எப்படியிருந்தாலும் ஒரு நிரந்தர வேலைக்கான அவசியம் அதிகரித்து வந்தது. மனநிலை குன்றியவர்களுக்கான பள்ளி நடத்திய ஜலாலுதீன் எனும் நண்பரும், நந்தன் பத்திரிகையின் நண்பர் ஒருவரும் என்னை நக்கீரனில் சேர்த்து விட்டார்கள். ப்ரூஃப் ரீடர் உத்தியோகம். 11 மணிநேர வேலை. 2000 ரூபாய் சம்பளம். இடையிடையில் சில கிஃப்ட்ஸ் கிடைக்கும். போனஸ் உண்டு. இங்கே நான் காலந்தவறாமையை மிகச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. கோபால் மிகவும் தங்கமான மனிதர். கோபாலின் தம்பிதான் ஆர்ட் டைரக்டர். அவருடைய பிஹேவியர் சரியில்லை. எப்போதும் அதிகார தோரணை உண்டு. ஒத்துப் போக இயலவில்லை.
முதல் நாள் இரவு 9.30 வரை வேலை பார்த்துவிட்டுச் சென்றதால் அடுத்த நாள் 11.30க்குத் தான் அலுவலகம் வர முடிந்தது. தாமதத்திற்காக முன்கூட்டியே என்னால் ஃபோன் செய்து சொல்ல இயலவில்லை. காலையில் கொஞ்சம் தூங்கிவிட்டேன். ‘ஏன் லேட்டா வர்றீங்க, ஃபோன் பண்ண முடியாதா?' என்று கத்திப் பேசினார் ஆர்ட் டைரக்டர் பிறர் முன்னால். இரவுகளில் சில சமயம் அலுவலகத்திலேயே தங்கவேண்டியிருந்தது. நக்கீரனில் இருக்கும்போதுதான் என் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. (10 செப்டம்பர் 2000). ஒரு வருடம் 3 மாதம் நக்கீரன் வேலை. கோபாலிடம் நான் வாங்கிய கடன் 4060 ரூபாயை இன்னும் என்னால் திருப்பித்தர முடியவில்லை. எப்படியிருந்தாலும் அதைக் கொடுத்துவிடுவேன்.
அமோகமாக நடந்தது என் மகள் ராணிஸ்ரீயின் திருமணம். நண்பர்கள் உதவினார்கள். கேட்டதற்கு அதிகமாகவே பணம் கொடுத்தார்கள். 28,000 ரூபாய் செலவானது. பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மூன்று தோழர் தோழியரின் பேருதவியால்தான் திருமணம் நடந்தது. அவர்கள் தர்மசங்கடமாக உணர்வார்கள் என்று கருதி, பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.
1993ஆம் ஆண்டு டேபிள் டென்னிஸை எழுதிக் கொண்டிருந்தபோது எனது முன்னாள் மனைவி நான்ஸியை மீண்டும் பார்க்கவேண்டுமென்று தோன்றியது. சென்னையில்தான் அவர் இருந்தார். சந்தித்தேன். இரண்டு குழந்தைகளுடன் கணவருடனும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார். கணவர் புள்ளிவிவரவியல் அதிகாரி. அந்தக் குழந்தைகள்மீது கொண்ட பிரியத்தால் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறினேன். நான்ஸி நெகிழ்ந்து போனார். நல்ல நிலைமையில் இருப்பதால் தானே வளர்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டார். அவர் பெயர் அப்போதும் நான்ஸி கார்ல்ராஜன் என்றே இருந்தது. அவரது பழைய பெயருக்கே மீண்டும் மாறிக் கொள்வதற்காக விடுதலைப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த சந்திப்பு அது. விடைபெறும்போது, இப்போதாவது கடவுளை நம்புகிறீர்களா என்றார் நான்ஸி. இல்லை என்றேன்.
எந்தப் படைப்புகள் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் எழுதுவதில்லை. பிறர் எழுதுவதையும் விரும்புவதில்லை. எழுத்து ஒரு உழைப்பு. அதற்கான மதிப்பென்று நிச்சயம் உண்டு. எந்த ரூபத்திலிருந்தாலும் குரூரத்தை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை. விமர்சனம் என்ற பெயரில் காட்டுத்தனமான தாக்குதல் கூடாது. மென்மையான தொனியில் ஒன்றின் மீதான அபிப்ராயங்களைச் சொல்லலாம். இதெல்லாம் குப்பை என்கிற மாதிரி சொல்லக்கூடாது. 1993 பிப்ரவரியிலிருந்து மே வரை ஒரு வினோத மனநிலையிலிருந்தேன். அது மிகவும் பிரகாசமான நிலை. அந்த மனநிலையில் எழுதப்பட்டதுதான் ‘டேபிள் டென்னிஸ்'. அது ஒரு பறத்தல் போன்ற உணர்வு. அந்தப் பறத்தல் மனநிலையில் அறிவு பாதிக்கப்பட்டுவிடவில்லை. எம்.ஏ. நான்கு பேப்பர் பரிட்சை எழுதி மூன்றில் தேர்ச்சி பெற்றேன். வேறு எந்தப் படைப்பையும் பாதிப்பான மனநிலையில் எழுதியதில்லை.
என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி... என்பது போலத்தான். என் சில கதைகளில் அக்கிரமங்களையும் முறைகேடுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
உதாரணமாக உளவியல் துறை, சமூகப்பணித் துறை போன்ற தொண்டு நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை எழுதியிருக்கிறேன். மனநிலை மாறுபாடு என்றால் என்ன என்று மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக 59 மனநோயாளிகளைப் பேட்டி எடுத்து ‘உள்ளேயிருந்து சில குரல்கள்' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன்.
நான் வாசித்த எதிர் உளவியல் தொடர்பான எட்டு புத்தகங்களிலிருந்து முக்கியமான சில விஷயங்களை அதில் ‘சில செய்திகள் சில சிந்தனைகள்' எனும் தலைப்பில் எழுதியிருக்கிறேன். முஸ்லீம் ஹஸ்ரத்துகள், மலையாள மாந்திரீகர்கள், இந்து சுவாமிஜிகள், பாதிரியார்களைச் சந்தித்து பேட்டி எடுத்து மனநோய்க்கான சிகிச்சையாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் ‘இன்னும் தொடரும் பழமை' எனும் தலைப்பில் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்' புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். சென்னையை மையமாக வைத்து எழுதினால் பிரச்சினையாகிவிடும் என்று ஒரு நண்பர் கூறியதால் கோவையை மையமாக வைத்து அந்தப் புத்தகத்தை எழுதினேன்.
இந்தப் புத்தகத்தின் மீதான ஒரு நல்ல மதிப்புரையை பாவண்ணன் தினமணியில் எழுதியிருந்தார்.
இந்தப் புத்தகத்தின் மூலம் சுவாதீன நிலைக்கும் சுவாதீனமில்லாத நிலைக்கும் இடையில் உள்ள மெலிதான இழையை நீங்கள் அறுத்துவிட்டீர்கள் என்றார் யுவன்.
எழுதும்போது மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவதில்லை. முழுமையின் பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது. இதுவரையில் நான் எழுதியவை எனக்குத் திருப்திகரமாகவே இருக்கின்றன. எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி நான் எழுதமாட்டேன். என் பாணியை மாற்றிக் கொள்வதிலும் எனக்கு விருப்பமில்லை. நான் எழுதிய எல்லாக் கதைகளும் (சில கதைகளைத் தவிர) யதார்த்தக் கதைகள்தான். கற்பனையும் நிஜமும் கலந்தவை. ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை' என்ற கதை மட்டும்தான் சர்ரியலிஸக் கதை. இது சோதனை முயற்சி. ‘மிகவும் பச்சையான வாழ்க்கை' எனக்கு மிகவும் பிடித்த கதை; ‘காணி நிலம் வேண்டும்' செண்டிமெண்ட் கதை. எனக்கு ஆதவன் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்க அவரால் முடிகிறது. நகுலன், சுந்தர ராமசாமியையும் பிடிக்கும்.
என் கதைகளில் ஒரே ஆள் எல்லாக் கதைகளிலும் தொடர்ந்து வருவது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. எனக்கு வாழ்க்கையே முக்கிய பிரச்சனையாக இருப்பதால் படிக்கும் உந்துதல் குறைவாகவே உள்ளது. நண்பர்களிடமிருந்து புத்தகங்கள் இரவல் பெற்றே படிப்பேன். என் சேகரிப்பில் ஏற்கனவே ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
கோணங்கியின் கதையில் உள்ள ஓட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் புரியவிலை. அந்த ஓட்டம் தடைப்படாமல் நீண்டு கொண்டே போகும். ஒரு கதை முடிந்த பிறகும்கூட அதை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றும்.
சுந்தர ராமசாமி தங்கு தடையற்று நன்றாகப் பேசக்கூடியவர். அது பெரிய பலம் அவருக்கு.
சாமர்செட் மாம், ஆல்டஸ் ஹக்ஸ்லெ என் விருப்பத்திற்குரியவர்கள். சாமர்செட் மாமின் 35 புத்தகங்கள் படித்திருக்கிறேன். எரிக்க யாங், பேர்ல் எஸ் பக், மேரி கோரல்லி, ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர், தாஸ்தாயெவெஸ்கி, மார்க்குவெஸ் ஆகியவர்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள்.
நான் இலக்கியத்திற்கு இதுவரை எந்தப் பரிசும் பெற்றதில்லை. பிரசுரிக்கத் தகுந்தவை என்றளவில் கணையாழில் குறுநாவல்கள் பிரசுரமாயின. இதுவரை மூன்றே மூன்று தடவைகள் இலக்கியவாதியாக இருப்பதற்காகக் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன்.
1. நண்பர் வே.மு. பொதியவெற்பன் அவர்கள் தன் பொன்விழாவில் ‘பொதிகை' பொன்விழா மலரை என்னை வெளியிடச் சொன்னார். நானும் இதற்கென்றே குடந்தை சென்றிருந்தேன். இது 30.4.2000 அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி. மிகவும் மனநெகிழ்வு தந்த ஒன்று.
2. திருப்பூர் தமிழ்ச் சங்கம் 20.1.2002 அன்று எனக்கு நன்கொடையாக ரூ 4000 கொடுத்தது.
3. National Folklore Support Centre நடத்திய விழாவில் 9.3.2002 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் கௌரவிக்கப் பட்டேன். இது எம்.டி.எம். எனக்குச் செய்த மறக்கவியலாத சிறப்பு.
இலக்கியக் கூட்டங்களுக்கு நான் அதிகம் போவதில்லை.
தத்துவங்களை எழுதுவதற்கு கவிதை, சிறுகதை, நாவல் வடிவம் தேவையில்லை. அதற்கு ஏராளமான தத்துவப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகவே படித்து விடலாம். Will Durant எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபிலாசஃபி எனும் புத்தகம் மேற்கத்திய தத்துவங்கள் எல்லாவற்றையும் சொல்கிறது.
சுதந்திரக் கலாச்சாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன். ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளத் தீர்மானித்தால் சமூக பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. அது பாதுகாப்பான உறவாக இருந்தால் சரி. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம், அந்த உணர்வு இருக்கும்வரை. இதே உரிமை பெண்ணுக்கும் உண்டு. ஒரு மனிதன் 60 வயதுவரை வாழ்கிறான் என்றால் நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு. இதைத்தான் சுதந்திரக் கலாச்சாரம் என்று சொல்கிறேன். கற்பு எப்படிப் புரிந்து கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அது தேவையற்றது. திருமணத்தை மீறிய உறவுகள் இருக்கத்தானே செய்கின்றன!
பெண் தான் விரும்புகிறபடி உறவு வைத்துக்கொள்ளக் கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும். பாலியல் சுதந்திரம் மிகவும் அவசியமானது. 9ம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும்.
சக மனிதனை விரோதியாகக் கருதுவது மிககொடூரமான விஷயம். தனக்கும் சக மனிதனுக்குமான சமூக இடைவெளிதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அலுவலகங்களில் ஊழியரென்றும் அதிகாரி என்றும் வேறுபாடு இருக்கக்கூடாது. அப்போதுதான் சுமுகமாக இருக்கும். இந்திய நிலையை முதலாளிகள் புரிந்துகொள்ளவில்லையென்று தெரிகிறது. உதாரணமாக சரியான நேரத்திற்கு ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இது நிச்சயம் நடைமுறையில் பலன் தராது. பஸ் சீக்கிரம் வராது. சில வேளைகளில் பஸ்ஸே இருக்காது. குளிப்பதற்கு பாத்ரூம் கிடைக்காது. இது போன்ற காரணங்களால்தான் மிகவும் தாமதமாகிவிடும். இந்த விஷயம் நிறைய சிக்கல்களுக்குக் கொண்டுபோகும். இதையெல்லாம் கடந்து அலுவலகம் சென்றடைந்த ஊழியரை ‘ஏன் தாமதம்' என்று அதிகாரி கூச்சல் போட்டால் ஊழியர் அப்செட் ஆகிவிடுகிறார். அவரால் அன்று முழுதும் சரியாக வேலை செய்ய இயலாதபடியாகிறது. இதனால் அலுவலகத்திற்குத்தான் நஷ்டம். இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணமாகச் சொன்னேன். இதைப்போன்று அனேக விஷயங்கள் உண்டு. இந்த நடவடிக்கைகளால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுவரை 17 நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பணி அனுபவத்தில் நான் மூன்று நல்ல உயர் அதிகாரிகளைத்தான் பார்த்திருக்கிறேன்.
1. A S Kalyanaraman, Sr. Field Manager, IMRB
2. Cre-A: S. Ramakrishnan
3. Dr M Saradha Menon
எழுதுகிற எழுத்தை எழுத்தாளன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. அப்போதுதான் அதில் நேர்மை இருக்கும். எழுத்தை மிக உணர்ந்துதான் எழுதுகிறோம். ஆகையால் அந்த உணர்வோடு வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது.
என் மனைவி என் கதைகளைப் படிக்க மாட்டாள். அவளுக்கு இலக்கியப் பழக்கம் குறைவு. பக்கத்திலிருக்கும் சிவன் கோயிலில் கதா காலட்சேபம் நடந்தால் போவாள். சுகி சுப்பிரமணியம் பேச்சிலும் அவளுக்கு ஈடுபாடு உண்டு.
நான் தனியன். எந்த அமைப்பையும் குழுவையும் சார்ந்து இயங்குபவன் அல்ல.
நிறுவனங்களில் வேலை பார்ப்பது இதுவரை சிக்கலாகவே இருந்திருக்கிறது. இதனால் நான் ஒரு எதிர் நிறுவன ஆளுமை என்று என்னைப் பற்றி நினைக்கிறேன். இதைப்பற்றி ‘தூயோன்' தொகுப்பில் ‘பரிணாமம்' என்ற கதையில் சொல்லியிருக்கிறேன். அனேக சிரமங்கள் இருந்தாலும் மன நிறைவான தருணங்களும் உண்டு. நண்பர்களாலும் தோழியராலும் நிறைந்தது என் வாழ்க்கை.
வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை எப்படி மாற்றவேண்டுமென்று தெரியவில்லை.
ஒன்பது மாதம் முன்பு, தொடர்ந்து மூன்று வாரங்கள் சுய நினைவில்லாமல் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். டாக்டர் சாரதா மேனன் ‘மூன்று வாரங்கள் உங்கள் மெமரி இரேஸ் ஆகியிருந்தது' என்றார்கள். இது எப்படி நடந்தது, என்ன காரணமென்று தெரியவில்லை.
தற்சமயம் சில மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது உடனடித்தேவை - ஒரு வேலை.
(மழை ஜூலை 2002ல் வெளியானது)
கார்காலக் குறிப்புகள் - 51
1 day ago
30 comments:
ஒரு எழுத்தாளன் என்பதை தாண்டி மனிதனாக மனதிற்குள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன கோபியின் வாழ்க்கைப்பதிவுகள்.
நிச்சயம் நாம் நல்லவிதமாய்த்தான் இருக்கிறோமா என்ற யோசனையை தூண்டிவிடும் எழுத்துக்கள் கோபிகிருஷ்ணனுடையது. அவரது வாழ்க்கையே ஒரு பிம்பக்கரைசலின் அடியில் தேங்கியிருக்கும் கறையாகத்தான் அவருடன் பழகிய்வர்களுக்கு தெரிந்திருக்கும். அவரது எண்ண ஆளூமையை சரியாக எழுத்தில் கொண்டுவர முடிந்தவருக்கு வாழ்வு பலன் தராத வருத்தம் பெரிதும் நெஞ்சை அழுத்துகிறது.
இன்னும் நமக்குத்தெரியாமல் எத்தனை கோபிகிருஷ்ணன்கள் நம்மைத்தாண்டி அல்லது நம்முடனே அலைந்து கொண்டிருக்கிறார்களோ.எத்தனைப்பேருக்கு அவர்களது வாழ்வை பதிவு செய்யும் பாக்கியம் கிட்டும். தெரியவில்லை.
நீண்ட நாட்களுக்குபிறகு மனதில் ஒரு வெறுமை!!!
பகிர்வதற்கான வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும், பைத்தியக்காரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
அய்ஸ் சொன்னமாதிரி இதை ஒரு புத்தகமா மாத்தி குடுங்க.
கையோடிய டைப் செய்து பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி தல.
இப்பதிவு முடிவு பெறுவது கவலையாய் உள்ளது.
மிக்க நன்றி சுந்தர்,அரிதான ஒரு பதிவை தந்ததிற்கு.
ஜான் நாஷ் சொல்கிறார் -
So at the present time I seem to be thinking rationally again in the style that is characteristic of scientists. However this is not entirely a matter of joy as if someone returned from physical disability to good physical health.
கோபிக்கு ஒரு சாதாரணர் போல் எழுதுவது அவருடைய நிலையிலிருந்து கீழே இறங்கிவருவது போல இருந்திருக்கலாம். அவர் உலகம் அவருக்கு இன்னமும் பிடித்திருந்திருக்கலாம்.
மிகவும் பாதித்த ஒரு தொடர்.
சரியாக அவர் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு அளித்த பேட்டி அல்லவா,
எதிர் நிறுவன ஆளுமை என்று குறிப்பிட்டிருந்தார், இந்த ஆளுமையோடு இந்த அற்ப வாழ்வை வாழ்தல் சாத்தியமா
பல நிறுவனங்களில் மேலாளர்களை கை ஓங்கியும் கேட்க முடியாத வசைமொழிகளை பொழிந்தும் உடனடியாக ராஜினாமா கடிதத்தை விசிறியெறிந்தும் வந்திருக்கிறேன் ஐநதிலக்க ஊதிய இழப்பையெல்லாம் பொருட்படுத்தாது. நுண்ணதிகாரத்தை சகித்துக் கொள்ளவியலாத அளவுக்கு நுண்ணுணர்வையும் சொரணையையும் பெற்றிருப்பது தான் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று நினைக்கிறேன்,
ஏன் லேட் என் என்ற கேள்வியை எதிர்கொள்ளாத எந்த நடுததர வர்க்கப் பிரஜையும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன், அந்தத் தருணங்களில் எல்லாம் தொண்டைக்குள் அசிங்க அசிங்கமான வார்த்தைகள் திரளும்,
அவரது முன்னாள் மனைவி நான்ஸி அவர்களை சந்தித்த கணங்களை விவரித்த பத்தியின் முடிவில் (அறையிலும் அறைக்கு வெளியேயும் யாரும் இல்லை) தேம்பி தேம்பி அழுதேன், இதைச் சொல்லிக் கொள்வதில் வெட்கம் எல்லாம் இல்லை, பலமுறை இப்படி அழுதிருக்கிறேன்,
//அந்தக் குழந்தைகள்மீது கொண்ட பிரியத்தால் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறினேன்//
//எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த சந்திப்பு அது. விடைபெறும்போது, இப்போதாவது கடவுளை நம்புகிறீர்களா என்றார் நான்ஸி. இல்லை என்றேன்.//
காலத்தால் நிறங்கள் மாறிக்கொண்டேயிருக்கும் இந்த மனதின் வினோதங்கள் தான் வாழ்வை அர்த்தப்படுத்துகிறது.
//எந்தப் படைப்புகள் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் எழுதுவதில்லை. பிறர் எழுதுவதையும் விரும்புவதில்லை. எழுத்து ஒரு உழைப்பு. அதற்கான மதிப்பென்று நிச்சயம் உண்டு. எந்த ரூபத்திலிருந்தாலும் குரூரத்தை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை. விமர்சனம் என்ற பெயரில் காட்டுத்தனமான தாக்குதல் கூடாது. மென்மையான தொனியில் ஒன்றின் மீதான அபிப்ராயங்களைச் சொல்லலாம். இதெல்லாம் குப்பை என்கிற மாதிரி சொல்லக்கூடாது.//
இந்த மனதின் மென்மையில் மேன்மையில் கரைந்து நெகிழ்ந்து போகிறேன்.
//சுதந்திரக் கலாச்சாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது//
//சக மனிதனை விரோதியாகக் கருதுவது மிககொடூரமான விஷயம். தனக்கும் சக மனிதனுக்குமான சமூக இடைவெளிதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்//
//அலுவலகங்களில் ஊழியரென்றும் அதிகாரி என்றும் வேறுபாடு இருக்கக்கூடாது//
இதெல்லாம் சாத்தியமா, எங்கேனும் உலகில் இப்படியொரு இடம் கிடைக்குமா,,,
//வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை எப்படி மாற்றவேண்டுமென்று தெரியவில்லை//.
எனக்கு பகிர்ந்து கொள்ள இன்னும் நிறையவே இருக்கிறது, நன்றாக குடித்துவிட்டு பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் போலிருக்கிறது.
//
சுதந்திரக் கலாச்சாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும்.
//
சரியாக சொன்னார், நடைமுறையில் இயலுமா என்பது வேறு கேள்வி.
ஏற்கனவே சாருவின் தளத்தில் கோபியை பற்றி படித்திருக்கிறேன்.
முயற்சி எடுத்து பதிவுலக மக்களுக்காக நீங்கள் இட்ட பதிவுக்கு நன்றி.
அரிய பொக்கிஷத்தை அறியத் தந்தமைக்கு உங்களுக்கும், பைத்தியக்காரனுக்கும் நன்றி!
சுந்தர்..
ரொம்ப அருமையான செய்தியைத் தேடிப் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள். நன்றி..
நானும் இந்தப் பேட்டியைத் தேடிக் கொண்டிருந்தேன்..
கோபிகிருஷ்ணன் தனது கடைசிக் காலங்களில் பட்ட கஷ்டங்களையெல்லாம் படித்தபோது கண்ணீர் தானாகவே வந்தது.. என்ன ஒரு வாழ்க்கை அது..
இறப்பதற்கு முதல் நாள் ஒரே நிறுவனத்திற்கு 50 வேலை கேட்டு விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருந்ததாகப் படித்தேன்.. மனம் ரொம்பவே வெறுப்பாகிவிட்டது.
என்ன நாடு இது..? ஒரு படைப்பாளியையும், எழுத்தாளனையும் மதிக்கத் தெரியாத, வாழ வைக்கத் தெரியாத நாடெல்லாம் ஒரு நாடா..?
கோபம், கோபமாக வருகிறது..!
Splendid!
இதை பதிவேற்றியதற்கு நன்றி சுந்தர்.
ஒரு நல்ல எழுத்தாளருக்கு நிறைவான காணிக்கை உங்களின் பதிவு.
தமிழ் வாசகர்கள் சார்பாக கோடானு கோடி நன்றிகள் ஜ்யோவ்ராம் சுந்தர்.
குப்பன்_யாஹூ
கோபிகிருஷ்ணனின் புத்தகங்கள் படித்து, இறப்பை அறிந்துள்ளேன் தவிர இந்தப் பதிவுகளிலுள்ள எதையும் அறிந்திருக்கவில்லை. அசாதாரணமான நெகிழ்ச்சியுடைய வாழ்வை வாழ்ந்திருக்கிறார், எழுதியிருக்கிறார். சம்பத், கோபிகிருஷ்ணன், நகுலன் போன்ற எதிர்த்திசை ஆழ்நீரோட்டங்கள் இன்னுங்கூட விரிவாக அறிமுகப்படுத்தப்படவேண்டும். இந்தப் பதிவுகளுக்கு மிக்க நன்றி.
-சன்னாசி
மன நோய்களுடனும்,சமூகத்துடனும்
போராடி ஒய்ந்து போன ஆத்மாவின்
குரல் இந்தப் பேட்டி.தன் மகளை
ஏன் 18 வயதில் திருமணம் செய்து
வைத்தார். அவருக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வழி செய்திருக்கலாமே.
நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்..மிக அரிய பகுதிகள்.. அறிய வேண்டியதும் கூட
நேரில் நிறைய பேச வேண்டும்!
இந்த பதிவில் நான் இதை எழுதுவது கூட நாகரீகமான செயல் அன்று, இருந்தும் எழுதுகிறேன் சுந்தர், நரசிம், லேகா, சன்னாசி கவனத்திற்கு (மற்ற எல்லா பதிவர்கள் கவனத்திற்கும்).
கோபிகிருஷ்ணன் ஆரம்ப காலங்களில் மிக நல்ல அரசாங்க வேளையில் இருந்துள்ளார். ஒருவேளை தமிழின் மீது உள்ள தீராத ஆர்வம் தான் அவருக்கு வேலையின் மீது ஆர்வம், பிடிப்பு வராமல் போனதோ (எப்படி நம்மை இணைய ஆர்வம் தொந்தரவு செய்கிறதோ). அதனால் தான் வறுமை நிலைக்கு தள்ளப் பட்டரோ என வருத்தம் கொள்ள செய்கிறது.
எழுத்தாளர் சுஜாதா தமிழ்,விஞானம், சினிமா, கமல், ரஜினி மீது ஆர்வம் கொண்டு இருந்திருந்தாலும் எப்படியோ தனது அரசாங்க வேலையை முப்பது வருடம் செய்து உள்ளார் .
பாலகுமாரனாலோ, பாரதிராஜாவாலோ தங்களது வேலையை தொடர முடிய வில்லை, கலை, எழுத்து ஆர்வத்தால்.
சுந்தர், நரசிம் இது குறித்து கூட விளக்கமாக பதிவோ பின்னூட்டமோ இடலாம்.
குப்பன் யாஹூ
கோபி கிருஷ்ணன் எங்கேயும் தன்னை ஒரு இலக்கியவாதியாக கூறி கொண்டதில்லை, நானும் அந்த கூட்டத்தில் இருக்கிறேன் என்று மகிழ்கிறேன் என்றார். அது கூட தற்செயல் நிகழ்வாக தான் இருக்கும்.
இன்று கக்குஸ் போனதையெல்லாம் எழுதி அதை உலக இலக்கியம் என்று கேரளாவிற்கு விற்கும் பிரபல(மொத்தம் 459 பேருக்கு தெரியுமாம்) இலக்கியவாதிக்கு கோபி எவ்வளவோ மேல்!
தன்னை ஒரு மனநோயாளி என்றும், தான் பல முறை தற்கொலை முயற்சி செய்த்ததையும் நேர்மையாக ஒப்புகொண்டுள்ளார்! அந்த நேர்மைக்கு மரியாதை கொடுங்கள்!
சென்ஷி, கார்த்திக், லேகா, ஸ்ரீதர் நாராயணன், யாத்ரா, ஜோ, வெயிலான் உண்மைத் தமிழன், ரானின், மணிகண்டன், குப்பன் யாஹு, நர்சிம், அனானிகள்... நன்றி...
குப்பன் யாஹூ... அவர் எப்போதும் ‘நல்ல அரசாங்க' வேலையில் இருந்ததாகத் தெரியவில்லை.
அனானி, தன் பெண்ணை ஏன் படிக்க வைக்கவில்லை என்பதற்கான காரணம் எனக்குத் தெரியாதென்பதால், என்னிடம் பதிலில்லை.
இந்த தொடர் பதிவை பிரதி செய்து வைத்திருக்கிறேன் படித்து முடிந்ததும் என்னவோ போல இருக்கிறது...
இனிமேல்தான் டேபிள் டெனிஸ் படிக்க வேண்டும் புத்தகம் வந்து சேர்திருக்கிறது இன்னமும் கைகளில் கிடைக்வில்லை.
பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத இந்த நாட்களில் எழுகிற இந்த உணர்வுகளை என்ன செய்வது...
பகிர்வுக்கு நன்றி...
நன்றி, தமிழன் - கறுப்பி.
மிக்க நன்றி சுந்தர்,சிறப்பான ஒரு வாசிப்பு அனுபவம் கிடைக்கச் செய்தமைக்கு....
மனதை அதிகம் பாதிக்கின்ற கோபியின் வாழ்க்கைப்பதிவுகள்.
சுந்தர்,
கோபிகிருஷ்ணனை அவரது மரணத்திலிருந்துதான் அறியத்தொடங்கினேன். இந்த நேர்காணலை வாசிக்கும்போது, இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் (சு.ரா எழுதிய) நினைவோடையில் வரும் ஜி.நாகராஜனைப் போல, எப்படி இத்தகைய தத்தளிப்புக்களுக்கிடையில் இருந்து தமது படைப்புக்களை இவ்விருவரும் எழுதியிருப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றுகின்றது. ஜி.நாகராஜனைப் போலவே,கோபிக்கும் இலக்கியக்கூட்டங்களுக்குப் போவதில்/குழுவாய் இயங்குவதில் விருப்பமின்மை எனப் பல விடயங்களில் ஒற்றுமையைப் பார்க்க முடிகின்றது.
மழையின் எத்தனையாவது இதழில் இந்த நேர்காணல் வெளிவந்தது? என்னிடமிருந்த மழை இதழொன்றில், கோபியின், 'மனநோயாளிக்கான சிகிச்சைக் குறிப்புகள்' என்றொரு கட்டுரையை வாசித்ததாய் நினைவு.
எல்லா கேள்விக்கும் விடை தெரிந்திருக்க தேவை இல்லை. அது தான் வாழ்க்கை, இது போன்ற ஒவ்வொரு அனுபவமும், நம்மை, நம் வாழ்வை பதப்படுத்த மட்டுமே பயன்படுத்தி கொள்ள நாம் நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும்.
Hindsight is 20/20. அவர் வாழ்ந்த காலத்தில், இருந்த சூழலில், எடுக்கப்பட்ட முடிவுகள், அதை நாம் இப்போது கேள்வி கேட்பது, சரியாகாது. உன்னதமான மனிதர், இந்த முயற்சிக்கு நன்றி. அவரின் படைப்புகளை நாம் இணையத்தில், ஏற்றி, அனைவரும் படிக்க வழி செய்ய வேண்டும்.
தாயநிதி & டிஜே... நன்றி.
@டிஜே, ஜூலை 2002 இதழில் வந்திருக்கிறது. முதலில் பைத்தியக்காரன் ஒரே இதழ்தான் மழை வந்திருக்கிறது எனச் சொன்னார். பிறகு, அகநாழிகை வாசுதேவன் மூலம் நானறிந்தது மூன்று இதழ்கள் வந்திருக்கின்றன. பிரசுரம் ஆன இதழ் எண் தெரியவில்லை :(
//இன்று கக்குஸ் போனதையெல்லாம் எழுதி அதை உலக இலக்கியம் என்று கேரளாவிற்கு விற்கும் பிரபல(மொத்தம் 459 பேருக்கு தெரியுமாம்) இலக்கியவாதிக்கு கோபி எவ்வளவோ மேல்!// மிகச் சரியான கருத்து! நீங்கள் குறிப்பிடும் “பிரபலம்”, ஓசியில் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தைப் பார்த்துப் புல்லரிக்கும் மோடிமஸ்தான் மட்டுமே!
//ஓசியில் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தைப் பார்த்துப் புல்லரிக்கும் மோடிமஸ்தான் மட்டுமே!//
தமிழரசன் நீங்களும் பலே பேர்விழி தான்!
வின்சென்ட் வான்காவைப்போல வாழும் போது செத்து செத்து வாழ்த்திருக்கிறார்,பசி பட்டினி,ஏழ்மையை கடைசி நிலை வரை கண்டிருக்கிறார்..கனடா போனதில்லை,அமெரிக்கா,ஆஸ்த்திரேலியா போனதில்லை.நல்ல பியூசன் இசையை உயர்தரமான பிளேயரில் கேட்டதேயில்லை.மோக்கா சென்று நூறு ருபாய் காப்பியை குடித்ததில்லை.
வாழ்வில் ஒரே மகிழ்ச்சி தன மகளுக்கு 28000 ருபாய் செலவில் கல்யாணம் செய்தது.
அய்யா இலக்கிய ரசிகர்களே இவரின் புத்தகங்கள் இந்நேரம் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும்,தயவு செய்து ஒரு புத்தகம் ரூ 150 என்று கணக்கிட்டு ,தபால் செலவு ரூ 50 எனக்கொண்டு குறைந்தது ரூ 500 ஆவது இதை அனுப்பிய பதிப்பகத்திற்கு அனுப்பினால் நீங்கள் உண்மையான எழுத்தை சிலாகிப்பதற்கு அர்த்தமாகும்.இன்றைய தேதியில் மகா கேவலமான "தோரணை"படத்தின் டிக்கெட்டுகள் கூட 120 ருபாய்.காலத்திற்கும் வைத்து போற்றக் கூடிய படைப்புகளை இலவசமாக வாங்கவே கூடாது,அவர் மனைவி இன்றும் புரூப் திருத்திக் கொண்டு கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார்.அவருக்கு நிச்சயம் இந்த பணம் முழுவதும் போய்ச் சேரும் (தமிழினி, ஜ்யோவ்,மற்றும் இந்த குழுவின் மீது அளவு கடந்த மதிப்பு வந்து விட்டது)
வின்சென்ட் வான்காவின் பெரும்பாலான ஓவியங்கள் அவரது வீட்டு வாடகைக்கும் பிரட் வாங்கவுமே பயன்பட்டன.இன்று அதை பாதுகாப்பதற்கே ஆயுதப் படையை போட்டுள்ளனர். வாழும் போது அங்கீகாரம் செய்யாத தமிழினத்தை கண்டு வெட்கி தலை குனிகிறேன்.
கார்த்திகேயன்
அமீரகம்
hello , wat a life ? mohammed shukri s best known autobiography ,FOR BREAD ALONE is better. chennai is the fourth metro politan city . Ofcourse India is far far better than Morocco where mr.shukri lived.At the age ,20 he started learning to read and write. till that he was living without any wish even getting a job for his life. even.But here Gopi an educated youth with clear visions on him and the society where he lived was experienced the taste of third world poverty. Gopi may be the fourth tamilan who tasted poverty in different aspect,his society was poor in basic needs, so he couldnt achieve anything, secondly the society was without a sensuality, thirdly it lacks the creativity, how could it happened.
the first tamilan i knw s bharathiyar, 2, puthumai pithan, 3 bramil fourth gopi, matyrs of tamil literature and liberal thoughts, liberal lust feels.
O ,tamil nadu, u r cursed one, how many are living and dying like this on ur lap.
O tamil language, u r a slave of unwanted social ethics. when r u going to know this ....
bhaamini from goa
வேகமான மேலோட்ட வாசிப்பில் இதுவரை உங்கள் இடுகைகளின் பக்கம் வராமலிருந்தேன்.எழுத்தின் ஆளுமை மனதில் நெருடல்.மேலும் சொல்ல இயலவில்லை.
Post a Comment