இந்தப் பதிவை அனுப்பியவர் ஒரு பத்திரிகையாளர், வலைப்பதிவுகளில் பரவலாக அறியப்பட்டவர். இப்போதுள்ள சூழலில் தன்னால் தன் வலைப்பூவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினை குறித்து எழுத இயலாது என்பதால் இதை அனுப்பியுள்ளார்.
தொலைக்காட்சியில் 'மனதைக் குலுங்க வைக்கும்' அந்தக் காட்சிகளைக் கண்டவர்களின் மனட்சாட்சிகள் இருகேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்பின.
1. என்ன இது காட்டுமிராண்டித்தனமான வன்முறை?
2. வன்முறையைக் கண்டு போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அவலமில்லையா?
1. உண்மைதான். இந்த வன்முறை கண்டிக்கத்தக்கதுதான். இது மட்டுமல்ல, எல்லாவிதமான வன்முறையும். ஆனால் இந்த வன்முறை எதிர்ப்பு மனச்சார்பு உடைய இந்திய ஆதிக்க சாதி மனங்கள், கயர்லாஞ்சி வன்முறை, தாமிரபரணிப் படுகொலை, திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் பீ திணிக்கப்பட்ட வன்முறை, குஜராத்தில் முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழித்த வன்முறை என தூலமான வன்முறை தொடங்கி கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை. அப்படியானால், வன்முறை எதிர்ப்பு என்பது பக்கச்சார்பாய் இருக்கும் போது வன்முறையும் வன்முறை ஆதரவும் பக்கச்சார்பாய் இருந்தே தீரும். தென்மாவட்டங்களில் பள்ளர்களின் எழுச்சி சாதிக்கலவரமாக முன்வைக்கப்பட்டதைப் போலவே இப்போது சட்டக்கல்லூரி மாணவர் 'வன்முறை' குறித்துக் கதையாடப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு உண்மையை மட்டும் வரலாற்றின் மிதிபட்ட பாதங்களுக்கு அடியில் நசுங்கிக்கிடக்கும் துணுக்குகளிலிருந்து கண்டுபிடிப்பது சிரமமான காரியமில்லை. தலித்துகள், முஸ்லீம்கள் 'வன்முறை' நிகழ்த்துவது, குண்டுவெடிப்பை நிகழ்த்துவது, பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்படுவது ஆகிய 'வன்முறைச் சம்பவங்கள்' மட்டுமே பொதுப்புத்தியால் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன. ஆனால் சிரிப்பதற்கும் அழுவதற்குமான முரண்நகை என்னவென்றால் இந்தியாவின் ஆகப்பெரும் ஆளும் கருத்தியல் சித்தாந்தமான பார்ப்பனீயத்தால் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட மேற்கண்ட மக்கள் குழுமங்கள் நிகழ்த்துவது வன்முறையல்ல, எதிர்வன்முறை என்கிற எதார்த்தம்தான்.
2. இரண்டாவது கேள்விக்கு வருவோம். போலீஸ் எப்போது வேடிக்கை பார்த்தது, எப்போது 'செயல்பட்டது?' என்கிற கணக்குகள் சாதியக் கறைபடிந்த வரலாற்றில் காணக்கிடைப்பவைதானே. தாமிரபரணி ஆற்றங்கரையில் தலித்துகளையும், பெண்களையும் அடித்து நொறுக்கி, 'கிருஷ்ணசாமி சிவப்பா இருக்கியான்னு பார்க்க வந்தியாடி' என்று பள்ளரினப்பெண்களைக் குண்டாந்தடியால் வன்மையாய்த் தாக்கி, விக்னேஷ் என்னும் ஒன்றரை வயதுக் குழந்தை ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டபோது போலீஸ் 'செயல்படத்தானே' செய்தது? அப்போது போலிஸ் 'செயல்பட்டதை' ஏன் ஊடகங்களும் தமிழ்கூறு நல்லுலகமும் கேள்வி எழுப்பவில்லை? போலீஸ் இந்தச் சம்பவத்தில் மட்டும்தானா வேடிக்கை பார்த்தது? தமிழகம் முழுவதும் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் எவ்வளவு? இதுவரை எவ்வளவு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவற்றில் எவ்வளவு புகார்கள் விசாரிக்கப்பட்டு ஆதிக்கசாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? போலீசு மட்டுமல்ல, நீதிமன்றம், அரசு என எல்லாமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏன் பொதுப்புத்தி கண்டிக்கவில்லை?
சரி , ஆதிக்கசாதி 'மனச்சாட்சி'களின் கேள்விகளை விடுவோம். ஊடகங்களாலும் 'பொது' மக்களாலும் கேட்கப்படாத கேள்விகளுக்கு வருவோம்.
1. அடிபட்ட மாணவர்கள் அப்பாவிகளா?
2. சம்பவ இடத்திற்கு மீடியாக்கள் எப்படி வந்தன?
3. 'பத்து பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக ஒருவனைத் தாக்கும்' அளவுக்கு அவன் செய்த குற்றமென்ன?
1. அடிபட்ட மாணவர்களில் பிரதானமானவன் பாரதி கண்ணன் என்னும் மாணவன் கல்லூரியில் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களை நிகழ்த்தியும் வன்முறைச் செயல்களைத் தூண்டியும் வந்திருக்கிறான். இவன் மீது பாரீஸ் காவல் நிலையத்தில் ஆறு எப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்பு 'சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே அரிவாளோடு திரிந்த மாணவன் கைது' என்னும் பெட்டிச்செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின. அந்த இளைஞன் பாரதிகண்ணன்தான். தேவர் ஜெயந்திக்குப் போஸ்டர் அடித்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் பாலநாதன், ஜெகதீஸ் என்னும் இரண்டு தலித் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியது, தலித் பெண்களைத் தொடர்ச்சியாகச் சீண்டுவது, தலித் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஆகிய செயல்களைத் தொடர்ச்சியாகப் பாரதிகண்ணன் கும்பல் நிகழ்த்தியுள்ளது.
2. சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை.
3. சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலில் பெரும்பாலும் சென்னையைச் சேர்ந்த, மாணவர்கள் ஈடுபடுவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமத்து மாணவர்களே மோதல்களில் ஈடுபடுகின்றனர். ஆதிக்கச்சாதி மாணவர்கள் கிராமங்களில் தங்கள் சாதிக்கு இருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சட்டக்கல்லூரியிலும் கொண்டு வர முயல்கிறார்கள். ஆனால், கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்கள் சட்டக்கல்லூரியில் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் கிடைப்பதாலும் பல்வேறு தொடர்புகளும், ஆதரவுச் சக்திகளும் சென்னையில் கிடைப்பதாலும் துணிச்சலாக எதிர்வன்முறையில் ஈடுபடுகின்றனர். சட்டக்கல்லூரியில் ஒவ்வொரு சாதியும் தனித்தனியாகக் கலைவிழாக்கள் நடத்துவதுண்டு. தேவர் சாதி மாணவர்கள் நடத்தும் கலைவிழாக்கள், முளைப்பாரி எல்லாம் எடுத்து, ஒரு தேவர் ஜெயந்தி குருபூஜை விழா போலவே இருக்கும். அப்போது சாதியுணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களும் முன்வைக்கப்படும். 'சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி என்றால், மதுரையில் முத்துராமலிங்கத்(தேவர்)தின் பெயரில் சட்டக்கல்லூரி வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும். இந்த கோரிக்கைகள் இப்போது படிப்படியாக வளர்ந்து, இந்த மோதல் சம்பவத்தைப் பயன்படுத்தி, 'கல்லூரியிலிருந்து அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும், எஸ்.சி ஹாஸ்டல்கள் மூடப்பட வேண்டும்' என்கிற வரை வளர்ந்துள்ளன..
மாணவர்கள் சாதியரீதியாகப் பிரிவதும் மோதிக்கொள்வதும் வருந்தத்தக்கதுதான், கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் ஆதிக்கச்சாதி மாணவர்கள் தங்கள் சாதிய மனோபாவத்தைக் கைவிடாமல் இதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை. இப்போதும் கூட தாக்கப்பட்ட சித்திரைச் செல்வன் என்கிற தலித் மாணவரை எந்த மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பி.ஜே.பியின் திருநாவுக்கரசரைத் தவிர வேறு எந்த பெரிய அரசியல் தலைவர்களும் சென்று நலம் விசாரிக்கவில்லை (மய்யநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் உட்பட). சித்திரைச் செல்வன் கைதுசெய்யப்பட்டதைப் போலவே பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோரும் கைது செய்யப்படவேண்டும். ஆனால் தேவர் தரப்பிலிருந்து ஒரு மாணவரும் கைது செய்யப்படவில்லை. இத்தகைய தனிமைப்படுத்தல்கள் தலித் மாணவர்கள் மத்தியில் எதிர் வன்முறை மனோபாவத்தையும் , பொதுவான மாணவர்கள் மத்தியில் சாதியக் கசப்பையும் உருவாக்கவே செய்யும்.