என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது
யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது
வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து
நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை
நண்பர்களே கிடையாது எனக்கு -
அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை
கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்
நேரம் பற்றிய போதமின்றி
குடித்துக் கொண்டிருக்கலாம்
என்னுடைய உளறல்களை
யாரும் கேட்டுவிடாதபடி
எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு
வசதியான செவ்வக மேஜை
அதன் மேல் சாம்பல் கிண்ணம்
கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
சுருண்டு கிடக்கலாம்
தூசி படிந்த புத்தகங்கள்
அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி
என் அழகையோ அழகின்மையையோ காட்ட
சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது
சூரியனைப் பார்க்காத என் உடம்பு
இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்
உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள
தேவையாயிருக்கிறது இந்த அறை
பனிக்காலத் தனிமை - 02
5 days ago