நீரூற்றின் அருகில் உன் நீல நிறக் குட்டிக் கைகளால்
மதுவருந்துவதைப் பார்த்தேன். 
உன் கைகள் குட்டியில்லை, ஆனால் சிறியது.
அந்த நீரூற்று ஃபிரான்ஸில் இருக்கிறது
அங்கிருந்துதான் நீ உன்னுடைய கடைசிக் கடிதத்தை எழுதினாய்
அதற்கு என்னுடைய மறுமொழிக் கடிதத்திற்கு 
உன்னிடமிருந்து பதில் இல்லை
நீ கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் பெரிய எழுத்துகளில் பைத்தியக்காரக் கவிதைகளை
எழுதிக் கொண்டிருந்தாய்.
உனக்குப் பிரபலமான கலைஞர்களைத் தெரிந்திருந்தது
அவர்கள் எல்லாரும் உன்னுடைய காதலர்களாய் இருந்தார்கள்
நான் உனக்கு எழுதியிருந்தேன் : பரவாயில்லை அவர்கள் 
வாழ்க்கையில் புகுந்து கொள், எனக்குப் பொறாமையில்லை, 
ஏனெனில் நாம் சந்தித்ததேயில்லை.  நாம் 
ஒருமுறை நெருங்க இருந்தோம், ஆனால் சந்திக்கவோ 
அல்லது இருவரும் தொட்டுக் கொள்ளக்கூட இல்லை.
நீ பிரபமானவர்களிடம் சென்றாய், 
பிரபலமானவர்களைப் பற்றி எழுதினாய். 
பிரபலமானவர்களுக்குத் தங்கள் புகழைப் பற்றித்தான் 
கவலை என்பதைப் புரிந்து கொண்டாய்.
தங்களுக்குப் புகழைத் தரும், 
தங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் 
இளம் பெண்ணைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. 
காலையில் எழுந்து பெரிய எழுத்துகளில் 
கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் 
கவிதை எழுதினாய். கடவுள் இறந்துவிட்டார் என்பது 
நமக்குத் தெரியும்.  அவர்கள் சொன்னார்கள், 
ஆனால் உன்னைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது 
என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை - 
பெரிய எழுத்துகள் காரணமாயிருந்திருக்கலாம். 
பல ஆசிரியர்களிடமும் பதிப்பகங்களிடமும் 
நீ மிகச் சிறந்த பெண் கவிஞர் என்று சொல்லியிருக்கிறேன். 
பிரசுரிக்கச் சொல்லியிருக்கிறேன்.  நீ 
பித்துதான் ஆனால் நீ மந்திரவாதியும்கூட 
உன்னிடம் பொய் இல்லை 
சின்னச் சின்னப் புகைப்படங்கள் மட்டும் வைத்துக் கொள்ளும், 
தொட்டுக்கொண்டேயிராத, 
கடிதத் தொடர்பு மட்டுமே உள்ள 
ஒரு ஆண் பெண்ணை எப்படிக் காதலிப்பானோ 
அப்படிக் காதலித்தேன் உன்னை.  
சிறிய அறையில் சிகரெட்டை உருட்டியபடி 
நான் அமர்ந்திருக்க, பாத்ரூமில் நீ சிறுநீர் கழிக்கும் 
ஓசையைக் கேட்டிருந்தால் உன்னை இன்னும் காதலித்திருப்பேன்.
ஆனால் அது நடக்கவேயில்லை.  உன் 
கடிதங்கள் சோகமாக ஆகிக் கொண்டிருந்தன. உன் 
காதலர்கள் உன்னை ஏமாற்றினர்.  
எல்லாக் காதலர்களும் ஏமாற்றுக்காரர்கள்தான் 
என்று பதில் எழுதினேன்.
அந்தப் பதில் உன்னைச் சமாதானப்படுத்தவில்லை.  
உன்னிடம் ஒரு அழும் மேஜை இருப்பதாகவும், 
அதை நதி ஓடும் பாலத்தின் மேல் போட்டு, 
தினமும் இரவுகளில் அதன் மீது அமர்ந்து, 
உன்னைக் காயப்படுத்திய, உன்னை மறந்த 
காதலர்களை நினைத்து அழுவதாக எழுதியிருந்தாய். 
நான் உனக்குப் பதில் எழுதினேன் - 
ஆனால் அதன் பிறகு உன்னிடமிருந்து கடிதமேயில்லை.  
நீ தற்கொலை செய்து கொண்டதாக 
3-4 மாதங்கள் கழித்து 
என்னுடைய நண்பன் தெரியப்படுத்தினான். 
நாம் சந்தித்திருந்தால், 
உன்னிடம் நானோ அல்லது என்னிடம் நீயோ 
உண்மையாக இருந்திருக்க மாட்டோம் 
என்பதற்கான சாத்தியம் உள்ளது. 
இப்படி முடிந்துபோனதே நல்லது.
(சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி எழுதியது.  சில இடங்களில் மட்டும் வசதி கருதி மாற்றியிருக்கிறேன்)