புரோட்டா மாஸ்டரும் ஒரு கவிதையும்

பிரதியெடுப்பதில் உள்ள அவலங்கள்
வெட்டி எறியுங்கள் சில பக்கங்களை
ஆட்டோ குலுக்கலும்
நடிகைகளின் குலுக்கலும் ஒன்றா அல்லது
வேறுவேறா
அல்லது வேறுவேறான ஒன்றா
பெத்துப் போட்ட மனுசன் ஆவியாகிப்போனான்
ஏ டண்டணக்கா ஏ டணக்கு நக்கா
ரசினிகாந்து சண்டை
எது கைகொடுக்கிறது எதுகை
எது னை கொடுக்கும் மோனை
மூக்கு பல் வாய்செவியென
தத்திப் பீணிகா எக்கடனாப் போய்ச் சாவுமேரா
விடுபட்ட வரிகள் காணாமலே போனது
ஆறு ஓடிச் சேருமிடம் கடல்

சில கவிதைகள்

(1)

ஒன்றுமில்லாமல் இருக்கிறேன்
ஒன்றுமில்லாமல் இருக்கிறாய்
ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்
பகல் இரவு மாலை காலை
போகும் வரும்

(2)

எல்லாருக்கும் இருக்கும்
அதே சூழலும்
அதே மனிதர்களும்
அதே மனித உறவுகளும்
எனக்குக் கற்றுத் தருபவை
வேறாக உள்ளன
போலவே
என் எதிர்வினைகளும்

(3)

சொல்கிற அவனுக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறோமென்று
கேட்கிற எனக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறானென்று
ஆனாலும்
அவன் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான்
நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்

விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகார்) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் என்ச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : www.madrasdada.blogspot.com )

தேடுபொறிகளும் குறிச்சொற்களும்

தேடுபொறிக்குள் சிக்கிக் கிடக்கிறது
அறிவின் எல்லைகள்
சரியான குறிச்சொற்களைத்
தேடவும் வந்துவிட்டது மென்பொருள்

வேண்டியது கல்யாணமா
கட்டணக் கழிப்பறையா
அல்லது
எப்படிக் கழிக்கவேண்டுமென்பதா
தேடினாலே போதும்

வேறெதுவும் தேவையில்லை
தேடுபொறியே தெய்வம்

காமக் கதைகள் 45 (20 - 4)

இந்தக் கதையில் ஒரே கள்ள உறவாக இருக்கிறது; தொலைக்காட்சி தொடர்போல் இருக்கிறது; ஒழுங்கீனத்தின் எல்லையைத் தொடுகிறது எனப் பல விமர்சனங்கள். இதற்கு விளக்கமாக பதில் சொல்வதைவிட ஒரு பத்திரிகைச் செய்தியைத் தருகிறேன் :

20.8.2008 தேதியிட்ட குமுதம் பத்திரிகையில் வந்த செய்தியின் சாரம் :

பெரும்பாலான கொலைகளுக்குப் பின்னணி செக்ஸ் பிரச்சனைகள்தான் (இங்கே செக்ஸும் வயலன்ஸும் இணையும் புள்ளியைப் பற்றி எழுதும் ஆர்வத்தை அடக்கிக் கொள்கிறேன்).

சேலம் அருகில் நடந்தது : கவுரி என்ற ஒரு அம்மா கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். பேரன் பேத்தி எடுத்த வயதில் ஏகப்பட்ட இளவயசுப் பையன்களுடன் சகவாசம் வைத்திருந்ததால் அவரது கணவன் புஷ்பாங்கதன் குடும்ப கௌரவம் காக்க கொன்றிருக்கிறார்.

வேளச்சேரியில் நடந்தது : ‘ஒருமுறை நீங்கள் கொடுத்த முத்தத்தை என்னால் மறக்க முடியவில்லை' என பக்கத்துவீட்டு இளைஞனுக்கு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மனைவியொருத்தி கடிதம் எழுதியிருக்கிறாள். இதை அறிந்த கணவன் அவளுடன் சண்டை போட்டிருக்கிறான். அந்த இளைஞன் சமாதானப்படுத்த வந்திருக்கிறான். ஆத்திரத்தில் கணவன் அவனைக் கொன்றுவிட்டான்.

நீலகிரி மாவட்டத்தில் நடந்தது : காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவிக்கிடையில் ஆறு வருடம் கழித்து பிரச்சனை. மனைவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபனுடன் கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது. கணவன் கண்டிக்க, அவள் காதலனுடன் வாழச் சென்றுவிட்டாள். பிறகு அவனுடனும் ஒத்துவராமல் மறுபடியும் கணவனிடம் மன்னிப்பு கேட்டு வாழ வந்திருக்கிறாள். கொஞ்ச காலத்தில் மறுபடியும் தவறான சூழிநிலையில் மனைவியைப் பார்த்திருக்கிறான் கணவன். இதை ஒருநாள் கணவன் சொல்லிக்காட்ட ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் அவன் தலையில் அடித்துக் கொன்றிருக்கிறாள் மனைவி.

இதற்குத் தீர்வை தமிழ்நாடு மனநலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. ராமசுப்ரமணியத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர் கூட்டுக் குடும்பம் சிதைவைதை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லியிருக்கிறார். வயதானவர்கள் காவல் தெய்வங்கள்; அவர்கள் இல்லத்தில் இருந்தால் இதுபோன்ற தீய எண்ணங்களும் தீய செயல்களும் நடக்காது என்பது அவரது கருத்து.

ஆஹா, எப்படியெல்லாம் பிரச்சனைகளை எளிமையாக்குகிறார்கள் என வியந்தான் அதீதன்.

'தொலைக்காட்சி சீரியல் மாதிரி இருப்பதாகச் சொல்வார்கள், அதனால் எழுதவேண்டாமென்று சொன்னேன்; மீறி நீ இக்கதையை எழுதிவிட்டாய். இனி நான் உனக்குக் கதை சொல்ல மாட்டேன்' எனத் தீர்மானமாய்ச் சொன்னான் அதீதன்.

அவன் சொன்ன காரணம் பற்றிய சந்தேகங்கள் எனக்கிருக்கிறது. ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஒருவேளை அவன் மனம்மாறி மீதிக் கதைகளைச் சொன்னால், எழுதுகிறேன்.

வினை - எதிர்வினை - தொடர்வினை

கால் பிய்க்கப்பட்ட குழந்தை
அழுதுகொண்டிருக்கிறது தனியாக
கர்ப்பிணியின் வயிற்றைக் குத்தி
சிசுவின் உருவாகாத உடலைக் கிழித்தும்
தேடித் தேடிக் கொன்றும்
கொண்டாடுகிறார்
கையில் சூலமேந்தியவர்கள்

நிகழ்ந்த வரலாறின்
கரிய நிழல்
சூழ்ந்திருக்கிறது நாற்புறமும்

வெடிக்கின்றன குண்டுகள்
காய்கறிச் சந்தையிலும்
பேருந்துகளிலும்
பொது ஜனங்கள் அல்லாட

ஃப்ளூரசண்ட் திரைகளில்
வெடித்த மற்றும் வெடிக்காத
குண்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வரலாற்று நாயகர்கள்
ஏசி அறைகளில் சொகுசாக

காமக் கதைகள் 45 (20 - 3)

மாலதிக்கும் தரணிக்கும் சிறுசண்டை வந்தபோது தரணி, 'நீ உன்புருஷன விட்டு என்கூட வந்தே.. வேற ஒருத்தன் கிடைச்சா என்னவிட்டு ஓடிப்போயிட மாட்டியா என்ன' எனக் கேட்டிருக்கிறார் - அதீதனிடம் மாலதி தொலைபேசியில் சொன்னது.

மாலதிக்கு தரணியின் மூலம் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. முதல் குழந்தை நார்மல் டெலிவெரி என்றாலும் இது சிசேரியன் ஆப்ரேஷன் - இதுவும் அது.

மாலதிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற வியாதிகள் வந்துவிட்டன. காரணம் தரணிதான். மாலதிமேல் சந்தேகப்படுகிறார் தரணி - இதுவமது.

மாலதியின் சிறுவயது சினேகிதன் சீனிவாசனுடன் ஒருநாள் வீட்டில் அவள் தனியாக இருந்தபோது வெளிக்கதவைப் பூட்டிவிட்டு காவல்துறைக்கு பிராத்தல் நடப்பதாகத் தகவல் தந்துவிட்டார் தரணி - இது வேறு.

போலீஸ், நண்பர்கள் தலையீடு, தகராறு, சமரசம், பிரிவு - இதுவும் வேறு.

தரணி மும்பையில் வேலைகிடைத்து மாலதியையும் குழந்தைகளையும் பிரிந்து சென்றுவிட்டார் - அதீதனின் நண்பன் சொன்னது.

பிருந்தா அவளது இரண்டாவது கணவரின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவளது ஒரே குழந்தையுடன் - அதுவும் இது.

மாலதியைப் பற்றிய தகவல்கள் இல்லை - அதுவுமிது.

வந்தனாவுக்கு அதீதனுடனான தொடர்பு தெரிந்ததும் பிரதீப் அவளை விரட்டிவிட்டான். அவள் அதீதனையும் நிராகரித்து உடன் பணிபுரிந்த சந்தோஷுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்; நடுவில் சிலகாலம் அவள் மனது மறுபடியும் அதீதன்மேல் அலைபாய்ந்தாலும் அடக்கிக் கொண்டாள் - தனிப்பட்ட தகவலிது.

அதீதன் வீட்டிற்கு மொட்டைக் கடிதம் வந்தது, அதீதன் சந்தோஷுடன் பயந்து கொண்டே சண்டைக்குப் போனது, வந்தனா இடையில் கொஞ்ச காலம் சந்தோஷுக்குத் தெரியாமல் அவன் நண்பனான தவில் கலைஞன் பிரேமுடன் உறவு வைத்திருந்தது - இதுவமது, அதுவுமிது, வேறுவேறு.

பிரதீப் தனிமையில் வைசாக்கில் இருக்கிறான் இப்போது. அவனது பணமெல்லாம் தொலைந்து காரோட்டியாகப் பணிபுரிகிறான் - இது அதீதன் சொன்னது. கற்பனையாகச் சொல்கிறான் என நினைக்கிறேன். காரணமிருக்கிறது...

அலைபேசியில்லாத காலமது. ஒருமுறை அதீதன் தொலைபேசியில் வந்தனாவை அழைத்தபோது பிரதீப் எடுத்துவிட்டான். இது என் வீட்டு ஃபோன் கண்டவர்கள் ஃபோன் செய்யவேண்டாமென இரைந்தான். நேரில் பார்த்தால் அதீதனை உதைப்பதற்கும் தயாராய் இருப்பதாய் அறிவித்தான்.

பிரதீப் ஒரு முரடன் என்று மாலதி சொல்லியிருக்கிறாள். அவள் தங்கையை தெருவில் போகும் ஒருவன் கிண்டலடித்தபோது காரிலிருந்து இறங்கி அவன் சட்டையைப் பிடித்து அறைந்து தெருவெல்லாம் இழுத்துச் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்வரை அடித்தானாம்.

அதீதன் பதில் பேசாமல் அப்போதிருந்துவிட்டு இப்போது வாய்ப்பு கிடைத்ததும் பிரதீப்மேலான கோபத்தை இப்படிக் கதையில் புகுத்தித் தீர்த்துக் கொள்கிறானோ என்னவோ?

(இந்தக் கதையின் கடைசிப் பகுதி கட்டுரையாக வெளியாகும்)

காமக் கதைகள் 45 (20 - 2)

வந்தனா வசித்தது கோயமத்தூரில். அவள் கணவன் மேத்யூ. இரண்டு குழந்தைகள் உண்டு. சிறுவயதிலேயே காதலித்துத் திருமணம் செய்தவள். அதனால் அவளது மொத்த குடும்பமே அவளுக்கு எதிராக இருந்தது. மேத்யூவுடனான வாழ்க்கை அவளுக்குச் சலித்துவிட்டது.

அவள் வேலை செய்துவந்த ஹோட்டலில் அப்போது தரணியும் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

மேத்யூவிற்கு மேரியுடன் பழக்கமேற்பட்டது. அவளை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டான் வந்தனாவின் சம்மதத்துடன். மேரி அவர்களுடனேயே வசிக்கவும் அவள் சம்மதித்தாள்.

வீட்டைவிட்டு ஓடிப்போவதென வந்தனா முடிவு செய்யும்போது அவளுக்கு வயது 27. குழந்தைகளைப் பிரிவதில் அவளுக்கு வருத்தமிருந்தாலும், இப்போது மேரியிருப்பதால் குழந்தைகளை பார்த்துக் கொள்வாள் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

அவளை மாலதியின் வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் தரணி. மாலதியின் தூரத்து உறவுப் பெண் வந்தனா என மாலதி அவள் கணவன் பிரதீப்பிடம் அறிமுகப்படுத்தினாள். அவனும் மாலதியின் சொந்தம்தான், ஆனால் இது வேறுவழி உறவு எனச் சமாளித்தாள்.

தரணிக்கு வந்தனாவுடனிருந்த உறவைப் பற்றி அவர் மாலதியிடம் மறைத்துவிட்டார். போலவே வந்தனாவும் தங்களது உறவு தூய்மையான நட்புதான் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

- இவ்வளவு மோசமான குணங்களைக் கொண்ட தரணியை ஏன் இன்னும் அவர் இவர் என மரியாதையாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டாள் வாசகி. அவர் அதீதனின் மேலதிகாரியாகப் பணியாற்றியவர் என்றேன். ஏற்கனவே இக்கதைகள் அதிகாரப் படிநிலைகளைக் கேள்விக்குள்ளாக்கவில்லை என விமர்சனம் இருக்கையில் நீங்கள் இப்படிச் செய்யலாமா என அக்கறையுடன் விசாரித்தாள். -

பிரதீப்பிற்கும் வந்தனாவும் நெருங்குகிறார்கள் என்பது தெரிந்தும் மாலதி கண்டுகொள்ளவில்லை, மறைமுகமாக ஊக்குவிக்கவே செய்தாள். அவர்கள் உறவு வளர்ந்ததும், அதையே காரணம் சொல்லி, பிரதீப்பிடமிருந்து விலகினாள். பிரதீப்பிற்கும் வந்தனாவுடன் வாழ ஆசையிருந்ததால் இதைப் பெரிய பிரச்சனையாக்கவில்லை.

குழந்தையையும் கூட்டிக் கொண்டு தரணியுடன் வாழத் துவங்கினாள் மாலதி. தரணி வேறுவேலை கிடைத்து ஈரோட்டிற்குச் சென்றுவிட்டார் அவர்களுடன்.

அதீதனுக்கு மாலதிமூலம் வந்தனா பழக்கமானாள். இரண்டே வாரங்களில் காதலிக்கத் துவங்கினார்கள். இதற்கிடையில் வந்தனா பிரதீப்புடனும் நெருக்கமாக இருந்திருக்கிறாள், அவளால் இருவரில் ஒருவரை முடிவு செய்ய இயலவில்லை.

இக்கதையின் தொடர்ச்சி காமக் கதைகள் 45 (10) என்ற தலைப்பில் எழுதப் பட்டிருக்கிறது. மீண்டுமொருமுறை அக்கதையைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (http://jyovramsundar.blogspot.com/2008/07/45-10.html)

(இந்தக் கதை இன்னமும் முடியவில்லை... )

காமக் கதைகள் 45 (21)

எனக்குக் காலக் குழப்பம் உண்டு. அதீதன் சொல்லிய சில கதைகள் முன்பின்னாக மாறியிருக்க வாய்ப்புண்டு.

போலவே அதீதனுக்கும். அதீதன் மாலை தூங்கி எழுந்தால், காலையோ எனக் குழம்பி பல்துலக்க ஆரம்பித்துவிடுவான். அவனது இக்குணம் எனக்குத் தெரியும். அதனால் முடிந்தவரை வரிசைக்கிரமாகக் கதைகளைச் சொல்லிக்கொண்டு வருகிறேன். அதையும் மீறிச் சில கதைகள் முன்பின்னாகவோ அல்லது வேறுமாதிரியோ மாறியிருக்கச் சாத்தியமிருக்கிறது. நீங்களும் இதே வரிசையில்தான் படிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு நீங்கள் முதலில் இந்தக் கதையைக்கூடப் படிக்கத் துவங்கலாம், அல்லது 36வது கதையையும் முதலில் படிக்கலாம்.

ஏற்கனவே நடந்த மற்றும் சொல்லப்பட்ட கதைகளையே மறுபடியும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைவில் வையுங்கள் வாசகிகளே.

அதீதன் தன்னுடைய காதலி வித்யாவை அட்டகாசமாக அறிமுகப்படுத்தினான் எனக்கு. அழகாகவே இருந்தாள். அடிக்கொருதரம் அவனைக் காதலுடனும் பெருமையுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'உங்களுக்கு அதீதன எவ்வளவு நாளாத் தெரியும்?'

‘என்னடா இண்டர்வ்யூ மாதிரி கேக்கறே... நாலஞ்சு மாசமாத் தெரியும்' என்றான் அதீதன். அவனை முறைத்தேன். அதீதனைத் தனியே இழுத்துச் சென்று ‘உன் காதலியை நானென்ன அபகரித்துவிடவா போகிறேன், அவளைப் பேசவிடு' என்றேன்.

‘நீ நினைத்தாலும் உன்னால் அது முடியாது. நம்ம ஆளு வேற யாரையாவது பாத்துடுமா என்ன?' எனத் திமிர் பொங்கச் சொன்னான் அதீதன். எனக்குச் சீண்டிப் பார்க்கும் ஆசை வந்தது. ‘சரி பார்க்கலாம்' எனத் திரும்பினோம்.

அதீதனைப் பற்றிப் பல விஷயங்கள் அவளுக்குத் தெரிந்திருந்தது - முக்கியமாக அவன் பல பெண்களுடன் வைத்திருக்கும் தொடர்பு பற்றி. அதுகுறித்து அவள் கவலைப்படவில்லை. என்னுடன் எப்படிப் பழகுகிறான் என்பதுதான் எனக்கு முக்கியமென்றாள். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

கறுப்பு நாய் விஸ்கியைத் திறந்து மூவரும் அருந்தத் துவங்கினோம். மூவரும் இளக ஆரம்பித்தோம்.

மெதுவாக வித்யாவிடம் ஆரம்பித்தேன்.. அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டபிறகு, அவளுக்கு வேறு யாருடனாவது தொடர்பிருக்கிறதா எனக் கேட்டேன். அவள் ஓ இருக்கிறதே என ஒப்புக் கொண்டாள்...

அதீதன் தவிக்க ஆரம்பித்துவிட்டான். அடுத்த பெக்கை ஒரே வாயில் விழுங்கினான். அவனது மாற்றத்திற்கான காரணம் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அறையில் கூடிக்கொண்டிருந்த அழுத்தம் கொஞ்சம் பயத்தைகூடத் தந்தது.

வித்யாவும் அதீதனும் மறுபடி சந்தித்துக் கொள்ளவேயில்லை.

வழமையாக

முன் அறிவிக்கப்படாத
கணமொன்றில் நிகழ்ந்தது அது

அழகற்றது
உணர்ச்சிக் குவியல்
ஏற்கனவே சொல்லப்பட்டதன்
சரியாய்த் தெரியாத நகல்
உயிரற்றது பாசாங்கானது
தோலால் மூடப்பட்ட எழும்பாத குறி
ஆபாசச் சிரிப்பு
பொருளற்ற வார்த்தை ஜாலம்

அற்புதமானது அழகானது உண்மையானது

முன் அறிவிக்கப்படாத கணங்களில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது

காமக் கதைகள் 45 (20 - 1)

மாலதியும் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்தவர்கள்; தூரத்து உறவினர்களும்கூட. அவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் படிக்கும் பெண்குழந்தை உண்டு. இருவருக்கும் மணவாழ்க்கையில் சிறுசிறு உரசல்கள்.

மாலதியின் சிறுவயது சிநேகிதி பிருந்தா. பிருந்தாவின் கணவன் தரணி. இவர்களும் காதல் திருமணமே.

பிருந்தாவின் மூலம் தரணியின் பழக்கமேற்பட்டது மாலதிக்கு.

பிரதீப் மாலையில் நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து மது அருந்துவான். மாங்காய் அரிந்து உப்பு மிளகாய்ப் பொடி தூவிக் கொடுப்பது, முந்திரிப் பருப்பு நெய்யில் வறுத்துக் கொடுப்பது மாலதி செய்ய வேண்டும். குடித்து முடித்தபின், அவர்களுக்கு தோசை அல்லது சப்பாத்தி சுட்டுத் தர வேண்டும். இதுகுறித்து இருவருக்கும் சண்டை வெடித்தது ஒரு நாள். மாலதியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறான் பிரதீப். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தனித்தனியே வாழத்துவங்கினர்.

மாலதிக்குப் தரணியின்மேல் ஈர்ப்பேற்படத் துவங்கியது.

அதீதன் வேலைசெய்து கொண்டிருந்த நிறுவன மேலாளர்களில் ஒருவர் தரணி. அவரைப் பார்க்கவரும்போது அல்லது தொலைபேசி அழைப்பை ஃபார்வார்ட் செய்யும்போதென மாலதியின் நட்பு கிடைத்தது அதீதனுக்கு. இருவரும் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவள் தரணிமேல் இருக்கும் காதலைச் சொன்னாள் அதீதனிடம். தரணியும் மாலதியும் நெருங்கினார்கள்.

'பிரதீப் மோசமான குடிகாரன், அவன்கிட்ட நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்ல' என்றாள் அதீதனிடம் மாலதி. திருமண வாழ்க்கையில் தான் அவனிடம் அடைந்த துன்பங்களைப் பட்டியலிடுவாள். அவனுக்கென்னவோ அவள் அதிகப்படுத்திச் சொல்வதாகப்படும். பேசாமல் கேட்டுக் கொள்வான். தரணியும் பெருங்குடிகாரனென்பது மாலதிக்குத் தெரியாமலிருக்காது!

- அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த தீப்தியை தரணி கணக்கு பண்ணிக் கொண்டிருந்தார். (தீப்தி நடிகை ராதா மாதிரி தளதளன்னு இருப்பாடா என்றான் அதீதன்). நடுவில் அதீதன் புகுந்து தீப்தியிடம் சிறுசிறு குறும்புகள் செய்து கொண்டிருந்தான். யாரோ இதை தரணியிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர்.

சவேரா ஹோட்டல் குளத்தினருகில் நடந்த பார்ட்டி ஒன்றில் தரணி 'i will kill you bastard' எனக் கத்தியபடி, அதீதனை உதைக்க காலைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார். சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதீதன் பயத்தில் உறைந்து போனான் -

மாலதியின் துரோகத்தை அறிந்ததும் பிருந்தாவிற்கு ஆவேசமேற்பட்டது. தரணியைப் பிரிந்து அவள் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவன இயக்குனருடன் இரண்டாவது மனைவியாக வாழ தன் குழந்தையுடன் ஹைதராபாத் சென்றுவிட்டாள்.

அவள் செயலின் நியாயம் அதீதனுக்குப் புரிந்தேயிருந்தது.

அங்கிருந்து அதீதனுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவாள். பிருந்தாவிற்கு அதீதனும் மாலதியும் நண்பர்களெனத் தெரியாது.

‘நீ என் தம்பி மாதிரி அதீதா. என்னால தரணியக்கூட மன்னிச்சுட முடியும். ஆனா மாலதிய மன்னிக்கவே முடியாது...' சகட்டுமேனிக்கு மாலதியைத் திட்டுவாள்.

‘தீப்தி விஷயமும் எனக்குத் தெரியும் அதீதா. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப்பட்ட ஆளுகூட வாழறது. அதுதான் முடியாதுன்னு கிளம்பிட்டேன்...'

'தரணி அந்த ஓடுகாலிகூடவே குடும்பம் நடத்தட்டும். அவ அந்தாளுக்கு டாடா காட்டிட்டுப் போவா பாரு, அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும்...'

மாலதிக்கு அதீதன் பிருந்தாவுடன் தொடர்பில் இருக்கிறான் என்பது தெரியும். அவனிடம் ‘அவ என்னைப்பத்தி ஊரெல்லாம் என்ன சொல்றான்னு தெரியும். அவ கதை எனக்குத் தெரியாதா' என்பாள். அவன் மய்யமாக ம்ம் என்பான்.

அதீதன் மாலதியுடனும் பிருந்தாவுடன் பேசுவது தரணிக்குத் தெரியாது. சிலசமயம் இருவரைப் பற்றியும் அவனிடம் பேசிக் கொண்டிருப்பார். பிருந்தா வீட்டில் நடக்கும் விஷயங்களை - இரவில் நடப்பது உட்பட - மாலதியிடம் சொல்லிவிடுவாளாம். 'நீங்க என்னைக் காதலிக்கும்போது எப்படி அவளோட படுக்கலாம்னு மாலதி சண்டை போடுவா அதீதா'.

'இப்படி ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரிடம் நட்பு வைத்துக் கொள்வது ரொம்பச் சங்கடமானது... ஞாபக சக்தியைச் சோதிக்கக் கூடியது' என்றான் அதீதன் என்னிடம்.

சொல்ல விட்டுப்போனது : தரணியும் பிருந்தாவும் மலையாளிகள். பிருந்தா பேசும் தமிழ் மலையாளத்தைப் போலவே இருக்கும். நடுநடுவில் மலையாள மற்றும் ஆங்கிலக் கலப்போடு அவள் பேசும் தமிழ் அழகானது. அதீதனுக்கு அவள்மீது ஒரு இனந்தெரியாத கவர்ச்சியிருந்தது.

(இந்தக் கதை முடியவில்லை, இன்னுமிருக்கிறது....)

காமக் கதைகள் 45 (19)

காமம் ம்மகா மகாம் ம்காம காம்ம

படுக்கை முன் விளையாட்டு பெண் பாலியல் செக்ஸ் மனமைதுனம் ஆணுறை மாத்திரை சுயமைதுனம் நிலை வழி உறவு ஜெல் கற்பனை எழுச்சி தூண்டல் குறி யோனி விந்து முலை தொடை பிருஷ்டம் காதுமடல் நெற்றி புணர்ச்சி ஆர்கசம் தகும் உறவு நேர் கற்பனை பேராண்மை போதை ஹோமோ ஹெட்ரோ வயாக்ரா ஊசி களிம்பு மயிர் புனைவு கருப்பை காதல் சேர்தல் உதடு மச்சம் மேலே கீழே பக்கவாட்டில் முன்பின் பின்முன் சிறியகுறி பெரியமுலை அகண்டதொடை கவர்ச்சி உணர்வு வேட்கை வெங்காயம் முருங்கைக்காய் குழப்பம் காமசூத்ரா நின்ற நிலை நாய் விரைப்பு கழுதை தாகம் பயம் வீக்கம் வெறி பிறன்மனை நோக்குதல் கற்பு கலவி வெறி கல்வி இடுப்பு மடிப்பு அகன்ற தோள்கள் சிக்ஸ் பேக்ஸ் விரிந்த மார்பு குவிந்த உதடு முயல் பாம்பு எய்ட்ஸ் சல்லாபம் விகாரம் ஆண் மையல் சுருங்கிப் போதல் குதிரை மனைவி சம்போகம் மோகம் எழுச்சி

காம்ம ம்காம மகாம் ம்மகா காமம்

காமக் கதைகள் 45 (18)

அதீதன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குப் புதிதாக குடிவந்திருந்த மாலதியை பார்த்தான். அவளது வடிவான தோற்றம் அவனைக் கவர்ந்தது.

இப்போது நீங்கள் ஒரு பெண்ணைப் பார்ப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அவளைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தான். அவளுடன் பழக விரும்பினான்.

நீங்கள் இப்போது பழக விரும்புகிறீர்கள்.

அவன் வீட்டிலிருந்து புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை படிக்க எடுத்துச் செல்ல அவள் வந்தபோது பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. மிகக் கண்ணியமாகப் பழகினான். அவனுடைய சுவாரசியாமான பேச்சும் உடல்மொழியும் மாலதிக்குப் பிடித்தன.

மோதலில் ஆரம்பிக்கும் சில சினிமா படங்கள் உங்களுக்கு இப்போது ஞாபகம் வராமல் இருக்கட்டும்.

முதலில் புத்தகங்களைப் பற்றிப் பிரதானமாகவும், பிறகு சிறிது நேரம் தனிப்பட்ட விவரங்களையும் பேசினர். அவனுக்குத் தெரிந்த பல எழுத்தாளர்களின் புத்தகங்களை அவளுக்கு அறிமுகம் செய்கிறான். அவள் அப்புத்தகங்களை வாசித்துவிட்டு அவனுடன் விவாதிக்கிறாள்.

உங்களுக்கு இப்போது உங்களுடைய காதலி நினைவிற்கு வருகிறாள். நீங்கள் அவளுடன் பழகிய ஆரம்ப நாட்களை அசைபோடுகிறீர்கள்.

சிறிது நாட்களில் தனிப்பட்ட விஷயங்கள் முக்கியமாகவும், புத்தகங்களைப் பற்றிய பேச்சு குறைகிறது.

நீங்கள் இப்போது நெருங்கத் துவங்குகிறீர்கள். இதற்கு அடுத்துவரும் வரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் கற்பனையின் மூலம் மீதிக் கதையை எழுதுகிறீர்கள்.

உங்களுடைய அந்தக் கதையில் அதீதனும் மாலதியும் காதலிக்கத் துவங்குகிறார்கள். வழக்கமாகக் காதலர்கள் போகும் இடங்களான கடற்கரைக்கும் சினிமாக்களுக்கும் பூங்காக்களுக்கும் போகிறார்கள். பப்களுக்கும் டிஸ்கொத்தேக்களுக்கும் செல்வது உங்களுக்குப் பிடிக்காததாகையால் அவர்கள் அவ்விடங்களுக்குச் செல்வதில்லை. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு முதலிரவை அனுபவிக்கிறார்கள். இப்போது நீங்கள் பார்த்த நீலப் படக் காட்சிகளையும் மனதிற்குள் கொண்டுவந்து அவர்களுடன் பொருத்திப் பார்க்கிறீர்கள். இத்துடன் உங்கள் கற்பனை முடிவிற்கு வருகிறது.

உங்கள் கற்பனையை என்னுடைய கதையுடன் சரிபார்த்துக் கொள்ள விழைகிறீர்கள். அதற்காக இக்கதையின் முதல் வரிகளிலிருந்து மீண்டும் வாசிக்கத் துவங்குகிறீர்கள்.