மாலதியும் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்தவர்கள்; தூரத்து உறவினர்களும்கூட. அவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் படிக்கும் பெண்குழந்தை உண்டு. இருவருக்கும் மணவாழ்க்கையில் சிறுசிறு உரசல்கள்.
மாலதியின் சிறுவயது சிநேகிதி பிருந்தா. பிருந்தாவின் கணவன் தரணி. இவர்களும் காதல் திருமணமே.
பிருந்தாவின் மூலம் தரணியின் பழக்கமேற்பட்டது மாலதிக்கு.
பிரதீப் மாலையில் நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து மது அருந்துவான். மாங்காய் அரிந்து உப்பு மிளகாய்ப் பொடி தூவிக் கொடுப்பது, முந்திரிப் பருப்பு நெய்யில் வறுத்துக் கொடுப்பது மாலதி செய்ய வேண்டும். குடித்து முடித்தபின், அவர்களுக்கு தோசை அல்லது சப்பாத்தி சுட்டுத் தர வேண்டும். இதுகுறித்து இருவருக்கும் சண்டை வெடித்தது ஒரு நாள். மாலதியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறான் பிரதீப். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தனித்தனியே வாழத்துவங்கினர்.
மாலதிக்குப் தரணியின்மேல் ஈர்ப்பேற்படத் துவங்கியது.
அதீதன் வேலைசெய்து கொண்டிருந்த நிறுவன மேலாளர்களில் ஒருவர் தரணி. அவரைப் பார்க்கவரும்போது அல்லது தொலைபேசி அழைப்பை ஃபார்வார்ட் செய்யும்போதென மாலதியின் நட்பு கிடைத்தது அதீதனுக்கு. இருவரும் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவள் தரணிமேல் இருக்கும் காதலைச் சொன்னாள் அதீதனிடம். தரணியும் மாலதியும் நெருங்கினார்கள்.
'பிரதீப் மோசமான குடிகாரன், அவன்கிட்ட நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்ல' என்றாள் அதீதனிடம் மாலதி. திருமண வாழ்க்கையில் தான் அவனிடம் அடைந்த துன்பங்களைப் பட்டியலிடுவாள். அவனுக்கென்னவோ அவள் அதிகப்படுத்திச் சொல்வதாகப்படும். பேசாமல் கேட்டுக் கொள்வான். தரணியும் பெருங்குடிகாரனென்பது மாலதிக்குத் தெரியாமலிருக்காது!
- அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த தீப்தியை தரணி கணக்கு பண்ணிக் கொண்டிருந்தார். (தீப்தி நடிகை ராதா மாதிரி தளதளன்னு இருப்பாடா என்றான் அதீதன்). நடுவில் அதீதன் புகுந்து தீப்தியிடம் சிறுசிறு குறும்புகள் செய்து கொண்டிருந்தான். யாரோ இதை தரணியிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர்.
சவேரா ஹோட்டல் குளத்தினருகில் நடந்த பார்ட்டி ஒன்றில் தரணி 'i will kill you bastard' எனக் கத்தியபடி, அதீதனை உதைக்க காலைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார். சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதீதன் பயத்தில் உறைந்து போனான் -
மாலதியின் துரோகத்தை அறிந்ததும் பிருந்தாவிற்கு ஆவேசமேற்பட்டது. தரணியைப் பிரிந்து அவள் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவன இயக்குனருடன் இரண்டாவது மனைவியாக வாழ தன் குழந்தையுடன் ஹைதராபாத் சென்றுவிட்டாள்.
அவள் செயலின் நியாயம் அதீதனுக்குப் புரிந்தேயிருந்தது.
அங்கிருந்து அதீதனுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவாள். பிருந்தாவிற்கு அதீதனும் மாலதியும் நண்பர்களெனத் தெரியாது.
‘நீ என் தம்பி மாதிரி அதீதா. என்னால தரணியக்கூட மன்னிச்சுட முடியும். ஆனா மாலதிய மன்னிக்கவே முடியாது...' சகட்டுமேனிக்கு மாலதியைத் திட்டுவாள்.
‘தீப்தி விஷயமும் எனக்குத் தெரியும் அதீதா. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப்பட்ட ஆளுகூட வாழறது. அதுதான் முடியாதுன்னு கிளம்பிட்டேன்...'
'தரணி அந்த ஓடுகாலிகூடவே குடும்பம் நடத்தட்டும். அவ அந்தாளுக்கு டாடா காட்டிட்டுப் போவா பாரு, அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும்...'
மாலதிக்கு அதீதன் பிருந்தாவுடன் தொடர்பில் இருக்கிறான் என்பது தெரியும். அவனிடம் ‘அவ என்னைப்பத்தி ஊரெல்லாம் என்ன சொல்றான்னு தெரியும். அவ கதை எனக்குத் தெரியாதா' என்பாள். அவன் மய்யமாக ம்ம் என்பான்.
அதீதன் மாலதியுடனும் பிருந்தாவுடன் பேசுவது தரணிக்குத் தெரியாது. சிலசமயம் இருவரைப் பற்றியும் அவனிடம் பேசிக் கொண்டிருப்பார். பிருந்தா வீட்டில் நடக்கும் விஷயங்களை - இரவில் நடப்பது உட்பட - மாலதியிடம் சொல்லிவிடுவாளாம். 'நீங்க என்னைக் காதலிக்கும்போது எப்படி அவளோட படுக்கலாம்னு மாலதி சண்டை போடுவா அதீதா'.
'இப்படி ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரிடம் நட்பு வைத்துக் கொள்வது ரொம்பச் சங்கடமானது... ஞாபக சக்தியைச் சோதிக்கக் கூடியது' என்றான் அதீதன் என்னிடம்.
சொல்ல விட்டுப்போனது : தரணியும் பிருந்தாவும் மலையாளிகள். பிருந்தா பேசும் தமிழ் மலையாளத்தைப் போலவே இருக்கும். நடுநடுவில் மலையாள மற்றும் ஆங்கிலக் கலப்போடு அவள் பேசும் தமிழ் அழகானது. அதீதனுக்கு அவள்மீது ஒரு இனந்தெரியாத கவர்ச்சியிருந்தது.
(இந்தக் கதை முடியவில்லை, இன்னுமிருக்கிறது....)