இது பூனை வரும் சமயம்.
ஜன்னல்களையும் கதவையும் அகலத் திறந்து வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அதன் வருகையை எதிர்பார்திருந்தான். வீட்டில் யாருமில்லை. கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டான். பூனை நுழைந்தது.
வெள்ளை நிறத்தில் முதுகின் மீது லேசான மஞ்சள் நிறத்தில் இருந்தது பூனை. வெள்ளை மஞ்சள் நிறப் பூனை என நகுலன் வந்து சொல்லிப் போனார். வாசலில் நின்று கொண்டு கண்களை மூடித் திறந்தது. நிழைவாயிலில் நின்று கொண்டிருந்த அதைப் பார்த்துச் சிரித்தான். உடலை விரைப்பாக்கி முதுகை நிமிர்த்திச் சோம்பல் முறித்துச் சிரித்தது. மியாவ் என்று நாக்கை நீட்டி மீசையத் தடவி விட்டுக் கொண்டது. உள்ளே வருமாறு அழைத்தான். தலையை நிமிர்த்தி அறையில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே நுழைந்தது. ஒன்பதடி தொலைவில் நின்று கொண்டது. அருகில் வருமாறு அழைத்தான். தயங்கியது. கையை நீட்டி அதை இழுத்தான். தன்னுடைய எதிர்ப்பை லேசாகக் காட்டிக் கொண்டு வந்தது. அதன் உடல் மேல் தன் கை பட்டதும் அந்த மென்மையான ஸ்பரிசத்தை மிக நேசித்தான்.
முதலில் அந்தப் பூனை வரத் தொடங்கியபோது அவனுக்குச் சிறிய வயது. அதனுடன் விளையாடுவது அவனுக்குப் பிடித்துப் போனது. வீட்டில் யாராவது இருக்கும் போது சில சமயங்களில் அது வந்து விடும். நேரம் காலம் இல்லாமல் அதனுடன் அவன் விளையாடுவான். அந்தப் பூனை வளர்ந்து கொண்டேயிருந்தது. திடீரென்று ஒரு நாள் சிங்கம் போல் வளர்ந்த அது உறுமிய போது பயந்து போனான். அதை வெளியே அனுப்ப முடியாமல் திணறினான். அதன் ஸ்பரிசம் இன்னும் கைகளில் இருந்து கொண்டிருந்தது. அது பெரிதானாலும் தோல் மென்மை மாறவேயில்லை. மிகவும் பயந்து போனவனாய் அதனோடு விளையாடுவதை சிறிது நாட்கள் நிறுத்தி வைத்தான். அது மறுபடியும் சிறிதானவுடன் அவனுக்கு ஆசுவாசமேற்பட்டது.
(தினம் ஒவ்வொரு ரூபம் கொள்ளும் பூனை. ஒரு நாள் சிகப்பாக இருக்கும்; மறுநாள் மஞ்சளாக மாறும். திடீரென்று கறுப்பாகும் போது அவனை அச்சம் ஒரு அடர்ந்த போர்வையைப் போல் மூடிக் கொள்ளும். முதுகில் இருக்கும் வரிகள் சில நாட்கள் காணாமல் போகும். அவனும் கொஞ்சம் கொஞ்சமாகப் பூனையாக மாறுவதை உணர்ந்து ஓவென அழத் துவங்கினான்.)
விரும்பிய போது வந்து கொண்டிருந்த பூனை அவன் விரும்பாத போதும் வரத் துவங்கியது. முதலில் அதை விலகச் சொல்லிக் கெஞ்சியவன் பிறகு மிரட்டத் துவங்கினான். அது அவனை பொருட்டாகவே மதிக்கவில்லை. மெதுவாக அவனை நெருங்கி கைவிரல்களைக் கடித்து தின்ன ஆரம்பித்தது. அந்த வலியின் இதத்தில் கண்களை மூடிக் கொண்டான். நாக்கால் நக்கிக் கொடுத்தது. அதன் சொரசொரப்பில் கையை நீட்டிக் கொடுத்தான். நாக்கு வாளைப் போல் அறுக்க ஆரம்பித்தது. தரையெங்கும் ரத்தம். கதவைத் தாண்டி வெளியே ஓடிய ரத்தத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பூனை ரத்தத்தைக் குடிக்கத் துவங்கியது.
பூனைகளை நேசிக்கும் நண்பர்களின் வீடுகளைத் தேடிச் சென்றான். தொலைக்காட்சியில் வரும் பூனைக் காட்சிகளைப் பதிவு செய்து வைத்திருந்தார்கள். வீடு முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டிகளாக அடுக்கிப் பூனைகளைக் காட்டினார்கள். வீடெங்கும் பூனைகள் சுதந்திரமாகத் திரிந்தன. ஜன்னலைத் திறந்து பார்த்தான். தெருவெங்கும் பூனைகள். ‘எங்கு பார்த்தாலும் பூனைகள், பூனைகள், இது பூனைகளின் உலகமாகிவிட்டது' எனக் கத்திக் கொண்டே ஓடினான்.
இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கும் நான், ‘அதிலொன்றும் தவறில்லையே' என்றேன். ‘கதை எழுதுவது தான் உன் வேலை. குறுக்கே பேசுவது அல்ல' என்றான்.
வீட்டிற்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண்கள் வந்திருந்தார்கள். உட்கார வைத்துப்பேசிக் கொண்டிருக்கையில், பூனை வந்துவிடக் கூடாதென்று வேண்டிக் கொண்டிருந்தான். ஆனால் பூனை மெதுவாக உள்ளே நுழைந்தது. ‘போய்விடு; இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்' என இரைந்தான். பூனை அலட்சியப் படுத்தி அவன் மேல் ஏறியது. அவன் கதறக் கதறக் கேட்காமல் அவனது கழுத்தில் தன் கூர்மையான பற்களைப் பதித்தது. அவனது அலறல் அந்தக் கட்டிடத்தையே நடுக்கியது. முழித்துப் பார்க்கையில் பெண்கள் போய்விட்டிருந்தார்கள். இந்த உலகத்திலிருந்து பூனைகளை ஒழிப்பேன் என சபதம் பூண்டான். ‘உன்னால் அது ஆகாது. எங்களை அழிக்க யாராலும் முடியாது. முயற்சித்தவர்களை நாங்கள் அழித்து விட்டோம்' எனக் கெக்கலித்தது பூனை. அன்று முதல் பூனைகளை அழிக்க வெறி கொண்டு அலைந்தான்.
பூனைகளை விட்டுப் பிரிந்த புதிதில் சில நாட்களுக்கு பைத்தியம் பிடித்தவன் போலானான். மாற்றாக நாய் வளர்க்க முடிவு செய்து குட்டி நாய் ஒன்றை வாங்கினான். குருப்பு நிறக் குட்டி நாய் எப்போதும் அவன் கால்களைச் சுற்றிக் கொண்டிருக்கும். அதனுடன் விளையாடுவதில் அவன் பூனைகளை மறக்க ஆரம்பித்தான். நாயைக் கூட்டிக் கொண்டு காலையில் நடை போவான். அதற்குத் தாவி உணவைப் பிடிக்கும், டயருக்குள் பாயும் வித்தைகள் எனப் பலவற்றைக் கற்றுக் கொடுத்தான். அந்த நாயும் சுதந்திரமாக அவனது படுக்கையறை வரை உலவியது. அவன் மேல் ஏறி விளையாடியது. நாக்கால் அவன் கால்களை நக்கியது. கால் விரல்களைக் கவ்வியது. நெஞ்சின் மீதேறி, தன்னுடைய ஈரமான மூக்கினால் அவனது கழுத்தைச் சீண்டியது. திடீரென்று குரல்வளையைக் கவ்வியது. அலறிக் கொண்டு நாயைத் தூக்கிப் போட்டான். எழுந்தமர்ந்து பார்த்ததில் அது பூனையாக மாறியிருந்தது. கண்களில் அவனை வெற்றி கொண்ட பெருமிதம். ஓவென்று அழத் துவங்கினான். பூனைகளை ஒழிக்க முடியாதா எனப் புலம்பினான்.
பூனைகளைப் பற்றிய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தான். புத்தகங்களின் மேலிருந்தும் நடுவிலிருந்துமாகப் பல பூனைகள் தோன்றின. அந்தப் பூனைகளின் சத்தம் நாராசமாயிருந்தது. வாசல், திண்ணை, படுக்கை, சமையலறைப் பாத்திரம் என எங்கும் பூனைகள் வசிக்கலாயிற்று. பூனையின் மென்மையை நினைத்தாலே திகட்டலாயிற்று. புத்தகங்களில் உள்ள பூனைகளை அழிக்கும் முறைகளைச் செய்து பார்த்தான்.
“உன்னுடைய முயற்சி சிறுபிள்ளைத் தனமாயிருக்கிறது” என்றேன், இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கும் நான்.
“உன் வேலையை நீ பார்”
“இந்தக் கோபம் தான் உன்னால் பூனைகளை அழிக்க முடியாதிருக்கும் காரணம்”
“ஐயா, கோபத்தைத் துறந்த முனிவரே, உங்களால் பூனைகளை ஒழிக்க முடிந்ததா”
“நான் பூனைகளை ஒழிக்க நினைக்கவேயில்லையே”
“நீ கதை எழுதுவதை விட்டுவிட்டு வாதம் செய்கிறாய்”
பதினாறாம் நூற்றாண்டுப் புத்தகமொன்றில் பூனையைக் கவனிப்பதால்தான் அதன் முக்கியத்துவம் கூடுகிறதென்றும், அதனைக் கண்டு கொள்ளவே கூடாதென்றும் இருந்தது. பூனைகளைப் பார்த்தாலும் பார்க்காதது போல் இருக்கலானான். அவை அவன் மடியில் வந்து உட்காரும். கைகளை நக்கும். உடலைத் தேய்க்கும். அவன் இறுகிய மனத்துடன் அவற்றைப் புறக்கணித்தான். பூனைகள் அவனைக் கிண்டல் செய்தன. மீசையைத் தடவிக் காட்டின. அவனெதிரில் ஜோடி ஜோடியாகப் பூனைகள் கூத்தாடின. அறையெங்கும் மறுபடி பூனைகள். ‘என்னை விட்டுப் போய்விடுங்கள்' எனக் கதறினான். “இவ்வளவு நாட்கள் நான் உங்கள் அடிமையாயிருந்தது போதாதா? எவ்வளவு சிநேகிதமாகப் பழகியிருக்கிறேன்; உண்பதற்கு எவ்வளவு கொடுத்தேன்; எனக்கு விருப்பமில்லையெனத் தெரிந்த பிறகும் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்; தயவு செய்து போய்விடுங்கள்.” பூனைகள் மறுபடியும் அவனைச் சுற்றின. தூக்கத்திலும் விழிப்பிலும் அவனை ஆண்டன.
பூனைகளில் பலவகை உண்டு. நெருங்கிப் பழகும்; தூரத்திலிருந்தே சிநேகமாய்ச் சிரிக்கும்; மடியில் வந்து அமர்ந்து கொள்ளும்; காலைக் கடிக்கும், உருண்டையான கண்களால் உருட்டிப் பார்க்கும், நகத்தை நீட்டிப் பிறாண்டும்... எனப் பலவகை. காலில் அடிப்பாகம் மெத்தென்று இருக்கும். தரையில் காலை அழுத்தித் தாவும் போது நகங்கள் தரையைக் கீறும் சப்தம் சிலிர்க்க வைக்கும். தாவும் போது சில சமயம் நகங்கள் கீறுமே தவிர, தரை இறங்குகையில் மெத்தென்று தான் குதிக்கும். அதன் முதுகைச் சற்று அழுத்தித் தேய்தால் முடி கொட்டும். அவனது பாட்டி பூனையின் ஒரு முடி விழுத்தாலும் ஏழேழு ஜென்மங்களுக்கும் அந்தப் பாவம் தொடரும் என்பாள். இப்படிப் பட்ட மாயைகள் பூனைகளைக் காப்பாற்றுகின்ற என நினைத்தான்.
“அவ்வளவு தான்” என்றான்.
கதையைப் பாதியில் நிறுத்தினான். மேலே கதையைச் சொல்ல விருப்பமில்லை; அது முடியவும் முடியாதென்றான்.
ஆனால் இந்தக் கதையை எழுதுவது நான் தானே. கூர்ந்து கவனித்து விட்டேன்.
அவன் தன் கைகளில் விஷ பாட்டிலை வைத்துக் கொண்டிருந்த போது அறையினுள் நிழைந்தேன்.
ஒரு சிறிய பாத்திரத்தில் பாலை விட்டான். அதில் விஷத்தைக் கலந்தான். ‘இதைப் பூனை குடித்தால் நொடிப் பொழுதில் மரணம் தான்' என உரக்கச் சொல்லிக் கொண்டான். ‘ஒரு பூனையை அழித்தால் போதும்; மற்றவை தானாக அழிந்து விடும்' என்றான். ஒரு மாதிரியான மயக்கத்தில் இருந்தான். முகத்தில் வியர்வை ஊறிக் கொண்டே இருந்தது. நாற்பத்தைந்து கைக்குட்டைகளில் துடைத்துப் போட்டும் அடங்குவதாயில்லை. அறையெங்கும் வியர்வை நெடி. விஷப் பால் கலந்த பாத்திரத்தை கதவருகில் வைத்தான்.
பூனை நுழைந்தது. பாத்திரத்தைப் பார்த்துச் சிரித்தது. அவனை முறைத்தபடி பாலைக் குடித்தது. விதிர்த்துப் போய் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அது பாலை நக்கிக் குடிக்கும் சத்தம் அறையின் மௌனத்தைக் கிழித்தது. முழுவதுமாகக் குடித்து முடித்தது. பாத்திரத்தில் ஒட்டியிருந்த பாலை நக்கும் போது, இடதும் வலதுமாகப் பாத்திரம் ஓசையெழுப்பியபடி நகர்ந்தது. தலையை நிமிர்த்தி மீசையில் ஒட்டியிருந்த பாலை நாக்கை வெளியில் நீட்டிச் சுத்தம் செய்தது.
“அவ்வளவுதான், பூனைகள் ஒழிந்தன” எனக் கூக்குரலிட்டான்.
அது அவனைப் பார்த்தபடியேயிருந்தது. ஒவ்வொன்றாகப் பல நிறத்தில் பூனைகள் வரத் துவங்கின. அறையெங்கும் உலகெங்கும் பூனைகள் தோன்றி அலைந்தபடியே இருக்கின்றன.
(இது ஒரு மீள் பதிவு)