சிறு வயதுப் பேனா

காணாமல் போக்கியாகிவிட்டது
சிறு வயதுப் பேனாவை
அற்புதமான பேனா அது
விரல்களுக்கேற்ற கனபரிமாணம் உடையது
தாளில் வழுக்கிக் கொண்டு ஓடும் அழகே தனி
என் முக்கிய கணங்களில் உடனிருந்திருக்கிறது
பத்தாவது பரிட்சைகூட அதில்தான் எழுதிய ஞாபகம்
இலக்கியத்தின் வீச்சை
நட்பின் வகசிப்பை
ப்ரியமானவர்களின் ஆதுரத்தை
என எல்லாவற்றையும் அதில் கண்டிருக்கிறேன்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இப்போது வேறு பேனா வந்து விட்டபோதும்
சிறுவயதுப் பேனாவை ஏனோ மறக்க முடியவில்லை

காணாமல் போன மொழி

உனக்கும் எனக்குமான
இடைவெளி
அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
மௌனத்தை
உடைத்து கொண்டு
வெளிக் கிளம்பிய
வார்த்தைகள் வஞ்சித்து விட்டன
அலுவலகக் கடித மொழி
சூழ்ந்து கொண்டு
என் மொழியை
விரட்டி விட்டது
வார்த்தைகளற்ற வனாந்தரத்தில்
வசித்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான
மொழியின்மையோடு
கணக்குப் போட்டு
காய் நகர்த்துகிறாய்
போதும் போதுமென்றாலும்
போதுமே போதுமா
எல்லாவற்றிலிருந்தும்
வெளிவர முடியுமென்றிருந்த
இறுமாப்பு சிதைந்து விட்டது
இருளோடு செய்யும்
யுத்தம் போல் இருக்கிறது
இப்போதென் வாழ்வு
குடிகாரனின் புலம்பல்களாய்ச்
சிறுத்துப் போன
என் மொழியை
மீட்டெடுப்பேன்
இப்போதைக்கு வணக்கம்

நகுலனும் நானும்

எல்லாம் நடந்து கொண்டிருந்த
யாருமில்லா பிரதேசத்தில்
அமர்ந்திருந்தவன் புத்தகத்தில்
சுசீலாவையும் ராமச்சந்திரனையும்
பார்த்தவாறிருந்தான்
முன் பின்னிருந்த
பக்கங்களில்
மறைந்து போன நவீனன்
பென்சிலைச் சீவிக் கொண்டிருந்தான்
யார் தலையையோ சீவுவது மாதிரி
கையில் பிஜாய்ஸ் பிராந்திக் குப்பியை
ஆட்டிக் கொண்டிருந்தான்
காலக் கிழவனொருவன்
வந்த வழியும்
கேட்ட செய்தியும்
நான் திரும்பிப் பார்க்க
அந்த மஞ்சள் நிறப் பூனை
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது
சாக மட்டுமே தெரிந்த
நகுலன் எழுதிக் கொண்டிருக்கிறான்
எல்லாவற்றையும்
நான் சரி
நான் மாத்திரம்
சரியே சரி

விரும்பியதும் வாய்த்ததும்

பெயர்களற்ற பெருவெளியில்
பயணம் செய்ய விரும்பியவன்
திரிந்து கொண்டிருக்கிறான்
பாலைவன மணலில் பாதம் புதையப் புதைய
உலகின் ஆகப்பெரிய நாவலை
எழுதத் துவங்கியவன்
பத்திரிகைகளின் தீனிக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான்
விகடத் துணுக்குகளையும் ஒரு பக்கக் கதைகளையும்
இசையின் உன்னதத்தைத் தேடிப் புறப்பட்டவனின்
காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது
ஆபாச சினிமாப் பாடல்களின் இரைச்சல்
மகிழ்ச்சிக்காகவே வேலை என நினைத்தவன்
அடிமையாய்க் கிடக்கிறான் குமாஸ்தாவாக
சும்மா இருக்க விரும்பியவன்
செய்து கொண்டிருக்கிறான்
அதையும் இதையும் எல்லாவற்றையும்