என் வண்டி

வயதான வண்டியிது
மிக மோசமான முறையில்
கழுத்தறுக்கும்
அடைய வேண்டிய இலக்கு
தொலைவில் இருக்க
இருக்கும் நேரமோ மிகச் சொற்பம்
மெதுவாகத்தான் செலுத்த இயலும்
இந்த வண்டியை
பாதியில் நின்றுவிடும்
என்னுடன் சண்டை போடும்
தூக்கியெறியும்
இது குடிக்கும் பெட்ரோலுக்கென
என் வியர்வையில் பாதியை அழுதிருக்கிறேன்
சோனியாக இருக்கும் இவ்வண்டி
துருப்பிடிக்கவும் ஆரம்பித்தாகிவிட்டது
என்றாலும்
எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி

(மாலைக்கதிர் - 26.12.1995ல் பிரசுரமானது)

சூடான இடுகைகள்

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் என்று ஒரு பத்து பதினொன்று இடுகைகளைக் காட்டுகிறார்கள். இடுகைகள் எழுதப்பட்ட நேரத்திலிருந்து 24 மணிநேரங்கள் அது காண்பிக்கப்படும் - அதாவது அது அதிகமான வாசகர்களால் தமிழ்மணத்திலிருந்து கிளிக் செய்யப்பட்டிருந்தால்.

இப்போது திடீரென்று சிலரது இடுகைகள் அவ்வாறு காண்பிக்கப்படுவதில்லை. லக்கி லுக், செந்தழல் ரவி, கோவி கண்ணன் மற்றும் டோண்டு ராகவனின் பதிவுகள். இன்னும் வேறு சிலரது பதிவுகள் இப்பட்டியலில் இருக்குமா எனத் தெரியவில்லை.

என்னுடைய காமக் கதைகளுக்கு சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரைகள், பின்னூட்டத் திரட்டல் போன்ற மேலதிகச் சேவைகள் கிடையாது என்றபோதாவது சில காரணங்கள் இருக்கலாமென்று (அது எவ்வளவுதான் சிறுபிள்ளைத்தனமாக இருந்தபோதும்!) நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் சில பதிவர்களின் ஒட்டுமொத்த இடுகைகளையும் சூடான இடுகைகளுக்கு ஏற்றுக் கொள்ள மாட்டோமென்பது எதேச்சதிகாரம் அல்லாது வேறென்ன?

திரும்பத் திரும்ப தமிழ்மண நிர்வாகிகள் வெளிப்படையாக எதுவும் அறிவிக்காமலேயே இப்படிப் பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். பைத்தியக்காரன் சொன்னதுபோன்று இது புரவலர் மனப்பான்மையையே காட்டுகிறது. இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் சக பதிவர்களால் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

பதிவுகளுக்காகத்தான் திரட்டி எனத் திடமாக நம்புகிறேன். அதனால் அவர்கள் தருவது இலவச சேவையென்றாலும் (இந்த எழவிற்கு ஏதாவது கட்டணம் வைத்துக்கூட ஒழுங்கான சேவை தரலாம்!), அடிப்படையாக சில விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது வெளிப்படைத்தன்மை.

சக பதிவுலக நண்பர் ஒருவர் சொன்னார் : தமிழ்மண நிர்வாகி ஒருவரைப் பற்றி எழுதியதால்தான் லக்கி லுக் மற்றும் டோண்டு பதிவிற்கு இந்த நிலமை என்று. அதை நியாயப்படுத்தவே செந்தழல் ரவி மற்று கோவி கண்ணன் பதிவுகளையும் சூடான இடுகைகளிலிருந்து தூக்கியிருக்கிறார்கள் (தனி மனித தாக்குதல் என்ற காரணம் சொல்லலாமே!). இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பிரச்சனை இதுவல்ல. எந்தக் காரணமும் சொல்லாமல் சிலரது பதிவுகளுக்குச் சில சேவைகளை மறுப்பதுதான் பிரச்சனை.

என்னுடைய கோரிக்கை : அவர்கள் சூடான இடுகைகளிலிருந்து சிலரை விலக்கியிருந்தால் அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையா எனப் பதிவர்கள் பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம் தகவலையாவது தெரிந்து கொள்ளலாம்.

என்னுடைய (மற்றும் சில பதிவர்களுடைய) கோரிக்கையின் நியாயத்தை புரிந்துணர்வோடு அணுகி தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் :)

பிகு :

இவ்வளவு சொன்ன பிறகு, தமிழ்மணப் பரிசுகளைப் பற்றிச் சொல்லாவிட்டால் தின்ற சோறு செரிக்காது. நிறைய நிபந்தனைகளோடு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 500 ரூபாயாம். 5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றுகிறது.

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்கள். அதற்குப் பணம் தேவைப் படுகிறது. கடனாக வாங்கினால் முழுப் பணத்திற்கும் வட்டி தரவேண்டும். அசலையும் திருப்பித் தந்து தொலைக்கவேண்டும்.

அதற்குப் பதிலாக பத்து ரூபாய் அடக்க விலையில் பங்குகளைவிட்டால், அதற்கு ப்ரீமியமாக 490 வைத்து 500 ரூபாய் ஒரு பங்கு என விற்கலாம். அதன்மூலம் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் கொண்டு தொழில் செய்யலாம். மொத்த 500 ரூபாய்க்குமென இல்லாது அடக்கவிலையான 10 ரூபாய்க்கு மட்டும் டிவிடெண்ட் கொடுத்தால் போதும்.

அப்படி மக்களிடமிருந்து வாங்கிய பணத்தை தன்னுடைய மகன்களின் நிறுவனங்களை வாங்குகிறேன் எனச் சொல்லி சுருட்டிக் கொள்ளலாம்.

அடுத்தவன் பையிலிருந்து பணத்தை எடுத்தால் அதற்குப் பெயர் திருட்டு. மாட்டினால் தர்ம அடியும் சிறை தண்டனையும் உண்டு.

அதையே பெரிய அளவில் செய்தால்...

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு முடிவெடுக்கிறது. சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேதாஸ் ப்ராபர்டீஸ் மற்றும் மேதாஸ் இன்ஃபிராவை வாங்குவாதாக. ப்ராபர்டீஸிற்கு 1.3 பில்லியன் டாலரும் இன்ஃபிராவிற்கு 0.3 பில்லியன் டாலரும் மதிப்பிடப்பட்டு அந்த விலையில் வாங்க முடிவெடுக்கிறார்கள். இதில் இன்ஃபிரா மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். ப்ராபர்டீஸ் தனியார் சொந்தம். (Satyamஐ தலைகீழாக எழுதினால் வருவதுதான் Maytas!).

மேதாஸ் ப்ராபர்டீஸும் மேதாஸ் இன்ஃபிராவும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மகன்களின் கம்பெனிகள். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ராஜூக்களின் பங்கு மதிப்பு 300 மில்லியன் டாலர்கள். 300 மில்லியன் முதலீட்டில் 1.6 பில்லியன் பணத்தை தன் மகன்களுக்குத் தர முடிவெடுக்கிறார் ராமலிங்க ராஜூ. இதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் தேவையில்லை எனவும் முடிவெடுக்கிறார்.

இம்முடிவு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை மூடும் நேரத்திற்குப் பிறகு எடுக்கப்படுகிறது. New York Exchangeல் சத்யம் பங்குகள் ரணகளப் படுகிறது. முதலீட்டாளர்கள் நெருக்குகிறார்கள். அடுத்த நாள் காலை மகன்களின் நிறுவனங்களை வாங்கும் முடிவை கைவிடுகிறார்கள். ஆனாலும் பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 30% வீழ்கின்றன.

இதில் இன்னமும் சில உள்குத்துகள் இருக்கின்றன.

மேதாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் மதிப்பு 1.3 பில்லியன் டாலராக இருக்க முடியாதென்றும் அது தன் வசமிருக்கும் விவசாய நிலங்களை வணிக நிலங்களாகக் காட்டி அதன்மூலம் தங்கள் நிறுவன மதிப்பை 90% ஊதிப் பெரிதாக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதாவது விற்பது மகனென்றால், பத்து ரூபாய்ப் பொருளை 100 ரூபாய்க்கு வாங்குவது, அதுவும் அடுத்தவர் பணத்தில்!.

வேறு சிலர் இப்படி அறிவித்ததன்மூலம் சந்தையில் சத்யம் பங்குகளின் மதிப்பு விழும், அப்போது தன்னுடைய பினாமிகளின்மூலம் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பது ராமலிங்க ராஜூவின் கணக்காக இருக்கலாம் என்கிறார்கள்.

அதாவது, யாரும் எதிர்க்கவில்லையென்றால், தன் மகன்களுக்கு 8000 கோடி ரூபாய் லாபம். எதிர்த்தால், பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கி பிறகு விற்றுக் கொள்ளை லாபம் அடையலாம்.

இதுதான் தலை விழுந்தால் நான் ஜெயித்தேன், பூ விழுந்தால் நீ தோற்றாய் என்பதோ??

பிற்சேர்க்கை : இது தொடர்ப்பான அடுத்த இடுகைகள் :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_1051.html

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_14.html

காமக் கதைகள் 45 (25)

ஒருவனுக்கு ஒருத்தி

பலரைப்போல் எனக்கும் அதீதன்மேல் பொறாமையாக இருந்தது, இவ்வளவு பெண்களைக் கவிழ்க்கிறானே என்று. உன்னுடைய வழுக்கைத் தலைதான் பிரச்சனை, வீவிங் செய்துகொள் என்றான். அதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை எனப் போலியாக பதில் சொன்னேன்.

உன் நண்பன் மனோகரைப் பார். 40 வயதில் ஒரே நேரத்தில் ஐந்து காதலிகளை வைத்திருக்கிறான் என்றான். மனோகர் கதை எங்களுக்குத் தெரியாதா என்ன.. சரியான வெண்ணை அவன். பெண்களுடன் காரில் சுற்றுவான்; அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பான்; கடற்கரையில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பான்; அதற்குமேல்... அவ்வளவுதான். லூசாடா நீ என்றுகூட நண்பர்கள் திட்டுவார்கள். ஆள் பார்ப்பதற்கு ஸ்மார்டாக இருந்தாலும் காரியத்தில்... வேஸ்ட் மனோகரன் என எங்கள் வட்டாரத்தில் அவனுக்குப் பட்டப்பெயர்கூட வைத்திருக்கிறோம்.

மனோகர் ஒரு சௌந்தர்ய உபாசகன் என்றேன். 'மசிரு' என்றவன், மனோகர் காரில் போகும்போது தன் ஆங்கிலோ இந்தியக் காதலியிடம் செய்த மேல் விளையாட்டுகளை விவரித்தான்.

என்ன எழவோ? இம்மாதிரியான கருமங்களையெல்லாம் எழுதித் தொலைய வேண்டியிருக்கிறது. ஆனால் நான் அடிப்படையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் திட நம்பிக்கையுடையவன். என் மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காதவன். அல்லது குறைந்தபட்சம் அப்படி காட்டிக்கொள்ள விரும்புபவன். சமூக ஒழுங்கிற்கு அது தேவைதானே.

ஒருவனுக்கு ஒருத்தி; ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கே ஒருத்தி; ஒரு சமயத்திலேயே ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரே சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரே சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே, ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே...

மொழியிலேயே இவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கும்போது காமத்திற்கும் காதலுக்கும் ஒற்றைத் தன்மையை எதிர்பார்க்கிறாய் என்றான்.

(அதீதனின் செக்ஸ் ஓரியண்டேஷன் ஸ்டிரெய்ட்தான். ஆனால் வேறு சில விளையாட்டுகளையும் முயற்சி செய்திருக்கிறான். ஜெல்லைக் கையில் வைத்துக் கொண்டு அவன் செய்த குதப் புணர்ச்சி முயற்சியை அடுத்த கதையில் எழுதுகிறேன் - எல்லாம் என் தலையெழுத்து!.)

அன்பாயிருங்கள்

அடுத்தவர்களைப் புரிந்து கொள்ள
கற்றுத் தரப்படுகிறோம்
அடுத்தவர் பார்வைக் கோணங்களின்
முக்கியத்துவம் பற்றி
அதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றி
அடிப்படை நாகரிகம் பற்றி
ஜனநாயகம் பற்றி
கற்றுத் தருகிறார்கள் தொடர்ந்து -
அடுத்தவன் கருத்து எவ்வளவுதான்
முட்டாள்தனாமாக
கேப்மாரித்தனமாக
கேவலமாக இருந்தபோதும்
போங்கடா வெண்ணைவெட்டிகளா

(சார்லஸ் புயுகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி எழுதியது - மொழிபெயர்ப்பல்ல).

ஒரே மருத்துவரும் அதே பழக்கமும்

அதே மருத்துவரைப்
பார்க்கும்போதெல்லாம்
ஒரே கேள்விகள்
குடிப்பதை நிறுத்திவிட்டாயா
புகைப்பதை?
அதே பேச்சுக்களுக்கு
ஒரே பதில்கள்
நடைப் பயிற்சி நல்லதாயிற்றே
அலுவலகத்திற்கு நடக்கிறேனே
கையில் அதே பிபி கட்டைச் சுற்றி
காதில் அதே ஸ்டெதெஸ்கோப் வைத்து
சோதிக்கும் அவர்
அதே எடையையும் சோதிப்பார்
ஒரே மாதிரி அவரிடம் பணம் கொடுத்து
அதே வழியில் திரும்புகையில்
அதே மதுக்கடையில்
அதே ஓல்ட் மாங்கும்
அதே கோல்ட் பிளேக் கிங்ஸும்
அதே விலையில்
அதே விக்ரமாதியனின்
ஒரே வரி நினைவுக்கு வருகிறது
வயிற்று வலி பயத்தில்கூட குடிப்பதை...?

சாரு மரை கழண்றவரா?

கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி மாமா, பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என பஞ்சதந்திரம் படத்தில் கமல்ஹாசன் நாகேஷிடம் சொல்வார். பிறகு ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து சொல்லிவிடுவார் என வைத்துக் கொள்ளுங்கள் :)

ஆனால் கேள்வி கேட்பதும் சிரமமான காரியம்தான் போலிருக்கிறது. மோகன் கந்தசாமி (http://www.mohankandasami.blogspot.com/) பதிவிட்டிருக்கிறார் பாருங்கள். நான் இயங்கும் தளம் புரிந்து அது தொடர்பான கேள்விகளைத் தயாரித்து, முதல் பாகம் கேள்விகள் அனுப்பி, அதற்குப் பதில் பெற்றவுடன், துணைக் கேள்விகள் கேட்டு... இப்படியே அடுத்த பாகத்திற்கும் செய்து, அருமையாக பதிவிட்டிருக்கிறார்.

தலைப்பில் இருப்பது அவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி :) இன்னொரு கேள்வி சரோஜாதேவி கதைகள் மாதிரி இருக்கிறதாம் நான் எழுதிய காமக் கதைகள் (கூடவே காமமே இல்லை என்ற விமர்சனம் வேறு!). இன்னும் பல சுவாரசியமான கேள்விகள். இதற்குமுன் நான் இம்மாதிரி பேட்டி கொடுத்ததில்லை. பதில் சொல்வதில் சொதப்பிவிட்டேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

இரண்டு பாகங்களாக வந்திருக்கும் பேட்டியைப் கீழே உள்ள சுட்டியில் படிக்கலாம் :

ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி, பாகம் - 1


ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி, பாகம் - 2

ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்

பிரமிள்

தனபாண்டியன் பிறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவன் அம்மா இறந்துவிட்டாள். அதை முன்னிட்டு எல்லோரும் அவனைத் தூற்றினர். அவனுக்கு ஆறு மாதம் ஆகியிருந்தபோது அவனது அப்பா அவனிடம் இரைந்தார் - "எங்கப்பா அஞ்சு வருஷம் முன்னாடி செத்ததுக்கு நீதாண்டா காரணம்." ஆறு மாதக் குழைதைக்குக் கோபம் வராதா.? ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறை விட்டான் என்று வாசித்துக் கொள்ளவும்). தன்மேல் பொறாமை கொண்ட ஊர் நாட்டாண்மைக்காரர்தான் பில்லி சூன்யம் வைத்திருப்பான் என்றான். அவரும் ஒத்துக் கொண்டார். அதிலிருந்து அவனைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டார். அவனும் பெயரைச் சுருக்கி பாண்டியன் என்று மாற்றிக் கொண்டான். பிற்காலத்தில் நிறைய ரசிகர் நற்பணி மன்றங்கள் தோன்றின.

அவனுக்குப் பத்து வயதிருக்கும்போது ஊரிலுள்ள வேசிகளிடம் போக ஆரம்பித்தான். யாராவது கேட்டால், தன் தாயாரைப் பார்க்க முடியாத ஏக்கம் நினைவிலி மனதில் இருந்து அதுவே எல்லாப் பெண்களிடமும் ஆசையைத் தூண்டுகிறது என்பான். அவனது தொல்லை பொறுக்க முடியாமல் வேசிகள் எல்லாரும் ஊரைவிட்டகன்றனர்.

அவன் செத்துப் போனான்.

எங்கும் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். சொந்தமாக வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டான். ஆனால் அம்முயற்சிகள் கைகூடாததால் இருபத்தைந்து வயதில் மளிகைக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். நல்ல சூட்டிகையான பையன் என்ற பெயரை மிக எளிதில் பெற்றான்.

இடைவெட்டாக ஆசிரியர் கருத்து : இந்தக் கதை ஏன் இப்படி இருக்கிறது என்று இதற்குள் உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். கதை நன்றாக இல்லை என்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இது என் கதை; என் இஷ்டப்படி தான் எழுதுவேன் (ஆறு வார்த்தைகள் ஆகிவிட்டதா.?). Raymond Federman 'யதார்த்தம் / கற்பனை உலகம், நனவு மனம் / நினைவிலி மனம், கடந்த காலம் / நிகழ் காலம், உண்மை / உண்மையற்றது ஆகிய வித்தியாசப் படுத்தல்களைக் கலைவது' நடக்கும் என்கிறார் (பார்க்க: மீட்சி 33; மொழிபெயர்ப்பு நாகார்ஜூனன்).

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று பாடிக் கொண்டே வந்தவனின் முகத்தில் எருமை மாடு காறி உமிழ்ந்தது. கையிலிருந்த கத்தியால் அதன் கழுத்தை வெட்டி ரத்தத்தைத் துளிக்கூடச் சிந்தாமல் குடித்தான். இனி ஊரிலுள்ள ஒரு எருமை மாட்டையும் விடக்கூடாது என்று கையில் பசூக்காவை எடுத்துக் கொண்டு எதிர்படும் மாடுகளை எல்லாம் சுட ஆரம்பித்தான். அவன் கையில் பசூக்காவை வைத்திருந்த காட்சி ராஜ ராஜ சோழனுக்குக் கிலியை ஊட்டியது. தன் நாட்டை விட்டு, ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்தான். அவனே பிற்பாடு ஹிட்லராக மாறினான். (இதைப் போன்ற சம்பவத்தை நீங்கள் கோவி மணிசேகரின் வரலாற்று நாவலில் படித்திருந்தால் நான் பொறுப்பல்ல - ஆசிரியர்).

இப்படியாக அவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான் (வாள் போன்ற மொழியை வேண்டுபவர்கள் இந்த வரியை அடித்துவிடவும்). கண்ணைப் பறிக்கும் அவனது அழகைக் கண்டு யாரும் பெண் கொடுக்க வரவில்லை. கஷ்டப்பட்டு தன்னிலும் 40 வயது மூத்த பெண்ணைத் திருமாணம் செய்து கொண்டான். அவளோ அவனை மதிக்காமல் தினமும் இம்சித்து வந்தாள். இது பொறுக்காத மனு நீதிச் சோழன் ஒரு நாள் அவள் கனவில் வந்து 'இப்படியெல்லாம் செய்தால் நரகம்தான் கிடைக்கும்; ஆணுக்கு அடங்கியிருப்பதே பெண்ணின் கடமை' என்று எடுத்துரைத்தான். அவள் கனவிலேயே 'போடா மயிரு' என்று பதில் சொன்னாள். 'நான் தமிழச்சி; என் பண்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது' என்றும் அவள் சொன்னதாகக் கேள்வி.

அவள் தொந்தரவு தாங்காமல் விவாகரத்து கேட்டான். அவள் ஒப்புக் கொள்ளாமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (நீதி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்).

அடிவாங்கியதிலிருந்து பாண்டியன் முற்றிலும் மாறிப் போனான். சாத்வீக வழியே சிறந்தது என்று சன்னியாசி ஆக முடிவு செய்தான். ஆனால் சன்னியாசம் வாங்கப் போகும் வழியில் இன்னொரு பெண்ணைக் கண்டு அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

காட்சி

ஒருவன் சிறுகதை எழுத முயல்கிறான்.

இவ்வாறு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டவளின் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டான். இம்முறை குழந்தை பிறந்ததும் அவனே இறந்து விட்டான்.

இரண்டாவது இடைவெட்டு : படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்க, பல திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே போகிறேன். கதை சுவாரஸ்யம்தான் முக்கியம் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். கதையின் போக்கிலேயே கதாநாயகன் இறந்தாலும், தனியாக ஒரு வரி 'அவன் செத்துப் போனான்' என்று கொடுத்திருக்கிறேன். வாசகி, உனக்கு போரடித்தால் எந்த இடத்திலும் அதைப் படித்துவிட்டு கதையை முடித்துக் கொள்ளலாம்.

குறிப்பு : இப்படி நடுவில் அடிக்கடி இடைவெட்டு வருவது வாசக அனுபவத்தில் குறிக்கிடுவது போலாகும் என்பவர்களே - கதை எழுதுவதே வாசக அனுபவத்தில் குறிக்கிடுவதுதானே.! (இதை யார் சொன்னார்கள் என்பது தெரியவில்லை. தெரியப்படுத்துபவர்களுக்கு சிவாஜி பட டீவிடி இலவசப் பரிசு. போட்டியில் கலந்து கொள்ள கடைசி தினம் : 24.12.2007).
அவனது சமாதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது : 'பிறந்தது கிமு 989; இறந்தது கிபி 2095. இந்த முப்பத்து மூன்று வயதில் சாதிக்க நினைத்ததையெல்லாம் சாதித்துவிட்டு உள்ளே உறங்குகின்றான் கும்பகர்ணன்'.

பாண்டியனின் மொழிப் பற்று அலாதியானது. தொலைக்காட்சியில் இந்தி நிகழ்ச்சிகள் வரும்போது அணைத்துவிடுவான். மூன்றாந்தரமான இந்தி நிகழ்ச்சிகளுக்கு மூன்றாந்தரமான தமிழ் நிகழ்ச்சிகளே பரவாயில்லை என்பது அவன் கட்சி. தர நிர்ணயம் ஒவ்வொருவர் அடிமனத்திலும் இருப்பது; அதை மாற்ற முடியாது என்று தன்னிலையைக் கரைத்தழிக்க விரும்பும் பின் அமைப்பியல்வாதிகளுக்குச் சொன்னான்.

தன்னுடைய கையைச் சுழற்றி வீசினான். அது சிறகாய் மாறி, வர்ணப் பறவையானது. திடீரென்று கழுகாய் உருமாறி அவனைத் கொத்த ஆரம்பித்தது. கழுகின் மூக்கைப் பிடித்துத் தரையில் அடித்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்குக் கையில் கட்டுடன் அலைவதைப் பார்க்க முடிந்தது. கேட்டதற்கு, முன்னோர்கள் வைத்த வினையை அவன் அறுவடை செய்ததாகவும், அதற்கு நிவாரணம் தேடிக் கொண்டதாகவும் சொன்னான். மக்கள் நம்பி, அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டனர்.

இடைவெட்டு : கடந்த இரண்டு பத்திகளும் அலுப்பு தட்டுகிறது என்று சொல்பவர்களுக்கு : இது போர்ஹே உத்தி. எந்நேரமும் வாசகனை ஏமாற்றி இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

காலைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன். எதிரே கடல். தூரத்திலிருந்து பெரிதாக வரும் அலை ஓய்ந்து திரும்பும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் திரும்பினால்.....

(தொடரும்)
(கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு பதிவிட்ட கதையின் மீள் பதிவு இது).

பயம் அல்லது அலுப்பு

ஓடிப்போய்
சில்லறைதேடி
பயணச் சீட்டெடுத்து
நடைமேடை குதித்து
மோதவந்தவனை விலக்கி
தண்டவாளம் தாண்டி
சேருமுன்

கூக்குரலிட்டபடி
தடக் லடக்கென
வெகு நீளமாய்ச்
செல்கிறது
ரயில் வண்டி

'சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்' என்ற வரியைச் சேர்த்து முடித்தால் இது சோகக் கவிதையாகிவிடக்கூடுமென்பதால் மேற்கண்ட வரிகளோடு கவிதை முற்றுப் பெறுகிறது. 'அடுத்த ரயில் பிடித்து வீட்டிற்குச் சென்றான்' என நீங்கள் படித்துமுடித்துவிட்டு உங்கள் பணிகளைத் தொடரலாம் அல்லது

கால்மணிநேரம் தாமதமாய்
அடுத்த ரயிலில்
வீடடைந்தால்
கோட்டை விட்டிருந்தேன்
சில துப்பாக்கி வெடிச் சத்தங்களை

என வாசித்தும் இன்புறலாம்.

ஒரு வருடம், அறிமுகம் & மும்பை

இன்று மதியம்தான் கவனித்தேன், நான் வலைப்பதிவு எழுதத் துவங்கி ஓராண்டு ஆகிவிட்டதை. முதலில் பதிவிட்டது 29/11/2007ல். இத்துடன் சேர்த்து 150 இடுகைகள். என்னளவில் இது பெரிய விஷயம்.

பதிவிட்டதில் மிகப் பெரும்பாலும் கவிதைகளே (அதிலும் பல கவிதைகள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவை). முதலில் அறிமுக அளவில் அ-கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு எதிர்-கவிதைகளும் பதிவிட்டிருக்கிறேன்.

இதுவரை 1,11,000ற்கும் மேற்பட்ட பக்கங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும், எனக்குத் தொடர்புச் சுட்டி கொடுத்துள்ளவர்களுக்கும் என் நன்றிகள். போலவே தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் எழுதுவதைக் கொஞ்ச காலம் நிறுத்திவைக்கலாமா எனத் தோன்றியது (இப்போதும் மனதின் ஓரத்தில் அந்த எண்ணம் இருக்கிறது). தொடர்ந்து வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருப்பதில் ஏனோ ஒருவித ஆயாச உணர்ச்சி.

கடந்த 18 வருடங்களாக என்னை மிகவும் ஈர்ப்பவை : வாசிப்பு, மது & ஸெக்ஸ். இப்போது - கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து மறுபடி - எழுதுவதும் சேர்ந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சியே. இந்த ஒரு வருட காலத்தில் சிலநாட்கள் தவிர்த்து அனேக நாட்கள் ஏதாவது கிறுக்கியே வந்திருக்கிறேன் (பதிவில் ஏற்றாவிட்டாலும்!).

எழுதும்முறையிலும் கொஞ்சம் மாற்றம். முதலில் பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் இப்போது நேரடியாக கணினியில் எழுதுகிறேன். அகால வேளைகளில் ஏதாவது எழுதத் தோன்றினால் மட்டுமே தாளில் எழுதுவது.

திரும்பிப் பார்க்கையில், செய்ய நினைத்து முடிக்காமல் விட்ட விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காமக் கதைகள் தொடரை முடிக்க வேண்டும் (மூன்று கதைகள் கையிருப்பில் எழுதி வைத்திருந்தாலும் செப்பனிட மனம் ஒட்டவில்லை). அதிகம் அறியப்படாத சிறுபத்திரிகைகள் என ஒன்றை ஆரம்பித்து, ஒரு பதிவுடனேயே நின்றுபோனதைத் தொடரவேண்டும். சோம்பேறித்தனம் ஆட்கொள்ளாமல் இருந்தால் இதையெல்லாம் செய்யவேண்டும்.

அவ்வப்போது நான் வலைப்பதிவில் வாசிக்கும் சுவாரசிய எழுத்துகளை அறிமுகம் என்ற அளவில் செய்யவேண்டும் என்பது என் ஆசை. இதற்குமுன்பு நான்கு பதிவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

சமீபமாக நான் வாசிப்பதில் கே ரவிஷங்கர் (http://www.raviaditya.blogspot.com/) என்னைக் கவர்கிறார். கவிதைகள், ஹைகூ, கதைகள் எனக் கலந்துகட்டி எழுதுகிறார். வித்தியாசமாக கவிதைகள் எழுதுகிறார். சுஜாதா தாக்கம் அதிகம் தெரிவதைக் குறைத்துக் கொண்டால் நல்லது (இது இங்கு பலரிடமும் நான் பார்ப்பதுதான்).

கடைசியாக : இணையம் என்பது கட்டற்ற வெளிதான். ஆனால் மும்பையில் நடந்த தீவிரவாதக் கொலைகளைப் பற்றி எழுதும்போதாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு எழுதினால் நலம். வெறுப்பை உமிழும் எழுத்துகளைப் பார்க்கையில் பயமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது.