நந்தலாலாவும் கிகுஜிரோவும்

சினிமா பற்றி எதுவுமே எழுதியதில்லை இதுவரை.  சினிமாக்களை எப்போதாவது பார்ப்பதுடன் சரி. உலக சினிமாக்களில் அதிகப் பரிச்சயம் இல்லாதவன். சினிமா என்ற கலையின்மேல் பெரிய ஈடுபாடோ ஆர்வமோ இல்லாதவன்.

நந்தலாலாவை போன ஞாயிறன்று மாலைக் காட்சியில் பார்த்ததும், ஆடிப் போனேன்.  ஆடிப் போனேனுக்கு மேல் ஏதும் சொல்லத் தோன்றாததால் இப்படி எழுதுகிறேன்.  இந்தப் படத்தைப் பற்றிச் சில வரிகளை டுவிட்டரிலும் பஸ்ஸிலும் பகிர்ந்து கொண்டேன்.

கிகுஜிரோவின் கதையை ஒட்டி எடுக்கப் பட்ட படம் நந்தலாலா என முதலிலேயே கேள்விப்பட்டிருந்தேன்.  இவ்வளவு தூரம் நம்மைக் கவர்ந்த படம் ஒரு தழுவலாக இருந்துவிடக் கூடாதே என்று மனம் ஆசைப்பட்டது.  கிகுஜிரோவின் குறுந்தகடை நண்பரிடமிருந்து பெற்று, இந்த வாரத்தில் இரண்டு முறை பார்த்தேன்.  மறுபடியும் நந்தலாலாவை நேற்று மதியம் திரையரங்கில் பார்த்தேன்.

கிகுஜிரோவின் தழுவல் இல்லை நந்தலாலா என்று தெளிவாக உணர்கிறேன்.  ஆனால், கிகுஜிரோவின் பாதிப்பில் உருவான படமே நந்தலாலா என்பதும் தெரிகிறது.

கிகுஜிரோவில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிச் செல்கிறான்.  உதவிக்கு வருபவன் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்பவன்.  சிறுவனின் தாய், வேறொருவருடன் செட்டிலாகிவிட்டது தெரிகிறது. பையனைச் சமாதானப்படுத்த,  அவனது அம்மா வேறு இடத்திற்கு மாறிச் சென்றிருக்கலாம் என்கிறான் உடன் வந்தவன்.  சிறுவனைக் குஷிப்படுத்த சில விளையாட்டுகள் காட்டுகிறார்கள். விளையாடுகிறார்கள். பயணிக்கிறார்கள்.  ஊருக்குத் திரும்ப வந்ததும், மறுபடி இன்னொருமுறை இதே போன்று செய்யலாமென உடன் வந்தவன் சொல்ல, சிறுவன் மகிழ்ச்சியாகச் செல்வதுடன் படம் முடிகிறது.

நந்தலாலாவின் அடிப்படைக் கதையே வேறு மாதிரியானது.  இங்கே சிறுவன் மட்டும் தாயைத் தேடிச் செல்வதில்லை.  மனநலம் குன்றிய பாஸ்கர் மணியும் அதையேதான் செய்கிறான். சிறுவன், தாயின் மேல் கொண்ட பாசத்தால். பாஸ்கர் மணி, கோபத்தால். சிறுவனின் தாயார், வேறு ஒருவருடன் இருப்பது தெரிந்ததும், இவனைக் கூட்டிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கு வருகிறான். தன்னுடைய தாயின் பைத்திய நிலையைப் பார்த்ததும், இவனது பைத்தியம் சொஸ்தமாகிறது.  சிறுவனுக்கு வேறொரு தாய் கிடைத்து, பாஸ்கர் மணிக்கு பைத்தியம் குணமாவதுடன் படம் முடிகிறது.

சில காட்சிகள் கிகுஜிரோவில் இருப்பதைப் போலவே வந்தாலும் வேறு மாதிரியான அழுத்தங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜப்பான் படத்தில் லாரிக்காரன் அடிப்பது எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. தமிழில் அருகாமைக் காட்சியில் அடி விழுந்து பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. ஒருவிதத்தில் நந்தலாலா கொஞ்சம் மெலோடிராமாவும்கூடத்தான்.

பயணம் என்றால், கார், பஸ், வேன் என்றுதான் இருக்க முடியும். அதனால் அதையெல்லாம் காப்பி என்றால் என்ன சொல்ல முடியும்? ஒருவர், அந்தப் படத்திலும் இயக்குனரே நடித்திருக்கிறார். அதையுமா மிஷ்கினும் காப்பியடிக்க வேண்டுமென்றிருந்தார்! (இணையத்தில்தான் படித்தேன், யார் சொல்லியிருந்தது என்று நினைவில்லை).  விட்டால் அதையும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள், இதிலும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வார்கள் போலும்.

படத்தின் சிறப்புகளைப் பற்றிப் பலர் விரிவாக எழுதிவிட்டார்கள்.  நானும் திரும்பவும் அதையே சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அதற்குள் போக விருப்பமில்லை.

என்னளவில் இதுவரை இப்படியான ஒரு படத்தை நான் பார்த்ததேயில்லை. இரண்டாவது முறை பார்த்தபோதும் அதே மனநிறைவைத் தந்தது நந்தலாலா.  நண்பர்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்க நிச்சயம் சிபாரிசு செய்வேன்; செய்கிறேன்.

ஒரு உறுதியான தாயோளியின் வரலாறு

ஓரிரவு அவன் கதவருகே வந்தான்
நனைந்து, ஒல்லியாய், அடிவாங்கியவனாய்,
மிரட்சியுடன்
வாலில்லாத ஒண்ணரைக் கண் வெள்ளைநிறப் பூனை
அவனை அள்ளினேன்
சோறிட்டேன்
அவன் தங்கினான்
என் மீது நம்பிக்கை வளர்ந்தது
நண்பனொருவன் வண்டியை இவன் மேல் ஏற்றும் வரைக்கும்
மீதமிருந்ததை அள்ளி எடுத்து கால்நடை மருத்துவரிடம் சென்றேன்.
அவர் சொன்னது :
”பிழைக்க அதிக  வாய்ப்பில்லை
இந்த மாத்திரைகளை கொடுங்கள்
இவன் முதுகெலும்பு நொறுங்கியிருக்கிறது
ஆனால், இதற்கு முன்பே நொறுங்கி எப்படியோ இணைந்திருக்கிறது
பிழைத்தாலும்  நடக்க முடியாது
இந்த எக்ஸ்ரேவை பாருங்கள்
இவன் சுடப்பட்டிருக்கிறான்
இங்கே பாருங்கள்,
தோட்டாக்கள் இன்னும் இருக்கின்றன
அத்துடன் ஒருகாலத்தில் இவனுக்கு வாலும் இருந்திருக்கிறது
யாரோ அதை நறுக்கியிருக்கிறார்கள்''

(நேற்றிரவு சார்லஸ் ப்யுகோவ்ஸ்கியின் The History of One Tough Motherfucker வெளியிட்டபோது மொழிபெயர்ப்பு போட வேண்டாமென நினைத்தேன்.  இப்போது வேறு மாதிரி தோன்றுவதால், மொழிபெயர்ப்பை வெளியிடுகிறேன்)

கொஞ்சும் தீபாவளி

ராக்கெட்டைக் கையில் பிடித்துக் கொளுத்து
திரி பற்றியவுடன்
வீசியெறி
வானத்தில் புகைபரப்பி
விர்ரெனச் சென்றால் மகிழ்ச்சி
இன்னொன்றை
கொளுத்தி பக்கவாட்டில் விசிறி அடி
வாகனங்களின் புகையைக் கிழித்து
தூரத்தில் இருப்பவனின் சூத்து
காலியாகுமென கெக்கலி
அடுத்த ராக்கெட்
பாலத்தின் மேல் வருபவனை
அலறி வண்டியை ஒதுக்கி ஓட்ட வைக்கட்டும்
(நடுவில் காரின் மேல் எய்த அம்பு
குறி தவறி பக்கவாட்டுச் சுவரில்
மோதி விழுவதை விட்டுவிடு)
நமக்கிது தீபாவளி
நம் உலகம்
நம் தீபாவளி
நம் கொண்டாட்டம்
நானும் ஒன்று கொளுத்திக் கொள்கிறேன்
என் வழுக்கைத் தலைமேல் விழாதிருக்கட்டும்
இந்த எழவெடுத்த ராக்கெட்.

ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

(நகுலனின் கதைகளில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று இது.  கணையாழியில் 1992ல் வெளியானது, பிறகு காவ்யா பதிப்பகம் நகுலன் சிறுகதைகள் என்ற தலைப்பில் தொகுத்தது.  காவ்யா பதிப்பகத்திற்கு நன்றியுடன் இதை இங்கே பகிர்கிறேன்).

என் அறையில் இருந்தேன்.  அந்த எட்டு வயதுக் குழந்தை வந்தது.  அதன் தாய்மொழி மலையாளம்.  அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது.  கறுப்பிலும் கறுப்பு.  அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைப்பார்கள்.

கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ?” சிறிது நேரம் சென்றபின், “மாமாவிடமிருந்து ஒரு புத்தகம் கொடுத்தால் போதும்.  விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றது.

நான் நேரம் சிறிது சென்றபின் மலையாளத்தில் ’புது முத்திரைகள்’ என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம். அது மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று.  அடுத்து, அதற்கு ’குஞ்சுண்ணி’ யின் ‘கிங்கிணிக் கவிதைகள்’ என்ற தொகுதியை (அதில் சித்திரங்கள் இருந்தன)யும் வாங்கிக் கொடுத்தேன்.  குழந்தை ஒரு கிராமத்தில் L.P. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது என்பதை மீண்டும் கூறவேண்டும்.

மறுநாள் குழந்தை என் அறைக்கு வந்தவுடன் ”புது முத்திரைகள் எப்படி?” என்று கேட்டேன்.  “படித்தேன்” என்றது.  இதைச் சொல்லிவிட்டு, மாதவன் அய்யப்பத்து எழுதிய ‘பணி அறைக்குள்’ என்ற கவிதையிலிருந்து சில வரிகளை ஒரு உள்நாட்டத்துடன் இசை பூர்வமாகப் பாடிக் காண்பித்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.  நான் அதனிடம் ”கிங்கிணிக் கவிதைகளோ?” என்று கேட்டேன்.  அது அதிலிருந்து ‘ஸைக்கிள்’ என்ற கவிதையின் ஒரு வரியை ‘வட்டத்தில் சவிட்டியால் நீளத்தில் ஓடும்’ வரியை மிகவும் சுய ஈடுபாட்டுடன் பாடிக் காண்பித்ததும் எனக்கு மீண்டும் ஒரு சில கவிதைகளைப் படித்துக் காட்டியது.  அது எனக்கு ஓர் அனுபவமாகவெ இருந்தது. குழந்தை பாடப் பாட, நான் என் சூழ்நிலையிலிருந்து விலகி அதைக் கேட்ட வண்ணம் இருந்தேன்.  குழந்தை பாட, நான் கேட்க, அவ்வரிகள் என் பிரக்ஞையில் வட்டமிட்டன.

    1. ஜன்ம காரணி
    பாரதம்
    ஆஹா ஆஹா ஆஹா
    கர்ம மேதினி பாரதம்
    நம்மளாம் ஜனகோடிதன்
    அம்மையாகிய பாரதம்
    ஆஹா ஆஹா ஆஹா

    2. பல பல நாளுகள்
    ஞானொரு புழுவாய்
    பவிழக் கூட்டில் உறங்கி
    இருளும் வெட்டமும் அறியாதே அங்ஙனே
    நாள்கள் நீங்கி
    அரளிச் செடியுடே
    இலைதன் அடியில்
    அருமக் கிங்கிணி போலே
    வீசுங் காற்றத்தில் இளகி விழாதே
    அங்கனே நின்னு

    ஒருநாள் சூரியன்
    உதிச்சு வரும்போள்
    விடரும் சிறகுகள்வீசி
    புறத்து வந்து அழகு துடிக்கும்
    பூம்பாற்றை (வண்ணத்துப் பூச்சி)
    தளிராய் விடர்த்து வீசும்
    பனிநீர்ப்பூவில்
    படர்ந்து பற்றியிருந்தது.
    பூவில் துள்ளும் பூவதுபோலே
    பூத்தேன் உண்டு களிச்சு.

அதன் குரல் நின்றதும் நான் மீண்டும் என் அறையில் புகுந்தேன். நினைவில் ஒரு கனவு வந்தது; வந்ததுபோல் அது மறைந்தது. இடையில் குழந்தை தன் பாட்டு வாத்தியார் பாடல்களை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார் என்றும் சொன்னது.

எனக்கு நவீன மலையாளக் கவிதைகளில் குஞ்சுண்ணியிடம் ஒரு தனிப்பட்ட பிடிப்பு உண்டு.  அவர் கவிதைகளைக் குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்க முடியும். அவர் கவிதைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தளங்கள் உண்டு.  வரிவடிவம் ஒலிவடிவமாக கவிதையின் ஒலிச்சரடு விதவிதமான தளங்களிலே சுழித்துச் செல்வதைக் காண்கையில், அவைகளைக் கம்பன் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘செவிநுகர் கனிகள்’ என்றே சொல்ல வேண்டும்.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்கு வந்தது.  ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியன் என்ற நிலையில் எனக்குச் சற்றுச் சுயமாக சிந்திக்கும் மாணவ - மாணவிகளிடம் ஒரு சாய்வு உண்டு. நான் அதனிடம் கேட்டேன்: “ஏன், உனக்குக் குஞ்சுண்ணிக் கவிதைகள் இஷ்டம்தானே? நீயும் அவர் மாதிரி சிலகவிதைகள் எழுதலாமே?” என்றேன்.  ”அதற்கென்ன எழுதலாமே” என்று சொல்லி என் அறையிலிருந்து மறைந்தது.  ஒரு இசைவெட்டு.

ஒருநாள் வீட்டில் வழக்கமாகக் காய்கறிகள் வாங்குகிறவள் இந்தக் குழந்தையைப் பார்த்து “ஏ கறுப்பி” என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரு விதமான சஞ்சலம் ஏற்பட்டாலும் குழந்தையின் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை.  சில சமயங்களில் அதன் முகத்தில் ஒருவித நிழல் படர்வதை நான் பார்த்திருக்கிறேன்.  ஒரு நாள் அதன் ’அம்மூம்மா’ (ஆச்சி) இந்தக் குழந்தைக்கு ஒரு ஜதை காதில் அணியும் சாதரண கறுப்புக் கம்மல்களைக் கொடுத்தவுடன் அடுத்த வீட்டிலுள்ள ஓர் இளம் பெண் “ஒ இதுவும் கறுப்பு” என்று சொல்லிச் சிரித்தது.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்குள் வந்ததும் அது என்னிடம் சொன்னது: “மாமன், மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள்”

குழந்தை சுய லயிப்புடன் அக்கவிதைகளைப் படிக்க, நான் என்னை மறந்து அவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

    சிமி
    குமி
    உமிக்கரி

    நஞ்சு
    குஞ்சு
    மத்தைங்காய்

    மணிக்குட்டன்
    குணிக்குட்டன்
    கொடுவாளை

குறிப்பு : சிமி குழந்தையின் பெயர். நஞ்சு குழந்தையின் தங்கையின் பெயர். கொடுவாளை - ஒருவகை மீன். மணிக்குட்டன் - குழந்தையின் தம்பியின் பெயர்.

மறுபடியும் என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தையில்லை; கவிதையில்லை; நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.

அறை மாத்திரம் இருந்தது.