போதை

போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்
நான் குடித்துக் கொண்டிருக்கிறேன்
நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்

(கவிதா சரண் - பிப்ரவரி 1995ல் வெளியானது)
ராதிகா
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கையைப் பிய்த்து
நான் விளையாடியதில்லை
அடுத்தவன் பம்பரம்
வட்டத்துள் இருக்க
அதை உடைக்க
வெறி கொண்டதில்லை
கோலி விளையாடும்போதும்
முட்டி காய்ச்சும் பையனின்
சதை காயப் படுமோவென
வருத்தப் படுவேன்
அடுத்தவர் எனக்கு
முட்டாளெனப் பட்டம் கட்ட
அதனாலென்ன என்று
பேசாமல் போய்விடுவேன்
யாராவது என் சட்டையயப் பிடித்தால்
கை அகற்றி மவுனமாய் நடப்பேன்

வெளியே காண்பிக்காத கோபமெல்லாம்
உள்ளே கனன்று
இப்போது உன்னைத் தேடுகிறேன்
கொல்வதற்கு
ஆசையாய்

(நடு கல் - மே 1992)