இந்தப் பதிவு சாருவின் கடிதமும் பின் நவீனத்துவமும் என்ற செல்வேந்திரன் பதிவைப் படித்ததும் எழுதியது. பிறகு எதற்கு வேண்டாமென்று பதிவிடவில்லை. ஆனால் இன்றைய அவரது இன்னொரு பதிவைப் படித்ததும் - அடக்க மாட்டாமல் இதை வெளியிடுகிறேன்.
செல்வேந்திரன் உதிர்த்துக் கொண்டேயிருக்கிறார் பல முத்துகளை. அவற்றைப் படிக்கும்போது வரும் எரிச்சலைச் சொல்லி மாளாது. இவை சாம்பிளுக்கு மட்டும் :
சாருவின் எழுத்துகளைக் காப்பி அடிக்கிறார் லக்கி. சாருவின் ஸ்டைல் இருக்கிறது லக்கியின் எழுத்துகளில்.
அட கிரகமே. இவர் சாரு நிவேதிதாவின் எழுத்துகளைப் படித்திருக்கிறாரா என்பதே எனக்கு சம்சயமாக இருக்கிறது. சுவாரசியம் என்பது ஒன்றே இருவரின் எழுத்துகளில் இருக்கும் பொது அம்சம். அப்படிப் பார்த்தால் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துகள் கூடத்தான் படிக்க சுவாரசியமாயிருக்கும். அதற்கென்ன செய்வதாம்?
பாலியல் / செக்ஸ் எழுத்துகளை எல்லாம் இங்கே இணையத்தில் சாருவின் எழுத்துகள் என்று தடாலடியாகச் சொல்லிவிடுகிறார்கள் (என்னுடைய கதைகளுக்கும் அப்படிப்பட்ட விமர்சனத் திட்டுகள் வந்திருக்கின்றன). காரணம் என்ன - சிம்பிள் - இவர்கள் படித்தது சாரு நிவேதிதா மட்டும்தான் - அதுவும் இணையத்தில் அவர் எழுதியதை மட்டுமே. குபரா, திஜாவின் அம்மா வந்தாள், ஜெயகாந்தனின் ரிஷி மூலம், கரிச்சான் குஞ்சின் பசித்த மானிடம் தொடங்கி சமீபத்திய ஜேபி சாணக்யா, வா மு கோமு வரை எழுதுவது என்னவாம்?
ரமேஷ் வைத்யாவின் கவிதைத் தொகுப்பு தமிழில் வந்த பத்து சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று.
இதைப் படித்ததும் தோன்றுவது, இவருக்குக் கவிதையும் தெரியவில்லை ஒரு கண்றாவியும் தெரியவில்லை என்பதுதான். (ங்கொய்யால கொடுத்த காசுக்கு மேல கூவுறானே எனச் சிலர் சொல்லக்கூடும்!).
செல்வேந்திரனுக்கு கோயமுத்தூர் வட்டார இலக்கியத்தை முதலில் ஆரம்பித்தது லதானந்த், நாசரேத்தோ நாங்குனேரியோ அல்லது என்ன எழவோ என்றால் ஒரே இலக்கியவாதி ஆசிஃப் அண்ணாச்சி, அவ்வளவுதான் (நாங்க எங்கய்யா இலக்கியம் எழுதினோம் என்று அவர்கள் சண்டைக்கு வருவார்களோ என பயமாயிருக்கிறது!). திருப்பூருக்குப் பரிசலையும், ஈரோட்டிற்கு வால்பையனையும், ஹைதராபாத்திற்கு கார்க்கியையும் ஏன் வாட்டார மொழி இலக்கியவாதிகளாக அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை. அவர்களும் இவரது நண்பர்கள்தானே!
(இங்கே இடைவெட்டாக கார்க்கியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் சாரு நிவேதிதா எழுதுவதை உல்ட்டா செய்து நக்கல் அடிக்கிறார். அப்படிச் செய்வது மிகச் சுலபாமனது, யாருடைய எழுத்துகளை வேண்டுமானாலும் - இவரது எழுதுவதும் சேர்த்தி - அப்படி எளிதாகச் செய்துவிடலாம். அதற்கு இங்கு வேறு பெயர்கூடச் சொல்கிறார்கள் : எதிர் - கவுஜ. கார்க்கியின் எழுத்துகளின் மதிப்பு அவ்வளவுதான்!).
அப்போது ஆர் ஷண்முகசுந்தரம், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், அசோகமித்திரன் எல்லாம் என்ன ஆனார்கள்? காரணம் அவர்களை இவர் படித்ததில்லை, அல்லது இவரது எழுத்துகளைப் படிப்பவர்கள் அவர்களைப் படித்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை!
எல்லாம் போக, வட்டார மொழிநடை என்று சொல்லும்போது, யாருடைய வட்டார மொழி என்ற கேள்வியும் கேட்கப்பட்டாக வேண்டும். கோயமுத்தூரின் வட்டார வழக்கு என்பது கவுண்டர்களின் வட்டார வழக்காகவும், திருநெல்வேலியின் வட்டார வழக்கு என்பது பிள்ளைமார்களின் வட்டார வழக்காகவும்தான் இருந்து வருகிறதேயன்றி, அங்கிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் மொழியாக இருப்பதில்லை. இதற்கு முன்பே சிலர் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பியும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடித்து ஆடுகிறார் செல்வேந்திரன்.
ஆனந்த விகடனின் வந்த கவிதைகளை வேறு காரணங்களுக்காகச் சிலர் பாராட்டலாம். ஆனால் என்னுடைய கேள்வி, சுகுமாரன் போன்றவர்களின் பெயர்களை நேம் டிராப்பிங் செய்பவர் எப்படி அம்மாதிரியான கவிதைகளை எழுதி வெளியிட்டு, பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்?
தெருப் பொறுக்கி எழுத்தாளன் எனச் சொல்வது அல்லது தூ என்று காரி உமிழ்வதெல்லாம் அயோக்கியத்தனம்.
பின் நவீனத்துவம், புதுமைப் பித்தன், ரமேஷ் பிரேம், சில சிறு பத்திரிகைப் பெயர்கள் என அங்கங்கே பொன் தூவலாய்த் தூவிச் செல்லும் செல்வேந்திரன் அடுத்து பிரபலமாக ரஜினிகாந்த்தை வம்புக்கு இழுக்கலாம். இல்லை, இலக்கிய தாக்கத்தோடு கூடிய பிராபல்யம் வேண்டுமென்றால் ஜெயமோகனையோ (அவர்தான் இணையத்தில் எழுதுகிறார் என்பதால் ஈசி!) வா மு கோமுவையோ ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடலாம். வேறு என்ன செய்யலாம்!
கார்காலக் குறிப்புகள் - 59
3 days ago