மாலதிக்கும் தரணிக்கும் சிறுசண்டை வந்தபோது தரணி, 'நீ உன்புருஷன விட்டு என்கூட வந்தே.. வேற ஒருத்தன் கிடைச்சா என்னவிட்டு ஓடிப்போயிட மாட்டியா என்ன' எனக் கேட்டிருக்கிறார் - அதீதனிடம் மாலதி தொலைபேசியில் சொன்னது.
மாலதிக்கு தரணியின் மூலம் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. முதல் குழந்தை நார்மல் டெலிவெரி என்றாலும் இது சிசேரியன் ஆப்ரேஷன் - இதுவும் அது.
மாலதிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற வியாதிகள் வந்துவிட்டன. காரணம் தரணிதான். மாலதிமேல் சந்தேகப்படுகிறார் தரணி - இதுவமது.
மாலதியின் சிறுவயது சினேகிதன் சீனிவாசனுடன் ஒருநாள் வீட்டில் அவள் தனியாக இருந்தபோது வெளிக்கதவைப் பூட்டிவிட்டு காவல்துறைக்கு பிராத்தல் நடப்பதாகத் தகவல் தந்துவிட்டார் தரணி - இது வேறு.
போலீஸ், நண்பர்கள் தலையீடு, தகராறு, சமரசம், பிரிவு - இதுவும் வேறு.
தரணி மும்பையில் வேலைகிடைத்து மாலதியையும் குழந்தைகளையும் பிரிந்து சென்றுவிட்டார் - அதீதனின் நண்பன் சொன்னது.
பிருந்தா அவளது இரண்டாவது கணவரின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவளது ஒரே குழந்தையுடன் - அதுவும் இது.
மாலதியைப் பற்றிய தகவல்கள் இல்லை - அதுவுமிது.
வந்தனாவுக்கு அதீதனுடனான தொடர்பு தெரிந்ததும் பிரதீப் அவளை விரட்டிவிட்டான். அவள் அதீதனையும் நிராகரித்து உடன் பணிபுரிந்த சந்தோஷுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்; நடுவில் சிலகாலம் அவள் மனது மறுபடியும் அதீதன்மேல் அலைபாய்ந்தாலும் அடக்கிக் கொண்டாள் - தனிப்பட்ட தகவலிது.
அதீதன் வீட்டிற்கு மொட்டைக் கடிதம் வந்தது, அதீதன் சந்தோஷுடன் பயந்து கொண்டே சண்டைக்குப் போனது, வந்தனா இடையில் கொஞ்ச காலம் சந்தோஷுக்குத் தெரியாமல் அவன் நண்பனான தவில் கலைஞன் பிரேமுடன் உறவு வைத்திருந்தது - இதுவமது, அதுவுமிது, வேறுவேறு.
பிரதீப் தனிமையில் வைசாக்கில் இருக்கிறான் இப்போது. அவனது பணமெல்லாம் தொலைந்து காரோட்டியாகப் பணிபுரிகிறான் - இது அதீதன் சொன்னது. கற்பனையாகச் சொல்கிறான் என நினைக்கிறேன். காரணமிருக்கிறது...
அலைபேசியில்லாத காலமது. ஒருமுறை அதீதன் தொலைபேசியில் வந்தனாவை அழைத்தபோது பிரதீப் எடுத்துவிட்டான். இது என் வீட்டு ஃபோன் கண்டவர்கள் ஃபோன் செய்யவேண்டாமென இரைந்தான். நேரில் பார்த்தால் அதீதனை உதைப்பதற்கும் தயாராய் இருப்பதாய் அறிவித்தான்.
பிரதீப் ஒரு முரடன் என்று மாலதி சொல்லியிருக்கிறாள். அவள் தங்கையை தெருவில் போகும் ஒருவன் கிண்டலடித்தபோது காரிலிருந்து இறங்கி அவன் சட்டையைப் பிடித்து அறைந்து தெருவெல்லாம் இழுத்துச் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்வரை அடித்தானாம்.
அதீதன் பதில் பேசாமல் அப்போதிருந்துவிட்டு இப்போது வாய்ப்பு கிடைத்ததும் பிரதீப்மேலான கோபத்தை இப்படிக் கதையில் புகுத்தித் தீர்த்துக் கொள்கிறானோ என்னவோ?
(இந்தக் கதையின் கடைசிப் பகுதி கட்டுரையாக வெளியாகும்)