அந்தச் சம்பவம் நடக்கும்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும். ஊர்சுற்றுவதும், வழியில் பார்க்கும் பெண்களைக் கிண்டல் செய்வதும், எலிமெண்ட்டரி ஸ்கூலில் உட்கார்ந்து தம்மடிப்பதும்தான் பொழுதுபோக்கு.
தெருவில் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவைத்திருந்தோம். என் பக்கத்தில் வரதனும் திருமலையும் நின்றிருந்தார்கள். திருமலையின் கையில் கிரிக்கெட் ஸ்டம்ப் இருந்தது. திருமலையின் பட்டப்பெயரான ஆடு (அவனது தலையும் கழுத்தும் ஆட்டைப் போலவே இருப்பதால் அந்தப் பெயர்) என்பதைச் சொல்லிக் கிண்டல் செய்தபடி ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று கையில் இருந்த ஸ்டம்பால் என் தலையில் ஓங்கி அடித்தான். கண்களில் பூச்சி பறக்க அப்படியே தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டேன்.
சிறிதுநேரம் கழித்து எழுந்தபடி ‘ஏண்டா அடிச்சே' என்றேன். அவன் ‘கிட்டே வராதே. வந்தா மறுபடியும் அடிப்பேன்' என்றான். எனக்குப் பயமாயிருந்தது. தலை வீங்கியிருந்தது. பயத்தை மறைக்க ‘ஏன்னு சொல்லு, பரவாயில்லை' என ஏதேதோ சொல்லியபடி அவனை நெருங்கிப் பாய்ந்தேன். அவனை அடிப்பதற்குள் வரதன் வந்து தடுத்துப் பிரித்துவிட்டான் எங்களை.
***
எழுத்து என்கிற செயல்முறை பற்றிப் பேசும்போது, மொழியின் தீவிர சாத்தியப்பாடுகளைப் புரிந்து கொள்ளும்போது, ஆசிரியனாகிய நபர் பற்றிய கருத்துகளே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அதாவது, "வாசித்துக் கொள்ளப்படுகிற எந்த ஒரு எழுத்துப் பிரதிக்கும் மூலமாக இருப்பவன், கர்த்தாவாக இருப்பவன் அதன் ஆசிரியன் என்கிற நபர்தான்" என்கிற மரபான புரிதல் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. எழுதுபவனும் எழுத்துருவே. இன்னும் சொல்லப்போனால், குறியீடுகளைக் கட்டமைக்கிற சொல்லாடல்களத்தில் ஏதோ ஓரிடத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட எழுதுகிற நபர். அவ்வளவுதான்.
***
From : Ahilan (
ahilan_1978@yahoo.com>;
Date : Saturday, March 07, 2009 10:23 AM
To : Pravin (
los_pravin68@gmail.com>;
Subject : Hai
அன்புள்ள பிரவீன்,
நலமா? நான், அம்மா அனைவரும் நலம்.
இங்கு என்னுடைய நிறுவனத்தில் நான்கைந்து பேரை வேலையைவிட்டு எடுத்துவிட்டார்கள். அதனால் கடுமையான பணிச்சுமை. வாயைத் திறந்து அருகிலிருப்பவர்களிடம் பேசக்கூடப் பயமாயிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட தளங்களைத் தவிர பிறவற்றிற்குச் செல்ல முடியாது... இதை அனுப்புவதுகூடக் பிரௌசிங் செண்டரிலிருந்துதான். வேறு வேலைக்கு முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன்... பார்ப்போம்.
ராஜா சித்தப்பா வந்திருந்தார் முந்தா நேற்று. உன்னைப் பற்றி விசாரித்ததாக எழுதச் சொன்னார். எழுதிவிட்டேன் :)
நீ தொலைபேசியில் பேசுவதேயில்லை என அம்மா வருத்தப்பட்டார்கள். நேரம் கிடைக்கும்போது பேசேன். தாரணி வயதுக்கு வந்து விட்டாள். சீர் செய்ய வேண்டும், அதனால் உன்னைக் கூடுதலாகப் பணம் அனுப்பச் சொன்னார்கள் அம்மா.
சரி, பிற, பின்.
அன்புடன்,
அகிலன்.
***
சிதறல்கள்தான் ஒரே இலக்கிய வடிவம். கதை அமைப்பு என்பதுதான் கதையானதன் இறுதி அர்த்த தளம். செயல்ரீதியான பங்கு பெற்றலின்மூலம் வாசகன் எழுத்துப் பொருள் மாற்றியமைத்துக் கொள்கிறான். அதை அணுகி, தட்டி அதன் உள்ளிரைச்சல்களைக் காது கொடுத்துக் கேட்கிறான். அந்தப் பொருள் உடனடியாக தன்னைக் கொட்டிவிடுவதாக சௌகரியமாக இருந்து கொள்வதில்லை.
***
எனக்குப் பணத்தட்டுப்பாடு வரும்போது நண்பர்களிடமிருந்து பணத்தைத் திருடிவிடுவேன். ஆனால் இதுவரை மாட்டிக் கொண்டதேயில்லை. போன வாரம்கூட குடிக்க வேண்டும் போல் தோன்றியது, கையில் பணமில்லை. அறை நண்பனின் சட்டைப் பையிலிருந்து 100 ரூபாய் பணத்தைத் திருடினேன். ஆனால் அன்றைய தினம் குடிக்கவில்லை. பிறகு மறுபடியும் பணத்தைத் திரும்ப வைக்க மனமில்லாமல் நானே வைத்துக் கொண்டேன்.
***
மேலே பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். குறுக்கே ஒரு நாய் ஓடியது. என்னைத் திரும்பிப் பார்த்ததது. அதன் கண்களில் குரூரம் என்னை பயம்கொள்ள வைத்தது. வேகமாக - கிட்டத்தட்ட ஓடியபடி - அந்தத் தெருவைக் கடந்தேன். அதன்பிறகுதான் யாராவது பார்த்திருந்தால் அசிங்கமாயிருக்குமே எனத் தோன்றியது. நாய்க்குப் பயந்தது கொஞ்சம் சிரிப்பாகக்கூட இருந்தது.
***
கடையில் சிகரெட் வாங்கினேன். சில்லறையைச் சத்தமெழும்படி தன் பெட்டியில் போட்டான் கடைக்காரச் சிறுவன். வேறு ஒருவரிடம் வியாபாரம் பேச ஆரம்பித்துவிட்டான்.
***
இந்தக் கதையில் உள்ள சில வரிகளை யார் எழுதியது எனச் சொல்லாமல் செல்வது அறமற்ற செயல் என்றார்கள் கதையை எழுதுவதற்குமுன்பே வாசித்துவிட்ட கிளிங்கோவிட்சும், கி பி ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையும் போன கதையில் வந்த காத்தவராயனும். மூலப் பிரதிகளைத் தொலைத்துவிட்டேன், அதனால் எழுதியது யார் எனத் தெரியவில்லை என்றேன். ஆனால் அது கதையில் இவ்வாறு வந்திருந்தது : ஆசிரியனை மட்டுமல்ல பிரதியையும் கொன்றுவிட்டேன் என்றேன். சிறிது யோசனைக்குப்பின், எனது இனக்குழுவில் கொலையும் ஒரு primordial sentiment தான் என்றேன்.
***
வேர்வையில் உடல் கசகசத்தது. அறைக்குச் சென்றதும் முதல் வேலையாகக் குளிக்கவேண்டும். பேசாமல் அறையிலேயே இருந்திருக்கலாம். என்னவோ ஆசைப்பட்டு இங்கு வந்து, வந்ததும் நடக்காமல் போனதில் கொஞ்சம் வெறுப்பாகக்கூட இருந்தது என்மீதே. சற்று தூரம் சென்றதும் மரங்கள் அடர்ந்த சாலை தெரிந்தது. மரங்கள் சாலைக்கு ஒரு அழகைத் தந்துவிடுகின்றன. மரங்களின்கீழ் நடக்கும்போது ஒருவித பாதுகாப்பு உணர்வும் பயமும் ஒருங்கே ஏற்படுவது புதிராகவே இருக்கின்றது.
அந்தச் சாலைக்குச் செல்லவில்லை நான்.
எனக்குப் பக்கவாட்டில் இடிப்பதுபோல் வேகமாக வந்து என்னை உராய்ந்தபடி சடன் பிரேக் அடித்து நின்றது ஒரு ஸ்கூட்டர். தெருவில் போக்குவரத்துகூட இல்லை.. ஒரே ஒரு சைக்கிள்தான் என்னருகில் சென்றுகொண்டிருந்தது. ஸ்கூட்டர்காரன் ஒரு மன்னிப்புகூடக் கேட்காமல் வண்டியை ஓட்டிச் சென்றான். மக்கள் ஏன் இப்படி அராஜகவாதிகளாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
பேருந்து நிலையத்தை அடைந்ததும் அதிசயமாக நான் போகவேண்டிய பஸ் வந்தது. 100 ரூபாயைக் கொடுத்து டிக்கெட் கேட்டேன். ‘ஏன்யா இப்படி நோட்டைக் கொடுத்து கழுத்தறுக்கறீங்க... இறங்கிப் போய்யா...' என விசிலை ஊதி என்னை இறக்கிவிட்டார். தெருநாயைப் போல் உணர்ந்தேன்.
***
அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே... நான்காம் வட்டம் சார்ப்பாக அண்ணனுக்கு இந்த மலர்மாலையைப் பொன்மாலையாக, இந்தக் கதர்த் துண்டைப் பொன்னாடையாக அணிவிக்கிறேன்.. யோசித்துப் பாருங்கள் இந்த ஆட்சியில் விலைவாசியைத் தவிர வேறு ஏதாவது உயர்ந்திருக்கிறதா. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மளிகைப் பொருட்களை உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து தருவோம், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம்... இந்த நாட்டை வல்லரசாக்குவோம்.
***
சிதறு தேங்காய்ச் சில்லுகளாக வார்த்தைகள் நாலாபுறமும் இறைந்து கிடக்கின்றன.