சில கவிதைகள்

(1)

ஒன்றுமில்லாமல் இருக்கிறேன்
ஒன்றுமில்லாமல் இருக்கிறாய்
ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்
பகல் இரவு மாலை காலை
போகும் வரும்

(2)

எல்லாருக்கும் இருக்கும்
அதே சூழலும்
அதே மனிதர்களும்
அதே மனித உறவுகளும்
எனக்குக் கற்றுத் தருபவை
வேறாக உள்ளன
போலவே
என் எதிர்வினைகளும்

(3)

சொல்கிற அவனுக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறோமென்று
கேட்கிற எனக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறானென்று
ஆனாலும்
அவன் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான்
நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்

விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகார்) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் என்ச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : www.madrasdada.blogspot.com )

தேடுபொறிகளும் குறிச்சொற்களும்

தேடுபொறிக்குள் சிக்கிக் கிடக்கிறது
அறிவின் எல்லைகள்
சரியான குறிச்சொற்களைத்
தேடவும் வந்துவிட்டது மென்பொருள்

வேண்டியது கல்யாணமா
கட்டணக் கழிப்பறையா
அல்லது
எப்படிக் கழிக்கவேண்டுமென்பதா
தேடினாலே போதும்

வேறெதுவும் தேவையில்லை
தேடுபொறியே தெய்வம்

காமக் கதைகள் 45 (20 - 4)

இந்தக் கதையில் ஒரே கள்ள உறவாக இருக்கிறது; தொலைக்காட்சி தொடர்போல் இருக்கிறது; ஒழுங்கீனத்தின் எல்லையைத் தொடுகிறது எனப் பல விமர்சனங்கள். இதற்கு விளக்கமாக பதில் சொல்வதைவிட ஒரு பத்திரிகைச் செய்தியைத் தருகிறேன் :

20.8.2008 தேதியிட்ட குமுதம் பத்திரிகையில் வந்த செய்தியின் சாரம் :

பெரும்பாலான கொலைகளுக்குப் பின்னணி செக்ஸ் பிரச்சனைகள்தான் (இங்கே செக்ஸும் வயலன்ஸும் இணையும் புள்ளியைப் பற்றி எழுதும் ஆர்வத்தை அடக்கிக் கொள்கிறேன்).

சேலம் அருகில் நடந்தது : கவுரி என்ற ஒரு அம்மா கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். பேரன் பேத்தி எடுத்த வயதில் ஏகப்பட்ட இளவயசுப் பையன்களுடன் சகவாசம் வைத்திருந்ததால் அவரது கணவன் புஷ்பாங்கதன் குடும்ப கௌரவம் காக்க கொன்றிருக்கிறார்.

வேளச்சேரியில் நடந்தது : ‘ஒருமுறை நீங்கள் கொடுத்த முத்தத்தை என்னால் மறக்க முடியவில்லை' என பக்கத்துவீட்டு இளைஞனுக்கு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மனைவியொருத்தி கடிதம் எழுதியிருக்கிறாள். இதை அறிந்த கணவன் அவளுடன் சண்டை போட்டிருக்கிறான். அந்த இளைஞன் சமாதானப்படுத்த வந்திருக்கிறான். ஆத்திரத்தில் கணவன் அவனைக் கொன்றுவிட்டான்.

நீலகிரி மாவட்டத்தில் நடந்தது : காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவிக்கிடையில் ஆறு வருடம் கழித்து பிரச்சனை. மனைவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபனுடன் கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது. கணவன் கண்டிக்க, அவள் காதலனுடன் வாழச் சென்றுவிட்டாள். பிறகு அவனுடனும் ஒத்துவராமல் மறுபடியும் கணவனிடம் மன்னிப்பு கேட்டு வாழ வந்திருக்கிறாள். கொஞ்ச காலத்தில் மறுபடியும் தவறான சூழிநிலையில் மனைவியைப் பார்த்திருக்கிறான் கணவன். இதை ஒருநாள் கணவன் சொல்லிக்காட்ட ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் அவன் தலையில் அடித்துக் கொன்றிருக்கிறாள் மனைவி.

இதற்குத் தீர்வை தமிழ்நாடு மனநலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. ராமசுப்ரமணியத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர் கூட்டுக் குடும்பம் சிதைவைதை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லியிருக்கிறார். வயதானவர்கள் காவல் தெய்வங்கள்; அவர்கள் இல்லத்தில் இருந்தால் இதுபோன்ற தீய எண்ணங்களும் தீய செயல்களும் நடக்காது என்பது அவரது கருத்து.

ஆஹா, எப்படியெல்லாம் பிரச்சனைகளை எளிமையாக்குகிறார்கள் என வியந்தான் அதீதன்.

'தொலைக்காட்சி சீரியல் மாதிரி இருப்பதாகச் சொல்வார்கள், அதனால் எழுதவேண்டாமென்று சொன்னேன்; மீறி நீ இக்கதையை எழுதிவிட்டாய். இனி நான் உனக்குக் கதை சொல்ல மாட்டேன்' எனத் தீர்மானமாய்ச் சொன்னான் அதீதன்.

அவன் சொன்ன காரணம் பற்றிய சந்தேகங்கள் எனக்கிருக்கிறது. ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஒருவேளை அவன் மனம்மாறி மீதிக் கதைகளைச் சொன்னால், எழுதுகிறேன்.