சி மணிக்கு அஞ்சலி

தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர் சி மணி. இவர் நேற்று இரவு இறந்துவிட்டதாக இன்று காலை அறிந்தேன்.

சி சு செல்லப்பாவின் 'எழுத்து' காலம்தொட்டு எழுதியிருக்கிறார் (சிசுசெ தொகுத்த புதுக்குரல்கள் தொகுதியிலும் இவரது கவிதைகள் இருக்கும்). தமிழில் நவீன கவிதையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர். வரும் போகும், ஒளிச் சேர்க்கை போன்ற கவிதைப் புத்தகங்கள் க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றன. வே மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார். சந்தத்தோடு கூடிய நவீன கவிதைகளில் இவர் ஞானக்கூத்தனுக்கு முன்னோடி.

இவர் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இவரது பச்சையம் கவிதையிலிருந்து சில பகுதிகளை ஒருமுறை பதிவிட்டிருக்கிறேன் (பார்க்க : http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_09.html)

இவர் எழுதிய நரகம், பச்சையம், வரும் போகும் போன்ற நீள் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. சி மணியின் வேறு சில சிறிய கவிதைகளைக் கீழே தருகிறேன்.

தீர்வு

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்,தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.

சிக்கல்

பூஎன் றூதித் தள்ளக்
கூடி யதையும் கூந்தல் பிய்த்துக்
கொள்ளும் சிக்க லாக்கிக்
கொண்டும் விடும்புதுப் பழக்கம் நம்மைத்
தொத்திக் கொண்டுவிட் டது.தொடக்
கத்தில் பொழுது போகும் நேர்த்தி
கண்டும், மூளைக் கூர்மை
எண்ணத் திலும்பு தைந்து போனோம்.
அண்மை யில்யா வும்சாக்
கென்றும், இதுநம் மேதா விலாச
மேன்மைக் காக என்றும்
தோன்றி யது.இனி மீட்சிச் சிக்கல்

இடையீடு

1. சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை

2. எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

3. என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.

4. எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று

மினியுகம்

சனி த்துவிட்டது
மினி யுகம்; ஒழிந்தது
நனி பெரும்மனிதர் கொற்றம்.
இனி
மினி மக்கள் காலம்
மனி தனைவிட்டு
மினி தனைப்பாடு போற்று
குனி என்பேச்சைக் கேள், ஏ
னெனி லெனக்குத் தெரியும் நானொரு
மினி மேதை

எனக்குப் பிடித்த கவிஞனுக்கு அஞ்சலி.

15 comments:

மண்குதிரை said...

சுகந்தி சுப்ரமணியன், அப்பாஸ் இப்போது சி மணி

மிகவும் வருத்தமாக இருக்கிறது. இலக்கிய முன்னோடிக்கு அஞ்சலி.

ஆ.ஞானசேகரன் said...

சி மணிக்கு அஞ்சலி

கிருத்திகா ஸ்ரீதர் said...

முதன் முதலில் தங்கள் பதிவின் மூலம்தான் இன்னாரது கவிதைகளை அறிந்து கொண்டேன்... காலம் எல்லோரையும் கடந்து செல்கிறது..

கே.என்.சிவராமன் said...

//சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை//

சி.மணிக்கு அஞ்சலி

narsim said...

நெஞ்சார்ந்த அஞ்சலி

அகநாழிகை said...

//எனக்குப் பிடித்த கவிஞனுக்கு அஞ்சலி//

எனக்கும் கூடத்தான், சுந்தர்.

கவிஞனின் இறப்பு என்பதை நாம் எவ்வளவிற்கு உள்வாங்கிக் கொள்கிறோம் புரியவில்லை. இழப்பு என்பதே இன்மையில்தான் உணர முடிகிறது. சி.மணியின் கவிதைகளை கைப்பற்றி மனதுள் வாங்கி நடைபழகியிருக்கிறேன். ‘(சி.மணி என்றொருவர்) இருந்தார்.. இப்போது இல்லை, இறந்து விட்டார்‘ என்பதாக கூறி முடித்துவிடக்கூடிய நிகழ்வல்ல சில மரணங்கள்.
எல்லா உணர்வினையும் வார்த்தைகளில் கூறிவிட முடிவதில்லை.
இன்று காலை உங்களுடன் பேசி முடித்த அரை மணி நேரத்தில் எனக்கு இச்செய்தி கிடைத்ததும் வருத்தமாக இருந்தது. மறைந்த கவிஞருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

- பொன். வாசுதேவன்

லக்கிலுக் said...

அன்னாருக்கு அஞ்சலி!

பரிசல்காரன் said...

கவிதைகளில் இடவெளி என்னென்னமோ சொல்கிறது குருஜி.

மினியுகம் - அருமை.

அன்னாருக்கு அஞ்சலி.

ஆதவா said...

காலை அகநாழிகை எனக்கு குறுஞ்செய்தி கொடுத்திருந்தார். அவரைப் பற்றி தெரிந்திருந்தாலும் கவிதைகள் படித்ததில்லை!.

இறப்பு என்பது ஒரு முடிவில்லா கதையில் ஒரு அத்தியாயத்தின் முடிவு. இன்னும் அவர் எழுத்துக்களின் வழியே வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்...

அத்தியாயங்கள் திரும்பப் படிக்கப்படும்...!!!

அஞ்சலியுடன்
ஆதவா

anujanya said...

சி.மணி அறிமுகம் உங்கள் மூலம்தான். ஆனால் முழுதும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

"தீர்வு" முன்பே படித்த உணர்வைத் தருகிறது. உங்கள் தளத்தில் இருந்ததா?

"இடையீடு" -

//கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.//

போலவே, 'பச்சையம்' கவிதையில் வரும்

//இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்//

ஹ்ம்ம். அன்னாருக்கு அஞ்சலி.

அனுஜன்யா

யாத்ரா said...

\\எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று\\

மனசு மிகவும் பாரமாக இருக்கிறது. அவருக்கு அஞ்சலி.

யாத்ரா said...

//இனி மீட்சிச் சிக்கல்//

,,,,,,,,,,,,,,

தராசு said...

அன்னாருக்கு அஞ்சலி,

நம்ம கடைக்கும் அப்பப்ப வர்றதுதானே!!!

மிதக்கும்வெளி said...

என்னுடைய அஞ்சலிகளும். 'பருதி புணர்ந்து படரும் விந்து" அவருடைய வரிகள்தானே? மேலும், 'ஓடும் நதிநீரில் எது என் கை நீர்?" இதுவும் அவருடையதுதான் என்று நினைக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

சுகுணா, முதல் கவிதை பிரமிள் எழுதியது என்று ஞாபகம் (இம்மாதிரியான படிமக் கவிதைகளை சி மணி எழுதியதில்லை). இரண்டாவது எழுதியது சுகுமாரன். இதை நண்பர் ஒருவரிடமும் பேசி நிச்சயதித்துக் கொண்டேன்.