'சிதைவுகளில்' வர வேண்டியது சில காரணங்களால் 'மொழி விளையாட்டில்' வருகிறது. சிரமத்துக்கு பதிவுலக நண்பர்கள் பொறுத்தருள வேண்டும். இந்த தொடர் விளையாட்டை ஆரம்பித்த நண்பர் மாதவராஜுக்கும், என்னை தொடரச் சொன்னதுடன், தன் வலைப்பக்கத்திலேயே இதை வெளியிடவும் இசைந்த அன்பு சுந்தருக்கும் ஸ்பெஷல் உம்மா. லக்கி, இப்போது திருப்திதானே? சுந்தருக்கு முத்தம் கொடுத்துவிட்டேன் :-). உங்களால் பாவம் மாதவராஜும் என் உம்மாவை சகித்துக் கொள்கிறார் :--&( இனி -&
அன்பின் முத்தையா,
இது சாலமன். நலமா? நானும்.
ஒரு நூற்றாண்டு தனிமைக்கு பின், கொல்லனின் ஆறு பெண் மக்களுடன் மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன், மதினிமார்களின் கதைகளை சொல்ல ஆரம்பித்த இருபது ஆண்டுகளுக்குப் பின், பைத்தியக்காரனை சந்தித்தேன். ஆமாம், பதிவுலகில் எழுதிவரும் அதே பைத்தியக்காரன்தான். அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தான். ஒரு கோப்பை தேனீருக்குப் பின், ஏன் இப்போது பதிவுகளில் எழுதுவதில்லை என்று கேட்டேன். 'அலுவலகத்தில் ப்ளாக்கரை மூடிவிட்டார்கள். பின்னூட்டங்கள் மட்டுமே அதிரி புதிரியாக எழுத முடிகிறது' என்றான். ஆனால், குரலில் வேறு ஏதோவொன்று மறைந்திருந்தது. மெல்ல பேச்சுக் கொடுத்ததில் கொட்ட ஆரம்பித்தான். சிதறிய வார்த்தைகளில் காந்தி தாத்தாவின் புன்னகை சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது.
''பயமா இருக்குடா. சாட்ல யார் வந்தாலும் சரி, இல்ல புதுசா ஏதாவது பதிவுலக நண்பர் அறிமுகமானாலும் சரி, சட்டுனு கடனா பணம் கிடைக்குமான்னு கேட்க ஆரம்பிச்சிடறேன். சுந்தர், ஜமாலன், நர்சிம்... இப்படி யாரையுமே விடலை. எல்லார்கிட்டேந்தும் பணத்த வாங்கிட்டேன். ஆனா, இதுவரைக்கும் திருப்பித் தரலை. இப்பக் கூட பாரு, உன்கிட்ட ஏதாவது பணம் கிடைக்குமானுதான் உள்ளுக்குள்ள கணக்கு போட்டுட்டு இருக்கேன். என்னையே எனக்கு பிடிக்கலைடா. ஆனா, விடிஞ்சா 20 ஆயிரம் ரூபா வட்டி கட்டணுமே. நான் என்ன செய்யட்டும்? யோசிச்சேன். நண்பர்களை இழக்க விரும்பலை. அதான் மவுனமாகிட்டேன்...''
எனக்கு பாதசாரியின் 'காசி' நினைவுக்கு வந்தான்.
நேற்று குரோம்பேட்டையிலுள்ள சிவராமனின் வீட்டுக்கு சேஷையா ரவியுடன் சென்றிருந்தேன். நெடுநெடுவென்று வளர்ந்திருந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள். 14 வயதுதானிருக்கும். எட்டிப் பார்த்த சிவராமன், வரவேற்றான். அந்தப் பெண்ணையும் அறிமுகப்படுத்தினான். நிரஞ்சனா. அவனது அக்கா மகள். சுருள் சுருளான முடியுடன், நோஞ்சானாக பிறந்த குழந்தையை மொட்டை மாடியில் தூக்கி வைத்துக் கொண்டு பாட்டி வடை சுட்ட கதையை நீயும் நானும் மாறி மாறி சொன்னோமே, அதே குழந்தைதான். அதே சுருள்முடிதான். அதே அரிசிப் பற்கள்தான். ஆனால், இப்போது பூசினாற்போல் இருக்கிறாள். 'இழுத்துக் கட்டிய உடல்' என தி. ஜானகிராமன் என் செவியில் முணுமுணுத்தார். ஆச்சர்யத்தில் வாய் பிளந்துவிட்டேன். நம்மிடமிருந்து விலகிய வயதை எல்லாம், அந்தப் பெண்தான் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கிறாள். வாய் நிறைய அங்கிள், அங்கிள் என்று அவள் அழைத்தபோதும், சுடச்சுட காபி கலந்து கொடுத்தபோதும்... சொல்லத் தெரியவில்லை. மனதில் அப்படியொரு சந்தோஷம் ஊற்றெடுத்தது. நம் கண்முன்னால் ஒரு குழந்தை, குமரியாகியிருக்கிறாள். பரிணாம வளர்ச்சியின் அழகு, சொரூப நிலை.
வெளியில் வந்தோம். வெய்யில் தகித்தது. 'Rain Rain go away, Come again another day... என பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து நாம் மனப்பாடம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு இது', கர்சீப்பால் முகத்தை துடைத்தபடியே சேஷையா ரவி முணுமுணுத்தான். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
காரணம் கேட்காதே. இரண்டு நாட்களுக்கு முன் 'பணமா பாசமா' படத்தை திரும்பவும் பார்த்தேன். 'மும்பை'யில் அரவிந்த்சாமி, 'நீங்க சாகற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது...' என்பாரே, அதுமாதிரியான ஒரு வசனத்தை இந்தப் படத்தில் நடிகை சரோஜாதேவி, டி. கே. பகவதியிடம் சொல்கிறாள். போலவே 'சூர்யவம்சம்' படத்தில் வரும் பல காட்சிகள், இதிலும் இடம்பெற்றிருந்தன. ரமணிச்சந்திரனின் ஏதோவொரு நாவல். வளையோசையோ, எதுவோ பெயர் நினைவில் இல்லை. பெயரா முக்கியம்? ஒரே கதையைத்தானே தொடர்ந்து நாவலாக ரமணிச்சந்திரன் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கிறார்?
இரு இரு, மெளனி மட்டும் யோக்கியமா? அவரது 24 சிறுகதைகளும் ஒரே சிறுகதைதானே என நீ சொல்வது என் செவியில் ஒலிக்கிறது. மறுக்கவில்லை. உலகிலுள்ள மனிதர்களை எல்லாம் பலமற்ற, கனவு காணும் பதினெட்டுப் பிராயத்து காதலர்களாக... அப்படிப்பட்ட காதலர்களின் பலத்துடனும் பலஹீனத்துடனும் கற்பனை செய்து காட்டுவதே மெளனிக்கு வாடிக்கை. அதுவே வேடிக்கை. ஒப்புக்கொள்கிறேன்.
என்றாலும் 'படிகளில்' ஏறி, 'மீட்சி'யின் வழியே 'நிறப்பிரிகை'யை பிடித்து அவருக்கு சமாதி கட்டிவிட்டாலும் 'எவற்றின் நடமாடும் சாயலாகவோ' அவர் உலவிக் கொண்டுதானே இருக்கிறார்? அதனால்தான் சிலநேரங்களில் அவர் அழியாச்சுடர். புதுமைப்பித்தன் குறிப்பிட்டதுபோல் மெளனி, எழுத்தாளர்களின் திருமூலர்.
இடைச்செறுகலாக ஒரு விஷயம் முத்தையா. 'THOUGHT' ஆங்கில இதழில் 'Introducing Mouni' என ஒரு கட்டுரையை நகுலன் முன்பு எழுதியிருக்கிறார். எவ்வளவோ தேடிப் பார்த்துவிட்டேன். அந்தக் கட்டுரையும் சரி, அந்த இதழும் சரி கிடைக்கவில்லை. நகுலனின் 'மொத்த' தொகுப்பிலும் அது இடம்பெறவும் இல்லை. உன்னால் முடிந்தால் அந்தப் பிரதியை கண்டுப் பிடித்து ஜெராக்ஸ் எடுத்துக் கொடு. ஈரேழு ஜென்மத்திலும் உனக்கு புண்ணியம் கிடைக்க நான் வழிகாட்டுகிறேன். ஜெராக்ஸ் என்றதும் ஜ்யோராம் சுந்தரின் ஞாபகம் வருகிறது. ஒரே இதழுடன் நின்றுவிட்ட 'மழை' சிற்றிதழில் யூமா வாசுகி எடுத்த கோபிகிருஷ்ணனின் ஒரே முழுமையான நேர்காணல் வந்திருக்கிறது. அந்தப் பத்து பக்கங்களையும் பிரதி எடுத்து தருமாறு சுந்தர் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். தர வேண்டும்.
அதெல்லாம் கிடக்கட்டும். மெளனியும், ரமணிச்சந்திரனும் ஒன்றா என யாராவது முஷ்டியை மடக்கலாம். பூஞ்சை உடம்பு. பதிலுக்கு தொடை தட்டினால், என் கால் எலும்பு உடைந்துவிடும். எனவே ஒரே வாக்கியம்தான். சுந்தரராமசாமியின் எழுத்துக்களும், சாணித்தாளில் பிரசுரமாகும் சரோஜாதேவியின் ஃபோர்னோ எழுத்துக்களும் கூட ஒன்றுதான் என்பதில் தீர்மானமாகவே நானிருக்கிறேன்.
சரி, இப்போது ரமணிச்சந்திரனின் நாவலுக்கு வருவோம். அதில், நாத்தனாரின் வளைகாப்புக்கு, தன்னை காதலிக்காத கணவனுடன் நாயகி செல்வாள். முத்து வளையலை போடுவாள். சீமந்தத்துக்கு இந்தமாதிரியான முத்து வளையல் சீராக வேண்டும் என நாத்தனாரின் மாமியார் கட்டளையிட்டிருப்பாள். எனவே பரிசு போலவும், சீதனம் போலவும் அது அமையும். நாயகன் நெகிழ்வான். இதற்கு சமமான காட்சியும் 'பணமா பாசமா'வில் இருக்கிறது.
இவையெல்லாம், காபியா, இன்ஸ்பிரேஷனா? இதற்கு பதில் சொல்வதைவிட, பதில் அவசியம் தேவையா என்ற கேள்வியே முன்னிலை வகிக்கிறது. தொடர்ச்சியும், சங்கிலி போன்ற ஒருவகையான கோர்வையுமே அனைத்தின் அடிநாதமாக இருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய்?
தமிழ் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன், ஓலைச்சுவடிகளில் கவிதையை எழுதுவதற்கு முன், பாணர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்திருக்க வேண்டும். முகம் தெரியாத மூதாதையர்கள் உச்சரித்த வாய்மொழி பாடல்களே காற்றில் உலவியிருக்க வேண்டும். அதனால்தான் சங்கக்கால புலவர்களால் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் எழுத முடிந்திருக்கிறது. இன்ஸ்பிரேஷன் இன்றி இது சாத்தியமில்லை.
இப்படிப்பார். 'பொன்முடி' திரைப்படத்தில் பாரதிதாசன் வசனம் எழுதியிருக்காவிட்டால், 'பராசக்தி' படத்தில் கருணாநிதியால் அந்த நீதிமன்ற வசனங்களை எழுதியிருக்க முடியுமா? சிரமம்தான். காரணம், வரிக்கு வரி கருணாநிதி எழுதியது பாரதிதாசனின் வரிகளுடைய எக்ஸ்டென்ஷன்தான்.
அவ்வளவு ஏன், போர்ஹேஸ் எழுத்துக்களின் தாக்கம் உம்பர்ட்டோ ஈகோவிடம் அதிகமாக காணப்படுவதை தேர்ந்த வாசகனால் உணரமுடியுமல்லவா? இதையே இப்படியும் சொல்லலாம். போர்ஹேஸ் சிறுகதைகள் முடிந்த இடத்திலிருந்து உம்பர்ட்டோவின் எழுத்துக்கள் சீறிப்பாய்கின்றன. உம்பர்ட்டோ ஈகோவின் Foucault's pendulam வாசிப்பதற்கு முன்னால் போர்ஹேஸ் எழுதிய Tlon, Uqbar, Orbis Tertius சிறுகதையை வாசிப்பது நல்லதல்லவா? (இந்த சிறுகதையை ‘லோன், உக்பார், ஒர்பிஸ் தெர்துய்ஸ்’ என்ற பெயரில் எளிமையாக, தெளிவாக, முழுமையாக நண்பர் பிரேம் (ரமேஷ்) தமிழ்படுத்தியிருக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மணல் பிரதி’ தொகுப்பில் இதனை காணலாம். நேரில் சந்திக்கும்போது இந்தப் பிரதியை உன்னிடம் தருகிறேன்.)
அதேபோல், கொரிய இயக்குநரான கிம் கி டுக்கின் 'The Bow' திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவபட்டா எழுதிய 'House of Sleeping Beauties' புதினம் ஏனோ கண்முன்னால் வந்து வந்து போகிறது. இரண்டுக்கும் தொடர்பில்லைதான். ஆனால், பிணைப்பு இருப்பதுபோலவே தோன்றுகிறது.
வேண்டுமானால் நீயே கவபட்டாவின் இந்த நாவலை வாசித்துப்பார். ஆங்கிலத்தில் கூட வேண்டாம். தமிழில் லதாராமகிருஷ்ணன், 'தூங்கும் அழகிகள் இல்லம்' என்ற பெயரில் இதை மொழிபெயர்த்திருக்கிறார். 'உன்னதம்' கெளதமசித்தார்த்தன் அதை வெளியிட்டிருக்கிறார்.
சித்தார்த்தன் என்றதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இனி மாதாமாதம் 'உன்னதம்' இதழ் வெளிவருமாம். சித்தார்த்தனை சந்தித்தபோது சொன்னார். அவரது நிலத்தை அடமானமாக வைத்து வங்கியிலிருந்து கடன் வாங்கியிருக்கிறாராம். அந்தத் தொகை தீரும் வரை இதழ் தவறாமல் வருமாம். சிறுபத்திரிகை வியாதி. செல்லப்பா, ஆத்மாநாம், 'இலக்கியவெளிவட்டம்' நடராசன் என தொடரும் பட்டியலில் கெளதம சித்தார்த்தனும் இடம்பெற நினைக்கிறார்.
ஷிட். எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டோம். இன்ஸ்பிரேஷன். ஆமாம், நாம் பேசி வந்தது இதைப்பற்றிதான். என்ன சொல்ல வருகிறேன் என்றால், வேர்களை அறிவது விழுதுகளை புரிந்து கொள்ள உதவும். அவ்வளவுதான். ஆனால், இப்போது விழுதுகளை மட்டுமே தொழுவுவது அதிகமாகிவிட்டது. தத்துவப் போக்கில் மட்டுமல்ல, இலக்கியப் போக்கிலும் இந்த நிலை நீடிக்கிறது. புதுமைப்பித்தன், மெளனி, கு.பா.ரா... என தொடரும் ஸ்கூல் ஆஃப் தாட், இன்றைய ஜே.பி. சாணக்யா வரை கிளை பரப்பி நிற்கிறது. பிரமிள், நகுலன்... என தொடரும் பட்டியல் இப்போதைய பின்னை நவீனத்துவ பிரதிகளில் மூச்சு வாங்க ஓய்வெடுக்கிறது. தமிழின் முதல் ஹோமோ செக்சுவல் நாவலான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' ஒருவகையில் இன்றைய 'ஜீரோ டிகிரி'க்கு முன்னோடி. டிக் ஷ்னரி ஆஃப் கஸார்ஸ் வாசித்தால் கோணங்கியின் புதினங்கள் ஓரளவு புரியும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வாழ்க்கையையும், தேவதாசிகளின் ரணங்களையும் அறிந்திருந்தால் முழுமையாகவே 'பாழி', 'பிதுரா'வுடன் உரையாட முடியும்.
அதாவது முத்தையா. பயிற்சியாக வாசிக்க ஆரம்பித்தால், எல்லாம் இன்பமயம். என்றாலும் புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நகரம்', கு. அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்', கு.பா. ராஜகோபாலனின் 'விடியுமா' போன்றவை என்றுமே மாஸ்டர் பீஸ்தான் என்பதை உரத்து சொல்வதில் வெட்கமேதும் இல்லை. இரு இரு. கோபித்துக் கொள்ளாதே. உட்கார். கடிதம் படிக்காமல் எங்கு கிளம்பிவிட்டாய்? சிகரெட் பிடிக்கவா? அட, மன்னித்து விடப்பா. ஆர்வக் கோளாறு. ஏதேதோ உளறிவிட்டேன். இப்போது அறுப்பதை நிறுத்திவிட்டு நேராக ரோஷினிக்கு வருகிறேன்.
ஆ... ஹை. புன்னகையை பார். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ரோஷினி குறித்து பேச ஆரம்பித்ததுமே நீ உதடு கிழிய சிரிப்பாய் என்று தெரியும். முதலில் உன் வாயை துடைத்துக் கொள். வழிகிறது. நீ, நான், ராமச்சந்திரன் மூவரும் போட்டி போட்டுக் கொண்டு காதலித்த அதே ரோஷினியை ஏவிஎம் ஸ்டூடியோவில் சந்தித்தேன். சென்ற கடிதத்தில் அந்த நடிகை வரும் விளம்பரத்தை புகழ்ந்திருந்தாய் அல்லவா? அதை எடுத்தது அவள்தானாம். சொன்னாள். அந்த விளம்பரத்துக்கு காமிரா பிடித்தவர் அவளது கணவனாம். வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டேன். இருவரும் ராஜிவ்மேனனிடம் பயிற்சி பெற்றபோது காதல் அரும்பியதாம். நான்கு வயதில் பையன் இருக்கிறானாம்.
சட்டென ஏவிஎம் ஸ்டூடியோ மறைந்துவிட்டது. நாம் அலைந்து திரிந்த பள்ளிக்கூடமும், வயல்வெளிகளும், தோப்புகளும் அப்படியே சிஜியில் முளைத்தது. அரைக்கால் டிரவுசரில் நானும், பாவாடை சட்டையில் அவளுமாக நின்றுக் கொண்டிருந்தோம். மாங்காய் அடித்து நான் கொடுக்க, புளியம் பழத்தை அவள் பதிலுக்கு கொடுத்தாள். அதை சாப்பிடுவதற்காக என் வாயருகில் கொண்டு சென்றேன். யாரோ தோளைத் தொட்டார்கள். புளியம் பழம் நழுவி விழுந்தது.
'ஹி இஸ் மை ஹஸ்பண்ட்' என்றாள். கை குலுக்கினோம். இருவருமாக இணைந்து அடுத்தமாதம் படத்துக்கு பூஜை போடப் போகிறார்களாம். 'நீயும் முத்தையாவும் என்னை டாவடிச்சீங்களே... அதுதான் கதை' என்று சிரித்தாள். சிரித்தான். சிரித்தேன். கணவரிடம் அனைத்தையும் சொல்லி இருக்கிறாள். அவர்கள் நெருக்கமாகவும், சிநேகமாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்காகவே அவளை நாம் சிறுவயதில் காதலித்திருக்கிறோம் போல.
''ஹீரோ கேரக்டர் பேரு என்ன தெரியுமா? ராமச்சந்திரன்!'' என அட்டகாசமாக ரோஷினியின் கணவன் சொன்னான். எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை. அவளும்/னும் சொல்லவில்லை.
சென்ற முறை நீ எனக்கு கடிதம் எழுதியபோது டாக்டர் ருத்ரன் உன்னிடம் கேட்ட கேள்வியை எனக்கு ஃபார்வேர்ட் பண்ணி இருந்தாய். i really would like to meet someone who had read the interpretation of dreams ( or being and nothingness)! இதில் interpretation of dreams குறித்து எனக்கு எதுவும் தெரியாது. செல்வேந்திரன் கேட்டதற்கு பதில் சொன்னது பைத்தியக்காரன். எனவே அவன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அல்லது டாக்டரை போய் சந்திக்க வேண்டும்.
ஆனால், being and nothingness பற்றி ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். காரணம் அது சார்த்தர் எழுதிய புத்தகம். சிமோன் தி புவாவுடன் 20 ஆண்டுகளுக்கும் மேல் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து, காதலுடன் வாழ்ந்தவரில்லையா? எந்தவொரு தத்துவ மாணவனையும் ஈர்க்கும் விஷயமல்லவா இது? தனக்கான சிமோன் தி புவாவை தேடுவது வரமா சாபமா? இதை The Nature of Second sex என்று சொல்வதைவிட, The Nature of First sex என்று சொல்லலாமா?
சார்த்தர் எழுதிய அந்த நூலை முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்ச் சூழலில் சார்த்தரை முழுமையாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள் எஸ்.வி. ராஜதுரை அல்லது அந்தக் கால சாருநிவேதிதா. இருவரும் சார்த்தரின் படைப்புகளை தெரிந்த அளவுக்கு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சார்த்தரை ஒன்றுமில்லாமல் தெரிதா, ஆக்கியதும், சார்த்தரை படிப்பதை நிறுத்திவிட்டேன். அது தவறு என்று இப்போது புரிகிறது. அவரது காதல் வாழ்க்கையை மட்டுமல்ல, இருத்தலியல் கோட்பாடுகளையும் முழுமையாக கற்க வேண்டும். என்ன செய்ய, வேர்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஞானோதயம் இப்போதுதானே உதித்திருக்கிறது?
எப்படியோ டாக்டர் எனது நினைவுகளை கிளறிவிட்டுவிட்டார். யோசித்தபோது ஞாபக அடுக்கிலிருந்து being and nothingness குறித்து ஒரேயொரு பீஸ்தான் வந்துவிழுந்தது. அதுகூட முழுமையாக இல்லை. சாராம்சம் மட்டும் கொஞ்சம். கொஞ்சம்...
'ஒரு ஆணும் பெண்ணும் ஏன் பழகுகிறார்கள் என்று அந்த ஆணுக்கும் தெரியும், பெண்ணுக்கும் தெரியும். ஆனாலும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். ஆண் தன் விருப்பத்தை தெரியப்படுத்தியதும், அந்தப் பெண் திடுக்கிடுவது போல் நடிக்கிறாள்....'
இந்த பீஸ் சரியா என்பதை டாக்டரை கேட்டுச் சொல். இந்த இடத்தில் காரல் மார்க்ஸ் எழுதிய விஷயமும் தொடர்ச்சியாக வந்து விழுகிறது.
The Immediate, natural and necessary relation of human being to human being is the relation of man to woman. The relation of man to woman is the most natural relation of human being to human being... - KARL MARX, EPM
ஸ்ஸ்ஸ்... அப்பா... ரொம்ப எழுதிவிட்டேன். கை வலிக்கிறது. போதும் முடித்துவிடுகிறேன்.
தோழமையுடன்
சாலமன்.
இந்த தொடர் விளையாட்டில் அடுத்ததாக கடிதம் எழுத (அதாவது முத்தையா, சாலமனுக்கு எழுதும் மடல்) நண்பர் நர்சிம்மை அழைக்கிறேன்.
- பைத்தியக்காரன்