இது பூனை வரும் சமயம்.
ஜன்னல்களையும் கதவையும் அகலத் திறந்து வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அதன் வருகையை எதிர்பார்திருந்தான். வீட்டில் யாருமில்லை. கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டான். பூனை நுழைந்தது.
வெள்ளை நிறத்தில் முதுகின் மீது லேசான மஞ்சள் நிறத்தில் இருந்தது பூனை. வெள்ளை மஞ்சள் நிறப் பூனை என நகுலன் வந்து சொல்லிப் போனார். வாசலில் நின்று கொண்டு கண்களை மூடித் திறந்தது. நிழைவாயிலில் நின்று கொண்டிருந்த அதைப் பார்த்துச் சிரித்தான். உடலை விரைப்பாக்கி முதுகை நிமிர்த்திச் சோம்பல் முறித்துச் சிரித்தது. மியாவ் என்று நாக்கை நீட்டி மீசையத் தடவி விட்டுக் கொண்டது. உள்ளே வருமாறு அழைத்தான். தலையை நிமிர்த்தி அறையில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே நுழைந்தது. ஒன்பதடி தொலைவில் நின்று கொண்டது. அருகில் வருமாறு அழைத்தான். தயங்கியது. கையை நீட்டி அதை இழுத்தான். தன்னுடைய எதிர்ப்பை லேசாகக் காட்டிக் கொண்டு வந்தது. அதன் உடல் மேல் தன் கை பட்டதும் அந்த மென்மையான ஸ்பரிசத்தை மிக நேசித்தான்.
முதலில் அந்தப் பூனை வரத் தொடங்கியபோது அவனுக்குச் சிறிய வயது. அதனுடன் விளையாடுவது அவனுக்குப் பிடித்துப் போனது. வீட்டில் யாராவது இருக்கும் போது சில சமயங்களில் அது வந்து விடும். நேரம் காலம் இல்லாமல் அதனுடன் அவன் விளையாடுவான். அந்தப் பூனை வளர்ந்து கொண்டேயிருந்தது. திடீரென்று ஒரு நாள் சிங்கம் போல் வளர்ந்த அது உறுமிய போது பயந்து போனான். அதை வெளியே அனுப்ப முடியாமல் திணறினான். அதன் ஸ்பரிசம் இன்னும் கைகளில் இருந்து கொண்டிருந்தது. அது பெரிதானாலும் தோல் மென்மை மாறவேயில்லை. மிகவும் பயந்து போனவனாய் அதனோடு விளையாடுவதை சிறிது நாட்கள் நிறுத்தி வைத்தான். அது மறுபடியும் சிறிதானவுடன் அவனுக்கு ஆசுவாசமேற்பட்டது.
(தினம் ஒவ்வொரு ரூபம் கொள்ளும் பூனை. ஒரு நாள் சிகப்பாக இருக்கும்; மறுநாள் மஞ்சளாக மாறும். திடீரென்று கறுப்பாகும் போது அவனை அச்சம் ஒரு அடர்ந்த போர்வையைப் போல் மூடிக் கொள்ளும். முதுகில் இருக்கும் வரிகள் சில நாட்கள் காணாமல் போகும். அவனும் கொஞ்சம் கொஞ்சமாகப் பூனையாக மாறுவதை உணர்ந்து ஓவென அழத் துவங்கினான்.)
விரும்பிய போது வந்து கொண்டிருந்த பூனை அவன் விரும்பாத போதும் வரத் துவங்கியது. முதலில் அதை விலகச் சொல்லிக் கெஞ்சியவன் பிறகு மிரட்டத் துவங்கினான். அது அவனை பொருட்டாகவே மதிக்கவில்லை. மெதுவாக அவனை நெருங்கி கைவிரல்களைக் கடித்து தின்ன ஆரம்பித்தது. அந்த வலியின் இதத்தில் கண்களை மூடிக் கொண்டான். நாக்கால் நக்கிக் கொடுத்தது. அதன் சொரசொரப்பில் கையை நீட்டிக் கொடுத்தான். நாக்கு வாளைப் போல் அறுக்க ஆரம்பித்தது. தரையெங்கும் ரத்தம். கதவைத் தாண்டி வெளியே ஓடிய ரத்தத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பூனை ரத்தத்தைக் குடிக்கத் துவங்கியது.
பூனைகளை நேசிக்கும் நண்பர்களின் வீடுகளைத் தேடிச் சென்றான். தொலைக்காட்சியில் வரும் பூனைக் காட்சிகளைப் பதிவு செய்து வைத்திருந்தார்கள். வீடு முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டிகளாக அடுக்கிப் பூனைகளைக் காட்டினார்கள். வீடெங்கும் பூனைகள் சுதந்திரமாகத் திரிந்தன. ஜன்னலைத் திறந்து பார்த்தான். தெருவெங்கும் பூனைகள். ‘எங்கு பார்த்தாலும் பூனைகள், பூனைகள், இது பூனைகளின் உலகமாகிவிட்டது' எனக் கத்திக் கொண்டே ஓடினான்.
இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கும் நான், ‘அதிலொன்றும் தவறில்லையே' என்றேன். ‘கதை எழுதுவது தான் உன் வேலை. குறுக்கே பேசுவது அல்ல' என்றான்.
வீட்டிற்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண்கள் வந்திருந்தார்கள். உட்கார வைத்துப்பேசிக் கொண்டிருக்கையில், பூனை வந்துவிடக் கூடாதென்று வேண்டிக் கொண்டிருந்தான். ஆனால் பூனை மெதுவாக உள்ளே நுழைந்தது. ‘போய்விடு; இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்' என இரைந்தான். பூனை அலட்சியப் படுத்தி அவன் மேல் ஏறியது. அவன் கதறக் கதறக் கேட்காமல் அவனது கழுத்தில் தன் கூர்மையான பற்களைப் பதித்தது. அவனது அலறல் அந்தக் கட்டிடத்தையே நடுக்கியது. முழித்துப் பார்க்கையில் பெண்கள் போய்விட்டிருந்தார்கள். இந்த உலகத்திலிருந்து பூனைகளை ஒழிப்பேன் என சபதம் பூண்டான். ‘உன்னால் அது ஆகாது. எங்களை அழிக்க யாராலும் முடியாது. முயற்சித்தவர்களை நாங்கள் அழித்து விட்டோம்' எனக் கெக்கலித்தது பூனை. அன்று முதல் பூனைகளை அழிக்க வெறி கொண்டு அலைந்தான்.
பூனைகளை விட்டுப் பிரிந்த புதிதில் சில நாட்களுக்கு பைத்தியம் பிடித்தவன் போலானான். மாற்றாக நாய் வளர்க்க முடிவு செய்து குட்டி நாய் ஒன்றை வாங்கினான். குருப்பு நிறக் குட்டி நாய் எப்போதும் அவன் கால்களைச் சுற்றிக் கொண்டிருக்கும். அதனுடன் விளையாடுவதில் அவன் பூனைகளை மறக்க ஆரம்பித்தான். நாயைக் கூட்டிக் கொண்டு காலையில் நடை போவான். அதற்குத் தாவி உணவைப் பிடிக்கும், டயருக்குள் பாயும் வித்தைகள் எனப் பலவற்றைக் கற்றுக் கொடுத்தான். அந்த நாயும் சுதந்திரமாக அவனது படுக்கையறை வரை உலவியது. அவன் மேல் ஏறி விளையாடியது. நாக்கால் அவன் கால்களை நக்கியது. கால் விரல்களைக் கவ்வியது. நெஞ்சின் மீதேறி, தன்னுடைய ஈரமான மூக்கினால் அவனது கழுத்தைச் சீண்டியது. திடீரென்று குரல்வளையைக் கவ்வியது. அலறிக் கொண்டு நாயைத் தூக்கிப் போட்டான். எழுந்தமர்ந்து பார்த்ததில் அது பூனையாக மாறியிருந்தது. கண்களில் அவனை வெற்றி கொண்ட பெருமிதம். ஓவென்று அழத் துவங்கினான். பூனைகளை ஒழிக்க முடியாதா எனப் புலம்பினான்.
பூனைகளைப் பற்றிய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தான். புத்தகங்களின் மேலிருந்தும் நடுவிலிருந்துமாகப் பல பூனைகள் தோன்றின. அந்தப் பூனைகளின் சத்தம் நாராசமாயிருந்தது. வாசல், திண்ணை, படுக்கை, சமையலறைப் பாத்திரம் என எங்கும் பூனைகள் வசிக்கலாயிற்று. பூனையின் மென்மையை நினைத்தாலே திகட்டலாயிற்று. புத்தகங்களில் உள்ள பூனைகளை அழிக்கும் முறைகளைச் செய்து பார்த்தான்.
“உன்னுடைய முயற்சி சிறுபிள்ளைத் தனமாயிருக்கிறது” என்றேன், இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கும் நான்.
“உன் வேலையை நீ பார்”
“இந்தக் கோபம் தான் உன்னால் பூனைகளை அழிக்க முடியாதிருக்கும் காரணம்”
“ஐயா, கோபத்தைத் துறந்த முனிவரே, உங்களால் பூனைகளை ஒழிக்க முடிந்ததா”
“நான் பூனைகளை ஒழிக்க நினைக்கவேயில்லையே”
“நீ கதை எழுதுவதை விட்டுவிட்டு வாதம் செய்கிறாய்”
பதினாறாம் நூற்றாண்டுப் புத்தகமொன்றில் பூனையைக் கவனிப்பதால்தான் அதன் முக்கியத்துவம் கூடுகிறதென்றும், அதனைக் கண்டு கொள்ளவே கூடாதென்றும் இருந்தது. பூனைகளைப் பார்த்தாலும் பார்க்காதது போல் இருக்கலானான். அவை அவன் மடியில் வந்து உட்காரும். கைகளை நக்கும். உடலைத் தேய்க்கும். அவன் இறுகிய மனத்துடன் அவற்றைப் புறக்கணித்தான். பூனைகள் அவனைக் கிண்டல் செய்தன. மீசையைத் தடவிக் காட்டின. அவனெதிரில் ஜோடி ஜோடியாகப் பூனைகள் கூத்தாடின. அறையெங்கும் மறுபடி பூனைகள். ‘என்னை விட்டுப் போய்விடுங்கள்' எனக் கதறினான். “இவ்வளவு நாட்கள் நான் உங்கள் அடிமையாயிருந்தது போதாதா? எவ்வளவு சிநேகிதமாகப் பழகியிருக்கிறேன்; உண்பதற்கு எவ்வளவு கொடுத்தேன்; எனக்கு விருப்பமில்லையெனத் தெரிந்த பிறகும் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்; தயவு செய்து போய்விடுங்கள்.” பூனைகள் மறுபடியும் அவனைச் சுற்றின. தூக்கத்திலும் விழிப்பிலும் அவனை ஆண்டன.
பூனைகளில் பலவகை உண்டு. நெருங்கிப் பழகும்; தூரத்திலிருந்தே சிநேகமாய்ச் சிரிக்கும்; மடியில் வந்து அமர்ந்து கொள்ளும்; காலைக் கடிக்கும், உருண்டையான கண்களால் உருட்டிப் பார்க்கும், நகத்தை நீட்டிப் பிறாண்டும்... எனப் பலவகை. காலில் அடிப்பாகம் மெத்தென்று இருக்கும். தரையில் காலை அழுத்தித் தாவும் போது நகங்கள் தரையைக் கீறும் சப்தம் சிலிர்க்க வைக்கும். தாவும் போது சில சமயம் நகங்கள் கீறுமே தவிர, தரை இறங்குகையில் மெத்தென்று தான் குதிக்கும். அதன் முதுகைச் சற்று அழுத்தித் தேய்தால் முடி கொட்டும். அவனது பாட்டி பூனையின் ஒரு முடி விழுத்தாலும் ஏழேழு ஜென்மங்களுக்கும் அந்தப் பாவம் தொடரும் என்பாள். இப்படிப் பட்ட மாயைகள் பூனைகளைக் காப்பாற்றுகின்ற என நினைத்தான்.
“அவ்வளவு தான்” என்றான்.
கதையைப் பாதியில் நிறுத்தினான். மேலே கதையைச் சொல்ல விருப்பமில்லை; அது முடியவும் முடியாதென்றான்.
ஆனால் இந்தக் கதையை எழுதுவது நான் தானே. கூர்ந்து கவனித்து விட்டேன்.
அவன் தன் கைகளில் விஷ பாட்டிலை வைத்துக் கொண்டிருந்த போது அறையினுள் நிழைந்தேன்.
ஒரு சிறிய பாத்திரத்தில் பாலை விட்டான். அதில் விஷத்தைக் கலந்தான். ‘இதைப் பூனை குடித்தால் நொடிப் பொழுதில் மரணம் தான்' என உரக்கச் சொல்லிக் கொண்டான். ‘ஒரு பூனையை அழித்தால் போதும்; மற்றவை தானாக அழிந்து விடும்' என்றான். ஒரு மாதிரியான மயக்கத்தில் இருந்தான். முகத்தில் வியர்வை ஊறிக் கொண்டே இருந்தது. நாற்பத்தைந்து கைக்குட்டைகளில் துடைத்துப் போட்டும் அடங்குவதாயில்லை. அறையெங்கும் வியர்வை நெடி. விஷப் பால் கலந்த பாத்திரத்தை கதவருகில் வைத்தான்.
பூனை நுழைந்தது. பாத்திரத்தைப் பார்த்துச் சிரித்தது. அவனை முறைத்தபடி பாலைக் குடித்தது. விதிர்த்துப் போய் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அது பாலை நக்கிக் குடிக்கும் சத்தம் அறையின் மௌனத்தைக் கிழித்தது. முழுவதுமாகக் குடித்து முடித்தது. பாத்திரத்தில் ஒட்டியிருந்த பாலை நக்கும் போது, இடதும் வலதுமாகப் பாத்திரம் ஓசையெழுப்பியபடி நகர்ந்தது. தலையை நிமிர்த்தி மீசையில் ஒட்டியிருந்த பாலை நாக்கை வெளியில் நீட்டிச் சுத்தம் செய்தது.
“அவ்வளவுதான், பூனைகள் ஒழிந்தன” எனக் கூக்குரலிட்டான்.
அது அவனைப் பார்த்தபடியேயிருந்தது. ஒவ்வொன்றாகப் பல நிறத்தில் பூனைகள் வரத் துவங்கின. அறையெங்கும் உலகெங்கும் பூனைகள் தோன்றி அலைந்தபடியே இருக்கின்றன.
(இது ஒரு மீள் பதிவு)
கார்காலக் குறிப்புகள் - 53
22 hours ago
33 comments:
உங்களிடம் சிறந்த புனைவாற்றல் உள்ளது. பன்முக அர்த்தம் உள்ள இக்கதை பூனையை பலவறற்றின் குறியீடாக மாற்றி பல வாசிப்புகளுக்கான சாத்தியங்களைத் தருகிறது.
பூனையை காமம் என்பதாக வைத்து வாசிக்கும்போது கதை உருவாக்கும் காமம் பற்றிய பார்வை அதன் கட்டமைப்பிற்கான அரசியல் ஆகியன நன்றாக வந்துள்ளன. ஒரே ஒரு விபரம் மட்டுமே இடிக்கிறது அது ஏன் 45 கைக்குட்டைகள்.
மற்றொன்று 16-ஆம் நூற்றாண்டு புத்தகம். பாலியல் கருவிகள் கட்டமைப்பை உணர்த்தவா? பூனைகள் ஆதாம் ஏவாலின் விலக்கப்பட்ட கனியிலுருந்தே உருவாகி வந்துள்ளது என்பதாக இதனை நீட்டிக்கலாம். இக்கதைக்கான வாசிப்பே ஒரு பதிவாகிவிடும் அளவிற்கு பலவற்றை நுட்பமாக உள்ளடக்கியிருக்கிறது. இது கதைதான் என்றாலும் ஆய்விற்கான உளவியல் பற்றியதுதான் என்பதை தலைப்பே சொல்லிவிடுகிறது.
பாராட்டுக்கள்.
நன்றி, ஜமாலன்.
எண்களாக எழுதும் போது கூட்டுத் தொகை 9 வர வேண்டும் என்பதற்காக 45 கைக்குட்டைகள். பல கதைகளில் எண்கள் வருமிடத்தில் 18, 27, 144, 450 என்று கூட்டுத் தொகை 9 வருமாறு எழுதுவேன்.
என்ன சுந்தர் எண்கணிதமா (நியூமராலஜி). பிரேமிள் போல. உங்கள் பெயரைப் பார்த்தபோது பிரேமிளின் தாக்கம் உள்ள காலப்ரதீப் சுப்ரமண்யம் போன்று ஒருவர் என்று நினைத்தேன். பரவாயில்லை நிங்கள் ஒரு பெயரிலேயே உள்ளீர்கள்.
9 கூட்டுததொகையில் என்ன செண்டிமெண்ட. அது ஆதிக்க எண் ஆயிற்றே. எல்லாவற்றிலும் தனது தலமையை ஏற்க முனையும் எண் என்று நூல்களில் படித்த நினைவு. எனது தந்தையார் மற்றும் அண்ணன் இதில் தீவிர நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் எனக்கும் இதில் பரிச்சயம் உண்டு. அவ்வளவே.
நியூமராலஜி எல்லாம் இல்லை.
ஒம்போது என்று கிண்டலாகச் சொல்வார்கள். அது ஒரு விலக்கப் பட்ட எண்ணாக பாலியல் சொல்லாடல்களில் உள்ளதல்லவா. அதனாலேயே அந்த எண்ணை உபயோகிக்க விரும்புவேன்.
பூனை என்பது முதலில்.
புகைப்பது, அல்லது குடி..
என்று நினைத்தேன்..
பின்னர்.
பெண்கள் என்று வந்தவுடன்..
காமமாக இருக்குமோ என்று நினைத்தேன்..
பொதுவாக..தேவையில்லாத ஒரு
பழக்கம்..
அதற்கு அடிமையாகுதல்..
பின் அதை விட்டு வெளியேற முடியாமல்..
திண்டாடுதல்..
நல்லா சுவாரசியமாக இருக்கு.
சுந்தர்ஜி, கதை நன்றாக இருக்கிறது. நாய் பற்றி, 'மேலும்' சிவசு, அருமையான கதை ஒன்றை எழுதியிருப்பார். இதைப் படித்தததும் அதுதான் ஞாபகத்துக்கு வந்தது.
ஜமாலன் சார் சொல்வது போல இக்கதை பன்முக அர்த்தம் உள்ளதாகப் படுகிறது.
பூனையை பயத்தின் குறியீடாக பார்த்தேன்.
வாழ்த்துகள். நன்றி.
நன்றி, tbcd. நீங்கள் சொல்லியவாறும் வாசிக்கலாம்.
பூனை என்பது பூனையல்ல பின் என்னவாய் இருக்கும்? என்பதே வாசகனின் சுதந்திரம் வாசகனின் அளவுக்கேறப நீட்டித்தோ குறைத்தோ புரிந்துகொள்ளும் சுதந்திரத்தை தரும் படைப்புகள் மிகவும் அபூர்வமானவை இது மிகவும் அபூர்வமானது...
நன்றி சுந்தர்..
நன்றி, ஆடுமாடு. மேலும் தொடர்ந்து படித்தேன் - ஆனால் சிவசு கதை படித்த ஞாபகமில்லை. அசோகமித்திரன் ஒரு எதார்த்தக் கதை எழுதியிருக்கிறார் 'பூனைகள்' தலைப்பில் (என்று ஞாபகம்).
நன்றி, அய்யனார். பன்முக வாசிப்பின் சுதந்திரத்தை வாசகனுக்குப் பிரதி அளிக்க வேண்டும் என்பதில் நான் கவனமாயிருப்பேன்.
கலக்கியிருக்கீங்க.. ரொம்ம மிரட்டலா அதே சமயம் குறியீட்டை விட்டு விலகாமல் இருக்கும் கதையின் மொழி நடைப்பாங்கு பிரமாதம். என் எல்லா எதிர்ப்புணர்வுகளின் குறீயீடும் பூனைதான் என்னால் எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாத விலங்கு என்றால் அது பூனைதான்.. மனதில் தங்கிவிட்ட புனைவு.. நன்றி.. வாழ்த்துக்களுடன்
பூனை என்பதனை காமம், சாதியமனோபாவம், (ஆண்) ஆதிக்க எண்ணம், நுகர்வு வெறி என எதுவாகவும் வாசிக்கலாம். ஏன் காதலென்றும் வாசிக்கலாம்.
ஏன் பூனையை பூனையாகவே வாசிக்க இயலவில்லை? எதையும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அறிவின் வன்முறையா?
அற்புதமான எழுத்து சுந்தர்.
வாசித்து முடித்தபின் அலுவலகமெங்கும் பூனைகள் உலவுவது போன்ற உணர்வுமயக்கம் ஏற்பட்டிருக்கிறது ;-)
பூனைகளை அலையவிட்டதற்கு நன்றி
சுந்தர்,,
இங்கே -மேலே- பல நண்பர்கள் எழுதியபோலவே, அதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ என்று அலையவிட்டபடி கதை நகர்ந்தது நன்றாகவிருக்கும். ஆரம்பத்தில் வாசிக்கத் தொடங்கும்போது, ஜே.பி.சாணக்யாவின் 'அமராவதியின் பூனை'யாகப் போகின்றதோ என்று யோசித்திருந்தேன். எதற்குப் பூனை படிமமாகின்றது என்று தீர்க்கமாய்த் தெரியாது கதை நகர்வது/முடிவது பிடித்திருந்தது.
...
முபாரக் குறிப்பிட்டபடி, பூனையைப் பூனையாக மட்டும் பார்க்காது போவது கூட, ஒருவித வாசிப்பு வன்முறை போலத்தான் தோன்றுகின்றது. எனக்கு இவ்வாறான ஒரு வியாதி, தமிழ்ச்சினிமாப்பாடல்களைக் கேட்கும்போதும் வருவதுண்டு :-).
நன்றி, கிருத்திகா. பூனைகள் மேல் கோபம் வேண்டாமே...
நன்றி, முபாரக்.
எம்.யுவனின் கவிதையொன்று ஞாபகம் வருகிறது. கிளியென்று சொன்னால் பச்சையைக் குறிக்கலாம், மூக்கைக் குறிக்கலாம், பழத்தைக் குறிக்கலாம், பறவையைக் குறிக்கலாம், அழகைக் குறிக்கலாம், சில சமயம் கிளியையும் குறிக்கலாம்.
நன்றி, டி.சே.
முபாரக் - //ஏன் பூனையை பூனையாகவே வாசிக்க இயலவில்லை? எதையும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அறிவின் வன்முறையா?//
டிசே - //முபாரக் குறிப்பிட்டபடி, பூனையைப் பூனையாக மட்டும் பார்க்காது போவது கூட, ஒருவித வாசிப்பு வன்முறை போலத்தான் தோன்றுகின்றது. எனக்கு இவ்வாறான ஒரு வியாதி, தமிழ்ச்சினிமாப்பாடல்களைக் கேட்கும்போதும் வருவதுண்டு :-).//
முதலில் இது பூனை பற்றியக் கதை அல்ல. பூனை என்கிற பெளதீக ரிதியான உயிர் ஒன்றறு கதையில் இல்லை. அதனால் அதை பூனையாக பார்க்க இயலவில்லை. அதேசமயம் தெளிவு மற்றும் புரிந்தகொள்ள முனைதல் என்பதும் ஒருவித அறிவின் வன்முறைதான். அதிலம் பார்க்க புரியாதவற்றை தனது புரிதல் பிரச்சனையாக உணராமல் எழுதியவனின் புரிதல் பிரச்சனையாக பார்ப்பது வாசிப்பாளன் என்ற பெயரில் நிகழும் மற்றொரு பெரிய வன்முறை.
பூனையை பூனையாக வாசிக்க விடாதது ஒருவகையில் பிரதியின் வெற்றித்தான்.
பின் நவீனத்துவ எழுத்துமுறையின் ஒரு முக்கியமான உள்ளமைப்பு - உளவியல் ரீதியான சிந்தனை. உங்கள் எழுத்துகளில் மிக நல்ல முறையில் அது வெளிப்படுகிறது. தன்னை தானே வடிவமைத்து கொள்ளும் எழுத்தும் .. எழுத்தாளனின் அமைப்பியல் வலிமையும் உணர்கிறேன். குறியீடுகள் நிறைந்த பாலியல் இருள் என கருப்பு பூனையை நான் எடுத்து கொள்லலாமா. பூனை என்பது ஒரு சொல் எனவும் அதனை எதனின் குறியீடாகவும் கொள்லலாம் எனவும் தோன்றுகிறது..
நன்றி, ஜமாலன். ஆம், இது பூனையைப் பற்றிய கதை அல்ல. பூனை என்பது சில சமயம் பூனையையும் குறிக்கலாம். அவ்வளவு தான்.
நன்றி, முத்துக்குமார். பூனையை எதன் குறியீடாகவும் கொள்ளலாம். நேரமிருப்பின், என்னுடைய வேறு சிறுகதைகளையும் வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
கதை படிக்கும் பொழுது என்னதான் சொல்லவருகிறீர்கள் என்று புரிஞ்சக்க முயற்ச்சி செய்தேன் முடியவில்லை! பின் பின்னூட்டம் மூலம் கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டேன்.
ஆனால் நமக்கும் இந்த புனைவுக்கும் தூரம் என்பதால் சரியாக புரியவில்லை, தொடர்ந்து படித்தால் புரியும் போல, முயற்ச்சிக்கிறேன்.
எல்லாருக்குள்ளயும் தூங்கிட்டுருக்கற மிருகம் இதுதானா?
ஒரு அருமையான புனைவு. '9' பற்றி சொன்னது ஆச்சரியமாக இருந்தது. சுந்தர், எனக்கு ஒரு கேள்வி ரொம்ப நாட்களாக : புனைவாளர்களையும், கவிஞர்களையும் பூனை ஏன் இந்த அளவு ஆக்கிரமிக்கிறது? உளவியல் ரீதியில் பூனை spouse என்பதன் குறியீடு என்று படித்த ஞாபகம்.
அனுஜன்யா
நல்ல வாசிப்பனுபவம் .
நன்றி குருஜி !
//எண்களாக எழுதும் போது கூட்டுத் தொகை 9 வர வேண்டும் என்பதற்காக 45 கைக்குட்டைகள். பல கதைகளில் எண்கள் வருமிடத்தில் 18, 27, 144, 450 என்று கூட்டுத் தொகை 9 வருமாறு எழுதுவேன்.//
ஒரு வழியா எனக்கு விடை தெரிஞ்சுடுச்சு :)
மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
for follow up :)
உங்கள் பதிவுகளில் எனக்கு மிக பிடித்த பதிவு இது.. :)
பூனை என்றதும் உள்ளே வந்தேன். புனை(வு) என்று தெரிஞ்சது:-))))
நல்ல நடை!
அருமையான வாசிப்பனுபவம்
:)
என்ன சொல்றதுனு தெரியல. நல்ல பின்னூட்டங்களுக்கு மத்தியில கேனைத்தனமா ஏதாவ்து போட்டு மாட்டிக்க கூடாதுனு...
சுந்தர்!
என்னுடைய பிளாக் லிஸ்டில் உங்கள் பதிவு ஏன் அப்டேட் ஆகவில்லை?
நிதானமாக இன்னொரு தடவை வாசித்து கருத்து சொல்கிறேன்.
குசும்பன், அதிஷா RVC, சரவண குமார், துளசி கோபால், முரளி கண்ணன், கார்க்கி, மாதவராஜ்... நன்றி.
மாதவராஜ், இது மீள் பதிவு. அதனால் வராமலிருந்திருக்கலாம்.
ரசித்தேன். நான் இந்த 'பூனை'-யை 'பழக்கம்' என்று நினைத்தேன். சில பழக்கங்கள் (நெகம் கடிப்பது, குடி..) சில உறவுகள் இப்படி...
பின்னூட்டங்களும் ரசிக்கத்தக்கவை...
நன்றி, சுகுமார்.
Post a Comment