வார்த்தைகளை விசிறியெறிந்தேன் என்பது அவர் துள்ளியதிலிருந்து தெரிந்தது.

"ஹா. நீ அவனை மறந்ததற்கு என்னைக் காரணம் காட்டாதே... பாவம் அவன். நீ அவனுக்கு விசுவாசமாயிருப்பாய் என்று நிம்மதியாக இப்போது உறங்கிக் கொண்டுருப்பான்...!"

அவர் குரலிலிருந்த ஏளனம் ஆத்திரமூட்டியது. என் உடல் அதிரத் துவங்கியது. மேலே சுற்றிக் கொண்டிருக்கும் விசிறி அப்படியே கீழே வந்து ராமின் கழுத்தைச் சீவிப் போகக் கூடாதா...

"என்ன முறைக்கிறாய்? மின்விசிறி என் கழுத்தைச் சீவிப் போகவேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறாய்..."

கடவுளே - என்ன வந்தது இவருக்கு? எப்படித் துல்லியமாக என் மனதைப் படிக்க முடிகிறது. பயம் கனமான மேகத்தைப் போல் சூழ்ந்து கொண்டது என்னை.

"ஆனால்..." நிறுத்தினார். "ஆனால் நல்ல வேளையாக என் நண்பனின் ஆத்மா என்னுடனேயே இருக்கிறது எனக்குப் பக்க பலமாக... அவனில்லாவிட்டால் உன்னை நான் எதிர்க்க முடியுமா என்ன... கேட்டுக் கொள் -- சர்வநிச்சயமாக ஆண்டவன் உன் பிரார்த்தனைகளைக் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை."

"என்ன பிரார்த்தனைகள்?" என் குரலே எனக்கு அன்னியமாக ஒலித்தது. இந்த விளக்கை வேறு ஏன் தான் போட்டேனோ. எதிரே இருந்த கண்ணாடியைப் பார்த்தபோது அதிர்ந்தேன். நானா இது... கண்களின் கீழ் கருவட்டம் விழுந்திருக்க, கன்னச் சதைகளும் கழுத்துச் சதைகளும் தொங்கிக் கொண்டுருந்தன. அருகில் சென்று உற்றுப் பார்த்தேன். சூன்யக் கிழவியின் தோற்றம் வந்துவிட்டிருந்தது. வீலென்று அலறினேன்.

"நான் தான், நான் தான் உன் அழகை உறிஞ்சி எடுத்துவிட்டேன்." ராம் - என் கணவர் ராம் - எகத்தாளமாகக் கூவினார் : "ஹரியைப் போல், என்னைப் போல் இனி யாரும் உன்னிடம் ஏமாறாமல் இருக்கத்தான் உன்னை விகாரமாக்கினேன். இனி யாரும் உன் நிழலைக்கூட மிதிக்க மாட்டார்கள். பேருந்துகளில் நீ நின்றுகொண்டேதான் வர வேண்டும், பாவம்..."

நான் கட்டுப்பாட்டை இழந்தேன். பாய்ந்து சென்று தலையணைகளை ராமின் மேல் வீசினேன். அவர் சிரித்தார். குத்திக் கிழித்துவிடும் ஆவேசம் கொண்டு பலமனைத்தும் திரட்டித் தாக்கினேன். விடக்கூடாது எனக் கருவினேன்.

"இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் நீங்கள் புனிதராகிவிட முடியாது. உண்மையில் ஹரியைக் கொன்றது நீங்கள்தான். நீங்கள் என் மேல் வக்கிரமமாகக் காதல் கொண்டது ஊருக்குத் தெரியாதா என்ன.." நேரே சென்று அவர் மார்பில் கைவைத்து அழுத்தினேன். "ஆம். என் ஆசைக் கணவரே, உங்களது வக்கிரபுத்தி பற்றி எல்லாவற்றையும் ஹரி என்னிடம் சொல்லிவிட்டான்."

ராம் அதிர்ந்து பின் வாங்கினார்.

என் குரல் உயர்ந்து கொண்டேயிருந்தது.

"ப்ளீஸ் ராது, ப்ளீஸ்... அக்கம் பக்கமிருப்பவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்." வாலைக் குழைத்தபடி வரும் நாயைப் போல் கெஞ்சினார். இவர் விரும்பும்போது ஆரம்பிக்கவும் தோன்றும்போது நிறுத்தவும் நான் என்ன இவர் மாற்றா.?

"முடியாது. இது என்றாகிலும் ஒரு நாள் பேசப்படத்தான் வேண்டும்." நிறுத்தி இன்னும் குரூரமாக, "அவன் எவ்வளவு ஆண்மையுள்ளவன் தெரியுமா, உங்களைவிட..." என்றேன். எதிர்பார்த்தைப் போலவே என் கணவர் உடைந்து போனார். அவர் நொறுங்கித் தளர்ந்து, மண்டியிட்டு அமர்ந்தார்.

"வேசியைத் திருமணம் செய்திருக்கக் கூடாதுதான்." சடக்கென்று நிமிர்ந்தார். எழுந்து ஆக்ரோஷமாய் அருகில் வந்தார். அடிக்கப் போகிறாரா என்ன ? எவ்விதம் எதிர்வினை ஆற்றுவது? நெருங்கி என் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு வந்தவர், "அதில்தான் நீ நிபுணத்துவம் பெற்றவளாயிற்றே. அதில் யார் ஒரு மாற்று உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் எனபதை உன்னால்தான் துல்லியமாகச் சொல்ல முடியுமே..."

நான் விக்கித்துப் போனேன். எனக்கேன் எல்லாமே இவ்விதம் ஆகிறது. எழப் பார்த்த கண்ணீரைச் சிரமப்பட்டு அடக்கினேன். உதட்டைக் கடித்து விசும்பலை விழுங்கினேன்.

சுவரில் ஓங்கி அறைந்தவர், "ஆம், நான் துரோகம் தான் செய்துவிட்டேன். ஆனால் நீ நினைப்பது போல் அல்ல... அவன் விருப்பத்திற்கு மாறாக உன்னைத் திருமணம் செய்திருக்கக் கூடாதுதான்..." என்றார்.

"ஆனால் நீங்கள்தானே சொன்னீர்கள், ஹரி உங்களிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னதாக..." முறையிடும் குரலில் கேட்டேன்.

"ஆமாம்; அவன் தான் சொன்னான்." சுவரில் அப்படி என்ன ஆராய்கிறார்? சடக்கென்று திரும்பினார். லுங்கியை மடித்துக் கட்டி நடனமாட ஆரம்பித்தார். சுழன்று சுழன்று ஆடினார். வெறி பிடித்த மிருகத்தை ஒத்திருந்தது அவர் முகம்.

ஆவேசமாக ஆடியவர் தளர்ந்து படுக்கையில் விழுந்தார். அருகில் சென்று முகத்தை ஒற்றிவிட்டேன்.

"நான் சொன்ன மற்றவற்றை சந்தேகித்த நீ இதை மிட்டும் ஏன் நம்பினாய்? உண்மையில் நீ அவனிடமிருந்து தப்பிக்க நினனத்து காரணம் தேடிக் கொண்டிருந்தாய். நான் அகப்பட்டு விட்டேன்."

"இல்லை, நான் ஹரியை மறக்கவில்லை"

"நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஹரி இறந்து விட்டானென்று. உண்மையில் அவன் இறக்கவில்லை என்பது தெரியுமா...?"

உடைத்துக் கொண்டு பீறிட்டது அழுகை. ராம் நெருங்கி என் தலையில் கை வைத்தார். குலுங்கியபடி அவரது தோளில் சாய்ந்தேன். ராம் நெகிழ்ந்தார்.

"நம் கையில் என்ன இருக்கிறது ராது. ஹரி இறந்தது, நான் உன்னைத் திருமணம் செய்ததெல்லாம் முன் தீர்மானிக்கப்பட்டதா என்ன. சூழ்நிலையால் உந்தப்பட்டவர்கள் நாம். இன்னும் சொல்லப் போனால் மூலையில் மடக்கப்பட்டவர்கள் நாம்."

என்னைத் தூக்கி நிறுத்தினார். கண்களைத் துடைத்துவிட்டார். அவர் முகத்ததப் பார்க்க அழப் போகிறார்போல் இருந்தது. பிரியமுடன்
அணைத்துக் கொண்டேன். 'நானிருக்கும்வரை உங்களை மனக்கிலேசத்தில் விடமாட்டேன்' என நினைத்தபடி காதுகளில் முத்தமிட்டேன். என் வலது மார்பு அவர்மேல் அழுந்தியது.

என்னைக் கோபத்துடன் விலக்கினார். "இப்படித்தான் என்னை மயக்கினாய். உன் பெருத்த மார்பைக் காட்டி, அகண்ட இடுப்பைக் காட்டி... அதனால்தான் என் மனம் தடுமாறியது."

அவர் வார்த்தைகள் மறுபடியும் ஆத்திரமூட்டின. இவரா இப்படிப் பேசுவது. ஒவ்வொரு முறையும் ஐஸ் வைத்து காலில் விழாக்குறையாக அழைத்தவரா இவர். ஏளனமாகச் சிரித்தேன். முறைத்தார்.

"நீங்களா..." என்றேன். மேற்கொண்டு பேசமுடியாமல் தடுமாறுபவளைப் போல சிரிக்க ஆரம்பித்தேன். அறை அதிரச் சிரித்தேன். எட்டி விளக்கை
அணைத்தவர் என்னைப் படுக்கையில் தள்ளினார்.

நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். தூண்டப்பட்டவராய் அவரது வேகம் அதிகரித்தது. மின்விசிறியின் சுழற்சிகூட சிரிப்பை உண்டாக்கியது.

மேகக் கூட்டங்கள் உடைந்து சிதறின.

குப்பென்று வியர்த்துவிட பக்கத்தில் படுத்து வாயைப் பிளந்து காற்றுக்காய் அலைந்தார் ராம். அவர் உடலைத் துடைத்துவிட்டேன். அவர் உடலில் பூத்திருந்த வியர்வைத் துளிகள் என்னைக் கிளறிவிட்டன. துடைத்துவிட்டபடி அவர் நடு மார்பில் முத்தமிட்டேன். கூரையைப் பார்த்திருந்த என் திறந்த மார்பை மூடினேன்.

அவர் தலையைத் தூக்கி என் மார்பில் வைத்துத் தூங்க முயற்சி செய்தார். முதுகை அணைத்தபடி நானும் கண்களை மூடினேன்.

ஏதோ ஞாபகம் வந்தவராய் முனங்கினார். "நாம் முரளியையும் கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்வோம்..." அவரை மேலும் பேசவிடாமல் அவர் தலையை என்னுடன் இறுக்கினேன்.
(கவிதா சரண் - அக்டோபர் 1998ல் பிரசுரமானது)
(இது ஒரு மீள் பதிவு)
wi

சத்யம் - இன்னொரு என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

மகன்களின் நிறுவனங்களை வாங்கத் திட்டமிட்டு பல களேபரங்கள் நடந்து 20 நாட்கள் கழித்து சத்யம் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மனசாட்சியின்படி செய்திருக்கிறாராம்!

வரவு செலவுக் கணக்கில் பொய்யாக 5,040 கோடி ரூபாய்கள் பண இருப்பு உள்ளதாகக் காட்டியிருக்கிறார்கள் (மொத்த தொகையே 5,400 கோடிதானாம், அதில் 5,040 கோடி பொய்!). தவிர வரவேண்டிய தொகையை ஒரு 500 கோடி அதிகப்படுத்திக் காண்பித்தது, கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு 1,200 கோடி குறைத்துக் காண்பித்தது, வட்டியில் ஒரு 400 கோடி என சகலத்திலும் விளையாடியிருக்கிறார் மனிதர். அதுவும் இத்தகைய தில்லுமுல்லுகளைச் சில பல வருடங்களாகத் தொடர்ந்து செய்துவருகிறாராம்.

கூத்து என்னவென்றால், உலகத்தில் பெரிய அக்கௌண்டிங் நிறுவனங்களுள் ஒன்றான Price Waterhousecoopers தான் இவர்களது ஆடிட்டர்கள்! அது எப்படி இவ்வளவு பெரிய கோல்மால் தெரியாமல் போகுமென்பது அவர்களுக்கும் ராஜூவுக்குமே வெளிச்சம். பன்னாட்டு நிறுவனங்களைப் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது :))

இன்னொரு விஷயம். அவரது பங்குகளை ஏற்கனவே அவர் அடமானம் (அதிக விலையில் என்பதைச் சொல்லத் தேவையில்லை) வைத்துவிட்டார். இப்போது அவர்களும் அதில் பெரும்பாலான பங்குகளை விற்றுவிட்டார்கள். இதெல்லாம் முடிந்தபிறகே ராமலிங்க ராஜூ தன்னுடைய ஒப்புதல் கடிதத்தைத் தந்திருக்கிறார்.

சிலருக்குத் தோன்றலாம். வருமான வரியைக் குறைக்க வேண்டி அனைவரும் லாபத்தைக் குறைத்துத்தான் காண்பிப்பார்கள். ஏன் ஐடி நிறுவனங்கள் ஏற்றிக் காண்பிக்கின்றன என்று... பதில் எளிமையானது. இப்போது இந்தியாவில் பல வருடங்களாக stp / ehtp களுக்கு வருமான வரியே கிடையாது! லாபத்தைக் கூட்டிக் காண்பித்தால் சந்தையில் பங்குகளில் விலை கூடும், புதிய பங்குகளைவிடலாம் என ஒரு வட்டம் அது.

இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளியில் வராமல் அமுக்கப் பட்டிருக்கிறதோ தெரியவில்லை. இனி அரசின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம். கடந்த கால வரலாற்றைப் பார்த்து அது எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஆனால், நிறைய லாபம் வருகிற நிறுவனம் என நம்பி சத்யம் பங்குகளை வாங்கியவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அடிப்படையில் பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்பதை எவ்வளவு பேர் எவ்வளவுவிதமாகச் சொன்னாலும் புரியாதவர்களை என்ன செய்ய?

இது தொடர்பாய் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்ற தலைப்பில் நான் எழுதிய இடுகையை இங்கே படிக்கலாம் :

www.jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_19.html

பிற்சேர்க்கை : இது தொடர்பாக எழுதிய அடுத்த இடுகை :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_14.html

காதலும் போதையும்

என்ன செய்வது தெரியவில்லை
என்றேன்
என்ன செய்வது தெரியவில்லை
என்றாள்
ஒன்றும் செய்யாமல் இருந்தோம்
இதமாகத்தான் இருக்கிறது
இதுவும்
(இந்துமதிக்கு)

(மவ்னம் 7 - செப்டம்பர் 1994ல் வெளியானது)

வாங்க வாங்க
கடன் தான்
குடிக்கக் குடிக்க
போதை தான்

(நடு கல் 13 - ஜனவரி 1994ல் வெளியானது)

மழையும் வாசலில் மனிதர்களும்

ஒவ்வொரு மழைதினமும்
முக்கியமான தினமெனக்கு
வாசலில் நிறைய பேர்
ஒதுங்கியிருப்பார்கள் மழை கருதி
நானும் உள்ளே இருப்பேன்
கூட்டம் பலவும் பேசும்
அரசியல், சினிமா -
சிலர் இலக்கியம் கூடப் பேசலாம்
வாசலில் மனிதர்கள்
நிற்பது சுகம்தானே

(கவிதா சரண் செப்டம்பர் 1992ல் வெளியானது)

கலாச்சாரக் காவலர்கள்

பாமகவின் மகளிரணியைச் சேர்ந்த சுமார் 20 பேர் கடந்த 31ம் தேதி இரவு சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் உள்ளே பாரில் நடக்கும் 'ஆபாச' நடனத்தை எதிர்த்து. பிறகு போலீஸ் அனுமதிக்க மூன்று பேர் உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நடனம் எதுவும் நடக்கவில்லை என்றதும் திருப்தியுடன் திரும்பியிருக்கின்றனர். போலவே வேறு சில விடுதிகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. யாரும் தராமல் இவர்களாகவே கலாச்சாரக் காவலர்கள் வேலையை கையில் எடுத்துக் கொள்கின்றனர்.

உங்களுக்குக் குடி கொண்டாட்டம், எங்களுக்கு அது பொருளாதாரம், உடல் நலம் சார்ந்த பிரச்சனை என பொதுமைப் படுத்திவிட்டு இதைத் தாண்டிச் செல்ல முடியாது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு குடிப்பதுகூடப் பிரச்சனையில்லையாம், நடனம்தான் கூடாதாம். காரணம் நமது கலாச்சாரம் கெட்டுவிடுமாம் ...

... சில மாதங்களுக்கு முன் என் வீட்டருகில் இரண்டு சிறுவர்கள் நடனப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர், ஏதாவது போட்டிக்காக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். விஜயும் அசினும் விரக தாபத்தில் நடித்திருந்த ‘டோலு டோலுதான் அடிக்கற' பாட்டு.

நான் உனக்குள் நுழைய
நீ எனக்குள் கரைய
நம் உலகம் உறைய

என்ற வரிகள் ஒலித்துக் கொண்டிருக்க, அருகிலிருந்த பெரியவர்கள் ஊக்குவிக்க, படத்தில் வரும் pelvic movementsஐ பிரதியெடுக்க அச்சிறுவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்...

இந்தச் சமூகச் சூழலில்தான் பாமகவினர் விடுதிகளில் வயதுக்கு வந்தவர்கள் ஆடும் நடனங்களை எதிர்க்கின்றனர். இவர்களது செல்வாக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாயிருக்கும் பட்சத்தில், தமிழகத்தின் சிவசேனாவாக மாறிவிடக்கூடும்.

இந்த அபத்த நாடகம் இத்துடன் முடிந்தது. அடுத்தது..? ஃபிப்ரவரி மாதம் காதலர் தினத்தின்போது பூங்காக்களிலும் கடற்கரையில் நடந்தேறும்.