1975லிருந்து எழுதி வருபவர் திலீப் குமார். பரவலாக அதிகம் அறியப் படாதவர். மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும் தமிழ்ச் சிறுகதையுலகில் ஒரு முக்கிய இடம் அவருக்குண்டு. இவரின் தாய் மொழி குஜாராத்தி என்றாலும் எழுதுவது தமிழில். சென்னை மயிலாப்பூரில் புத்தகக் கடை நடத்திக் கொண்டிருந்தார் (இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை). அவர் எழுத்துக்களை அறிமுகப் படுத்துவதே இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம்.
திலீப் குமாரின் புத்தகங்கள் :
1. மூங்கில் குருத்து
2. கடவு (மேலே உள்ள தொகுப்பிலிருந்து சில கதைகளும் + சில கதைகளும் கொண்டது)
3. மௌனியுடன் கொஞ்ச தூரம் (வானதி பதிப்பகம்)
4. 'வாக்' சிறுகதைகள் (1997 கதா அறக்கட்டளை)
முதலிரண்டும் க்ரியா வெளியீடு.
தினமணியில் எழுதியிருந்தாலும் பெரும்பாலும் மீட்சி, காலச்சுவடு, 1/4 போன்ற சிறுபத்திரிகைகளே அவரின் வெளியீட்டுக் களனாயிருந்துள்ளது.
குறைவாகவே எழுதியிருந்தாலும் விதம் விதமான கதைகளை எழுதிப் பார்த்தவர் திலீப்குமார்.
'அக்ரகாரத்தில் பூனை' கதை சுவாரஸ்ய நடை கொண்டது. பப்லிப் பாட்டி கோயில் பூஜை என இருப்பவள். புஷ்டி மார்க்கத்தின் authority. பூஜைக்கு வைத்திருக்கும் பாலைக் குடிப்பது போன்ற தொல்லைகளைச் செய்யும் பூனையை விரட்டச் சொல்லி தன் மகன் நட்டூவை ஆணையிடுவாள். அவன் சூரியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பான் ('போயும் போயும் அந்தத் துஷ்டப் பயலிடமா, அவன் பூனையைக் கொன்றாலும் கொன்று விடுவான்' என்பாள் பாட்டி). பத்து நாட்களில் அவன் பூனையுடன் வருவான்; அது அவனிடம் குழையும். கொண்டு போய் விடுவதற்கு முன் அவளிடம் காட்ட எடுத்து வந்திருப்பான். பாட்டி அவனிடம் பூனையை தன்னிடம் எடுப்பாகக் காட்டச் சொல்வாள். தன் கையில் மறைத்து வைத்திருந்த மூக்குப் பொடியை அதன் மூக்கில் திடீரென்று தேய்த்து விடுவாள். பொறி கலங்க அலறி அடித்துக் கொண்டு ஓடும் பூனை. எல்லோரையும் வைது விட்டு பூனையைத் தேடிப் போவான் சூரி. அன்று மாலை பாட்டியைப் பார்க்க வந்தவர்களிடம் பாட்டி ஆரம்பிப்பாள்: 'புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்...'
இப்படி எளிதாக கதைச் சுருக்கம் சொல்ல முடிகிற 'அக்கிரகாரத்தில் பூனை', 'கடவு', கதையம்சமே அற்ற 'நிகழ மறுத்த அற்புதம்', எதார்த்த பாணியிலான 'கண்ணாடி', 'கடிதம்', குடும்பத்திற்கு வெளியேயான உடலுறவைச் சொல்லும் 'கானல்' வன்முறையின் வீச்சைச் சொல்லும் 'தடம்'.
'ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக் காரரும்' கதையில் வரும் பாத்திரம் ஜி.நாகராஜனை நினைவு படுத்துவதாலேயே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது.
இவர் கதையில் பெரும்பாலும் கதைமாந்தர்கள் குஜராத்திகள்; நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். கதைக் களன் சென்னையில் உள்ள அதிகமும் குஜராத்திகள் வாழும் தங்கசாலை (மிண்ட்). ஆயினும் ஒவ்வொரு கதையும் வேவ்வேறு தொனியில் இருக்கும்.
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். அவரைப் படித்தவர்கள் பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.