நகுலன் கவிதைகள்

http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html பதிவில் சொல்லியதைப் போல இந்த இடுகையில் சில நகுலன் கவிதைகள் :

எல்லைகள்

அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான். ஒன்றிலும்
நிச்சயமில்லாத மனிதர்கள், அல்குலின்
அசைவுகள், “சுபாவஹத்தியை”
விழையும் மனதின் பரபரப்பைத்
தூண்டிவிடும் ஸ்தாபனங்கள்
சில்லறை சில்லறையாகத் தன்
னை இழப்பதால் வந்து சேரும்
காப்புகள். காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப - சிதிலங்கள், இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் - இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்

அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

அலைகள்

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது


வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி.
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்துவிட்டார்கள். எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.


சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு


சந்தை

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”


வரையறை

தலையும் வாலும்
இல்லாத பிழைப்பு
என்று
சொல்லிச் சிரித்தார்
சச்சிதானந்தம் பிள்ளை
கேட்டு நின்றவனுக்கு
ஒன்றும் புரியவில்லை


இவைகள் (2)

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு


கனல் (2)

ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன் கண்கள்
என்
உன்மத்த வேகம்


வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு


நான் (2)

நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன

இரண்டு மூன்று வரிக் கவிதைகள் :

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?
அதுவும் உன் கைப்பாவை

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் என்ற தலைப்பில் இருக்கும் 10 கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை. இடமின்மை காரணமாக இங்கு பதியவில்லை.

கடைசியாக....

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

பூம் பூம் ஷக்கலக்க பைத்தியக்காரன்

பைத்தியக்காரன் பதிவைப் படித்ததும் சாரு ஒரு ஹிட்லரா என்ற கேள்வியெல்லாம் எனக்கு எழவில்லை. எதற்காக அந்தப் பதிவு என்றுதான் தோன்றியது.

அதற்காகச் சிலர் கேட்டது போல் முதல் பத்தியை நீக்கச் சொல்லப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் மொத்தப் பதிவுமே கிசுகிசுக்களின் அடிப்படையில் எழுதப் பட்டதுதான். யார் அலெக்ஸ், யார் விஷால் என்பதைத் தெரிந்து கொண்டதைத் தவிர அதில் பெரிதாக வேறொன்றுமில்லை.

அந்த முதல் பத்திகூட சிறுபத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுவாக இருந்ததைத்தான் பைத்தியக்காரன் எழுதியிருக்கிறார். சாருவைப் பற்றிய சமீபத்திய வலையுலக (காமரூபக் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது வந்த) கிசுகிசுக்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாரோ தெரியவில்லை.

இதற்கு மாற்றாக நானும் மானாவரியாக கிசுகிசுக்களை அடுக்கிச் செல்லலாம். ஆனால் படிப்பவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்பதோடு நானும் பைத்தியக்காரன் செய்யும் தவறையே செய்தவனாவேன். அதனால், விபரங்களின் அடிப்படையில் மட்டும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாரு படிப்பதேயில்லையாம். எப்படி ஐயா தெரியும் உங்களுக்கு? புதுமைப் பித்தன், நகுலன், ஜி நாகராஜனைக்கூட சாரு படித்தது இல்லையாம். அதற்கான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம். பக்கம் பக்கமாய்க் கிசுகிசுக்களை எழுதித் தள்ளும் உங்கள் விரல்கள் ஏன் அப்படிப்பட்ட ஆதாரங்களை மட்டும் எழுதாமல், எழுத வைத்துவிடாதீர்கள் எனக் கெஞ்ச வைக்கிறது?

அவர் புதுமைப் பித்தனின் பல கதைகளை விரிவாக விமர்சித்து - கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்கு - கட்டுரை எழுதியிருக்கிறார். உடனே இலக்கு கால இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் ஜீரோ டிகிரி இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் என ஆரம்பித்து விடாதீர்கள். இந்தப் பிரஸ்தாபக் கட்டுரை வெளியாது 2002 இறுதியில். போலவே ப சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றி மார்ச் 2003ல் எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய / லத்தீன் அமெரிக்க / அரேபிய எழுத்தாளர்களின் பெயர்களை (மட்டும்) சாரு உதிர்க்கிறாராம். மரியா வர்காஸ் யோசாவின் The Real Life of Alejandro Mayta, எல்ஃபிரெட் ஜெலனிக்கின் பியனோ டீச்சர், சார்லஸ் ப்யுகோவ்ஸ்க்கி, முகமது ஷூக்ரி பற்றியெல்லாம் விரிவாகவே சாரு எழுதியிருக்கிறார். இப்போது நான் கேட்கிறேன் - சாரு தமிழில்கூடப் படித்ததில்லை எனச் சொல்லும் நீங்கள் சாருவையே படித்ததில்லை என்று நான் சொல்ல முடியும்தானே?

அவருடைய வாசிப்பிற்கு அவரது எழுத்துகளே சாட்சி. அதை வைத்து நாம் உரையாடலாம். ஆனால் நீங்கள் அதையும் வேறு யாராவது எழுதிக் கொடுத்தது எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடக் கூடும். அதனாலேயே நான் அவரது ஆரம்ப கால எழுத்துகளை மேற்கோள் காட்டாமல் அவரது பிந்தைய - அதாவது 2002ற்குப் பிறகு எழுதிய விஷயங்களை மேலே எழுதியிருக்கிறேன். இல்லை, இவையும் வேறு யாராவது தவணை முறை நண்பர்கள் எழுதிக் கொடுப்பது என்று சொல்லிவிட்டால், தவணை முறையில் இல்லாமல் மொத்தமாகத் தீர்ந்தது விஷயம்.

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் & ஜீரோ டிகிரி பிரேம் ரமேஷ் எழுதியதாம்! ஆபிதீன், எக்ஸிஸ்டென்ஷியலிசம் நாவலில் ஒரு பத்தி தான் எழுதியதாகச் சொன்னதிலிருந்து, இதுவரை எனக்குத் தெரிந்து அந்த நாவல்களுக்கு ஆறு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது இப்போது வரைக்குமான கணக்குதான். நாளையேகூட இன்னும் சிலர் வந்து அந்நாவல்களை தாம்தான் எழுதினோம் என்று சொல்லக் கூடும். இதெல்லாம் என்னய்யா விவாதமா - இதெற்கெல்லாம் ஒருவனால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

(இடைவெட்டு : மாலதி மைத்ரி ஜீரோ டிகிரியை சாரு எழுதவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால் அந்நாவலை எடிட்டிங் செய்தது ரமேஷ்தான் என்று எழுதியிருக்கிறார். நாவலோ அல்லது கட்டுரையோ எழுதப்பட்டவுடன், அதற்கு எடிட்டிங் அவசியமாகிறது. அந்த எடிட்டிங் பணிக்குச் சிலர் உதவியிருக்கலாம். மேலை நாடுகளில் இது சர்வ சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக அந்தப் புத்தகத்தையே எழுதினது தான்தான் என்று சொன்னால் என்ன செய்ய?)

”ரோலான் பார்த் ரைட்டிங் டிகிரி ஜீரோ என்று எழுதியிருக்கிறார். அதனால் ஜீரோ டிகிரி என்று தலைப்பு வைத்தது சாருவாய் இருக்க முடியாது!” ஜீரோ டிகிரி எப்போது வந்தது? ரோலான் பார்த்தின் அந்தப் புத்தகம் வெளியானது 1953ல். தமிழிலேயே ஜீரோ டிகிரி வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பார்த், தெரிதா, ஃபூக்கோ எல்லாம் அறிமுகமாகிவிட்டார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை பைத்தியக்காரன்.

சாருவுக்கும் பின் நவீனத்திற்குமான தொடர்ப்பு எத்தகையது என்பதை பிரேம் ரமேஷை விடுங்கள், நீங்கள் எழுதுங்கள். நான் எதிர்வினையாற்றுகிறேன். சும்மா சாருவுக்கு பின் நவீனம் தெரியாது, அமைப்பியல் தெரியாது என்பதெல்லாம் ஹம்பக்.

அவருடைய கட்டுரைகளை யார் எழுதிக் கொடுத்தார்கள், யார் பிழை திருத்தினார்கள் (எழுதறவனே பிழையையும் கொஞ்சம் திருத்திக் கொடுத்துடக் கூடாதா!) என அதே கிசுகிசு பாணியில் சொல்லிச் செல்கிறீர்கள். நீங்கள் பெயர் சொல்லாமல் சொல்லும் அவர்களே இதை ஒத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

நீங்கள் பிரமிளுக்குச் சாரு எழுதிய குசு கடிதத்தையோ விமர்சன ஊழல்களில் பிரமிள் எழுதியதையோ சொல்வீர்களேயானால், பிரமிளைப் பற்றி சுந்தர ராமசாமி தொடங்கி அழகிய சிங்கர் வரை எழுதியிருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதும் யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய், எது புனைவு என்று ஒரு மயக்கம் ஏற்படலாம்! மட்டுமில்லாமல், எது உண்மை, எது பொய் என தீர்மானிக்க நாம் யார்?

சரி, சாருதான் இறந்த பிறகு பிரமிளையும் சுஜாதாவையும் பாராட்டுகிறார். ஜெயமோகன் என்ன செய்கிறார்? கமலாதாஸ் இறந்தவுடன் அவர் குரூபி, தன்னுடைய நிறைவேறாத காமத்தினால்தான் (பச்சையாகச் சொன்னால் படுக்க அலைந்தார் என எழுதியிருந்தார்!) எழுதினார் எனச் சொன்ன போது எங்கே போயிருந்தீர்கள். அப்போது உங்கள் அறச் சீற்றத்தை இப்படித்தான் காட்டினீர்களா?

விஷ்ணுபுரம்தான் முதலில் ஃபிரெஞ்சிற்குப் போக வேண்டுமாம்! உங்கள் மனச் சாய்வு தெளிவாகவே தெரிகிறது பைத்தியக்காரன். இப்போது சொல்கிறேன், பின் தொடரும் நிழலின் குரலைக்கூட ஒரு முறை கஷ்டப்பட்டு படித்து விட்டேன், ஆனால் விஷ்ணுபுரத்தை இவ்வளவு வருடங்களில் என்னால் 5 பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை! அவரது தலையணை புத்தகங்களின்மேல் ஒரு ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது.

அடுத்த கண்டுபிடிப்பு : ஜீரோ டிகிரி ஐரோப்பிய வடிவ பாணி நாவலாம், அதனால் ஃபிரென்சில் மொழிபெயர்த்தால் செல்லுபடியாகாதாம்! நாளையே நாவல் என்கிற வடிவமே மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதானே, அதனால் ஆங்கிலம், ஃபிரெஞ்சில் மொழிபெயர்க்கவே வேண்டாம் என்றுகூட நீங்கள் சொல்லக் கூடும் - அதற்குள் உங்கள் விருப்பப்படி விஷ்ணுபுரம் நாவலை ஃபிரெஞ்சில் மொழிபெயர்த்து விடட்டும்.

உங்களுக்கு ராசலீலாவில், ஜீரோ டிகிரியைப் போன்ற அடர்த்தியோ கட்டுடைப்போ தெரியவில்லை. அது உங்கள் அபிப்ராயம். ஆனால் எனக்கு ராசலீலா அவரது முந்தைய ஆக்கங்களை விட அதிகமாகப் பிடித்திருக்கிறது. இதெல்லாம் தனிப்பட்ட நபர்களின் கருத்து என்பதற்குமேல் ஒன்றுமில்லை. உடனேயே ஜீரோ டிகிரிவரை மற்றவர்கள் எழுதிக் கொடுத்தார்கள், பிறகு இந்த நிலைமை என்று சொன்னால் எப்படி?

சாரு எவ்வளவு மோசமானவர் என்பதைக் காட்ட நீங்கள் ஜீரோ டிகிரிக்குப் பிரச்சனை வந்தபோது ஜெமோதான் ஆதரித்தார் என்கிறீர்கள். இது என்னய்யா புதுக்கதை என்றால் ஜீரோ டிகிரி நாவலின் ஒரு பதிப்பில் வெளியான ஜெமோவின் 5 வரிக் கடிதமாம்! அந்தப் பதிப்பில் அவரது கடிதம் மட்டுமா வந்தது? பலர் அந்நாவலைப் பாராட்ட ஜெமோ செய்திருந்தது கோஷ்டி கானமாகத்தான் தெரிகிறது எனக்கு.

எழுத்தாளன் என்பவன் தன் புத்தகங்களை வெளியிட பல பதிப்பகங்களை அணுகுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் தன்னுடைய புத்தகங்களை வெளியிடாததால், தமிழினி வசந்தகுமாரை எங்கே குறிவைத்துத் தாக்கினார் சாரு? தமிழினியில் புத்தகங்கள் எழுதுவதால் ஜெமோ உயிர்மையை எதிர்க்கிறார் என்று எழுதினால் அது தமிழினியைத் தாக்குவதா? பண்பாட்டைப் பேசுதல் என்ற கட்டுரையில் மற்ற எல்லாப் பத்திரிகைகளையும் மட்டம் தட்டி தமிழினி, வார்த்தை போன்றவற்றை ஜெமோ தூக்கிப் பிடித்ததற்கான எதிர்வினை அது. மனதாரச் சொல்லுங்கள், உங்களுக்கு அந்தக் கட்டுரை ஏற்புடையதுதானா?

இரண்டாம் வகுப்பு டீச்சராக மாறி யாமம் வாசித்திருக்கிறீர்களா, அழகிய பெரியவன் வாசித்திருக்கிறீர்களா, அதிலிருந்து நான்கு வரிகளை மனப்பாடமாக ஒப்பியுங்கள் என்று கையில் பிரம்பெடுக்காதீர்கள். அசிங்கமாயிருக்கிறது.

மற்றபடி ஒரு புத்தகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் பெரிய தவறே இல்லை - இப்படி எவ்வளவு புத்தகங்களைப் பற்றி, எவ்வளவு சினிமாக்களைப் பற்றி வந்திருக்கிறது. என்னவோ தமிழ்கூறும் நல்லுலகமே சாரு சொல்லிவிட்டால் படிக்காமல் விட்டுவிடப் போகிறதா என்ன? அதற்கான எதிர்வினையையும் நாகார்ஜூனன் செய்துவிட்டார். எனக்கென்னவோ நீங்கள் அதற்காக உங்கள் பதிவை எழுதியது போல் தெரியவில்லை.

அமர்நாத்திற்கான பதிலில் பின் குறிப்பாக சாரு எழுதியது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் அவராவது பதில் சொல்ல வாய்ப்பிருக்கும் மனிதரைப் பற்றி எழுதுகிறார். ஆனால் ஜெமோ அந்த வாய்ப்பில்லாத இறந்து போனவர்களைப் பற்றி அவதூறு செய்கிறார். நீங்கள் ஜெமோவை விட்டுவிட்டு சாருவிற்கு மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினை செய்கிறீர்கள். உங்களின் இந்தத் தேர்வுதான் என்னை உறுத்துகிறது. இன்னொன்று, சிறுபத்திரிகைக்காரர்கள் என்றாலே சண்டை (மட்டுமே) போடுபவர்கள் என்பதாகச் சிலர் கட்டமைக்க முயல்கிறார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், எழுத்து காலம் முதற்கொண்டு, படிகள், பரிமாணம், கசடதபற, பிரக்ஞை, மீட்சி, கல்குதிரை, நிறப்பிரிகை ஈறாக தமிழில் பல விஷயங்கள் சாத்தியமானது சிறுபத்திரிகைகளால்தான் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதற்கு உங்களின் இந்தப் பதிவும் துணை போவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

நகுலன்

எவ்வளவு முறை வாசித்தாலும் இன்னும் இன்னும் என வாசிக்கத் தூண்டும் ஒரு கவிஞர் நகுலன் (மற்றும் பிரமிள் & விக்ரமாதித்யன்). இன்னும் யோசித்துப் பார்த்தால், கொஞ்சம் தடாலடிக்காகவே பிரமிளைப் பிடித்திருக்கிறது. எழுத்து / கவிதை சார்ந்து மட்டுமே எனக்குப் பிடித்தவர்களாக நகுலனையும் விக்ரமாதித்யனையுமே சொல்ல முடியுமென்று தோன்றுகிறது.

கவிதை பற்றிப் பேச்சு வந்தால் நகுலன் வராமல் இருக்க மாட்டார். அரட்டைப் பெட்டியிலோ மின்னஞ்சலிலோ நகுலனை நான் பரிந்துரைக்காத நண்பர்கள் மிகக் குறைவு!

என்னுடைய மனம் மொழியாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காட்சியைப் பார்த்தாலும் அதுவும் எனக்கு வார்த்தைகளாகவே நினைவில் படிந்திருக்கும். பல கவிஞர்களின் எண்ணற்ற கவிதைகளைப் படித்திருந்தாலும், நகுலன் நினைவிலிருப்பதுபோல் மற்ற கவிதைகள் இல்லை. நகுலனும் என்னுள்ளே வார்த்தைகளாகவே இருக்கிறார்.

வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
நாலாபுறமும் வார்த்தைகள்
சொல்லில் சிக்காது
சொல்லாமல் தீராது

என்ற வரிகளை எழுதியது நிச்சயமாக நகுலனாகவோ அல்லது விக்ரமாதித்யனாகவோதான் இருக்க வேண்டுமல்லவா. வார்த்தைகள் எனும் அடர்ந்த காட்டில் திக்குத் தெரியாமல் சிக்கித் தவிக்கும் பாலகன் நான்.

பல விஷயங்களை நகுலனுடன் சேர்த்தே என் மனம் நினைவில் வைத்திருக்கிறது. கல்குதிரை - நகுலன் சிறப்பிதழ், விருட்சம் - திருக்குறளை அடியொற்றிய நகுலன் கவிதைகள், கணையாழி - நகுலனின் சாயைகள் மற்றும் இன்னொரு கதை (சிமி, குமி, உமிக்கரி / நஞ்சு, குஞ்சு, மத்தங்காய் / மணிக்குட்டன், குணிக்குட்டன், கொழுவாளை என்ற அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட {ஆத்மாநாம்} கவிதை கொண்ட கதை), திருவனந்தபுரம் - நகுலனின் பாழடைந்த வீடு, என் வீட்டு பூனைக்குட்டி - நகுலனின் மஞ்சள் நிறப் பூனை, என்னுடைய சில கதைகள் - இப்படியாக, இப்படியாக... இந்த வலைப்பக்கத்தில் இடப்பக்கம் இருக்கும் 'வந்த வழி சென்ற காக்ஷி' கூட நகுலனின் பாதிப்பினால் எழுதப்பட்டதுதான்.

கடந்த 20 வருடங்களாக நகுலனை வாசித்து வருகிறேன். ஆனால் சட்டென்று நகுலன் என்றவுடன் நினைவிற்கு வருவது மிஸ்டிக்தன்மை மற்றும் சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல் (இந்தச் சொற்களை மந்திரம் போல் எவ்வளவு முறை சொல்லியிருப்பேன்!).

யார் தலையையோ சீவுவது போல பென்சிலைச் சீவிக்கொண்டிருந்தான் என ஒரு வரியில் வரும். மூச்சு நின்றால் பேச்சும் அடங்கும் என்று சொல்லும் இன்னொரு வரி. தாடி ஏன் வளர்க்கிறார் என ஒருவர் விளக்கும்போது தாடி ஏன் வளர்கிறது என்பதுதான் சுவையானது எனச் சொல்லிச் செல்லும் வேறொரு வரி. கடல் இருக்கும் வரை அலைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன் எனக் கேட்கும் பிறிதொரு கவிதை. எல்லாம் நடந்து கொண்டிருக்கும் யாருமில்லா பிரதேசத்தில் நகுலன் என்ன செய்து கொண்டிருப்பார்...?

நான் நகுலனின் ஆராதகன். அதற்காக, அவர் எழுதிய மூன்று, ஐந்தென்ற பழந்தமிழ் இலக்கியத்தைச் சார்ந்த கவிதைகளெல்லாம் எனக்குப் பிடிக்குமென்று நினைத்துவிடாதீர்கள். சாதாரணமாக எனக்கு மரபுக் கவிதைகள் என்றாலே அலர்ஜி. அதுவும் நகுலன் மாதிரியானவர்கள் செய்தால் இன்னும் அலர்ஜி. விலங்குச் சங்கிலி எனத் தெரிந்தும், அதை மாட்டிக் கொண்டும் நடக்கத் தெரியும் என்பதில் என்ன மகிழ்ச்சியோ.

சாலையில் ஒரு பார வண்டி நக்ஷத்ர ஒளியில் மெல்லச் செல்லும் என்ற வரிகளைப் படிக்கையில் மனதில் விரியும் ஓவியம்... இப்படிப்பட்ட கவிதைகளுக்காக நகுலன்மேல் காதலில் கசிந்துருகி அவர் படத்திற்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். சில வரிகளைப் படிக்கையில் செல்லமாகத் திட்டியுமிருக்கிறேன்.

அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் என்னை ஈர்க்கின்றன. தட்டச்சுகூட சுகம்தரக்கூடியதுதான் என்பது நகுலனின் வரிகளைத் தட்டச்சும்போதே எனக்குத் தெரிகின்றது.

நான் ஒரு மிகப் பெரிய வாயாடி - அதுவும் நகுலனைப் பற்றிப் பேச ஆரம்பித்தால். நகுலனைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம், அல்லது அவரது சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். நான் இரண்டாவதைத் தேர்வு செய்கிறேன்

மதத்தின் குரலாக இருந்த தமிழ்க் கவிதையை மனதின் குரலாக மாற்ற வேண்டுமென்று விரும்பிய நகுலனின் சில கவிதைகள் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

(நகுலனைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவு : http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_26.html)

கும்மாங் குத்துகள்

நண்பர் ஒருவர் அரட்டைப் பெட்டியில் வந்து உங்களைப் பத்தி கிசுகிசு வந்திருக்கு பார்த்தீங்களா என்றார். முதலில் பெருமையாகவே இருந்தது. அதை அடக்கிக் கொண்டு யார் எழுதியிருக்காங்கன்னு கேட்டேன். செல்வேந்திரன் என அவர் சொன்னதும் கொஞ்சம் பொசுக்கென்று போய்விட்டது. அந்தக் காமெடி பீஸா என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.

ஆனால் கிசுகிசு எழுதுவதற்குக்கூட ஒரு அடிப்படை நேர்மை வேண்டும். அதையெல்லாம் செல்வேந்திரனிடம் எதிர்பார்க்க முடியாது போல.

இதுதான் அவர் எழுதியிருந்தது :

/
நவீன இலக்கிய தாத்தா ஒருநாள் 'ஐம்பது கட்டுரைகளுக்கு மேல படிச்சிட்டேன். ஒண்ணுகூட ரசிக்கலை' எனச் சொல்ல 'ரசிக்கலன்னா ஏனய்யா ஐம்பது கட்டுரைகள். ஒன்றிரண்டோடு நிப்பாட்ட வேண்டியதுதானே என அந்த 'முந்திரிக்கொட்டை பதிவர்' சொல்ல...அதன்பிறகுதான் முத்துக்கள், குத்துக்கள் என கும்மாங்குத்து பதிவுகள் போட ஆரம்பித்தாராம் அந்த 'ஞான-ரிவர்'.

/

அந்தத் தாத்தா வேறு யாருமில்லை நான்தான்.

முதல்முறையாகச் சந்தித்தபோது நேர்ப்பேச்சில் சொன்னது அந்த 50 கட்டுரைகள் விஷயம். அந்த முந்திரிக் கொட்டை பதிவர் இப்போது பதிவில் எழுதியிருப்பது போல் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை - தலையைத் தலைய ஆட்டிக் கொண்டிருந்தார். இங்கு பதிவில் நக்கலடித்ததாய் எழுதியிருக்கிறார். அப்படி அவர் நக்கலே அடிக்காதபோது அதற்காகத் தான் நான் அந்தப் பதிவு எழுதியாதாகச் சொல்வது நேர்மையற்ற செயல்.

நான் சொல்வதில் சிலருக்கு நம்பிக்கையில்லாமலிருக்கலாம். எங்களுடைய அந்த நேர்ப்பேச்சுக்குப் பிறகு (நேர்ப்பேச்சின் போது மற்ற சில நண்பர்களும் இருந்தார்கள் என்றாலும் அவர்களை இதற்குள் இழுக்க எனக்கு விருப்பமில்லை) செல்வேந்திரனே எங்களுடைய அந்தச் சந்திப்பைப் பதிவு செய்திருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அதைப் படித்துப் பார்க்கலாம் :

/
'உங்களோட கட்டுரைகள் சுமார் நாற்பது, ஐம்பது படித்திருப்பேன். அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லை. எனக்குப் பிடிக்கவுமில்லை' என்ற முகத்திலடிக்கிற விமர்சன நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது.

/

http://selventhiran.blogspot.com/2009/04/blog-post_27.html

முதலில் இப்படி விமர்சன நேர்மை பிடித்ததாக எழுத வேண்டியது. பிறகு அவரது கருத்தை மறுத்து எழுதினேன் என்றவுடன் இவ்வாறு உள் நோக்கம் கற்பித்து எழுதுவது....

என்னுடைய அந்தப் பதிவிற்கான காரணங்களை நான் தெளிவாகவே முன்வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒருவர் அதை மறுக்கலாம். ஆனால் அதற்கு இப்படி இல்லாததை எல்லாம் இட்டுக்கட்டி உள்நோக்கம் கற்பித்து கிசுகிசுவாக்கத் தேவையில்லை.

அப்புறம், இந்தக் கும்மாங் குத்து விஷயம். என்னுடைய அந்தப் பதிவு சும்மா லேசான ஒரு தட்டுதான். அதற்கே அலறி அடித்து கிசுகிசு புண்ணாக்கில் போய் ஒளிந்து கொண்டு கம்பு சுழற்ற ஆரம்பித்துவிட்டார். இவரையெல்லாம் போயா கும்மாங் குத்து விடுவேன்! நோஞ்சான்களைப் போய் யாராவது குத்துவார்களா என்ன :)