உங்களுக்கு நடந்த கதை

இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே
- விக்ரமாதித்யன் -

இன்றைக்குச் சனிக் கிழமை. நீங்கள் மதுவருந்தும் நாள்.

இது உங்களுக்கு நடந்த விஷயம் என்பதால் உங்கள் பார்வையிலேயே எழுதுகிறேன். வசதிக்கென ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன் : இந்தக் கதையில் அடைப்புக் குறிக்குள் () வருவது உங்கள் மனம் நினைப்பது.

கதையைத் துவங்குமுன், உங்களைப் பற்றிய சில குறிப்புகள் :வயது 26. பெயர் அவ்வளவு முக்கியமில்லை; உயரம் 5'8”. சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறீர்கள். இரண்டு முறை காதலித்து, தோற்றிருக்கிறீர்கள். தற்சமயம் காதலி இல்லை; அது பற்றி சிறு வருத்தமுண்டு. நிற்க. இந்தக் கதை உங்கள் காதலைப் பற்றியதல்ல.

வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் அருகிலுள்ள sea farers club பாருக்குச் சென்று தனியாக அமர்ந்து யோசித்தபடி மதுவைப் பருகுவது உங்களுக்குப் பிடித்தமானது. நான்கு அல்லது ஐந்து பெக்குகள் ஓல்ட் மாங்க் ரம், கலந்து கொள்ள பெப்ஸி அல்லது கோகோ கோலா. தொட்டுக் கொள்ள அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் மிக்சர், சுண்டல், வெள்ளரிப் பிஞ்சு வகையறா.

இன்றைக்கு அலுவலகத்தில் அதிக வேலை; உடனடியாய் அனுப்பியாக வேண்டிய manifest, மற்றும், தலைமயக மாத இறுதி ரிப்போர்ட்களால் தாமதமாகிறது. முடித்து விட்டுக் கிளம்பும் போது மணி மதியம் 3.

20 நிமிடங்கள் நடக்க சோம்பேறித்தனப் பட்டுக் கொண்டு, ஆட்டோ பிடிக்கிறீர்கள் (20 ரூபாய் தண்டம்). மொத்தமே நான்கு பேர்களே இருந்தார்கள் பாரில். வெற்றி சப்ளை செய்யும் மேசை காலியாக இருக்க அங்கு அமர்கிறீர்கள். அலைபேசி, சிகரெட் பாக்கெட் மற்றும் தீப்பெட்டியை மேசை மேல் வைத்து, கால் நீட்டி அமர்ந்து மூச்சை இழுத்து விடுகிறீர்கள். ரம்மிற்கு உங்கள் தொண்டை பரபரக்கிறது.

வெற்றி சிரித்தபடி வழமையாக நீங்கள் சாப்பிடுபவற்றை உங்கள் மேசையில் வைக்கிறான். கலந்து ஒரு மிடறு விழுங்குகிறீர்கள். தொண்டையில் இறங்குகையில் ஏற்படும் லேசான எரிச்சலில் கண்களை மூடிக் கொள்கிறீர்கள். வெள்ளரிப் பிஞ்சொன்றை எடுத்துக் கடிக்கிறீர்கள்.

நீங்கள் இரண்டாவது ரவுண்டில் இருக்கும் போது பாருக்குள் ஒரு 45 வயது மதிக்கத்தக்க கனவான் ஒருவர் நுழைகிறார். வரும் போதே போதையில் தள்ளாடியபடி வருகிறார். (கடவுளே என் மேசையில் அமர்ந்து விடக் கூடாதே). உயர்தர வெள்ளை வேட்டி, சட்டையில் கையில் தங்க வாட்ச், கழுத்தில் செயின் சகிதம் உங்கள் எதிரில் அமர்கிறார். அமரும் போது, மேசை ஆடுகிறது. நீங்கள் நிமிர்ந்து அவரை அசூயையுடன் பார்க்கிறீர்கள். முணகலாக மன்னிப்பு கேட்கிறார்.

(எழுந்து வேறு மேஜைக்குப் போயிடலாமா... முகத்துல அடிச்சது போல இருக்குமோ... சரி, பாப்போம்.)

வெற்றியிடம் இரண்டு லார்ஜ் சிக்னேச்சர் விஸ்கி கொண்டு வரச் சொல்கிறார். இரண்டையும் ஒரே தம்ளரில் விட்டு மேலாகக் கொஞ்சம் தண்ணிரை ஊற்றி, ஒரே மடக்கில் குடிக்கிறார். தண்ணீர் அவர் சட்டையில் வழிகிறது. துடைத்தபடி ‘பொறுமையில்லை, பொறுமையில்லை' எனச் சொல்லிக் கொள்கிறார்.

அவரை ஓரக் கண்களால் பார்க்கிறீர்கள். அழகான ஓவல் வடிவ முகத்தில், தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடி காதுகளில் சேருமிடங்களில் நரை. அவர் தலையைக் கோதியபடி இன்னும் இரண்டு என்கிறார். நீங்கள் தலை கவிழ்ந்து உங்கள் தம்ளரில் கவனத்தைக் குவிக்கிறீர்கள். ஒரு லார்ஜை தம்ளரில் ஊற்றிய வெற்றி, மற்றொன்றை அதன் அருகில் வைத்து அகல்கிறான்.

சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தியபடி, ‘ஐயா, கொஞ்சம் தீப்பெட்டி தர முடியுமா' என ஆங்கிலத்தில் வினவுகிறார். நீங்கள் லேசாக அவர் பால் நகர்த்துகிறீர்கள்.

(போச்சு, முதல்ல இப்படித்தான் ஆரம்பிப்பானுங்க; அப்புறம் போட்டு அறுத்துத் தள்ளிடுவானுங்க).

வலக்கையில் கோப்பையை எடுத்தபடி, உங்களிடம், “உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா.?” என்கிறார். நீங்கள் ‘இது என்ன கேள்வி' என்ற பாவனையில் அவர் முகத்தைப் பார்க்கிறீர்கள்.

“ஆகவில்லையெனில், தயவு செய்து, செய்து கொள்ளாதீர்கள்... “ வாயில் கவிழ்த்துக் கொள்கிறார். மறுபடியும் சட்டையை மது நனைக்கிறது. காகித நேப்கினால் துடைத்துக் கொள்கிறார்.

பாக்கெட்டைத் தடவி தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதிவியிலிருந்ததைப் பறை சாற்றியது அது. (பெரிய புண்ணாக்கு). அவர் அறியாமல் அதைக் கசக்கி எறிகிறீர்கள். நேரம் கிடைக்கையில் உங்களை வீட்டிற்கு அழைக்கிறார். அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைக்கிறீர்கள்.

“பெண்கள் எல்லாரும் ஏமாற்றுப் பேர்வழிகள்..”
(போச்சு, மற கழண்ட கேஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்)

‘அனுபவத்தில் சொல்கிறேன் நண்பரே... All women are bitches, fuckin' bitches"
(என்ன வுட்டுடேன்).

சிறிது நேரம் மௌனமாய்க் கழிகிறது. சிகரெட்டை ஆழ்ந்து புகைக்கிறார். முகம் லேசாகக் கோணுகிறது. தனக்குள் சொல்லிக் கொள்பவரைப் போல் “வேசி, அவள் ஒரு வேசி” என்கிறார்.

இடைவெளி விட்டு, “ஆம், அவள் வேசி தான்”
(யாரைச் சொல்றான் லூசு)

“எனக்குத் தெரியாதெனெ நினைத்தாளா அவள். எல்லாரும் என் முதுகுக்குப் பின் பேசுவது என் காதில் விழுகிறதே... என் கேட்கும் திறனை நிறுத்த வழி தெரியவில்லையே... ”

உங்களுக்கு எப்படி எதிர் வினை ஆற்றுவது எனத் தெரியாமல் அவர் முகத்தையே பார்த்தபடி இருக்கிறீர்கள்.

“எனதருமை மனைவி” மனைவியில் அழுத்தம் கொடுக்கிறார். உங்களுக்கு விளங்குவது போல் இருக்கிறது.
(பெண்டாட்டி காரி சரியில்ல; புருஷன் குடிகாரன்)

“அவளால் தான் நான் இவ்வாறு குடிகாரனானேன்...” நீண்ட இடைவெளியில் நீங்கள் உங்கள் கோப்பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.

“இப்படிப் பட்ட ஒரு மனைவி இருந்தால் புருஷன் என்னாவது... குறைந்தது ஐந்து பேருடனாவது அவளுக்குக் கள்ள உறவிருக்கும்.. இவள் தொல்லை தாளாமலேயே கோயமத்தூரிலிருந்துச் சென்னைக்கு வந்தேன். இங்கேயும் இதே பிரச்சனை தான்”

“பிரச்சனை இடத்திலல்ல; அவளிடம் தான்..”

இடைவெட்டு : இது உங்களுக்கு நடந்த விஷயம் தான் என்றாலும், எழுதுவது நானல்லவா. அதனால் சிலவற்றைச் சேர்த்து, சிலவற்றை விலக்கியிருப்பேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் தயங்காமல் நிறுத்தி என்னைக் கேட்கலாம்.

“இதோ வெளியில் இருக்கிறானே டிரைவர்; அவனுடன் கூட அவளுக்கு உறவிருக்கிறது...”
(என்ன மனுஷன் இவன் பிரதம மந்திரிலேர்ந்து வீட்டு வேலைக்காரன் வரைக்கும் தொடுப்பு இருக்குன்னு சொல்வான் போல).

“உங்களை வீட்டிற்கு அழைத்திருந்தேன் அல்லவா.. ” நீங்கள் தலையாட்ட, தொடர்கிறார் “வேண்டாம்; வர வேண்டாம். வந்தால் நீங்களும் அவளுடன் படுப்பீர்கள்...”
(எழுந்து ஓடிடலாமா).

சிறிது இடைவெளி விட்டு, “உங்களுக்கு எது சொந்த ஊர்.?” என வினவுகிறார். அப்பாடா வேறு விஷயத்திற்கு வருகிறாரே என்ற நிம்மதியுடன் நீங்கள் “தஞ்சாவூர்” என்கிறீர்கள்.

“தஞ்சாவூர்... தஞ்சாவூர்... அங்கு கூட அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்”
(வேதாளம் முருங்க மரம் ஏறி விட்டது).

அவளுடைய காதல் கதைகளை முழுமையாய் விவரிக்கிறார். Graphical Descriptionsஐத் தவிர்க்கும் பொருட்டு அவற்றை நீக்கிவிட்டேன். அவர் விவரித்ததின் சாராம்சம் : அவர் மனைவி வேசை. உங்களுக்குச் சங்கடமாயிருக்கிறது. அவர் குரல் குழற ஆரம்பிக்கிறது. அவர் முகத்தையும் உங்கள் கோப்பையையும் மாறி, மாறிப் பார்த்தபடி இருக்கிறீர்கள். அவர் உச்ச போதைக்குச் சென்று கொண்டிருக்கிறார். வெற்றியை அழைத்து பணம் கொடுக்கிறார்.

“சரி, நான் கிளம்புகிறேன்” என்றவாறு எழுந்திருக்கிறார். உடல் ஆடுகிறது. இரண்டடி சென்றவர் சாயப் போகிறார். வெற்றி அவரைத் தாங்கிப் பிடிக்கிறான். முடியாமல் தடுமாறுகிறான். நீங்கள் எழுந்து ஒரு பக்கம் அவரைத் தாங்குகிறீர்கள்.

“கொண்டு போய் கார்ல விட்டுறலாம் சார்” என்கிறான் வெற்றி. அவனுக்குப் பழக்கம் போல.

நீங்கள் அவரை அழைத்து வருவதைப் பார்த்ததும் டிரைவர் சிகரெட்டை அணைத்து, வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்கிறார். அவரைப் பின் இருக்கையில் அமர வைத்ததும், வெற்றி அகல்கிறான்.

இடைவெட்டு : இன்னும் இரண்டு பத்திகளில் கதை முடியப் போகிறது. நீங்கள் எனக்குச் சொல்லிய படி தான் கதையின் முடிவை எழுதியிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் இது உங்களுக்கு நடந்த கதை; எனவே உண்மையில் என்ன நடந்ததோ அதைப் போலவோ அல்லது வேறு விதமாக மாற்றியோ நீங்கள் இந்தக் கதையை எழுதிக் கொள்ளலாம்.

முகம் கோணி, உங்களைப் பார்த்து இளிக்கிறார். உங்களை அருகில் அழைக்கிறார். உங்கள் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நீங்கள் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறீர்கள். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.

திரும்பவும் பாருக்குள் நுழைகையில் நீங்கள் அவரிடம் ஒரே ஒரு வார்த்தை தான் பேசினீர்கள் என்பது ஞாபகம் வருகிறது. தொண்டையில் பாறாங்கல்லை அடைத்ததைப் போல் உணர்கிறீர்கள்.

(இது ஒரு மீள் பதிவு. பழைய பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/02/blog-post_13.html)

சி மணிக்கு அஞ்சலி

தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர் சி மணி. இவர் நேற்று இரவு இறந்துவிட்டதாக இன்று காலை அறிந்தேன்.

சி சு செல்லப்பாவின் 'எழுத்து' காலம்தொட்டு எழுதியிருக்கிறார் (சிசுசெ தொகுத்த புதுக்குரல்கள் தொகுதியிலும் இவரது கவிதைகள் இருக்கும்). தமிழில் நவீன கவிதையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர். வரும் போகும், ஒளிச் சேர்க்கை போன்ற கவிதைப் புத்தகங்கள் க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றன. வே மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார். சந்தத்தோடு கூடிய நவீன கவிதைகளில் இவர் ஞானக்கூத்தனுக்கு முன்னோடி.

இவர் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இவரது பச்சையம் கவிதையிலிருந்து சில பகுதிகளை ஒருமுறை பதிவிட்டிருக்கிறேன் (பார்க்க : http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_09.html)

இவர் எழுதிய நரகம், பச்சையம், வரும் போகும் போன்ற நீள் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. சி மணியின் வேறு சில சிறிய கவிதைகளைக் கீழே தருகிறேன்.

தீர்வு

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்,தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.

சிக்கல்

பூஎன் றூதித் தள்ளக்
கூடி யதையும் கூந்தல் பிய்த்துக்
கொள்ளும் சிக்க லாக்கிக்
கொண்டும் விடும்புதுப் பழக்கம் நம்மைத்
தொத்திக் கொண்டுவிட் டது.தொடக்
கத்தில் பொழுது போகும் நேர்த்தி
கண்டும், மூளைக் கூர்மை
எண்ணத் திலும்பு தைந்து போனோம்.
அண்மை யில்யா வும்சாக்
கென்றும், இதுநம் மேதா விலாச
மேன்மைக் காக என்றும்
தோன்றி யது.இனி மீட்சிச் சிக்கல்

இடையீடு

1. சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை

2. எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

3. என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.

4. எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று

மினியுகம்

சனி த்துவிட்டது
மினி யுகம்; ஒழிந்தது
நனி பெரும்மனிதர் கொற்றம்.
இனி
மினி மக்கள் காலம்
மனி தனைவிட்டு
மினி தனைப்பாடு போற்று
குனி என்பேச்சைக் கேள், ஏ
னெனி லெனக்குத் தெரியும் நானொரு
மினி மேதை

எனக்குப் பிடித்த கவிஞனுக்கு அஞ்சலி.

ஃபிலிம் காட்டுதல் (அ) கடிதம் எழுதுதல் (பைத்தியக்காரன்)

'சிதைவுகளில்' வர வேண்டியது சில காரணங்களால் 'மொழி விளையாட்டில்' வருகிறது. சிரமத்துக்கு பதிவுலக நண்பர்கள் பொறுத்தருள வேண்டும். இந்த தொடர் விளையாட்டை ஆரம்பித்த நண்பர் மாதவராஜுக்கும், என்னை தொடரச் சொன்னதுடன், தன் வலைப்பக்கத்திலேயே இதை வெளியிடவும் இசைந்த அன்பு சுந்தருக்கும் ஸ்பெஷல் உம்மா. லக்கி, இப்போது திருப்திதானே? சுந்தருக்கு முத்தம் கொடுத்துவிட்டேன் :-). உங்களால் பாவம் மாதவராஜும் என் உம்மாவை சகித்துக் கொள்கிறார் :--&( இனி -&


அன்பின் முத்தையா,

இது சாலமன். நலமா? நானும்.

ஒரு நூற்றாண்டு தனிமைக்கு பின், கொல்லனின் ஆறு பெண் மக்களுடன் மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன், மதினிமார்களின் கதைகளை சொல்ல ஆரம்பித்த இருபது ஆண்டுகளுக்குப் பின், பைத்தியக்காரனை சந்தித்தேன். ஆமாம், பதிவுலகில் எழுதிவரும் அதே பைத்தியக்காரன்தான். அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தான். ஒரு கோப்பை தேனீருக்குப் பின், ஏன் இப்போது பதிவுகளில் எழுதுவதில்லை என்று கேட்டேன். 'அலுவலகத்தில் ப்ளாக்கரை மூடிவிட்டார்கள். பின்னூட்டங்கள் மட்டுமே அதிரி புதிரியாக எழுத முடிகிறது' என்றான். ஆனால், குரலில் வேறு ஏதோவொன்று மறைந்திருந்தது. மெல்ல பேச்சுக் கொடுத்ததில் கொட்ட ஆரம்பித்தான். சிதறிய வார்த்தைகளில் காந்தி தாத்தாவின் புன்னகை சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது.

''பயமா இருக்குடா. சாட்ல யார் வந்தாலும் சரி, இல்ல புதுசா ஏதாவது பதிவுலக நண்பர் அறிமுகமானாலும் சரி, சட்டுனு கடனா பணம் கிடைக்குமான்னு கேட்க ஆரம்பிச்சிடறேன். சுந்தர், ஜமாலன், நர்சிம்... இப்படி யாரையுமே விடலை. எல்லார்கிட்டேந்தும் பணத்த வாங்கிட்டேன். ஆனா, இதுவரைக்கும் திருப்பித் தரலை. இப்பக் கூட பாரு, உன்கிட்ட ஏதாவது பணம் கிடைக்குமானுதான் உள்ளுக்குள்ள கணக்கு போட்டுட்டு இருக்கேன். என்னையே எனக்கு பிடிக்கலைடா. ஆனா, விடிஞ்சா 20 ஆயிரம் ரூபா வட்டி கட்டணுமே. நான் என்ன செய்யட்டும்? யோசிச்சேன். நண்பர்களை இழக்க விரும்பலை. அதான் மவுனமாகிட்டேன்...''

எனக்கு பாதசாரியின் 'காசி' நினைவுக்கு வந்தான்.

நேற்று குரோம்பேட்டையிலுள்ள சிவராமனின் வீட்டுக்கு சேஷையா ரவியுடன் சென்றிருந்தேன். நெடுநெடுவென்று வளர்ந்திருந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள். 14 வயதுதானிருக்கும். எட்டிப் பார்த்த சிவராமன், வரவேற்றான். அந்தப் பெண்ணையும் அறிமுகப்படுத்தினான். நிரஞ்சனா. அவனது அக்கா மகள். சுருள் சுருளான முடியுடன், நோஞ்சானாக பிறந்த குழந்தையை மொட்டை மாடியில் தூக்கி வைத்துக் கொண்டு பாட்டி வடை சுட்ட கதையை நீயும் நானும் மாறி மாறி சொன்னோமே, அதே குழந்தைதான். அதே சுருள்முடிதான். அதே அரிசிப் பற்கள்தான். ஆனால், இப்போது பூசினாற்போல் இருக்கிறாள். 'இழுத்துக் கட்டிய உடல்' என தி. ஜானகிராமன் என் செவியில் முணுமுணுத்தார். ஆச்சர்யத்தில் வாய் பிளந்துவிட்டேன். நம்மிடமிருந்து விலகிய வயதை எல்லாம், அந்தப் பெண்தான் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கிறாள். வாய் நிறைய அங்கிள், அங்கிள் என்று அவள் அழைத்தபோதும், சுடச்சுட காபி கலந்து கொடுத்தபோதும்... சொல்லத் தெரியவில்லை. மனதில் அப்படியொரு சந்தோஷம் ஊற்றெடுத்தது. நம் கண்முன்னால் ஒரு குழந்தை, குமரியாகியிருக்கிறாள். பரிணாம வளர்ச்சியின் அழகு, சொரூப நிலை.

வெளியில் வந்தோம். வெய்யில் தகித்தது. 'Rain Rain go away, Come again another day... என பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து நாம் மனப்பாடம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு இது', கர்சீப்பால் முகத்தை துடைத்தபடியே சேஷையா ரவி முணுமுணுத்தான். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

காரணம் கேட்காதே. இரண்டு நாட்களுக்கு முன் 'பணமா பாசமா' படத்தை திரும்பவும் பார்த்தேன். 'மும்பை'யில் அரவிந்த்சாமி, 'நீங்க சாகற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது...' என்பாரே, அதுமாதிரியான ஒரு வசனத்தை இந்தப் படத்தில் நடிகை சரோஜாதேவி, டி. கே. பகவதியிடம் சொல்கிறாள். போலவே 'சூர்யவம்சம்' படத்தில் வரும் பல காட்சிகள், இதிலும் இடம்பெற்றிருந்தன. ரமணிச்சந்திரனின் ஏதோவொரு நாவல். வளையோசையோ, எதுவோ பெயர் நினைவில் இல்லை. பெயரா முக்கியம்? ஒரே கதையைத்தானே தொடர்ந்து நாவலாக ரமணிச்சந்திரன் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கிறார்?

இரு இரு, மெளனி மட்டும் யோக்கியமா? அவரது 24 சிறுகதைகளும் ஒரே சிறுகதைதானே என நீ சொல்வது என் செவியில் ஒலிக்கிறது. மறுக்கவில்லை. உலகிலுள்ள மனிதர்களை எல்லாம் பலமற்ற, கனவு காணும் பதினெட்டுப் பிராயத்து காதலர்களாக... அப்படிப்பட்ட காதலர்களின் பலத்துடனும் பலஹீனத்துடனும் கற்பனை செய்து காட்டுவதே மெளனிக்கு வாடிக்கை. அதுவே வேடிக்கை. ஒப்புக்கொள்கிறேன்.

என்றாலும் 'படிகளில்' ஏறி, 'மீட்சி'யின் வழியே 'நிறப்பிரிகை'யை பிடித்து அவருக்கு சமாதி கட்டிவிட்டாலும் 'எவற்றின் நடமாடும் சாயலாகவோ' அவர் உலவிக் கொண்டுதானே இருக்கிறார்? அதனால்தான் சிலநேரங்களில் அவர் அழியாச்சுடர். புதுமைப்பித்தன் குறிப்பிட்டதுபோல் மெளனி, எழுத்தாளர்களின் திருமூலர்.

இடைச்செறுகலாக ஒரு விஷயம் முத்தையா. 'THOUGHT' ஆங்கில இதழில் 'Introducing Mouni' என ஒரு கட்டுரையை நகுலன் முன்பு எழுதியிருக்கிறார். எவ்வளவோ தேடிப் பார்த்துவிட்டேன். அந்தக் கட்டுரையும் சரி, அந்த இதழும் சரி கிடைக்கவில்லை. நகுலனின் 'மொத்த' தொகுப்பிலும் அது இடம்பெறவும் இல்லை. உன்னால் முடிந்தால் அந்தப் பிரதியை கண்டுப் பிடித்து ஜெராக்ஸ் எடுத்துக் கொடு. ஈரேழு ஜென்மத்திலும் உனக்கு புண்ணியம் கிடைக்க நான் வழிகாட்டுகிறேன். ஜெராக்ஸ் என்றதும் ஜ்யோராம் சுந்தரின் ஞாபகம் வருகிறது. ஒரே இதழுடன் நின்றுவிட்ட 'மழை' சிற்றிதழில் யூமா வாசுகி எடுத்த கோபிகிருஷ்ணனின் ஒரே முழுமையான நேர்காணல் வந்திருக்கிறது. அந்தப் பத்து பக்கங்களையும் பிரதி எடுத்து தருமாறு சுந்தர் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். தர வேண்டும்.

அதெல்லாம் கிடக்கட்டும். மெளனியும், ரமணிச்சந்திரனும் ஒன்றா என யாராவது முஷ்டியை மடக்கலாம். பூஞ்சை உடம்பு. பதிலுக்கு தொடை தட்டினால், என் கால் எலும்பு உடைந்துவிடும். எனவே ஒரே வாக்கியம்தான். சுந்தரராமசாமியின் எழுத்துக்களும், சாணித்தாளில் பிரசுரமாகும் சரோஜாதேவியின் ஃபோர்னோ எழுத்துக்களும் கூட ஒன்றுதான் என்பதில் தீர்மானமாகவே நானிருக்கிறேன்.

சரி, இப்போது ரமணிச்சந்திரனின் நாவலுக்கு வருவோம். அதில், நாத்தனாரின் வளைகாப்புக்கு, தன்னை காதலிக்காத கணவனுடன் நாயகி செல்வாள். முத்து வளையலை போடுவாள். சீமந்தத்துக்கு இந்தமாதிரியான முத்து வளையல் சீராக வேண்டும் என நாத்தனாரின் மாமியார் கட்டளையிட்டிருப்பாள். எனவே பரிசு போலவும், சீதனம் போலவும் அது அமையும். நாயகன் நெகிழ்வான். இதற்கு சமமான காட்சியும் 'பணமா பாசமா'வில் இருக்கிறது.

இவையெல்லாம், காபியா, இன்ஸ்பிரேஷனா? இதற்கு பதில் சொல்வதைவிட, பதில் அவசியம் தேவையா என்ற கேள்வியே முன்னிலை வகிக்கிறது. தொடர்ச்சியும், சங்கிலி போன்ற ஒருவகையான கோர்வையுமே அனைத்தின் அடிநாதமாக இருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய்?

தமிழ் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன், ஓலைச்சுவடிகளில் கவிதையை எழுதுவதற்கு முன், பாணர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்திருக்க வேண்டும். முகம் தெரியாத மூதாதையர்கள் உச்சரித்த வாய்மொழி பாடல்களே காற்றில் உலவியிருக்க வேண்டும். அதனால்தான் சங்கக்கால புலவர்களால் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் எழுத முடிந்திருக்கிறது. இன்ஸ்பிரேஷன் இன்றி இது சாத்தியமில்லை.

இப்படிப்பார். 'பொன்முடி' திரைப்படத்தில் பாரதிதாசன் வசனம் எழுதியிருக்காவிட்டால், 'பராசக்தி' படத்தில் கருணாநிதியால் அந்த நீதிமன்ற வசனங்களை எழுதியிருக்க முடியுமா? சிரமம்தான். காரணம், வரிக்கு வரி கருணாநிதி எழுதியது பாரதிதாசனின் வரிகளுடைய எக்ஸ்டென்ஷன்தான்.

அவ்வளவு ஏன், போர்ஹேஸ் எழுத்துக்களின் தாக்கம் உம்பர்ட்டோ ஈகோவிடம் அதிகமாக காணப்படுவதை தேர்ந்த வாசகனால் உணரமுடியுமல்லவா? இதையே இப்படியும் சொல்லலாம். போர்ஹேஸ் சிறுகதைகள் முடிந்த இடத்திலிருந்து உம்பர்ட்டோவின் எழுத்துக்கள் சீறிப்பாய்கின்றன. உம்பர்ட்டோ ஈகோவின் Foucault's pendulam வாசிப்பதற்கு முன்னால் போர்ஹேஸ் எழுதிய Tlon, Uqbar, Orbis Tertius சிறுகதையை வாசிப்பது நல்லதல்லவா? (இந்த சிறுகதையை ‘லோன், உக்பார், ஒர்பிஸ் தெர்துய்ஸ்’ என்ற பெயரில் எளிமையாக, தெளிவாக, முழுமையாக நண்பர் பிரேம் (ரமேஷ்) தமிழ்படுத்தியிருக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மணல் பிரதி’ தொகுப்பில் இதனை காணலாம். நேரில் சந்திக்கும்போது இந்தப் பிரதியை உன்னிடம் தருகிறேன்.)

அதேபோல், கொரிய இயக்குநரான கிம் கி டுக்கின் 'The Bow' திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவபட்டா எழுதிய 'House of Sleeping Beauties' புதினம் ஏனோ கண்முன்னால் வந்து வந்து போகிறது. இரண்டுக்கும் தொடர்பில்லைதான். ஆனால், பிணைப்பு இருப்பதுபோலவே தோன்றுகிறது.

வேண்டுமானால் நீயே கவபட்டாவின் இந்த நாவலை வாசித்துப்பார். ஆங்கிலத்தில் கூட வேண்டாம். தமிழில் லதாராமகிருஷ்ணன், 'தூங்கும் அழகிகள் இல்லம்' என்ற பெயரில் இதை மொழிபெயர்த்திருக்கிறார். 'உன்னதம்' கெளதமசித்தார்த்தன் அதை வெளியிட்டிருக்கிறார்.

சித்தார்த்தன் என்றதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இனி மாதாமாதம் 'உன்னதம்' இதழ் வெளிவருமாம். சித்தார்த்தனை சந்தித்தபோது சொன்னார். அவரது நிலத்தை அடமானமாக வைத்து வங்கியிலிருந்து கடன் வாங்கியிருக்கிறாராம். அந்தத் தொகை தீரும் வரை இதழ் தவறாமல் வருமாம். சிறுபத்திரிகை வியாதி. செல்லப்பா, ஆத்மாநாம், 'இலக்கியவெளிவட்டம்' நடராசன் என தொடரும் பட்டியலில் கெளதம சித்தார்த்தனும் இடம்பெற நினைக்கிறார்.

ஷிட். எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டோம். இன்ஸ்பிரேஷன். ஆமாம், நாம் பேசி வந்தது இதைப்பற்றிதான். என்ன சொல்ல வருகிறேன் என்றால், வேர்களை அறிவது விழுதுகளை புரிந்து கொள்ள உதவும். அவ்வளவுதான். ஆனால், இப்போது விழுதுகளை மட்டுமே தொழுவுவது அதிகமாகிவிட்டது. தத்துவப் போக்கில் மட்டுமல்ல, இலக்கியப் போக்கிலும் இந்த நிலை நீடிக்கிறது. புதுமைப்பித்தன், மெளனி, கு.பா.ரா... என தொடரும் ஸ்கூல் ஆஃப் தாட், இன்றைய ஜே.பி. சாணக்யா வரை கிளை பரப்பி நிற்கிறது. பிரமிள், நகுலன்... என தொடரும் பட்டியல் இப்போதைய பின்னை நவீனத்துவ பிரதிகளில் மூச்சு வாங்க ஓய்வெடுக்கிறது. தமிழின் முதல் ஹோமோ செக்சுவல் நாவலான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' ஒருவகையில் இன்றைய 'ஜீரோ டிகிரி'க்கு முன்னோடி. டிக் ஷ்னரி ஆஃப் கஸார்ஸ் வாசித்தால் கோணங்கியின் புதினங்கள் ஓரளவு புரியும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வாழ்க்கையையும், தேவதாசிகளின் ரணங்களையும் அறிந்திருந்தால் முழுமையாகவே 'பாழி', 'பிதுரா'வுடன் உரையாட முடியும்.

அதாவது முத்தையா. பயிற்சியாக வாசிக்க ஆரம்பித்தால், எல்லாம் இன்பமயம். என்றாலும் புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நகரம்', கு. அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்', கு.பா. ராஜகோபாலனின் 'விடியுமா' போன்றவை என்றுமே மாஸ்டர் பீஸ்தான் என்பதை உரத்து சொல்வதில் வெட்கமேதும் இல்லை. இரு இரு. கோபித்துக் கொள்ளாதே. உட்கார். கடிதம் படிக்காமல் எங்கு கிளம்பிவிட்டாய்? சிகரெட் பிடிக்கவா? அட, மன்னித்து விடப்பா. ஆர்வக் கோளாறு. ஏதேதோ உளறிவிட்டேன். இப்போது அறுப்பதை நிறுத்திவிட்டு நேராக ரோஷினிக்கு வருகிறேன்.

ஆ... ஹை. புன்னகையை பார். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ரோஷினி குறித்து பேச ஆரம்பித்ததுமே நீ உதடு கிழிய சிரிப்பாய் என்று தெரியும். முதலில் உன் வாயை துடைத்துக் கொள். வழிகிறது. நீ, நான், ராமச்சந்திரன் மூவரும் போட்டி போட்டுக் கொண்டு காதலித்த அதே ரோஷினியை ஏவிஎம் ஸ்டூடியோவில் சந்தித்தேன். சென்ற கடிதத்தில் அந்த நடிகை வரும் விளம்பரத்தை புகழ்ந்திருந்தாய் அல்லவா? அதை எடுத்தது அவள்தானாம். சொன்னாள். அந்த விளம்பரத்துக்கு காமிரா பிடித்தவர் அவளது கணவனாம். வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டேன். இருவரும் ராஜிவ்மேனனிடம் பயிற்சி பெற்றபோது காதல் அரும்பியதாம். நான்கு வயதில் பையன் இருக்கிறானாம்.

சட்டென ஏவிஎம் ஸ்டூடியோ மறைந்துவிட்டது. நாம் அலைந்து திரிந்த பள்ளிக்கூடமும், வயல்வெளிகளும், தோப்புகளும் அப்படியே சிஜியில் முளைத்தது. அரைக்கால் டிரவுசரில் நானும், பாவாடை சட்டையில் அவளுமாக நின்றுக் கொண்டிருந்தோம். மாங்காய் அடித்து நான் கொடுக்க, புளியம் பழத்தை அவள் பதிலுக்கு கொடுத்தாள். அதை சாப்பிடுவதற்காக என் வாயருகில் கொண்டு சென்றேன். யாரோ தோளைத் தொட்டார்கள். புளியம் பழம் நழுவி விழுந்தது.

'ஹி இஸ் மை ஹஸ்பண்ட்' என்றாள். கை குலுக்கினோம். இருவருமாக இணைந்து அடுத்தமாதம் படத்துக்கு பூஜை போடப் போகிறார்களாம். 'நீயும் முத்தையாவும் என்னை டாவடிச்சீங்களே... அதுதான் கதை' என்று சிரித்தாள். சிரித்தான். சிரித்தேன். கணவரிடம் அனைத்தையும் சொல்லி இருக்கிறாள். அவர்கள் நெருக்கமாகவும், சிநேகமாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்காகவே அவளை நாம் சிறுவயதில் காதலித்திருக்கிறோம் போல.
''ஹீரோ கேரக்டர் பேரு என்ன தெரியுமா? ராமச்சந்திரன்!'' என அட்டகாசமாக ரோஷினியின் கணவன் சொன்னான். எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை. அவளும்/னும் சொல்லவில்லை.

சென்ற முறை நீ எனக்கு கடிதம் எழுதியபோது டாக்டர் ருத்ரன் உன்னிடம் கேட்ட கேள்வியை எனக்கு ஃபார்வேர்ட் பண்ணி இருந்தாய். i really would like to meet someone who had read the interpretation of dreams ( or being and nothingness)! இதில் interpretation of dreams குறித்து எனக்கு எதுவும் தெரியாது. செல்வேந்திரன் கேட்டதற்கு பதில் சொன்னது பைத்தியக்காரன். எனவே அவன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அல்லது டாக்டரை போய் சந்திக்க வேண்டும்.

ஆனால், being and nothingness பற்றி ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். காரணம் அது சார்த்தர் எழுதிய புத்தகம். சிமோன் தி புவாவுடன் 20 ஆண்டுகளுக்கும் மேல் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து, காதலுடன் வாழ்ந்தவரில்லையா? எந்தவொரு தத்துவ மாணவனையும் ஈர்க்கும் விஷயமல்லவா இது? தனக்கான சிமோன் தி புவாவை தேடுவது வரமா சாபமா? இதை The Nature of Second sex என்று சொல்வதைவிட, The Nature of First sex என்று சொல்லலாமா?

சார்த்தர் எழுதிய அந்த நூலை முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்ச் சூழலில் சார்த்தரை முழுமையாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள் எஸ்.வி. ராஜதுரை அல்லது அந்தக் கால சாருநிவேதிதா. இருவரும் சார்த்தரின் படைப்புகளை தெரிந்த அளவுக்கு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சார்த்தரை ஒன்றுமில்லாமல் தெரிதா, ஆக்கியதும், சார்த்தரை படிப்பதை நிறுத்திவிட்டேன். அது தவறு என்று இப்போது புரிகிறது. அவரது காதல் வாழ்க்கையை மட்டுமல்ல, இருத்தலியல் கோட்பாடுகளையும் முழுமையாக கற்க வேண்டும். என்ன செய்ய, வேர்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஞானோதயம் இப்போதுதானே உதித்திருக்கிறது?

எப்படியோ டாக்டர் எனது நினைவுகளை கிளறிவிட்டுவிட்டார். யோசித்தபோது ஞாபக அடுக்கிலிருந்து being and nothingness குறித்து ஒரேயொரு பீஸ்தான் வந்துவிழுந்தது. அதுகூட முழுமையாக இல்லை. சாராம்சம் மட்டும் கொஞ்சம். கொஞ்சம்...

'ஒரு ஆணும் பெண்ணும் ஏன் பழகுகிறார்கள் என்று அந்த ஆணுக்கும் தெரியும், பெண்ணுக்கும் தெரியும். ஆனாலும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். ஆண் தன் விருப்பத்தை தெரியப்படுத்தியதும், அந்தப் பெண் திடுக்கிடுவது போல் நடிக்கிறாள்....'

இந்த பீஸ் சரியா என்பதை டாக்டரை கேட்டுச் சொல். இந்த இடத்தில் காரல் மார்க்ஸ் எழுதிய விஷயமும் தொடர்ச்சியாக வந்து விழுகிறது.

The Immediate, natural and necessary relation of human being to human being is the relation of man to woman. The relation of man to woman is the most natural relation of human being to human being... - KARL MARX, EPM

ஸ்ஸ்ஸ்... அப்பா... ரொம்ப எழுதிவிட்டேன். கை வலிக்கிறது. போதும் முடித்துவிடுகிறேன்.

தோழமையுடன்
சாலமன்.

இந்த தொடர் விளையாட்டில் அடுத்ததாக கடிதம் எழுத (அதாவது முத்தையா, சாலமனுக்கு எழுதும் மடல்) நண்பர் நர்சிம்மை அழைக்கிறேன்.

- பைத்தியக்காரன்

இல்லாத சாலமனுக்கு ஒரு கடிதம்

ப்ரியமுள்ள சாலமன்,

நீ உண்மையில் கிடையாது. ஒரு விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட எழுத்துரு. இதுவும் ஒரு வசதிதான். எனக்கு உவப்பான மற்றும் சில சமயம் நான் வெறுக்கும் என் நண்பர்களின் குணங்களை உனக்கு ஏற்றிப் பார்த்து இந்தக் கடிதத்தை எழுதலாம்.

எப்படி நீ வெறும் புனைவோ அப்படியே இந்தக் கடிதமும் ஆகட்டும். அதனாலேயே உனக்கு நான் பல வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தை இப்போது மறுபடியும் எழுதுகிறேன்.

இரு மக்கா, எதை எழுதுவதென்றாலும் கொஞ்சம் சரக்கு தேவைப் படுகிறது. மூடிய கதவுகளுக்குள்ளான என்னுடைய கோப்பையை நிரப்பிக் கொள்கிறேன். உன்னுடனான என் பிரிவு நிகழ்ந்தபோதும் (அது இருக்குமா ஒரு 15 வருசம்!), நான் வாசித்துக் கொண்டும் குடித்துக் கொண்டும்தான் இருந்தேன். முன்னது பாதியாகி, பின்னது இரு மடங்காகி... ஆனால் கடிதமெழுதுவது மட்டும் காணாமலே போயிருக்கிறது. இப்போதெல்லாம் அரட்டைப் பெட்டியில் எழும் நீள் சதுரங்களுடனான உரையாடல்கள் கடிதங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டன. நீயும் நானும் வாரத்திற்கு இருமுறை நான்கு முழுப் பக்கங்களில் கடிதம் எழுதிக் கொண்டது கனவாயிருக்கிறது சாலமன்.

சாலமன், சாலமன், சாலமன்... உன்னுடையே இந்தப் பெயர் உச்சரிப்பதற்கே எவ்வளவு இனிமையாயிருக்கிறது!

சரி, போன மாதம் உன்னதம் பத்திரிகையில் என்னுடைய கதையொன்று வந்திருக்கிறது. அதை நீ இங்கு வாசிக்கலாம் : http://jyovramsundar.blogspot.com/2008/01/blog-post_14.html. மணல்வீட்டில் வந்த என்னுடைய கவிதைக்கான சுட்டி எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

எதை எடுத்தாலும் சுட்டி குட்டி என்று பேசும் நிலையில் இப்போது இருக்கிறேன். இணையத்தில் இரண்டு வார்த்தை கதைகள், நான்கு எழுத்து கவிதைகள், ஒன்பது வரி நாவல்கள் என்று போட்டு படுத்தறாங்க மக்கா. இன்னொருத்தர் இரண்டு மூன்று வருடம் ஓடக்கூடிய மெகா சீரியல் நாடகத்தை ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருக்கிறார். தாங்க முடியலைப்பா. உடனே மற்றமையை அங்கீகரித்தல், ஏற்றுக் கொள்ளுதல்னு ஆரம்பித்துவிடாதே... எனக்கு உடம்பில் தெம்பில்லை.

கோணங்கியின் எழுத்துமுறை automatic writing வகையைச் சேர்ந்தது. முன் தீர்மானிக்காமல் சுய போதமின்றி எழுதிச் செல்லும் கை. அங்கே எழுதுபவனும் ஒரு கருவிதான். ஆனாலும் பார் நண்பா, நான்காவது வரியிலேயே தூக்கம் வந்துவிடுகிறது எனக்கு.

ங்கோத்தா... (கெட்ட வார்த்தை இல்லாட்டி இதை ஒரு புண்டா மவனும் இலக்கியமா எடுத்துக்க மாட்டான். அதுக்காகத்தான் இந்த வார்த்தை. நீ தப்பா எடுத்துக்காதே!).

வீட்டில் இருந்தே தீர வேண்டிய பத்து புத்தகங்கள்னு ஒருத்தர் பதிவு எழுதியிருக்காரு. இங்கே சுங்க அலுவலகத்திற்குப் பின்னிருக்கும் சாலையோரக் குடிசைகளைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது வீட்டில் இருந்தே தீர வேண்டியது புத்தகங்கள் அல்ல, கக்கூஸ்தான் என்று. இன்னொருத்தர் காந்தியின் சுயசரிதை படிச்சே ஆகணுமாம். யோவ், ஆட்டோ சங்கரோட சுயசரிதைகூட இன்னும் கொஞ்சம் உபயோகமாயிருக்கும்யா.

என்னைப் பொறுத்தவரை படித்தே தீரவேண்டிய புக்ஸ்னு ஒன்னுமேயில்லை. பைத்தியக்காரன், செல்வேந்திரன் பதிவுல முக்கியமான புத்தகம்னு interpretation of dreamsஐச் சொல்றாரு. உடனே எனக்கு சொப்பன ஸ்கலிதம் சேலம் சிவராஜ்தான் ஞாபகம் வர்றாருப்பா. தான் பெரிய புத்திசாலின்னு அடுத்தவன் நம்பணும்னு ஜெர்மன் ஐடியாலஜி, குடும்பம் தனிச் சொத்துன்னு ஃபிலிம் காட்டறாருப்பா பைத்தியக்காரன். (அந்தாளு நிஜாமவே பைத்தியக்காரன்தான் போல... இந்த மாதிரி name dropping யாருக்குத்தான் தெரியாது!). என்னைக் கேட்டா கீழே இருக்கற புக்ஸ்தான் பெஸ்ட் :

1. Umerto Eco - Foucault's Pendulam
2. James Joyce - Finnegans Wake
3. Friedrich Nietsche - Thus Spake Zarathustra
4. Michel Foucault - History of Sexuality
5. Allen Ginsberg - Fall of America

இன்னும் Marquis De Sade, Roland Barthes, William Faulkner, Sylvia Plathன்னு பல பேர் இருக்காங்கடா.

ஏன் தமிழில் எதுவும் சொல்லவில்லை என்கிறாயா? எல்லாரும் குடும்பக் கதைகள்தான் எழுதிகிட்டிருக்காங்க. கொஞ்சம் நல்லா நகுலன் எழுதிகிட்டிருந்தாரு, இப்ப நான் எழுதறேன்... வேற யார் இருக்காங்க சொல்லு பாக்கலாம். இப்பல்லாம் நான் தமிழ்ல படிக்கறதேயில்லை.

இரு, பெப்சி தீந்து போச்சு, போய் எடுத்துகிட்டு வந்துடறேன்.

(இந்த இடத்தில் காலச்சுவடு கண்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகனையெல்லாம் திட்டி 10 வரிகள் எழுதியிருந்தேன். அது காணாமல் போயிருக்கிறது).

சரிடா.. என்ன பேர் அது சாலமன்ன்னு.. மண்ணு மாதிரி இருக்கு. இப்ப என்னோட பேரையே எடுத்துக்கோ, எவ்வளவு கவித்துவமா இருக்கு. வச்சிருக்கான் பார் பேர, சாலமன்னு.. சரியான முட்டாப் பையன்டா நீ.

பாத்துக்கடா, எப்படி நீ உண்மையிலேயே சாலமன் கிடையாதோ அப்படியே நானும் நான் ஒருத்தன் மட்டுமே கிடையாது. உடனே பலரோட குரல்ல பேசற தாமுவை நினைச்சுக்காதே.. இது பலகுரல் இல்ல, பலரின் குரல்கள்.

நீ நல்லா இருக்கியா, உன் மச்சினிச்சி கொழந்த சுகமான்னு எல்லாம் நான் ஏன் விசாரிக்கலைன்னு கேட்காதே. அதெல்லாம் மிடில் கிளாஸ் ஆளுங்க செய்யறது.

போதும்டா மச்சான், தூக்கம் வருது.. ஸீ யூ... முடிஞ்சா என்னோட எழுத்துங்களை படிச்சு எப்படி எழுதணும்னு கத்துக்கோ.. அவ்வளவுதான் சொல்வேன்.

உனக்கெல்லாம் அன்புடன்னு முடிக்க முடியாதுடா பாடு.

முத்தையா

இந்த விளையாட்டிற்கு என்னை அழைத்த மாதவராஜூக்கு நன்றி. இதைத் தொடர நண்பர் பைத்தியக்காரனை அழைக்கிறேன். பாருங்கள், இதில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் என்று :

(1) சாலமன் என்று ஒருவரும் கிடையாது; போலவே முத்தையா என்றும்.
(2) பதிவு இருந்தாலும் அதில் பைத்தியக்காரன் எழுதுவது கிடையாது
(3) அவர் எழுதிக் கொடுப்பதை என் பதிவிலேயே போட்டுக் கொள்ளலாம்.
(4) இல்லாவிட்டால் இந்தப் பதிவுதான் பைத்தியக்காரன் எழுதியது என்று சொல்லி வேறு ஒருவரை விளையாட்டிற்கு அழைக்கலாம்.
(5) இப்படியாக, இப்படியாக.