குழப்பம்

அவசர கை நகர்த்தலில்
கோப விட்டெறிதலில்
அடியிலிருக்கும் பேப்பரை உருவுகையில்
எப்படியோ உடைந்து விடுகிறது
மரப்பாச்சி பொம்மைகள்
சும்மா இருப்பதா ஏதாவது செய்வதா
படைப்பதா உருவாக்குவதா
ஒன்றும் புரியாமல்
எழுதியிருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை

சும்மா இருத்தல்

சும்மா இருக்காதே
ஏதாவது செய்துகொண்டே இரு என்றான் மாரி
idle mind is devil's paradise -
ஆங்கில மேற்கோள் காட்டினான்
ஏதாவது செய் ஏதாவது செய்
என்ற ஆத்மாநாமின் கவிதையைச் சொன்னான்
சும்மா இருப்பதற்கும் ஏதாவது செய்வதற்குமான
இடைவெளிக் குழப்பத்தில்
செய்திருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை

சென்னையில் நாளை பதிவர் சந்திப்பு

தமிழில் முக்கியமான இளம் கவிஞர் வா மணிகண்டன். பேசலாம் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். உயிர்மை வெளியீடாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தொகுதி வந்திருக்கிறது. இவர் நாளை சென்னையில் இருக்கிறார். அதனால் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இடம் வழக்கம்போல் கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம்தான். மாலை 5.30 மணிக்குச் சந்திப்பு துவங்குகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

சந்திப்பு நாள் : 21.11.2009
இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம்
நேரம் : மாலை 5.30 மணி முதல்

சந்திப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு :

யெஸ்.பாலபாரதி - 9940203132
நர்சிம் - 9841888663
கேபிள் சங்கர் - 9840332666
யுவகிருஷ்ணா & அதிஷா - 9884881824

செய்தல்

எதையும் செய்யாமல்
சும்மா இருக்கச் சொன்னான் மாரி
சும்மா இருந்து எனத் துவங்கும்
சுந்தர ராமசாமியின்
கவிதையை மனப்பாடமாக ஒப்பித்தான்
செய்தலுக்கும் உருவாக்குதலுக்குமான
வித்தியாசக் குழப்பத்தில்
உருவாக்கியிருக்கிறேன்
இந்த ஒன்பது வரிகளை

இரண்டு கவிதைகள்

காலையில் (அ) பு.பி.

குளியல் தொட்டியில்
சோப்பு நுரையினூடாக
தொலைபேசியில் பேசும்
புஷ்டியான நடிகையை
நினைத்துக் கொண்டு
பிளாஸ்டிக் வாளியிலிருந்து
சொம்பில் நீர் மோந்து
குளிப்பது சுகமானது


நினைத்தல் (அ) பு.போ.

மதியம் பார்த்த படத்தின்
நாயகியை நினைத்தபடி
(she was oozing sex)
புணர்கையில்
(i would like to cum on you)
தவறிப்போய் அவள் பெயர் உச்சரித்து
பயந்து போய் இவளைப் பார்த்தேன்
கண்கள் கிறங்க
எந்த நாயகனையோ நினைத்துக் கொண்டிருந்தாள்
வரிகள் வேறு மாதிரி இருக்கலாம்

புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்

பலநாட்கள் கழித்து சந்தித்தேன்
பழைய காதலியை
இடுப்பசைத்து நடனமாடி அவள்
சூடேற்றினாள்
கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி

குதூகலமாகவே கழிந்த இரவில்
சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க
புரண்டு படுத்து
உறங்கத் துவங்கியவள்

கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_23.html)