குடி சிலருக்குப் பிரச்சனையாயிருக்கலாம். ஆனால் எனக்குக் குடிக்கும் இடம் பிரச்சனையாயிருக்கிறது.
யாராவது பேசினால் பதிலுக்குப் பேசுவது என்னுடைய வழக்கம். இது எல்லாருக்கும் பொதுவானதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவே சில சமயங்களில் என்னைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.
சுங்க இலாகா அலுவலகம் அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு (அரசு சாராய வியாபரத்தை கையிலெடுக்குமுன் அதன் பெயர் சதீஷ் வைன்ஸ்) தினமும் செல்வது என்னுடைய வழக்கம். இது பல வருடப் பழக்கம். அங்கு கொஞ்சம் சுமாராயிருக்கும் சூழலும் என்னுடைய அலுவலகம் அருகிலிருப்பதாலும் நானே ஏற்படுத்திக் கொண்ட வழக்கம்.
ஒரு பழக்கத்தை ஆரம்பித்து விட்டால் பிறகு அதை மாற்றுவது கடினமாயிருக்கிறது. பாரிமுனையில் சதீஷ் வைன்ஸ் என்றால் அம்பத்தூரில் லக்ஷ்மி வைன்ஸ். சிகரெட், பத்திரிகைகள் வாங்குவதுகூட ஒரே கடையில்தான். செக்கு மாட்டைப் போல் தடம் தவறாமல் அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
தினமும் ஒரே இடத்தில் குடிப்பதால் சிலருடன் முகப் பழக்கம் வந்துவிடும். நட்பாகச் சிரிப்பார்கள். தீப்பெட்டி, சிகரெட் மாற்றிக் கொள்வதும் நடக்கும்.
ரம்முடன் கோலா கலந்து குடிக்கும் பழக்கமுடையவன் நான். அதாவது தண்ணீரோ அல்லது சோடாவோ சேர்க்காமல் முழுக்க முழுக்க கோலா. இல்லாவிட்டால் குடி தொண்டையில் இறங்காது, உமட்டிக் கொண்டு வரும். ஸ்மர்னாஃப் வோட்கா என்றாலும் கறுப்பு நாய் ஸ்காட்ச் விஸ்கியே ஆனாலும் செவன் அப் இல்லாமல் இறங்காது எனக்கு. அதனால், முழுக்க பெப்ஸியோ கோக்கோ விட்டுக் கொண்டு ரம்மின் வாசனை துளிக்கூடத் தெரியாதபடி குடிப்பது என்னுடைய பழக்கம். மதுவின் வாசம் எனக்குப் பிடிக்காது என்றாலும், குடித்தபின் இருக்கும் மனநிலை பிடிக்கும் என்பதால் கண்றாவி குடியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரையில்.
என்னுடைய இந்தப் பழக்கம் சிலருக்கு உறுத்தலாயிருக்கும் போல. அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒருவர் என்னைத் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தார். குடி கூடப் பரவாயில்லையாம், பெப்ஸி / கோக்தான் ஆகக் கெடுதலாம்.
‘பழக்கமாகிடுச்சுங்க, மாத்த முடியல’
‘சரி, மாத்திக்கப் பாக்கறேங்க’
‘இல்லாட்டி குடிக்க முடியாது’
‘ரம்மை விடவா கோலா கெடுதல்’
என்று பலவாறு பதில் சொல்லிப் பார்த்தும் மனிதர் விடுவதாயில்லை.
நல்ல வேளையாக அவர் என்னைத் தினமும் பார்ப்பதில்லை. இல்லாவிட்டால், கடையையே மாற்றிக் கொண்டு எப்போதோ போயிருப்பேன். அவரிடமே நீங்கள் பேசுவது பிடிக்கவில்லை என்று சொல்லலாம்தான். ஆனால் சாதாரணமாகவே நான் யார் முகத்தையும் சுருங்கச் செய்ய மாட்டேன். என்னளவில் லலிதமான பழக்கங்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய நண்பர்களானாலும் அவர்கள் செய்யும் அசூயையான காரியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் காட்ட மாட்டேன்.
அலுவலக விஷயமாக பெங்களூர் செல்லும்போது உடன் பணிபுரியும் கோபால் வருவான். குடிக்கும்போது திராட்சைப் பழங்களை மென்றுவிட்டு அங்கேயே கொட்டைகளைத் துப்புவான். பாத்ரூமின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கம்மோடில் ஒன்றுக்கிருக்கும் சத்தம் கேட்கும். பேசாமல் தலையைத் திருப்பிக் கொண்டோ அல்லது வராண்டாவிற்கோ வந்துவிடுவேன். வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டேன்.
இதுகூடப் பரவாயில்லை, அலுவலக உணவு மேஜையில் முருங்கையைப் போட்டு கடித்து மென்று (அப்போது பசு மாட்டின் அசையும் அடி வாய்தான் ஞாபகம் வரும்) தட்டிற்கு அருகிலேயே துப்புவான் உதயா. நைஸாகத் தலையைக் குனிந்து கொள்வேன்.
(இப்படி என் கதைல நான் நல்லவன் நான் நல்லவன்னு நானே சொல்லிக்கறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யுது, ஆனாலும் எல்லாரும் பண்றதுதானே இது)
பழகிய நண்பர்களிடமே இப்படித்தான் என்பதால் இவரிடம் எப்படி நேரடியாகச் சொல்ல. சில சமயம் அவர் பேசுவதைக் கேட்காதது மாதிரி தலைத் திருப்பி வெளியில் பராக்குப் பார்ப்பேன். தொடர்ந்து அறுத்தால், ம்ம் என்று தலையைக் குனிந்து கொள்வேன்.
இவரிடமிருந்து தப்பிக்க அவர் தலையைப் பார்த்தாலே தினசரியை (Economic Times) பிரித்துப் படிப்பது மாதிரி பாவ்லா செய்ய ஆரம்பித்தேன். மனிதர் விடுவாரா... சப்ளையரிடம் பேச பத்திரிகையைத் தாழ்த்தினால், அந்த இடைவெளியில் பிடித்துக் கொண்டு விடுவார்... ‘பாஸ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ் பெப்ஸி வேணாமே...’
’நீங்க குடிங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா தயவுசெஞ்சு தண்ணியோ இல்ல சோடோவோ மிக்ஸ் பண்ணிக்குங்க.. பாருங்க.. நான் அப்படித்தான் குடிக்கறேன்’
‘அடேய் நாதாறி, நான் என்ன குடிச்சா உனக்கு என்னடா...’ என்று கத்த நினைப்பேன். போலியான மரியாதை காட்டித் தொலைய வேண்டியிருக்கிறது சாராயக் கடைகளிலும். மேலும், மேல வேறு சொல்லியிருக்கிறேன் என்னுடைய நற்குணத்தை.
வெளியில் அரை லிட்டர் பெப்ஸி விலை 20 ரூபாய். கோக் விலை 22 ரூபாய். இது வெளியில்தான். டாஸ்மாக் பாரில் பெப்ஸி விலை 28 ரூபாய். ஒரு க்வார்ட்டருக்கு அரை லிட்டர் பெப்ஸி அல்லது கோக் வேண்டும் எனக்கு. நிறைய டூப்ளிகேட் வேறு பாரில் ஓடும். அந்த எரிச்சலில் நான் இருக்க, இவர் வேறு ரம்பம்!
கொஞ்சம் கொஞ்சமாக அன்பரின் தொல்லை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மண்டையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் என் நினைவெல்லாம் ஒரே பெப்ஸி மயம். ஒரு மனிதன் எதற்காகக் குடிப்பது - கனவுகளற்ற தூக்கத்திற்காககவும்தானே... ஆனால் எனக்கோ கனவில் கூட அரை லிட்டர் பெப்ஸி பாட்டில்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்குமளவிற்கு சங்கடப் பட்டேன்.
அவரைப் பார்ப்பது வாரத்திற்கு ஒரு முறைதான் என்பதாலும், அலுவலகத்தின் அருகில் வேறு எந்த நல்ல டாஸ்மாக் பார் இல்லை என்பதாலும், பெர்மிட் ரூமில் போய்க் குடித்தால் பாக்கெட் தாங்காது என்பதாலும், எழவு அதே பாருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
நேற்று மறுபடியும் அந்த ஆசாமியைச் சந்தித்தேன். மறுபடியும் அதே புராணம்... இப்போது கூடுதலாக கோக், பெப்ஸி பற்றி மின்னஞ்சலில் எப்போதோ சுற்றுக்கு வந்த விஷயங்களைச் சொல்லிப் பயமுறுத்தினார். கழிவறைகளைச் சுத்தம் செய்ய உபயோகிக்கலாமாம் கோக் மற்றும் பெப்ஸியை. அந்த அளவிற்கு அமிலமானது உங்கள் வயிற்றை என்ன செய்யும் எனக் கேள்வி எழுப்பினார். எனக்கு வயிற்றை வலிப்பது மாதிரி தோன்றியது. மறுபடி மறுபடி தண்ணீரோ அல்லது சோடாவோ கலந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்.
எழவு, பெயர்கூடத் தெரியாத ஒருவர் நம்மை இப்படி இம்சிப்பதா?
நிச்சயம் நான் ஒரு கொலைகாரனாகத்தான் ஆகப் போகிறேன்.
உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் - நான் சிறை செல்வதைத் தவிர்க்க என் அலுவலகத்தின் அருகில் உள்ள, அந்த ஆசாமி வராத, கொஞ்சம் உருப்படியான டாஸ்மாக் பாரை யாராவது தெரிவியுங்களேன்.