அணு சக்தி தொடர்பாக சி ஜெயபாரதன், கனடா

ஜெயபாரதன் என்ற பெயரை நான் திண்ணையின் மூலமாகவே அறிந்தேன். அவர் ஒரு அணு விஞ்ஞானி (nuclear scientist) என்பதாய் எனக்கு ஒரு நம்பிக்கை. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் நான் எழுதியிருந்த ஞாநிக்கு ஒரு ஓ போடுவோம் (http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_13.html) என்ற பத்திக்கு இரண்டு நாட்கள் முன்பு அவர் பின்னூட்டமிட்டார். தொடர்ந்து, நேற்று / இன்றும்கூட. அவரது பார்வைகள் முக்கியமானவை எனத் தோன்றுவதாலும், எனது பத்தி மிகப் பழையது அதனால் வாசிப்பவர்களின் கவனிப்பிற்கு ஜெயபாரதனது பின்னூட்டங்கள் வராமல் போகலாமென்பதாலும், இதைத் தனிப் பதிவாக இடுகிறேன்.

1.http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

(கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள்)

2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40305042&format=html

(ஞாநியின் 'கான்சர் கல்பாக்கம் ' கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்)

3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309252&format=html

(மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்)

4. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310161&format=html

(கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்)

5. http://www.thinnai.com/?module=displaystory&story_id=203041912&format=html

(கேன்சர் கல்பாக்கம்: முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்)

---

இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

+++++++++++++

திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துகளுக்குப் பிறகு உலகிலே பழைய அணுமின் நிலையங்கள் எல்லாம் சீர்மை செய்யப்பட்டுள்ளன. இந்தியா முதல் அநேக நாடுகளில் புதிய அணுமின் நிலையங்கள் தோன்றி பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.

அணுப்பிணைவு நிலையங்கள் வர்த்தக ரீதியாக வருவது வரை அணுப்பிளவு நிலையங்கள்தான் உலகில் பேரளவு மின்சக்தி அளிக்கும். ஜப்பான், பிரான்ஸ் அதற்கு உதாரணங்கள்.

இப்போது அமெரிக்காவும், கனடாவும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போகின்றன.

அணுமின் நிலையங்களை விட அனுதினம் பறக்கும் ஆகாய விமானங்கள் பயங்கர மானவை. பல்லாயிரம் உயிர்களைக் குடித்துள்ளன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும். அதுவும் இப்போது பெண்கள் அவற்றை இயக்கி வருகிறார். ஆகாய விமானத்தில் விபத்துக்கள் இருப்பினும் மக்கள் பயமின்றி அவற்றில் தினமும் பயணம் செய்கிறார்.

அணுமின் நிலையங்களில் நிகழும் யந்திரப் பழுதுகளை மனிதத் தவறுகளைக் குறைப்பதற்கும், அவற்றைக் கண்காணிக்கவும் அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (IAEA) வியன்னாவில் சிறந்த பணி செய்கிறது.

பொதுடமை ரஷ்ய விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் IAEA வற்புறுத்திய அணு உலை அரண் போன்ற பாதுகாப்பு முறைகளைச் செர்நோபில் உலையில் கையாள வில்லை.

கூடங்குளத்து ரஷ்ய அணு உலைகளில் இப்போது IAEA வற்புறுத்திய அத்தனை பாதுகாப்பு முறைகளும் உள்ளன.

அவற்றை IAEA கண்காணிப்பது போல் மற்ற இரசாயனத் தொழிற் துறைகள் கண்காணிக்கப் படுவதில்லை.

போபால் விபத்து ஓர் உதாரணம்.

---


ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்பத் தீவுகளில் தற்போது 55 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 43,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங்களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.

ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.

இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.

மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.

வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.

செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை. பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.

செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !


சி. ஜெயபாரதன், கனடா.
http://jayabarathan.wordpress.com/
jayabarathans@gmail.com

பூனை பறக்கும் ஓவியம்

சிறு கல்லைக் காலால் எத்தி எத்தி
விளையாடுகிறான் சிறுவனொருவன்

ஒன்றுமில்லாததைப் பற்றி
எவ்வளவு தான் பேசுவது ?!

அழித்தொழிப்பு வேலை நடக்கிறது
காந்தியின் ராஜ்ஜியத்தில்
செயலற்றுப் போன அரசாங்கங்கள்
நம்பிக்கை வைக்க பின்பற்ற தொழ
தலைவனில்லாது போன சோகம்

எதிர் இருக்கையில் அமர்ந்து எக்கனாமிக் டைம்ஸ்
படித்துக் கொண்டிருக்கிறார்
கனவானாய்க் காட்டிக் கொள்ளும் ஒருவர்
காலொடிந்த சிறுமி அழுக்கு ஆடையுடன்
பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாள்
பக்க விரிசல்களில் சிக்கிக் கொண்டிருந்த
விளம்பரத் துண்டுகள் கீழே சிதறுகின்றன
அக்காகிதங்களைப் படித்துப் பூப்படைகிறாள்
(வேறொரு) சிறுமி

எல்லோர்க்குமான ரயில் வந்து கொண்டேயிருக்கிறது

பயம்

குமார் (எ) கலெக்டர் குமார்
இன்று காலை 4.00 மணியளிவில் இயற்கை எய்தினார்
அறிவிக்கிறது ஃபிளெக்ஸ் பேனர் தெருமுனையில்
டிரைவர் குமார் என்ற பெயரும் உண்டு
என்பது ஞாபகம் வந்தது
மதுச்சாலையில் வைத்து
15 வருடப் பழக்கம் இருவருக்கும்
இவனைப் போலவே தொடர்ச்சியாய்ப் புகை பிடிப்பவரும்கூட
சமீபத்தில் சந்தித்துக் கொள்ள வாய்க்கவில்லை இருவருக்கும்
விசாரித்தபோது
மாரடைப்பாம்
உறங்கும்போது நடந்த மரணமாம்
இளமையாகத் தோன்றினாலும்
குமாருக்கு இவனைவிட 10 வயது கூடுதல்
என்ற விவரம் தெரிந்தபோது ஆசுவாசமாயிருக்கிறது

கவிதை புரியும் கணம் - எம்.யுவன்

சமீபத்தில் 'உயிர்மை' பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் எம்.யுவனின் 'தோற்றப் பிழை' கவிதைத் தொகுப்புக்கு ஒரு முன்னுரையை அவரே எழுதியிருக்கிறார். உரையாடலுக்கு வழிவகுக்கும் அந்த முன்னுரை, எம்.யுவனின் அனுமதியுடன் இங்கே...

--------

சிறு வயதில், பிரம்மாண்டமான மீன் பண்ணை ஒன்றுக்குச் சென்றிருந்தது ஞாபகம் இருக்கிறது. அரைக் கிணறு போன்ற ஆழமான காங்க்ரீட் தொட்டிகள். அவற்றுக்கிடையே அமைந்த சிமென்ட் நடைபாதையில் யாரோ ஒருத்தரின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துபோனேன். எந்த ஊர், யாருடைய கை என்பதெல்லாம் நினைவில் தங்காத அளவு சிறுவயதாக இருக்கவேண்டும். ஆனால், ஒவ்வொரு தொட்டியிலும் வேறுவேறு வகையான மீன்கள் துடிப்பாகப் போய்வந்துகொண்டிருந்த காட்சி அழுத்தமாக நினைவில் பதிந்திருக்கிறது.

மீன்தொட்டியை மனம் என்று உருவகித்துக்கொள்கிறேன். சொற்கள் குட்டியிட்டுச் சொற்கள் உருவாகி நசநசவென்று சொற்கள் புழங்கும் மாயத்தொட்டி. சொற்கள் தம் இயல்பான சலனத்தில் இணைந்தும் விலகியும் அடர்ந்து திரியும் தொட்டியில், எல்லா நேரத்திலும் எல்லாச் சொற்களிலும் கவனம் குவிந்திருப்பதில்லை. கூட்டத்திலிருந்து விலகி வந்து கவனம் பெறும் மீன்கள் கொத்தாகத் திரளும் ஒரு சந்தர்ப்பம் கவிதையின் வரிகளாக உருக்கொள்கிறது.

எழுதும் மனத்தில் கவிதை வரி உருவாகும் இதே விதமாகத்தான் வாசக மனத்தில் கவிதை புரிவதும் நிகழ்கிறது என்று சொல்லலாம்.

வீடு மாற்றுவதற்காகப் புத்தக அலமாரியைக் காலிசெய்து அட்டைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தேன். மிகப் பழைய சிறுபத்திரிகைத் தொகுப்பு ஒன்றைக் கையில் எடுத்தபோது, அதைப் பிரித்து மேலோட்டமாக மேயத் தோன்றியது. தன்னிச்சையாகப் பார்வையில் பட்டது அந்தக் கவிதை. பல காலம் முன்பு வாசித்து, புரியாமல் போனதால், மனத்தில் உறுத்தலாகத் தங்கியிருந்த கவிதை.

அன்று படித்தபோது, சடாரென்று திறந்துகொண்டது. உண்மையில், அதுதான் அந்தக் கவிதை உணர்த்த முனைந்த அனுபவமா என்று தெரியாது. அவ்வளவு நாள் மூடிக் கிடந்த ஒரு சொல்லோட்டத்தை, அந்தத் தருணத்தில் என்வயமாகத் திறக்கக் கிடைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். மூடியிருந்த வரை மகோன்னதமான எதையோ தனக்குள் பொதிந்து மறைத்திருப்பதாகத் தோன்றிய வரிகள் உடனடியாக வெளிறிவிட்டன என்பது வேறொரு விஷயம்.

கவிதை எழுதப்பட்டும் சந்தர்ப்பத்திற்குச் சமமான மாயத்தன்மையும், பரவசமும் வாசிக்கும் தருணத்தையும் சூழ்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்ட சந்தர்ப்பம் அது. எனவே, கவிஞன் குறித்துச் சொல்லப்படும் சிறப்புக் குணநலன்கள் அத்தனையும், மிகச் சமமான விதத்தில் வாசகனுக்கும் உரித்தானவைதாம். நுட்பமான வாசக மனம் அன்றி, வேறெங்கு பொருள்கொள்ளும் கவிதை?

---------

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்கிறோம். கவிதையைப் புரிந்துகொள்வது என்றால் என்ன?

அ. கவிஞனின் உத்தேசம் என்பனவாகத் தென்படும் எல்லைகளை அறிந்துகொள்வதா?

ஆ. கவிதையின் வரிகளுக்கு அப்பால், தன்னுடைய திராணியும் சுதந்திர இச்சையும் சார்ந்து வாசகன் மேற்கொள்ளும் பயணத்தின் துவக்கமா?

உண்மையில், தர்க்கபூர்வமாகத் தான் புரிவதற்குச் சற்று முன்னமேயே கவிதை புரிந்துவிடுகிறது. சொல்லற்ற ஒரு தளத்தில் கவிதையின் வெளிச்சம் பாய்கிறது. மொழியமைப்பில் உள்ள வசீகரம் காரணமாக, முதல் வரியிலிருந்தே மேலெழும் வாஞ்சை காரணமாக, சொற்றொடர்களின் பிரயோகத்தில் உள்ள நூதனம் காரணமாக, கருத்துப் புலத்தில் உள்ள வலுவின் காரணமாக, இவையனைத்துக்கும் மேலே, அந்தக் கவிதை உணர்த்த முனையும் அனுபவத்தை ஏற்பதற்கான பதநிலையில் வாசக மனம் இருப்பதன் காரணமாக, என்று பல்வேறு காரணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு மொழிக்கொத்தாக மனத்தில் தொற்றுவதற்குச் சில நுண்கணங்கள் முன்பே கவிதை வாசக மனத்தில் தன்னை ஊன்றிக்கொள்கிறது, இன்னதென்று தெரியாத விதை போல. இனி அது வளர்ந்து பூமிக்கு வெளியில் தலைகாட்டும்போதுதான் தெரியும் எந்தவிதமான தாவரம் என்று.

எளிமையான வரிகளில் எழுதப்பட்ட கவிதையின் பட்சம் இருக்கும் புரியாத்தன்மை, சிடுக்கான வரிகளில் எழுதப்பட்ட கவிதையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் எழும் சிக்கல், அந்தக் கவிதையின் அர்த்தப் புலம் பற்றியது அல்ல. அது எதனால் கவிதையாக இருக்கிறது, கவிதை என்ற கோரிக்கையோடு, கவிதையின் அறியவந்த உருவத்தில் எதற்காக முன்நிறுத்தப்படுகிறது என்ற குழப்பம்தான்.

கவிதை புரிந்துவிடும் தருணத்தில் நடப்பது என்ன?

அந்தத் தருணம்வரை வாசகத் தனிமனம் தன்போக்கில் சேகரித்து வந்திருக்கும் அர்த்தத் தொகுப்பின்மீது கனமான அதிர்வலைகள் மோதி சமநிலையைக் குலைக்கின்றன.

உணர்ச்சிமயமான கவிதை வாசக மனத்தில் துயரத்தையும் ஒருவித கையறுநிலையையும் உருவாக்குகிறது. மறுபுறம், அறிவார்த்தக் கவிதைகள் பரவசத்தையோ சிந்தனாபோதத்தையோ கிளர்த்துகின்றன.

தன்னுடைய ஆழ்மனத்தில் கவிதைக்கான வேட்கை இல்லாத தனிமனங்களுக்கு நவீன கவிதை சுலபத்தில் திறப்பதில்லை. காரணம், கவிதையின் நிறைவு காட்சியில் இல்லை. வார்த்தைகளில் இல்லை. அழகுணர்ச்சியில் இல்லை. என்றோ எங்கோ எழுதப்பட்ட வரிகளைத் தன் மனத்தின் தரையில் புனர்நிர்மாணம் செய்துகொள்ளும் வாசகனின் அந்தரத்தில் மாத்திரமே முழுமை பெறக் காத்திருக்கும் அரைச் சந்திர வடிவம் அது.

புழங்கிய பாட்டையில் மலரும் கவிதை, பரிச்சயமான, பலமுறை அவிழ்க்கப்பட்டு ஏற்கனவே விடை தெரியவந்த புதிரையே முன்நிறுத்துகிறது. மாறாக, புதிய கவிதை, புதிய சவாலை விடுப்பது. தீர்க்கமான கவிதைச் செயல்பாட்டை வாசக மனத்தில் துவக்கிவைக்க கவிதையின் வெளிப்பாட்டில் கொஞ்சம் ரகசியமும் புதிர்த்தன்மையும் அவசியமாகின்றன.

---------

கவிதை என்ற சொல்லுக்கும் அனுபவம் என்ற சொல்லுக்கும் உள்ள உறவு சாமானியமானதல்ல. பிற புனைவு வடிவங்கள் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அதில் அனுபவத்தின் சாரத்தை இறக்க முயல்கின்றன என்றால், அனுபவத்தையே நேரடியாக முன்நிறுத்த முயல்கிறது கவிதை. ஆனால், இதில் பிரதானமான இரண்டு தரப்புகள் உள்ளன.

முதல் தரப்பு, அனுபவத்தைப் பதிவு செய்வதே கவிதை என்று வாதாடுகிறது. அதாவது, கவிஞனின் அகப்பரப்பில் ஏற்கனவே நிகழ்ந்து முடிந்துவிட்ட அனுபவத்தின் பதிவுதான் கவிதை என்கிற தரப்பு. இதிலும் சொல்முறையின் காரணமாக இரண்டாகப் பிளவுபடும் இரட்டைத் தடம் உண்டு. அனுபவத்தை நேர்த்தியாகவும் அலங்காரமாகவும் மிகைத் தழுதழுப்புடனும் சொல்வது என்பது ஒரு மார்க்கம். அனுபவத்தை நேரடியாகச் சொல்வது, சொல்லும்போதே அவ்வனுபவத்தின் தோற்றுவாயையும் விளைவையும் சேர்த்தே ஆராய்வது என்பது மற்றது.

இரண்டாவது தரப்பு, அனுபவத்தைப் பதிவுசெய்வது அல்ல, அனுபவத்தை உருவாக்குவதுதான் கவிதை என்று வாதிக்கிறது. அதாவது, கவிஞனின் அகத்தளம் உட்பட, வேறெங்குமே இன்னமும் நிகழாத ஒன்றைக் கவிதையின் புலத்தில் நிகழ்த்த முயல்வது என்பது. இதில், மொழியின் பரிமாணங்களுக்குள் அடங்காத பேரனுபவத்திலிருந்து, வெறும் சர்க்கஸ் வித்தைகளான கோமாளித்தனங்கள்வரை ஏகப்பட்ட தினுசுகள் இருக்கின்றன.

இவை இரண்டுமே அறுதியானவை அல்ல. மூன்றாவது தரப்பு ஒன்றும் இருக்கிறது. கவிதையின் தோற்றுவாய்க்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் தரப்பு.

கவிதை என்ற பெயரில் வாசகன் கைக்கு கிடைப்பது அனுபவத்தின் ஒரு சாயை மட்டுமே. அது ஏற்கனவே கவிஞனின் அகப்பரப்பில் நிகழ்ந்து முடிந்துவிட்டதன் பதிவா, அல்லது இதுவரை எங்குமே நிகழாத முதல் நிகழ்வா என்பது அல்ல கேள்வி. என் கைக்குக் கிடைப்பது அனுபவத்தின் முழுமையா என்பதுதான்.

அனுபவம் பற்றிய சிறு குறிப்பு மாத்திரமே என்னிடம் வழங்கப்படுகிறது. அதன் நீள அகல ஆழங்களை வாசகனாகிய நான்தான் உருவாக்குகிறேன். உணர்ச்சி சார்ந்தும் அறிவார்த்தம் சார்ந்தும் என் கைவசம் உள்ள தாதுக்களைக் கொண்டு நான் வனைவதுதான் முழுமை பெற்ற கவிதானுபவமாகத் திரள்கிறது. அதாவது, கவிஞனின் வார்த்தைகளும் கவிதை உபகரணங்களும் ஒரு சாக்கு மாத்திரமே. அவற்றில் காலையூன்றி நான் சாடும் அந்தரத்தில் எனக்கான கவிதை அனுபவம் கட்டப்படுகிறது. விக்கிரமாதித்தன் கதையில் ஒரு ஓவியன் வருவான். தற்செயலாகக் கிடைத்த கட்டைவிரல் நகத்தை வைத்து அந்த நகத்துக்குரிய பெண்ணின் முழுவடிவத்தை, அவளுடைய தொடையில் இருந்த மச்சம் உள்பட, வரைந்து முடிப்பான். அவனுடையதே போன்ற தீவிரமான தியானநிலைக்குள் நான் இறங்குகிறேன்.

-----------

கவிதையின் உலகம் தனித்துவமானது. அணுவுக்குள் செயல்படும் நுண்ணிய சலனங்கள் போல, கவிதைக்குள்ளும் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நுண்ணோக்கியின் தீவிரத்துடன் சொற்கோவைகளைத் துளைத்து, காட்சியையோ, கருத்தையோ தேடிச் செல்லும் வாசக மனத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் இயக்கம் அது.

இலக்கணத்தின் பிடியிலிருந்து முற்றாக வெளியேறிக் கவிதாம்சத்தின் தாழ்வாரத்தில் தமிழ் நவீன கவிதை நடைபயில ஆரம்பித்துக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியும் கவிதையைப் புரிந்துகொள்வதில் ஒரு சமச்சீரான பாதை உருவாகிவிடவில்லை. தொடர்ந்து புழங்கி நிலைபெற்றுவிட்ட மார்க்கத்தில் எதிர்ப்படும் ஒவ்வொரு புதிய விதக் கவிதையும், தன் இயக்கத்தில் நூதனம் கொண்ட ஒவ்வொரு புதிய கவிஞனும் வாசக மனத்தை நோக்கி விடுக்கப்படும் மாபெரும் சவால்கள்தாம்.

இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. கவிதை விமர்சனம் என்பது வேறு; எழுதப்பட்ட கவிதையின் விளிம்புகளுக்குள் மாத்திரம் சுழன்று திரிவது அது. கவிதையியல் நோக்கில் கோட்பாடுகளை முன்நிறுத்தி உரையாடுவது வேறு; எழுதப்படாத, அல்லது எழுதப்பட வேண்டிய ஆதரிசக் கவிதையை நோக்கி ஒட்டுமொத்தக் கவிதைச் சூழலையும் உந்திச் செலுத்த முயல்வது இது.

வாசிக்கும் மனத்தில் கேள்விகளின் சரவரிசையைக் கிளர்த்தி விடுவதன் மூலம் தன் இயக்கத்தை நிறுவிக்கொள்கிறது கவிதை. கவிதையின் உள் தர்க்கமும், கவிதைக்கு வெளியில் செயல்படும் பொதுத் தர்க்கமும் ஒத்துப்போகிற/முரண்படுகிற முனைகளில் உருவாகும் கேள்விகள், பல நேரங்களில் கேள்விகளாகவே நின்றுவிடும் இயல்புடையவை. அதன் காரணமாகவே நிரந்தரத் தன்மை கொண்டவை.

---------

எழுத ஆரம்பித்த நாட்களில் கவிதை தொடர்பாக ஏகப்பட்ட கோட்பாடுகள் வைத்திருந்தேன். மிகவும் கறாரானவை. அவற்றிலிருந்து வழுவும் ஒரு வரியைக்கூட நான் எழுதமாட்டேன். அது மட்டுமல்ல, என்னுடைய கோட்பாடுகளுக்கு விசுவாசமாக இல்லாத கவிதைகளைப் படிப்பேனே தவிர, சிலாகிக்க மாட்டேன்.

இருபது வருடங்கள் ஓடிய பிறகு, என்னுடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு வெளியாகும் இத் தருணத்தில், இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை முன்வைத்து, சில விஷயங்களைக் கவனிக்க முடிகிறது.

முன்னர் நான் பேணிய கோட்பாடுகளில் பலவற்றை என்னையும் அறியாமல் மறுபரிசீலனை செய்து வந்திருக்கிறேன்.

புதிர்த்தன்மையையும் கச்சிதத்தையும் தக்கவைத்துக்கொண்டு, இறுக்கத்தை மட்டும் கழற்றிவிடவேண்டும் என்ற விழைவு எனக்குள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

ஆனால், ஒரே இரவில் மாற்றிக்கொண்டுவிடும் அளவு இலகுவானவை அல்ல, கவிதை தொடர்பான நம்பிக்கைகளும் செயல்பாடும். முந்தைய தொகுப்புகள் போலின்றி, இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கிடையில் ஒருவிதமான சமச்சீரின்மை நிலவுவதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். கனத்த, இறுக்கமான கவிதைகளும், மெல்லிய உணர்வுகளை மென்மையாகவே சொல்ல யத்தனிக்கும் கவிதைகளும் கலந்து கிடக்கின்றன இந்தத் தொகுப்பில்.

புனைகதைப் பரப்பில் யதேச்சையாக நுழைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கும், கவிதைகள் பற்றி எனக்குள் இருந்துவந்த கோட்பாடுகள் நெகிழ்ந்ததற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது என்றே நம்புகிறேன்.

----------

ஆரம்ப நாட்களில் எழுதிய அளவு அதிக எண்ணிக்கையில் எழுதுவதில்லை இப்போதெல்லாம். கவிதையின் கருப்புள்ளி தானாக - கனவு உதிப்பதைப்போல அவ்வளவு ரகசியமாகவும், இயல்பாகவும் - உருவாக வேண்டும்; தயார் செய்யப்படும் கவிதைகளை வாசிக்கப் பிடிப்பதில்லை என்பது மாதிரியே எழுதவும் பிடிக்காது; என்றாலும், கவிதையுடனான தொடர்பு அழுத்தம் குன்றாமலே இருந்து வந்திருக்கிறது. முந்தைய தொகுப்பான கைமறதியாய் வைத்த நாள் வெளியான பிறகு, கடந்த நான்கு வருடங்களில் நான் எழுதிய கவிதைகள் இவை. மிகச் சிலவற்றைத் தவிர மற்றவை இப்போதுதான் முதன்முறையாகப் பிரசுரமாகின்றன.

கவிதைகளைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பது பற்றி ஏனோ தயக்கம் தொற்றிவிட்டது. கவிதை என்பது கருப்பொருள் மட்டுமே, உருவத்தைப் பற்றிய கவலை தேவையில்லை என்ற இடத்துக்கு நவீன தமிழ்க்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. இது வளர்ச்சியா தேய்மானமா என்பதையெல்லாம் இன்றே முடிவு கட்டிவிட முடியாது. பொதுவான ஒரு பார்வைக்கு, சோர்வளிப்பதாக இருக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது. கவிதை வாசிப்பவர்களின் எண்ணிக்கை, கவிதைகள் வாசிக்கப்படும் விதம் இவை பற்றியும் நுட்பமான அவநம்பிக்கை படிந்திருக்கிறது.

பிரசுரிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டாலும், எழுதுவதில் ஊக்கம் குன்றவில்லை. கைப் பிரதியில் என் கவிதைகளை வாசித்துக் கறாரான விமர்சனங்கள் வைக்கும் நண்பர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

---------

கவிதைகள் எழுதுவதில் மட்டுமே கவனம் கொண்டிருந்த என்னை, கவிதை குறித்துப் பேச வைத்தவை பிரம்மராஜன் கூட்டிய கவிதைப் பட்டறைகள் மற்றும் குற்றாலம் ஹொகேனக்கல், உதகமண்டலம் ஆகிய இடங்களில் ஜெயமோகன் கூட்டிய நித்யா ஆய்வரங்குகள். அவை எனக்கு வழங்கிய உத்வேகம் அளப்பரியது.

முதன்முறையாகக் குற்றாலத்தில் நடந்த இரு மொழி ஆய்வரங்கத்துக்கு வந்திருந்த மலையாளக் கவிஞர்களில் பலரில், சிலரை மட்டுமே திரும்பத் திரும்பச் சந்திக்கவும், சம பாவத்துடன் உரையாடவும் வாய்த்தது. அவர்களில், திரு கல்பற்றா நாராயணன், திரு டி பி ராஜீவன் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் கவிதைப்பற்றிப் பேசும்போது, தமிழ்க் கவிதை மலையாளக் கவிதை என்ற இரண்டும் தனித்தனி வகைகளுக்கு அப்பால் கவிதை என்ற பொதுத்தளம் ஒன்று இருக்கிறது - அது விடுக்கும் சவால்களை எதிர்நோக்குவதுதான் தலையாய பணி என்று உணரக் கிடைக்கிறது.

மலையாள நவீன கவிதையின் இந்தத் தலைமுறைப் பிரதிநிதிகளும், என் நண்பர்களுமாகிய கல்பற்றா நாராயணனுக்கும், டி பி ராஜீவனுக்கும் இந்தத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்வதில் பெரும் திருப்தி எனக்கு.

- எம்.யுவன்

சென்னை
23.10.2009.

நன்றி:

'தோற்றப் பிழை'

உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை 600 018.

தொலைபேசி: 91 44 2499 3448
மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

விலை: ரூ.60