நண்பர் பா ராஜாராம்

நேற்று இரவு 12 மணி வாக்கில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது பா ராஜாராமின் கவிதையொன்று தமிழ்மணத்தில் இருந்தது. ஏற்கனவே வாசித்தது போன்ற நினைவு.

என்னுடைய 20 வயதில் குமார்ஜியின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக தெய்வாவும் பா ராஜாராமும் பழக்கமானார்கள். வாரத்திற்கு இரண்டு முறை குமார்ஜிக்கும் பா ராஜாராமுக்கும் நீளமான கடிதங்களை எழுதுவது என் வழக்கம். பெரும்பாலும் படித்த புத்தகங்கள், கவிதைகள் தொடர்பாகத்தான் இருக்கும் கடிதங்கள். என்னிலும் 6 வயது மூத்தவர்கள் மூவரும் என்றாலும், அது துளியும் தெரியாமல் நட்புடன் பழகுவார்கள்.

1994ல் நான் ஒரு மன அழுத்தத்தில் இருந்தபோது (வேறு என்ன, எல்லாம் எழவெடுத்த காதல் தோல்விதான்), கிளம்பி வாடா சிவகங்கைக்கு என்றார். சிவகங்கைக்குப் போய் ஒரு நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்.

டிவிஎஸ் 50 வைத்திருந்தார். அதில்தான் ஊர் சுற்றுவது. அப்போது அந்த ஊரில் பார் வசதி கிடையாது என்பதால் அவரும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர். ஆஹா, தனி அறையெல்லாம் எடுத்திருக்கிறார்களே, சரியான செட்தான் என்று சந்தோஷப்பட்டால்... எல்லாருமே 60 எம் எல் அல்லது 90 எம் எல் பார்ட்டிகள்! (நுரைகளற்ற 90 மில்லிக்கான காசு இருந்தது பாக்கெட்டில் என்ற ராஜாராமின் கவிதை வரி இப்போது ஞாபகம் வருகிறது).

ராஜாராமின் வீடும், பின்னாலிருந்த அவரது அறையும், தெருக்களும், ரயில்வே ஸ்டேஷனும் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அந்தக் குடி அறையின் வாசலில் இருந்த பெட்டிக் கடையில் வாங்கிய கோலி சோடாவும் கலரும்கூட. இன்னொரு முறை கோலி கலர் கலந்து ரம் குடித்தால் அந்தப் பழைய வாசனையைக்கூட கண்டுகொள்வேன் என நினைக்கிறேன்.

நிறைய கடிதங்களும் எப்போதாவது தொலைபேசி அழைப்புகளுமாக எங்கள் நட்பு இருந்தது. ராஜாராம் பழகுவதற்கு மிகப் பிரியமானவர்.

அவ்வப்போது அவரது கவிதைகள் சிறுபத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. கணையாழியில் சில கவிதைகள் வந்திருக்கின்றன. சுபமங்களாவின் கடைசி இதழில் (கோமல் இறந்த பிறகு ஒரு இதழ் வந்தது - வண்ண நிலவனை ஆசிரியராகக் கொண்டு) நடுப்பக்கத்தில் இவரது கவிதை வந்த நினைவு.

நாங்கள் எழுதும் கவிதைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம். அதிகமும் இவரது கவிதைகளைப் பாராட்டியதில்லை நான். அது சரியில்லை, இது சரியில்லை என்று நொள்ளை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்.

அவ்வளவு அன்பான மனிதருடன் 1996க்குப் பிறகு திடீரென்று தொடர்பு அறுந்து போய்விட்டது. எவ்வளவு முயன்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது.

எப்போதாவது குமார்ஜியிடமோ தெய்வாவிடமோ பேச நேர்கையில் ராஜாராம் பற்றிய பேச்சு வராமல் இருக்காது!

நடுவில்தான் நேற்று வலைப்பதிவில் அவரது கவிதையைப் படித்தது, அவர்தான் என்று பின்னூட்டத்தில் உறுதி செய்து கொண்டது, பிறகு அலைபேசியில் வெகுநேரம் பேசி, கடிதம் எழுதி என....

குமார்ஜி எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. வாசிப்பதுகூட அதிகபட்சம் ஆனந்த விகடன்தான். தெய்வா எப்போதுமே எழுதுவதில்லை - படிப்பதோடு சரி. இப்போது சவுதியில் இருக்கும் ராஜாராம் திரும்ப எழுத வந்திருக்கிறார். வலைப்பதிவில் தன்னுடைய கவிதைகளைப் பதிய ஆரம்பித்திருக்கிறார்.

மாதிரிக்கு ஒரு கவிதை :

குழந்தைகள் தூங்கியபின்பு
விளக்கணைத்துவிட்டு
பேசிக்கொண்டிருக்கிறாள்
இவள்.
திறக்கப்படாத கோயிலின்
கதவில்,
சுவற்றில்,
விட்டத்தில்,
பட்டுக்கொள்ளாமல்
அனுமதிக்கப்பட்ட
எல்கைக்குள்
பறந்துகொண்டிருக்கிறது
வவ்வால்.

அவரது வலைப்பதிவு முகவரி : www.karuvelanizhal.blogspot.com. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கலாம்.

ராஜாராம் நேற்று சொன்னது போல தேடித் தேடியும் தொலைந்த நட்பு பிறகு சடாரென்று எதேச்சையாகக் கிடைப்பது உன்னதமான கணம்தான். மிக மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

24 comments:

பா.ராஜாராம் said...

சுந்தரா,
வெகு எளிதாக நாட்களை
கடத்தியுருக்கிறாய்,பின்னோக்கி!
விட்டு வந்தது எல்லாம் அங்கு
அப்படியே இருக்கிறது...என்ன,
அப்பா மட்டும் இல்லை.பதினைந்து
வருடத்திற்கு பிறகு நீங்கள் எல்லோரும்
திரும்ப கிடைத்தது போல்,அப்பாவும்
திரும்ப கிடைத்தால் வாழ்வு பூரணமாகிவிடும்.
பூரணமும் இல்லை,பூஜ்யமும் இல்லை..
வாழ்வு வாழ்வாகவே இருக்கிறது-எப்பவும்!
இல்லையா சுந்தரா...
இல்லையா குமரா...
இல்லையா தெய்வா...
இல்லையா ராஜா...

நர்சிம் said...

அறிமுகத்திற்கு நன்றி குருவே.

குப்பன்.யாஹூ said...

அறிமுகத்திற்கு நன்றி சுந்தர்.

குப்பன்_யாஹூ

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ராஜாராம், நர்சிம், குப்பன் யாஹூ... நன்றி.

ரவி said...

அட !!!

நேசமித்ரன் said...

நட்பு மீண்டதற்கு வாழ்த்துக்கள்
அவரை வாசித்து உள்ளேன் இதற்கு முன்பு

நந்தாகுமாரன் said...

பா ராஜாராம் கவிதைகள் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி - எனக்குப் பிடிக்கும் கவிஞர்கள் வரிசை கூடிக் கொண்டேயிருக்கிறது :)

Kumky said...

நட்பின் வட்டம் முழுமையடைந்தது போலிருக்கிறது.
கவிதை சொல்லாமல் சொல்லிச்செல்லும் அர்த்தங்கள் அற்புதம்.
உங்களுக்கெனவே அமைந்திருக்கிறது இது போன்ற நட்புக்கள்.காலத்தின் குறுக்கிடலுக்கு பின்னேயும்.

டாஸ்மாக் கடைகளில்,
அப்புறமாக வாங்கிய
நூல் கொண்டு நான்காய் அறுத்துத்தரப்பட்ட
மூன்றாவது முட்டைக்கு
காசு யார் கொடுப்பது என்ற தயக்கங்களுடன்
பேச்சை வளர்த்தியபடி
இங்கும் சில நட்பு..

தெய்வா said...

அற்புதமான நிகழ்வுகள்
திடீரென நீ அலைபேசியில் அழைத்த நிமிடம்....
ராஜாராமின் வலைத்தளத்தையும் கண்டு....
ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப சந்தோஷம்....

நன்றியை எப்படி பகிர்வது?

Ronin said...

"என்னிலும் 6 வயது மூத்தவர்கள் மூவரும் என்றாலும், அது துளியும் தெரியாமல் நட்புடன் பழகுவார்கள்."

For a person who writes about power so much, the stance about age seems surprising...Is 6 yrs a large enough age to be act unlike friends..

My dad who is 40 yrs older is a friend..There is not much in the world we have not talked abt..Many of my equal friends are above 15yrs older than me..

I understand this is a cultural context thing, but the statement seems awkward and misfit in this writing..

மாதவராஜ் said...

கவிதை, எவ்வளவு விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது.....!

யாத்ரா said...

இந்தப் பதிவு படித்து, நானும மிக மகிழ்ச்சியாய் உணர்ந்தேன், உடனே உங்களுடன் பேசியதில், அந்த மகிழ்ச்சி இன்னும் பல மடங்கானது, பகிர்வுக்கு மிக்க நன்றி.

லதானந்த் said...

நல்லதொரு அறிமுகம்! நன்றி சுந்தர்.

வால்பையன் said...

நண்பர் இன்னும் சிவகங்கையில் தான் இருக்கிறாரா?

சென்றால் சந்திக்க முடியுமா?

இரசிகை said...

nanbarkal meendum santhithathil yenakkum makizhchchi!!!

பிரவின்ஸ்கா said...

அறிமுகத்திற்கு மிக்க நன்றி

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

லிங்காபுரம் சிவா said...

//குழந்தைகள் தூங்கியபின்பு
விளக்கணைத்துவிட்டு
பேசிக்கொண்டிருக்கிறாள்
இவள்.
திறக்கப்படாத கோயிலின்
கதவில்,
சுவற்றில்,
விட்டத்தில்,
பட்டுக்கொள்ளாமல்
அனுமதிக்கப்பட்ட
எல்கைக்குள்
பறந்துகொண்டிருக்கிறது
வவ்வால்.//

கவித நல்லா இருக்கு.

வவ்வால்னு யத சொல்றாரு??

Unknown said...

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...
மிக நன்றாக இருந்தது---வாஹே குரு

ச.முத்துவேல் said...

வலைப்பூ எழுதுவதின் பயன்களில் இது ஒரு முக்கியமான சாதனை.எவ்வளவு நல்ல விசயம்!

இவ்ளோ சீனியரா அவரு? என்னோட ஒரு கவிதைக்குக்கூட பின்னூட்டம் போட்டிருந்தாரு.

அறிமுகத்திற்கு நன்றி குருவே.

Joe said...

பழைய நண்பருடன் பல வருடங்கள் பேசாமலிருந்து, திடீரென மீண்டும் தொடர்பு கொள்ளும் அந்த தருணம் உண்மையிலேயே அற்புதமானது தான்.

//
அதிகமும் இவரது கவிதைகளைப் பாராட்டியதில்லை நான். அது சரியில்லை, இது சரியில்லை என்று நொள்ளை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்.
//
பல வருஷமா இதே தான் வேலையோ?

கார்க்கிபவா said...

பதிவால் இப்படி ஒரு பயன்.. அருமை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

செந்தழல் ரவி, நேசமித்ரன், நந்தா, கும்க்கி, தெய்வா, ரானின், மாதவராஜ், யாத்ரா, லதானந்த், வால்பையன், இரசிகை, பிரவின்ஸ்கா, லிங்காபுரம் சிவா, வாஹே குரு, ச முத்துவேல், ஜோ, கார்க்கி... நன்றி.

தமிழ்நதி said...

அவரவர் சார்ந்த பழைய நினைவுகளைக் கிளறுவதாக இருந்திருக்கும் இந்தப் பதிவு.எட்டத்தில் விட்டு வந்தவற்றை எழுத்தாலாவது தொடும் எத்தனம் மாதிரி இருந்தது. சின்னதாய் ஒரு வலி. விபரிக்கத் தெரியவில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தமிழ்நதி.