அதிகாரம், அதிகாரமழிப்பு, மாற்று அதிகாரம் என விரியப் போகும் இந்தக் கதையை ஒதுக்கத் தேவையானவை : (1) கொஞ்சம் பெயர்கள் (2) கொஞ்சம் சிந்தனை (3) கொஞ்சம் கவிதை (4) நிறைய பாலியல் ஆசைகள் (5) ..... (... ல் பிறகு உங்களுக்கு விருப்பமானதை நிரப்பிக் கொள்ளலாம், இப்போது கதைக்குச் செல்ல நேரமாகிவிட்டது).
அதிகாரம் என்பதை நல்ல அதிகாரம், கெட்ட அதிகாரம் என இருமைகளுக்குள் வைத்துப் பார்க்க முடியாது. அதிகாரத்தில் வேண்டுமென்றால் சில நல்ல கூறுகள் இருக்கலாம். உரையாடலையும் அதிகாரமாகச் சொல்வது அதன் வீச்சை குறுக்குவதே ஆகும். தன்னினும் பெரிய வேதாளத்தைச் சுமந்தபடி முருங்கை மரம் ஏற விழைகிறான் விக்ரமாதித்யன். பிசின்களில் ஊறும் பூச்சிகளும் அவனுடன் சேர்ந்து கொள்கின்றன. இக்னேஷியசின் தட்டையான மார்பைத் தடவி குறி விரைக்கிறாள் பூங்கோதை.
மயிர்களடர்ந்த வலிய கைகளை இறுக்கிப் பிடித்து உச்சமடைகிறாள் மன்மோகனின் திசை தவறிய விந்து சிதறிக் கிடக்கிறது தெற்கே (மிக மிகத் தெற்கே). டெல்லி என்பது நகரம், நகரமானதன் நினைவுகளில் உறுபசி மிரட்ட ஓடி ஒளிகிறது - potency கேள்விக் குறியான காலம். ஒருவர் காட்டிக் கொடுக்கிறார், ஒருவர் கைதாகிறார், ஒருவர் சரணடைகிறார், ஒருவர் வன்புணரப்படுகிறார், ஒருவர், ஒருவர், ஒருவர், ஒருவரென எழுதிப் போகும் விரல்களுக்கு மோதிரம் வாங்கிப் போடுகிறார் இன்னொருவர். இப்போது எழுதும் விரல்களும், மோதிரம் போட்டும் விரல்களும் ஒரே படித்தானவைதானா?
ஆண் காமம் குறி விறைக்கத் துவங்குகையில் ஆரம்பித்து விந்து சிந்தியவுடன் சுருங்கி முடிகிறது - ஆண் காமம் லீனியர் வகையென்றால் படர்ந்து விரியும் பெண் காமம் பல உச்சங்களை உடைய நான் லீனியரா?
முட்டி வலிக்குதும்மா, கொஞ்சம் நகரேன்
தலைவலியென்று ஒதுங்கும் பெண்ணை அதிகாரத்தை நிராகரிப்பவள் என்றும், கால் அகட்டிப் படுப்பவளை அதிகாரத்திற்குத் துணை போகிறவள் என்றும், மேலேறிச் செய்யச் சொல்பவளை அதிகாரத்தை நிலைநாட்டுபவள் என்றும், மேலேறிச் செய்பவளை அதிகாரத்தைத் தலைகீழாகக் கவிழ்ப்பவள் என்றும், அதிகாரத்தை, அதிகாரப் படிநிலைகளை, நுண் அதிகாரத்தை, மாற்று அதிகாரியை, அதை இதை மற்றதை
நண்பா பாரதியைப் படித்தாயா படித்தாயா நண்பா பாரதியை பாரதியை படித்தாயா நண்பா என்ற வரிகளைப் படிக்கையில் நண்பன் கள்ளிச் செடிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். இவன் நின்றுவிட்டான். நண்பன் கடற்கரை மணலில் பாதம் புதையப் புதைய நடந்து கொண்டிருந்தான். குள்ளமாகியபடி அலைகளில் விழுந்து மறைந்தான்.
மார்க்யூஸ் தொலைபேசினான். எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்வதில்லை அவன். என்னுடைய தொலைபேசி அழைப்புகள் இப்போது கண்காணிக்கப்படுகின்றன. எனது அசைவுகள் அத்தனையும் மேலிடத்திற்குத் தெரியப்படுத்த என்றே நவீன கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சொன்னால் பலர் சிரிக்கிறார்கள்.
இப்போதெல்லாம் நான் தொலைக்காட்சிகூடப் பார்ப்பதில்லை. எந்தெந்த நிகழ்ச்சிகள் பார்க்கிறேனென்பதும் கண்காணிக்கப்படலாம். அதன்மூலம் என்னுடைய மனநிலையை அவர்கள் கட்டமைக்க முயலலாம். அதில் சிறிதளவு வெற்றிபெற்றால்கூடப் போதும், என் கதை முடிந்துவிடும்.
பங்கர் மாதிரியான ஒன்றைச் செய்து அதற்குள் வசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.
இதற்குமுன்னால் பெயர்தெரியா ஊர் ஒன்றில் என்னைச் சிறைபிடித்துவிட்டார்கள். விவரங்கள் சொல்லவேண்டிய கட்டாயங்கள் அந்த நாட்டில் இல்லைபோலும். புரியாமல் பேசினாலே சிறையடைக்கப் போதுமானதாயிருக்கலாம். எப்படியிருந்தபோதும், எனது குற்றப்பட்டியலை நீதிபதி வாசிக்கும்போது அடக்கமுடியாமல் தும்மல் வந்தது. தும்மிக் கொண்டே என்மொழியில் பேசினேன், குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது புரியாமல். நீதிபதி தீர்ப்பை வழங்க ஆரம்பிக்கையில் அடக்க இயலாமல் எனக்கு வந்தது குசு. அதை அவர்கள் அதிகாரத்திற்கு எதிரானதாகப் புரிந்து கொண்டார்கள்.
இப்போதெல்லாம் இருமல் - அதுவும் கோழைகளுடன்கூடிய இருமல் - அதிகரித்துவிட்டட்து. இதைக்கூட இருமிக் கொண்டேதான் எழுதுகிறேன். வாயைமூடிக் கொண்டு இருமுகிறேன். சத்தம் வெளியில் கேட்டுவிடக் கூடாது. மற்றவர்களுக்கு என்னுடைய வியாதி தொற்றிவிடக் கூடாது.
புரியாமல் பேசுவதற்கே சிறையென்றால் இங்கு புரியும்படி பேசுவது அதைவிடவும் பெரிய தண்டனை கிடைக்கும்போலும். சைபர் கிரைம் போலீஸிடம் யாராவது புகார் கொடுத்துவிடப் போகிறார்களே என இதை எழுதிச் செல்லும் என் கைகள் நடுங்குகின்றன.
இப்போது கதை இங்கே மாறி, வேறொரு தலைப்பில் சொல்லப்படப் போகிறது. அந்தக் கதையின் தலைப்பு : விஜி என்கிற புறாவும் பாலு என்கிற சிறுவனும்
ஜெயனுக்குப் பறவைகள் என்றால் உயிர்; பாலுவுக்கும்.
அவனுடைய அப்பா சடசடவென மழை பெய்யும் ஒரு நாளில் வயர் கூடையில் மேல் துண்டு போர்த்தி எடுத்து வந்திருந்த இரண்டு புறாக் குஞ்சுகள் நடுங்கியபடி இருந்தன. அறைக்குள் எடுத்து வந்து மின்விசிறியைப் போட்டு கதகதப்பான போர்வையால் அவற்றை தலை மட்டும் வெளியே தெரியும்படி மூடினான். அப்பா மின்விசிறியையும் அணைக்கச் சொன்னார்.
ஜெயன் அருகிலிருந்த கான்வெண்ட் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பாலு கவர்மெண்ட் பள்ளியில் ஆறாம் வகுப்பு - ஆனால் இருவருக்கும் வயது வித்தியாசம் இரண்டு. அவர்கள் இருவருக்கும் அடிப்படையில் ஒத்த விருப்பங்கள் இருந்தன. நாய்க்குட்டி வளர்ப்பதும் (அதனுடன் தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள்).
புறாக் குஞ்சுகளுக்கு ஸ்பூனால்தான் பாலூட்ட வேண்டியிருந்தது. அறை மூலையில் கோணியை விரித்து அதில் புறாக் குஞ்சுகளை விட்டு, தடுப்பு அரணாக இரண்டு அட்டைகளை வைத்தான். ஜன்னல் கதவுகளை அடைத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் பூனை வந்து புறாக் குஞ்சுகளை தின்றுவிடும் எனச் சொல்லியிருந்தார் அப்பா.
இரவு முழுவதும் அவை மெலிதாக சப்தம் எழுப்பியபடியே இருந்தன.
சாம்பல் நிறத்தில் இருந்தன புறாக்கள். கழுத்து மற்றும் உடலின் அடிப்பாகங்கள் வெள்ளையோடு கூடிய சாம்பல் நிறம் கொண்ட ஹோமர் வகைப் புறாக்கள் அவை. பெரிய புறாவுக்கு சுப்ரமணி என்றும் சின்ன புறாவுக்கு விஜி என்றும் பெயர் வைத்திருந்தார்கள்.
புறாக்கள் பறக்கத் துவங்கிய ஒரு நாள் இரவில் வீடு திரும்பவில்லை விஜி. கண்கள் கலங்க அவற்றை அண்டை வீடுகளிலும், தெருமுனைகளிலும் தேடினார்கள் ஜெயனும் பாலுவும்.
அடுத்த நாள் மதியம் சடாரென்று தோன்ற பக்கத்து வீட்டு மாடியில் தண்ணீர் தொட்டியை எட்டிப் பார்த்தான் ஜெயன். முன்னோக்கிப் பாய்வதைப் போல் இரண்டு சிறகுகளும் விரிந்து கிடக்க, தண்ணீரில் ஊறிப் போய் மிதந்து கொண்டிருந்தது. கடவுளே எனக் குதித்து அதைக் கைகளில் எடுத்தான். அடிவயிற்றின் துடிப்பு உயிர் இருந்ததைப் பறை சாற்றியது.
வீட்டிற்கு எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். டர்க்கி டவலில் உடலைத் துவட்டி, கம்பிளிப் போர்வையால் மூடி நெஞ்சருகே வைத்துக் கொண்டான். விஜி லேசாக கண்களை மூடி மூடித் திறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அன்று முழுவதும் அதனுடயே இருந்தான் ஜெயன்.
இரண்டாக இருந்த புறாக்கள் பல்கிப் பெருக ஆரம்பித்த பிறகுதான் சுப்ரமணி பெண் புறா என்றும் விஜி ஆண் புறா என்றும் தெரிய வந்தது அவனுக்கு. கூப்பிட்டுப் பழகியதை மாற்றவும் முடியவில்லை.
மாடியில் இருந்த ஓலைக் கொட்டாயில் புறாக் கூண்டுகள் அடித்துக் கொடுத்திருந்தார் அப்பா.
எல்லாப் புறாக்களுக்கும் பெயர் வைக்கவும் முடியவில்லை. நடுவில் வாங்கி வந்திருந்த கருத்த கர்ணப் புறாவிற்கு கருப்பி என்றும் ப்ரவுண் நிறப் புறாவுக்கு ப்ரௌணி என்றும் பெயர் வைத்திருந்தார்கள். மற்ற புறாக்களை ‘தோ தோ' என்றுதான் கூப்பிடுவது.
காலையில் எழுததும் மாடிக்கு ஓடுவார்கள் ஜெயனும் பாலுவும். தரையில் பிளாஸ்டிக் உறையை விரிக்கும்போதே புறாக்கள் கழுத்து வீங்க உறும ஆரம்பித்துவிடும். கோதுமையும் கம்பும் கலந்த தீனியை உறையில் கொட்டி கூண்டுகளைத் திறந்ததும் எல்லாமாக வந்து அமரும். கவாங் கவாங் என்று தின்றதும், பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைக் குடித்துவிட்டு ஒரு ரவுண்ட் பறக்க ஆரம்பிக்கும். விஜி காற்றில் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அறைக்குள் என்றால் விஜியும் கருப்பியும் பறந்து வந்து பாலு தோள் மீதுதான் அமர்வது. எவ்வளவுதான் ஜெயன் ஆசையாக அவற்றை எடுத்துத் தன் தோள்களின் மீது வைத்துக் கொண்டாலும், உடனே பறந்துவிடும். அதில் கொஞ்சம் வருத்தமிருந்தது ஜெயனுக்கு.
வயல்வெளியில் இருக்கும் பெரிய கிணறுகளில் மற்ற பையன்களுடன் குளிப்பதென்றால் கொள்ளைப் பிரியம் ஜெயனுக்கு. பாலு படிக்கட்டுகளில் அமர்ந்து கால்களை தண்ணீரில் உளப்பிக் கொண்டிருப்பான்.
முதல் முறை நீச்சல் கற்றுக் கொள்ள குதித்த போது மேலே வந்து படிக்கட்டைப் பிடிக்க முடியவில்லை. மூச்சு திணறிவிட்டது பாலுவுக்கு. அருகிலிருந்த சீனிதான் இழுத்து வந்து சேர்த்தான். அப்படி இழுத்து வந்தது மூன்று அடிகளுக்கு மேல் இருக்காது என்றாலும் பாலுவுக்குப் பிறகு நீச்சல் பழகவே பயம்.
வீட்டில் கூண்டுக் கிளிகளும் இருந்தன. இரண்டே இரண்டு கிளிகள். ஒன்று நோய் வந்து இறந்து போனது. இன்னொன்று, சிறகு முளைத்து பறந்து போனது. பிறகு அவர்கள் கிளி வளர்க்கவில்லை.
பந்தை எடுத்து கீழ்ப் படிக்கட்டின் அடியில் வைத்துவிட்டு வந்துவிட பிறகு வேறொருவன் சென்று தேடி எடுத்து வருவது ஒரு விளையாட்டு. ஒருமுறை அப்படிப் பந்தைத் தேடித் தண்ணீருக்கடியில் போகையில் பந்தைச் சுற்றி இருந்த பாம்பைக் கண்டு நடுங்கி மேலேறி, 'ஹோ' என பயத்தில் அலறினான் ஜெயன். பாலுவுக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை.
மதியம் மொட்டை மாடியில் விஜியுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் அமளி ஏற்பட்டது. பாலு வயல் கிணற்றில் விழுந்து விட்டானாம்!
ஜெயன் ஓடினான். வயலில் இருந்த கிணற்றில், இரண்டு கைகளும் சிறகைப் போல விரிந்து கிடக்க, சற்றே முன்னோக்கி பாய்வதைப் போலத் தண்ணீரில் கிடந்தான் பாலு.
எல்லாப் புறாக்களையும் சைக்கிள் கடை முருகனுக்குக் கொடுத்து விட்டார் அப்பா.