தற்காப்பு

என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது
யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது
வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து
நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை
நண்பர்களே கிடையாது எனக்கு -
அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை
கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்
நேரம் பற்றிய போதமின்றி
குடித்துக் கொண்டிருக்கலாம்
என்னுடைய உளறல்களை
யாரும் கேட்டுவிடாதபடி
எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு
வசதியான செவ்வக மேஜை
அதன் மேல் சாம்பல் கிண்ணம்
கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
சுருண்டு கிடக்கலாம்
தூசி படிந்த புத்தகங்கள்
அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி
என் அழகையோ அழகின்மையையோ காட்ட
சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது
சூரியனைப் பார்க்காத என் உடம்பு
இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்
உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள
தேவையாயிருக்கிறது இந்த அறை

எனக்கான அழைப்பு

அதிகாலையில்
ஒலிக்கிறது தொலைபேசி
இழுத்துக் கொண்டிருந்த பெரியப்பாவின் சாவு
நின்று போன வண்டி
மாமா பெண்ணிற்குக் குழந்தை
கலால்துறையின் ரெய்டு
உத்திராபதிக்கு ஹார்ட் அட்டாக்
(சே, எவ்வளவு கேவலமானவண்டா நீ!)
குலுக்கலில் பரிசு
ப்ரீதாவின் கொஞ்சல்
எதுவாகவும் இருக்கலாம்
முக்கியமானது
நிற்பதற்குள் எடுத்துவிட வேண்டும்
தொலைபேசி அழைப்பை
நிற்பதற்குள் நிற்பதற்குள்

இலக்கடைதல்

எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
விலகி வழிவிட்டால்
வேறொருவர் இடிக்கிறார்
அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
மேடு பள்ளங்களைக் கையாள்வது
சாதாரணமாகவே கடினம் -
மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்
முக்கியமென நண்பர் சொல்கிறார்
எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/05/blog-post_30.html)

முடியாத இரவு

முன்பின் தெரியாத ஊரில்
கட்டிங் கட்டிங்காக அரை போத்தல் குடித்துவிட்டேன்
வழக்கம் போல்
போதையில் என் அறை
இருக்குமிடம் மறந்துவிட்டது
சரியாகக் காயாத ஜட்டிகளும் பனியன்களும்
அலங்கோலமாகக் கிடக்கும் அறையது
அருகிலிருக்கும் வைன் ஷாப்பில் நுழைந்து
கட்டிங் ரம் வாங்கினேன்
தண்ணீர் கலந்திருப்பான் போல ராஸ்கல்
இன்னொரு கட்டிங் வோட்கா வாங்கினேன்
பாழாய்ப்போன கடையில் லிம்கா இல்லை
200 மில்லி செவன் அப் ஊற்றிக்
குடித்துக் கொண்டிருக்கையில்
வருகிறாள் என் ஆதர்சக் காதலி
வாயில் எடுத்துக் கொள்ள
200 ரூபாய் கேட்கிறாள்
அவள் அணிந்திருந்த
நைட்டி போன்ற ஆடையிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது
தொட்டுக் கொள்ள இருந்த வேர்க்கடலையை
அவளுக்குக் கொடுக்கிறேன்
பைத்தியக்காரனோ அல்லது கொலைகாரனோ
என என்னைப் பயமுடன் பார்க்கிறான் கடைப் பையன்
கடை அடைக்கும் நேரம் வேறு
இப்போது என் அறை ஞாபகம் வர
கடைப் பையனையும்
அவளையும் அங்கேயே விட்டுவிட்டு
தள்ளாடியபடி
என் அறைக்குத் திரும்புகிறேன்
வெளிநாட்டு நண்பன் கொடுத்திருந்த
ஃபிரெஞ்ச் வைன் இருக்கிறது மேசையில்
கொலைகாரக் காதலியுடன் நடனம் ஆடியபடி
மெல்லப் பருகுகிறேன்
சிரித்துக் கொண்டே காதல்
இறந்து போனது

(ப்யூகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி - மொழிபெயர்ப்பில்லை -எப்போதோ எழுதிவைத்தது; இப்போது பதிவிடுகிறேன்)